அவன் வர்க்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 3,049 
 

யாழ்ப்பாணத்து முற்ற வெளியில் முக்கால் வாசியையும் தனதாக்கிக் கொண்டு உறங்கிக் கிடக்கின்றது கோட்டை. அதனிடையே ஓங்கி வளர்ந்த வெள்ளரசு மரம் அதன் மீளா உறக்கத்திற்குச் சாமரை வீசுகிறது. கிழக்கே உயர அமைக்கப்பட்ட மதில்கள் காலை வெய்யிலைக் கோட்டையின் ஒரு புறத்திலும் விழாதவாறு தடுக்கின்றது.

கோட்டைக்கு வடக்கே படமெடுத்து ஓய்ந்து பாம்பு போல் படுத்திருக்கின்றது பண்ணை வீதி. அதனிடையிலே இன்பமாக வந்து சேர்ந்து காணப்படுகிறது காங்கேசன் வீதி.

இவற்றின் முனைப்பிலே அங்குமிங்கும் நடமாட்டம். உயிரற்றன போல் காணப்படும் இந்த இரு வீதிகளில் வாகனங்களும், பாதசாரிகளும் போய்க் கொண்டிருக்கின்றன.

‘கடகடா’ என்று பேரிரைச்சல் எழுத்தள்ளுவண்டிகள், யாழ்ப்பாண நகரத்து நாசக் கழிவுகளை யெல்லாம் பண்ணைக் கடலில் தான் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற அலைப்புடன் உருண்டு கொண்டிருக்கின்றன.

‘சீ! சனியன் பிடிச்சதுகள் ! கொஞ்சம் வெள்ளணையாக எழும்பி வந்து இந்தச் சவங்களையெல்லாங் கொண்டு போய்க் கொட்டினால் என்னவாம்?”

“ஓமடி! ஒன்பது மணிக்குப் பிறகு தான் இவங்களுக்கு விடியிறது. மனிசர் றோட்டாலை போக வழியில்லை . பட்டணம் எண்டு மட்டும் பேர் ! ஆனால் கிராமக் குளக்குட்டைகளிலும் படான் ! மோசம்!”

கைவண்டிகளின் அசைவின் இடையே அரசல்படாமல் அரசல்பட்டு விட்ட சில பள்ளி மாணவிகள் சரசரத்துக் கொண்டு செல்கின்றனர்.

இந்த வார்த்தைகளிற் பாதி கைவண்டியுடன் சென்று கொண்டிருக்கும் கணபதியின் காதில் வந்து வீழ்கிறது. முகத்தில் வழிந்து நெஞ்சுக் கோளறைகளை வாய்க்காலாக்கிப் பாயும் வியர்வை வெள்ளம் அடிவயிற்றில் அனற் பிழம்பாக மாறிச் சுடுகிறது.

“அவை கொட்டுவினம்….? நாங்கள் தான் சுமக்க வேணும். பேந்து கதையைப் பார்..நன்றி கெட்ட சனங்கள்…”

அவன் கைவண்டியுடன் கடற்கரையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான்.

காலையிலே வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் உத்தியோகஸ்தர்களுடைய கார்கள் வண்ணம் அற்ற சிறிது விறைப்பான காலை வெய்யிலிற் பள பளத்தவாறு ஓடுகின்றன. ‘உஸ்’ என்ற அவற்றின் இயக்கநாதம் கிளப்பிய துர்நாற்றம் அதே வேளையில் முகத்தைப் பிளக்கின்றது.

“தூஊஉப்!”

காற்றின் காட்சியற்ற அலைகளுடன் சேர்ந்த சிதறிப் பறந்த உமிழ் நீர்த் துளிகள் கணபதியினுடைய முகத்திலும் படிகின்றன.

“சி பெரிய மனுஷன்? திமிரைப் பார்!” தன்னிலேயே கறுவியபடி ஏசுகின்றான் கணபதி .

கைவண்டி கோட்டைத் திருப்பத்துக்கு வந்து விட்டது. சத்திரக் கிணறு திரும்பி, பொன்னம்மாவின் மில்’லைத் தாண்டி, பண்ணைக் கடல் வீதியில் மனித பாவச் சின்னங்களுடன் திரும்ப முனைந்தது.

“கிறீச்….!”

“சளாப்”

“எட! பண்டி! நீ தான் அதோடை நாள் முழுக்க கிடக்கிறையெண்டால் மற்ற மனிசரையும் அதுக்கை விழுத்திப் போட்டியே…! உன்ரை…”

“கோதாரியிலை போவாங்கடை வஸ்ஸும் கண்டறியாத பயணமுந்தான்.”

வார்த்தைகள் புற்றிசல்களாகின்றன. கைவண்டி ஒரு புறமாகப் புரண்டு, கீபலெட்டு என எழுதப்பட்டிருந்த சீமெந்துத் தூணுடன் சாய்ந்து கிடக்கிறது.

கணபதி -?

போகத்துடித்த தன் உயிரைப் போக விடாமல் ஒரு கையால் பிடித்த படி தார் விதியில் நெஞ்சழுத்திய வேதனையுடன் புரள்கின்றான்.

அவனை சுற்றி….

கச்சேரிக்குச் செல்லும் உத்தியோகத்தர்களைச் சுமந்து கொண்டு கண்டி வீதியில் ஏற முனைந்த பஸ்ஸுக்குக் கிடைத்த இரை…………

கைவண்டி….கணபதி!

சூரிய ஒளியை உமிழ்ந்து சிரிக்கும் சப்பாத்துக்களும் வண்ணநிறக் காலணிகளும் பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடுகின்றன. பஸ்வண்டியின் செம்மை படிந்து விட்ட முகம் முழுவதும் மஞ்சள் கலந்த குழம்பு…….

பிண நாற்றம்!

கொன்று குவித்த உயிரினங்களின் சடலங்களின் சமீகரிப்பு…

கணபதி புரள்கிறானா.

அழைப்பில் சத்திரக் கிணற்றடியால் வந்து திரும்பிய இரு கைவண்டிகள் வேகமாக உருள்கின்றன.

அவர்கள் -?

இரத்தமும் உடலும் கழிவுக்குள் புரள்வதை கண்டு பரிதவிக்கும் மனிதர் கூட்டம் அங்கு இல்லை. நின்றவர்கள் நாகரீக காலத்து இலங்கை மக்கள்.’

சாரதி கத்துகிறான். அவனுடைய கைகள் என்றுமில்லாத ஒருமைப்பாட்டுடன் ‘ஹார்ணைப் பற்றி அமுக்கின்றன. கொலைக் கைகளில் அகப்பட்ட சிசுவைப் போல வீரிடுகிறது பஸ். அதன் பயங்கர ஓலத்தைக் கேட்க சகியாத கூட்டம் முற்றவெளியில் நின்ற வண்ணம் காதுகளைப் பொத்துகின்றது.

“இஞ்சை வாடாப்பா! பஸ்ஸுக்கு முன்னுக்கை கிடக்கிற வண்டிலை இழு…”

வந்தவர்களில் ஒருவனை நோக்கி அதிகார மிடுக்குக் குழைந்த குரல் பாய்கிறது

சாரதி சொன்ன வார்த்தைகளிற் கவனம் சென்றும் செல்லாதவாறு நின்ற அந்த இருவரும் கணபதியைத் தூக்குகிறார்கள். கைவண்டியின் முன் வாளிகளில் அதிர்த்த பஸ்ஸின் விசை அவனுடைய நெஞ்சையும் பதம் பார்த்துவிட்டது. நெஞ்சைத் தடவித் தடவி வலியைத் தாங்க முடியாமல் நொந்து கொண்டிருந்தான் கணபதி.

“டேய்! உன்னைத் தான்..இதை இழுத்து விடு எண்டால்…என்ன மாடு மாதிரி நிற்கிறாய்?”

“சரியாச் சொன்னியள் மாடு எண்டு . ஏனெண்டால் மாடு அடிவாங்கியும் ரோசமில்லாமல் பேந்தும் பேந்தும் வண்டியில் இழுக்குதே. அந்த மாதிரி இந்த வண்டிலையும்…உங்கள் ஆக்கினைகளயும் பொறுத்தண்டு இழுத்துத் தள்ளுகிறமே! இது இல்லை….இன்னுமின்னும்….”

“டேய்! இழு எண்டால் இழுக்கிறதை விட்டுப்போட்டு ஏலம் பேசறியா?”

“இனி ‘இழுக்கத்தான் வேணும்…”

“…..”

“வேணுமெண்டா நீ இழுத்துவிடன். இஞ்சை இவனைக் கொண்டு போட்டியே!”

முற்றவெளியில் நின்று கொண்டிருக்கும் பிராயாணிகளின் முகங்களில் அனைத்தையும் மறந்த நகையாட்டம் தோன்றி மறைகிறது. அவர்களுள் ஒருவர் முணுமுணுக்கிறார்!

“நல்லாச் சொல்லடா பயலே! நல்லாச் சொல்லு.” சாரதி தன்னைச் சமாளித்தபடி,

“கொண்டு போட்டேனா? அவனுக்கு என்ன வெறியோ? காலமையிலும் குடிச்சுப் போட்டா வாளி எடுக்கிறவர்கள்…?” என்று கேட்கிறான். மக்கள் கூட்டத்தில் அவனுடைய விழிகள் ஆதரவு தேடுகின்றன.

அனைவரும் மௌனியாகுகின்றனர்.

சாரதி பழியைப் போடுகிறான். அதமத்தின் சவக்குழியை மூடுவதற்குப் பயன் படும் ஒரே நிலைதான் அது.

தன்மீது பட்டிருந்த கழிவு துண்டுகளை இழித்துத் துடைத்தபடி எழுந்து வருகிறான் கணபதி.

முடியவில்லை…!

அவனுக்கு நெஞ்சில் வலி! நடக்க முனைந்ததும் கால்களிற் பட்ட அடியிலிருந்து குருதி கசிகிறது. வீதியின் உராய்ப்பில் முண்டிய கணபதியின் முழந்தாள்கள் வெம்மையில் மூழ்கிக் கிடக்கின்றன.

‘ஆருக்கு வெறி….? நீ எங்களை என்னண்டு நினைச்சை…? நீ..நீ..”

அவனாற் பேசமுடியவில்லை. வார்த்தைகளின் வெளி வராத குறை முடிவு தொண்டைக் குழியில் ஆழ்கிறது.

“இஞ்சை வாருங்கள்! ஆரெண்டால் என்ன கால்வாயிக்கை தண்ணி கிடக்குது. கொண்டந்து பஸ்ஸைக் கழுவி விடுங்கோ”

“நாங்கள் கக்கூஸ் கிளினர். பஸ் கிளினரில்லை .”

“டேய்! இப்ப செய்யப் போறியா இல்லையா?”

“கொஞ்சம் பொறு! அவசரப் படுறியே! இஞ்சியப்பன் வரட்டும்!”

புற்றரைகளில் நடந்து திரிகின்ற பாதவணிகள் ஒரு நிலை பெற்று நிற்கின்றன. அவற்றின் சொந்தக்காரர்களுள் ஒருவராவது பிடித்த மூக்கை விடவில்லை.

அத்தனை பேருக்குங் குடலைப் புரட்டுகின்ற உணர்வு முகத்திற் பரிணமிக்கின்றது. அதனை நாள் தோறும் செய்து வருகின்ற கணபதிக்கு……..?

அவனும்…

தார் வீதியில் உருண்டதால் மேலும் உராய்வு பெற்ற தனது நாசியை மெல்ல வருடி, நோ தெளிந்தும் உள்ளவாறே விடுகிறான் கணபதி.

அவனுக்குச் சுகந்தமா?

செய்தி அறிந்தோ , என்னவோ முனியப்பரையும் அவமதிக்காதபடி பறந்து வருகிறது ஒரு ஜீப்’ வண்டி. இது வரையும் அந்த மூவரையும் தனது வார்த்தைகளால் விரட்டிக் காரியம் பெறுவிக்க முயன்ற சாரதியின் கண்களில் பயங்குடிபுகுகின்றது.

சட்டத்தின் கைக்குள் தூணும் அசலப்படும், துரும்பும் அலசப்படும். அத்தனைக்கும் ஒரே நீதி; ஒரே தீர்ப்பு! சாரதி இதனை உணராமல் இருக்க நியாயமில்லை .

‘ஜீப்’ நெருங்குகிறது!

“இந்தா பொலிஸ் வருகுது. உங்களை ஒரேயடியாகக் கோட்டைக்கை இருந்து கக்கூஸ் எடுக்க வைப்பான். இந்த வண்டிலை இழுத்து விழுங்கடா!” வார்த்தைகளில் அச்சங் கலந்த உக்கிரந் தொனிக்கின்றது.

அவர்கள் அசையவில்லை.

“ஓய்! என்ன காணும் பண்ணிக் கொண்டு நிக்கிறியள்?”

அதிகாரியின் மிரட்டல் அந்த மூவரையும் ஒரு கணம் உலுக்குகின்றது.

கணபதிக்குக் கண்கள் இறுக்க…நாசித் துவாரங்கள் அகன்று விரிய..உதடுகள் இறுக…பற்கள் நறும்ப…

கோபம் வருகிறது!

“றைவரைக் கேளுங்கள்!”

“ஏன் ட்றைவர்…எங்கை பஸ் நிக்குது? ஆ ! றோங்சைட்டாலை பஸ்ஸைவிட்டு அந்தத் தள்ளுவண்டியிலை இடிச்சிருக்கிறியள் போலை இருக்கு…”

சாரதி கண்களை விழிக்கின்றான்!

“இல்லை ஐயா!…ட்றைவர் வந்தது சரி! அவன் தான் குடிகாரன் மாதிரி முறட்டுத் தனமாக வண்டிலைத் தள்ளியண்டு வந்தான். பஸ்ஸும் வண்டிலும் அடிப்பட்டுப் போச்சு.”

“நீர் கொண்டக்டர்’ தானே? உம்மை விசாரிக்கையிக்கை சொல்லும். இப்ப பேசாமல் நில்லும்!”

அமைதி!

சாரதியும், கொண்டக்டரும் ஒருவர் மற்றவரைப் பார்த்து மிரள்கின்றனர். கூடிநின்ற மக்கள் கூட்டம் அவர்களைப் பார்த்து நகைக்கின்றது.

“நீங்கள் ஏன் நிக்கிறியள்? எல்லோரும் ஒடுங்கள்!”

“எங்கடை காசு?” கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுக்கின்றார்.

“அப்படிக் கேளுங்கள்! இவர்கள் தலைகால் தெரியாமல் பஸ் ஓடுகிறது. எங்களுக்குத் தான் நட்டம். பஸ் காசைத் திருப்பித் தந்தால் நாங்கள் போகிறோம் ”

“பத்துச் சதக்காசுக்காக உயிரை விடாதையுங்கள். அங்காலை போகச் சொன்னால் போங்களன்!”

‘கொண்டக்டர்’ இவ்வளவு நேரமும் பேசாமல் நின்று விட்டுப் பணஞ்சம்பந்தமான பிரச்சினை தம்முடையது தான் என்ற நினைப்பில் அந்தக் கூட்டத்தைப் பார்த்துச் சொல்கிறார்.

கூட்டம் சிதறுகிறது!

அதிகாரி எழுதத் தொடங்கிளார்.

“பஸ் நம்பர்..சாரதி பெயர்…கைவண்டி..கணபதி..சாட்சிகள்..கையெழுத்துக்கள்…”

“இந்தா வண்டியை அங்காலை இழு!” சாரதி கணபதிக்கு விட்ட கட்டளை.

“நீ இழுக்கத்தானே போனாய்? இப்பவே இழன். உங்களுக்கு எண்டு தண்ணிமுறையிலை ஒண்டைக் கூட்டுங்களேன். அப்படியும் இல்லாமல் வாளியளிலை வழி நெடுக எங்களைச் சுமக்க வைச்சு…எங்களை நாயிலும் கேவலமாக நடத்த வேண்டாம். றோட்டிலை போறவைலயும் பெரிய சங்கடப்படுகிற மாதிரி அதைப் பிடிச்சு…இதைப் பொத்தி….”

கணபதியுடன் கூட நிற்பவன் தான் பேசுகிறான். மீறி வந்த வெறுப்பில் வார்த்தைகள் தடம் புரள்கின்றன. அவனால் பேச முடியவில்லை.

இந்த மூவரில் மூன்றாமவன் கைவண்டியை இழுத்து விலக்கி விடுகிறான்.

அதிகாரியின் பொறுப்பில் நடைபெற்ற வழக்கில் சாரதிக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவன் உள்ளே போய் என்ன செய்வான் என்பது தெரியாது!

ஆனால்?

கணபதி ஒவ்வொரு நாளும் – காலையில் கை வண்டியைத் தள்ளிக் கொண்டுதான் போகிறான்.

– அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு: 2000, அங்கையன் பதிப்பகம், கொழும்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *