ஆடுகளின் நடனம்

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 4,884 
 

பழனி அருகே ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கிறது என்று பேருந்தில் காத்திருந்தேன். சற்று தொலைவில் சிறிய மலை. அதன் நிறம் பச்சை கலந்த சாம்பல். எல்லையற்ற பரந்த வெளி. பின்மதிய நேரம். உருண்டுகிடக்கும் பாறைகள். கூட்டமாக ஆடுகள் ஆங்காங்கே மேய்ந்துகொண்டிருந்தன. ஆடுகள் மேயும் காட்சி எப்போதுமே மிக பழமையானதொரு காலத்தை நினைவுபடுத்துகிறது.

பார்க்க எளியதாக தோன்றும் ஆடுமேய்த்தல் மிக கடினமான வேலை.

ஆடுகளின் மீது கண் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். ஆட்டு இடையர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது கூழாங்கற்களை வைத்து ஆடுகளை எண்ணி கொள்வார்கள். மாலை அதே கல்லை மறுபடி எண்ணுவதன் வழியே எத்தனை ஆடு திரும்பி வந்துள்ளது என்று எளிதாக சொல்லிவிடுவார்கள். அவர்களே ஆதி கணிதமேதைகள். ஆடுகளை காதுகளை வைத்தே எண்ணும் ரகசிய வழிகளை கொண்டிருந்தார்கள்.ஆடு மேய்ப்பது கூர்ந்த கவனமான வேலை. மேய்ச்சலுக்காக ஆடுகளை ஒட்டிக் கொண்டு செல்வது மிக பழமையான தொழில்.

அன்றும் பாறை ஒன்றின் மீது ஒரு உட்கார்ந்து ஆடுமேய்க்கும் சிறுவன் ஆடுகளுடன் தூரத்து மேகங்களையும் பார்த்து கொண்டிருந்தான். மங்கிய வெளிச்சம் மலையை ரம்மியமாக்கியிருந்தது.

தற்செயலாக இரண்டு ஆடுகள் நடனமாட துவங்குவதை பார்த்தேன். ஒரு ஆடு காலை முன்னால் தூக்கி மற்றொரு ஆட்டினை வாவாவென அழைக்கிறது. எதிர் ஆடு தன் கொம்பை ஆட்டி துள்ளுகிறது. இரண்டும் ஒன்றாகக் குதிக்கின்றன. பரவசம் கொள்கின்றன. இந்த ஆட்டத்தை இன்னொரு ஆடு திரும்பி பார்க்கிறது. ஆனால் அது ஏனோ நடனமாட விரும்பவில்லை. எல்லா ஆடுகளுமும் நடனமாடுவதில்லை தானே.

காய்ந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்த மற்ற ஆடுகள் தலைதூக்கவேயில்லை. ஆனால் இந்த இரண்டு ஆடுகளும் துள்ளுகின்றன. கொம்பை அசைந்து தலையாட்டுகின்றன. அதன் உடலில் நடனம் கொப்பளிக்கிறது. என்ன குதூகலம். எதற்காக இந்த நடனம். காற்று ஆடுகளை உற்சாகப்படுத்துகிறது.

மலை நிசப்தமான கண்களால் ஆடுகளை பார்த்தபடியிருக்கிறது. ஆடுகளின் காதுகள் சரிந்து தொங்குகின்றன. அது எப்போதுமே ஒரு இலை காற்றில் அசைந்து கொண்டிருப்பதை போலதானிருக்கிறது. மிக பரவசமூட்டும் நடனமது.

ஆடுகள் எப்போதாவது இப்படி சில வேளைகளில் நடனமாட விரும்புகின்றன. அதன் காரணம் என்னவாக இருக்ககூடும் என்று தெரியவில்லை. அது ஒரு சண்டை போலவே இருக்கிறது. ஒன்றையொன்று உரசிக் கொள்கின்றன. தலையை மண்ணில் தேய்த்து சிலும்புகின்றன. அதன் உற்சாகம் பீறிட்டுக் கொண்டேயிருக்கிறது.

பாலே நடனக்காரிகளின் விந்தைகளை தாங்கள் செய்து பார்ப்பதுபோல அவை இரண்டு கால்நுனிகளில் நின்று ஆடுகின்றன. அதன் கண்களில் முன் காணமுடியாத பரிகாசம் ஒளிந்து கொண்டிருப்பது போலிருக்கிறது.

நாம் ஆடுகளை முட்டாள்களாகவே நினைத்துகொண்டிருக்கிறோம். நமது பொய்யான கற்பிதங்களில் அதுவும் ஒன்று. யாரோ தாளமிடுவது போன்றும் அதை கேட்டு ஆடுவது போலவும் அவை குதிக்கின்றன. மேய்ச்சலில் இருந்த ஒரு ஆடு செருமுகிறது. எதிர் ஆடு ஆட்டத்தை நிறுத்திவிட்டு அதை நோக்கி செல்கிறது.ஆடிக் கொண்டிருந்த இன்னொரு ஆடு தன் ஆட்டத்தை நிறுத்தவில்லை. அது தனியே துள்ளுகிறது. ரயில் வருவதற்காக காத்திருந்த பயணிகளின் கண்களில் எரிச்சலும் காத்திருப்பின் பொறுமின்மையும் கொப்பளிக்கின்றன. ஒருவர் கூட இந்த நடனத்தை திரும்பி பார்க்கவேயில்லை. இயற்கையை ஏன் நாம் ஒருபோதும் கவனிப்பதேயில்லை. அதில் தான் எத்தனை அற்புதங்கள். ஜாலங்கள்.

ரயில் வருகிறது. எங்கே ரயில் கடந்து போகையிலும் மனது குதூகலமே அடைகிறது. கடந்து செல்லும் ரயிலில் யாராவது கையாட்டுவார்களா என்று எல்லா ஊரிலும் ஏதாவது ஒரு குழந்தை காத்திருக்கிறவே செய்கிறது. அன்றும் சைக்கிளில் காத்திருந்த சிறுவர்கள் ரயிலுக்கு கைகாட்டினார்கள். பதிலுக்கு ரயிலில் இருந்து ஒரு கை கூட வெளியே காணவில்லை. கடைசி பெட்டி மறைந்த பிறகு அந்த சிறுவர் முகங்களில் ஏக்கம் பீறிடுகிறது.

ரயில்வே கேட் திறக்கபடுகிறது.சிறுவர்கள் முந்திக் கொண்டு போக எத்தனிக்கிறார்கள். வாகன இரைச்சல். ஆடுகள் அதை திரும்பி பார்க்கவில்லை. பேருந்து பயணிகளின் முகங்கள் மாறுகின்றன. காற்று ஒடுங்குகிறது. ரயில்வே கேட்டை கடந்து பேருந்து செல்கிறது. ஆடுகள் கண்ணை விட்டு மறைகின்றன . எக்கி வெளியே பார்க்கிறேன்.

ரயில் சென்ற பின்னும் ஆடுகள் துள்ளியாடிக்கொண்டேயிருக்கின்றன. அவை யாருக்காகவும் ஆடவில்லை என்பது தான் காரணமா?

காட்சி மறைய துவங்குகிறது. சந்தோஷத்தின் சிறு கிளையை ஒடித்து எனக்குள் மென்றபடியே நான் போய்க் கொண்டிருந்தேன் நடனமாடத் தெரியாமல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *