Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இனியும் முட்செடிகள் முளைக்கலாம்

 

(இக்கதை பரிசு பெற்ற மூலக்கதையிலிருந்து மீள்வடிவமைக்கப்பட்டது)

‘ தம்பி! இனியும் பிரிவினையும் வேற்றுமையும் பேசித்திரிஞ்சு பிரயோசனமில்லை. அவங்கள் மட்டும் இனவாதம் பேசயில்லை. அவங்கள் மொழிச்சட்டம் கொண்டு வந்து இனவாதம் பேசின மாதிரி எங்கடை ஆக்களும் நாட்டைப்பிரிப்பம், எல்லை போடக் கிளுவங்கதியால் தாருங்கோ எண்டு பேசி சனத்தை உசார்படுத்தி விட்டதின்ரை பலன்தான் எங்களை இண்டைக்கு சாம்பல் மேட்டிலை கொண்டுவந்து விட்டிருக்குது . இனியெண்டாலும் இந்தக் கதையளை விட்டிட்டு சேர்ந்து போனாத்தான் எங்கடை சனத்துக்கு ஏதாவது கிடைக்கும். வாய்ப்புக்கிடைச்சால் நில்லும். அதாலை நாலு சனத்துக்கு நல்லது செய்யமுடிஞ்சால் செய்யும். இதிலை சரி பிழை யோசிக்கிறதுக்கு ஒண்டும் இல்லை.’

என்ற குலசேகரத்தாரின் பேச்சில் யதார்த்தம் இருப்பதாகப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக சரியென்றும் பிழையென்றும் மனம் அல்லாடிய விடயத்தில் ஒரு தெளிவு கிடைத்தது போல இருந்தது.

‘எங்களை இண்டைக்கு சாம்பல் மேட்டிலை கொண்டுவந்து விட்டிருக்குது’ என்பது எத்தனை சத்தியமான, நிஜமான வார்த்தைகள். போர் தந்த வலிகளை இதனை விட சுருக்கமாக, தெளிவாக எப்படிச் சொல்லமுடியும்.

போர் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு வலி தரக்கூடியது என்பதை நான் நேரில் தரிசித்தவன் என்பதால், போர் என்பதை செய்திகளாக படித்துப் பார்த்து விட்டு எங்கள் உரிமைகளை மீட்க இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நம்மவர்களைப் பார்க்கின்ற போது வேதனையாகவும் பரிதாபமாகவும் இருக்கும்.

கண் முன்னே இறந்துபோன உறவுகளின் உடல்களைக் கூடத் தகனம் செய்ய முடியாமல், தமக்குப் பின்னால் நாய்கூட எஞ்சாது என்ற நம்பிக்கையில், மணலை வாரி மூடிவிட்டு உயிருக்கு அஞ்சி ஓடியவர்களையும், தாய் இறந்தது அறியாது இறந்த தாயிடம் பால் குடித்த குழந்தையையும், கர்ப்பிணித் தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்து இறந்ததைதையும் நேரில் கண்ட என்னைப் போன்றவர்களால் இங்கு மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் இனிமேல் ஆதரிக்க முடியாது.

இரண்டாயிரத்து ஒன்பதின் வைகாசி. வாழ்வின் இறுதியிலும் இறுதியான நாட்கள். ஊழித்தாண்டவத்தின் உச்சம். இமயமலை என்று நாங்கள் அண்ணாந்து பார்த்திருந்த பல விடயங்கள் கண்முன்னே பனிமலையாய் கரைந்து போக, சோகத்தையும், வாழ்வின் அத்தனை அங்கங்களும் உறவுகளும் பிடுங்கி எறியப்பட்ட காயத்தையும் சுமந்தபடி, மரத்துப்போன மனதோடு உயிர்மீண்டு, புனர்வாழ்வு முடிந்து வீடு வந்தபோது, மீளமுடியாத நரகத்தில் சிக்கிக்கொண்டது போன்ற பிரமையும், இழக்க முடியாத, இழக்கக் கூடாத மிகப்பெறுமதியான ஏதோ ஒரு பொக்கிஷத்தை இழந்து விட்டதான தவிப்பும், ஒரு ஏக்கமும், மனதில் முள்ளாக உறுத்தியது.

முன்னாள் போராளி என்ற காரணத்திற்காகவே எல்லோரும் என்னைப்பார்க்கவும் பேசவும் தயங்கிய — சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட, அந்த நாட்களில் என்னோடு பேசிய குடும்ப அங்கத்தவர் அல்லாத முதல் மனிதர் குலசேகரம். இந்த நான்கு வருட காலத்திற்குள் என்னை சமூகச் செல்வாக்குள்ள மனிதனாக அடையாளப்படுத்தியதில் குலசேகரத்தாரின் பங்களிப்பு மிக அதிகம். குலசேகரத்தாரின் அறிமுகமும்; ஒருமாறுதலையும் ஆறுதலையும் எதிர்பார்த்த என் உள்மனத் தேவையும் ஒன்று சேர கோயில் தொண்டர்சபை, சனசமூகநிலையம், என்று பொது அமைப்புக்களுடன்; தொடர்பும் அறிமுகமும் வளர்ந்தது.

ஒருகாலத்தில் என்னை அழிப்பதன்மூலம் அழிவை விதைப்பதற்கு என நான் கற்றுக்கொண்ட மொழியும், திறன்களும், செய்காரிய நேர்த்தியும் இப்போது ஆக்கபூர்வமான தேவைகளுக்குப் பயன்பட, பலரின் பிரமிப்பிற்கு உள்ளானதால் பல பொது அமைப்புக்களில் நிர்வாகப்பதவிகளும் ஊரில் செல்வாக்குள்ள இளைஞர் என்ற அந்தஸ்தும் கிடைத்தன. பொது வேலைகளில் ஈடுபடுவதற்கு அறிவு, திறன் கொண்ட பெரியவர்கள் பின்னிற்பதால் கிடைத்த சமூக தலைமைத்துவ இடைவெளி குறுகிய காலத்தில் என்னைப்பல விடயங்களில் முன்னிலை பெற வைத்தது. பல புதிய அறிமுகங்களும், இப்போது அரசியல் பிரவேசத்திற்கான அழைப்பும் கிடைத்தது.

விரோதத்தையும் பகைமையையும் விட்டுவிட்டு அபிவிருத்திக்காக ஜனநாயக அரசியல் வழிமுறையில் இணைந்து பணியாற்ற அருமையான சந்தர்ப்பம் என்று அவர்கள் சொல்வதையும் மறுக்க முடியவில்லை. அப்படி இணைவது சரியென்றும் பிழையென்றும் மனம் அல்லாடிய விடயத்தை குலத்தார் தீர்த்து வைத்து விட்டது போல இருந்தாலும் மீண்டும் தடுமாற்றம் வராது என்பதற்கு உத்தரவாதமில்லை.

‘குலமண்ணை! காணாமல் போனவையின்ரை குடும்பங்கள், நாடுவேணும் எண்டு போராடின குடும்பங்கள், இண்டைக்கு ஒருவேளை சாப்பாட்டுக்காக போராடுதுகள். அதைவிட இன்னும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கடை வீடுகளுக்குப் போகேலாமல் வீடுகளைப்பிடிச்சு வைச்சிருக்கினம். எங்கடை சனத்தின்ரை தீராத பிரச்சனையள் இன்னும் கனக்க இருக்குது. இதுகளைத் தீர்க்கிறதுக்கு விரும்புகினமில்லைப்போலை கிடக்குது…….’

மீண்டும் மனம் அலை பாய்ந்தது. தோற்றுப்போன மனநிலையும், அச்சமும், இன்னமும் மிச்சமிருந்தன.

தம்பி! சந்தேகமும் அவநம்பிக்கையும் உடனே தீராது. அது மெல்ல மெல்லத்தான் தீரும். அவைக்கும் நம்பிக்கை வரவேணும். அப்பிடி வந்தால் அவங்களும் தங்கடை வீட்டை போயிடுவாங்கள் நாங்களும் எங்கடை வீட்டை போகலாம். எல்லாம் உடனே வேணுமெண்டு அடம்பிடிச்சால் பிரச்சனை தீராது சந்தேகமும் பயமும்தான் கூடும். எங்கடை பொடியள், எங்கடை பொடியள் எண்டு சொல்லித்திரிஞ்ச ஆருக்கும் உண்மையிலை எந்த அக்கறையும் இல்லை. உங்களை மாதிரி அக்கறையோடை யோசிக்கிறவை இப்பிடிக் கிடைக்கிற சந்தர்ப்பங்களைப் பாவிச்சு அதுகளுக்கு ஏதாவது விடிவைத்தேடுங்கோ’

குலத்தாரின் குரல் இப்போது கனத்திருந்தது. கடந்த காலத்தில் தவறிழைத்து விட்டோமோ? என்ற பச்சாத்தாபம் கலந்த ஏதோ ஒரு விபரிக்க முடியாத உணர்வுகளின் கலவை ஊற்றெடுத்து என்னை வேதனைப்படுத்தியது.

உண்மைதான், போராளிகள் ஒரு காலத்தில் தங்களுக்கு காவலாய் இருந்தவர்கள் என்றாலும் அவர்களை மக்கள் முட்செடிகளாகவே கருதுகிறார்கள், முற்றத்து மல்லிகையாக ஏற்பதில் தயக்கம் இருக்கிறது. பெற்றாரின் அன்பும், வளமான குடும்பப் பின்னணியும் எனது வாழ்க்கையை சவாலாக்கவில்லை. ஆனால் பல ஆண்டுகளாக மண்ணுக்காக போராடிய பலர் இன்று ஒருவேளை உணவுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். உதவிகளுக்காக அரசிடம் கையேந்துகிறார்கள்.

‘யாருக்காகப் போராடினோமோ அவர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் யாருக்கு எதிராகப் போராடினோமோ அவர்களால் ஆதரிக்கப்படுகின்றோம்’ என்பதை நினைக்க அவமானமாகவும் வேதனையாகவும் இருந்தது.

எல்லாக்காலங்களிலும் இப்படி நடந்திருக்கிறது. எல்லாளனுடைய ஆட்சியில் இருந்த மக்கள் துட்டகைமுனு மன்னனான போது அவனை மன்னனாக ஏற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்திருக்கிறார்கள். யாரேனும் நாளை என்னைத் துரோகி என்று சொல்லலாம். ஆனால் ஆட்சியில் இருக்கின்ற மன்னனை நேசிப்பதும், அந்;த அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பதும் மக்களின் தர்மம். அதனால்தான் மக்களை எல்லோருக்கும் பொதுவானவர்களாக கருதி பொது மக்கள் என்கிறார்கள். ……….. என்ற விதமாக சிந்திக்க, குலத்தார் சொன்னது சரியாகவே பட்டது.

- அக்டோபர் 2013 

தொடர்புடைய சிறுகதைகள்
'சட்டமும் நிர்வாகமும் சரியாக வேலை செய்யவேணும்;. இந்த இடத்திலை சரியான நேரத்திலை சரியான வேலை செய்திருக்கினம். இப்பிடிச் செய்தால்தான் நாங்களும் நின்மதியோடையும் பாதுகாப்பாயும் வாழலாம். பறிமுதல் செய்தது உண்மையாய் நல்ல வேலை. இப்பிடிச் செய்தால்தான் மற்றவைக்கும் ஒரு பயமிருக்கும். வந்தவன் போனவன் ...
மேலும் கதையை படிக்க...
காலையில் மனைவி கொடுத்து அனுப்பிய மதிய உணவினை வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்த போது வழமைபோல ஒரு சிகரட் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் தொற்றிக் கொண்டது. கடையில் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய செலவினையும் ஆரோக்கியக் குறைவினையும் கருத்தில் கொண்டு மதியச்சாப்பாட்டினையும் காலையில் ...
மேலும் கதையை படிக்க...
கதைக்கிற ஒருத்தருக்கும் உண்மையிலை சனத்திலை அக்கறையில்லை, எல்லாரும் தங்கடை சுயநலத்துக்கும், நாங்களும் இருக்கிறம் எண்டு அடையாளம் காட்டவும் கதைக்கினம். இன்னொருத்தருக்கு ஒரு கஸ்டம் எண்டால் அரைவாசிப்பேருக்கு சந்தோசம். அரைவாசிப்பேருக்கு அக்கறையில்லை. உண்மையான அக்கறையுள்ளவன் கதைக்கமாட்டான், கதைக்கிறதைவிட செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருக்குது’ அதிகமான ...
மேலும் கதையை படிக்க...
மிகச் சிறிய குழந்தை, குழந்தை என்று கூட சொல்ல முடியவில்லை. சிசுபோலத் தெரிந்தது. விஞ்ஞான - உடற்கூற்றியல் விரிவுரைகளின் போது காண்பிக்கப்படுகின்ற ஒளிப்படங்கள், காணொளிகளில் இருப்பது போல தலைபெரிதாகத் தெரிந்தது. முழுமையாக வளர்ச்சியடையாதது போலத் தெரிந்த உடலைக் குறுக்கிக்கொண்டு படுத்திருந்த அந்தக் ...
மேலும் கதையை படிக்க...
“கஸ்டங்களும் பிரச்சினையளும் நடக்கிற காலத்திலைதான் பிள்ளை வேதனை. காலங்கடந்த பிறகு அதுகளை நினைக்கேக்கை இவ்வளவையும் தாண்டி வந்திருக்கிறம் எண்ட பிரமிப்பும், சந்தோசமும் வரும். ஆனால் சந்தோசங்கள் அப்பிடியில்லை நடந்து முடிஞ்சபிறகு காலங்கடந்து நினைக்கேக்கை நடந்ததெல்லாம் அப்பிடியே தொடர்ந்திருக்கக்கூடாதோ எண்ட ஏக்கமும் கவலையும் ...
மேலும் கதையை படிக்க...
ஊர்வன, நடப்பன மற்றும் பறப்பனவற்றைப் பாதுகாப்பதற்கான அமைப்பு
மௌனமான நேரம்
கனபேர் வந்து போயிருக்கினம்
நான் கதை சொன்னால் கேட்காது
சுகமாக அழ வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)