Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அழைப்பு

 

தொலைதூர அருவியின் மெல்லியச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே விமலனுக்கு விழிப்புத் தட்டி விட்டது. கட்டிலைத் தடவியவாறே தலையணையின் கீழிருந்த அலைபேசியை எடுத்து மணி பார்த்துக் கொண்டான். சரியாக 7.45. மின்விசிறி அவனுக்கு நேராக இயங்கி கொண்டிருந்தாலும் காலை குளிரையும் மீறி குளித்து துவட்டியதுப் போல் உடல் வேர்த்திருந்தது. அப்படியே கண்கள் மூடி படுத்திருந்தான். கண்களை திறக்க முடியாதது எரிச்சலாக இருந்தது. லட்சுமி குளித்துக் கொண்டிருக்கும் சத்தம் இப்போது வேகமாகவே கேட்கத் தொடங்கியது.

காலை நான்கு மணிக்குதான் கண்ணயர்ந்தான். ஹெமிங்வேயில் கொஞ்சம் அலைந்து கொண்டிருந்தான். மனம் ஒன்று கூட மறுத்தது. பிறகு கந்தர்வனின் முழு தொகுப்பையும் கையிலெடுத்தான். ‘சனிப்பிணத்தை’ பாதியிலேயே நிறுத்திவிட்டு ‘பூவுக்கு கீழே’ படிக்கத் தொடங்கினான். அச்சிறுகதையைப் படித்து முடித்ததும் குரோசவாவின் ‘கனவுகள்’ பார்க்க வேண்டும்போல் இருந்தது. அதுவும் கடைசிக் கனவான ‘இயற்கை கிராமத்தையே’ மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தான். குறைந்தது இருபது தடவையாவது இருக்கும். குறிப்பாக இறுதி சடங்கின் நடனத்தில் ஒலிக்கும் இசை அவன் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழியச் செய்தது. அவனுக்கு இப்போதெல்லாம் கனவுகளே வருவதில்லை.

எட்டு வருடங்களுக்கு முன் பல்கலைக்கழகத்தில் படிக்கும்பொழுது நிறைய கனவுகளோடுதான் இருந்தான். பெரும்பாலும் பெண்களே அவன் கனவுகளை ஆக்கிரமித்திருந்தனர். அதனூடே அவனுக்கு பாதி மகிழ்ச்சியும் பாதி பயத்தையும் தந்த ஒரு கனவு தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. அதுதான் முழுநேர தமிழ் எழுத்தாளனாகும் கனவு. அப்போதெல்லாம் அவன் கலந்து கொண்ட இலக்கியப் போட்டிகளில் ஏதாவது ஒரு பரிசு கிடைத்துக் கொண்டேயிருந்ததால் எழுத்தாளனாகும் கனவும் வளர்ந்து கொண்டேயிருந்தது. இருப்பினும் யதார்த்தத்தில் இக்கனவு அவனைக் கொண்டு செலுத்தும் திசையை நினைத்தாலே பயமாக இருந்தது. பட்டப்படிப்பு முடிந்ததும் பொறியியல் துறையில் வேலை கிடைத்தபோது நல்லபிள்ளையாக சேர்ந்துவிட்டான்.

வரவேற்பரை கண்ணாடியை மறைத்திருந்த கத்திரிப்பூ திரையை விலக்கினான். இன்னும் சூரியக் கதிரைக் காண முடியவில்லை. பக்கத்து அடுக்குமாடியின் பின்னால் மறைந்திருக்கலாம். கம்பிகளை ஊடுருவி உள்நுழைந்த மெல்லிய குளிர் காற்று விமலனின் முகத்தை தழுவிச் சென்றது. குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்கவில்லை. லட்சுமி குளித்து முடித்துவிட்டதால் மணி 8 என்பதை ஊகித்துக் கொண்டான். சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானத்தில் சீனமுதியவர்கள் கூட்டமாக தைச்சீ செய்துக் கொண்டிருந்தனர். கிட்டதட்ட இரண்டு மாதமாக காலையில் தொடர்ந்து காணும் காட்சிதான் இது. சில இளைய மலாய் பெண்கள் மெதுவேட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். மருந்துக்கும் இந்தியர்களைக் காண முடியவில்லை.

நான்கு வருட தொழிற்சாலை வேலை வளர்த்து விட்ட தொப்பையை தடவிப் பார்த்தான். காலம் விமலனின் உடலை பெருமளவு சிதைத்துவிட்டிருந்தது. ஆறாம் படிவத்தில் 400 மீட்டர் போட்டியை 59 வினாடியில் கடந்தவன்தான். பிறகு பல்கலைக்கழகத்தில் வாசிப்பு பழக்கம் தீவிரமாக பற்றிக் கொண்டதால் உடற்பயிற்சி இரண்டாம் பட்சமாகிவிட்டது. இருப்பினும் அவ்வப்போது ஈடுப்பட்ட மெதுவோட்டமும் உணவுக் கட்டுபாடும் உடல் கட்டுக்கோப்பைப் பாதுகாக்க உதவியது. வேலை உடற்பயிற்சியை மூன்றாம் பட்சமாக்கிவிட்டது. மீண்டும் உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டுமென நினைத்துக் கொண்டான். சுடுநீர் போட்டுவிட்டு ஒட்டப்பந்தயக் காலணியை நோட்டமிட்டான். அடிப்பகுதி வாய் பிளந்திருந்தது.

‘ஒரு உதவி செய்யனுமே கண்ணா?’ இறைஞ்சுகிற தொனியில் கேட்டவாறே பின்னால் நின்றிருந்தாள் லட்சுமி. விமலனுடைய காலணி ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை. போன தடவை சென்றிருந்தபோது, வழியில் பிரதி எடுப்பதற்காக கொண்டு சென்றிருந்த சான்றிதழ் கோப்பை மறதியாக டெங்கிலில் அவள் பெற்றோர் வீட்டிலேயே விட்டு வந்திருந்தாள். அவளுக்கு அச்சான்றிதழ் பிரதிகள் அவசரமாக தேவைப்படுகிறதாம். அவள் இதை சாதாரணமாகவே கேட்டிருக்கலாம். அவன் வீட்டிலிருக்கும் இரண்டு மாதங்களாக அவள் பேச்சு தொனியின் சுருதி பெரிதும் குறைந்துவிட்டிருந்தது. அவள் விமலனுடன் பேசும்போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாகவே இருப்பது அவனுக்கு வேதனையாக இருந்தது. சரி என்று சொல்லும்போது வலிந்து உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டான் விமலன்.

அவன் குளித்துவிட்டு கிளம்பியிருந்த போது லட்சுமி ஓட்ஸை குடித்து முடித்திருந்தாள். அவனுடைய பணப்பை அருகே அவளுடைய இரு ஜோடி தங்கக் காப்புகள் பிளாஸ்டிகில் சுற்றி வைக்கப்பட்டிருந்தன. வீட்டைப் பூட்டும்போதுதான் கிழிந்திருந்த காலணியும் பிளாஸ்டிக்கில் கட்டிவைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான். டெங்கிலில் இருக்கும் மலாய்கார செருப்பு தைப்பவரைப் பற்றி சொன்னாள். அவர் எந்தக் கடையின் முன் அமர்ந்திருப்பார் என்பதோடு மலிவாகவும் இருக்குமெனவும் சொன்னாள். அவள் அலுவலத்தில் இறக்கிவிடும்போது விமலனின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் கொடுத்துவிட்டு விடைப்பெற்று சென்றாள் லட்சுமி.

விமலன் வேலையை விட்ட விதத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. பச்சை விளக்கு வந்தப் பிறகும் எதிரே வாகனங்கள் நின்று விட்டதை உறுதி செய்தப் பிறகே சாலையைக் கடப்பவன் விமலன். எங்காவது உரையாடல் வாக்குவாதமாக மாறத் தொடங்கிவிட்டால் முதலில் அவ்விடத்தை விட்டு அகல்வது அவனாகத்தான் இருக்கும். அவனுடைய முடிவை அறிந்த நண்பர்கள் பலர் ஆச்சரியமும் அதிர்ச்சியிலும் உறைந்திருந்தனர். ‘தமிழ் வீரம்’ மீண்டும் நிலைநாட்டப்பட்டிருப்பதாக உணவு நேரங்களின் போதே உணர்ச்சி பொங்க பேசப்படுவதாகவும் விமலனின் நண்பன் சோமு சொன்னான். இருப்பினும் வேறு வேலைத் தேடிய பிறகு வேலைவிலக்க கடிதத்தை வழங்கியிருக்கலாம் என்ற சோமுவின் வாதத்தில் நியாயம் இல்லாமலில்லை. அது மனதின் அழைப்பு. இம்முறையும் லட்சுமி ஒன்றும் சொல்லவில்லை.

தயங்கி தயங்கித்தான் அடகுக் கடையை அடைந்தான் விமலன். இது இரண்டாவது முறை. போன மாதம் வரை அடகுக் கடையோடு பெயரளவில் தவிர அவனுக்கு வேறு எந்த தொடர்பும் கிடையாது. இந்த மாதம் இதோடு இருமுறையாகிவிட்டது. கடையில் இரண்டு இந்திய பெண்மணிகளும் ஒரு மலாய் பெண்மணியும் உட்காந்திருந்தனர். அனைவரின் முகங்களும் இறுக்கமாக இருந்தன. மற்றவர்களின் இருப்பை உணராதவர்களாக இருப்பதற்காக மிகவும் பிரயாசைப்பட்டுக் கொண்டிருப்பதுபோல் இருந்தது விமலனுக்கு. உறுதியான கம்பிகளால் தடுக்கப்பட்டிருந்த கண்ணாடி அறையில் இருந்த சீனப் பெண்மணியிடம் தங்கக்காப்பைக் கொடுத்தான் விமலன்.

அது அவனுக்கு இரண்டாவது தொழிற்சாலை. மைக்ரோ ‘சிப்’களை தயாரிப்பது அதன் முதன்மையான வேலை. பொறியியலோடு மேற்பார்வையாளர் பணியும் விமலனின் தலையாய கடமையாக இருந்தது. முந்தையது போல இது சீனர்கள் கை ஓங்கியிருந்த மேலைநாட்டு தொழிற்சாலையல்ல. அரசின் முதலீட்டு நிறுவனத்தால் நடத்தப்படுவதால் மலாய்காரர்களின் அதிகாரம் ஓங்கியிருந்தது. விமலனுக்கு இங்கு வேலை மாறி வந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஒப்பீட்டளவில் மலாய்காரர்கள் சீனர்களைப் போல் இனவாதிகள் அல்ல. திறமையானவர்களை அடையாளம் கண்டு முறையான அங்கீகாரம் வழங்குவார்கள் எனபதை அவன் அனுபவத்திலேயே கண்டிருக்கிறான். அவனோடு நேர்முகத்திற்கு வந்திருந்த மூன்று மலாய்காரர்களையும் மீறி அவனுக்குதான் வேலை கிடைத்தது. அவனை நேர்முகம் கண்டவர் மலாய்கார மேலாளரான திரு. தாஜுட்டின்.

எல்லாம் புதிய மலாய் மேலாளர் வரும் வரை சரியாகத்தான் இருந்தது. புதிய மேலாளர் சிடுசிடுவென எரிந்து விழுபவராக இருந்தார். எல்லாம் வேலை சம்பந்தமாகத்தான் என நேர்மறையாக நினைத்துக் கொண்டான். இரவு வேலையின்போது பணியில் கவனம் செலுத்தாமல் தூங்கிவிட்டு காலையில் மோசமான உற்பத்தி கணக்கை காட்டும் சக மலாய்கார நண்பர்களை லேசாக திட்டிவிட்டு மற்றவர்களைத் தாண்டு தாண்டெனத் தாண்டிக் கொண்டிருந்தார். உண்மையில் விமலனுக்கு ஏழிலிருந்து ஏழு காலை-இரவு ஷிப்ட் வேலையே பிடிக்கவில்லை. சூரியன் எழுவதையும் மறைவதையும் காண முடியாத வாழ்க்கையும் தேவையா என நொந்து கொண்டிருந்தான்.

அன்றைய இரவு வேலை முடியும் தறுவாயில் விமலனின் கீழ்நிலை ஊழியன் தூக்கக் கலக்கத்தில் தவறுதலான பட்டனை அழுத்தி மைக்ரோ ‘சிப்’ உடையும்படி செய்திருந்தான். அன்று ஷிப்ட் தொடங்கியதிலிருந்தே பிரச்சனைதான். அவன் பகுதி உற்பத்தி இயந்திரங்கள் நிறைய பழுதடைந்திருந்தன. அவனும் மற்ற ஊழியர்களோடு களமிறங்கி பழுதடைந்த இயந்திரங்களை ஒருவாறு சரிபார்த்து சாப்பிட போகும்போது மணி காலை ஒன்றாகியிருந்தது. உடல் அசந்திருந்ததோடு தூக்கமும் சேர்ந்து கொண்டது. அதோடு இந்தப் பிரச்சனை வேறு. பொதுவாக இத்தகைய தவறுகளுக்கு விரிவான அறிக்கை தர வேண்டும். ஷிப்ட் முடியும் நேரமாதலால் விமலனால் உடனடியாக அறிக்கை தயாரிக்க முடியவில்லை.

எப்போதும்போல அறைக்குள் குதித்துக் கொண்டிருந்த மேலாளர், விமலன் அறிக்கை தயாரிக்கவில்லை என்பதை அறிந்ததும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கத் தொடங்கினார். விமலன் தான் மிகவும் களைத்திருப்பதாகவும் இன்றிரவு அறிக்கையை நிச்சயம் தந்து விடுவதாகவும் பணிவோடு சொன்னான். ‘நான் சொல்வதை நீ கேட்டுக் கொள், அறிக்கை இன்னும் ஒரு மணி நேரத்தில் வராவிட்டால் உனக்கு வேலை போய்விடும், வேலை இல்லாவிட்டால் நீ பிச்சைதான் எடுக்கவேண்டும்’ கத்தினார் மேலாளர்.

நேரே அவன் கணினிக்குச் சென்றவன் தன் வேலை நிறுத்த கடிதத்தை அச்சடிக்கத் தொடங்கினான். பின்னாலேயே வந்த சோமு பொறுமையாக இருக்கும்படி சொல்லிக் கொண்டிருந்தான். விறுவிறுவென கடிதத்தைத் தட்டச்சு செய்து அச்சிட்ட கடிதத்தோடு மேலாளரின் அறையை நோக்கி நடந்தான். ‘நான் சிரமப்பட்ட தோட்டப்பாட்டாளியின் மகன்தான். ஆனால் என் பெற்றோர் கடுமையாக உழைத்துதான் என்னை வளர்த்திருக்கிறார்கள், பிச்சையெடுத்தல்ல’ கோபமாக சொல்லிவிட்டு கடிதத்தை மேலாளரின் மேசையின் மேல் எறிந்தான். கடிதம் மேசையில் பட்டு மேலெழும்பி மேலாளரின் முகத்தை உரசிவிட்டு கீழே விழுந்தது. அதுதான் தமிழ்வீரமாக அங்கு பேசப்பட்டுக் கொண்டிருந்தது.

வங்கியில் ஆட்கள் குவிந்திருந்தாலும் குளிர்ச்சி அதிகமாகத்தான் இருந்தது. அவனது எண் வர இன்னும் இருபது எண்கள் காத்திருக்க வேண்டும். வங்கியில் காத்திருந்தவர்கள் முகங்களில் சொல்ல முடியாத பதட்டம் இருந்தது. பெரும்பாலும் நாகரிக உடையணிந்த சீனர்கள். வரிசை வரிசையாய் போடப்பட்டிருந்த சிவப்பு நிற நாற்காலியில் கைகள் கட்டியப்படி உட்கார்ந்திருந்தவர்களின் கால்கள் ஆடிக் கொண்டிருந்தன.

வீடு மற்றும் கார் கடன் கட்டி இரண்டு மாதமாகிவிட்டது. கார் லட்சுமியின் பேரில் இருப்பதால் வங்கியிலிருந்து அழைத்திருக்கிறார்கள். இம்முறை காரைப் பறிமுதல் செய்யப் போவதாக மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்கள். ‘மூனு வருஷத்தில எப்பவாது லேட்டா கட்டியிருப்பமா? மனுஷனங்களுக்கு மரியாதயே இல்ல’ சொல்லி முடிக்கும்போது லட்சுமியின் குரல் தழுதழுத்திருந்தது.

அதே மாதிரியான வேலை என்றால் வேறிடத்தில் எளிதாக கிடைத்திருக்கும். இனி ஆந்தையைப் போல் விழித்திருக்கும் ஷிப்ட் வேலை செய்யவே கூடாது என முடிவெடுத்ததுதான் இத்தனை காலதாமதத்திற்கு காரணமாகிவிட்டது. அதோடு கங்காணி வேலையும் இனி வேண்டாமென முடிவெடுத்திருந்தான். இரண்டு நேர்முகங்களுக்கு பிறகு இருமொழி அறிவியல் இதழின் ஆசிரியர் குழுவில் வேலை உறுதியாகியுள்ளது. சம்பளம் முன்னைய வேலையுடன் ஒப்பிட்டால் கிட்டதட்ட அறுபது சதவிதம்தான். யோசித்து பார்த்ததில் விமலனுடைய அடிப்படை செலவுகளுக்கு சம்பளத்தில் பாதியே போதும். முழுநேர எழுத்தாளனாகும் கனவு நிறைவேறாவிட்டாலும் விமலனுடைய எழுத்தார்வம்தான் இவ்வேலை கிடைக்க உதவியது. இனி எளிதாகவே சூரியன் எழுவதையும் மறைவதையும் பார்க்கலாம்.

வங்கியை விட்டு வெளியேறியபோது அருகிலேயே மலாய் செருப்பு தைப்பவரைக் கண்டான். காலணி அடிபாதத்தை ஒட்ட எவ்வளவு செலவாகுமென விசாரித்தான். அவர் சொன்ன விலையை கேட்டு அதிர்ச்சியடைந்தான் விமலன். சூரியன் உச்சிக்கு வந்துவிட்டதால் சுற்றிலும் உஷ்ணம் கூடியிருந்தது. பூச்சோங் அசுர வேகத்தில் மாநகர நிலைக்கு வளர்ந்து கொண்டிருக்கும் நிலையைப் பிரதிபலித்தது செருப்பு தைப்பவர் சொன்ன விலை. வாகனங்கள் பைத்திய நிலையில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன. அவனுக்கு மூச்சடைப்பதுபோல் இருந்தது.

விமலன் வருவதை லட்சுமி ஏற்கெனவே சொல்லியிருக்க வேண்டும். வரவேற்பறையிலேயே சான்றிதழ் கோப்பு விமலனை வரவேற்றது. மாமா வெளியே சென்றிருந்தார். தேநீர் வேண்டாமென்று கேட்ட அத்தையிடம் சொன்னான். அமைதி வரவேற்பறையை வியாபித்திருந்தது. அவனாகவே செருப்பு தைக்கும் கடையின் வழியை விசாரித்து வைத்தான். கிளம்ப வாசலை நோக்கி நடந்தவன் திரும்பி அடுத்த மாதம் வேலைக்குச் சேருவதைச் சொன்னான். அத்தை சின்ன புன்முறுவலோடு தலையாட்டிக் கொண்டார்.

புத்ராஜாயாவின் உருவாக்கத்திற்கு பின் டெங்கில் சிற்றூர் தன்மையை இழக்கத் தொடங்கியிருந்தது. பெரிய வியாபார கட்டிடங்கள் அங்கும் இங்குமாக எழும்பத் தொடங்கியிருந்தன. சாலை விரிவாக்கம் காணத் தொடங்கியிருந்தன. டெங்கிலின் கொஞ்சம் உட்புறப் பகுதியில் நான்கு எண் கடையின் அஞ்சடியில் இருந்தது அந்த செருப்பு தைக்கும் கடை. நான்கு எண் கடையில் மூவினமும் வரிசை நின்று தங்கள் அதிர்ஷ்டத்தை காசு கொடுத்துச் சோதித்துக் கொண்டிருந்தனர்.

அந்த மலாய் செர்ப்பு தைப்பவர் நிலைகுத்திய பார்வையுடன் பீடி குடித்தப்படியே அமர்ந்திருந்தார். நான்கு எண் கடையின் பரபரப்பு அவரைக் கொஞ்சமும் தொற்றவில்லை. அன்று அவருக்கு வாடிக்கையாளர்களே இல்லை என்பதை வாடிய அவர் முகபாவனையிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. விமலன் அவர் முன் வந்து நின்றதை உணரவே அவருக்கு சில நொடிகள் தேவைப்பட்டது. விமலன் பிளந்திருந்த அடிபாகத்தைக் காட்டியபோது உன்னிப்பாக காலணியை நோட்டமிட்டவாறே வாங்கிக் கொண்டார்..

புன்முறுவல் கூட செய்யாமல் தன் வேலையைச் செய்யும் அவரை காண விமலனுக்குக் வருத்தமாக இருந்தது. சாணைக் கல்லினால் அடிப்பகுதியைத் தேய்த்தவர் பிறகு பசையைத் தடவி கொஞ்சம் காய்ந்து விட காத்திருந்தார். பிறகு அடிப்பகுதியை அழுந்த ஒட்டினார். விமலனுக்கு அவர் வேலை மிகுந்த திருப்தியை அளித்தது.

‘எவ்வளவு பாக்சிக்?’ என கேட்டுவிட்டுப் பணப்பையை எடுத்தான். ‘கொஞ்சந்தான் அடேக், காசு வேண்டாம்’ என‌ சிரித்து கொண்டே மறுத்தார் பெரியவர். பெருமளவில் வலுவிழந்துவிட்ட கால்களோடு தடுமாறி சென்று காரில் அமர்ந்தான். தலையை ஸ்டேரிங்கில் சாய்த்தபோது உடல் குலுங்கத் தொடங்கியிருந்தது. விமலனுக்கு உடனே லட்சுமியைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது.

- மார்ச் 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
'குமாரு... குமாரு...' பெயரைக் கூப்பிடும் ஓசை சன்னமாகக் கேட்டபோது குமாரின் கண்கள் திறந்து கொண்டன. தலை அசைக்க முடியாத அளவிற்குக் கனத்தது. கண்கள் எரிந்தன. இப்போது குரலோசை இன்னும் வேகமாகக் கேட்டது. குரலோடு கதவு தட்டப்படும் ஒசையும் சேர்ந்து கொண்டது. மெதுவாக ...
மேலும் கதையை படிக்க...
துரை மாமா வேலை முடிந்து வீடுவரை வந்திருந்தார். கதவைத் திறந்ததும் எல்லோரும் திக் பிரமை பிடித்ததைப் போல அமர்ந்திருந்ததைப் பார்த்தார். தோளில் மாட்டியிருந்த பையை மேசையின் மீது வைத்துவிட்டு குவளையைக் கையில் எடுத்த கனம், தடார் தடார் என அதிர்வு. “கேக்குதா? ...
மேலும் கதையை படிக்க...
நான் ரவிகுமார். கொஞ்சம் உயரமாக இருப்பேன். கண்கள் இரண்டும் குழிக்குள் பதுங்கியிருக்கும். வலிமையற்றவன் போல உடலை இயக்கத் தெரியாமல் சோர்ந்திருப்பேன். யாராவது அழைத்தால் நான் பார்க்கும்விதம் எரிச்சல் ஊட்டும்படி இருக்கும். பெரும்பாலும் அழைப்பவர்களை நான் பொருட்படுத்துவதில்லை. எனக்கு நடக்க மட்டுமே தெரியும். ...
மேலும் கதையை படிக்க...
1. தவிப்பெனும் கடல் நடுநிசியில் சலனமற்ற சாலை ஓய்ந்துகிடக்கிறது. அப்பொழுதுதான் நகரத்தினுள் நுழைபவர்களுக்கு யாரோ பேசிவிட்டு மௌனமானது போல தெரியும். இருளில் சொற்கள் கரைந்துகொண்டிருக்கும் உணர்வைப் பெற முடியும். மின்சாரக் கம்பத்தில் வெகுநேரம் களைத்து அமர்ந்திருந்த சிட்டுக்குருவியின் படப்படப்பு மட்டும் அதீத ஓசையாகக் ...
மேலும் கதையை படிக்க...
நெத்திவெள்ளை முன்னே நடக்க ஆரம்பித்திருந்த போது சூரிய ஒளிக்கதிர்கள் இரப்பர் இலைகளை மெல்ல ஊடுருவ தொடங்கியிருந்தது. இதமான வெப்ப ஒளிக்கதிர்கள் காலைக் குளிரில் சுருங்கியிருந்த கருப்பண்ணனின் தோலுக்கு மேலும் இதமாக இருந்தது. எல்லா கொட்டகைகளையும் திறந்து மாடுகள் அத்தனையும் நோக்காலம்மன் கோவிலருகே ...
மேலும் கதையை படிக்க...
அல்ட்ராமேன்
மேம்பாலம்
மோப்பம்
சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்
கருப்பண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)