அவனும் மதுவும்

 

அது ஒரு இலையுதிகாலத்தின் இதம் கலந்த மாலை வேளை. மிகப் பிரமாண்டமான உல்லாச விடுதியில் ( கோட்டல்) வரவேற்பு மண்டபத்தில் இரவு நேர விருந்துபசாரத்திற்காக காத்திருக்கின்றார்கள். வண்டுகள் ரீங்காரம் செய்யும் ஓசைபோல் கேட்கிறது ஆங்காங்கே குழுமி நின்று பேசிக்கொண்டிருப்பவர்களின் இரைச்சலான பேச்சு. முகம் தெரியாத பல நபர்களுக்கிடையில் ஒரு சில தெரிந்த நபர்களோடு அனு. நாடுதழுவிய ரீதியில் மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியும் பொறியியலாளர்கள்,தொழில் நுட்பவியலாளர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்றிற்காக சென்றிருந்தாள் அனு. அவளது தொழிற்சாலையிலிருந்து அவளோடு ஐவர், அவர்களில் ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்கள்.

நேரம் சரியாக 6:30 ஐ காட்டுகிறது கடிகாரம். உணவுப்பகுதியின் மூடப்பட்டிருந்த, இரண்டு பெரிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டு குறுக்கே சட்டங்கள் இடப்பட்டிருந்த அந்த கதவுகள் திறக்கப்படுகின்றன. வெயிற்றர் ( உணவு விடுதி மேசைப் பணியாளர்) போலும், நல்வரவு என்று கூற எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக உள் நுளைகின்றனர்.

இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்ட அந்த உணவுச் சாலையின் முன் பகுதியின் நடுவே ஓர் வட்ட மேசை, மரத்தினால் செய்யப் பட்டது போலும், மேசையின் நடுவே ஒரு கம்பம் மேல் முகடுவரை( Siling) செல்கின்றது. அந்த மேசையில் விதம் விதமான பழ வகைகள் சிறு சிறு தட்டுக்களில் காட்சியளித்தன. சுவர் ஓரங்களை ஒட்டியதாக இரு மருங்கிலும் அமைக்கப்பட்டிருந்தது இடுப்பளவு உயர்த்தில் பெஞ்ச், அவற்றில் தனித்தனியே திறந்த பெட்டிகள் போன்று பிரிக்கப்பட்டு உணவுப் பண்டங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சிறு வயதில் கண்காட்சியை பார்வையிடச் சென்ற நினைவை மனதில் நிலை நிறுத்திச் சென்றது அந்தக் கணப்பொழுது.

பதப்படுத்தப்பட்ட மீன், இறைச்சி வகைகள், நன்கு அவிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, அரைத்த இறைச்சியில் உருண்டையாகவும், சதுரமாகவும் செய்யப்பட்ட உணவு, அவற்றோடு இங்கு கடல் உற்பத்தியில் பிரபல்ஜம் வாய்ந்த சல்மன் எனப்படும் உடன் மீன். இவை யாவும் சூடாக இருந்தன. மறு பக்கத்தில் வித விதமான சலாட் வகைகள், ஒலிவன்காய், கரட், பீற்றூட், என இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். வரிசையில் சென்று கொண்டிருந்தவர்கள் இடம் மாறி அங்கும் இங்குமாக நகர்ந்து தமக்கு பிடித்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த உணவுச்சாலையின் பின் பகுதியில் அதிகமாக நீள்சதுர மேசைகளும், ஒருசில வட்ட மேசைகளும் போடப்பட்டு,வெள்ளைத்துணியில் விரிப்பு இடப்பட்டிருந்தது, நடுவில் மெழுகுவர்த்திவிளக்கின் ஒளிச்சுடர் மின்னிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கதிரையும் இடப்பட்டிருந்த இடத்திற்கு நேராக கத்தி, முள்ளுக்கரண்டி,கரண்டி,குழிகளிக்( dessert) கரண்டி என்பன சற்சதுர வெள்ளை துணியில் சுற்றப்பட்டு மேசையில் வைக்கப்பட்டிருந்தது, அதன் அருகில் ஒரு வைன் கண்ணாடிக் குவளை( glass), நீர்க்குவளை, அதைவிட சிறு பீங்கான் கோப்பையுடன் கூடிய தேநீர்க்குவளை என்பன காட்சி கொடுத்தன.

முட்டைபோன்று வடிவமைப்புடைய அந்த உணவுச் சாலையில் அனுவும் அவளது குழுவினரும் சாளரத்தையொட்டியதாக இருந்த ஒர் நீள்சதுர மேசையை தேர்ந்தெடுத்து அமர்ந்தனர். இவர்களுடைய மேசையில் இரண்டு கதிரைகள் வெற்றிடமாக இருப்பதைக் கண்ட, வேறு ஒரு தொழிற்சாலையிலிருந்து வந்த இரு அழகான இளம் பெண்களும் வந்து அவற்றில் அமர்ந்து கொண்டனர். எல்லோரும் கல கல என்று பேசி சிரித்துக் கொண்டு அதே நேரம் உணவை ரசித்து ருசித்து மென்று கொண்டிருந்தார்கள்.

அனு இலங்கையை சேர்ந்தவள். அவளோடு வந்திருப்பவர்கள் எல்லோரும் நோர்வே நாட்டைச்சேர்ந்தவர்கள். எப்பொழுதெல்லாம் இவ்வாறு கருத்தரங்கு, கொண்டாட்டம் என்று வருகிறதோ, அப்போதெல்லாம் தான் தனித்துவிடப்பட்ட வெறுமையை உணர்பவள். ஏனெனில் வெள்ளைக்காரர்கள் என்றால் ஆண் பெண் என்ற பேதமையின்றி மது அருந்துவார்கள். ஆனாலும் அதிலும் ஒரு நாகரீகத்தன்மை இருக்கும். அளவோடு ஓரிரு குவளை எடுத்துக் கொள்வார்கள். எப்படி அந்தச் சங்கடத்தை சமாளித்துக் கொள்வது என்பதுதான் அனுவின் சிந்தனை முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும். ஏனெனில் சிலர் ஏன் நீ வைன் குடிப்பதில்லையா? என்ற கேள்வியையும் தாண்டி அதற்கு என்ன காரணம் என்றும் துருவிக் கேட்கக் கூடும் என்ற அச்சம்தான்.

இன்றும் அப்படித்தான், கண்களை உருட்டி சாளரத்தினூடே இரவின் மின்விளக்கின் ஒளியில் பட்டுத்தெறிக்கும் அந்த பழுத்த மஞ்சல் நிற இலைகளை பார்த்து ரசித்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் இருப்பது ஒர்ஜான் என்னும் ஓர் இளம் ஆண். ஒரு வருடத்திற்கு முன்புதான் பொறியியல்கல்லூரி படிப்பை முடித்து, அனு வேலை பார்க்கும் மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் பகுப்பாய்வு பிரிவில் இணைந்து கொண்டவன். எப்போதாவது அருமையாக அனுவின் அலுவலகத்திற்கு ஏதாவது ஆவணங்களில் கையெழுத்துவாங்க வந்து போவான். ஒரு வணக்கம் அல்லது ஆவணங்கள் சார்ந்த கேள்வி பதில்கள் அவ்வளவுதான். அதைவிட அவன் பற்றி வேறு எதுவும் தெரியாதவள் அனு. மிக அமைதியான சுபாவம். பேச்சுக் குறைவு என்று சொல்லலாம்.

இப்பொழுது இரண்டு மூன்று வெயிற்றர்கள் வலது கையில் முழங்கையிற்கும் மணிக்கட்டிற்கும் இடையில் நீள் சதுரமாக மடிக்கப்பட்ட வெள்ளை துண்டை போட்டுக் கொண்டு, ஐந்து விரல்களாலும் வைன் போத்தலை இறுகப் பிடித்துக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அனுவுக்கு இதயம் லேசாக படபடக்க தொடங்குவதை உணர முடிகின்றது. வந்தவர்கள் ஒவ்வொரு மேசைக்கும் பிரிந்து சென்று, யாருக்கு வைன் வேண்டும் எனக் கேட்டு கேட்டு குவளைகளில் ஊற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

வெயிற்றர் அனுவுக்கு பக்கத்திலிருந்த ஒர்ஜானை நெருங்கி. “ வைன் ஊற்றவா?” என்று கேட்க, “இல்லை எனக்கு வேண்டாம் நன்றி” என்கிறான் அவன். அருகிலிருந்து இதை அவதானித்துவிட்ட அனுவுக்கு உள்ளூர ஓர் மகிழ்ச்சி, தான் தனித்துவிடப்படவில்லை என்பதை உணர்கிறாள். வெயிற்றர் அவளிடம் வந்து கேட்டபோது “ வேண்டாம் நன்றி” என சற்று உற்சாகத்தோடு கூறுகின்றாள். அந்த மேசையிலிருந்த ஏனைய குவளைகளனைத்திற்கும் வைன் ஊற்றப்பட்டுவிட்டது.

அனுதான் மிகவும் சாதாரணமாக ஒர்ஜானைப்பார்த்து கேட்டாள் “ ஏன் நீர் வைன் வேண்டாம் என்று மறுத்தீர்? மகிழூந்தில்(கார்) வந்தீரோ? இவள் இப்படி கேட்டதற்கு காரணமுண்டு. ஏனெனில் மற்றைய எல்லோரும் வைன் குடிப்பதற்காகவே மகிழூந்தை வீட்டில் விட்டு விட்டு பேரூந்திலேறி வருபவர்கள்.ஒரு வேளை இவனுக்கு இன்று பேரூந்து வசதி இல்லையோ என்று நினைத்துத்தான் கேட்டாள் அவள்.

அதற்கு அவனிடமிருந்து வந்த பதில் “ இல்லை நான் மது அருந்துவதில்லை” அனுவுக்கு இது ஒரு அபூர்வமான பதிலாக இருந்தது. அனுவின் கண்கள் அகல விரிந்ததை அவதானித்துவிட்ட சக பணியாளர்கள், சிரித்துக் கொண்டே. “உனக்குத்தெரியாதா? அவன் தேனீர், கோப்பி என்பனவும் குடிப்பதில்லை. இனிப்பு பண்டங்களும் சாப்பிடுவதில்லை என்றனர்.

அனுவிற்கு இப்பொழுது ஆர்வக் கோளாறு. “ நாங்கள் ஐரோப்பாவில் பிறந்தவர்கள் கொண்டாட்டங்களுக்கு சென்றால் வைன், விஷ்கி,பியர் இப்படி குடிக்க வேணும், இல்லாவிட்டால் எங்களை மதிக்க மாட்டார்கள்” என்று கூறும் தமிழ் சமுதாய பிள்ளைகளும்.

“ நாங்கள் இப்ப வெளிநாட்டில இருக்கிறம் மது அருந்தினால்த்தான் மரியாதை” என்று கூறும் பெரியவர்களையும் ஒரு முறை நினைத்துப்பார்த்துவிட்டு

“ நீ முன்பு எப்போதாவது மதுபானங்கள் சுவைத்துப்பார்த்ததுண்டா?” என்று கேட்டாள். “இல்லை ஒருபோதும் இல்லை” என்றவனை அனுவும் விடவில்லை. “ அப்போ உன் வீட்டில் ஒருவரும் குடிப்பதில்லையா? “

“நானும் என் தம்பியும் மது அருந்துவதில்லை” என் அம்மா அப்பா குடிப்பார்கள், ஆனால் எப்போதாவது அருமையாகத்தான்” என்றான்.

அனுவுக்கு ஒரு சந்தேகம். ஒரு வேளை இவன் கிராமத்திலிருந்து வந்தவனோ! கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சில வேளை வித்தியாசம் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு அதையும் கேட்டுவிட்டாள் அவனிடம்.

அவன் சிரித்துக்கொண்டே “இல்லை, நான் பிறந்து வளர்ந்தது நகரத்திலிருந்து ஒரு மணித்தியாலத்தில் தொடரூந்துமூலம் சென்றுவிடக்கூடிய இடம்தான். அங்கெல்லாம் நகரத்தைவிட கூடுதலாக குடிப்பார்கள் என்றான்.

அனுவின் வாய் இன்னும் கிளறுவதை நிறுத்தவில்லை. “ இவ்வாறான தருணங்களில் மற்றவர்கள் குடிக்கும்போது நீ எப்படி சமாளிப்பாய்?” என்று தொடர்ந்தாள். அதற்கு அவன்

“நான் படிக்கும் காலத்தில் தங்குமிடவிடுதி ( Hotel ) ஒன்றில் சமையல்காரனாக வேலை பார்த்தேன். அங்கே எங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது. கொண்டாட்டங்கள்( party) என்று வரும்போது நானும் கலந்து கொள்வேன். ஆனால் மது அருந்தியவர்கள் எப்பொழுது கூடுதலாக கதைக்க தொடங்குகிறார்களோ அப்பொழுது அங்கிருந்து சென்றுவிடுவேன்” என்று முடித்தான்.

“ சக நண்பர்கள், பணியாளர்கள் எப்படி இதை புரிந்து கொண்டார்கள்? என்ற அனுவின் கேள்விக்கு
“ இது வரை என்னை யாரும் தொந்தரவு செய்ததில்லை. விருப்பமில்லை என்றால் அதற்கு மரியாதை தருகிறார்கள்” என்று சொன்ன அவனைப் பார்த்து ஓர் நின்மதி பெருமூச்சுவிட்டாள் அனு.

அன்றைய நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்ததற்கு அமைவாக, ஒரு ஆணும் பெண்ணும் கிற்றார் வாத்தியத்தோடு உணவுச் சாலைக்குள் உள்நுளைகின்றார்கள். அங்கு ஓர் ஓரமாக மேடைபோன்று இருந்த இடத்தில் நின்றுகொண்டு தங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். அப்பொழுது அந்த ஆண் கூறியதாவது “ நான் சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டவன், கிற்றார் வாத்தியத்தை முறைப்படி பயின்றேன். இசையில் ஈடுபாடுடைய ஒருவரை என் துணையாக ஏற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். இசைக்கல்லூரியில் படிக்கும் காலத்தில் இனிமையாகப் பாடும் இவள்பால் ஈர்க்கப்பட்டேன். இப்போது நாங்கள் பாடும் ஜோடிகள்” என்று சொல்லி தன் அறிமுக உரையை முடித்துக்கொண்டபோது அதற்கு ஆமோதிப்பதுபோல் ஓர் மல்லிகைப்புன்னகையை உதிர்த்து தலைவணங்கி பின் பாட ஆரம்பித்தாள் அந்த இளம் பெண். மெல்லிசைமன்னன் இசைப்பதுபோல் அவன் கிற்றாரை தன் விரல்களால் தீண்டிக் கொண்டிருந்தான்.

இசையும் சுவையும் கலந்த அந்த மாலை வேளையை பரிசளித்த அந்த இறைவனுக்கு தன் மனதுக்குள் நன்றி கூறினாள் அனு.

“ஒருவர் மனதை கட்டுப்படுத்துவதற்கு சூழலும் முக்கியம். எப்பொழுது ஒருவரது விருப்பங்களுக்கு அவர்களைச் சூழ உள்ளவர்கள் மதிப்பளிக்க கற்றுக் கொள்கின்றார்களோ, அன்றுதான் சமூகத்தில் மாற்றமும் ஏற்படும்”

- 14.ஐப்பசி.2019 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு அழகான குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஓர் ஆண் பிள்ளை என வீடே குதூகலம்தான். குட்டி கண்ணனுக்கு வயது ஒன்பதுதான் அவன்தான் வீட்டில் கடைக்குட்டிப்பிள்ளை. அவன் அக்காமார் அவனைவிட இரண்டும் மூன்றும் வயதே மூத்தவர்கள். கண்ணனுக்கு ஆருயிராய் ...
மேலும் கதையை படிக்க...
இன்று திங்கட்கிழமை, அதிகாலை நேரம் 6:30 மணியிருக்கும் அவசர அவசரமாக 6:35 ற்கு என் வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் இருக்கும் பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஒஷ்லோ(Oslo) தலை நகரம் நோக்கி புறப்படும் பேரூந்தை பிடிப்பதற்காக வெளிக்கிட்டுக்கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு வீடு இரண்டு மகிழூந்து, ...
மேலும் கதையை படிக்க...
அவனுக்கு இப்போது வயது முப்பது. நல்ல குண்டுத்தோற்றம். சுமாரான உயரம். என்றும் புன்னகை பூத்த முகம். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் அவனைத் தேடி அவன் அலுவலக அறைக்கு அடிக்கடி சக பணியாளர் கூட்டம் அலை மோதும். காலையில் கண்டவுடன் ...
மேலும் கதையை படிக்க...
ஒஷ்லோ மாநகரம் பல்லின மக்களை உள்வாங்கி தனித்துவமாய் ஓங்கி நிற்கின்றது நோர்வே நாட்டில். நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்தவர்கள் முதலாம் தலைமுறையாகவும், இரண்டாம் மூன்றாம் தலைமுறையாகவும் வசிக்கும் இந்த நாட்டில்தான் லவனி பிறந்தாள், வளர்ந்தாள், படித்தாள், பட்டமும் பெற்றாள் என்பது அவளுக்கே உரிய ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு மாலை வேளை, அவசர அவசரமாக பணியிலிருந்து வந்த வசுந்தரா விறு விறுவென்று சமைக்கத் தொடங்கினாள். இரவு உணவைப் பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டு அவர்களை நேரத்தோடு படுக்க வைத்தாள். தானும் கணவரோடமர்ந்து உரையாடிக்கொண்டே உணவை மென்று சுவைத்தாள். ஆனாலும் உணவு தொண்டைக்குள் ...
மேலும் கதையை படிக்க...
கண்ணனுக்கு வைரஸ்
இப்படியும் மனிதர்கள்…
அவனுள் மறைவாக…!
ஐரோப்பாவில் ஜாதிக்கலவரம்!
வசுந்தரா!

அவனும் மதுவும் மீது 2 கருத்துக்கள்

  1. ஜீலன் says:

    சிறப்பான கருத்து.. சூழல் வாழ்வில் மிக முக்கிய தாக்கத்தை செலுத்துகிறது..

  2. சியாமினி says:

    அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)