இப்படியும் இருக்கலாம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 9,205 
 

உலர்ந்த காலை வேளை. ஒரு பெருநகரத்தின் சாலையோரப் பூங்கா, நீண்ட நடைபாதை கொண்டதாக இருந்தது. எந்திர மனிதர்கள் தங்களின் இயந்திர வாழ்க்கையில் சங்கமிக்கின்றனர் மெல்ல, மெல்ல. அந்த சாலையோர நடைபாதயானது பெரும்பாலும் நடைப்பயிற்ச்சி, மெல்லோட்டம் மையமாகவே பயன்படும் காலையும், மாலையும்.

இரண்டு நபர்கள் அப்பூங்காவின் செயற்கை வட்ட நீர்ரூற்றின் புற தடுப்புக் கம்பிகளை ஒட்டியவாறு பேசிக் கொண்டிருந்தனர். அதில் இளையத் தோற்றம் மிகுந்த ஒரு ஆண், தனது எதிர் பாலின, கிட்டத்தட்ட அவரின் வயது ஒப்பும், அல்லது அவரது உயரம் ஒப்பும் நபரை சமாதனப்படுத்திக் கொண்டு இருந்தார். அந்த பெண்ணானவள் கைகளால் கண்களை கசக்கிக் கொண்டு, தலை குனிந்தவளாக, கைக்குட்டையால் மூக்கினை தடவியவளாக காட்சி தந்தாள்.

இந்த இருவரும் இருக்கும் இடத்திலிருந்து சற்று வெளியேறி உள்ளது, சாலையோரப் பூங்காவின் நடைபாதை. அதில் நடப்பவர்களுக்கோ, இல்லை அதன் ஓரங்களில் நடப்பட்டுள்ள நாற்க்காலில் அமர்ந்து இருப்பவர்களுக்கோ கூட, செயற்கை நீருற்று அருகே பேசிக் கொண்டிருப்பவர்களின் சப்தம் விழாது. அந்த அளவிலாக அது உள் தள்ளி உள்ளது. அந்த சாலையானது, அவ்வளவு பிரதான சாலை இல்லை. வாகனப் போக்குகளை விடவும், மனித நடமாட்டங்களே அதிகம். அதே சாலையிலே, அந்தப் பகுதி காய்கறிச் சந்தையும் உள்ளது. இதனை தரிசிக்க குடும்பப் பாவைகள் கண்டிப்பாக, காலையின் தொடக்கத்திலே வந்து செல்வர்.

*************************************************************************

இதெல்லாம், என்ன காலமோப்பா சுந்தர்!

ஆமா, ஆமாப்பா ரமேஷ்!

நம்ம காலத்துல இப்படியெல்லாமா இருந்துச்சு? ஒரு ரோட்டுல நடக்க அவதியில்லைப்பா இவங்களோட.

அட ஆமாப்பா ரமேஷ், எங்க போனாலும் இந்த மாதிரி பார்ட்டிகள்தான் அதிகம். ஆனா, இது அவங்களுக்கு கூச்சமா தெரியறதே இல்லை பாரேன்!

உம் எப்படித் தெரியப் போகுது. பெத்தவங்க பேச்சு கேட்டு வளர்ந்தவங்களா இருந்தா இப்படி நாகரிகம், அநாகரிகம் தெரியறதுக்கு, சுந்தர்!

அதென்னமோ சரிதான்பா. இப்படி அங்க, அங்க தரம் கெட்டுத் திரியுதுக.
அட, விடுப்பா, தினத்திக்கும் ஏதாவது ரெண்டு கேஸ் இப்படி இருக்கத்தான் செய்துக.

நாமா ரிலாக்ஸ் பண்ணிடுப் போலாம்னு வந்தா, இந்தக் கருமங்களை கடந்து போறதுக்கு வீட்டுக்குள்ளே இருந்து ஏதாவது செய்திக்கிடலாம் போல இருக்கு!

சரி, சரி ரமேஷ் நம்ம வேலையைப் பார்ப்போம்!

*******************************************************************

மச்சான் பிகரு எப்படிடா?

அதான் ஏற்க்கனவே ஒருத்தன் சைன் போட்டுடான் போல இருக்கே, அப்புறம் எப்புடி இருந்தா என்னடா மாப்ளே!

ஆமா மச்சி, என்னவா இருக்கும்னு நினைக்கற?

தேம்பித் தேம்பி அழுகறதைப் பார்த்தா… ஐ திங்க் நம்மாளு மேட்டர முடிச்சிருப்பானு தோனுது.

இல்லைடா அவங்க வீட்ல ஏதாவது பிரச்சனை ஆகியிருக்கும்னு நினைக்கறேன் மாப்ளே!

பாரேன் மச்சி, என்னமா சமாதானப்படுத்தறான். இவனுகளெல்லாம் நம்பறாங்க, ஆனா நமக்குத்தான் இப்படி ஒன்னுமே சிக்க மாட்டேங்குதுக!

விட்றா மாப்ளே, விட்றா!

ரிசல்ட் என்னவாடா இருக்கும்னு நினைக்கற?

என்ன ரிசல்ட் மாப்ள?

இல்ல, இதுக ஓடிப்போகும்ங்களா? இல்லை பிரிஞ்சிடும்களா?

எனக்கென்னமோ நம்ம பையன் தடவித் தடவிக் கொடுக்கறதைப் பார்க்கறப்போ……. கன்ஃபார்ம் ஓட்ற கேஸுகனு நினைக்கறேன்டா மாப்ளே!

சரி இன்னைக்கு நல்ல எண்டர்டெய்மன்ட்…. நான் வாக்மேன் கண்டினியூ பண்றேன் சாமி!

ஓகே மாப்ளே, ஈவ்னிங் கிரவுண்ட்ல மீட் பண்ணுவோம்டா!

*******************************************

இந்தாக்கா பார்த்தியா, இந்தக் கூத்த?

அட கருமம், அதான் இந்த நகரத்துக்குள்ள பழகிப்போனது ஆச்சேடி.

இதுகளுக்கு பேசறதுக்கு வேற இடம்கிடம் கிடைக்காது போல, சனம் போற வர்ற வழியிலதான் எப்போ பாரு.

அடி, விடுடி காலம் நாம நினைக்கற மாதிரியா இருக்கு!

இல்லைக்கா, எப்படித்தான் இப்படி வீட்ல விட்றாங்களோ?

ஆமா இதுக அடிக்கற கூத்துக்கு வீட்ல சொல்லிட்டுத்தான் செய்யப்போகுதுகளுக்காக்கும், அடி போடி கூறுகட்டவளே!

நீ சொல்றதும் சரிதாங்கா. ஆனா அவளைப் பாரு! என்ன பொட்டப்புள்ள இப்படி ரோட்ல நாலு பேரு இருக்காங்களேனு இல்லாம கண்ணக் கசக்கிட்டு, உம்ம்ம் சகஜமா போயிடுச்சுயில்லக்கா…!

ஆமா, ஆமா…. இதுக எங்க போனாலும் இருக்குதுக. கடைக்கு வந்தா, ஒரு பஸ்ஸுல போன, அப்படி இப்புடினு எங்க போனாலும். இதுகள கவனிக்காம நம்மை குழந்தைகளை காப்பாதிக் கூட்டிட்டு வாரதுக்குள்ளா அப்பா, கஷ்டம்டி, கஷ்டம்!

ஒரு காலையிலயே கிளம்பி வந்துடுதுக. இதுகளுக்குனு ஒரு நேரத்தையாது ஒதுக்கி யாரச்சும் சொல்லி வைக்கக் கூடாதா, ச்ச்சீ….!

அடி வேகமா வாடி, வீட்ல புள்ளைகளும், அவரும் கிளம்ப வேணாமா? வேகமா நட….!

**************************************

ஒரு பதினைந்து நிமிடம்…… மக்களின் புகழாரங்கள் அந்த இரு நபர்கள் மீதும் பாய்ந்து கொண்டே இருந்தது. ஆனால், இது பற்றியெல்லாம் அவர்கள் சிறிதும் சட்டை செய்து கொள்ளவே இல்லை. அந்தப்பெண் அழுவதையோ, அந்த ஆண் அவளைத் தொட்டு சமாதானம் சொல்வதையோ நிறுத்தவே இல்லை.

அந்த வழியாகச் செல்பவர்கள் பலரும் இவர்களை நோட்டமிடாமல் இல்லை. அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என பல தரப்பட்ட மனிதர்களுக்கும், அன்றையக் காலைப் பொழுதின் விவாதப் பொருளாக இசைந்து கொடுத்தனர் அந்த ஜோடிகள்.
இவர்களின் அருகே சென்று என்ன, ஏதென்று கேட்டவர்களாக எவருமே இல்லை. மாறாக அவர்கள் யாவரும் தலையில் அடித்துக் கொண்டனர், முகம் சுழித்துக் கொண்டனர், எள்ளல் செய்தனர், திட்டித் தீர்த்தனர், இப்படி பலரும் பல விதமாக தங்கள் எண்ணங்களை கொட்டினாலும், எல்லோரும் பொதுவாய் ஒரு தாரக மந்திரத்தைக் கூறாமல் இல்லை. ‘இதெல்லாம் இந்தக் காலத்துல சகஜம்தானப்பா’ என்று.

******************************

சரி…சரி ஜஸ்ட் டேக் சிம்பிள் சுகிதா.

ப்ளீஸ் சந்தோஷ் நீ ஒரு தடவை அப்பாக்கிட்ட பேசேன்.

கண்டிப்பா, கண்டிப்பா… நான் சித்தப்பாக்கிட்ட பேசறேன். நீ தைரியமா இரு. நீ நினைச்ச மாதிரியே எம்.எட் படிச்சு முடிக்கிற வரைக்கும், உனக்கு கல்யாணம் நோ, ஓகே. அதுக்கு நான் கேரண்டி!

தேங்க்ஸ்ண்ணா!

உம் இட்ஸ் ஓகே. அப்புறம் இதெல்லாம் நீ போன்லயே சொல்லிருக்கலாம். இப்புடி பப்ளிக்ல நின்னு சின்னப் புள்ள கணக்கா அழுதுகிட்டு உம்ம்ம்.. சரி, சரி நீ சித்தப்பா, சித்திக்கிட்ட ஏதும் பேசிக்கிட்டு இருக்காத சரியா. என்கிட்ட நீ பேசன மாதிரி காட்டிக்காத. நாளைக்கு நான் வருவேன்ல, நானா பேசி விசயத்தை வாங்கினா மாதிரி காட்டிக்கறேன். சித்தப்பா நான் சொன்னா கண்டிப்பா புரிஞ்சுக்குவாருமா சரியா ஃபீல் பண்ணாத.

உம்ம்ம் சரி சந்தோஷ்!

சரி வா நானே வீட்ல இறக்கி விட்டுட்டுப் போறேன்… கம் குயிக் சுகி…!

இப்படி செயற்க்கை நீரூற்று ஜோடிகளான, சந்தோஷீம், சுகிதாவும் பேசிக் கொண்டுவிட்டு. இருசக்கர வாகனத்தில் ஏறிப் பயணமாகினர்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *