அறிந்தும் அறியாமலும்…

 

மற்றவர்கள் பேச்சை நான் எப்போதும் கவனிப்பதே இல்லை. எனக்குத் தொடர்புடையதாக இருந்தால் அல்லது என்னுடன் பேசினால் மட்டுமே அதில் கவனம் செலுத்துவேன். மிக அருகிலிருந்து பேசினால் கூட அதை காது கொடுத்து கேட்க மாட்டேன். பலர் இதற்காக என்னைக் கடிந்து கொண்டிருக்கிறார்கள். என் மேலாளர் கூட போனில் ஏதாவது பேசிவிட்டு அது தொடர்பாக என்னிடம் ஏதாவது கேட்டால் எனக்குத் தலையும் புரியாது வாலும் புரியாது. ஆரம்பத்தில் மேலாளர் என்னுடன் இதற்காகவே மிகவும் சினம் கொண்டிருக்கிறார். ஆனால் பின்னர் அவருக்கும் என் சுபாவம் புரிந்து அதன் பின் பிடித்தும் போய்விட்டது.

அதனால் என் பக்கத்தில் உட்கார்ந்தே பலகதைகளும் ரகசியங்களும் பகிர்வார்கள். அதன் பிறகு என்னை அழைத்து ”இவன பாருடா சரியான பேக்கு. இவன மாதிரி எதையுமே கண்டுக்காம இருந்துட்டா பிரச்சனையே இல்ல” என்று முடிக்கும்போதுதான் அங்கு ஏதோ நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வேன். இப்படியான என் சுபாவம் என்னை பாதித்ததே இல்லை. நான் அதற்காக வருந்தியதுமில்லை. ஆனால் இன்று வருந்துகிறேன்.

ஆஷியின் தொலைப்பேசி சம்பாஷனையை கவனிக்காமல் போனதற்கு மனதிற்குள் குமுறுகிறேன். என்ன நண்பன் நான்? இல்லை, உண்மையில் நாங்கள் இருவரும் நண்பர்கள் இல்லை.ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம், அவ்வளவுதான். இருந்தாலும் எங்கள் அறையில் மொத்தம் மூன்றே பேர்தான் உட்காருகிறோம், இருந்தும் நாங்கள் மூவரும் பொதுவான விஷயங்களைப் பேசிக்கொள்வோமே தவிர நட்புரீதியாக சொந்தவிஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. ஜோசப்புக்கு திருமணம் நடந்தபோது சம்பிரதாய வாழ்த்தைப் பகிர்ந்து கொண்டோமே தவிர உரிமையாக ”ட்ரீட்தாடா” என்றோ ”திருமண புகைப்படத்தைக் காட்டு”என்பது போன்றோ பேசிக்கொண்டதில்லை. உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம் ஆனால் நாங்கள் அப்படித்தான்.

இந்த அலுவலகத்தில் நான் கடந்த ஐந்து வருடங்களாகப் பணிபுரிகிறேன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் ஆஷி வேலையில் சேர்ந்தார். அதற்கு முன்பு அவரிடத்தில் பணியில் இருந்த மணியிடம் கூட நான் அதிகம் வைத்துக் கொண்டதில்லை. ஜோசப் இதற்கு முன் லண்டனில் எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்தான். சமீபமாக ஒரு எட்டு மாதத்திற்கு முன்புதான் துபாய்க்கு அவனை மாற்றினார்கள். அலுவலகம் என்பது நான்கு அறைகள் கொண்ட சிறிய அலுவலகம்தான். முகப்பில் வரவேற்பறையில் வேலையில் இருந்த பெண் உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஒருவாரமாக அலுவலகத்திற்கு வரவில்லை.மேலாளர் துபாயில் இருப்பதே இல்லை. லண்டன், துபாய், இந்தியா என்று பறந்து கொண்டே இருப்பார். நானும் ஆஷியும்தான் பெரும்பாலும் அலுவலகத்தில் இருப்போம். ஜோசப் வெளி வேலைகள் அதிகம் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் வருவார் போவார்.

நானும் ஆஷியும் காலை 9மணிக்கு சரியான் நேரத்திற்கு வந்து விடுவோம். கதவைத் திறக்க எங்கள் கைரேகைகள்தான். ஆனால் சரியாக 5மணிக்கு வீட்டுக்குப் போக மாட்டோம். நாங்கள் மூவருமே அப்படித்தான். ஜோசப் திருமணமான பிறகும் கூட நேரத்திற்கு வீட்டுக்குப் போகிறவரில்லை. ஆனால் அன்று நான் கிளம்பும்போதே ஜோசப்பும் கிளம்பிவிட்டார். ஆஷி கண்ணாடிக்கு அந்தப்புறமிருந்து எதோ விவாதத்தில் இருந்தார். நாங்கள் ‘bye’ என்று கையசைத்தோம் அதற்குக் கூட பதில் சொல்லவில்லை. அதை எதிர்பார்த்து சொல்லாததால் நாங்களும் கண்டு கொள்ளவில்லை. இப்போது இந்த ஒவ்வொரு விஷயமும் என் மண்டையைக் குடைகிறது.

முகம் சிவந்திருந்தவனை ”என்னஆச்சு” என்று கேட்டிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. எனக்கு நினைவிருப்பதெல்லாம் யாருடனோ சத்தமாகக் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததுதான். எதையுமே கவனிக்காத எனக்கும் கூட அவன் பேசியது இடையூறாக இருந்தது. காரணம் அவ்வளவு சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார். ‘விஸ்வரூபம்’ பற்றி ஏதோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார் என்று மட்டும் எனக்குத் தெரியும். ஒருமுறை திரும்பிப் பார்த்ததுதான் தாமதம் தன் கைப்பேசியுடன் பேசிக்கொண்டே‘ மீட்டிங் ரூமுக்கு’ச் சென்று அங்கு உட்கார்ந்து பேசினார். ஜோசப் என்னைப் போல் இல்லை கொஞ்சம் விவரமானவன். அவன் கவனிக்க முற்பட்டிருக்கிறான். ஆனால் அவனுக்குதான் தமிழ் புரியாதே!அதனால் அவன் புரிந்து கொண்டது ஒரு படத்தைக் குறித்துத்தான் ’கேர்ள்பிரண்டுடன்’ ஏதோ சண்டை. இருவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை, அதனால் ஒரு படத்தின் சர்ச்சை அவர்கள் உறவை உலுக்கிக் கொண்டிருந்திருக்கிறது. அது தொடர்பானவிவாதங்கள், சர்ச்சைகள் என்று தொடர்ந்து கொண்டிருந்திருக்கிறது. அதுவும் இவனுக்குப் புரிய காரணம் இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசியதுதான். இதையெல்லாம் இப்போது ஊகித்துச் சொல்கிறான் ஜோசப். அவன் அப்போதே சொல்லியிருந்தாலும் நான் ஒன்றும் தலையிட்டிருக்க மாட்டேன்தான். எதற்காகவோ நான் திரும்பும்போது கண்ணாடிக்கு அந்தப் பக்கம் அவர் பேசிக் கொண்டிருப்பதும் அவர் கண்கள், காதுகள் முகமெல்லாம் சிவந்திருப்பதையும் கவனித்தேன். ஆஷி நல்ல நிறம். ரொம்பக் குளிரென்றாலும் சரி, ரொம்ப வெக்கையாக இருந்தாலும் சரி முகம் சிவந்து விடும். அதனால் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை நான். கருதியிருக்கவேண்டுமென்று இப்போது மனம் அழுத்துகிறது.

கொஞ்சம் ‘டென்ஷன்பார்ட்டி’ ஏதோவொரு காரணத்திற்காகவும் காரணமே இல்லாமலும் கூட அடுத்தடுத்து சிகரெட் ஊதித் தள்ளுவதில் வல்லவர். நேற்று காலையில் வேலைப்பளுவில் மண்டையை உடைத்துக் கொண்டு மூழ்கியிருந்தபோது’ஏதாவது தலைவலி மாத்திரை இருக்கா’ என்று என்னிடம் கேட்டார். இல்லையென்றேன். ச்சே!எங்காவது சென்று வாங்கிக் கொடுத்திருக்கலாமோ, கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்காதோ என்றெல்லாம் இந்த நொடியில் நினைக்கிறேன். 34 வயதில் இப்படியெல்லாம் நடக்குமென்று யார் எதிர்பார்த்தார்கள்? நேற்று மாலை அவர் முகத்தைப் பார்க்கும்போது அதுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்று தெரியாமல் போய்விட்டது.

நான் இன்று காலையில் அலுவலகத்தின் உள்ளே நுழையும்போது ஆஷி தன் இருக்கையில் கண் மூடித் தலையைப் பின்புறமாகத் தொங்கவிட்டவனாகக் கிடந்தான். நான் ஏது இவர் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாரே என்று நினைத்துக் கொண்டே உள்நுழைந்து ‘குட்மார்னிங்’என்றேன். சத்தமே இல்லை.

“தூக்கமா?” என்றேன்.

அதற்கும் சத்தமில்லை. என் கணினியை ‘ஆன்’ செய்து விட்டு மனதிற்குள் ஏதோ ஒரு பயம் பிடிக்க ஆஷியைத் தட்டி எழுப்பலானேன்.

”……..” அசைவுமில்லை.

அவர் மீளாஉலகத்தின் நித்திரையில் இருக்கிறார் என்றுஅறியாமல் உரக்கக் கத்திப் பார்த்தேன் தூக்கம் களையுமென்று. பலனில்லை. மெதுவாக நடுக்கத்துடன் என் விரல்களை அவர் நாசியில் வைத்துப் பார்த்தேன் ‘கடவுளே ஒன்றுமாகியிருக்ககூடாது’என்று பிரார்த்தித்தபடி. இறந்து விட்டிருக்கிறார்!! என்னால் நம்பவே முடியவில்லை. என்ன செய்வதென்றறியாமல் பதற்றமானேன். முதலில் ஜோசப்பை அழைத்தேன். ‘எங்கிருக்கிறாய்’என்று கேட்டேன்.கீழேதான் என்றார். விரைந்து வரச் சொன்னேன் விஷயத்தை விவரிக்காமல். வந்து பார்த்தவுடன் ஒரு அடி பின்னால் ஒதுங்கி நின்று ஓலமிட்டார். ஆஷி காதிலிருந்து இரத்தம் கசிவதைகைக் காட்டித் திணறலுடன் ஏதோ சொன்னார். லண்டனில் இருக்கும் மேலாளரைத் தொடர்பு கொண்டு இது பற்றிச் சொன்னேன். அவரோ ‘இறந்துவிட்டாரா?’ என்று அதிர்ச்சி அடைவதற்குப் பதில்‘அலுவலகத்திலா’என்றுவியப்படைந்தார். உடனே போலிஸுக்கு அழைத்து விபரம் சொல்லி என்ன செய்வது என்று கேட்டு அதன்படி காரியங்களைச் செய்யச் சொன்னார். இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது சம்பிரதாயங்களும் பரிசோதனைகளும்.

என்னையும் ஜோசப்பையும் இன்று முழுக்க போலீஸில் வைத்திருந்தார்கள்.

முகம் தெரியாத இணைய நண்பர்களுடன் முகநூலில் வளைய வரும் எனக்குப் பக்கத்தில் இருக்கும் ஒருவரின் பரிதவிப்பில், பிரச்சனையில் பங்கெடுக்க முடியவில்லை என்ற குற்றவுணர்வில் இருந்தேன். ’பிரைன் ஹாமரேஜ்’அல்லது‘கார்டியாக்அரஸ்ட்’ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க முடியுமென்று ஜோசப் ஊகித்துக் கொண்டிருந்தார்.ஆஷியுடன் பேசிய விஷயங்கள், அலுவலகம் தொடர்பாகப் போட்ட சண்டைகள், பொது விஷயத்தைப் பற்றிய எங்களது விவாதங்கள் எல்லாம் கண்முன் வந்து போய்க்கொண்டிருந்தது. ஆஷியின் முகம் என் கண்சிமிட்டலில் கூட களையவில்லை. ஒருவரின் மறைவு அல்லது பிரிவுக்குப் பிறகுதான் அவர் நம்முடன் எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பது புரியும் போலிருக்கிறது என் மரமண்டைக்கு.

ஆஷியின் மறைவுக்குக் காரணம் வேலைப்பளுவா? சிகரெட்பழக்கமா? அவருடைய முன்கோப டென்ஷனா? அல்லது விஸ்வரூமா? எதுவாக இருந்தாலும் அவர் நல் ஆத்மா சாந்தி அடைய மனதாரப் பிராத்தித்துக் கொண்டிருக்கிறேன்.. 

தொடர்புடைய சிறுகதைகள்
இரண்டு ஆட்கள் கூட சேர்ந்து நடந்து போக முடியாத அந்த ஒடுக்கமான சந்தில் இரண்டு இருசக்கர மிதி வண்டி சாய்த்து நிறுத்தப்பட்டிருந்தன. அதன் சக்கரங்களை நிறைய ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அடி பம்ப்பில் காற்றுக்கு பதில் அன்று அதிசயமாக ஒழுங்காக தண்ணீர் ...
மேலும் கதையை படிக்க...
அவன் சொன்னதே என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவன் சொன்னதில் என் தூக்கத்தையும் தொலைத்து இப்படி விட்டத்தைப் பார்த்து படுக்க வைத்துவிட்டானே? 'நானும் அவனைப் போல் இருந்துவிட முடியுமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்ற நினைப்பே பெரிய நிம்மதியையும் பிரமிப்பையும் தருகிறதே? ...
மேலும் கதையை படிக்க...
மதம் என்பது ஒரு மார்க்கம், வழிகாட்டி, மனிதனை நெறிப்படுத்த என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, என் தோழியுடைய கேள்வியினாலும் திட்டத்தினாலும் நான் திக்கற்று நின்றேன். தனக்குச் சாதகமாக இருக்கும் வரை மனிதன் தான் சார்ந்த மதத்தைப் போற்றுகின்றான். அதனைப் பின்பற்றுவதைத் தம்பட்டமும் ...
மேலும் கதையை படிக்க...
'Money.. Money... Money' இதையே தாரக மந்திரமாகக் கொண்ட கரனுக்கு எல்லாமும் வேண்டும் ஆனால் பணமும் அதிகம் செலவாகிவிடக் கூடாது. அனிதா, கரனுக்கு அப்படியே எதிர்மறையான சிந்தையுடையவள். நாளையென்பது நிச்சயமில்லாத உலகில் சேமிப்பு, பத்திரப்படுத்துதல், கவனத்துடன் பயன்படுத்துதல் என்ற சொல்லுக்கே இடம் ...
மேலும் கதையை படிக்க...
இப்படியாகும் என்று நினைக்கவேயில்லை நான். எதுதான் நான் நினைத்த படியெல்லாம் நடந்திருக்கிறது? இந்த பாஸ்கரும் அந்த பாஸ்கராக இருப்பான் என்று தோன்றக் கூட இல்லை எனக்கு. கல்லூரி முடிந்தவுடனேயே இங்கு வந்துவிட்டதால் ஊர் வாசனையே இல்லாமல் போய் விட்டது. பிடித்தது கிடைக்காது ...
மேலும் கதையை படிக்க...
வேற்று திசை
சுதந்திரம்
சில நேரங்களில் சில மனிதர்கள்
எங்கே அவள்?
சுகுணா என் காதலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW