அவர்கள் அடிமைகள் அல்ல….

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 4,789 
 

நான் வீடு வந்து சேர்ந்த வெகு நேரத்திற்குப் பிறகு இரவு ஏழு மணி சுமாருக்கு… சொல்லவா கூடாதா என்கிற நீண்ட போராட்டத் தயக்கத்தில் ‘‘ என்னங்க…! ‘‘ மெல்ல அழைத்தாள் என் மனைவி இந்திரா.

‘‘ என்ன…?‘‘ பக்கத்தில் வந்தவளைத் திரும்பி பார்த்தேன். கதவு சாத்தி பையன் அறையில் படித்துக் கொண்டிருந்தான்.

‘‘ கொஞ்சம் கொல்லைக்கு வர முடியுமா ?‘‘ கேட்டாள்.

கொல்லை… கிணற்றடி அதைச் சுற்றி வாழை மரங்கள் அதை அடுத்தாற் போல் மாஇ புளியன் என்று இருட்டு. கொஞ்சம் கலவரமான பகுதி. ஆனாலும் இவள் தனியே போய் வருவாள். இன்றைக்கு ஏன் துணை..?.. அழைக்கிறாள் ?! எனக்குள் ஓடியது. ஏதாவது முக்கியமான விசயம் ரகசியம் தவிர வேறு எதற்கு இப்படி அழைக்க முடியும் ?

‘‘ வர்றேன் ! ‘‘ எழுந்தேன்.

இந்திரா எனக்கு முன் நடந்தாள். தொடர்ந்தேன்.

கொல்லைக் கதவைத் திறந்து கிணற்றடியில் வந்து நின்று‘‘ பையனைக் கவனிச்சீங்களா ?‘‘ கீழ்க்குரலில் கேட்டாள்.

‘‘ இல்லை. ஏன் ?‘‘

‘‘ மொகம் சரி இல்லே.‘‘

‘‘ என்ன காரணம் ?‘‘

‘‘ இன்னைக்கு வகுப்புல முட்டி போட்டிருக்கான். !‘‘

துணுக்குற்றேன். பையன் பத்து வயதில்லை. பத்தொன்பது. பள்ளிப் படிப்பில்லை. கல்லூரி.

‘‘ என்ன விசயம் ?‘‘ கலவரமாகப் பார்த்தேன்.

‘‘ இன்னைக்குக் காலையில வழக்கமா கல்லூரிக்குச் செல்லும் கல்லூரிப் பேருந்தைத் தவற விட்டுட்டு வேறு எப்படியோ கல்லூரிக்குப் போயிருக்கான். பேருந்துல வராதததுக்குக்குத் தண்டனை வாத்தியார் வகுப்புல இவனை முட்டிப் போடச் சொல்லி இருக்கார். கால் மணி நேரத்துக்குப் பிறகு எழுந்திரிச்சுப் போயிருக்கான். பாவம் அவமானம் மத்தவங்களை நிமிர்ந்து பார்க்கவே முடியலை. முகம் தொங்கி வந்தான். நான் தேறுதல் சொல்லியும் சரி இல்லே. அட..! இப்படியெல்லாமா படிக்கிற பசங்களை அவமானப்படுத்துவாங்க ?‘‘ இந்திரா ஆத்திரம் அவமானம் ஆதங்கத்துடன் சொல்லி நிறுத்தினாள்.

எனக்குள் இரத்தம் சூடாகியது.

எல்லா இடங்களைப் போல எங்கள் ஊரிலும் அனாதைப் பிரதேசத்தில் ஒரு பொறியியல் கல்லூரி. ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மனித வாடையே கிடையாது, சரியான பொட்டல்வெளி. ரோடு போட்டு பேருந்து வசதி செய்து……

கல்லூரியின் சட்ட திட்டங்கள் ரொம்ப ஒழுங்கு கெடுபிடி. எந்த மாணவ மாணவியரும் கல்லூரி பேருந்தில் மட்டுமே பயணம் செய்து கல்லூரிக்குச் சென்று திரும்ப வேண்டும். மதியம் அனைவரும் கல்லூரி மெஸ்ஸில் சாப்பிட வேண்டும். புத்தகங்கள்இ சீருடைகள் கல்லூரியிலேயே வாங்க வேண்டும். வெளியில் வாங்குதல் கூடாது. அப்படி வாங்கினாலும் நிர்வாகம் ஏற்காது. எல்லாம் எல்.கே.ஜிஇ யு.கே.ஜி.. கான்வென்ட் சட்ட திட்டங்கள். மக்கள் மோகத்தைப் புரிந்து கொண்டு கல்வி வியாபாரமாகிப் போனதால் வந்த வினைகள்.
அடுத்து எந்த மாணவ மாணவியரும் சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பெடுக்கக்கூடாது, எடுத்தால் எந்தவித காரணங்களும் ஏற்கப்படாமல் முன்னூறு ரூபாய் அபராதம். மருத்துவச் சான்றதழ் எடுத்துக் கொடுத்தால் மட்டுமே மன்னிப்பு.

போலீஸ்இ ராணுவம் போல் பையன்கள் முடி ஒட்ட வெட்டப்பட்டிருக்க வேண்டும். படித்து வரவில்லைஇ டெஸ்ட் எழுதவில்லை என்றால் அபராதம். பெண்கள் தலையில் பூவைத்துக் கொண்டு வரக்கூடாது. இரட்டைப் பின்னலைத் தவிர வேறெதுவும் கூடாது. காதுஇ கழுத்து தவிர நகைகள் அணிந்து வரக்கூடாது.

பொதுவாய் தொழிற் கல்வி கற்கும் மக்களை நிர்வாகம் நடத்தும் விதம் ரொம்ப கொடூரம்இ கொடுமை. ஐ.டிஐ.இ பாலிடெக்னிக்இ பொறியியல்இ மருத்துவ படிப்பெல்லாம் இதில் அடக்கம்..

இவைகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள் அனைவரும் நிர்வாகம் ஆசிரியர்களின் அடிமைகள். சொல் போச்சுக் கேட்க வேண்டும். எதிர்த்து ஒரு வார்த்தைப் பேசக்கூடாது. அவர்கள் சொன்னதைத்தான் செய்ய வேண்டும் சட்டதிட்டப்படிதான் நடக்க வேண்டும். மாறினாலோ முரண்டாலோ பையன் படிப்பு பாழ். தேர்வில் தோல்வி. பிராக்டிக்கல் தேர்வில் மதிப்பெண்களைக் குறைத்து விடுவார்கள். அது மட்டுமல்லாமல் மாணவர்கள் நன்னடத்தை மதிப்பெண்கள் ஐந்து.. நிர்வாகம் கையில். கொடுக்க மாட்டார்கள். படிப்பவர்கள் அவர்கள் சொல்படி நடப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

இதற்காக இவர்கள் அராஜகம் எல்லை மீறிப் போவதும் உண்டு. இங்கே முட்டிப் போடுதல்.

பத்து வயதுக்குள் இருக்கும் சிறுவர் சிறுமியர்களை முட்டிப் போடு பெஞ்சு மேல் ஏறு என்றால் அவர்களுக்கு மான அவமானங்கள் அதிகம் தெரியாது. தண்டனை காலம் வரை எவரிடமும் பேசாமல் உம்மென்று இருந்துவிட்டு அடுத்து மறந்து விடுவார்கள்.

கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் அனைவரும் பதினாறு பதினெட்டைத் தொட்டவர்;கள்.. இல்லைஇ கடந்தவர்கள். பருவ வயசுக்காரர்கள். நான்கைந்து வருடங்களில் படிப்பை முடித்துவிட்டு நாளைக்குக் குடும்பச் சுமைகளைச் சுமக்கும் பொறுப்பாளிகள். நன்கு மான அவமானங்கள் தெரிந்தவர்கள். இவர்களைப் போய் சாதாரண சிறுவர் சிறுமியராய் நினைத்து முட்டிப் போடென்றால் எவருக்குப் பொறுக்கும் ?! வயசுப் பிள்ளைகள் மற்றவர்களைப் பார்க்க நாளைந்து நாட்களுக்கு வெட்கப்படுவார்கள். இன்னும் சொல்லப்போனால் இது அவர்கள் மனநிலையையே பாதிக்கும். எதிர்காலத்தைப் பாழடிக்கும்.

கல்லூரியை நிர்வகிக்கும் நிர்வாகிகள் ஆசிரியர் ஆசிரியைகளெல்லாம் மெத்தப்படிதத்தவர்கள். இதையெல்லாம் சிந்திக்காமல் ஏன் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

மேலும்…இது பழைய காலமல்ல. மக்கள் ஒன்றும் அறியாதவர்களும். அல்ல. இன்றைக்குக் கொலை குற்றவாளியைக் கூட விசாரணைக்காக போலீஸ் தங்கள் இஷ்டப்பப்படி அடிக்கவோ துன்புருத்தவோ முடியாது. மனைவி விருப்பமில்லாமல் தாலி கட்டிய கணவன் தொடுவது சட்டப்படி குற்றம். மனிதவள மேம்பாடு மனித உரிமைக் கழகமெல்லாம் இவர்களைக் கை நீட்டித் தடுக்கும்இ தட்டிக் கேட்கும். அதையும் தாண்டி தண்டனையும் வாங்கிக் கொடுக்கும்.

இப்படியெல்லாம் மனித அத்து மீறல்களுக்குத் தடுப்பு இருக்கும் போது வயசுக்கு வந்த வாலிபப்பிள்ளைகளைப் முட்டிப் போடச் செய்வது மடத்தனம். எந்தத் துணிவில் இவர்கள் இப்படியெல்லாம் செய்கிறார்கள். படிக்கும் மாணவ மாணவியர் ஆடாஇ மாடாஇ மந்தையா ? இப்போது அவைகளைக் கூட மனிதன் தன்னிச்கைக்கு ஆட்டி வைக்க முடியாது. மிருகங்களை வேட்டையாட பறவைகளைச் சுட்டுத் தள்ள முடியாது. பிராணிகள்இ பறவைகள் வதைத் தடுப்புச் சட்டங்கள் உள்ளன.

அப்படி தண்டிக்கப்படும் மாணவ மாணவியருள் எவராவது ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டால்..?! நிர்வாகம் எதைச் செய்து சொல்லியாவது தப்பிக்கலாம். ஆனால் நஷ்டம்….? பெற்றவர்களுக்கு. இன்றைக்கு எவரும் பழைய காலம் போல் பத்து பதினைந்து பெற்று திண்டாடிக் கொண்டிருக்கவில்லை. மக்கள் தொகைஇ காலம்இ கஷ்டங்களை மனதில் இருத்தி… ஒன்று இரண்டோடு நிறுத்திக் கொண்டு அவர்களை நல்லபடியாக வளர்க்கிறார்கள். இதில் ஒன்று தவறினால் எவர் தாங்க முடியும் ?

இது மனித நாகரீகத்தின் அத்து மீறிய செயல் கண்டிக்கப்பட வேண்டும். எனக்குள் வேகம் விஸ்வரூபம் எடுத்தது.

விடுவிடுவென்று வீட்டிற்குள் வந்தேன். அறைக்கதவைத் திறக்க பரத் மேசையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான் நான் கதவு திறக்க திடுக்கிட்டான்.

‘‘பரத் ! அம்மா சொன்னதெல்லாம் உண்மையா ?‘‘

பின்னாலேயே தாய் வந்ததைக் கவனித்த அவன் விசயத்தைப் புரிந்து கொண்டு ‘‘ஆமாம்ப்பா …! ‘‘ நாற்காலியை விட்டு எழுந்தான். ‘‘நீங்க எதுவும் கேட்க வேணாம்.‘‘ கலவரமாக சொன்னான். காரணம் என் குணம் அவனுக்குத் தெரியும். ‘‘ஆமாங்க… ‘‘ பின்னால் இந்திராவும் மகனுக்கு ஒத்துப் பாடினாள்.

‘‘கவலைப்படாதே ! பாதிப்பு வராது,‘‘

‘‘இல்லப்பா அவுங்க பெயிலாக்கிடுவாங்க.‘‘ பயம் அவன் முகத்தில் பிரதிபலித்தது.

‘‘தவறை யார் தட்டிக்கேட்கிறது ?‘‘ என்றேன்.

மௌனமாக நின்றான். எனக்குள்ளும் அவனைப் பார்க்க வேறு யோசனை.

‘‘சரி. நாம மட்டும் தனிச்சுக் கேட்டால் பகை. இன்னும் கொஞ்ச பேரைக் சேர்த்துக்கலாம்.‘‘ என்றேன்.

‘‘ஆமாம். அப்படிச் செய்யலாம்.‘‘ இந்திராவிற்கு இந்த யோசனைப் பிடித்திருந்தது. சடனாகச் சொன்னாள்.

சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன். அடுத்தத் தெருவிருக்கும் வாத்தியார் கிருஷ்ணன் வீட்டை நோக்கி நடந்தேன். அவர் மகன் பரத்தோடு படிக்கிறான்.

வாசல் விளக்கு வெளிச்சத்தில் என் தலையைக் கண்டதுமே… ‘‘என்ன சார் இந்த நேரத்துல..?‘‘ அவர் கொஞ்சம் பதற்றமாக வந்தார். அவருக்குப் படபடப்பு அதிகம்.
நான் தேடி வந்த விசயத்தைச் சொன்னேன்.

நான் சொன்னவற்றையெல்லாம் அமைதியாக கேட்டவர் ‘‘கோபப்படாதீங்க சார். இது சாதாரண விசயம்.விட்டுடலாம் !‘‘ என்றார்.

மாணவர்களை முட்டிப்போடச் செய்வது வாத்தியாரான இவருக்குச் சாதாரணமான விசயம். அவர் மனம் எனக்கு விளங்கியது,

‘‘சார். இது வாலிபப்பசங்க மனசைப் பாதிக்கிற விசயம்.‘‘ எடுத்துச் சொன்னேன்.

‘‘நியாயம் சார். இன்னைக்கு உங்களுக்கு உள்ள கொதிப்பு மத்தவங்களுக்கு இல்லே. ஏன்…? பசங்களைப் பெயிலாக்கிடுவாங்க சார். மேனேஜ்மெண்ட் கோட்டாவுல லட்சம் லட்சமா கொட்டிக்கொடுத்து பிள்ளைங்களைப் படிக்க வைக்கிற பெத்தவங்களெல்லாம் இந்த பயத்துலதான் கம்முன்னு இருக்கான். அவனே அப்படி இருக்கும்போது நாம தூசு சார்.‘‘ என்றார்.

‘‘தட்டினா வழி பிறக்கும் !‘‘ என்றேன் விடாமல்.

‘‘நான் வரலை.!‘‘ அவர் அதற்கு மேல் பேச விரும்பாமல் உள்ளே சென்றார்.

அடுத்து இரண்டு மூன்று பேர்களைப் சந்தித்தேன். எவருக்கும் துணிவில்லை. பயந்து பதுங்கினார்கள்.

‘கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இருந்தால் முறையிட்டு உதவிக்கு அழைக்கலாம்.. !‘ தோன்றியது.

‘அப்படியே இருந்தாலும் இந்த கோழைகள்தான் அதிலும் உறுப்பினர்கள். இவர்கள் ஆரம்பதிலேயே தட்டிக் கேட்டிருந்தால் தவறுகள் நடந்திருக்காது. திருத்தப்பட்டிருக்கும். பயந்தாங்கொள்ளிகள் கேட்கவில்லை. கேட்க வரவும் மாட்டார்கள்.‘ மனசு சபித்தது. இதைத் தட்டிக் கேட்காமல் விடவும் எனக்கு மனசில்லை. தூக்கம் வராது. இது என்னுடைய மகன் பிரச்சனை மட்டுமில்லை. எதிர்கால சந்ததிகளின் மனசு எதிர்காலம். புலி வருது புலி வருது என்று எல்லோரும் பயந்தால் யார்தான் அது வருவதைப் பார்க்க.. எதிர்ப்பைச் சமாளிக்க….?!
நிரம்ப யோசித்து தனி ஆளாய்த் துணிவது என்ற முடிவிற்கு வந்தேன். அதற்கு பரத் பக்கபலமாய் இருப்பது அவசியம். திரும்பினேன்.

‘‘அப்பா ! யார் யார் வர்றாங்க ?‘‘ பரத் கேட்டான்.

‘‘கோழைங்க…‘‘ ஒற்றைச் சொல்லில் வெறுப்பை உமிழ்ந்து ‘‘ நாம கேட்கலாம் !‘‘ என்றேன்.

பரத் துணுக்குற்று என்னைப் பார்த்தான்.

‘‘பயம் வேணாம். உன் எதிர்காலத்துக்கு நான் உத்திரவாதம்.‘‘ என்றேன்.

பரத் பதில் சொல்லவில்லை. மௌனம் சம்மதத்திற்கு அறிகுகுறி.

மறுநாள் காலை கல்லூரி ஆரம்பித்தவுடன் நானும் பரத்தும் தாளாளர் அறைவாசல் முன் நின்றோம்.

பார்க்க விரும்புவதாக வாசலில் நின்ற பியூனிடம் சொல்லி அனுப்பினேன்.

அவன் உள்ளே சென்று திரும்பி வந்து ‘‘போங்க சார்‘‘ கதவு திறந்து விட்டான்.

தனசேகரன் ஆடம்பர மேசை நாற்காலியில் அட்டகாசமாக அமர்ந்திருந்தார்.

‘‘வணக்கம் சார் !‘‘கைகூப்ப….பதிலுக்கு அவரும் அனிச்சையாய்க் iகூப்பி… ‘ஏன் நீ வகுப்புக்குப் போகலை ?!‘ என்பது போல் பரத்தைப் பார்த்தார்.

‘‘பையன் விசயமா கொஞ்சம் பேசனும் சார்‘‘ அமர்ந்தேன்.

பரத் அமரவில்லை. நானும் அமரச் சொல்லவில்லை. அவரும் மரியாதைக்குக்கூட அதை அவனிடம் சொல்லவில்லை. இங்கே படிப்பவன் அது தேவை இல்லை. எனக்கும் பட்டது.

‘‘என்ன விசயம் ?‘‘ ஏறிட்டார்.

‘‘இவன் நேத்து இங்கே கல்லூரி பேருந்துல வரலைங்குற காரணத்துக்காக வகுப்புல முட்டிப் போட்டிருக்கான் சார்.‘‘ நேரடியாக விசயத்திற்கு வந்தேன்.

‘‘அது அவன் செய்த தப்பு அதுக்கு அதுதான் தண்டனை.‘‘ அவர்.

‘‘மனுசன் தவர்றது இயல்பு சார்.‘‘ பணிவாகவே தொடர்ந்தேன்.

‘‘இங்கே மன்னிப்பு மறப்புங்குற பேச்சுக்கே இடமில்லை. இது கண்டிப்பு கறாரான கல்லூரி.‘‘ என்றார்.

‘‘சந்தோசம். ஆனா அதுக்குத் தண்டனை இது இல்லே சார்.‘‘

ஏறிட்டார்.

‘‘தண்டனைங்குறது தவறைத் திறுத்தனும். மனசைப் பாதிக்கக் கூடாது.‘‘

‘‘சார். இங்கே இப்படித்தான். பையனைச் சரியாய் நடக்கச் சொல்லுங்க.. மான அவமானம் உங்களுக்குப் பெரிசா இருந்தா பையன் டி.சி வாங்கிக்கிட்டுப் போங்க.‘‘ கோபம் கடுகடுத்தார்.

‘‘நீங்க தவறை உணராம பேசுறீங்க. இந்த முட்டிப் போடுற தண்டனை வயசுப் புள்ளைங்க மனசைப் பாதிக்கும். மனசொடிஞ்சு தற்கொலை வரைப் போகும்.‘‘ என்றேன்.

தற்கொலை! அவர் மனதைக் கொஞ்சம் அசைத்தது போல. மௌனமாக இருந்தார்.

தொடர்ந்தேன். ‘‘சார். பரத் உள்ளுர் கான்வென்ட்டுலதான் படிச்சான். அதுவும் கண்டிப்பு கறாருக்குப் பேர் போனது. பள்ளிக்குத் தாமதமாய் வந்தால் படிக்கலை டெஸ்ட் எழுதலைன்னா தண்டனை என்ன தெரியுமா…? மரக்கன்றுகளுக்குக் காலை மாலை தண்ணி ஊத்தனும். இன்னைக்கு அந்த கான்வென்ட் நிழற்காடாய் இருக்கு. பள்ளிக்குப் போனால் தோப்புக்குள்ளே நுழைஞ்ச உணர்வு. அது மட்டுமில்லாம அங்கே நிறைய பறவைகள். மரத்தோட பயன்கள் உங்களுக்குத் தெரியும். ஒரு தண்டனையில எவ்வளவு நல்லது பாருங்க. அதே சமயம் குற்றவாளி மனசைப் பாதிக்காத தண்டனை. தண்டனை தண்டனையாய் மட்டும் இருக்கிறது பிரயோசனமiமில்லே. அது அவனுக்கு மட்டுமில்லாம மத்தவங்களுக்கும் பயனுள்ளதாய் அமையறது நல்லது. அதனாலதான் சிறைச்சாலை கைதிகளைக் கல்லுடைக்க வைச்சு கைத்தொழிலும் கத்துத்தர்றாங்க.‘‘ நிறுத்தினேன்.

‘‘உங்க உபதேசத்துக்கு நன்றி என் நேரத்தை வீணடிக்கிறீங்க.‘‘ தனசேகரன் முகம் கோபம் மாறவில்லை.

‘‘சார் முடிவு….?‘‘

‘‘அது இங்கே நடக்கிறபடியே நடக்கும்.!‘‘

‘‘நல்லது இதை நான் மனித உரிமைக் கழகம் மனிதவளமேம்பாட்டுக்குத் தெரியப்படுத்தறேன்.‘‘ அடுத்த ஆயுதத்தை எடுத்தேன்.

அவர் துணுக்குற்றார். ஆனாலும் சட்டென்று இறங்கி வர மனமில்லை.

‘‘ரொம்ப சரி. அதுக்கு முன்னாடி டி.சி வாங்கிக்கிட்டு கிளம்புங்க.‘‘ என்னை மிரட்டினார்.

நான் அசரவில்லை.

‘‘வாங்கிக்கிறேன் ஆனா நீங்க அதுல இன்ன காரணத்துக்காக பரத்தைக் கல்லூரியைவிட்டு நீக்குறேன்னு குறிப்பிடனும் !‘‘

‘‘முடியாது !‘‘

‘‘அப்போ பரத்தும் டி.சி வாங்க முடியாது.!‘‘

‘‘சார். நீங்க வம்பு செய்ய வந்திருக்கீங்க. அதிகம் வேணாம். உங்க பையன் இங்கே படிக்கிறான்ங்குறது நினைவிருக்கட்டும்.!‘‘

‘‘நல்லா ஞாபகமிருக்கு. அதே சமயம் பரிசோதனை பயிற்சித் தேர்வுல மதிப்பெண்கள் குறைச்சுப்போட்டு பையனைப் பெயிலாக்கி பழிவாங்கிடலாம்ன்னு நீங்க மனப்பால் குடிக்காதீங்க மறு ஆய்வுக்கு வழி இருக்கு.!‘‘

தனசேகரன் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. அரண்டார். அதற்கு மேல் அவரால் முரண்டு பிடிக்க முடியவில்லை.

‘‘ஓ.கே. சார். இனிமே இப்படி நடக்காது. கை கொடுங்க‘‘ சட்டென்று சமாதானத்துக்கு வந்து கை நீட்டினார்.

நான் நீட்டவில்லை. ‘‘நீங்க மனப்பூர்வமாய் சொன்னால் நான் சமாதானத்துக்குத் தயார்‘‘ என்றேன்.

‘‘நான் மனப்பூர்மாய்ச் சொல்றேன். இங்கே படிக்கிற யாருக்கும் இனி மனசைப் பாதிக்கிறாப் போல் தண்டனை கெடையாது. இதுக்கு நான் உத்திரவாதம். கை கொடுங்க.‘‘
உண்மையிலேயே மனம் திறந்து சொன்னார்.

‘‘நன்றி !‘‘ கை குலுக்கினேன். பரத் முகம் மலர்ந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *