இந்தக் காலத்துப் பசங்க..!

 

ராம்குமார் வீடு தேடி வந்து அழைப்பிதழ் வைத்தபோது, தாமோதரனுக்கே பிரமிப்பாகத் தான் இருந்தது. கனகாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்… திடீரென ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட சாலையைப் போல அவள் கண்கள் விரிந்திருந்தன. படபடவெனக் கேள்விக் கணைகளை வீசி, அவனைத் துளைத்தெடுத்தாள்.

‘‘தி.நகர்ல இடம் கிடைக்கிறது குதிரைக் கொம்பாச்சே… எப்படிப் புடிச்சே?’’

‘‘தெரிஞ்சவர் மூலம் வந்தது. நல்ல சான்ஸ்… விடக்கூடாதுன்னு ஆபீஸ்ல லோன் போட்டு வாங்கிட்டேன் டீச்சர்!’’

‘‘காலி கிரவுண்டா?’’

‘‘இல்லே டீச்சர்! பழைய பில்டிங்தான். முழுசும் இடிக்காம, கொஞ்சம் ஆல்ட்ரேஷன் பண்ணினேன்!’’

‘‘மொத்தம் எவ்வளவு ஆச்சு?’’

சொன்னான். கனகாவின் வாய்பிளந்து விட்டது.

‘‘அடேங்கப்பா! ஆபீஸ்ல லோன் எவ்வளவு கொடுத்தாங்க?’’

சளைக்காமல் சொன்னான்.

‘‘மிச்சத்துக்கு..? கடன் வாங்கினியா?’’

‘‘ஆமா!’’

‘‘அடப்பாவி! வாங்கற சம்பளம் கடனுக்கே போயிடும் போலிருக்கே?’’

‘‘என்ன பண்றது டீச்சர், கொஞ்ச நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும்!’’

‘‘அதுக்கில்லடா… திடீர்னு உனக்கொரு கல்யாணம் காட்சின்னா பணத்துக்கு என்ன செய்வே?’’

‘‘அம்மாவுக்கும் இதே கவலைதான் டீச்சர்! கல்யாணத்தை ஒரு கோயில்ல நடத்திட்டு, விருந்தை ஒரு ஓட்டல்ல வெச்சுக்கிட்டா சிம்பிளா முடிஞ்சுடும். கல்யாணத்தை எப்படி வேணும்னாலும் நடத்திக்கலாம். ஆனா, வீட்டை எப்படி வேணும்னாலும் கட்ட முடியாதில்லையா டீச்சர்?’’ என்று புன்னகையுடன் கேட்டான் ராம்குமார்.

‘‘உன்னோட புத்திசாலித் தனத்தைப் பத்திப் புதுசா சொல்லணுமா? உன்னை மாதிரி மணியான பிள்ளையைப் பெற உங்கம்மா ரொம்பக் கொடுத்துவெச்சிருக்கணும்’’ என்றாள் கனகா.

‘‘ஐயோ… அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை டீச்சர். சரி, நான் கிளம்பறேன். வர்ற சண்டே கண்டிப்பா வந்துடணும். வரட்டுமா சார்?’’ என்றபடி எழுந்து கொண்டான் ராம்குமார்.

அவன் தலை மறைந்ததும், கனகா விடமிருந்து ஒரு பெருமூச்சு எழுந்தது. ‘‘ம்… மிஞ்சி மிஞ்சிப் போனா இவனுக்கு என்ன 26 வயசு இருக்குமா? அதுக்குள்ள ஒரு வீட்டையே வாங்கிட்டான். நேத்துதான் அரை நிஜாரும் சட்டையுமா கையில் புத்தகத்தோடு இங்கே வந்துபோன மாதிரி இருக்கு’’ என்றாள்.

தாமோதரன் அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர். அவர் ஆங்கிலப் பாடத்தை நடத்தினார் என்றால், சாலையில் போகும் காய்கறிக்காரி ஒரு நிமிடம் நின்று கவனித்துவிட்டுப் போவாள். அவ்வளவு அழகாக, எளிமையாக நடத்துவார். ஆங்கில இலக்கணத்தை மிகத் தெளிவுடன் சொல்லித் தருவார். எத்தனையோ பேர் அவரது ஆங்கிலப் புலமையில் அசந்திருக்கிறார்கள். அவரையே தன் புத்திசாலித்தனத்தால் அசத்தியவன் ராம்குமார். இத்தனைக்கும் அவன் வசதியான வீட்டுப் பிள்ளை இல்லை. அவன் அம்மா இட்லிக் கடை வைத்துக் கிடைக்கும் சொற்ப வருமானத் தில் குடும்பத்தை நடத்தி வருகிறாள்.

எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் மிகத் திறமையாகப் படித்து மேலே வந்துவிட்டான் ராம்குமார். டைடல் பார்க்கில் வேலை. ஆரம்பச் சம்பளமே 40,000 ரூபாய். இப்போது ஒரு வீட்டையும் வாங்கிவிட்டான்.

‘‘அவன் சொன்ன ஒரு விஷயத்தை கவனிச்சியா கனகா?‘ என்றார் தாமோதரன்.

‘என்ன?’ என்பதைப் போல் பார்த்தாள் கனகா.

‘‘கல்யாணத்தைக் கோயில்லயும் செய்துக்கலாம். அதைவிட முக்கியம் வீடுன்னு சொல்றான்!’’

‘‘அவன் சொல்றது கரெக்ட்தானே? தடபுடலா செலவு பண்ணி ஒருநாள் கூத்தை நடத்தறதால, யாருக்கு என்ன பிரயோஜனம்? வர்றவங்க மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுட்டு ஆயிரம் நொட்டை சொல் சொல்லிட்டுதான் போவாங்க. அந்தப் பணத்தை இப்படி வீட்டு மேல போடறதுதான் நல்லது. இப்ப இருக்கிற தலைமுறை நம்மளை மாதிரி இல்லே. அவங்க ரொம்பப் புத்திசாலி!’’ என்றாள் கனகா.

பிரதான இடத்தில் வீடு இருந்த தால், கண்டுபிடிப்பதில் எந்தச் சிரமமும் இல்லை. இருவரும் போய்ச் சேர்ந்தபோது, நிறையப் பேர் வந்து விட்டிருந்தார்கள். பெரும்பாலானோர் ராம்குமாரின் நண்பர்கள். உறவினர்கள் குறைவாகவே இருந்தனர்.

‘‘வாங்க சார், வாங்க டீச்சர்!’’ என்று முகம் மலர வரவேற்ற ராம்குமார், அவர்களைத் தன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தான்.

இருவரும் வீட்டைச் சுற்றிப் பார்த்தார்கள். பழைய வீட்டை ஆங்காங்கே மாற்றி இருந்தாலும், அந்த ஒட்டு வேலைகள் தெரியாதபடி சாமார்த்தியமாகச் செய்து இருந்தான்.

‘‘எப்படி சார் இருக்கு?’’ என்று ஆவ லுடன் கேட்டான் ராம்குமார்.

‘‘பிரமாதம் ராம்! அதென்ன வாசல் பக்கம் கடை மாதிரி கட்டி இருக்கே?’’ என்று கேட்டார் தாமோதரன்.

‘‘கடைதான் சார்!’’

‘‘கடையா? என்ன கடை?’’

‘‘இட்லிக் கடை சார்! என் அம்மாவுக்கு!’’

தாமோதரனும் கனகாவும் ஒருவரையருவர் பார்த்துக்கொண்டார்கள்.

‘‘ஏம்ப்பா ராம், கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதே! இத்தனை வருஷம்தான் உன் அம்மா இட்லிக் கடை வெச்சுக் கஷ்டப்பட்டு உழைச்சா. உங்களையெல் லாம் வளர்த்து ஆளாக்கினா. இனி மேலும் செய்யணுமா? நீதான் கை நிறையச் சம்பாதிக்கறியே! அப்புறம், எதுக்கு மறுபடியும் இட்லிக் கடையைக் கட்டிக்கிட்டு அழணும்?’’ என்று கேட்டாள் கனகா.

‘‘என்ன டீச்சர் இப்படிச் சொல் லிட்டீங்க? நான் இத்தனை தூரம் வளர்ந்ததே இட்லிக் கடையாலதானே? இன்னிக்கு மேலே வந்துட்டதால, அதை நிறுத்தறது என்ன நியாயம்? அதுவும் இல்லாம, அது என் அம்மா வோட தொழில். அவங்களுக்குத் தெரிஞ்ச ஒரே தொழில் அதுதான். நான் பெரிய வேலையில உட் கார்ந்துட்டதால, அவங்க தொழிலை நிறுத்த எனக்கு என்ன உரிமை இருக்கு? இதுவே என் அம்மா ஒரு ஆபீசராவோ, டாக்டராகவோ இருந்தா, ‘போதும்மா நீ செய்தது’ன்னு சொல்வேனா? அவங்களுக்கு ஒரு சுய கௌரவத்தையும், தன்னம்பிக்கையையும், தன் கால்ல நிக்கிறோம்கிற பெருமையையும் கொடுக்குற தொழில் இது. அவங்களுக்கே முடியலை, போதும் செய்ததுன்னு தோணுற வரைக்கும் செய்யட்டுமே! அவங்க உதவிக்கு ரெண்டு பேரைப் போடப் போறேன். கூடவே புதுசா, நவீனமா பாத்திரம், பண்டம், கேஸ் அடுப்புன்னு வாங்கித் தரலாம்னு இருக்கேன்’’ என்றான் ராம்குமார்.

தாமோதரன் அசந்துவிட்டார். ‘‘சபாஷ் ராம்! எல்லோரையும் மாதிரி நானும் இந்தத் தலைமுறையை தப்பாவே நினைச்சுட்டு இருந்தேன். இப்ப புரியுது… நீங்க தெளிவாதான் இருக்கீங்க. அன்பு, பாசம்னு சொல்லிக்கிட்டு பாரத்தை இழுத்துப் போட்டுக்கிட்டு, மனசுல வெச்சுப் புழுங்காம, வாழ்க்கையை பிராக்டிகலா பார்க்கறீங்க. மத்தவங்களோட சுய கௌரவத்துக்கு மதிப்பு கொடுக்கறீங்க. ஏத்துக்க வேண்டிய வழிமுறை தான் இது’’ என்று அன்போடு அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்!

- வெளியான தேதி: 15 அக்டோபர் 2006 

தொடர்புடைய சிறுகதைகள்
நல்ல புள்ள… நல்ல அம்மா…
‘‘நல்லா யோசிச்சு தான் சொல்றியா?’’ ‘‘ஆமாங்க.’’ ‘‘உன்னைவிட்டு அவன் இருந்ததே இல்லையே!’’ ‘‘இப்படிச் சொல்லியே எத்தனை நாளைக்கு தான் எங்கே போனாலும் அவனைக் கூட்டிக் கிட்டே போறது? அவனுக்கு ஏழு வயசு ஆகுதுங்க. இதுவே ரொம்ப லேட். இனிமேலாவது பழக்கப் படுத்தணும்.’’ ‘‘எனக்கு ஒண்ணுமில்லே. அவனைப் பாத்துக்க ...
மேலும் கதையை படிக்க...
‘‘அடடே! வாப்பா சந்தோஷ். எப்படி இருக்கே?’’ என்று உற்சாகமாக வரவேற்றார் அக்காவின் மாமனார். ‘‘நல்லா இருக்கேங்க’’ என்றான். ‘‘அப்பா, அம்மா, பாட்டி எல்லாம்..?’’ ‘‘நல்லா இருக்காங்க. நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க?’’ ‘‘எங்களுக்கு என்னப்பா... உன் அக்கா வந்ததுல இருந்து எந்தக் குறையும் இல்ல. ஏன் நின்னுட்டே ...
மேலும் கதையை படிக்க...
‘‘வெங்கட்!’’ ‘‘சார்?’’ ‘‘அவங்க எத்தனை மணிக்கு வர்றாங்க?’’ ‘‘பதினோரு மணிக்கு சார்!’’ ‘‘மறுபடியும் போன் செய்தாங்களா?’’ ‘‘ஆமா சார்... சரியா பதினோரு மணிக்கு இங்கே வந்துடறதாச் சொன்னாங்க!’’ ‘....’ ‘‘என்ன சார் யோசிக்கிறீங்க?’’ ‘‘ஒ... ஒண்ணுமில்லே...’’ ‘‘புரியுது சார். சங்கடப்படாதீங்க. அவனவன் பொண்டாட்டிக்கு ஒட்டியாணமும் சின்ன வீட்டுக்கு நெக்லஸ§ம் செய்து போடறதுக்கு லஞ்சம் வாங்கறான். ...
மேலும் கதையை படிக்க...
கணக்குப் போட்டுப் பார்த்தேன்... சரியாக இரண்டு வருடங்கள், 66 நாட்கள் ஆகியிருந்தன. கடைசியாக வெளியான அந்தச் சிறுகதையும் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இன்னும் சரியாகச் சொல்வது என்றால், அதற்கு முன்பு வந்த சில சிறுகதைகளும் அதே ரகம்தான். வெற்றிகளாகக் குவித்த ஒரு விளையாட்டு ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவின் சைக்கிளை இந்த ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக விற்றுவிடுவது எனத் தீர்மானித்துவிட்டேன். ‘விற்றுவிடுவது’ என்று சொல்வதைவிட, ‘தள்ளிவிடுவது’ என்ற வார்த்தையே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இடப் பிரச்னை முக்கியக் காரணம். நான் பைக் வாங்கியதிலிருந்தே அந்தப் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. வீட்டுச் சொந்தக்காரர் மிகவும் ...
மேலும் கதையை படிக்க...
நல்ல புள்ள… நல்ல அம்மா…
அக்கா ஆடிய பல்லாங்குழி!
ஆபரேஷன் தருமன்
ரெண்டு மாத்திரை
அப்பாவின் சைக்கிள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)