இனியொரு விதி செய்வோம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 8,364 
 

ஒரு சமூகப் பிரகடனமாக உள்ளார்ந்த ஆன்மீக விழிப்புடன் தன்னால் நினைவு கூர முடிந்த அந்த வேத வாக்கியத்தை மனம் திறந்து சொல்வதற்கான காலம் இன்னும் கண் திறக்கவில்லையென்பதே செல்வியின் அப்போதிருந்த பெரிய மனக் குறையாக இருந்தது. அதற்கான கால நேரமல்ல காது கொடுத்துக் கேட்பதற்கான சரியான ஆள் தான் முக்கிய மென்று அவளுக்கு உறைத்தது அந்த ஓர் ஆளை எதிர்பார்த்து, அவள் தவம் கிடக்கத் தொடங்கி ஒரு யுகம் போலாகிறது

அப்படித் தன் புற வாழ்க்கை நலன்களையெல்லாம் மறந்து, அதை மிகப் பெரிய தன் தார்மீகக் கடமையாக நம்பி உரத்துச் சொல்ல வேண்டிய, அவசியம் இன்று நேற்று அவளுக்கு ஏற்பட்டதல்ல யாழ்ப்பாணம் கொடூரச் சண்டை நெருப்பால் என்று தீப்பற்றி எரியத் தொடங்கியதோ அன்று தோன்றிய ஒரு விழிப்பு நிலைத் தவம் தான் இது அவளுக்கு

சிறு வயதில் அவள் கண்டு களித்து உறவாடி மகிழ்ச்சி கொண்டாடிய யாழ்ப்பாணம் வேறு அதன் சிறு தடம் கூட இப்போது இல்லாமல் எல்லாம் காடு பற்றியெரிகிறது உயிரைக் காப்பாற்ற வெளிநாட்டுக்கு அகதிகளாய் அள்ளுண்டு போகும் மனித வெள்ளத்தினிடையே சொந்த மண்ணை விட்டு வேர் கழன்று போகாமல் நிலை மாறுவதில்லையென்ற வைராக்கியத்தோடு இருந்த அவள் மனதில் தான் இப்படியொரு லட்சியக் கனவு சொந்த மண் தான் எப்போதுமே அவளின் உயிருக்கு நிகரான பிறவிப்பெருமை அங்கு இந்த யாழ்ப்பாணத்தில் இப்படித் தமிழ் அழிந்து அவள் ஒரு நாளும் பார்த்ததில்லை தமிழ் சமூகத்தின் மேல் விழுந்த இந்தச் சாபம் தமிழுக்கு விழுந்த சாபமாகவே அவள் உணர்வதுண்டு

கொடிய சண்டையைக் காரணம் காட்டித் தமிழ் மறந்து போகும் காட்சி நிழல்களாகவே இப்போது வெளிநாட்டு மண்ணில் சரணடையத் துணிந்து விட்ட தமிழர் நிலையும் அவர்கள் அப்படியானதற்கு சண்டை மட்டும் தான் காரணமல்ல அதையும் மீறிப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற பேராசையின் விளைவே அவர்களின் இந்த நிலை தடுமாறிய சரிவுகள் இதைத் தடுப்பதற்கு அப்போதுள்ள சூழலில் எந்த வழியில் முடிவெடுப்பதென்று அவளுக்குப் பிடிபடவில்லை

அவளுக்கு அந்த மாதிரிச் சிந்தனைத் தெளிவு வருவதற்கு உண்மையில் அவள் பிறந்து வளர்ந்த செம்மையான வாழ்க்கைக் களம் தான் காரணம் சின்ன வயதிலிருந்தே ஓர் உதாரண புருஷராய் வாழ்ந்து காட்டிய அப்பாவின் நிழலில் முத்துக் குளித்து வாழ நேர்ந்ததின் பலன் தான் இது அவளுடைய இந்தக் கறைகளை எரிக்கும் தேவ நினைப்பு கல்யாணமான பிறகு அவளுடைய வாழ்க்கையில் இன்னும் நிறையச் சோதனைகள் கட்டிய தாலியும் ஒட்டவில்லை அதைப் பற்றி அவள் கனவு கண்டது வேறு மாதிரி மாசற்ற குணநலன்களோடு தன்னை வாழ வைக்க ஒரு யோக புருஷனையே அவள் எதிர்பார்த்துக் காத்திருந்ததற்கு மாறாக அவளுக்குப் பெரும் சத்திய சோதனையாகவே, அந்தக் கறைபட்ட திருமண விலங்கு அதிலிருந்து தப்புவதற்கு வழியில்லாமல் போனாலும் அவளுடைய ஒளி தீர்க்கமான அகவுலக சிந்தனைகள், இன்னும் அப்படியே தான் இருந்தன

அவளுக்கு வீட்டுக் கவலைகளை விட நாடு தீப்பற்றி எரிகிறதே என்ற பெருங் கவலை தான் மிக ஆழமாக அவளைப் பாதித்தது அவளுக்கு நடுத்தர வயதான போது அவளும் குடும்பத்தோடு இடம் பெயர்ந்து கொழும்புக்கு வந்து வாழத் தொடங்கிய சமயம் அவளுக்குக் கல்யாண வாழ்வை ஒளி பிரகாசமாக முழுமைத் தன்மை அடைய வைக்கிற குழந்தைப் பாக்கியமும் கிட்டவில்லை அடுத்தடுத்து நேர்ந்த குறைப்பிரவசத்தினால் மனம் தளர்ந்து போனாலும் நாட்டுக்காகப் பிறந்த மண்ணுக்காகக் கலித் தீயில் பற்றியெரிகின்ற அதன் விமோசனத்தின் பொருட்டுத் தன் வயிற்றில் ஒரு தவப் புதல்வனைச் சுமந்து பெற்றுக் கொடுக்கிற பெரும் பாக்கியம் இல்லாமற் போனாலும் தனது உயரிய இந்த இலட்சியக் கனவை உள்ளபடியே புரிந்து கொண்டு நிறைவேற்றத் துணிந்த ஒரு மாதரசி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இந்த மண்ணப் பீடித்து வருத்தும் சாபம் தீர்ந்து நாங்கள் விமோசனம் பெற வேண்டுமானால் இதைத் தவிர வேறு வழியில்லை

இது வரை இது பற்றி வெளிப்படையாக மனம் திறந்து பேச இதற்கான சரியான ஆள் அகப்படவேயில்லை. அவள் புருஷன் சங்கரைப் பொறுத்தவரை அவளின் வாழ்வியல் சார்பான நடை முறை உறவின் தொடர்பாக வருகிற மிகச் சின்னதான உணர்வுகளைக் கூட அவன் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை அப்படிப்பட்ட அவனிடம் போய் தான் கனவு காண்கிற, இந்த விடயம் பற்றி மனம் திறந்து பேசப் போனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும்

வேண்டாம் பொறுத்திருந்து பார்ப்போம் காலம் வழி விடுமென்று அவளின் காத்திருப்புத் தவம் ஒரு தினம் மரக்கறிகள் வாங்கி வருவதற்காக பஸ் ஏறி வெள்ளவத்தை மார்க்கெட்டுக்குப் போயிருந்தாள் வரும் வழியில், எதிர்பாராதவிதமாக ஓர் அபூர்வ சந்திப்பு எதிரில் நரேந்திரன் ,எதனாலும் பாதிக்கப்படாத உள்ளொளி பிரகாசமாகக் களை வீசும் கம்பீர நடையுடன் வந்து கொண்டிருந்தான் அவன் அவளுக்குத் தூரத்து உறவு. இளைஞனாக இருந்த போது மலை நாட்டில் பணி புரிந்தவன் பின்னர் துரைமாருக்கு அடி பணியும் அந்த எஸ்டேட் வேலை பிடிக்காததால் ஊரிலே வந்து ஒரு தேனீர்க் கடையில் வேலை பார்த்த சுய மரியாதையுள்ள கெளரவமான ஒரு இலட்சியவாதி அவன் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளன்

மிகவும் எளிமையான ஒரு தேசியவாதியாய் அவனை இனம் கண்டு தன் மனதை அவனிடம் பறி கொடுத்தவள் அவள் எனினும் அவர்கள் அதி உச்சமான வாழ்க்கை நிலைக்குப் பொருந்தாத அவனின் மிகவும் தரம் குறைந்த ஏழ்மை நிலை காரணமாகவும் வேறு காரணங்களை முன் வைத்தும் மனதை மட்டுமே நேசிக்கத் தெரிந்த அவர்ளுடைய அந்த இலட்சியக் காதல் எடுபடாமல் வெறும் பகற் கனவாகவே போனது அது நினைவுகள் தூர்ந்து போன பழங்கதையாகப்பட்டாலும் அப்போது, அவனைக் கண்ட மாத்திரத்தில், மீண்டும் உயிர்த்தெழுந்த மாதிரி கண்களில் ஒளி பிரகாசிக்க அவள் பரவசமானாள் அது அவர்கள் காதலித்துக் களித்திருந்த அந்த யுகமே கைகளில் பிடிபட்ட மாதிரி, உள்ளார்ந்த உணர்வுச் சிலிர்ப்பில், அவன் முகமும் களை கொண்டு சிரிக்க அவள் கேட்டாள்

“நீங்களுமா கொழும்பில்?”

அதற்கு உதட்டில் சிரிப்பு வடிய அவன் கேட்டான்

“எதை நினைத்து சொல்லு செல்வி உன்னிடம் இப்படி ஒரு கேள்விக் கணை”?”

“ நான் இதை எதிபார்க்கவில்லை உங்களுடைய உறுதி மாறாத இலட்சிய இருப்பு நிலையை அறிந்தவளென்ற கணக்கிலே தான் இதைக் கேக்க நேர்ந்தது சொந்த மண்ணையே கண்ணில் வைத்து எல்லோரையும் ஆசீர்வதித்து அன்பால் ஆட் கொள்ளும் உங்களைப் போய் இந்த நிலையிலை பார்த்து நான் துடிச்சுப் போனன் அதுக்காகத் தான் இப்ப உங்களிட்டை மனம் திறந்து சொல்லுறன் திரிந்து போன எரியூட்டப்பட்ட நிழல் மண்ணிலேயிருந்து நாங்கள் விமோசனம் பெற்று மீண்டு வர வேண்டுமானால் யாராவது ஒரு தமிழச்சிக்குத் தான் கண் திறக்க வேணுமென்று எனக்குள்ளே ஓயாத ஒரு இலட்சிய அலை அதைச் சொல்லுறதுக்கு உங்களை விட்டால் வேறு ஆள் இல்லை “

“உன்ரை ஆதங்கம் எனக்குப் புரியுது செல்வி நான் மண்ணை நேசிச்சது உண்மை தான் சண்டைக்கு நடுவிலை என்னாலையும் தாக்குப் பிடிக்க முடியேலை அது தான் இப்படி ஒரு கொழும்பு மனிசனாய் என்னை நீ எதிர்கொள்ள நேர்ந்திருக்கு. சரி அதை விடு உன்ரை கனவைச் சொல்லு இது எடுபடுமா என்று நான் சொல்லுறன்”

“அழிச்சுக் கொண்டிருக்கிற இந்தப் பாவ நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்ற ஓர் அவதார புருஷனை நாங்கள்பெற வேணும்”

“உனக்கு அந்தக் கனவு இருக்கா?”

“இல்லாமலா இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறன்”

“அப்ப அதை நீயே செய்திருக்கலாமே அதை விட்டிட்டு ஆரைப் பார்த்து என்ன கதை சொல்கிறாய்?”

“நானே அதற்குத் தவம் கிடந்து மணி வயிறு திறந்து இந்த மண்ணை வாழ் வைச்சிருப்பன். எனக்குத் தான் அந்தக் கொடுப்பினை இல்லையே அதனால் தான் என்ரை இந்த வேண்டுதல் வரம் “

“உனக்கு வரம் கொடுக்க நாங்கள் என்ன கடவுளா? இது நடக்கிற காரியமே? பணத்திலை எப்படி நீச்சலடிக்கலாமென்று புத்தி அழிஞ்சு நிக்கிற எங்களிட்டை இது எடுபடுமே இதுக்கு இன்னொரு யுகம் பிறக்க வேணும் “

“ அப்ப எங்கடை மண்ணைக் காப்பாற்ற என்ன வழி சொல்லுங்கோ நரேன்”

“கடவுளுக்குத் தான் வெளிச்சம் நீ அதை மறந்திடு இப்ப நடக்கிறதைப் பற்றி மட்டும் யோசிப்பம்”

இதைச் சொல்லி விட்டு அவன் முகம் மறைந்து போன ஊனம் விழுந்த இருட்டினிடையே, ஒளி விட்டு உறைந்து போன நிழற் கோலமாய் எல்லாம் ஒழிந்த தனிமையில் நிற்பது போல அவள் அங்கேயே வெகு நேரமாய் தரித்து நின்று கொண்டிருந்தாள். இப்போது ஒளியாய் வந்து மறைந்து போன அவன் கால் பதிந்த நிழற் சுவடுகளில் மட்டுமே தான் மிஞ்சி நிற்பதாய் அவள் மிகவும் அழுகையுடன் நினைவு கூர்ந்தாள்

– மல்லிகை 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *