கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 6,191 
 

கடலின் அலைகளைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். ‘என்னடே இங்க வந்து உட்காந்துட்ட’ என்ற குரல் என்னும் குரல் எப்போது வேண்டுமானாலும் கேட்கும். பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிவராமன் என்னைப் பார்த்து ‘யாரும் கூப்பிடல’ என்றான். மனதை ஒருநிலைப்படுத்தி மீண்டும் அலைகளைப் பார்க்கத் தொடங்கினேன். வெகு தூரத்திலிருந்து ஓடிவரும் அலைகள் கரைக்கு வருவதும் மீண்டும் உள்ளே செல்வதுமாக இருந்தன. முன்பொரு சமயம் இப்படி உட்கார்ந்திருந்தபோது சுந்தரி டீச்சர் சொன்னார், ‘ஒவ்வொரு அலையும் முருகன கும்பிடத்தான் வருது’ என்று. அன்றிலிருந்து இந்த அலைகளைக் காணும்போதெல்லாம் திருச்செந்தூரின் முருகனும் ஞாபகத்துக்கு வந்துவிடுவார். அலைகளைத் திரும்ப அனுப்பியது போல, ஏன் முருகன் வடிவு பெரியம்மையைத் திரும்ப அனுப்பவில்லை எனத் தெரியவில்லை. வடிவு பெரியம்மை. இத்தனை வருடங்கள் கழித்து, திருச்செந்தூர் கடற்கரை மணலில் உட்கார்ந்துகொண்டு வடிவு பெரியம்மையை நினைத்துப் பார்க்கிறேன் என்பதே ஆச்சரியமாக இருந்தது.

காலையில் கோவிலுக்கென்று கிளம்பியபோது, இத்தனை கூட்டம் இருக்கும் என நினைக்கவில்லை. கோவிலின் இருபுறத்திலும் உள்ள கடைகளில் இருந்து எல்லோரும் என்னை அவர்கள் கடைக்கு வருமாறு அழைத்தார்கள். எப்போதும் செருப்பை விட்டுச் செல்லு ஒரு கடையில் செருப்பை விட்டுவிட்டு வெறும் காலோடு நடந்தேன். சிமிண்ட்டு தரையில் பரவிக்கிடக்கும் மணற்துகள்களில் நடக்கும்போது ஒருவித புல்லரிப்பு ஏற்பட்டது. காலைத் தேய்த்துத் தேய்த்து நடந்தேன். இதுபோன்ற தரைகளில், அதிலும் கோவில் தரைகளில் நடக்கும்போது கால் அரிக்கத் தொடங்கிவிடுகிறது என்பது நினைவுக்கு வந்தது. இந்த மாதிரி எப்போதோ நடந்திருப்பது போலத் தோன்றியது. எதிரே தூணுக்குப் பின்னிருந்து ஒரு சிறுமி இப்போது ஓடுவாள் என நினைத்தேன். அப்படி யாரும் ஓடவில்லை. இதுவும் அடிக்கடி நடப்பதுதான். நான் நடக்கும் என்று நினைக்கும்போது சரியாக அந்த நொடியிலிருந்து அது நடக்காமல் போயிவிடும்.

தனியாகக் கோவிலுக்கு வருவது ஒரு வித அலுப்புதான். நானும் சிவராமனும் திருநெல்வேலியிலிருந்து ஒன்றாகத்தான் கிளம்பி வந்தோம். பஸ் ஸ்டாண்டியில் இறங்கியவன், ‘இதோ வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனான். ஆளைக் காணவில்லை. வெளியே நின்றுகொண்டிருப்பதற்குப் பதிலாகக் கோவிலுக்குள் சுற்றலாம் எனத் தீர்மானித்து உள்ளே நடந்தேன்.

கோவில் வாசலில் ஈசல்போல ஐயர்கள் ஓடிவந்தார்கள். இந்த ஐயர்களைப் பற்றி சிவராமன் பல கதைகளைச் சொல்லுவான். அவனுக்கு எப்படி இந்தக் கதைகளெல்லாம் தெரியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் கதைகள் சுவாரஸ்யமாக இருக்கும். ஹிப்பித் தலை ஐயரைப் பற்றி அவன் சொன்ன கதையை என்றைக்கும் என்னால் மறக்கமுடியாது. எல்லோரையும் விலக்கிவிட்டு உள்ளே நடந்தேன். சட்டையைக் கழற்றிவிட்டுக் கோவிலுக்குள் செல்லவேண்டும். இன்னும் ஒரு ஐந்து நிமிடம் வெளியில் நிற்கலாம் என்று ஓரமாகச் சென்று நின்றேன்.

கோவில் வாசலிலிருந்து கூட்டம் கூட்டமாக உள்ளே வந்துகொண்டே இருந்தார்கள். எல்லோரையும் சுற்றிலும் ஒரு கூட்டம். தூரத்தில் உள்ள திறந்த கல் மண்டபத்தின் கீழே அமர்ந்து நிறைய பிச்சைக்காரர்கள் வருவோர் போவோர் எல்லோரிடத்திலும் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார்கள். சிவராமனை போனில் அழைத்தேன். வந்துகொண்டே இருப்பதாகச் சொன்னான். ஹிப்பி ஐயர் போன் நம்பர் தரட்டுமா என்றேன். மயிரு என்று திட்டவும் சிரித்துக்கொண்டே போனை வைத்தான்.

எவ்வளவு நேரம் இப்படியே நிற்பது என்று தோன்றவே, மெல்ல நடந்து கல் மண்டபத்தின் படிகளில் சென்று அமர்ந்தேன். அலைகளின் சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. கோவிலின் உள்ளே இருக்கும் ஒரு சிறுதுளையின் வழியே காதை வைத்துக்கேட்டால் ஓம் ஓம் என்று அலைகள் சொல்வதாகக் கேட்கும். எனக்கு இப்போதே அலைகள் ஓயாமல் ஓம் என்று சொல்வதாகத்தான் தோன்றியது. காலில் ஒட்டிக்கொண்டிருந்த மண் துகள்களைத் தட்டினேன். சில மணற்துகள்கள் கீழே விழவே இல்லை. சுண்டல் விற்கும் பையன் ஓடிவந்து சுண்டல் வேணுமா எனக் கேட்டேன். இன்னும் கோயிலுக்கே போலப்பா என்றேன். அவன் அதைக் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. சுண்டலையே நீட்டியபடி இருந்தான். மனம் ஒருநிலையில் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். சில நாள் இப்படி நேர்ந்துவிடுகிறது. எதற்கு என்றே தெரியாமல் ஓர் அலுப்பு. ஒருவித சலிப்பு.

கீழே அமர்ந்திருந்த நிறையப் பிச்சைக்காரர்கள் பிச்சை கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அங்கிருந்து செல்லலாம் என நினைத்து எழுந்தேன். எனக்காவது சுண்டல் வாங்கிக்கொடுப்பா, ரொம்ப பசிக்கி என்று ஒரு குரல் கேட்டது. பிச்சைக்காரியின் குரல். நான் நின்றிருந்த மண்டபத்தின் பின்புறத் தூணுக்குப் பின்னால் இருந்து குரல் வந்தது. தூணைத் தாண்டி பிச்சைக்காரியின் கன்னங்கரிய கால்கள் மட்டும் தெரிந்தன. காலை நீவிக்கொண்டே இருந்தாள் போல. கைகள் தூணுக்கு இப்புறம் வருவதும் போவதுமாக இருந்தன. இபப்டி நிறையப் பேர் கேட்பதுண்டு. எனக்கு காசு வேணாம், இட்லி வாங்கிக்கொடு, பஸ்ஸுக்கு காசில்ல, டிக்கெட் வாங்கிக்கொடு என நிறையப் பேர் கேட்பதுண்டு. பிச்சை என்கிற பெயரில் ஏமாற்றவில்லை என்று மற்றவர் உணரவேண்டும் என்பதற்காகவே கேட்கிறார்களோ? நான் சுண்டல்காரனிடம் கொடுப்பா என்றேன். ஒண்ணு காணாது, ரெண்டு வேணும் என்றாள். திரும்பி, தூணைத் தாண்டி அண்ணாந்து பார்த்தேன்.

கூந்தெல்லாம் நாள் கணக்கில் வாரப்படாமல், கண்கள் இடுங்கி, சுண்டல் கிடைக்கவேண்டுமே என்கிற பதட்டத்தில் இருந்தாள். நாக்கு வெளியில் ஓர் ஓரமாக நீட்டி பல்லால் கடித்துக்கொண்டிருந்தாள். ரெண்டு வேணுமா என்றேன். ஆமா இன்னிக்குப் பொழுது கழிஞ்சது என்றாள். சரி கொடுப்பா என்று சொல்லிவிட்டு, கோவில் வாசலுக்கு வந்தேன்.

அந்தப் பிச்சைக்காரியின் குரல் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவள் கண்களில் தெரிந்தது என்ன என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை. ஏன் அந்தக் கண்கள் இத்தனைத் தூரம் என்னைப் பாதித்தன என்பதும் விளங்கவில்லை. சிவராமன் மொபைலில் அழைத்தான். கோவில் வாசலில் இருப்பதாகச் சொன்னேன். மீண்டும் வந்துகொண்டே இருப்பதாகச் சொன்னான்.

ஏதோ ஓர் எண்ணம் அழுத்த அப்பாவை அழைத்தேன். எடுத்த எடுப்பில், ‘பெரியம்மையப் பாத்தேன்’ என்றேன். எனக்கே அப்போதுதான் உரைத்தது. ஆம், அது வடிவு பெரியம்மைதான். அப்பா சுரத்தில்லாமல், ‘எந்தப் பெரியம்மா, எங்கன பாத்த’ என்றார். ‘வடிவு பெரியம்மை’ என்று சொல்லவும், அப்பாவிடம் பெரிய அதிர்ச்சிக்கான அறிகுறிகள் தோன்றின. ‘வடிவு பெரியம்மையையா?’ என்றார் அப்பா. அடுத்த ஐந்து நிமிடத்தில் அம்மாவின் விசும்பலும் கேட்கத் தொடங்கியது. பாத்திரங்கள் கீழே உருண்ட சத்தமும் கேட்டது. அப்பா, ‘பெறவு கூப்புடுதியா?’ என்றார். நான் லைன்ல இருக்கேன் என்றேன். சிறிது நேரம் கழித்து அம்மா பேசினாள். எங்கடே பாத்த, உனக்கு நினைவு இருக்கா, அவதானா, நெசந்தானா, எப்படி இருக்கா’ என்றெல்லாம் கேட்டாள். நான் சொன்னேன், ‘பெரியம்மையாத்தான் இருக்கணும்.’ ஒடனே கெளம்பவா என்று கிளம்ப முற்பட்ட அம்மாவை தடுத்தேன். அவளை எப்படியாவது வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னாள்.

சிவராமன் வந்துவிட்டான். அவனைக் கோவிலுக்குப் போகச் சொன்னேன். புரியாமல் விழித்தான். ‘நீ போயிட்டு வால, நா வெளிய நிக்கேன்’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் கல் மண்டபத்துக்கு வந்தேன். வடிவு பெரியம்மை சுண்டலை தின்றுவிட்டு, கல்மண்டபத்தின் ஒரு தூணில் சாய்ந்து காலை நீட்டி உட்கார்ந்திருந்தாள். அப்போதும் காலை நீவி விட்டுக்கொண்டிருந்தாள். வெளியே துருத்துக்கொண்டிருந்த நாக்கின் வழியே எச்சில் வடிந்துகொண்டிருந்தது. கிழிந்த சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள். மெல்ல அருகில் சென்று, ‘உங்க பேரென்ன?’ என்றேன். என்னைக் கூர்ந்து பார்த்தாள். ‘நீ ஆருடே?’ என்றாள்.

வடிவு பெரியம்மையின் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடந்ததாக அம்மா சொல்லியிருக்கிறாள். அந்தக் காலத்தில் அந்த ஜில்லாவே அசந்தது, பெரியம்மா பொன் நிறம், பெரியப்பா அதவிட கலரு, நல்ல ஜோடி என்று ஊரே வியந்தது என்றெல்லாம் சொல்லுவாள். அம்மாவுக்கு வடிவு பெரியம்மைக்கு அமைந்த வாழ்க்கையின் மீது கொஞ்சம் பொறாமை உண்டு. அண்ணாச்சி நல்ல மாதிரி என்பார் அப்பா.

ஒங்க பெரியம்மைக்குத்தான் மனசு ஒரு நெலையில இல்ல கேட்டியா, அவளுக்கு என்னமோ பிரச்சினை, என்னான்னு தெரியலைடே, கல்யாணம் ஆனவுடனே பிளள பெத்துடற குடும்பம்டே, நானெல்லாம் மொத மாசமே குளிக்கலை கேட்டியா என்றெல்லாம் வடிவு பெரியப்பாவின் வீட்டில் பேசுவார்களாம். அம்மா சொல்லுவாள்.

குடும்பத்தில் வடிவு பெரியம்மைக்கு மட்டும் நிறைய வருடங்களுக்குப் பிள்ளையில்லை. நான் பிறந்து வளர்ந்து நினைவு தெரிந்து பெரியம்மை பெரியப்பா வீட்டுக்கெல்லாம் போயிருக்கிறேன்.

பெரியப்பா என்னைக் கொஞ்சியதெல்லாம் நினைவிருக்கிறது. பெரியம்மை வெளிப்படையாகக் கொஞ்ச மாட்டாள். நாங்கள் அவள் வீட்டுக்குப் போனால் வகையாகச் செய்துபோடுவாள். புதுத் துணி எடுத்து அனுப்பி வைப்பாள். திடீரென்று பெரியப்பாவுடன் சண்டை என்று நாங்குநேரிக்கு வருவாள். அப்போது நாங்கள் நாங்குநேரியில் இருந்தோம். இரண்டு நாள் புலம்புவாள். பெரியப்பா இல்லாம தோதுப்படாது, அவுக சிங்கம்லா, ஆம்பளையவோ ரோஷமில்லாம இருக்கக்கூடுமா, நாமதான் அனுசரனையா நடந்துக்கணுங்கேன், என்னடி சொல்லுத என்று அவளே என் அம்மாவிடம் பேசிவிட்டு தன் வீட்டுக்குப் போய்விடுவாள். அம்மா நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு அத்தோடு விஷயத்தை மறந்துவிடுவாள்.

ஒருநாள் பெரியப்பா வந்தார். வடிவு பெரியம்மையைக் காணவில்லை என்றார். அன்று இரவெல்லாம் அம்மா அழுதுகொண்டே இருந்தாள். எங்கெல்லாமோ தேடினார்கள். பெரியம்மையைக் காணவில்லை. இத்தாம் பெரிய பொம்பளை காணாம போவாளா, எனக்கு என்னாமாடே செய்யுதுங்க என்று நீட்டி முழக்கினார்கள் பெரியப்பா வீட்டின் பொம்பளையாள்கள். யாரோடயாவது போயிருப்பா என்று ஊரில் யாரும் பேசவில்லை. காரணம் எல்லாருக்குமே பெரியம்மையின் குணம் தெரிந்திருந்தது. கொஞ்ச நாள் பொறுத்துப் பார்த்த பெரியப்பா காசி ராமேஸ்வரம் என்று கிளம்பிவிட்டார்.

எங்கள் பெரிய குடும்பத்தில் வடிவு பெரியம்மையைத் தேடிப் பார்த்தார்கள். பின்பு அவரவர்கள் வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். அம்மாதான் சில இரவுகளில் விசும்பிக்கொண்டிருப்பாள். கந்தரப்பம் செய்யும் நாளில் பாட்டி கொஞ்சம் அழுவாள். இஷ்டமாத் திம்பா என்று சொல்லி ஒரு க்ந்தரப்பத்தை தன் சேலையில் முடிந்து வைத்துக்கொள்வாள். அப்பா அதைக் கண்டும் காணாத மாதிரி போய்விடுவார்.

பெரியம்மையிடம் கேட்டேன். ஏன் சொல்லாம கொள்ளாம போயிட்டீங்க? இருபது வருஷம் இருக்குமா என்றாள். நான் ரொம்ப யோசித்து இருக்கும் என்றேன். இப்ப வந்து ஏம் போனீங்கயேங்கேல. நினைப்பு தட்டமாட்டேங்கே என்றாள். உங்களை எல்லா இடத்துலயும் தேடினாங்க கேட்டேளா என்றேன். நானும் வந்தேம்ல உங்க வீட்டுக்கு. நாங்குநேரிக்கு வந்தேன். அங்க நீங்க இல்ல. அக்கம் பக்கத்துல கேக்க ஒரு மாதிரி இருந்தது, திரும்ப இங்க வந்துட்டேன் என்றாள். மாலதி சித்தி இருக்காவுல்லா. அவுக வீட்டுக்காவது போயிருக்கலாமே. அதே வீட்டுலதான இன்னும் இருக்காங்க என்றேன். அதெல்லாம் விடு. நீ இப்ப என்ன பண்ணுத என்றாள். வாங்க வீட்டுக்கு போலாம் என்றேன். அப்படியா சொல்லுத என்று சொல்லிச் சிரித்தாள். எனக்கு சாப்பாடு வாங்கித்தா என்றாள்.

மணி ஐயர் ஹோட்டலுக்கு போனோம். எல்லோரும் எங்களையே பார்த்தார்கள். வடிவு பெரியம்மை காரணமே இல்லாமல் சிரித்துக்கொண்டிருந்தாள். இங்கேயும் வந்து பிச்சை கேட்டிருப்பாளோ என்று தோன்றியது. அப்பாவை அழைத்தேன். அம்மா இன்னும் அழுதுக்கிட்டு இருக்காளா என்றேன். வடிவு பெரியம்மை, அவ அழுதுட்டுத்தான் இருப்பா என்றாள். அப்பா திடீரென ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார். வேறு வழியில்லாமல் நானும் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினேன். வடிவு பெரியம்மை தக்காளிக் கூட்டை நக்கித் தின்று கொண்டிருந்தாள். அப்பா என்னிடம், அவளை திடுதிப்புன்னு கூட்டிக்கிட்டு வந்துட்டா, உன் தங்கச்சி சம்பந்தாரர்கிட்ட என்னான்னு சொல்றது என்றார். இதில் அவர்களுக்கென்ன பிரச்சினை என்று விளங்கவில்லை என்று சொன்னேன். உனக்குப் புரியாது என்றார். அவளை எத்தனை நாள் இங்க வெச்சிக்கிட என்றார் அப்பா. அத அப்புறம் பாத்துக்கலாம் என்றேன். பாத்து செய் என்று சொல்லி போனை வைத்துவிட்டார். அம்மாவிடம் பேசறியா பெரியம்மை என்றேன். அப்படீங்கயா என்றவள் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.

சிவராமன் மணி ஐயர் ஹோட்டலுக்கு வந்தான். வடிவு பெரியம்மையை எப்படி அறிமுகப்படுத்த எனப் புரியவில்லை. மெல்ல விஷயத்தை விளக்கினேன். ஆச்சரியத்துடன் கேட்டான். இத்தன நாள் இப்படி ஒண்ணு நடந்திருக்குன்னு எங்கிட்ட ஏம்ல சொல்லல என்றான். இது ரொம்ப முக்கியமா இப்ப என்றேன். சரி, மொதல்ல ஒரு ஜவுளிக்கடைக்குப் போய் நல்ல துணி எடுத்துக் கொடுத்துட்டு கூட்டிட்டுப் போவோம் என்றான். அப்போதுதான் கவனித்தேன். ஜாக்கெட்டில் நிறைய கிழிசல் இருந்தது. காலில் முழங்கால் வரை ஏறியிருந்த சேலைக்கீழே ஏதோ ஒரு துணியைக் கிழித்துக் கட்டியிருந்தாள். கையைக் கழுவிக்கொண்டு ஜவுளிக் கடைக்குப் போனோம்.

வடிவு பெரியம்மை கடையை வெறித்து வெறித்துப் பார்த்தாள். சேலை எடுத்துக் கொடுத்தேன். மார்போடு சேர்த்து சேலையை இறுக்கிக்கொண்டாள். மீண்டும் கோவிலுக்கு வந்தோம். கல்மண்டபத்தில் சேலை மாற்ற ஆரம்பித்தாள். ‘பெரியம்மை… இங்கனயே இரி, இதோ வர்றேன்’ என்று சொல்லிவிட்டு, சிவராமனை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றேன்.

சிவராமன் அப்பா சொல்வதில் உள்ள நியாயங்களைச் சொல்லத் தொடங்கினான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. காரணமில்லாமல் அழுகை வந்தது. நேரடியாக என் அத்தானையே அழைத்துக் கேட்டுவிடுவோமா என்றெல்லாம் தோன்றியது. பேங்கில் மேனேஜராக இருக்கும் ஒருவருக்கு இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாமல் போய்விடுமா என்ன? போனை தங்கச்சிதான் எடுத்தாள். முதலில் கொஞ்சம் நேரம் அழுதாள். பின்பு, ‘நீ சொலுத, சரிதாம்ல. ஆனா கல்யாணத்துக்கு முன்னாடியே இதச் சொல்லலைன்னு மாமியாக்காரி ஆடுவாளேன்னு இருக்கு’ என்றாள். எதுக்கும் நீ அத்தான கேட்டுப் பாரு என்றாள். நான் அவரை அழைக்கவில்லை. என்ன ஆனாலும் சரி. வடிவு பெரியம்மையை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய்விடவேண்டியதுதான்.

வரிசையாக எல்லாப் பெரியப்பாக்களையும், மாமாக்களையும் அழைத்தேன். வடிவு பெரியம்மையை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகப்போவதாகச் சொன்னேன். எல்லாரும் முதலில் அழுதார்கள். பின்பு கொஞ்சம் யோசித்தார்கள். எல்லாரையும் திருநெல்வேலிக்கு என் வீட்டுக்கு வருமாறு சொல்லி வைத்தேன்.

சிவராமன் திடீரென்று, ‘எல சொன்னாக் கேளு, இப்படியே போயிடலாம். இது சரிபட்டு வராதுன்னு தோணுது’ என்று சொல்லிக்கொண்டே பின்புறத்தில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டினான். ஒரு துகள் என் கண்ணில் விழுந்து உறுத்தியது. எனக்கும் சிவராமன் சொல்வதுதான் சரியோ என்றுகூடத் தோன்றியது. இன்று நான் திருச்செந்தூருக்கு வரவில்லை என்று நானே நம்பத் தொடங்கிவிட்டால் எப்படி இருக்கும்? கொஞ்சம் யோசித்தபோது, அதிலிருக்கும் குரூரம் உறுத்தத் தொடங்கியது. அலைகளின் சத்தத்தில் காது அடைத்துக்கொண்டபோது, கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. இப்படி உலகின் எல்லாக்குரல்களும் அடைந்துபோனால் நிம்மதியாகத்தான் இருக்கும். எல்லாவித சத்தமும் அடங்கிய பின்பும் சிறிது நேரத்தில் என்னடே இங்க வ்ந்து உட்காந்த்துட்ட என்ற எனது குரல் எனக்குள்ளே ஒலிக்கத் தொடங்கியது போல இருந்தது.

‘ஏல உன்னத்தான்… யாரும் உன்ன கூப்பிடல… திரும்பித் திரும்பிப் பாக்காத… நேரமாயிக்கிட்டு இருக்கு. சொல்லு’ என்றான் சிவராமன். வடிவு பெரியம்மையோடதான் போறோம் என்றேன். சரிதான் என்றான் பதிலுக்கு.

மண்டபத்தில் வடிவு பெரியம்மை சேலையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். வடிவு பெரியம்மையிடம் ‘எல்லாரும் உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்கா கேட்டேளா, வாங்க போலாம்’ என்றேன். ‘உங்கம்மாகிட்ட பேசணும்டே’ என்றாள். என்னவோ பேசிக்கொண்டார்கள். இரண்டு மூன்று முறை வடிவு பெரியம்மையின் கண்கள் கலங்கியதைப் பார்த்தேன். எனது கண்களும் கலங்கின. போனை வைத்துவிட்டு என்னுடன் நடக்க ஆரம்பித்தாள்.

எனக்கு கல்யாணம் எப்போது என்றெல்லாம் கேட்டாள். நானே மறந்து போன உறவுகளையெல்லாம் கேட்டாள். பெரியப்பாவைப் பற்றிக் கேட்கவே இல்லை. பாட்டி செத்தபோது ரொம்ப கஷ்டப்பட்டாளா என்று கேட்டபோது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. பஸ் ஸ்டாண்டுக்கு வந்துவிட்டோம். பஸ் ஏறப்போகும்போது சொன்னாள், ‘நா வல்லை நீ போ. எப்பயாச்சும் தோணுச்சுன்னா நானா வீட்டுக்கு வாரேன் என்ன’ என்றாள். ‘என்ன பெரியம்மை இப்படி’ என்று நான் சொல்லவும், ‘எனக்குப் பழகிட்டுடே, உனக்கெல்லாம் பழகாது கேட்டியா, சொன்னாக் கேளு’ என்றாள். நான் எவ்வளவோ சொல்லியும், எதையும் கேட்டுக்கொள்ளாமல், என்னையும் சிவராமனையும் பஸ்ஸில் ஏற்றிவிட்டாள். ‘ஏன்யா உம்பேர் என்ன சொன்ன… சிவராமனா.. அவன பாத்துக்கடே’ என்றாள் சிவராமனிடம். சிவராமன் அசையாமல் நின்றான்.

பஸ் மெல்லக் கிளம்பும்போது பின்னாடியே ஓடிவந்தாள். கையை நீட்டி கொஞ்சம் பணமிருந்தாக் கொடுடே என்றாள். பையைத் துழவி பர்சிலிருந்த பணத்தையெல்லாம் எடுத்து ஜன்னல் வழியே எறிந்தேன். சிவராமனும் தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் எறிந்தான். பஸ்ஸில் எல்லோரும் விநோதமாகப் பார்த்தார்கள். பஸ் புழுதியைக் கிளப்பிக்கொண்டு திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியில் வந்தது. தூரத்தில் பெரியம்மை பணத்தைப் பொறுக்கிக்கொண்டிருந்தாள்.

– ஜூலை 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *