அவனே அவனைப் பார்த்து…

 

வேலை முடிந்து அலுப்பு அவனைப் பிடித்து உலுப்பச் சுகுமாரன் சுரங்கரதத்தில் வந்தான். இன்று வெள்ளிக்கிழமை. இந்த நாள் வருவது பலருக்கும் மிகவும் சந்தோசம் தரும் ஒரு நிகழ்வு. ஆனால் வந்த வேகத்தில் அது போய்விடுவதுதான் மிகவும் துக்கமான உண்மை. இருந்தும் காலம் ஆற்று நீராகக் கடந்து கொண்டே இருக்கிறது. அதில் எப்போதும் பழமை கிடையாது. புதிது புதிதாகத்தான் அது எப்போதும் எம்மைத் தீண்டிக் கொண்டு செல்கிறது. சுகுமாரன் வெள்ளிக்கிழமை என்றால் நேரடியாக வீட்டிற்குச் செல்லாது குரன்லாண்டில் இறங்கி, அங்கு இருக்கும் மரக்கறிக் கடையில் மரக்கறி வாங்கிக் கொண்ட பின்புதான் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அந்த மரக்கறிக் கடை துருக்கிக் காரருடையதாக இருக்க வேண்டும். அங்கு மரக்கறி மலிவாக விற்கப்படுவதால் எள்ளுப் போட்டாலும் விழாத அளவில் சன நெரிசலாக இருக்கும். சுதேசிகள், கிழக்கு ஐரோப்பியர், மற்றும் ஆசியாவைச் சார்ந்தவர்கள், ஆப்பிரிக்காவைச் சார்ந்தவர்கள் என்று மலிவு என்பதில் என்ன பேதம் என்கின்ற சமதர்மம் அங்குதான் முறையாக நிலைநாட்டப்படும். அந்தச் சமதர்மத்தை அனுபவிப்பதில், தனது சொந்தச் செலவைச் சுருக்கிக் கொள்வதில் சுகுமாரனுக்கு ஏகப்பட்ட சந்தோசம். சுரங்கதரம் குரன்லாண்டில் நின்றது. சுகுமாரன் என்று மாறாத அந்த அவசரத்தோடு பருத்திக்காய் வெடித்து காற்றில் பஞ்சு பறப்பது போல் அதில் இருந்து இறங்கி அந்தக் கடையை நோக்கிச் சென்றான். அப்படிச் செல்லும் போது பலர் நீலப் பைகளுடன் சுரங்கரதம் எடுப்பதற்கு வந்தார்கள். அந்த மரக்கறிக் கடையில் விலை குறைவான ஒருவித நீலநிறத்திலான பிளாஸ்ரிக் பை பாவிப்பார்கள். அதற்கு அவர்கள் பணம் எடுப்பதில்லை. மற்றைய சுதேசிகளின் கடைகளில் அந்தப் பைகளுக்கும் பைசாக் கறப்பதில் கண்ணாக இருப்பது சுகுமாரனுக்குத் தெரியும்.

அந்த மரக்கறிக் கடையில் விற்கப்படும் மரக்கறிகள் மலிவாக இருப்பது உண்மை என்றாலும் சில வேளைத் தரத்தில் சற்றுக் குறைவாக இருப்பதும் சுகுமாரனுக்கு விளங்கும். விளங்கினாலும்… அப்படி அதில் கழிவு வந்து எறிந்தாலும்… அங்கே கொள்முதல் செய்வதால் சுகுமாரனால் பல நூறு குரோணர்களை மாதத்திற்கு மிச்சம் பிடிக்க முடியும் என்பதை அனுபவத்தில் கண்டு கொண்டான். அதனால் சில பழுது இருந்தாலும் அவர்களது நம்பிக்கையான வாடிக்கையாளனாக அவன் அங்கே சென்று வருவான். இன்றும் அதே அவசரத்தோடு சுரங்க இரதத்தில் இருந்து இறங்கி வேகமாக வெளியே வந்து படிகளில் பாய்ந்து பாய்ந்து தாவிக் கடையை அடைந்து… பச்சைக் கூடை ஒன்றை வேகமாக எடுத்து… சில பிளாஸ்ரிக் பைகளை அதற்குள் பிய்த்துப் போட்டு… பழம், பச்சைமிளகாய், வெண்காயம், கொத்தமல்லி இலை, மரக்கறி என்று தனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கூடையை நிரப்பிக் கொண்டு உள்ளே சென்றான். உள்ளே அவர்கள் நாண் போன்ற பாணும் வைத்திருப்பார்கள். அது சுகுமாரனுக்கு மிகவும் பிடிக்கும். அந்த இடத்தை அடையலாம் என்றால் வழியெல்லாம் நந்திகளாக மனிதர்கள் மறைத்துக் கொண்டு நின்றார்கள். இடித்து இடித்து வழி சமைத்துச் செல்ல வேண்டிய இக்கட்டு. ஒருவாறு அப்படியே வழி சமைத்து அவன் அந்த இடத்தை அடைந்தான். பின்பு அதில் ஒரு பொதி, மைசூர் பருப்பு இரண்டு கிலோ பொதி என்பனவற்றை எடுத்து தனது கூடைக்குள் போட்டான். அப்போது கூடை அவனது கையை வாங்கத் தொடங்கி இருந்தது. இதற்கு மேல் இனி வேண்டாம் என்கின்ற முடிவோடு கல்லாவை நோக்கி தன்னை நகர்த்தினான்.

இன்று நிறையக் கூட்டம் ஆதலால் கல்லாவில் இருந்து பத்து மீற்ரர் தள்ளித்தான் அவனால் வரிசையில் இடம்பிடிக்க முடிந்தது. இனி வராத பொறுமையோடு அரங்க வேண்டும். அது வராவிட்டாலும் அதற்கு அதற்கான தவம் தொடரத்தான் வேண்டும். சுகுமாரன் கூடையை நிலத்தில் வைத்துவிட்டு குனியப் பஞ்சிப்பட்டு மற்றவர்களைப் போல் அதைக் காலால் தள்ளித் தள்ளி நகர்த்திய வண்ணம் நின்றான். சுகுமாரனுக்கு இந்தக் கடைக்கு வருவதில்… இந்த நகர்த்தும் கணங்கள்தான் மிகவும் சலிப்பைத் தரும் கணங்கள். இருந்தும் அதைத் தாண்டாமல் அந்தக் கொள்முதல் படலம் முடியாது என்பது முற்றம் உண்மையாகப் பொறுமையோடு கூடையைக் காலால் நகர்த்தினான்.

ஒருவாறு கல்லாவிற்கு வந்து… காசு கட்டி… நீலப் பைகளில் பொருட்களைப் போட்டு எடுத்துக் கொண்டு… மீண்டும் சுரங்கரதம் ஏறுவதற்கு அதே அவசரத்தோடு ஒடி வந்தான். அப்போதுதான் ஒரு சுரங்கரதத்தில் இருந்து சனம் இறங்கி வருவது தெரிந்தது. சுகுமாரன் தனது ஓட்டத்திற்கு இன்னும் அதி வீச்சுக் கொடுத்து ஓடினான். படிகளால் இறங்கியபோது அங்கே தரித்து நின்றது அவன் போகவேண்டிய சுரங்கரதமே என்பது தெரிந்தது. கதவு மூடும் முன்பு அதற்குள் பாய்துவிடும் அவசரம். சுரங்கரதத்திற்குள் வேலையால் வருபவர்கள் விலக முடியாது அடைந்து கொண்டு நின்றார்கள். உள்ளே இடம் பிடிக்க முடியுமா? அல்லது இடம் தருவார்களா? தரமுடியுமா? என்பது விளங்காது, அதைப் பற்றிச் சிந்திக்கும் அவகாசம் இன்றி… அவசரத்தில் சுகுமாரன் அதற்குள் பாய்ந்தான். அப்போது சரியாக்க கதவும் சாத்திக் கொண்டது. சுகுமாரனின் மேலங்கியின் பின்புறம் கதவின் இடுக்கிற் தூக்குக் காவடிக்கு ஏற்றப்பட்ட தூண்டில் போல மாட்டிக் கொண்டது. என்ன நடந்தது என்பதைக் கிரகிக்க முதல் அவன் தலையில் யாரோ குட்டியதை உணர்ந்தான். முதலில் சுகுமாரன் தன்னைக் கதவில் இருந்து விடுவித்துக் கொள்ளப் போராட வேண்டி இருந்தது. தன் பலம் கொண்ட மட்டும் இழுத்து தன்னை ஒருவாறு அதில் இருந்து விடுவித்தான். அவனுக்கு அதனால்… அதைவிடத் தலையில் விழுந்ததால் உள்ளே பொங்கிய கோபத்தில் உடல் அனலாகப் தகதகக்க வியர்வை அதை அணைக்கப் புறப்பட்டது. அவன் கோபத்தோடும், அவமானத்தோடும் உள்ளே பார்த்தான். மிருக குணத்தோடு காலகாலமாக மனிதன் அடக்கி வைத்திருந்த கோபம் அந்தக் கணத்தில் எரிமலையாக வெடிக்க… மலை போன்ற ஒரு சுதேசி நிறை வெறியில் என்ன என்பது போல் அவனைப் பார்த்தான்.

சுகுமாரனுக்கு என்ன செய்வது என்பது முதலில் விளங்கவில்லை. எட்டி அவன் மேலங்கியைப் பிடித்தான். அவன் அதைத் தட்டிவிட்டு இவனைக் கீழே தள்ளிவிட்டான். அவன் தள்ளி வேகத்தில் கீழே விழுந்த சுகுமாரன் வேதனையோடும் கோபத்தோடு மீண்டும் எழுந்தான். அவன் திரும்பவும் முகத்தில் குத்துவதற்குத் தயாராக நின்றான். ஏதாவது ஆயுதம் கையில் இருந்தால் அவனைக் காயப்படுத்தி விடவேண்டும் என்கின்ற கோப வெறி அவனிடம். ஏதும் கையில் இப்போது இல்லை. என்ன செய்வது? உடல் பலத்தால் அந்த அசுரனை எதுவும் செய்ய முடியாது என்பது சட்டென அவனுக்கு விளங்கியது. அவன் பாய்ந்து அபாயச் சங்கிலியை தனது பலம் கொண்ட மட்டும் இழுத்தான். அனைவரும் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தனர். அதற்குள் அடுத்த தரிப்பும் வரச் சுரங்கரதம் அங்கே நிறுத்தப்பட்டது. கதவு இப்போது திறந்த இருக்க வேண்டும். ஆனால் திறக்கவில்லை. சாரதி காவலர்களுக்கு காத்திருந்தான்.

காவலர்கள் வந்தார்கள். கதவு திறக்கப்பட்டது. இவர்கள் பெட்டிக்குள் ஏறிய காவலர்கள் யாரும் வெளியேறாது பார்த்துக் கொண்டார்கள். பயணிகள் சிலர் இருவரையும் பார்த்துக் கைகாட்டினர். சுதேசி மது போதையில் இருந்தான். சுகுமாரன் கோப வெறியில் இருந்தான். இருவரையும் வேறு சில பயணிகளையும் இறக்கி காவலர்கள் விசாரித்தனர். பின்பு வுழக்குப் பதிவு செய்தனர். இனி நீதி மன்றம். தண்டனை என்று இழுபடலாம்…?

நிஜத்திற்கும் கற்பனைக்கும், கோபத்திற்கும் பொறுமைக்கும், மானத்திற்கும் அவமானத்திற்கும் என்கின்ற பல வித்தியாசங்கள் சில கணத்தில் மூளையால் எடுக்கப்படும் முடிவாக… அதை வெல்ல முடியாத மனிதர்களாக… சுகுமாரன் சில கணங்கள் தத்தளித்தாலும் அவன் அதில் இருந்து மீண்டுகொண்டான்.

சுகுமாரன் அந்த மலையை நிதானமாக மீண்டும் பார்த்தான். இந்தக் கட்டைக்கு இன்று நல்ல குட்டு வீழ்ந்தது என்று மனதிற்குள் யாரோ சொன்ன ஞான வாக்கை ஞாபகப்படுத்திக் கொண்டான். இதற்குள் இருக்கும் மானம் அவமானம் பொங்கி ஆர்ப்பரித்தது இறுதியாக வேறு வழி இன்றி அடங்கியது என்று எண்ணினான்.

சுகுமாரன் மீண்டும் இந்தக் கட்டைக்கு இன்று முறையான அடி வீழ்ந்தது என்று மனதில் சொல்லிக் கொண்டான். சுரங்கரதம் தொடர்ந்து பயணித்தது. இரக்கப்படுபவர்கள் பற்றியோ அல்லது சிரிப்பவர்கள் பற்றியோ அவனுக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை. அவனே அவனைப் பார்த்து இன்று முதன் முதல் சிரித்துக்கொண்டான்.

- மார்ச் 22, 2018 

தொடர்புடைய சிறுகதைகள்
நேசன் ‘றேமாத்தூசன்’ கடைக்குள் தனது கழுவும் வண்டிலைத் தள்ளிக்கொண்டு அதன் பின்பகுதிக்குச் சென்றான். அங்கிருந்துதான் கழுவத் தொடங்க வேண்டும். அது ஒரு பெரிய நீட்டான கடை. கடைசிப் பகுதியில் மதுவகையில் தொடங்கி முன்னோக்கிச் செல்லச் செல்ல பால், பழரசம், தயிர். வெண்ணை, ...
மேலும் கதையை படிக்க...
சந்திரனைப் போன்ற இரதியக்காவின் வட்டமுகம் அடிக்கடி சூரியனைப் போலச் சிவந்து போவது உண்டு. பெண்விடுதலை பற்றி இரதியக்கா கதைக்கத் தொடங்கினால் சூரியனைத் தலைக்கு மேல் வைத்ததாகக் கோபம் அவவிடம் இருந்து பீறிட்டுப் பாயும். அவவின் கோபாக்கினி தாங்கதா பல ஆண் சூரியர்கள் ...
மேலும் கதையை படிக்க...
நோர்வே சொற்காபுரியாக இருந்தாலும் தரனின் வாழ்க்கை இந்தச் சொற்காபுரியில் ஒரு நரகமாகவே தொடங்கியது. அது அவர்கள் தப்பு அல்ல எங்கள் இயலாமை என்பது தரனுக்குத் தெரியும். அதன் காரணம் தெரிவதால் நரகம் ஒன்றும் சொர்க்கமாகி விடுவதில்லை. அடர்ந்த பனைக் காட்டில் கூட்டமாக ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பிண்டம் அதன் விருப்பின்றி அதன் மூலத்தின் தேவையில், விருப்பில், இயற்கையின் உந்தலில் வயப்பட்ட காமக் கிளற்சியில், கண்மூடித்தனமான வேகத்தில், அவசர அவசரமாகப் பூமியில் வந்து பிறந்தது. பிறந்த அந்தப் பிண்டத்தின் மூளையில் கேட்காமலே சில கேள்விகள், இரசாயனத்திற்கும் மின்சாரத்திற்கும் ஏற்படும் ...
மேலும் கதையை படிக்க...
பாட்டிக்குப் பற்கள் எதுவும் அற்ற பொக்கை வாய். அந்த வாயில் எப்போதும் தவழும் புன்சிரிப்பு. இந்தக் காலம் போல அந்தக் காலத்தில் பொக்கை வாய்க்குப் பற்கள் கட்டியது இல்லை. பல் இல்லாது வாழ்ந்த பாட்டி பழைய கலாச்சாரங்களின் உறைவிடம் என்று சொல்லலாம். ...
மேலும் கதையை படிக்க...
அன்று அசோகவனத்திற்கே கொண்டாட்டம். அசோகவனத்து அரக்கிகளில் காலம் தந்த பாடத்தால் பூரண மனமாற்றம். பிதற்றும் பேதை என்று எண்ணிய சீதையை அவதாரம் என்று கண்ணுற்று அசோகவனத்து அரக்கிகள் அதர்ம தடுமாற்றம் நீக்கி நியாயத்தின் மீது நிலையாக காலூன்றிய கணங்கள். அசோகவனத்திற்கு அன்னை ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பேய் அவன் பிறந்த போதே அவனோடு கூடப் பிறந்து விட்டது. அவனோடு அது கூடப் பிறந்தாலும் அதைப் பற்றி அறிவதற்கு அவனுக்குச் சில காலம் எடுத்தது. அந்தப் பேய் உடன் இருப்பதே தெரியாத ஆரம்பக் காலம். அது குறைவில்லாத மகிழ்வோடு ...
மேலும் கதையை படிக்க...
இப்போது இந்த வீடு பேய் வீடு போல இருக்கிறது. அப்படி எண்ண நினைத்த கணேசர் அதைத் திருத்தி இல்லை இது பேய்வீடே என்கின்ற அனுபவத்தை முடிவாக ஞாபகப்படுத்திக் கொண்டார். பின்பு மிகுந்த கவலையோடும், வேதனையோடும் எழுந்து சாளரங்களை இறுக்கமாக இழுத்து மூடினார். ...
மேலும் கதையை படிக்க...
துகளான வெள்ளி நச்சத்திரங்கள் தவறி விழுந்து பூமியெங்கும் மினுங்குகின்ற கடும் குளிர் காலம். வெப்பம் ஆவி போல வெளியேறும் துவாரங்களை மனிதனில் கண்டு பிடித்து வெப்பத்தை அட்டையாக உறிஞ்சும் குளிரின் கொடுமை, அட்டையான குளிரை எதிர்த்துப் பனியுலகில் மனித வாழ்வைக் காப்பாற்ற ...
மேலும் கதையை படிக்க...
வினோதன் மாவெட்டையில் உள்ள தங்கள் வயலை நோக்கி அவசரமாகச் சென்றான். தப்பு ஆர்வக் கோளாற்றில் அதை நோக்கி ஓடினான். வாய்க்காலில் நீர் கரை புரண்டு கடல் நோக்கித் தீரக்காதலில் மூர்க்கமாக ஓடியது. வெள்ளை கடற்கரை, மேற்கு கடற்கரையென மழைநீரில் கொள்ளை ஆசையோடு ...
மேலும் கதையை படிக்க...
கர்ண வேஷம்
இரதியக்கா
நரகம் சொர்க்கம் மோட்சம்
அநித்தியம்
முகமூடிகள்
சீதாயனம்
உடன் பிறப்பு
கணேசர் வீட்டுப் பேய்
எங்கள் நீதி
வளையா முதுகுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)