அலுமினிய தட்டில் அரிசி காய்த்து கொண்டிருந்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 8,151 
 

ஏறத்தாழ எல்லா கிளைகளும் உதிர்ந்த நிலையில் மரங்களிலிருந்தது. வழக்கம் போல் அல்லாமல் வானம் பூமியை பார்த்து கொண்டிருந்தது. சின்னஞ்சிறியதாய் சிறுத்து தெரிந்த வானம் அன்னியப்பட்டு கிடப்பது மாதிரி இருந்தது. கொஞ்ச நாளைக்கு முன்னால் தண்ணீருக்கு பதிலாய் வெயிலை குடித்து கொண்டிருந்தார்கள். நீரின் மாய ஜால வித்தைகளை அவர்கள் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணி விரைவாக நடந்து கொண்டிருந்தது. ஏகதேசம் ஒரு ஊரே காணாமல் போக கூடிய சூழல். பக்கத்து ஊரில் உள்ள மக்கள் கப்பலிலோ அல்லது விமானம் மூலமாகவோ நாட்டை விட்டு காலி பண்ண வேண்டிய நிர்பந்தத்தில் பெட்டி படுக்கைகளை தயார் செய்து கொண்டிருந்தார்கள். வெளியேற முடியாத மக்கள் தண்ணீரை குடித்து கொண்டும் வயிற்றில் களிமண்ணை பூசி கொண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சாவை எதிர் நோக்கியவாறு படுத்த படுக்கையில் கிடந்தார்கள்.

இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை முதலில் விளக்கியாக வேண்டும். அந்த ஊரில் உள்ள மக்கள் மரத்தில் அரிசி காய்த்து கொண்டிருந்ததை எடுக்க போன போது தான் இது நடந்தது,அந்த மரத்தில் காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் ஒரு தடவையும் சரியாக நாற்பத்தைந்து நிமிடங்கள் நாற்பத்தைந்து வினாடிகள் இதனை கூட்டம் கூட்டமாக சென்று மக்கள் நெரிசலில் சிக்கி தான் அரிசியை எடுக்க முடியும். ஒருவர் எவ்வளவு அரிசியை எடுத்தார் என்பதை கணக்கில் கொண்டு அவரிடமிருந்து வரிவசூலிக்கப்படும். மரத்தை சுற்றி முள் வேலி அமைத்து அதில் யவன நாட்டு பயணி ஒருவரை காவலுக்கு நிறுத்தி இருந்தார்கள். அவர் வசூலிக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்கிற ஒப்பந்தத்தில் அடிப்படையில் இந்த பணி நடந்தது.

இதில் மேகமூட்டம் அதிகமான நாள்களில் சூரியன் உதிப்பதும் சூரியன் மறைவதும் தெரிய வாய்ப்பில்லை. ஆகையினால் அந்த நாள்களில் அரிசி மழை பெய்வதற்கான சாத்திய கூறுகளில்லை.

அரிசி காய்க்கும் மரத்தை தயாரிப்பது எப்படி என்பது குறித்து பல்கலை கழகங்களில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மனிதனின் வாழ்வாதாரங்களின் தொடர்புடைய விசயங்கள் ஆகையினால் அந்த படிப்புக்கு மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் சேர்ந்தார்கள். ஏற்கனவே இருந்த வயல்களில் தொழில் சாலைகளும் எலும்பு முறிவு மருத்துவ மனைகளும் , வீடுகளும், கல்வி கூடங்களும் மட்டுமே கட்டப்பட வேண்டும் என்பது குறித்த ஆணை பிறப்பிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கட்டடம் கட்டப்பட்ட வயலில் வைத்து வேளாண்மைத்துறை அமைச்சரின் தலைமையின் கீழ் வெற்றி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வேட்டியும் இலவச கம்பியூட்டர் பெட்டியும் வழங்கப்பட்டது. நவீன தொழில் நுட்ப முறையில் வீட்டு மொட்டை மாடியில் கண்ணாடி பாட்டிலில் வைத்து அரிசி பயிரிடும் தொழில் நுட்பம் கற்று கொடுக்கப்பட்டது. ஓலை குடிசையில் வாழும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலமை கவலைக்குள்ளாகும் சூழ்நிலையில் இருப்பதால் அவர்கள் சாவதற்கு முன்பு நல்ல முடிவு எடுக்கப்படுமென அவர் அறிவித்தார்.

அரிசி சாப்பிடுகின்றவர்களின் நலனை கருத்தில் கொண்டு அலுமினியத்தட்டு ஒன்றை கண்டுபிடிக்கலாமென கருத்து தெரிவித்தார்கள்.அலுமினிய தட்டு குறித்த ஆய்வு ஒரு வேளை வெற்றி பெற்றால் தட்டில் கை வைத்தவுடன் அரிசி வந்து விடும். ஆனால் ஒரு தட்டுக்கு அதிகபட்சம் இரண்டு வருடங்கள் கேரண்டி கொடுக்கலாம். இரண்டு வருடம் முடிந்தவுடன் வேறு தட்டு வாங்க வேண்டும் . இரண்டு வருடத்திற்கு இடையில் தட்டு சரி வர வேலை செய்யவில்லையெனில் தட்டை எக்ஸ்சேன்சில் கொடுத்து விட்டு புதிய தட்டு வாங்கி கொள்ளலாம். ஆனால் இந்த அலுமினிய தட்டு தயாரிக்கும் தொழில்சாலையை உருவாக்க ஐம்பதாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தேவைப்படும் என்றும் அதற்கு குறைந்தபட்சம் இருபத்துஐந்து வருடங்களாவுது மின்சாரம் இலவசமாக தர வேண்டுமென அரசிடம் கேட்டு கொண்டார்கள். எப்படியாவது அலுமினிய தட்டு தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் zyxw என்ற கம்பெனி ஒப்பந்த பத்திரத்தில் கையொப்பமிட்டு வேலைகளும் தொடங்கப்பட்டது.

இதற்கிடையில் பல கோடி மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பெப்ஸி கொக்கோகோலா மாதிரிப்பட்ட பாட்டில்களில் அரிசி ஜீஸ் பன்னாட்டு கம்பெனிகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்த தொடங்கினர். கோதுமை கரும்பு இது மாதிரிப்பட்ட உணவு பொருட்களில் இருந்தும் போதையுடன் கூடிய பானங்கள் தயாரித்து விற்பனை நுகர்வு சந்தையில் மிக குறைந்த சதவீதம் போதையூட்டப்பட்ட ஆனால் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் பயன்படுத்த கூடிய அளவில் உருவாக்கப்பட்டது. இதற்கு பத்து மடங்கு இலாபம் இருப்பதால் விற்பனை டீலர்கள் மற்றும் ஏஜன்சிகள் போட்டி போட்டு வாங்கி நாடு முழுவதும் கொண்டு சேர்த்தார்கள்.

தங்கள் குடும்ப தேவதைகளுக்கு கொடை கொடுத்தால் சரியாகும் என்கின்ற எண்ணத்தோடு பலரும் புறப்பட்டார்கள். ஆனால் பொங்காலை போடுவதற்கு அரிசி இல்லாத சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அதனால் அந்த திட்டம் கை விடப்பட்டது. பிறகு ஊருக்கு ஒரு பானை அரிசி வைத்து விழா எடுக்கப்பட்டது.

ஊரே திரண்டிருக்கும் நடு சாமத்தில் கோவிலில் பன்றி அறுத்து பலி கொடுத்து தீபாரதனை கொடுக்கப்பட்டது. இரு கரம் கூப்பி ஊர் மக்கள் பக்தி பரவசத்தோடு வணங்கினார்கள். அவர்கள் வரிசையாக தீபாரதனையை தொட்டு கண்ணில் ஒற்றி கொண்டிருந்த நேரத்தில் சாமியின் சிரசு வெடித்து சிதறியது. ஊரே ஆச்சரியத்தில் மிரண்டு பார்த்தது. அனைவரின் கண்களும் பிரமை பிடித்தது போல ஆடாமல் அசையாமல் இருந்தது. கொஞ்ச நேரத்தில் வெடித்த சிரசிலிருந்து ஒரு நான்கு கண்கள் உள்ள கறுப்புக் காட்டுப்பூனை உதயமானது. பதி பக்தியோடு பலரும் தரையில் விழுந்து புரண்டு காட்டுப்பூனையை வணங்கினார்கள். பலரும் கோபத்தோடு சிவந்த கண்களுமாய் எங்களின் இந்த முக்கிய பிரச்சனைகளுக்கு வழி என்ன என்று கேள்விக்கணைகளை தொடுத்தனர்.

பேசியது கறுப்பு காட்டுப்பூனை

அன்பானவர்களே , நான் உங்களை எல்லாம் என் உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறேன். என் உயிரை கொடுத்தால் தான் உங்களுக்கு என்னால் உதவி செய்ய முடியும். உங்களை வாழ வைக்க இது கூட செய்ய முடியவில்லை என்றால் நான் குலசாமியாக இருந்தே பலனில்லை என்று சொல்லி கொண்டு கண்ணீர் விட்டு அழுதது. இன்னும் கொஞ்சம் அமைதியாக இருந்து நான் சொல்லுவதை கேளுங்கள். இப்போதிலிருந்து ஒன்றே முக்கால் நாழிகைக்கு உள்ளால் என்னை சுற்றி பச்சை நிறத்தில் தீக்கொழுந்துகள் தோன்றும். உடனே நீங்கள் யாரும் பயப்படவேண்டாம். நான் பச்சை நிற பூனையாகி விடுவேன். அதன் பிறகு பச்சை நிறத்தில் இரத்த வாந்தி எடுத்து கொண்டே தீக்குழியில் குதித்து பச்சை இறைச்சி துண்டமாக மாறுவேன். என் இறைச்சியை புசிக்க ஒரு நீலமும் மஞ்சளும் கலந்த காகம் அழுது கொண்டே ஓடி வரும். தயவு செய்து என் மீதுள்ள அன்பின் காரணமாக அதனை விரட்டி விடாதீர்கள்.அது உங்களுக்கு எல்லா விசயங்களையும் விளக்கி தரும். அது உங்களை காக்க வந்த கடவுள் என்பதை ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். என்று கூறி விட்டு ஒன்றே முக்கால் நாழிகை நேரமானவுடன் தீக்குழியில் விழுந்து உயிரை விட்டது.

இறைச்சியை புசிக்க வந்த காகம்

அனைவரும் அண்ணாந்து வானத்தை பார்த்தபடி இருக்க வெகு தூரத்தில் காகம் கரையும் சத்தம் மட்டும் கேட்டது. கொஞ்ச நேரத்தில் நீல நிறத்தில் இடியும் மின்னலுமாய் வானம் கர்ஜித்தது. அந்த மின்னலுக்குள்ளிருந்து ஒரு நீல நிற காகம் கரைந்து வந்து அவர்களை சுற்றி வட்டமிட்டது. பிறகு தனது கூர்மையான அலகால் பச்சை இறைச்சியை சாப்பிட தொடங்கியது. அது சாப்பிட தொடங்கிய சிலநிமிடங்களில் காகத்தை காணவில்லை .அந்த இறைச்சி துண்டத்திற்குள்ளிருந்து அழகான இறகுகளுள்ள ஒரு வெள்ளை தேவதை தோன்றினாள்.

தேவதை சொன்ன சில குறிப்புகள்

இங்கிருந்து ஏழு மலைகள் தாண்டி போனால் காக்கைகள் வாழும் குகை ஒன்றுள்ளது. அந்த குகையை சுற்றி ஏழு மின்சார வேலிகள் போடப்பட்டிருக்கும் . குகையின் நாற்புறமும் ஒரு கோடி அரக்கர்கள் இரவு பகலாக காவல் காத்து கொண்டிருக்கிறார்கள். குகை வெளியே ஏழு கிலோ மீட்டர் தூரம் வரை தீ எரிந்து கொண்டிருக்கும் இதனை எல்லாம் தாண்டி இரவு ஏழு மணியாகும் போது தான் குகைக்குள் நுழைய முடியும். அப்படி குகைக்குள் நுழையும் பட்சத்தில் ஏழு மாரங்களில் ஏராளமாக காகங்கள் மாங்கனிகளை தின்று சாகாவரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும். அதில் உள்ள ஏழாவது மாமரத்தில் வேர் பகுதியில் தங்க நிறத்தில் மூன்று மாங்கனிகளிலிருக்கும். அதில் நடுவிலுள்ள மாங்கனியை ஏழு லட்சம் உரு செபித்து ஏழு விரலிலிருந்து இரத்த பலி கொடுத்து இரத்தத்தில் ஏழு சொட்டுக்கள் வேரில் பட்டவுடனே மாங்கனி நம் கையில் வந்து விடும். உடனே நம் அனைவரின் பசியும் பஞ்சாய் பறந்து விடுமென கூறியது. ஆகையினால் என்னை வாயாற வாழ்த்தி அனுப்புங்கள் நான் மாங்கனியோடு வந்து உங்கள் கண்ணீரை துடைப்பேன் என கூறியது. அப்பாவி மக்களும் ஒரு விடிவு வாழ்வு கிடைக்காதாவென ஆச்சரியத்தோடு திருநீறு வாரி தேவதையின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தி அனுப்பினார்கள்.

போகும் வழியிலுள்ள சில செய்திகள்

தேவதை சந்தோசம் பொங்க வானத்தில் பறக்க தொடங்கினாள். வானத்தில் பறந்து ஏழு குன்றுகளை ஒன்றன் பின் ஒன்றாக கடந்து போய் பல மாதங்களுக்கு பிறகு நான்காவது குன்றினை வந்தடைந்தாள்.தேவதைக்கு தாங்க முடியாத தண்ணீர் தாகம் எடுத்தது. பக்கத்தில் ஒரு அடர்ந்த காட்டு பகுதியும் ஒரு நீர் வீழ்ச்சியும் கண்ணில் பட்டது. நீர் வீழ்ச்சியை பார்த்தவுடன் தேவதையின் மனம் ஆனந்த தாண்டவமாடியது. உடனே நீர் வீழ்ச்சியில் இறங்கி கால் நனைத்தவாறு அருவி நீரினை அள்ளி அள்ளி குடித்தாள். அவளுக்கு சில மாதங்கள் இந்த நீர் வீழ்ச்சி பக்கத்தில் ஒரு சிறுகுடிசை போட்டு தங்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நமக்கு மிக பெரிய பொறுப்பு இருக்கின்றது. நம்மை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் வயிற்று பசியோடு காத்து கொண்டிருக்கிறார்கள். ஆகையினால்அவர்களை ஏமாற்றி விடுகின்ற பெரிய பாவத்தை நான் செய்து விட கூடாது என்று முடிவெடுத்தாள். இருந்தாலும் சில மணித் துளிகள் இளைப்பாறி விட்டு கிளம்புவோம் என முடிவெடுத்தாள். சிறிது தூரம் காற்று வாங்கி கொண்டே நடந்து போகும் போது அவளின் கண்ணில் ஒரு பெரிய நாவல் மரம் தென்பட்டது. அந்த நாவல் மரத்தின் அருகில் யாரே ஒரு பெண்மணி உட்கார்ந்திருப்பது போல் தோன்றியது. தேவதை அருகில் சென்று அவளை யாரென்று மிக அருகில் சென்று பார்க்கும் போது பஞ்சு போன்ற தலை முடியோடு ஒரு பாட்டி உட்கார்ந்து எதையோ எழுதி கொண்டிருந்தாள். இந்த அடர்ந்த வனாந்திரத்தில் பாட்டிக்கென்ன வேலை என்று தேவதைக்கு தோன்றியது. தேவதை பாட்டியிடம் பேச்சு கொடுத்தாள். பாட்டி தேவதையிடம் எனக்கு தொழில் கவிதை. நான் இந்த நாவல் மரத்துமூட்டில் தினமும் உட்கார்ந்து கவிதை எழுதி கொண்டிருப்பேனென கூறினாள். சரி பசி வந்தால் உணவு என்ன செய்வாய் என்று தேவதை பாட்டியிடம் விசாரித்தது. எனக்கு எப்போதும் பசி வராது. பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை இந்த நாவல் மரத்திலிருந்து ஒரு நாவல் பழம் நான் எழுதும் கவிதை தாளில் வந்து விழும். அந்த பழத்தை எடுத்து சாப்பிட்டால் பனிரெண்டு ஆண்டுகள் பசி இருக்காது. நான் நாவல் பழம் சாப்பிட்டு பத்து ஆண்டுகள் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது என்று கூறியது. அதாவது ஒரு இரவும் பகலும் முடிந்தால் எனக்கு ஒரு ஆண்டு என்று அர்த்தம். அந்த வகையில் எனக்கு இன்னும் இரண்டு இரவுகளும் இரண்டு பகல்களும் இருக்கிறது என்று தனது ஒளி பொருந்திய கண்களால் கூறி விட்டு, பிச்சை புகினும் கற்கே நன்றே என்று எழுத தொடங்கினாள்.தேவதை பாட்டி சொல்லுவதை கேட்டு ஆச்சரிய பெருமூச்சு விட்டு நின்றாள். இருந்தாலும் தேவதை பாட்டியிடம் தான் செல்லுகின்ற நல்ல நோக்கத்தை கூறி விட்டு நிரந்தர பசிப்போக்கியான மாங்கனியை நோக்கி பயணப்பட தொடங்கினாள். பாட்டி தேவதையை வாழ்த்தி வழியனுப்பி வைத்தாள்.

காக்கைகள் வாழும் குகை

ஒரு வழியாக பலவிதமான தடைகளை தாண்டி தேவதை காக்கைகள் வாழும் குகைக்கு அருகே வந்தமர்ந்தாள். அந்த குகையை ஒரு லட்சம் ஜீவராசிகள் காவல் காத்து கொண்டிருந்தது அவள் கண்ணுக்கு தெரிய வந்தது.பக்கத்தில் மெதுவாக போய் அந்த ஜீவ ராசிகளிடம் பேச்சு கொடுக்க தொடங்கினாள். அதில் ஒரு ஜீவராசி பச்சை நிறத்தில் குதிரை தலையோடு அமர்ந்திருந்தது. அது தேவதையின் அழகில் மயங்கி , நாங்கள் பல ஆண்டுகாலமாக , இரவுபகலாக ஊன் உறக்கமற்று வேலை பார்த்து வருகிறோம். எங்களை மீறி இந்த குகைக்குள் நுழைவது அவ்வளவு எளிதான காரியமல்ல. தான் வந்த நல்ல நோக்கத்தை அந்த ஜீவராசியிடன் தேவதை எடுத்து கூறி கண்ணீர் விட்டு அழுது எப்படியாவது எனக்கு உதவுங்கள் என்று வேண்டி மன்றாடியது. தேவதையின் கண்ணீரை கண்டு மனமிரங்கிய பச்சை நிறத்தில் குதிரை தலையோடுள்ள அந்த ஜீவராசி குகைக்குள் நுழைய ஒரு மார்க்கத்தை சொல்லி கொடுத்தது. தினமும் இரவு ஏழு மணியவதற்கு பதினேழு வினாடிகளுக்கு நாங்கள் அனைவரும் தூங்கி விடுவோம் . சரியாக எழு மணிக்கு மறுபடியும் உறக்கம் முழித்து விடுவோம். ஆகையினால் உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் இந்த பதினேழு வினாடிகளுக்குள் குகைக்குள் நுழைய பாருங்கள். ஒரு வேளை நீங்கள் குகைக்குள் போய் மாங்கனியை எடுத்து வருகின்ற வழியில் நாங்கள் உறக்கம் விழித்து விட்டால் என்ன நடக்குமென்று சொல்ல தெரிய வில்லை என்று கூறியது.

இதனை மனதில் வைத்து கொண்டு தேவதை பல இரவும் பல பகலும் போராடி குகைக்குள் போனது. குகைக்குள் போன தேவதை கடைசி வரை திரும்பவே இல்லை. குகைக்குள் தேவதைக்கு என்ன நடந்திருக்கலாமென்று தெரிய வில்லை. குகைக்குள்ளிருந்து தேவதை திரும்பி போகும் போது அந்த மக்கள் தேவதை வரவுக்காக காத்திருப்பார்களா என்றும் தெரியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *