அறிவும் மதமும்

 

தென்காசி அருகே அழகிய சிறிய ஊர் இலஞ்சி.

இலஞ்சியிலிருந்து அந்தக் காலத்தில் ஒருமுறை சென்னைக்கு விஜயம் செய்த ராமபத்திரன், ஒரு டைம்பீஸ் வாங்கிச்சென்று அதை ஆசையாக தன் பாட்டிக்குப் பரிசளித்தார்.

பாட்டி அதற்குமுன் டைம்பீஸ் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. ஆரம்ப முதலே அவள் அதன்மீது சந்தேகம் கொண்டுவிட்டாள். அது விடாமல் டிக் டிக் அடித்தது அவளுக்கு மனச்சமாதானம் தரவில்லை.

டைம்பீஸ் வந்த சில நாட்களில் வீட்டில் ஒரு குழந்தை இறந்துவிடவே, பாட்டி அதன்மீது கடும் கோபம்கொண்டு இந்தத் துக்கத்திற்கு அதுதான் காரணம் என்று சொன்னாள்.

யாரவது வீட்டில் வியாதியடைந்தால் அதற்குக்காரணம் அந்தக் கெட்ட டைம்பீஸ்தான் என்று சொல்லி, பாட்டி அதை வீட்டைவிட்டு வெளியேற்றும் படி அழிசாட்டியம் செய்ய ஆரம்பித்தாள். யாரும் அவள் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதனால், ஒருநாள் கடுப்புடன் அதை அவளுக்குப் பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரன் தோட்டத்தில் தூக்கிக் கடாசிவிட்டாள்.

மறுநாள் காலை அதைக்கண்ட வீட்டுக்காரர் சந்தோஷத்துடன் எடுத்து வைத்துக்கொண்டார். அந்தப் பாட்டியின் மூட நம்பிக்கை அவ்வளவு வலுவாக இருந்தது.

மூட நம்பிக்கைகள் ஒரு பாலாருக்கோ, ஒரு காலத்துக்கோ மட்டும் உரியது இல்லை. இந்த விஷயம் பற்றிப் பேசுவதானால், மனிதனுக்குள் இரண்டு முக்கிய குணங்கள் இருக்கின்றன. அவை இதயமும், அறிவும். இந்த இரண்டுமே வளர்க்கப்பட வேண்டும். ஆனால் ஒன்றின் மதிப்பைக் குறைத்து மற்றதைக் கூட்டி அல்ல.

ஒரு வண்டியை இரண்டு குதிரைகள் இழுப்பதுபோல, அவை இரண்டும் சேர்த்து வைக்கப் பட்டிருக்கின்றன. இதயத்தின் வேலை உணரவும், அன்பு கொள்ளவுமே. ஆனால் அடிக்கடி அது தவறு செய்துவிடுகிறது. அப்போது அறிவு அதன் உதவிக்கு வந்து திருத்துகிறது.

உதாரணமாக மரணப் படுக்கையில் இருக்கும் ஒரு கிழவன், தான் விட்டுச்செல்ல இருக்கும் உறவினர்களுக்காக, நண்பர்களுக்காக, செல்வத்திற்காக அழுகிறான்… ஆனால் அவைகள் சுடுகாட்டுக்கு அப்பால் தன்னைத் தொடர முடியாது; தன் யாத்திரையை தானேதான் தொடர வேண்டும் என்று அறிவு சொல்கிறது.

அறிவின் வேலை பகுத்தறிந்து, நியாயம் தெளிந்து நிதானிப்பது. அதன்படியே விட்டுவிட்டால் சில சமயங்களில் அறிவும் தவறு செய்து விடுகிறது. இதயம் அதைத் திருத்துகிறது. ஆகவே இதயமும் அறிவும் ஒன்றையொன்று திருத்தும் சாத்தியம் வாய்ந்தவை. அது மட்டுமின்றி ஒன்றையொன்று வளர்க்கும் சந்தர்ப்பங்களும் ஏராளம்.

அறிவும் இதயமும் சிறப்பாக ஒருங்கிணைந்ததே ஒரு முழுமையான மனிதன். அவனுக்கு இரண்டோடும் தகராறு இல்லை. இரண்டின் இடமும் வீச்சும் அவனுக்குத் தெரியும். சமூகத்தை சீரமைப்பவர்களே தனி மனிதர்கள்தான்.

மனிதனின் இதயப் பகுதியில்தான் மதம் உண்டாகிறது; அறிவுப் பகுதியில் நாகரீகம் ஏற்படுகிறது. ஒரு தனி மனிதனுக்குள் இதயமும் அறிவும் பரஸ்பரம் எப்படி திருத்திக்கொண்டு, ஒன்றையொன்று வளர்க்கிறதோ; அதேபோல சமூகத்திலும் மதமும் லெளகீக முன்னேற்றமும்; விஞ்ஞானமும் ஒன்றுக்கொன்று துணையாக இருக்க வேண்டியது அத்தியாவசியம். வளரும் நாகரீகத்தை கண்டித்து விட்டு, மதத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பது தவறு.

உயிர் வாழ்தலின் நோக்கம் குருட்டுப்புத்தி விரோத மதமும் அல்ல, அல்லது வறண்ட பகுத்தறிவு விஞ்ஞானமும் அல்ல. அன்பும், ஒளியும், நம்பிக்கையும், அறிவும் பொருந்தி இணைந்து கலத்தலேயாம்… வேதாந்த உச்சநிலை அடையும் மதம்; ஞானத்தில் போய் நிற்கும் விஞ்ஞானம் இந்தக் கலவையின் பூரண அறிவுதான் அன்பு மயம். பூரண அன்புதான் ஞான மயம்.

விஞ்ஞானம் ஆன்மீகத் தன்மையானதாக ஆகவேண்டும்; மதம் அறிவுக்கு இசைவானதாக ஆகவேண்டும். இரண்டும் தம் இடத்தை நிதானித்து அறிய வேண்டும்.

ஒரு மனிதனின் கண்கள் காதுகளுக்கு இடையே தகராறு இருக்கக்கூடாது போல, விஞ்ஞானம் ஆன்மீகத்துக்கிடையேயும் இருக்கக் கூடாது. ஒன்றையொன்று பரஸ்பரம் உதவி வளர்க்க வேண்டும். இருந்தாலும் இந்த இன்ப உறவு அரிதாகத்தான் ஏற்பட்டிருக்கிறது.

சமூகத்தின் ஒரு பக்கப்போக்கின் வளர்ச்சியால் பல புராதன நாகரீகங்கள் அழிந்துவிட்டன. அறிவு சமயத்தில் உணர்ச்சிக்கு உதவி, அதை முன் நடத்திச் செல்லாததால், மனிதர்கள் வெறியர்களாக ஆகிவரும் உதாரணங்கள் எத்தனையோ பார்க்கிறோம். அதேபோல சிறந்த அறிஞர்கள் அன்பும் அபிமானமும் கொள்ள இயலாதவர்களாக இருப்பதையும் பார்க்கிறோம்.

தவிர, சமூக சம்பந்தமான ஆன்மீக இயக்கங்களோடு கூடவே பெரிய அரசியல் ஏகாதிபத்தியங்கள் வீழ்ந்துவிட்டதைப் பார்க்கிறோம். இந்த இரு துறைகளின் தோல்வி ரகசியம், சமூகத்தின் மூளையும், இதயமும் தக்க நேரத்தில் தேவைப்பட்ட அளவு தக்க நேரத்தில் ஒழுங்காக ஒன்றுக்கொன்று குறைகளை நிரப்பி உதவாததுதான்.

தற்கால நாகரீகம் இயற்கையை வென்றுவிட்டதான பிரமை உணர்வில் பெருமிதம் கொள்கிறது. அதன் அற்ப உண்மை வெற்றிகளைச் சொல்லி கர்வப் படுகிறது. வெகு அதிகமாகத் ‘தான்’ என்கிற அகந்தையை வலியுறுத்துகிறது.

இயற்கையின் வெள்ளித் திரையைக்கூட தான் இன்னமும் ஊடுருவிச் செல்லவில்லை. பாண்டவரின் உத்தமப் பத்தினியாகிய திரோபதியின் ஆடையைப் போல், ஒன்றுக்கு அடியில் இன்னொன்றாக பலவும் இன்னும் அதிசயமானதாகவும் இயற்கை அமைந்திருக்கிறது என்பதை அது மறந்து விடுகிறது. அவள் உடைகளைக் களைவது என்பது சாத்தியமாகாத காரியம். ஆழ்ந்து போகப்போக அதிக தடுமாற்றம்தான் அடைகிறாய். நீ உறைக்குள் உறையாக வெளியே பல உருவினாலும் இன்னும் உறைக்குள் உறையாகவே நிறைய இருக்கிறது.

இதைப்பற்றி கவனிக்க இயலாதபடி தற்கால நாகரீகம் அவ்வளவு அகந்தையோடு இருக்கிறது, அதேசமயம் விஞ்ஞானம் படிக்ரமமாக ஆன்மீகப் பாங்கு பெறுகிறது. மதமும் பகுத்தறிவுப் பாங்கான விஞ்ஞான அடிப்படையில் அமைய ஆரம்பமாகி இருக்கிறது. அவைகளிடையே பழைய நாட்களில் தொடந்த போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது. அதை பரஸ்பரம் ஒன்றையொன்று திருத்தி வளர்த்துக் கொண்டிருக்கின்றன. அவைகளின் சங்கமத்தால் வேதாந்த மார்க்கமான லட்சிய சமூகம் எழுவது சாத்தியமாகலாம்…

விஞ்ஞானத்தோடும், நாகரீகத்தோடும் வேதாந்தத்திற்கு சண்டை கிடையாது. வேதாந்தம் சொல்கிறது, “விஞ்ஞான கேளிக்கைகளில் முடிகிற மட்டும் அனுபவி; உலகத்தை வெற்றிகொள்; சாம்ராஜ்யங்களை நிர்மாணி; பூமியைப் பிளந்துவிடு; மின்னல்களையும் பளீரிடச் செய்; நீர் பரப்பைச் சுருட்டு; சூரியனை நிறுத்திப்பார்; புதிய கிரணங்களையும் சிருஷ்டி செய்; அவற்றை வானவெளியில் மிதக்க விடு…

ஆனால் எப்போதும் ஒன்றை நினைவில் இருத்து. அறிவைப் போலவே இதயமும் திருப்தி அடைய வேண்டும். உள்ளத்தின் குரல் கவனிக்கப்பட வேண்டும்.

அன்பு, தயை, தர்மம், மதப்பற்று ஆகிய இயற்கை உணர்வுகளை ஒருபோதும் புறக்கணித்துவிடக் கூடாது. தற்கால நாகரீகத்தின் அபாயம், மனிதன் மேலும் மேலும் தன்னை புறநிலைப் படுத்திக் கொள்ளுதலும்; குடிப்பதும், சாப்பிடுவதும், லோகாய வசதிகளைத் தேடிப் போகுதலுமே வாழ்வின் ஒரே நோக்கம் என்று கருதும் மனப்பான்மை கொண்டிருக்கிறான் என்பதுதான்.

செயற்கையான தேவைகளை தனக்கு உண்டாக்கிக் கொள்கிறான். இயற்கை அல்லாத பசியையும்கூட ஆரோக்கியம் அற்ற சுயநலம் அல்லது விஷத்தன்மையான அதிருப்தி இவற்றால் தன்னை நோய்வாய்ப் படுத்திக் கொள்கிறான்… 

தொடர்புடைய சிறுகதைகள்
(இதற்கு முந்தைய ‘கோயில் விளையாட்டு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ‘யெல்லோ பேஜஸ்’ மூலமாக வெடினரி டாக்டர்களின் சிலரது தொலைபேசி எண்களைத் தேடியெடுத்துத் தொடர்பு கொள்ள முயன்றோம். அன்று தீபாவளி என்பதால் ஒருவரும் கிடைக்கவில்லை. கடைசியில் ‘ப்ளூ க்ராஸ்’ அமைப்பிற்கு ...
மேலும் கதையை படிக்க...
புதிய படமாதலால் தியேட்டரில் நல்ல கூட்டமிருந்தது. எனினும், திரைப் படத்தில் மனம் செல்லாது, முந்தைய தினம் தன் பெற்றோர்களுடன் பார்த்துவிட்டு வந்த பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. இவனுக்கு கோகிலாவை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் பெண்ணின் ...
மேலும் கதையை படிக்க...
மோகனா காலையிலேயே குளித்துவிட்டு பூஜையறையில் நின்றுகொண்டு, “கடவுளே, எனக்கு எப்பத்தான் விடுதலை வாங்கித் தருவே... ரவீஷ் செத்தாத்தான் நான் நிம்மதியா வாழ முடியும். அவனை சீக்கிரம் சாகடித்துவிடு. அது உன்னால முடியலைன்னா என்னையாவது கொன்றுவிடு... தினமும் இந்த நரகவேதனை எனக்குத் தாங்கவில்லை..” ...
மேலும் கதையை படிக்க...
(‘இல்லாள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது.) மனைவி மரகதத்தின் காரியங்கள் முடிந்ததும், மகள்கள் இருவரும் சபரிநாதனை தங்களுடன் வந்து இருக்கும்படி வருந்தி வருந்தி அழைத்தனர். ஒரு மாற்றத்திற்காக ஹைதராபாத் மகள் வீட்டில் சில நாட்களும்; பெங்களூர் மகள் வீட்டில் சில நாட்களும் ...
மேலும் கதையை படிக்க...
சுந்தரேசன்-காமாட்சி தம்பதியினருக்கு அன்றைய தினசரியில் வந்திருந்த விளம்பரம் அதிர்ச்சியளித்தது. அந்த விளம்பரத்தினால் பாதிக்கப் படப்போவது தாங்கள்தான் என்கிற உண்மை அவர்களை உறுத்தியது. ஊஞ்சலில் அமர்ந்து அந்த விளம்பரத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரேசன், “காமாட்சி” என்று தன் மனைவியை அழைத்தார். கையில் ...
மேலும் கதையை படிக்க...
பழுப்பு நிறக் கவர்
எண்ணங்கள் மாறலாம்
விடுதலை
சமையல்காரன்
பொமரேனியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW