ஆயிரம் ரூபாய்

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 6,613 
 

மோசஸ் இப்படிப் பேசுவார்னு கனவுல கூட நினைக்கல., பாஸ்டர் ஸ்டீபனுக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. அன்றைய கூட்டம் அவருக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்தது. மோசஸ் இப்படிப் பேசியது சபை விசுவாசிகளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. எல்லோரும் தங்களுக்குள்ளாகவே குசுகுசுவெனப் பேசிக் கொண்டார்கள்.

மேகம் தனது கருமை நிறத்தை விளக்கி வெண்மைக்கு மாறிக் கொண்டு இருந்தது. மாரிமுத்துக்கோ மனசெல்லாம் ஒரே வலி, குடும்பத்தில் ஒரே பிரச்சினை. நிம்மதி இன்றி சிவகாசி பேருந்து நிலையத்தின் ஓர் மூலையில் உட்கார்ந்து இருந்தான். மாலை ஆறுமணி. பேருந்து நிலையத்தின் அருகில் ஏதோ கிறிஸ்தவக் கூட்டம் போல என எண்ணிக் கொண்டான்.

unmai - Mar 16-31 - 2010மாரிமுத்துவின் மனசுக்கு அங்கு ஒலித்த பாடல்கள் இதமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தை நோக்கி நகரலானான். கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆண்கள் ஒரு பகுதியாகவும், பெண்கள் ஒரு பகுதியாகவும் உட்கார்ந்து இருந்தார்கள். இவன் ஒரு ஓரமாய் நின்று கவனித்துக் கொண்டு நின்றான்.

இந்த மாலை வேளையில் கர்த்தருடைய கிருபை வேண்டி இங்கு வந்திருக்கும் இயேசப்பா-வின் பிள்ளைகளே(?) உங்களுக்கு ஆண்ட-வராகிய இயேசு கிறிஸ்துவின் ஆசிர்வாதம் கிடைக்கக் கடவதாக…என்று கூறியவாறு அல்லேலுயா(?) என்றார், பாஸ்டர் ஸ்டீபன். எல்லோரும் ஆமென்…! என்றார்கள்.

இப்பொழுது உங்களுக்காக ஜெபிப்போமா? என்றார். கூட்டத்தில் உள்ள எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

மாரிமுத்துவுக்கு வேடிக்கையாக இருந்தது. எல்லோரும் அவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு கண்களை மூடிக் கொண்டார்கள். எல்லோர் முகத்திலும் அமைதி நிலவியது. குழந்தைகள் அவர்களுக்குள்ளாகவே விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் தங்களின் பெற்றோர்களை விநோதமாகப் பார்த்தனர். பின்பு அவர்கள் செய்தது போலவே தாங்களும் செயல்படத் தொடங்கினார்கள்.

ஆண்டவராகிய இயேசுவே…! இந்த உலகத்தைப் படைத்த மெய்யான தேவனே., எல்லா உயிர்களையும் இரட்சிக்கும் கர்த்தாவே…! இப்போதே உமது கரங்கள் எல்லோர் மீதும் தொடட்டும். ஆண்டவரே இப்போது எல்லோருக்கும் மகிமை உண்டாவதாக, கடன் பிரச்சினை இப்போதே தீர்ந்து போகட்டும். பிசுசு, சாத்தான் உம்மை விட்டு இப்போதே விலகட்டும். நோயிலிருந்து விடுபட்டு இப்போதே சுகம் காண்பீர். ஆம்..! இப்பொழுது உங்களது எல்லாக் கஷ்டங்களும் துன்பங்களும் விலக்கப்பட்டது. இப்பொழுது உங்களோடு ஆண்டவர் இருக்கின்றார். ஆமென். மாரிமுத்துவின் கண்களில் இருந்து கண்ணீர்த்-துளிகள் தானாகவே வெளியேறியது. அடிமனதில் ஏற்பட்ட வலிக்கு அருமருந்தாய் அமைந்தது போன்றதொரு எண்ணம் ஏற்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாய் அவனது மனதில் இயேசு குடியேறத் தொடங்கினார். அன்று இரவு முழுவதும் மாரிமுத்துவின் கனவில் பல பல வண்ணங்களில் இயேசு தோன்றிய-வண்ணமாய் இருந்தார்.

அவன் மனசு இப்பொழுது அமைதியான ஒரு புது உலகத்தை நோக்கிப் பயணமானது. மீண்டும் மீண்டும் அவனது மனதில் அன்றைய கூட்ட நிகழ்வுகள் வந்து போகத் தொடங்கின. ஒவ்வொரு-வரும் தங்களுடைய துன்பம் நீங்கிய-தையும் கஷ்டம் விலகியதையும் சாட்சியாகச் சொன்னார்கள். கிறிஸ்டோபர் என்பவர் சாட்சி சொன்ன விதம் அவனை மிகவும் பாதித்தது…..

அப்போது நான் மிகுந்த வேதனையோடும் கவலையோடும் இருந்த சமயத்தில், பாஸ்டர் ஸ்டீபன் அவர்களின் பிரசங்கத்தைக் கேட்கின்ற வாய்ப்புக் கிட்டியது. அவர் எனக்காகவும் எனது குடும்பத்தாருக்காகவும், எனது நோய் குணமாக வேண்டியும் ஜெபித்தார். சில நிமிடங்களில் எனக்கு ஏற்பட்டு இருந்த நோய் குணமாகியதை உணர்ந்தேன். அல்லேலுயா!

கடன் பிரச்சினையைப்பற்றிக் கூறினார். இப்படியாக சாட்சி சொல்லிக் கொண்டு இருந்தனர். அனைவரது பெயர்களும் கிறிஸ்-தவப் பெயர்களாகவே இருந்தன.

எல்லா நிகழ்ச்சிகளையும் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்த மாரிமுத்துவுக்கு, எப்படியாவது பாஸ்டர் ஸ்டீபனைச் சந்தித்து-விட வேண்டும் என்கின்ற ஆவல் தொற்றிக் கொண்டது. கூட்டம் முடிந்தது. எல்லோரது முகத்திலும் சாந்தமும் சந்தோசமும் நிரம்பி வழிந்தது.

பாஸ்டர் ஸ்டீபனை அவனால் அருகில் கூட நெருங்க இயலவில்லை. சரி, ஊரில் போய் பார்த்துக் கொள்வோம், என்கின்ற எண்ணத்-தோடு சுவற்றில் ஒட்டி இருந்த விளம்பர நோட்டீஸை ஆழ்ந்து கவனித்தான்.

முடவர்கள் நடக்கிறார்கள். குருடர்கள் பார்க்கிறார்கள். செவிடர்கள் கேட்கிறார்கள். கடன் தொல்லையா? வியாதியின் பிடியில் சிக்கித் தவிக்கிறீர்களா? என்னிடம் வாருங்கள், இளைப்பாறுதல் தருகின்றேன் என்கின்ற வார்த்தை-கள் உள்ளுக்குள் முரண்பட்டன.
இருந்தாலும் பாஸ்டரின் கனிவான பேச்சும் அன்பான உபசரிப்பும் அவனைக் கிறிஸ்துவுக்குள் அய்க்கியமாக்கியது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. மாரிமுத்து சீக்கிரமாக எழுந்து குளித்துவிட்டான். ஏற்கெனவே துவைத்து வைத்திருந்த வேட்டி-யையும் சட்டையையும் அணிந்து கொண்டான்.

அவனது மனைவி ஆச்சரியத்தில் மூழ்கிப் போனாள். மாரிமுத்து நேராக சர்ச்சுக்குச் சென்றான். ஆனால், உள்ளே செல்வதற்குக் கூச்சமாக இருந்தது. வெளியில் இருந்தவாறே உள்ளே நடக்கும் சம்பவத்தைக் கேட்டான். பாட்டும், கைத் தட்டலும், அப்புறம் மனதைத் தொடுகின்ற பிரசங்கமும் அவனை முழுமையாக ஆட்கொண்டது.

இரண்டாவது வாரமும் சென்றான். இந்த இடைப்பட்ட காலத்தில் அவனது மனதிலும், செயலிலும் பேச்சிலும் மாற்றம் ஏற்பட்டு இருந்தது. அவனும், அந்த மாற்றத்தை உணர்ந்தே இருந்தான்.

இப்பொழுது சர்ச்சுக்குள் ஒரு ஓரமாய் உள்ளே சென்று அமர்ந்தான். எல்லோரும் இவனை அன்போடு வரவேற்றார்கள். பாஸ்டர் ஸ்டீபன் மிகவும் பரிவோடும் அன்போடும் அவனை உபசரித்தார்.

ஜெபம் நடந்து கொண்டு இருந்தது. இடையில் உண்டியல் போன்ற ஒன்றை எடுத்துக்கொண்டு ஆண்டவருக்குக் காணிக்கை செலுத்துங்கள் என்று கூறினார் பாஸ்டர் ஸ்டீபன். எல்லோரும் அவரவர் கைகளில் இருந்த பணத்தைப் போட்டனர். மாரிமுத்துவிடம் வரும்போது அவனிடம் பணம் இல்லை. அவனுக்கு அவமானமாய்த் தோன்றியது.

அடுத்த முறை வரும்போது எல்லோரையும்-விட அதிகமான காணிக்கையினைச் செலுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

ஏங்க நீங்க சர்ச்சுக்குப் போறதா சொல்றாங்க உண்மையா? என்றாள் மனைவி.
ஆமாம், அடுத்த வாரம் நீயும் கூட வர்ர என்றான்.

அது வந்து…வாரா வாரம் காணிக்கை போடணுமாம், அப்புறம் தசமதானம்னு ஒன்னு இருக்காம், மாசா மாசம் நாம வாங்குற சம்பளத்துள 10% கொடுக்கணுமாம்…

ஆண்டவருக்குத்தான்டி கொடுக்குறோம். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமா கொடுக்கு-றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு செல்வத்தை வாரி வழங்குவாருனு சொல்றார்ல பாஸ்டர்.

அந்திக்காலம் வருதாம்; சீக்கிரம் உலகம் அழியப் போகுதாம்; நாம அதுக்குள்ள கிறிஸ்துவுக்குள் மாறலைனா(?) நமக்குப் பரலோகம் கிடையாதாம், நரகம்தானாம். அதனால நான்சொல்றதக் கேட்டு சர்ச்சுக்கு வரப்பாரு என்றான்.

கணவனின் சொல்லை அவளால் தட்ட இயலவில்லை. குடும்பத்தோடு சர்ச்சுக்குச் செல்லத் தொடங்கினார்கள். எல்லோரையும்விட அதிகமாகவே காணிக்கை செலுத்தினான். அதனால் பாஸ்டரின் அன்புக்கு உரிய நபரானான். பெயரையும் மோசஸ் என்று மாற்றிக் கொண்டான்.

மிகவும் சந்தோசமாக வாழ்க்கை சென்றது. திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில், நான்கு மாதங்களாக தொழிற்சாலை மூடப்பட்டது.

மோசசுக்கு வருமானம் பாதித்தது, குடும்பம் வறுமைநிலைக்கு மாறியது. மோசசுக்கும் அவனது மனைவிக்கும் சரியான வேலை கிடைக்கவில்லை. இருந்த போதிலும் சர்ச்சுக்குக் கடன் வாங்கியாவது காணிக்கை செலுத்தினான்.

ஒரு இக்கட்டான சமயத்தில் பாஸ்டரிடம் தனது குடும்பநிலைமையை விவரித்து வருத்தப்பட்டான். அதற்குப் பாஸ்டர் ஸ்டீபன், ஆண்டவர் ஆசிர்வதிப்பார் கவலைப்படாதே. உனது கஷ்டம் விரைவில் மாறும் என்று ஜெபம் செய்து அனுப்பினார்.

கொஞ்சம் கொஞ்சமாய் பாஸ்டர் ஸ்டீபன் இவனைப் புறக்கணித்தார். ஆனால் மோசஸ் ஆண்டவர் மீது மிகவும் நம்பிக்கையோடு இருந்தான். ரேசனில் கிடைக்கின்ற ஒரு ரூபாய் அரிசியை வாங்கிச் சாப்பிடுகின்ற நிலையில் அவனது குடும்பம் வறுமையில் உழன்றது.

அன்றைய கூட்டம் முடிந்து எல்லோரும் சென்றுவிட்ட நிலையில் மோசஸ் மட்டும் நின்று கொண்டு இருந்தான். பாஸ்டர் ஸ்டீபன் அவனைக் கூப்பிட்டு, கையில் 1000ரூபாய் முழுத்தாளைக் கொடுத்து ஒரு பை பாசுமதி அரிசி வாங்கிட்டு வா எனக் கூறினார். மோசஸ் அந்த 1000 ரூபாயை வாங்கி, தனது சட்டைப்-பையில் வைத்துக்கொண்டு கடையை நோக்கி நடந்தான். இடையில் அந்த 1000 ரூபாயைக் கையில் எடுத்து விரித்துப் பார்க்க ஆசைப்பட்டு எடுத்து விரித்த போது அதிர்ச்சியில் உறைந்து போனான். இது எப்படி? ஆண்டவருக்கு நான் செலுத்திய காணிக்கை அல்லவா? பங்குனி போனஸ் வாங்கிய 2000 ரூபாயில் 1000 ரூபாயை அப்படியே காணிக்கையாகச் செலுத்தியது. எனது மகன் எழுதிய பெயர் அப்படியே ரூபாயில் அழியாமல் இருக்கிறதே. ஆண்ட-வருக்குச் செல்லவில்லையா? இந்த நோட்டு அப்போ எனது உழைப்பு? தனக்குள்ளே கேள்வியை எழுப்பிக் கொண்டான்.

அன்று மிகப் பெரிய விசேச ஆராதனைக் கூட்டம். மிகப் பெரிய அளவில் அந்த மைதானமே அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கிறிஸ்தவப் பாடல்கள் நாலா திசையிலும் ஒலித்துக் கொண்டு இருந்தது. கூட்டத்திற்காக அதிக மக்களைத் திரட்டி இருந்தார் பாஸ்டர் ஸ்டீபன். மாரிமுத்து என்ற மோசசும் குடும்பத்தோடு கலந்து கொண்டான். அன்றைய சிறப்பு விருந்தினர் வாசிங்டனில் இருந்து வந்து இருப்பதாக விளம்பரப்படுத்தி இருந்தார்.

அவர் ஆங்கிலத்தில் கூற ஒருவர் தமிழில் மொழி-பெயர்த்தவண்ணம் கூட்டம் நடந்தது. அன்றைக்கும் காணிக்கை வசூல் நடந்தது. சிலர் தாங்கள் அணிந்திருந்த நகைகளைக் கழட்டிப் போட்டார்கள். அந்த அளவுக்குப் பிரசங்கம் அமைந்து இருந்தது. ஆனால், மோசஸ் மட்டும் காணிக்கை செலுத்தவில்லை.

சாட்சி சொல்ல ஒவ்வொருவராய் அழைக்கப்-பட்டனர். மோசஸ் என்ற மாரிமுத்துவும் அழைக்கப்-பட்டான். மிகத் தெளிவான மனதோடு முகத்தில் எந்தவிதச் சலனமும் இன்றி மேடை மீது ஏறினான். கூட்டம் அவனையே கவனித்தது. மைக்கைப் பிடித்தான். சில நிமிடம் அமைதியாய் இருந்தான்.

நான் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பாக இந்துவாக இருந்தேன். எனது குடும்பத்தில் சமாதானம் இல்லாமல் இருந்தது. தற்போது சந்தோசமாக இருக்கிறோம். ஆண்டவர் எங்களுக்கு அளவில்லாத ஆசிர்வாதத்தை வழங்கியுள்ளார். அல்லேலுயா என்றான். கூட்டமும் அதையே பிரதிபலித்தது. பாஸ்டர் ஸ்டீபன் கவனமாகக் கேட்டார்.

இப்போ ஆறு மாதங்களாக எனது குடும்பம் அளவில்லாத கஷ்டத்தில் மூழ்கித் தத்தளிக்கிறது. எனக்காகவும் எனது குடும்பத்திற்காகவும் பாஸ்டர் ஸ்டீபன் ஜெபம் செய்தார். நானும் எனது நிலையை எண்ணி ஒரு தனிமையான அறையில் முழங்காலிட்டு ஆண்டவரிடம் கதறி அழுதேன் _ அப்போது திடீரென ஒரு பயங்கரமான சப்தம். நான் பயந்து ஓர் மூலையில் ஒடுங்கினேன். அப்போது பிரகாசமான ஒளிக்கீற்று என்மீதுபட்டது. அப்போது ஆண்டவர் என்னோடு பேசினார். ஆம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னோடு பேசினார். கூட்டம் அப்படியே அமைதியானது அல்லேலுயா என்றான். கூட்டத்திலிருந்து சற்றுக் குறைவாகவே அல்லேலுயா குரல் ஒலித்தது.

அப்போது சொன்னார், உனது கடன்-தொல்லை இன்றே விலகுகிறது. பாஸ்டர் ஸ்டீபனிடம் 2,00,000 ரூபாய் கொடுத்துள்ளேன். உனக்காகத் தரச் சொன்னேன். அவர் தருவார் எனச் சொல்லி மறைந்தார்.

மேடையில் இருந்தவர்களும், கூட்டத்தினரும் அப்படியே பிரமித்துப் போனார்கள். சற்று நேரம் கழித்து கூட்டத்தின் ஒரு மூலையில் இருந்து ஆரவாரமான சப்தம் கூட்டத்தை ஆக்ரமித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *