Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இச்சிமரம்

 

ஒன்பது வருஷமாயிற்று, இந்த ஊரைவிட்டுப் போய்! எட்டாப்பு முடித்தவுடன், சென்னைப் பக்கம் போனது. இலவச விடுதி வாசம். பொறியியல் படித்து, பொறியியல் கல்லூரியிலேயே லெக்சரராகப் பணி!
ஊரையும் தாத்தாவையும் பார்த்துவிட்டுப் போகலாமே என்று வந்த நேற்றிலிருந்து ஊரைப் பார்க்கப் பார்க்க இவனுக்குள் விநோதமான உணர்வுகள். புதிர்மயமான பிரமிப்புகள்… நீள நீள நினைவுகள்..!

ரொம்பவே மாறியிருக்கிற மாதிரியான தோற்றம்… மாறாமல்இருக்கிற மாதிரியும் ஒரு மயக்கம். கணுக்கால் வரை தவழும் கைலியும், அரைக்கை சட்டையுமாக வெளியே வந்தான்.

பால் பண்ணைக் கட்டடம் அப்போது மைதானத்தில் தனித்துப் பளிச்சென்று தெரியும். புதுப் பணக்காரர் வீடு போல இருந்த ஆடம்பரத் தோற்றம் மாறி, இப்போது நொடித்துப்போன பணக்காரர் வீடு போலக் கன்னங்கரேலென்று கிடக்கிறது. வெள்ளையடிக்கவும் விதியற்றுப் போன ஏழ்மை.

அதை மறைக்கிற மாதிரி, புதிதாகப் பெரிய பெரிய வீடுகள். மாடுகளை நிறுத்திப் பால் பீய்ச்சிய இடம் பூராவும் கூளப் படப்புகளும், வீடுகளுமாக இருக்கிறது. ஏர்க் கலப்பைகள் தெரியவில்லை. ஏகப்பட்ட டிராக்டர்கள் தெரிகிறது.

பஸ் வந்து திரும்புகிற இடத்தில், வேப்ப மரங்கள் நிறைய உருவாகிஇருக்கின்றன. புதிதாக மூன்று டீக்கடைகள் முளைத்திருக்கின்றன. டிபனும், வடையும், பால் பன்னும் எந்நேரமும் உயிர்ப்புடன் களை கட்டுகின்றன. வியாபார மும்முரம்.

முன்பெல்லாம் ஒரே ஒரு டீக்கடை மட்டும்தான் இருக்கும். டீ மட்டும்தான் கிடைக்கும். டீக்கும் சீனி போட மாட்டார்கள். காய்ச்சி வைத்திருக்கிற வெல்லப்பாகுதான் ஊற்றுவார்கள்.

இப்போது, டீக்கடைகள் ரொம்பத் தடபுடல். இதெல்லாம் முன்னேற்றமா? மாற்றமா? வளர்ச்சியா? இவனுக்குள் யோசனைகள்…

ஒரே ஒரு பஸ்தான் முன்பு வரும். இப்போது ஏழெட்டுத் தடவைகள் வந்து திரும்புகின்றன டவுன் பஸ்கள். அடிக்கடி மினி பஸ்கள் வேறு! இத்தனையையும் தவறவிட்டவர்கள், ஒரு சில நேரம் ஆட்டோவிலும் வருகிறார்கள்.

இவன் கூட நேற்று திருவேங்கடத்திலிருந்து ஆட்டோவில்தான் வந்தான். எண்பது ரூபாய் வாங்கிவிட்டார்கள்.

ஆட்டோவிலிருந்து இறங்கித் தரையில் கால் வைத்தபோது, மனசுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடியது. வெறுங்காலுடன் தெருப் புழுதியில் சுற்றித் திரிந்த அந்த நாள்..! இப்போது தெருப் புழுதியைக் காணோம். சிமென்ட் டுப் பாதையாகியிருந்தது தெரு!

டீக்கடைக்கு வந்தான். சுற்றி நிற்கிற பெரியவர்கள் விநோதமாக இவனைப் பார்க்கிறார்கள்.

”தம்பி யாரு தெரியுமில்ல… நம்ம மாடசாமி நாடாரு பேரன்..!”

”யாரு… செத்துப்போன செண்பகம் மகனா?”

”ஆமா! சின்னப் புள்ளையிலே இங்கதான் தாத்தா வூட்ல கஞ்சியைக் குடிச்சுக்கிட்டு, நம்ம ஊரு பள்ளிக்கூடத்துலதான் படிச்சுது..!”

”இப்ப எங்க இருக்கே, தம்பி?”

”மெட்ராஸ்ல!”

”என்ன செய்யறே?”

”இன்ஜினீயரிங் காலேஜ்ல வாத்தியாரா இருக்கேன்..!”

”உங்களையெல்லாம் வளர்க்குறதுக்கு அரும்பாடுபட்ட மனுசர் உங்க தாத்தா. தவங்குற காலத்துல, நீதான் அவரை நல்லபடியா பாத்துக்கணும்ப்பா..!”

”ஆகட்டும் ஐயா..!”

விசாரிப்புகளோடு அறிவுரையும் சொல்கிற கிராமத்து மனசு. உரிமை எடுத்துக்கொள்கிற அந்நியோன்னியம். ‘எனக்கென்ன’ என்று ஒதுங்கிக்கொள்ளத் தெரியாத வெள்ளந்தித்தனம்.

டீ ரொம்ப ருசியாக இருந்தது. சென்னையில் இப்படியான ருசியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இப்படியான பாச விசாரிப்புகளையும் எதிர்பார்க்க முடியாது. இங்கே எல்லோரும் இவனை மதிப்பும் மரியாதையுமாகப் பார்க்கின்றனர்.

டீ கிளாஸை நீட்டினான். காசு தந்தான். எதிர்த்தாற்போல் சற்றுத் தள்ளியிருந்த இச்சி மரத்தைப் பார்த்தான். ரொம்பப் பெரிசாக வளர்ந்திருந்தது. இலைகளின் அடர்த்திக்குள் பசுமை இருட்டு பம்மியிருந்தது. மைனாக்களின் கீச்சிடல். சாம்பல் நிறப் பெண் குயில் ஒன்று, கிளை நுனியில் நின்று கூவுகிறது.

அவன் உதட்டில் மெல்லிய சிரிப்பு. ‘மெட்ராஸ்ல போய் குயிலோட நெறம் சாம்பல்னு சொன்னா, ஒரு பய நம்ப மாட்டான்!’ என்ற நினைவு மின்னல்.

இச்சி மரம் என்றதும், இவனுக்குள் சட்டென்று சோலைசாமி நினைவுக்கு வந்தார். தூசி படிந்த நினைவு. வளர்த்தியான ஆள். ஒல்லியான தோற்றம். காய்ந்த வாளைமீன் போல இருப்பார். மல் துணியில் தைத்த, கை வைத்த பனியன்தான் எந்நேரமும் போட்டிருப்பார்.

இச்சி மர நிழலில், பகல் முழுக்க முடி வெட்டுவார். சுருட்டி வைத்திருக்கிற பையை விரித்து நீட்டினால், கத்தரிக்கு ஒரு பை, கத்திக்கு ஒரு பை, தீட்டுக்கல்லுக்கு ஒரு பை, தீட்டு வாருக்கு ஒரு பை, முள்வாங்கிக்கு ஒரு பை என்று தைக்கப்பட்டுஇருக்கும். அதது, அததன் உறையில் மாட்டப்பட்டு இருக்கும். வெட்டுப்பட்ட ரோம இணுக்குகளும் ஒட்டியிருக்கும்.

இவனுக்கு அவரைக் கண்டாலே குலைநடுக்கம். பதறுவான். என்னவோ தெரியவில்லை, இனம் புரியாத பயம். சிறு வயது பயம்.

இத்தனைக்கும் அரட்ட மாட்டார். ‘ராசா…’ என்று மிருதுவான குழைவில்தான் அழைப்பார்.

முடி வெட்ட அவரிடம்தான் போயாக வேண்டும். பயந்துகொண்டேதான் போவான். யாருக்காவது முகச் சவரம் செய்துகொண்டு இருப்பார். ‘என்ன ராசா, முடிவெட்டணுமா?’ என்பார்.

‘ம்…’

‘சித்தே உக்காரும் ராசா… இதோ ஆச்சு!’

அவர் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருப்பார். பொழுது முழுக்க அப்படியே உட்கார்ந்துகொண்டு, வருகிறவர்களுக்கெல்லாம் முகச் சவரமும் முடிவெட்டுமாக இடை விடாத வேலை.

இவனுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ‘இம்புட்டு நேரமும் குத்துக்கால் வெச்சு உட்கார்ந்திருக்க முடியுதா? எரிச்சல் பத்தாதா? ரத்த ஓட்டம் நின்று போய், முள் முள்ளாய்க் குத்தாதா?’

குவிந்து உதிர்ந்துகிடக்கும் ரோமக் கற்றைகளை வலது கையால் கூட்டிப் பரசி அள்ளி, இச்சி மரத்தூரில் போடுவார், சோலைசாமி.

‘ம்… உக்காருங்க ராசா!’

இவன் சம்மணம் கூட்டி உட்காருவான். அவர் பக்கத்தில் உட்கார்ந்தவுடன், ஒரு நெடி வரும். பீடி நாற்றமும் வேர்வை நாற்றமும் கலந்த ஒரு நெடி.

தலையில் தெளிக்கப்படுகிற தண்ணீர், காது வழியாகக் கீழே வழியும். கத்தரிப்பான் ஒரு கையில்; சீப்பு ஒரு கையில். முடிவெட்டுகிறபோது, கரிச்சான் சீச்சிடுகிற மாதிரி ஒரு சத்தம் லயத்துடன் வந்து கொண்டே இருக்கும். ‘கர்ரிச்… கர்ரிச்… கர்ரிச்…’

சாணை பிடிக்காத கத்தரி, ரோமத்தைப் பறித்துப் பிடுங்கும். ‘சுரீர் சுரீ’ரெனக் காந்தும்.

‘ஸ்ஸ்ஸ் ஆஆ…’ என்று வலி தாங்காமல் இவன் கத்துவான்.

‘எதுக்கு ராசா, கத்துறீங்க? கத்தக்கூடாது. கத்துனா, காதைக் கத்தரிச்சிருவேன்!’

அம்புட்டுதான்… இவன் ‘டர்ர்’ராகிவிடுவான். ஒண்ணுக்கு முட்டிக்கொண்டு வருகிற மாதிரி இருக்கும். பயத்தில் மனசு கிடந்து படபடக்கும். கழுத்தடியில் அச்ச வியர்வையின் நசநசப்பு!

கனிவான, குழைவான குரலில் வருகிற, ‘கத்தரிச்சிருவேன்’ என்கிற மென்கண்டிப்பு, நிஜம் போலத் தோன்றும். மனசுக்குள் ஆணிவேராக இறங்கிப் படரும். முடிவெட்டுக்குத் தோதாக தலையை ரெண்டு கையாலும் பற்றி, அங்கிட்டும் இங்கிட்டும் திருப்புவது, திருப்புகிறபோது குனிகிற முகத்தை வெடுக்வெடுக்கென நிமிர்த் துவது… எல்லாமே இவனுக்கு வலிக்கும். ஆனால், கத்த முடியாது. ‘காது துண்டாகிவிடுமோ’ என்கிற பதற்றம்… நடுக்கம்..!

அவனுள் மீண்டும் ஒரு மென் முறுவல். பாலக வயசு பயத்தை எண்ணிய மன மின்னல். அந்த அறியாமையின் அழகை நினைத்த மனசின் ஒளி.

‘இப்பவும் சோலைசாமி இருக்காரா? இன்றும் முடிவெட்டுகிறாரா?’ அவனுக்குள் குறுகுறுக்கிற கேள்வி.

யாரிடமாச்சும் கேட்கலாமா? இச்சி மரத்தின் அருகிலேயே போய்ப் பாத்துரலாமா?

நினைவு, நெஞ்சில் எழும் கணத்திலேயே, நினைவின் உருவமாக வருகிற சோலைசாமி.

அதே அழுக்கான பழுப்பு நிற வேட்டி, அதே மல்துணி பனியன், அதே ஒல்லித் தோற்றம். முதுமையில் வளைந்த முதுகு காரணமாக, சற்றே வளர்த்திக் குறைவு. தலையெல்லாம் நரை.

வேட்டியையும் கையையும் அடித்து, ஒட்டியிருந்த ரோம இணுக்குகளை உதறிக்கொண்டே வருகிற பெரியவர்.

பெஞ்ச்சுகளிலும் சேர்களிலும் உட்கார்ந்திருக்கிற மனிதர்களுக்கு மத்தியில், தரையில் குத்துக்கால் வைத்து உட்கார்கிற அதே சோலைசாமி. வெகு இயல்பாக, இவனது கால்மாட்டில் உட்கார்ந்திருக்கிறார்.

”ராசா… நீங்க..?” கண் இமைகளில்கூட நரை மின்னல்.

”மாடசாமித் தாத்தா பேரன்..!”

”மெட்ராஸ்லதானே ராசா இருக்கீக? சின்னப் புள்ளையிலே பாத்தது. பெரியாளாகிட்டீக! ஆமா, எப்ப வந்தீக..?”

”நேத்து..!”

”உங்க நாவிதனை ஏதாச்சும் கவனிக்கக் கூடாதா?” இயல்பான இரைஞ்சும் குரல்.

”ரெண்டு வடையும் டீயும் குடுத்துருங்க!” என்றான் இவன், டீக்கடைக்காரரைப் பார்த்து.

”நீங்க மகராசா, நல்லா இருக்கணும்!” நன்றியை ஆசீர்வாதமாகச் சொல்கிற அந்த எளிய மனசு. உயர் பண்பின் செல்வ மனசு.

சோலைசாமி வடை தின்று முடித்தவுடன்… டீ வந்தது, வெள்ளை வெளேரென்ற பிளாஸ்டிக் குவளையில்.

எல்லோருக்கும் கண்ணாடி டம்ளர். இவருக்கு மட்டும்..?

இவன் மனசு அதிர்கிறது. அதிர்வில் முணுமுணுத்தே விடுகிறான்…

”இதுலே மாறலியா?”

- 09th ஜனவரி 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
அவக் தொவக்கென்று அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மகன் முருகையாவையே கூர்ந்து பார்க்கிற சங்காண்டியின் கண்களிலேயே கண் வைத்திருக்கிற சின்னப் பாண்டியின் மனசெல்லாம் பெருமிதத் ததும்பல். முருகையா முழுத்த இளவட்டம். முறுக்கேறிய உடம்பு. கருவேலமரத் தூர்மாதிரி வைரம் பாய்ந்து இறுகிய திரேகம். சோறும் ...
மேலும் கதையை படிக்க...
இடுப்பில் நீர் நிறைந்த குடம் இருந்தது. இருளாயி மனசெல்லாம் கிடந்து கொதிக் கிறது. தாங்க முடியாத கோபக் கனல் தெறிக்கிறது. முகத்தில் மனக் கொதிப்பின் தளதளப்பாகத் தெறித்துச் சிதறுகிற அனல் வார்த்தைகள். ''ஓ வாய்லே புத்து பெறப்பட... நாசமாய்ப் போக... ஒருநாள் பேதியிலே ...
மேலும் கதையை படிக்க...
வனச் சுதந்திரம்
பைக் கட்டை முக்கித்தக்கி தூக்கித் தோளில் போட்டவுடன் பாரம் தாளாமல் முதுகு வளைந்தது கடற்கரைக்கு. எல்லோரும் சிட்டாகப் பறக்கிறார்கள். அவர்களுடைய சின்னச் சிறகுகளில் மனத் துள்ளல். வெள்ளிக்கிழமை சாயங்காலம். சாயந்தர வெயில் கண்ணில் ஊசி பாய்ச்சுகிறது. கன்ன மிருதுகளில் தீச்சூடுவைத்த மாதிரி ...
மேலும் கதையை படிக்க...
முத்துப்பெருமாள் அருவாளைக் கண்டாலே சீமைக் கருவேல மரங்கள் பயத்தில் தருக்… தருக்… என்று கழியும். நீளவாக்கில் ஓடிக் கிடக்கிற முள் விளார்கள் தலை தாழ்த்தித் தலை தாழ்த்திக் கூழைக் கும்பிடு போடும். சீமைக் கருவேல முள், விஷமுள். அதைக் கண்டால் எல்லாரும் ...
மேலும் கதையை படிக்க...
‘என்னதான் செய்றது?’ சமுத்திரம் திசை தொலைத்தவனாக திக்குமுக்காடிப் போய்க்கிடக்கிறான். எந்த வேலையும் பார்க்காமல் உடம்பே துருப்பிடித்த மாதிரி இறுகிக் கிடக்கிறது. ஏதாச்சும் செய்தாகணுமே என்று உந்துகிற லௌகீக வாழ்க்கை. பஸ் வந்து திரும்புகிற ஊர் மைதானம். வரிசையாக வேப்ப மரங்கள். இடையிடையே கட்சிக் கொடிக் ...
மேலும் கதையை படிக்க...
தள்ளி நில்லு
புது ராத்திரி
வனச் சுதந்திரம்
விபரீத ஆசை
காலமாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)