அவள் வந்தாள்

 

ராமசுப்புவுக்கு மணியார்டர் வந்த செய்தி கேட்டு, குளக்கரையில் இருந்து ஓட்டமும் நடையுமாய் வீடு வந்து சேரும் பொது போஸ்ட்மேன் போய்விட்டிருந்தார்.

“விசாலம்…ஏண்டீ..” -உள்ளே பார்த்து குரல் கொடுத்தார்.

“என்னங்க..ஒங்கள போஸ்ட் ஆபீசுக்கு வந்து பணத்த வாங்கிகிட சொல்லிட்டு போயிட்டாரு, போஸ்ட்மேன்” – என்று ஏதோ சாதாரன் விஷயம் போல் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு, விரைவாக நடையை கூட்டினார் ராமசுப்பு.

” வெறும் முப்பது ரூபா தானா?”- போஸ்ட்மேனிடம் முகம் தொங்க கேட்டார் ராமசுப்பு.

” ஆமங்கன்னாச்சி. இப்பல்லாம் எழுதுறதுக்கு இவ்வளவு தர்றதே பெரிசு இல்லிங்களா”- என்ற போஸ்ட்மேனிடம் பதில் ஏதும் கூறாமல், திரும்பும் போது ராமசுப்புவின் மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது.

அவரது கிராமத்து கணக்க பிள்ளையிடம் போய் நேற்று எழுதிய கதையை கொடுத்து படிக்கச் சொல்லி விட்டு, கை மாற்றாக ஒரு முந்நூறு ருபாய் கடன் கேட்டுப் பார்ப்போமே என்பதுதான் அது..
தீபாவளிக்கு செலவுக்கு ஆகும் . இதில வேற மகளுக்கும் மருமகனுக்கும் எதாவது செய்திடணும்.. பாவம்.. அதுக வேற வியாபாரத்தில நஷ்ட பட்டதால கிடந்து அல்லாடுதுங்க.. விசாலத்துக்கு இந்த தடவையாவது ஒரு நூல் சேலை எடுத்து கொடுக்கலாம் .. .. இவ்வாறாரு யோசித்துக் கொண்டே வெயிலில் முகமெல்லாம் கருது கணக்க பிள்ளை வீட்டு திண்ணையில் போய் உட்கார்ந்தார் ராமசுப்பு.

” அட.. வாங்க சுப்பு.. என்னா இந்த நேரத்திலே?” -

விவரத்தை கூறி முடித்து தன்னை சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டு நோக்கிய ராமசுப்புவை பரிதாபமாக பார்த்தபடி ” இருக்கட்டும்..சுப்பு.. ஒன்னும் கவலை படாதீங்க .. ஏதோ என்னால முடிஞ்ச உதவியா ஒரு நூறு ரூபா தர்றேன் ..பொறுமையா திருப்பி கொடுங்க..” என்றார் கணக்கபிள்ளை.

அப்படியே நடந்து வந்தவர் வயலோரம் இருந்த ஆல மரத்து பிள்ளையாரிடம் அமர்ந்தவர் மயக்கமாக இருந்ததால் அப்படியே சாய்ந்து படுத்து தூங்கிவிட்டார்.

திடீரென.. ஒரு அறுபது வயது உள்ள பெண்மணி அவர் அருகில் வந்து மெல்ல அவரை எழுப்பினாள். ” அய்யா.. இங்க கதையெல்லாம் எழுதுறவர் நீங்கன்னும் இங்க இருக்கீங்கன்னும் கேள்விப்பட்டு வந்தேன்..உங்க கதை ஒன்ன போன வாரம் பத்திரிகையில படிச்ச என் பிள்ளை .. என்னோடு சேர்ந்து வாழ விருப்பமில்லாத அவன் மனைவிய கூட்டிக்கிட்டு தனிக்குடித்தனம் போய் நாலு வருஷமா.. “.. மேற்கொண்டு பேச முடியாமல் தழு தழுத்து பேச்சை நிறுத்தி கண்ணை துடைத்து கொண்டாள்..

ராமசுப்பு ஒன்றும் புரியாததால்.. ” என்னம்மா.. என்ன ஆச்சு..அப்புறம்?” என்றார்.

” அதாங்க. ஏதோ திடீரென்று வந்தான்.. ”

“அம்மா.. அவ மனசுல ஏதோ மாற்றம் .. அத்தையோட இருக்கலாம்னு சொன்னா.. என்ன ஆச்சு என்றதற்கு இந்தக் கதையை படியுங்கள் என்று தந்தாள். இந்த கதையில் தாய்மையை பற்றியும் வயசான காலத்திலே அவங்களுக்கு உதவாத பிள்ளைய பற்றியும் ஏதோ எழுதியிருக்கார் போல.. ரெண்டு நாளா மனசே சரியில்லீங்க.. என்றாள்”- என்று அவரது மகன் கூறியதை நினைவு படுத்தி இவரது விலாசத்தை பத்திரிகை ஆபீசில் கேட்டு இங்கே வந்திருப்பதாக கூறிய போது தான் காண்பது கனவா என்று அசந்து போய் உட்கார்ந்திருந்தார்..ராமசுப்பு.

“அய்யா.. நீங்க தப்பா எடுத்தக்கலன்னா இந்த ரெண்டாயிரம் ரூபாய வச்சிக்கணும்.. ” என்று அந்த பெண்மணி கூறிய போது எழுந்து நின்ற ராமசுப்புவிற்கு சந்தோஷம் கலந்த அழுகை வந்து விட்டது..

” அம்மா..நான் ஏதோ எழுதவில்லையம்மா.. எண்ணப் போல எழுதறவங்க நெறைய பேர் தங்கள் துக்கங்களுக்கு வடிகால் தேடி இது போல் சிலத எழுதுவோம்.. ஆனா படிக்கிற ஏதோ ஒரு இதயத்திலாவது அது சென்று சேர்ந்து நல்லது நடக்கட்டுமேன்னு தான் ஆசைபடுவோம்..அந்த வகையில் எனக்கு ரொம்ப சந்தோஷம்மா.. ஆனா நீங்க அதுக்காக இவ்வளவு சிரமப் பட்டதோடு இவ்வளவு பணமும் தர்றது எனக்கே அதிகமா படுது.. ஒரு ..முந்நூறு ருபாய் போதும்..” என்ற ராமசுப்புவை ஆச்சரியமாக பார்த்த அந்த அம்மா, ” இருக்கட்டும்க..பரவாயில்ல… இது கூட கம்மிதான் என்ன பொறுத்த வரை.. ” என்று பணத்தை மரியாதையுடன் நீட்டினாள்.

அவள் திரும்பி நடந்து கொஞ்ச தூரம் போயிருப்பாள்.

திடீரென்று நினைவு வந்தவராக பின்னாடியே ஓடி சென்று ” அம்மா.. உங்க பேரு சொல்லலீங்களே” என்றார்.

” சரஸ்வதி ..!” 

தொடர்புடைய சிறுகதைகள்
சுற்றிலும் திடீரென இருள் சூழ்ந்தது போலாகிவிட்டது எனக்கு. டாக்டர் அப்போதுதான் சொல்லிவிட்டு போனார்.. என் அம்மா இறந்து விட்டார்கள் என்று. முதல் நாள் இரவில் இருந்து .. இன்று மதியம் வரை வெறித்த பார்வையுடன் தன் நினைவு இன்றி ஒய்வு எடுப்பது ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி ஒன்றா.. அல்லது ஒன்றரையா.. என்பது தெரியாத படி சுவர்க் கடிகாரம் ஒருமுறை அடித்து விட்டு "டடக் ..டடக்" என தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தது..தூக்கம் கலைந்து புரண்டு புரண்டு படுத்த போதிலும் தூக்கம் வரவில்லை ..ராஜேஷுக்கு .. பக்கத்தில் படுத்திருந்த ...
மேலும் கதையை படிக்க...
ஏன்?…
ஆராய்ச்சி

அவள் வந்தாள் மீது 2 கருத்துக்கள்

  1. G RAJAN says:

    எந்த ஒரு படைப்பும் ஒரு தனிமனிதனை நல்வாழ்வுக்கு இட்டுச் செல்லும் பாதையில் கிடக்கின்ற ஒரு நெருஞ்சி முள்ளையாவது அகற்றும் பணி செய்துவிட்டால் அந்த படைப்பின் நோக்கம் நிறைவேறிவிடும். அந்த வகையில் இந்த கதை ஒரு நல்ல படைப்பு. வாழ்த்துக்கள் !

  2. Murali says:

    மிக நேர்த்தியான முடிவு….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)