இன்னிசை பாடிவரும்…..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 4,488 
 

கதிர் என்னுடைய நெருங்கிய நண்பன். க்லோஸ் ஃப்ரெண்ட் திக் ஃப்ரெண்ட் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். கல்லூரி முதலாம் ஆண்டு வரை என்னுடன் படித்தவன்.

சென்னையில் இருந்த அந்த புகழ்பெற்ற பள்ளியில்தான் நாங்கள் படித்தோம். கதிருக்கு சினிமா ஆர்வம் அதிகம். பை நிறைய பாட்டு புத்தகங்களாக வைத்திருப்பான். பாட்டுப் புத்தகங்கள் பிரபலமாக இருந்த காலம்!

ஆசிரியர் பள்ளிக்கு வராத நாட்களில் பள்ளியின் பின்புறம் இருந்த பெரிய ஆலமரத்தடியில் ஒன்று கூடுவோம். கதிர் ஒவ்வொரு பாடலாக அழகாக மிகத் தெளிவான உச்சரிப்பில் பாடி எங்களை மகிழ்விப்பான். சில நேரங்களில் சில பாடல்களுக்கு டான்ஸ் ஆடி காட்டுவான், கோரசாக பாடும் சில பாடல்களில் நாங்களும் அவனுடன் சேர்ந்து கொள்வோம்.

‘கல்யாண மாலை’ பாடலை அவன் ரஹ்மானை போலவே அபிநயித்து ஏற்ற இறக்கங்களுடன் பாடும்போது நாங்கள் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருப்போம்.

பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நடந்த எங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்க பிரபல சினிமா ‘கதாநாயகனை’ அழைத்திருந்தார்கள். மேடையில் அவர் பேசும்போது, அவரும் எங்கள் பள்ளியில்தான் படித்ததாக கூறினார். மேலும், தமிழ் ஐயாவிடம் குட்டு வாங்கியதை இன்னமும் மறக்க முடியவில்லை என்றும் அதனால் தானோ என்னவோ நன்றாக இருக்கிறேன் என்றும் வேடிக்கையாக குறிப்பிட்டார்.

அதிலிருந்து கதிரின் சினிமா ஆர்வம் மேலும் அதிகரித்தது. கல்லூரி முதலாமாண்டு சேர்ந்து சில நாட்களில் திடீரென்று பிலிம் இன்ஸ்டியூட்டில் சேரப் போவதாக சொல்லி காணாமல் போனான்.

கல்லூரியில் எனக்கு அவன் இல்லாமல் பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. இந்நிலையில் மாறுதலுக்காக ஒரு நாள் காஞ்சிக்கு அருகில் இருக்கும் ‘மாமண்டூர்’ கிராமத்திற்கு எங்கள் சித்தி சித்தப்பாவை பார்க்க சென்றிருந்தேன்.

மாலை 4 மணி. அதற்குள் நீண்ட நாட்கள் அங்கு தங்கியதைப் போன்றதொரு பிரமை. சூழ்நிலையும் சந்தர்ப்பமும் ஐன்ஸ்டைனின் கடினமான ‘ரிலேட்டிவிட்டி’ தத்துவத்தை கூட மிக எளிதாக போதிக்கும் என யோசிக்க வைத்தது.

கழனிக்கு சென்றுவந்த சித்தப்பா சிறிது நேரம் இளைப்பாறினார். ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வந்த எனக்கு ஏதாவது வேலை தர நினைத்தாரோ என்னவோ “தம்பி, கொஞ்சம் பால் வாங்கிட்டு வர்றியா டீ சாப்பிடுவோம்” என்றார்.

“கடை எங்கிருக்குன்னு தெரியாதே சித்தப்பா” என்றேன்

“கடைல்லாம் ஒண்ணும் கிடையாது மேட்டு தெரு பக்கம் போனின்னா மொத வீடு, ‘சிந்தாமணி வீடு’ன்னு கேட்டா குழந்தை கூட சொல்லிடும்” என்றார்.

பெயரைக் கேட்டவுடன் ஒரு சினிமா பாடல் சட்டென்று நினைவுக்கு வந்தது. மேட்டுத்தெரு அடைந்தபோது சித்தப்பா கூறியது சரிதான் என்று தோன்றியது. யாரையும் கேட்க வேண்டிய அவசியமே இல்லை, வாசலிலேயே இரண்டு பசு மாடுகள் கட்டப்பட்டிருந்தது. திண்ணையில் ஒரு பெண் படித்துக்கொண்டு இருந்தாள் அவளிடம்,

“இங்க சிந்தாமணின்றது” என்றதும் அவள் ” உங்களுக்கு பால் வேணுமா ஒரு லிட்டரா? அரை லிட்டரா?” என்றாள். சித்தப்பாவிடம் அதைக் கேட்க மறந்ததை நொந்துகொண்டு கையிலிருந்த சொம்பை காட்டி “இதுல எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு தாங்க” என்றேன். அவள் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு சொம்பை வாங்கி கொண்டு உள்ளே சென்றாள்.

அவள் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் ‘இயற்பியல் – தொகுதி 1’ என்று போட்டிருந்தது ‘அட நம்ம சப்ஜெக்ட்’ என்று அந்த புத்தகத்தை எடுத்து சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தபோது, பால் சொம்புடன் வெளியே வந்த அவள் “என்னோட புக் தான், 16 ரூபாய் கொடுங்க” என்றாள்.

“சாரி பர்ஸ் கொண்டு வர மறந்துட்டேன் அடுத்த முறை வரும்போது தரேன் உன் பேரு?”

“வனிதாமணி, ‘வனிதா’ன்னு கூப்பிடுவாங்க,” என்றவள், “ஒருவேளை நான் இல்லைன்னா என் தங்கச்சிட்ட குடுத்துடுங்க” என்றாள்.

அவள் பெயரைக் கேட்டதும் எனக்கு மீண்டும் ஒரு சினிமா பாடல் நினைவுக்கு வந்தது.

“உனக்கு சப்ஜெக்ட்ல பிசிக்ஸ் ரொம்ப பிடிக்குமா?” என்றேன்.

அவள் “ம்” என்றாள் ஒரு புன்முறுவலுடன்.

திடீரென எனக்கு அவள் மீது மரியாதை அதிகரித்தது. “ஃபூயூச்சர்ல என்ன படிக்க போறீங்க” என்று கேட்டேன், நிச்சயம் அவள் பி எஸ் சி பிசிக்ஸ் என்பாள் நானும் வெரிகுட் நானும் பி எஸ் சி பிசிக்ஸ் தான் படிக்கிறேன் என்று அவளிடம் தற்பெருமை பேசலாம் என்ற எண்ணத்துடன்.

அவள் “ரிசர்ச் பண்ணனும்னு ஆசை ‘ரிலேட்டிவிட்டில” என்றாள் மிக சாதாரணமாக, தொடர்ந்து, தெரிஞ்ச ஒருத்தர் மகேஷ்னு பேரு ‘ஃபிசிக்ஸ்ல’ டாக்டரேட் எங்களுக்கு இலவசமாக டியூசன்லாம் சொல்லித் தர்றார் என்றாள். அவளது இந்த பதிலை நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. மேலும் ரிலேட்டிவிட்டியைப் பற்றி அவளிடம் தெரிந்து கொள்ள எனக்கு விருப்பமுமில்லை. எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் பெண்ணுக்கு இயற்பியலில் இருக்கும் ஈடுபாடு எனக்கு இல்லை என்று என்னை நினைத்து எனக்கே மிக கேவலமாக இருந்தது.

அதற்குப் பிறகு எனக்கு ரிலேட்டிவிட்டியில் ஆர்வம் ஏற்பட்டதும், முதுகலை படிப்பதற்கு வடக்கில் இருந்த ஒரு புகழ்பெற்ற பல்கலைக் கழகத்திற்கு சென்றதும் அங்கேயே பிஹெச்டி படித்ததும் தனிக்கதை.

பின்பு காஞ்சிபுரத்தில் ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. எதேச்சையாக ஒரு நாள் எஃப் எம்மில் ‘வனிதாமணி வனமோகினி’ என்ற பாடலைக் கேட்டபோது அருகிலிருந்த மாமண்டூருக்கு செல்லும் எண்ணம் தலைதூக்கியது. ‘பக்கத்திலேயே இருந்துவிட்டு, எத்தனை நாளா போகாம இருந்துட்டோம்.!’. என்று உடனடியாக கிளம்பினேன். முக்கியமாக வனிதாமணி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை அறியும் ஆர்வம்.

சித்தப்பா வீட்டுக்கு சென்றபோது வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார் அவர் பெண்ணை சென்னையில் கொடுத்திருந்தார்கள் அவளுக்கு பிரசவ நேரம் என்பதால் சித்தியும் உதவிக்கு சென்றிருந்தார். வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப் பின், சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு பின்,

“சித்தப்பா பால் வாங்கிட்டு வரட்டுமா? டீ சாப்பிடுவோமா?” என்றேன்

அவர் “நம்ம ரெண்டு பேருக்கு எதுக்குப்பா பால் வாங்கிட்டு தெருமுனையில் இருக்கிற நாயர் டீ கடையில போய் சாப்பிட்டு வந்துடலாம்” என்றார்

நான் சற்றே ஏமாற்றத்துடன் அவருடன் சென்று டீ சாப்பிட்ட சிறிது நேரத்தில் “சித்தப்பா நமது கிராமத்தை சுற்றி பார்த்துட்டு வரேன் எப்போ பார்த்தது” என்று அவர் பதிலுக்கு கூட காத்திராமல் புறப்பட்டேன்.

மேட்டு தெருவை அடைந்தபோது அந்த இடமே சுத்தமாக மாறி இருந்தது ஒரு மாட்டுத் தொழுவம் இருந்ததற்கான அடையாளமே இல்லை அங்கு இருந்தவரிடம் “இங்கே சிந்தாமணின்னு இருந்தாங்களே” என்று விசாரித்தபோது, “அவங்க காலி செஞ்சுட்டு போய் ரொம்ப நாளாச்சு தம்பி” என்றார். இன்னொரு முறை என் தற்பெருமை பேசும் எண்ணத்திற்கு சம்மட்டியடி.

காஞ்சி திரும்பியதும் புதிதாக ஏற்பட்ட பணிச்சுமையில் எல்லாம் சுத்தமாக மறந்து போனது. திடீரென தொலைக்காட்சியில் பிரபலங்களுடன் ஒரு நாள் நிகழ்ச்சியில் கதிரை காட்டினார்கள் அவன் இப்போது பிரபலமான உதவி இயக்குனராம் கடந்த சில வருடங்களாக எனக்கும் சினிமா துறைக்கு நீண்ட இடைவெளி..

டிவியில் கதிரை பார்த்ததில் இருந்து அவனை நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஆசை எழுந்தது. ஃபேஸ் புக்கில அவனை தேடி கண்டுபிடித்து, தொடர்பு கொள்வதில் எனக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருக்கும் அவன் இல்லத்திற்கு என்னை சாப்பிட அழைத்திருந்தான்.

ஞாயிற்றுக்கிழமை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்க்கப்போகிறேன். எங்களுக்குள் பேச நிறைய இருக்கிறது என்று நினைத்து, விடிகாலையில் எழுந்து முதல் பேருந்தை பிடித்து சென்னை சென்று அவன் வீட்டை அடைந்தபோது மணி சரியாக பத்து.

கதிரின் வீடு அமர்க்களமாக இருந்தது. வாசலில் கப்பல் போன்ற ஒரு காரை டிரைவர் துடைத்துக் கொண்டிருந்தார். ‘ஒரு உதவி இயக்குனரே இப்படியா?’ என்று கதிரை நினைத்து எனக்கே கொஞ்சம் பொறாமையாக இருந்தது.

அவன் அம்மாவும் அப்பாவும் கல்லூரிக்காலங்களில் பார்த்தது போல் அப்படியே இருந்தார்கள். ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். தன் நண்பன் ஒரு டாக்டரேட் என்பதில் அவளுக்கு பெருமையாக இருந்தது. எங்கெங்கோ சென்று எங்கள் பேச்சு கடைசியாக திருமணத்தில் நின்றது. அப்போது அவன் அம்மா

“தம்பி நீயாவ்து உன் ஃப்ரெண்டை சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்க சொல்லு. யாரோ ஸ்வர்ணலதாவாம் அவளைத் தான் கட்டிப்பேன்னு ஒத்தைக்கால்ல நிக்கிறான்” என்றார்கள்.

“ஹேய் ரியலி! யாரு ஸ்வர்ணலதா போட்டோ வீடியோ எதாவது இருக்கா? என்று உற்சாகத்துடன் கேட்டேன்

“அதெல்லாம் எதுக்கு இன்னைக்கு ஈவினிங் ஏவிஎம் ஒரு சூட்டிங் நேரிலேயே கூட்டிட்டு போய் காட்டுறேன்” என்றான்.

ஷூட்டிங்கை நேரில் பார்க்கும் ஆர்வம் ஒருபுறம் கதிரின் வருங்கால மனைவி யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மறுபுறம்.

இருவரும் சூட்டிங் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு சென்றோம்.

அங்கே.. .. சிம்மாசனம் போன்ற ஒரு ஆசனத்தில், இளவரசியை போன்ற தோற்றத்தில் தரையில் குத்தப்பட்ட நீண்ட வாளுடன் ஸ்வர்ணலதா ஒய்யாரமாக அமர்ந்து வீர வசனம் பேசிக்கொண்டிருந்தாள்.

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை! அது… வனிதாமணியேதான்!.

சிறிது நேரத்தில் விஷயம் அறிந்து அவள் அணிந்திருந்த காஸ்ட்யூம்களை கூட கலைக்காமல் அப்படியே எங்களை பார்க்க வந்திருந்தாள். வெகு தொலைவில் இருந்தே கண்கொட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த கதிர் அவள் அருகே வந்தவுடன் “அப்படியே ஒரு தேவதை மாதிரி இருக்கீங்க” என்றான்.

அவள் “ஹிஸ்டாரிகல் கதைங்க” என்றாள் லேசாக சிணுங்கி.

“உலகம் எங்கேயோ போயிட்டிருக்கு இன்னுமா மக்கள் ஹிஸ்டாரிகல், மிதிலாஜிகல் கதையெல்லாம் விரும்பறாங்க” இது நான்.

அவள் ‘இது யார்?’ என்ற சந்தேகக் கேள்வியுடன் கதிரைப் பார்க்க.

அவன், “இது என்னோட பிரெண்ட்” என்று என்னை அறிமுகம் செய்து வைத்தான். பின்பு, “எதுலையோ ரிசர்ச் பண்ணிருக்கான், எதுலடா?” என்றான் என்னைப் பார்த்து.

“ரிலேட்டிவிட்டி” என்றேன் சற்று ஏளனத்துடன் அவளிடம் அதிர்ச்சி கலந்த ரியாக்ஷனை எதிர்பார்த்து.

உடனே அவள் “வெரி க்லாட் டு மீட் யு, எங்க அக்கா வனிதா கூட ரிலேடிவிடில தான் ரிசர்ச் பண்ணா, மகேஷ் ஸாரை மேரேஜ் செஞ்சிட்டு யு.எஸ்.ல செட்டில் ஆயிட்டா, ” என்று கை நீட்டினாள் அப்பாவியாக.

சட்டென காற்று வெளியேறிய ஒரு பலூன் போல உணர்ந்தேன். அதன்பின் உணர்வற்று அவர்கள் பேசுவதை ஒரு ஜடம் போல் கேட்டுக் கொண்டு வேடிக்கை பார்த்துவிட்டு, ஸ்டூடியோவை விட்டு வந்ததெல்லாம் சுத்தமாக நினைவில்லை. சகஜ நிலைக்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆகியது.

ஒரு நாள் சலூனில் பேப்பரை புரட்டிக்கொண்டிருந்தபோது ஸ்வர்ணலதா பிரபலமான ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது. ‘பத்திரிக்கை கிசுகிசுவையெல்லாம் நம்புவதற்கில்லை’ என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்

ஒரு பொழுது போகாத ஞாயிற்றுக்கிழமை டிவியில் பிரபலமான ஒரு சேனலில், கதிர் லேசான தாடியுடன் பேட்டியளித்துக் கொண்டிருந்தான். கதிரின் முகத்தை பார்த்ததும் கை தன்னிச்சையாக சேனல் மாற்றுவதை நிறுத்தியது.

பேட்டியில் அவன் பள்ளியில் படித்தது, அப்போதிலிருந்தே அவனுக்கிருந்த சினிமா ஆர்வம், கல்லூரியில் ‘டிராப் அவுட்’ ஆனது என ஒவ்வொன்றாக விவரித்துக் கொண்டிருந்தான்.

சுவாரசியமாக இருந்ததால் ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை கடைசியாக பேட்டியாளர் “உங்களை நாங்க ஒரு உதவி இயக்குனராகவே பார்த்துட்டு இருக்கோம் எப்போ ஒரு இயக்குனராக பார்ப்பது?” என்ற கேள்விக்கு அவன் விரைவில் இன்றைய படிக்கும் இளைய சமுதாயத்தினருக்கு தேவையான கருத்துக்களை உடைய ‘ஒ மனமே.. ஓ மனமே ..’ என்ற ஒரு படத்தை தானே எழுதி இயக்கப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தான்.

உற்சாகத்தில் அவனுக்கு வாழ்த்துச்சொல்ல கை செல்போனை தேடியது படத்தின் பெயரை மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்த போது வேறொரு பாடல் நினைவுக்கு வர அந்த எண்ணத்தை உடனே மாற்றிக் கொண்டேன்.

அந்த திரைப்படம் வெற்றி அடையவும் அவன் எண்ணங்கள் நிறைவேறவும், மென்மேலும் புகழ் பெறவும் வாழ்த்து சொல்லி பேட்டியை நிறைவு செய்தது மனதுக்கு இதமாக இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *