ஆறு ஓடிய தடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 7,909 
 

இதுவரையில் மற்றவர்களால் அதிகம் அறியப்படாத எங்களூருக்கு ஒளிப்பதிவாளர் ஆறுமுகத்துடன் வைஜெயந்தி வந்தார். வழியில் காத்திருந்து அவர்களை வரவேற்றேன். ஆட்டோவை அனுப்பிவிட்டு வைஜெயந்தி “நல்லாயிருக்கீங்களா? பார்த்து ரொம்ப நாளாகுது . . .” என்றார். “ஆமா, கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில கடைசியா சந்திச்சது” என்றேன். நண்பர் நடத்திய அந்தக் கூட்டத்தில் படமெடுத்து முடித்ததும் ஒளிப்பதிவாளரை அனுப்பிவிட்டு வைஜெயந்தி முழு நாளும் கலந்துகொண்டார். அவர் சார்ந்த தொலைக்காட்சியில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கவிதைப் புத்தகம் வெளியிடுவதைக் கொஞ்ச நேரம் காட்டினார்கள். வெவ்வேறு ஊர்களில் நடந்த பல கலைஇலக்கிய நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்தோடு வைஜெயந்தி பங்கேற்றார். ஆறுமுகத்தை நேரிலும் ஒருதரம் அறிமுகப்படுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தவாறு “பக்கத்தில தோல் தொழிற்சாலைகளைக் காணோமே?” என்றார். “அதெல்லாம் நாலைந்து கிலோமீட்டர் தூரத்திலிருக்குது. ஆறுதான் ஊரை ஓட்டி ஓடுது” என்றேன். ஆறுமுகம் பையைத் திறந்து படக்கருவியை வெளியில் எடுத்தார். ஒரு நல்ல ஆரம்பம் என்று நினைத்தது போல் நாங்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பதிவு செய்யத் தொடங்கினார். உடனே என் முகத்துக்கெதிரில் கையை நீட்டி மறுத்தேன்: “தயவுசெஞ்சு எனக்குத் தேவையில்லாத முக்கியத்துவம் கொடுக்காதிங்க”. வைஜெயந்தி “இதையெல்லாம் காட்ட மாட்டாங்க, அவர் சும்மா எடுக்கிறாரு” என்று சொல்லிவிட்டு ஒளிப்பதிவாளரிடம் வேண்டாமென்று சைகை செய்தார். ஆறுமுகம் திரும்பி ஊரையும் மரங்களையும் உட்கார்ந்திருக்கும் மனிதர்களையும் ஒரு சுற்றுப் படமெடுத்தார். படக்கருவி கைக்கு அடக்கமாயிருந்ததால் யாருடைய கவனமும் முழுதாகக் கவரப்படவில்லை. “முதல்ல வீட்டுக்குப் போகலாம் வாங்க . . .” என்று அவர்களுடன் நடந்தேன்.

என் மனைவிக்கு அவர்களிருவரையும் அறிமுகப்படுத்தினேன். மீண்டும் சமையலறைக்குள் போய்விட்ட அவளிடம் சென்று வைஜெயந்தி எதையோ கேட்டார். அவள் பதில் சொன்னதையும் ஆறுமுகம் வெளியிலிருந்து படமாக்கினார். வைஜெயந்தி திரும்பியதும் பதிவானவற்றைப் படக்கருவியுடன் இணைந்த சிறுதிரையில் ஓட்டிக் காண்பித்தார். அதற்கு முன்பு பதிவு செய்திருந்த படங்களை காட்டச் சொன்னார் வைஜெயந்தி. ஆறுமுகம் ஒவ்வொன்றாகத் தள்ளிக்கொண்டே வந்தார். ஒரு காட்சி வந்ததும் நிலையாக நிறுத்த வைத்தார் வைஜெயந்தி. அது பழுப்பும் நீலமும் சிவப்பும் கலந்து வரையப்பட்ட அரூப ஓவியம் போலிருந்தது. தொலைக்காட்சியில் காட்டுவதற்காக ஓவியக் கண்காட்சியில் படம் பிடித்தது போலும். “ரொம்ப நல்ல நவீன ஓவியம் . . .” என்றேன். “இல்லை, இது கிட்டத்தில் எடுத்த சாயப்பட்டறைக் கழிவுநீர்க் குட்டை . . .” என்று திரையை என் பக்கம் திருப்பினார். “அட, அதே போலிருக்கே?” என்றேன். வைஜெயந்தி “இது வேற தொலைக்காட்சி நிகழ்ச்சியில ஒளிபரப்பானது” என்றார். “இது மாதிரிதான் எங்களூர் ஆற்றிலும் ஓடுது” என்றேன். “தோல் தொழிற்சாலையால பாதிக்கப்பட்ட ஆற்றைப் பற்றி சமீபத்துல இங்கிலீஷ் பத்திரிகையில ஒரு கட்டுரை வெளியானது . . .” என்றார் வைஜெயந்தி. “ஆமா, ஒரு ஞாயித்துக்கிழமை இணைப்பில வந்ததாச் சொன்னாங்க” என்றேன். “எங்கத் தொலைக்காட்சியிலயும் இந்த ஆற்றை செய்திப் படமா காட்டணுமாம். கொஞ்ச நேரம் மட்டும் ஓடணும். ஆற்றில சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கத்தான் உங்ககிட்ட வந்தேன்” என்றார். தோல் தொழிற்சாலையால் பாழான பகுதிகளைப் பற்றி ஏற்கெனவே ஒன்றிரண்டு ஆவணப் படங்கள் வெளியாயின. அதேபோல் தொலைக்காட்சிகளிலும் சில செய்தித் தொகுப்புகள் காட்டப்பட்டன. அவற்றால் எந்தப் பயனும் விளையவில்லை. வழக்கம்போல் தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் வற்றாத ஜீவநதி போல் ஆற்றில் ஓடிக்கொண்டிருந்தது. இந்த விஷச்சுழல் போன்ற பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க முடியாது என்றுபட்டது. என் மனைவி கொடுத்த சிற்றுண்டியைத் தின்று காபியைக் குடித்தோம்.

தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினோம். வெளியில் பக்கத்து வீட்டு முழுக் குடும்பமும் தென்னைஓலைகள் தைப்பதில் மும்முரமாயிருந்தது. வெங்கடேசன், அவனுடைய மனைவி, மூன்று மகள்கள் எல்லோரும் வேகமாக ஓலை பின்னிக்கொண்டிருந்தார்கள். தெரு மின்சாரக் கம்பத்தின் மீது தைத்து முடித்த ஓலைக் கட்டுகள் சில சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. தண்ணீர்த் தெளித்து உரமாக்கப்பட்ட கீற்றுகளின் குவியல் ஓரமாகக் காத்திருந்தது. காக்கிக் கால்சட்டை வெளியே நீண்டிருக்க வெங்கடேசன் குத்துக்காலிட்டு முடைந்து கொண்டிருந்தான். “இவர் தோல் தொழிற்சாலையில் வேலை செய்றாரு . . . கொஞ்சம் பேசிட்டுப் போகலாம்” என்றேன். ஆறுமுகம் வாயில் எதையோப்போட்டு மென்றவாறு தன் கையில் தயாராக வைத்திருந்த படக்கருவியில் எடுக்கத் தொடங்கினார். “என்னப்பா, இன்னைக்கு வேலை இல்லையா?” என்று அவன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தேன். வெங்கடேசன் தலையை நிமிர்த்தி “நேத்துப் பகலு ராத்திரி வேலையயெல்லாம் ஒண்ணாச் சேத்து முடிச்சுட்டு வந்துட்டேன்” என்றான். அப்போதும் அவன் கைகள் நிற்காமல் பரபரவென்று இயங்கிக்கொண்டிருந்தன. “இவங்க தோல் தொழிற்சாலையால கெட்டுப்போன ஆற்றைப் படமெடுக்க வந்திருக்காங்க . . .” என்றேன். வெங்கடேசன் ஆவலாக எதிர்த் திண்ணையில் வந்து உட்கார்ந்தான். அவன் உடல் நெருப்பில் பற்றியெரிந்ததைப் போல் கறுத்திருந்தது. முகத்திலும் கை கால்களிலும் போர்க்களத்தில் பெற்றவை போல் தழும்புகள் நிறைந்திருந்தன. பேட்டி காண்பதைப் போல் வைஜெயந்தி “நீங்க என்ன வேலை செய்யறீங்க?” என்றார். “சுண்ணாம்புத் தொட்டியில ஊறப் போட்ட தோலுங்களை தெனமும் எடுத்து ஜவ்வையும் முடியையும் வழிக்கணும்” என்றான் அவன் படக்கருவியைப் பார்த்தபடி. “தொட்டியிலிருந்து தோலை எப்படி எடுப்பீங்க?” என்றார் வைஜெயந்தி. அவன் அலட்சியமாக “ஒண்ணுமில்லேம்மா, உள்ளே எறங்கி அள்ளிப் போடறதுதான். கை கால்ல உறை மாட்டிக்குவோம். இல்லைன்னா அப்படியே வார்றதுதான்” என்றான். “ஜவ்வு, முடியெல்லாம் நீக்கறதுக்கு என்ன பண்ணனும்?” என்று சீராகப் பதிவாவதைக் கவனித்தார். “அதுவா, ரெண்டு பக்கமும் பிடி போட்ட கத்தியை வெச்சு சீவித் தள்ளுவோம். ஒரே நாளில ஐந்நூறு ஆயிரம்கூட அடிப்போம். பொம்பளைங்க வெரலுக்கு வெறும் பலூன் மாட்டிக்கூட முடியெடுப்பாங்க” என்றான் வெங்கடேசன் உற்சாகமாக. குச்சி போலிருந்த அவனுடைய மனைவி வேலையை நிறுத்திவிட்டு அவனுக்குப் பின்னால் வந்து நின்றாள். “உங்க உடம்புக்கு இதனால ஏதுவும்பாதிப்பில்லையா?” என்ற வைஜெயந்தியையும் படக்கருவியையும் அவள் மோவாயில் கை வைத்து அதிசயமாகப் பார்த்தாள். ‘அடி என்னாடி இது?’ என்கிற பாவம். “உடம்பு முழுசும் நோவெடுக்கும். அப்புறம் கொப்புளங்களும் தடிப்பும் வரும். கம்பெனி ஆசுபத்திரி மருந்து சாப்பிட்டாக்கூட போவாது. அப்படியே பழகிப் போச்சி” என்ற அவனுடன் மனைவியையும் சேர்த்து ஆறுமுகம் படமெடுத்தார். பின்னணியில் வரிசையாக அவனுடைய மூன்று பெண்களும் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தார்கள். வைஜெயந்தி அவன் நெற்றியில் மேடிட்டிருந்த தழும்பைத் தடவி “ரொம்ப கெட்டியாயிருக்கு” என்றார். அவருடைய கை பார்வையாளருக்கு அதைச் சுட்டிக் காட்டுவதைப் போலிருந்தது.

வெங்கடேசன் கைலியை மேலுயுயர்த்தி “இதப் பாரும்மா . . . எல்லாம் காய் ஆயிடுச்சி, என்னை ஒண்ணும் பண்ணாது” என்றான். அவன் கால்கள் முழுக்க குறுக்கும் நெடுக்குமாக ஆறிய வெட்டுக்காயங்களுடையவை போன்ற வடுக்கள் இடை வெளிகளில்லாமல் படர்ந்திருந்தன. வலது கால் கட்டை விரலில்லாமல் மொட்டையாயிருந்ததை அப்போதுதான் கவனித்தேன். ஆறுமுகம் குனிந்து அதைப் படமெடுத்தார். அவனுடைய உடம்பில் அங்கங்கே சிவப்பும் வெள்ளையுமான திட்டுகள் தென்பட்டன. “அவரு சம்பாதிக் கிறதையெல்லாம் குடிச்சே அழிச்சிடறாரும்மா. வீட்டுச் செலவுக்கு அஞ்சும் பத்தும் கொடுத்தா மூணு பொட்டைப் புள்ளைங்களோட நான் என்ன பண்றது? நாளைக்கி அதுங்களுக்கு கல்யாணம் காட்சி வேணாமா?” என்று கடகடவென அழ ஆரம்பித்த வெங்கடேசனின் மனைவி பக்கம் படக்கருவி திரும்பியது. “யேய், கம்முணு கெட” என்று திண்ணையிலிருந்து தெருவுக்குச் சென்றான் வெங்கடேசன். அவனுடைய கண்கள் பெரு நோயாளிகளினுடையவை போல் மினுங்கின. “குடிக்கலென்னாத் தூக்கம் வராது, மறுநாளைக்கு வேலை செய்யவும் முடியாது . . .” என்று அவன் முணுமுணுத்தது கருவியில் பதிவாகியிருக்காது. வைஜெயந்தியையும் அவருடைய நடையுடையையும் அவனுடைய மூன்று மகள்களும் ஆசையாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆறுமுகம் படக்கருவியை மௌனமாக அவர்கள் பக்கம் ஒருமுறை திருப்பிவிட்டு எழுந்தார். நாங்கள் ஆற்றை நோக்கி நடந்தோம்.

ஊருக்கு மேற்புறமிருந்த தெருக்கள் வெறிச்சோடியிருந்தன. விளையாடும் பிள்ளைகளோ கால்நடைகளோ கண்ணில்படவில்லை. கதவுகளைப் பாதியாக மூடியிருந்த வீடுகள் இருட்டியிருந்தன. எனக்கே ஊர் அன்னியமாகத் தோன்றியது. எல்லையோரக் கோயிலைத் தாண்டி குழிகள் விழுந்த சிமெண்டுப் பாதையில் நடந்தோம். அவ்வப்போது ஆறுமுகம் நின்று படமெடுத்தார். இரண்டு பக்கமும் தென்னை மரங்கள் நோய்வாய்ப்பட்டவையாகத் துவண்டு நின்றிருந்தன. அவற்றின் அடிப்பகுதி ஓலைகள் இறகுகளின் எலும்புகளைப் போல் ஈர்க்குக் குச்சிகளாகத் தொங்கின. உச்சியில் காய்த்திருந்த சிறுத்த சில தேங்காய்களில் தேமலைப் போல் சாம்பல் படர்ந்திருந்தது. ஆற்றுப்புறம்போக்கில் கருவேலம் புதர்கள் மட்டும் செழித்து வளர்ந்திருந்தன. சுடுகாட்டில் அண்மையில் பிணத்தைப் புதைத்து மெழுகிய மண்மேடு பாளங்களாக வெடித்திருந்தது. சிதைந்த இன்னொரு மேட்டின் மேல் போட்டிருந்த மலர் மாலைகள் காய்ந்து சருகுகளாகியிருந்தன. உடைந்த பானை ஓடுகளும் எலும்புகளும் கரித்துண்டுகளும் மண்ணில் கலந்து பரவியிருந்தன. கைவிடப்பட்ட அழுக்குத் தலையணை பிய்ந்து பஞ்சு வெளிப்பட்டிருந்தது. சுடுகாட்டையொட்டி பாலத்துக்குக் கீழே ஓடைபோல் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. அதைக் கண்டதும் வைஜெயந்தி படத்தில் விழாமலிருக்க தலையைத் தாழ்த்திக் கொண்டு சிறுமியைப் போல் ஓடி செருப்புகளைக் கழற்றிக் கால்களை வைத்தார். அவருடைய மெல்லிய கொலுசணிந்த பாதங்கள் நனைந்தன. பாலத்தின் படுகைக் கற்களின் மேல் நீர் சலசலத்து கண்ணாடிபோல் ஓடிக்கொண்டிருந்தது. “அது இரசாயனம் கலந்த தோல் தொழிற்சாலைக் கழிவுநீர், வெளியே வாங்க” என்றேன். “பரவாயில்லை, எந்தத் தண்ணீரில் நனைந்தாலும் நல்லாதானிருக்கும்” என்றார் வைஜெயந்தி குனிந்து கால்களை உரசிக் கழுவியபடி. “அங்க பாருங்க . . .” என்று காட்டினேன். கொஞ்ச தூரத்தில் அந்தப் பழுப்பான கழிவுநீர் நுரை பொங்க ஆற்றில் குதித்திறங்கிக்கொண்டிருந்தது. அங்கு மிகவும் ஆழமாயிருந்தது போன்ற தோற்றத்துடன் நீர் சுழித்துச் சென்றது. சுற்றிலும் சாக்கடையாக கறுத்த சேறு பரவியிருந்தது. ஒன்றையும் விடாமல் ஆறுமுகம் எல்லாவற்றையும் பதிவுசெய்து கொண்டிருந்தார். அந்தக் கழிவுநீரோட்டம் அடர்ந்திருந்த நாணல்களினூடாகப் புகுந்து மறைந்தது.

ஆற்றிலிருந்து ஏறிப் பாலத்தின் மேல் நடந்தோம். எப்போதாவது ஒரு வாகனம் புழுதியைக் கிளப்பிக்கொண்டு சென்றது. இரு பக்கங்களிலும் அகலமான இலைகளுடன் செடிகளும் கோரைப்புற்களும் பாலத்தின் உயரத்துக்கு வளர்ந்திருந்தன. ஆற்றுப்படுகை மணல் வற்றி கட்டாந்தரைபோல் காணப்பட்டது. வாத்துக் கூட்டம் கழிவுநீரில் இறங்காமல் மேலே நெருக்கியடித்து மேய்ந்து கொண்டிருந்தன. அவை இடைவிடாமல் ஒரே மாதிரியாகக் கத்தும் குரலோசை தெளிவாகக் கேட்டது. வாயிலிருந்த பாக்கை ஒதுக்கிக்கொண்டு “தண்ணீரிலிருந்து வாத்துகள் தாவி வெளியே வரும் காட்சி எப்போதும் அற்புதமாயிருக்கும். ஆனா, அது இங்கே கிடைக்காது போலிருக்கு” என்றார்ஆறுமுகம். ஓரிடத்தில் நெளிந்து வந்த கழிவுநீர் சூரிய ஒளிபட்டுப் பல வண்ணங்களுடன் பளபளத்தது. தொலைவிலிருந்து காண்கையில் ஆறு உண்மையாக ஓடுவது போல் தென்படும். ஆனால் அந்தக் கழிவுநீரைத் தவிர ஆற்றில் வேறு நீரோட்டமில்லை. “எங்களுக்குத் தேவைப்படறது இந்தக் காட்சிதான்” என்றார் வைஜெயந்தி பரவசத்துடன். அந்த இடம் அவர் படக்கருவியில் முன்பு காட்டிய படம் போலிருந்தது. வைஜெயந்தி பையிலிருந்து ஒலிவாங்கியை எடுத்துப் பின்னணியில் அக்காட்சி திரைபோல் தெரிய நின்றார். ஒரு கணம் கண்களை தியானிப்பது போல் மூடித் திறந்தார். அவர் இப்போது வேறொரு ஆளாக மாறினார். “ . . . தோல் தொழிற்சாலைகள் தொடர்ந்து வெளியேற்றும் கழிவுநீர் கலப்பதால் ஆறு மாசடைந்துவிட்டது. இது நீர்வரத்து இல்லாமல் பாலைவனம்போல் காட்சியளிக்கிறது. இந்தப் பகுதியில் நிலத்தடிநீரும் மண்ணும் கெட்டு விவசாயம் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம் . . . ஒளிப்பதிவாளர் ஆறுமுகத்துடன் செய்தியாளர் வைஜெயந்தி . . .” இது தொலைக் காட்சிகளின் செய்திக் குவியலில் ஓரிரு நிமிடங்கள் தோன்றி மறையப்போகிறது. கொடூரக் கொலை, கூட்டுக் கற்பழிப்பு, கோடிக்கணக்கில் ஊழல் போன்ற உணர்ச்சிகரமான விஷயங்களின் நடுவில் அமுங்கிவிடும். ஆறுமுகம் கட்டைவிரலை உயர்த்தி ‘வெற்றி’ என்று காட்டினார். வைஜெயந்தி பழைய நிலைக்குத் திரும்ப வந்தார். நாங்கள் பாலத்தைக் கடந்து மறுகரையை அடைந்தோம். கொஞ்ச தூரத்திலிருந்த வாராவதிக்கு அடியில் கூச்சல் கேட்டது. அங்கு கால்வாய் நீரில் சில சிறுவர்கள் அம்மணமாக கும்மாளமிட்டுக் கொண்டிருந்தார்கள். அவிழ்த்துப்போட்ட ஆடைகள் கரைமேல் தாறுமாறாகக் கிடந்தன. அவர்களை முன்னெப்போதோ சில தடவை ஊருக்குள் பார்த்திருந்தேன். என்னுடன் ஒரு பெண்ணையும் படக்கருவியுடன் மற்றொருவரையும் கண்டு இடுப்புவரை தண்ணீரில் அமிழ்ந்தார்கள். வைஜெயந்தி அவர்களிடமிருந்து பார்வையை விலக்கி “இது என்னது?” என்றார். “ஆற்றிலிருந்து ஏரிக்குத் தண்ணீர் போகும் கால்வாய், ஆற்றுக் கழிவுநீரும் கலந்து வந்திருக்கும் . . .” என்றேன். “அந்த ஏரி எங்கேயிருக்கு?” என்றார். “அது ரொம்ப தூரம், மழைக்காலங்களைத் தவிர பெரும்பாலும் வறண்டிருக்கும்” என்றேன். மலைப்பாம்பைப் போல் வளைந்து சென்ற காலியான கால்வாய் கண்ணெட்டும் தூரம்வரை படமாக்கப்பட்டது. அதில் தொலைவாக சில ஆடுகள் இலைகளைக் கொறித்துக்கொண்டிருந்தன.

அந்தக் கால்வாயில் கலங்கிய குட்டைபோல் நீர் தேங்கியிருந்தது. மழை பெய்து மண்ணுடன் கலந்து வந்த புதுவெள்ளத்தைப் போல் பழுப்பு நிறத்திலிருந்தது. அது சூடாகிக் கொதிப்பதைப்போல் கரையில் மோதிக்கொண்டிருந்தது. சுற்றிலும் புதைகுழியைப் போல் சேறும் சகதியுமாயிருந்தது. கரைகளில் எல்லாவிதமான நச்சுச்செடிகளும் மண்டியிருந்தன. சிறுவர்கள் படக்கருவியால் ஈர்க்கப்பட்டு அதைக் கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உடல்களிலிருந்து நீர்த்துளிகள் வழிந்து மின்னின. “அவங்க படமெடுக்கிறதையே பார்க்கிறாங்களே?” என்றேன். ஆறுமுகம் “அதனால ஒண்ணுமில்லை, அதுவும் இயல்பாய்தானிருக்கும்” என்று தொடர்ந்து சுட்டுக்கொண்டிருந்தார். ஒரு பையன் மட்டும் தைரியமடைந்து அருகில் வந்தான். “உன் பேரு என்ன?” என்றார் வைஜெயந்தி. அவன் ஒரு கணம் வகுப்பறையின் ஞாபகம் வந்தது போல் கைகளை மார்பில் கட்டி நின்று “கே. பாலசுப்பிரமணி”என்றான். “நீங்களெல்லாம் படிக்கிறதில்லையா?” என்று சந்தேகத்துடன் கேட்டார். “சின்ன வயசுல படிச்சோம். அப்புறமா ஆடு மேய்க்கறதுக்காக நின்னுட்டோம்” என்றான் அவன் மிகுந்த விடுதலை உணர்வுடன். வைஜெயந்தி அவனைத் தனியாகப் படமெடுக்க சைகை காட்டி “அப்படியா . . . இந்தக் கால்வாய் என்ன ஆழமிருக்கும்?” என்றார். “கொஞ்சந்தான், ஓராளு ஆழம்” என்று பாலசுப்பிரமணி கைப்பிடிச்சுவரில் ஏறி நின்று காட்சி தந்தான். “கால்வாய் குழாயிலிருந்து தண்ணீர் குதிக்கறதால கீழே பள்ளம் உண்டாயிருக்கும்” என்றேன். பாலசுப்பிரமணியை ஆறுமுகம் தலையிலிருந்து கால் வரை எடுத்தார். அரணாக்கயிறில் கோமணமாக செருகப்பட்ட சட்டைத் துணி இடுப்புக்குக் கீழ் சிறிதாகப் புடைத்திருந்தது. அவனுடைய முகம் முழுதாக மாறி படக்கருவியை முறைத்தது. மற்ற பையன்களும் மேலேறி வந்தார்கள். “அக்கா, என்னை எடுங்க” “என்னை எடுங்க” என்று குரல்கள் எழுந்தன.

கைப்பிடிச்சுவரில் நின்றிருந்த பாலசுப்பிரமணி பின்புறமாகத் தண்ணீரில் சாய்ந்தான். அவனை நீர் உள்வாங்கிப் பழையபடி மூடிக் கொண்டது. மேலே எவ்வித சலனமுமில்லை. அதைப் படக்கருவி அவசரமாகத் திரும்பி எடுத்தது. “அவன் ரொம்ப நல்லா நீச்சலடிப்பான்” என்றான் ஒரு பையன். திடீரென்று பாலசுப்பிரமணி ஒரு கையைத் தூக்கியபடி நீர் பரப்புக்கு மேல் தோன்றினான். மற்றொரு கையால் முகத்து நீரை வழித்துவிட்டு “அக்கா, இதப் பாருங்க” என்று கத்தினான். அவன் கையில் ஒரு மனித மண்டையோடு பல்லிளித்துக்கொண்டிருந்தது. அதில் அங்கங்கே கறுப்பாகச் சேறு அப்பியிருந்தது. அந்த மண்டையோட்டுக்கு இணையாக அவனும் சிரித்துக் காண்பித்தான். “டேய், அதையெல்லாம் எடுக்கக் கூடாது, கீழே போடு” என்றார் வைஜெயந்தி சத்தமாக. “பக்கத்துல சுடுகாட்டிலிருந்து உருண்டு வந்திருக்கலாம்” என்றேன். “ஏன், இதில யாராவது மூழ்கி இறந்திருக்கக் கூடாதா?” என்றார் வைஜெயந்தி. கரையை நோக்கி மண்டையோட்டைப் பாலசுப்பிரமணி பந்துபோல் எறிந்தான். அது ஒரு புதரில்போய் ஒளிந்து கொண்டது. பள்ளி ஆசிரியர்களுடைய தொனியை வரவழைத்துக்கொண்டு” டேய் பசங்களா . . . யாரும் இனிமே இங்க குளிக்கக் கூடாது. இது நல்ல தண்ணியில்ல, தோல் தொழிற்சாலைகளிலேயிருந்து வர்ற கெட்ட தண்ணீர். உடம்புக்கு நோய் வரும்” என்றார் வைஜெயந்தி. பையன்கள் அரைகுறையாகத் தலையாட்டினார்கள். ஒரு குரல் மட்டும் “வேற எங்க நீஞ்சறது?” என்றது மெதுவாக. பாலசுப்பிரமணி நீர் சொட்ட மேலெழுந்து வந்தான். “இனிமே பள்ளிக்கு ஒழுங்காப் போய்ப் படிக்கிற வழியைப் பாருங்க . . .” என்றார். அதற்கு பதிலெதுவும் சொல்லாமல் ஆவலுடன் “இதையெல்லாம் ஏன் படம் பிடிக்கறீங்க?” என்றான் அவன். “அதுவா . . . சும்மா எடுக்கறோம்” என்றார். “இல்லெடா, நம்ம ஆற்றை எடுத்து எல்லாருக்கும் காட்டப்போறாங்க” என்றேன். “அப்ப ஆத்துக்குள்ளப் போங்க . . .” என்று எதிரில் நீண்ட ஆற்றைக் காட்டினான். வைஜெயந்தி தயக்கத்துடன் ஆறுமுகத்தைப் பார்த்தார். அவர் மெல்வதை நிறுத்தாமல் தலையாட்டினார்.

வைஜெயந்தி வழி தெரிந்ததைப் போல் கரையிலிருந்து ஆற்றில் இறங்கினார். தனக்குத்தானே சொல்லிக் கொள்வது போல் “கொஞ்ச தூரம் போய்ப் பார்க்கலாம் . . .” என்றார். நான் ஆற்றுக்குள் சென்று நீண்ட காலமாகி விட்டது. பழைய நினைவுகளை மீட்க முடியாத அளவுக்கு ஆறு அடியோடு மாறியிருந்தது. ஆற்றில் கழிவுநீர் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. எதற்கும் பயனற்ற பல வகையான செடிகள் பசுமையாக வளர்ந்திருந்தன. கீழே மணல் இல்லாமல் வெறுமையாயிருந்தது. கழிவுநீர் கலக்கும் இடத்தை வைஜெயந்தி தேடுவதாகத் தோன்றியது. அந்த மூலத்தை யாராலும் துல்லியமாகக் கண்டுபிடித்துவிட முடியாது. கழிவுநீர் மணலில் தானாக ஊறி வருகிறது என்று ஊரில் சிலர் சொன்னார்கள். அதைப் பூமிக்கடியில் குழி தோண்டி வெளியேற்றுகிறார்கள் என்றும் கூறினார்கள். ஆற்றில் ஓடுவது கழிவு நீரல்ல அது சுத்தமான நீர்தான் என்றார்கள் வேறு சிலர். நாங்கள் கழிவுநீர் ஓடும் பாதைக்கு எதிர்ப்புறமாகச் சென்றுகொண்டிருந்தோம். கரையிலிருந்த முட்புதர்கள் ஆற்றின் மீது கவிழ்ந்திருந்தன. படக்கருவியும் செடி கொடிகளுக்குள் நுழைந்து முன்னேறிப் போய்க்கொண்டிருந்தது. வைஜெயந்தியின் குதி கொஞ்சம் உயர்ந்த செருப்பில் பாசியும் சேறும் படிந்தன. அவருடைய தரமான உடையை முட்கள் கிழித்துவிடும் என்று பயந்தேன். ஆறுமுகம் கையால் படக்கருவியை பிடித்தபடி மிகவும் பழக்கப்பட்டவரைப்போல் நடந்தார்.

அங்கங்கே நாங்கள் புதர்களைச் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. ஆற்றில் கழிவுநீர் இயற்கையான ஓடையைப் போல் நடந்துகொண்டது. சில இடங்களில் முழுவதுமாகத் திரும்பி வேறுபுறம் வளைந்தது. அது ஓடிய இடங்களெல்லாம் சகதியாகியிருந்தது. ஆற்றில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிலர் எங்களை சந்தேகமுடன் பார்த்தார்கள். மாடுகள் குனிந்து குட்டைப் புற்களைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தன. படமெடுக்கப்படுவதைக் கண்டு கொஞ்சதூரம் அவர்கள் பின்தொடர்ந்தார்கள். “எங்க போறீங்க?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனக்கும் பதில் தெரியாததால் சொல்லவில்லை. ஆறு ஒரு வனம் போலவே காணப்பட்டது. கடைசியாக கரையோரத்தில் ஓர் ஊர் தெரிந்தது. அதற்கு முன்னால் ஆறு மலக்கிடங்காக மாறியிருந்தது. எங்கும் மனிதர்கள் மலம் கழித்து வைத்திருந்தார்கள். பிளாஸ்டிக் குப்பை கூளங்கள் சிறு குன்றுகளாகக் குவிந்திருந்தன. கரையில் கூரிய முட்களை விரித்து நீட்டியபடி கருவேல மரங்கள் நின்றிருந்தன. அவற்றின் வேர்களுக்கிடையில் பெரிய கான்கிரீட் குழாய் புதைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து கழிவுநீர் வெண்நுரை பொங்க தொடர்ந்து குதித்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டதும் வைஜெயந்தி பிரமித்து நின்றார். கீழே தொட்டியைப் போல் பள்ளம் உருவாகியிருந்தது. அதில் பெரும் காற்றுக் குமிழிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. கொல்லப்பட்ட எண்ணற்ற கால்நடைகளின் இரத்தம் கலந்ததைப்போல் கழிவுநீர் சிவப்பாக ஆற்றுக்குள் நெளிந்தோடியது. ஆறுமுகம் குனிந்தும் நிமிர்ந்தும் படமாக்கிக் கொண்டிருந்தார். “அனேகமா, இது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறின நீராகத்தானிருக்கும்” என்றேன்.

ஆற்றிலிருந்து கரைக்குத் திரும்பும் கிளைகளைப் போன்ற பல பாதைகளில் ஒன்றில் நடந்தோம். அது மிகவும் செங்குத்தாக மேலேறியது. இருமருங்கும் சரிவுகளில் விழுந்துவிடுபவை போல் ஓலைகளாலும் கித்தான்களாலும் குடிசைகள் எழுந்திருந்தன. வெளியில் பலர் தங்கள் பாட்டுக்குக் குளித்துக்கொண்டும் சமையல் வேலை செய்து கொண்டுமிருந்தார்கள். ஓரத்தில் அகலமான கால்வாயின் மேல் பிள்ளைகள் வரிசையாக உட்கார்ந்து மலம் கழித்துக்கொண்டிருந்தன. அதில் சாக்கடையும் கழிவுநீரும் கலந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்தக் கால்வாய் நேராக ஆற்றில்போய் மறைந்தது. திடீரென்று நினைவு வந்ததும் சொன்னேன்: “இந்த ஊர்க்காரங்க நாலைந்து பேர்தான் கொஞ்ச நாளைக்கு முன்னால தோல் தொழிற்சாலைத் தொட்டியில விழுந்து இறந்தாங்க.” உடனே வைஜெயந்தி “அவங்க வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாம்” என்றார். “இங்க வழக்கமா தோல் கழிவு தேங்கின தொட்டிய சுத்தம் பண்ணுவாங்க. உள்ளேயிருந்து விஷவாயு தாக்கி நிறையப் பேரு இறப்பாங்க” என்றேன். எங்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சிலரிடம் “இங்க தொட்டியில விழுந்து இறந்தவங்க வீடு எங்கேயிருக்கு?” என்றார் வைஜெயந்தி. மீசை அரும்பத் தொடங்கியிருந்த ஓர் இளைஞன் தம்முடன் வருமாறு சைகை காட்டி சந்துகளின் வழியாக நடந்தான். படக்கருவி அவனைப் பின்தொடர்ந்து சென்று சாணியால் மெழுகிக் கோலமிட்டிருந்த ஒரு குடிசையை அடைந்தது. வாசப்படியில் குனிந்து அவன் “யாரோ வந்திருக்காங்க பாரும்மா . . .” என்றான். உள்ளே பெண்கள் பலர் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள்.

ஒரு பெண்மணி கைகளை முந்தானையில் துடைத்தவாறு வெளியில் வந்தார். அவருடைய வயது என்னவென்று சரியாகக் கணிக்க முடியாத தாயிருந்தது. ‘என்ன வேண்டும்?’ என்பதைப் போல் படக்கருவியையும் எங்களையும் பார்த்தார். “தொட்டியில விழுந்து இறந்தவங்க சொந்தக்காரங்களைப் பார்க்க வந்தோம் . . .” என்றார் வைஜெயந்தி. அந்தப் பெண் தயக்கத்துடன் “என் வீட்டு ஆளுங்கதான் செத்துப்போனாங்க . உங்களைக் கூட்டினு வந்தவன்தான் மிஞ்சியிருக்க பையன். அதேயிடத்துலதான் அவனுக்கும் வேலை போட்டுக் கொடுத்திருக்காங்க. ஆமா, நீங்க யாரு?” என்றார். அந்த இளைஞனை நோக்கிப் படக்கருவியைத் திருப்பினார் ஆறுமுகம். “நாங்க சும்மாதான் வந்தோம்…” என்றார் வைஜெயந்தி. உடனே குறுக்கிட்டு “தோல் தொழிற்சாலைக் கழிவுநீரைப் பத்திப் படமெடுக்கறாங்க” என்றேன். “எப்படி மொத்தமா இறந்தாங்க?” என்றார் வைஜெயந்தி. “அவங்க பாசத்துக்குக் கட்டுப்பட்ட ஒரே ரத்த உறவுக்காரங்க . . . முதல்ல வீட்டுக்காரரு, அதக்கடுத்து ரெண்டாவது மகன், அப்புறமா இன்னொரு மகன், கடைசியில என் தம்பி. எல்லாருக்கும் ஒண்ணா வேளை வந்து எமன் வாயில விழுந்தாங்க” என்று பெண்மணியிடமிருந்து பதில் வந்தது. “இறந்தவங்களுக்கு ஏதாவது பணம் கொடுத்தாங்களா?” என்றார் வைஜெயந்தி. “எவ்வளவோ போராட்டம் பண்ணோம். யார்யாரோ தரப்போறதாச் சொல்லிட்டுப் போனாங்க, அதோடு சரி. சாவு செலவுக்குக்கூட சங்கத்துலதான் பணம் தந்தாங்க” என்றான் இளைஞன். “இன்னைக்கு அவங்களுக்கு மொத்தமாப் படைக்கணும். உயிரு விட்ட இடத்துக்குப் போக முடியாம வீட்டுல வச்சுக் கும்பிடறோம்” என்றார் பெண்மணி. “அங்கே போகலாம் வாங்க . . .” என்றார் வைஜெயந்தி தீர்மானமானக் குரலில். வெற்றிலைப்பாக்கு, பழம் போன்றவற்றை தட்டுகளில் ஏந்தியபடி பெண்கள் சாலையில் நடந்தார்கள். அவர்களை மூவரும் பின்தொடர்ந்தோம். ஆற்றையொட்டிய தோல் தொழிற்சாலை ஒன்றின் அருகில் நின்றோம். அதன் கனத்த இரும்புக்கதவு சிறு இடைவெளியுமில்லாமல் இறுகச் சாத்தியிருந்தது. கொஞ்ச நேரம் கூப்பிட்டும் தட்டியும் பார்த்தும் அது திறக்கவில்லை. ஆட்கள் இருப்பதற்கான எவ்வித அடையாளமுமில்லாமல் அமைதியாயிருந்தது. “கண்டிப்பா உள்ளே காவல்காரங்க இருப்பாங்க” என்றான் கடைசி மகன். “எந்த இடமானாலும் ஒண்ணுதான், இங்கியே கும்பிடலாம்” என்றார் அவனுடைய அம்மா. மூடிய கதவுகளுக்கு முன்னால் படையல் வைத்து கற்பூரம் ஏற்றி வணங்கினார்கள். பெண்கள் உட்கார்ந்து தோள்களை அணைத்துக்கொண்டு அழுதார்கள். அவர்களுடைய வட்டத்தில் வைஜெயந்தியையும் இழுத்துச் சேர்த்துக்கொண்டார்கள். ஒரு புராதனமான சடங்கை நிறைவேற்றுவதைப் போல் அனைவரும் கொஞ்ச நேரம் அழுது முடித்தார்கள். அங்கேயே நின்று அவர்கள் கொடுத்த பலகாரங்களைத் தின்று முடித்தோம்.

அதே வழியில் மூவரும் நடக்கத் தொடங்கினோம். அடிக்கடி கனரக வாகனங்கள் ஓடியதைப் போல் சிமெண்டுப் பாதை மேடும்பள்ளமாயிருந்தது. இருபுறமும் உயரமான சுவர்களுடன் தோல் தொழிற்சாலைக் கட்டடங்கள் வரிசையாக நின்றிருந்தன. அவற்றின் பெரும் இரும்புக் கதவுகள் உள்ளே எதையும் காணமுடியாமல் மூடியிருந்தன. அனைத்தும் மறுபடியும் கடுமையான உழைப்புக்காக முழு ஓய்வு எடுப்பவை போலிருந்தன. கீழே புதைக்கப்பட்டிருந்த நீண்ட கழிவுநீர்க் குழாய்களின் மேற்புறங்கள் அங்கங்கே வெளியில் தலைகாட்டின. ஓரிடத்தில் ஊற்றைப் போல் நீர் கசிந்து பரவிக்கொண்டிருந்தது. அடைப்பை நீக்கும் குழிகள் சிமெண்டுப் பலகைகளால் அரைகுறையாக மூடப்பட்டிருந்தன. காற்றில் இரசாயன நெடி மிதந்து கொண்டிருந்தது. ஆட்டோ ஒன்று தென்படவும் வைஜெயந்தி “திரும்பிப் போகலாம்” என்றார். வெளிநாட்டிலிருப்பதைப் போல் பளபளப்புடன் தோற்றமளித்த அகலமான நெடுஞ்சாலையில் சென்றோம். ஆறுமுகம் மறுபடியும் படமெடுத்தார். தோல் பதனிடும் இலைகள் பின்னால் போய்க்கொண்டிருந்தன. அங்கங்கே பாழ்பட்ட மரம் செடிகொடிகளுடன் கிடந்த விவசாய நிலங்களையும் கடந்தோம். பல இடங்கள் மொட்டையாக சமமாக்கப்பட்டு அளவுக் கற்கள் நட்டு விற்பனைக்காகக் காத்திருந்தன. வாராவதியும் நீண்ட பாலமும் வற்றிய ஆறும் திரும்பவும் வந்துபோயின. அவை மீண்டும் பதிவாகிக்கொண்டிருந்தன.

தெரு முனையில் காலிக்குடங்களுடன் சிலர் கூட்டமாக நின்றிருந்தார்கள். வைஜெயந்தி “தொலைக்காட்சிக்குப் படமெடுக்கறது எப்படியோ தெரிஞ்சிட்டது. பரவாயில்ல, இவங்களை செய்தியில காட்டலாம்” என்றார். ஆறுமுகம் பாக்கை வேகமாக மென்றபடி படமெடுக்கத் தொடங்கினார். ஒரு நடுத்தரவயதுப் பெண் கோபமாக “எங்களுக்கு குடிக்கத் தண்ணியில்ல. நாலைஞ்சு நாளைக்கு ஒரு முறைதான் குழாயில வருது. நாங்க என்ன பண்றது?” என்றார். “இருக்கிற கொஞ்சம் தண்ணியும் உப்பா மாறிப்போச்சி” என்றார் மற்றொரு பெண்மணி. “யாரும் எதுவும் பண்ணலை” என்றார் இன்னொரு பெண் பிளாஸ்டிக் குடத்தை எதிரில் நீட்டி. ஆளாளுக்கு அவற்றையே ஒரே நேரத்தில் கத்திச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். வைஜெயந்தி முன்னால் வந்து ஒலிவாங்கியைக் கையில் பிடித்துப் படக்கருவியை நோக்கிப் பேசத் தொடங்கியதும் அமைதியானார்கள். “ . . . பக்கத்துல ஆறு இருந்தாலும்கூட குடிக்கத் தண்ணீரில்லை. இங்க நிலத்தடி நீரும் மண்ணும் நஞ்சா மாறியிருக்குது. விவசாயம் செய்ய முடியாம மோசமாப் பாதிக்கப்பட்டிருக்குது. அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள் . . . ஒளிப்பதிவாளர் ஆறுமுகத்துடன் செய்தியாளர் வைஜெயந்தி.” படக்கருவியை அணைத்த பிறகு அனைவரும் கலைந்தார்கள்.

வீட்டுக்கு வந்ததும் வைஜெயந்தியும் ஆறுமுகமும் கிளம்பத் தயாரானார்கள். தேனீர் குடிக்கக் காத்திருக்கையில் படக்கருவியில் பதிவாகியிருந்தப் படங்களை எடுத்து அங்கங்கே ஓட்டிப் பார்த்தார்கள். ஆற்றில் கழிவு நீரோடுகிற காட்சியையும் மக்கள் காலிக்குடங்களுடன் போராடுவதையும் கண்டு ரசித்தார்கள். “நல்லா வந்திருக்கு, எவ்வளவு எடுத்தாலும் வெட்டித் துண்டாக்கிக் கொஞ்சம்தான் காட்டுவாங்க . . .” என்றார் வைஜெயந்தி. “பரபரப்பானதுதான் செய்தியாக முடியும்” என்றார் ஆறுமுகம். “எல்லாத்தையும் சேர்த்து குறும்படமாப் பண்ணலாமே?” என்றேன். வைஜெயந்தி “என் நண்பர் ஒருத்தர்கிட்ட கொடுத்துப் பார்க்கிறேன்” என்றார். “இதையெல்லாம் பதிவு செய்யலென்னா இங்க ஆறு இருந்த அடையாளமே எதிர்காலத்துல இல்லாமப் போயிடும்” என்றேன். “இப்பவே ஆற்றில தண்ணீர் ஓடியத் தடயம் கொஞ்சம்கூட இல்லை” என்றார் வைஜெயந்தி. திடீரென்றுத் தோன்றிய ஞாபகத்தில் அறைக்குள் சென்று புத்தகங்கள் அடுக்கப்பட்ட அலமாரியில் பாதுகாப்பாக மூலையில் வைத்திருந்த சிறிய கல் ஒன்றை எடுத்து வந்தேன். “இது சின்ன வயசுல ஆற்றில கிடைச்சது. அந்தக் காலத்துல ஆறு வற்றாம ஓடும். அது நிறைய மணலும் கல்லும் உயிர்களுமிருக்கும். இது ரொம்ப நல்லாயிருந்ததால எடுத்து வந்தேன்னு நினைக்கிறேன்” என்றேன். அது இப்போதுதான் ஆற்றின் ஆழத்திலிருந்து எடுத்ததைப் போல் உள்ளங்கையில் குளிர்ந்தது. இந்த ஆற்றில பெரிய வெள்ளம் வரும். கெட்டதை அடிச்சுட்டுப் போகும். எல்லாமும் பழையபடி ஆகும்னு இங்கிருக்கவங்க பேசிப்பாங்க” என்று கூழாங்கல்லை எதிரில் வைத்தேன். அதை வைஜெயந்தி சொன்னபடி ஆறுமுகம் மிக அருகாமைப் படமாக எடுத்தார். அந்தக் கூழாங்கல் நீண்ட காலமாக ஆற்று நீரில் புரண்டுகொண்டிருந்ததால் மிகவும் வழுவழுப்பாயிருந்தது. அது பெயரற்ற ஒரு பறவையின் முட்டையைப் போலிருந்தது. பழமையான மரத்தின் முற்றிய விதையைப் போலுமிருந்தது.

– டிசம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *