இதுதான் கைமாறு என்பதா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 6,314 
 

சந்திரன் தன் மேற்படிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க மிகுந்த சிரமப்பட்டான். அவன் எவ்வளவுதான் படிப்பில் ஆர்வமாக இருந்து வகுப்பில் முதல் தர மாணவனாக வந்த போதும் அவன் தாய் தந்தையரால் அவனை மேலும் படிக்க வைக்க முடியவில்லை. அப்போதுதான் அந்த அறிவித்தலை அவன் தற்செயலாகப் பார்த்தான். தங்கள் உற்பத்திகளை வீடு வீடாக சென்று பட்டுவாடா செய்ய இளவயதினரின் சேவை தேவைப்படுகின்றதென்ற சுவரொட்டி அறிவித்தல் தெருவோர சுவரில் ஒட்டப்பட்டிருந்தது.

பகுதி நேரமாகவும் அதனை செய்யலாம் என்றிருந்ததால் பாடசாலை முடிந்த பின்னரும், வார இரு நாட்களிலும் விடுமுறை தினங்களிலும் அதனை செய்யலாம். இதனை தனக்குக்கிடைத்த வாய்ப்பாகக் கருதிய சந்திரன் அதில் சேர்ந்தான். அது ஓரளவுக்கு அவன் நிதிப்பிரச்சினையைத்தீர்த்தது. ஆனால் முற்றாக அல்ல.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. சந்திரன் வழமைபோல் பண்டப்பொருட்களை உரிய முகவரிகளில் பட்டுவாடா செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தான். அன்று காலை அவன் ஒன்றும் சாப்பிட்டிருக்கவில்லை. சாப்பிட ஒன்றும் வீட்டில் இருக்கவில்லை என்பதுதான் உண்மை. பகல் பதினொரு மணியாகியிருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது.
அவன் காற்சட்டைப் பைக்குள் கைகளை விட்டுத்துழாவிப் பார்த்தான். கைகளில் காசு ஒன்றும் தட்டுப்படுவதாகத் தெரியவில்லை. என்ன செய்யலாம்? அடுத்த வீட்டுக்குப் பொருளை ஒப்படைக்கச் செல்லும் போதும் சாப்பிட ஏதும் கிடைக்குமா என்று கேட்டுப்பார்த்தால் என்ன மனம் கணக்குப்போட்டது.

மனதை திடப்படுத்திக்கொண்டு கதவைத் தட்டினான். கதவு திறந்தது. உள்ளிருந்து ஒரு அழகிய தேவதை போன்ற பெண்பிள்ளை எட்டிப்பார்த்தாள். அவளுக்கு ஒரு பத்து வயதிருக்கும். அவளது பார்வை ‘என்ன’ என்று வினவுவது போல் இருந்தது. அவளிடம் எவ்வாறு சாப்பாடு கேட்பது என மனது தயங்கியது. பின்னர் என்ன நினைத்தானோ தெரியவில்லை ‘குடிக்க தண்ணீர் கிடைக்குமா?’ என்று அவன் வாய் எதையோ நினைத்து எதையோ கூறியது.

அந்த பெண்பிள்ளை அங்கிருந்த கதிரையில் அவனை அமரும்படி கூறி விட்டு உள்ளே சென்றாள். அவளுக்கு அவனை பார்த்த உடனே அவன் மீது அனுதாபம் ஏற்பட்டு விட்டதுடன் அவன் கடுமையான பசியில் வாடியிருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டாள். அவள் ஒரு பெரிய கிளாஸ் நிறைய பாலை ஊற்றி எடுத்துக்கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.

அதனைப்பார்த்த உடனேயே அவன் வாயில் எச்சில் ஊற அதனை மிக ஆர்வத்துடன் மடக் மடக் என குடித்துத் தீர்த்தான். பாலால் அவன் வயிறு நிறைய அவள் செயலால் அவன் மனமும் நிறைந்தது. அவன் ஒரு கணம் நிமிர்ந்து அவள் முகத்தை மிகுந்த நன்றி உணர்வுடன் பார்த்தான். அவளது அழகிய முகம் அவன் மனதில் அப்படியே சிக்கென்று பதிந்து போய்விட்டது.

அதன் பிறகு அவளை அவன் சந்திக்கவுமில்லை மறக்கவும் இல்லை. அடுத்த வருடமே அவன் க.பொ.த. உயர்தர உயிரியல் விஞ்ஞான பிரிவில் தேர்ச்சியடைந்து கொழும்புப் பல்கலைக்கழகத்துக்குத் தேர்வாகி மருந்துவத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டான். இது நடந்து இப்போது பல வருடங்களாகி விட்டன. அவளும் வளர்ந்து பருவப் பெண்ணாகி விட்டாள். ஒருநாள் பகற்பொழுதில் அவன் தன் அம்மாவுடன் வெளியே சென்று விட்டு விடுதி திரும்பிய போது மயக்கம் வருகின்றது என்று கூறி கட்டிலில் சென்று படுத்துக்கொண்டாள். பின் அந்த மயக்கம் அடிக்கடி வரத்தொடங்கியது. வீட்டினர் உள்ளூர் மருத்துவமனையில் அவளை சேர்த்தனர். அவளுக்கு என்ன நோய் என்று உள்ளூர் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர்கள் தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறி கொழும்பிலுள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனையின் பெயரொன்றை விதந்துரைத்து அங்கு சென்று நரம்பியல் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெறும்படி கூறி விட்டனர். இதற்கிடையில் அவளது நோய் மேலும் கடுமையாக முற்றியிருந்தது. அவளது நிலையைக்கண்டு மனக்கவலையடைந்த அவளது பெற்றோர் கடன் பெற்றாவது அவளுக்கு மருத்துவம் பார்ப்பதென தீர்மானித்து கொழும்புக்கு குறித்த மருத்துவமனையைத் தேடிச் சென்றனர்.

அந்த மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளின் பின் அவளுக்கு மூளையில் கட்டி உண்டாகி இருக்கிறதென்றும் உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்றும் அதற்கு விசேடத்துவ சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் பூரணச்சந்திரனின் உதவி தேவைப்படுமென்றும் கூறினர். உடனேயே டொக்டர் பூரணச்சந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

டொக்டர் பூரணச் சந்திரன் நோயாளியின் விபரம் பற்றி விசாரித்து அவள் அவனது சொந்த ஊரில் இருந்து வந்திருக்கிறாள் என்று அறிந்த போது அவனது மூளையில் எங்கோ ஒரு இடத்தில் ஒரு பொறி பளிச்சிட்டது. மனதின் ஒரு ஓரத்தில் சிறு வெளிச்சம் தெரிந்தது. அவர் ஆர்வத்துடன் உடனேயே அந்த நோயாளியை பார்ப்பதற்கு ஆஸ்பத்திரியில் அவள் தங்கியிருந்த அந்த அறைக்குச் சென்றார். அவள் மெலிந்து நோயாளியாகக் காணப்பட்டாலும் அந்த அழகிய முகத்தை அவர் உடனேயே அடையாளம் கண்டு கொண்டார். அந்த முகத்தை அவரால் ஒரு நாளும் மறக்க முடிந்ததில்லை.

அதன் பின் அங்கிருந்த அவரது மருத்துவ சத்திரசிகிச்சை குழுவினரை அழைத்து அவள் தொடபில் விசேட கவனமெடுத்துக் கொள்ளச் செய்தார். தானும் கடுமையாக உழைத்தார். சில நித்திரையற்ற இரவுகள் நீடித்தன. அவளைக் காப்பாற்ற கடுமையாக போராட வேண்டியிருந்தது.

அவளுக்கு வெற்றிகரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவளது அகன்று விட்ட சில நாட்களிலேயே அவர் முகத்தில் புன்முறுவல் தோன்றியது. எனினும் அவள் உடல் நிலை முற்றாகத் தேற மேலும் சில நாட்கள் சென்றன. அதன் பின்னரே அவளின் பெற்றோர் அவளது மருத்துவ செலவை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பில் கவலை கொண்டனர்.

அடுத்த நாள் டொக்டர் சந்திரன் அவளைச் சந்திக்கச் சென்ற போது ஒரு தீர்மானத்துடனேயே சென்றார். அவர் அவளின் பெற்றோர்களையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே தனது கடந்த கால கதையைக் கூறினார். தான் தனது படிப்பை முடிக்கும்வரை பட்ட துன்பங்களைக்கூறினார். ஒரு நாள் தான் பட்டினியால் அவதிப்பட்ட போது ஒரு கிளாஸ் பால் கொடுத்துத் தன் பசியை போக்கிய சம்பவத்தை அவளிடம் கூறி அது ஞாபகமிருக்கிறதா? என்று கேட்டார். அவளும் சற்றே யோசித்து விட்டு அந்தச் சம்பவம் ஞாபகமிருக்கின்றதென்றும் அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த இளைஞனின் கண்களில் அளவு கடந்த சோகத்தை தான் அவதானித்ததாகவும் அதனை தன்னால் மறக்க முடியவில்லை என்றும் கூறினாள்.

அந்த இளைஞன்தான் இப்போது தன்னைக் காப்பாற்றிய புகழ் பெற்ற டொக்டர் பூரணச்சந்திரன் என்பதனை அவளால் நம்ப முடியவில்லை.அன்று அவள் கொடுத்த ஒரு கிளாஸ் பால் மிகப் பெறுமதியானதென்றும் அந்த முகத்தைத்தான் இன்றுவரை ஞாபகத்தில் வைத்திருப்பதாகவும் அதற்குப் பிரதியுபகாரமாக அவளின் மருத்துவ செலவு முழுவதையும் தானே பொறுப்பேற்பதாகவும் இதனை அவர்கள் மறுக்கக் கூடாதெனவும் விநயமாக கேட்டுக்கொண்டார்.

அவர்கள் இருந்த நிலையில் டொக்டரின் அந்தக் கோரிக்கையை அவர்களால் தட்டிக்கழிக்க முடியவில்லை. அதன் பின் அவள் சுகம் பெற்று வீடு சென்றாள். இந்த சம்பவத்துக்குப் பின் அவளுக்கும் டொக்டருக்கும் இடையில் மனதால் தொடர்பு ஏற்பட்டது. அது பின் காதலாக மலர்ந்து கல்யாணம் வரை சென்றது. அந்தக் கதையை மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *