அரச மரம்

 

முதலில் சில கணங்கள் என்ன பேசுவது என்று மலருக்குத் தெரியவில்லை. முதல்நாள் பேராசிரியரின் உரையைக் கேட்டதிலிருந்து அவர் மீது மலருக்கு அளவுகடந்த மரியாதை உண்டாகி இருந்தது. அவரிடம் மேலும் பேசும் ஆர்வத்தில் அவரது பரபரப்பான அட்டவணையில் எங்களுக்குச் சிறிது நேரம் ஒதுக்கக்கேட்டிருந்தோம். காலையில் என்ன சாப்பிட்டீர்கள்…? இன்றைய உங்களது திட்டம் என்ன…? அண்மையில் என்ன வாசித்தீர்கள் …? என்று மெல்ல உரையாடலைத் தொடங்கி இயல்பான நிலையில் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த மலர் திடீரென்று கேட்டார்

“இந்த அரச மரம் உங்களைச் சங்கடப்படுத்தவில்லையா…?”

ஒரு கட்டில் – அதைச் சுற்றி மூன்றடி இடைவெளி நாற்காலியுடன் கூடிய குட்டி மேசை மிகச் சிறிய குளியல் -கழிவறை – பொருட்கள் வைக்க ஒரு சிறு அலுமாரியுடன் இருந்த அந்த அறையை மூன்று ஸ்டார் ஹோட்டல் தகுதியுடையதாக்கிக்கொண்டிருந்தது வாசலைப் பார்த்திருந்த சற்றுப் பெரிய ஒற்றைச் சன்னல்.

சன்னலை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது அரச மரம். அறைக்குள் நுழைபவர் பார்வை நேர் கோட்டில் சென்றால் அந்த மரத்தில்தான் நிலைகுத்தும்.

கட்டடங்களும் கடைகளும் மக்களும் நிறைந்திருந்திருக்கும் சிராங்கூன் சாலைப் பகுதியில் ஒரு பெரு மரமும் அதன் பசுமையும் மட்டுமேயான வெளிக்காட்சியுடன் அறை அமைவது மிக அபூர்வமானது.

வாசலை அடுத்திருந்த சிறு நடைபாதையைத் தாண்டி அறையின் சுவரோரம் இருந்த மேசையை ஒட்டி இருந்த நாற்காலியில் சன்னலை நோக்கி மலர் அமர்ந்திருந்தார். நான் மேசையில் சாய்ந்து நின்றிருந்தேன்.

கட்டிலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பேராசிரியர் தலையைத் திருப்பிச் சன்னலைப் பார்க்கவில்லை என்றபோதும் அவர் கண்களில் அரச மரம் வந்து போயிருக்க வேண்டும். இரு வாரங்களாக அந்த அறையில் தங்கியிருக்கும் பேராசிரியர் படுக்கையில் படுத்திருக்கும் போது தூங்கி எழும்போது குளித்துவிட்டு வரும்போது அறை மேசையில் அமர்ந்து வேலை பார்க்கும்போது என எந்நேரமும் அரச மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம். அல்லது அரச மரம் அவர் பார்வையில் பதியாமலேயேகூட இருந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் சன்னல் முழுக்க நிறைந்திருக்கும் அந்த மரத்தை அவர் அறவே பார்க்காமல் விட்டிருக்கச் சாத்தியமில்லை.
ஒரு கண நேரத்துக்குள் சொல்லமுடியாத வெறுமை அவர் முகத்தில் படிந்து சட்டென மறைந்தது.

அரச மரம் பற்றி முதலில் பேராசிரியர் எதுவும் சொல்லவில்லை.

“நிலைமை மோசமாகிக்கொண்டுதான் போகிறது. கேட்பாரில்லை. இப்ப முஸ்லிம்களுக்கு எதிரான போக்கும் கூடிக்கொண்டுதான் போகுது… யார் கேட்கிறது” என்றவர், தனக்கேயுரிய மென்மையும் கிண்டலும் நிறைந்த சிரிப்புடன் தொடர்ந்தார்.

“போர் முடிஞ்ச பிறகு ராணுவத்தின்ரை முக்கியமான வேலைகள்ல ஒண்டு எங்கயெல்லாம் அரச மரம் காணக்கிடக்குதோ அங்கயெல்லாம் ஒரு சுத்துச் சுவரைக் கட்டி புத்தரைக் கொண்டுவந்து வைக்கிறதுதான். வரலாறு வாழ்க்கை நம்பிக்கை எல்லாத்தையும் சல்லரிச்சுக்கொண்டு நிறைய அரச மரங்கள் வளருது… புத்தரின்ர புன்சிரிப்பு பயமாத்தான் கிடக்குது…” என்றார்.

பக்கத்தில் நின்று பார்ப்பதைவிட தூரத்திலிருந்து சன்னலூடே பார்க்கும்போது பரந்த ஆக்கிரமிப்புடன் சலசலத்துக் கொண்டிருந்தது அரச மரம்.

அரச மரத்துக்குரிய சிறப்பு இதுதான். மரத்திலும் அதன் தடிமனான கிளைகளெங்கும் இலைகள் நிறைந்திருக்கும். காற்று வீசும்போது சிறிய கெட்டியான காம்பில் நிற்கும் இலைகள் மட்டுமே அசையும். பார்ப்பதற்கு சன்னமான கலகலவென்ற ஓசையுடன் கம்பீரமான பேரரசி, முகத்தில் சிறு அசைவும் எழுப்பாமல் தலை முடியை மட்டுமே சிலுப்புவது போலிருக்கும்.

1980 களுக்கு முன்னர் நீர்கொழும்பில் பிறந்து வளர்ந்த எல்லாருக்கும் பிள்ளையார் கோவில் எதிரேயிருந்த அரச மரத்தைத் தெரிந்திருக்கும். அரச மரம், அதற்குப் பின்னால் இருக்கும் வை.எம்.எச்.ஏ. கட்டடம் இரண்டுமே ஊர்மக்கள் எல்லாருக்கும் சொந்தமானது. இன, மத, மொழி, வயது, பேதம் எதுவும் அந்த மரத்துக்கு இல்லை. அதுவும் பக்கத்திலிருக்கும் விஜயரத்தினம் இந்து மகா வித்தியாலயத்தில் படித்த மாணவர்களுக்கு அன்றைய நாளில் அந்த மரம் ஒரு பெரும் துணை.

நீர்கொழும்பு கரையோர நகரமென்பதால் அங்கே மீன் பிடிப்பவர்கள் அதிகம். அந்த மக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். அதேபோல் வசதி படைத்த வர்த்தகர்களும் காலனித்துவ கால வீடுகளில் வசிக்கும் மேட்டுக்குடி சைவ – பௌத்த மக்களும் பல நிலைகளில் இருந்த முஸ்லிம்களும் அப்போது அங்கு வாழ்ந்தனர். மேலும் இந்தியத் தமிழர்கள் சிலோன் செட்டியார்கள் மலாய்க்காரர்கள் ஜாவாக்காரர்கள் ஆங்கிலோ இந்தியர்கள் என்று பல இனத்தவர்களும் குடியிருந்தனர்.

எல்லாத் தரப்பையும் சேர்ந்த தமிழ் பேசும் பிள்ளைகள் விஜயரத்தினத்தில் படித்தனர். முதலாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் எல்லா மாணவர்களும் வெள்ளிக்கிழமை காலையில் அரச மரத்தைத் தாண்டி பிள்ளையார் கோவிலுக்குச் சென்று சிவபுராணம் பாடுவோம். என்னுடைய வகுப்பில் படித்த கிறிஸ்தவ முஸ்லிம் பிள்ளைகளும் சிவபுராணம் பாடாவிட்டாலும் வெள்ளிக்கிழமை உலாவில் கலந்துகொள்வார்கள்.

கோயிலிருந்து திரும்பும்போது இளம் சிவப்பு நிறத்திலிருக்கும் அரச இலைக் கொளுந்துகளை எப்படியாவது பறித்துக்கொண்டு வந்து விடுவோம்.

அதைப் புத்தகத்துக்குள் பத்திரப்படுத்தி யாருடையது வாடாமல் வதங்காமல் பாடம் பண்ணப்படுகிறது என்று நாங்கள் போட்டி போட்ட காலத்தில் போராட்டம் மூர்க்கம் அடைந்திருக்கவில்லை. போரின் துயரங்களும் கொடூரமும் தாக்காத மென்மையான அரச இலைத் தளிர்களாகவே அப்போது குழந்தைகள் இருந்தனர்.

அந்த அரச மரத்தடியில் ஒரு நாகர் இருந்தார். அவருக்குத் தினமும் பூசை நடக்கும். பூசை வைக்கும் மரமாக இருந்தாலும் மரத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த குந்து பொதுத் திண்ணையாகவே இருந்தது. அங்கு பிச்சையெடுப்பார்கள் , விளையாடுவார்கள், காதல் செய்வார்கள், வெய்யிலுக்கு ஓய்வெடுப்பார்கள். என்னென்னவோ நடக்கும். கொலை கூடவும் நடந்திருக்கிறது.

மாதா கோயில் பக்கத்தில் குடியிருந்த ஒருவர் விஷம் குடித்து விட்டு அங்குதான் செத்துப்போனார். எத்தனையோ கதைகள் இருந்தாலும் எங்கள் ஊர்க்காரர்களுக்கு முக்கியமாக கடற்கரைத் தெருக்காரர்கள் எல்லாருக்கும் மிக அன்னியோன்யமானதாக இருந்தது அந்த அரச மரம். பள்ளிக்கூடமோ டான்ஸ் , டியூஷன் வகுப்புகளோ கோயிலோ மாதா கோயில் திருவிழாவோ எங்கே போவதென்றாலும் அரச மரத்தடியில் கூடி அங்கிருந்துதான் கிளம்புவோம்.

மரத்தடியோடு பஸ் ஸ்டாண்டுக்குப் போகும் ஒழுங்கை ஒன்று போகும். அரச மரத்திலிருந்து வலது பக்கமாகக் கொஞ்சதூரம் போனால் காளி கோயில். தேவாலயம் பிறகு கடைசியில் மயான சந்திப்பில் கடற்கரைச் சாலை முடியும். இந்தப் பக்கம் மாரியம்மன் கோயில், பள்ளி வாசல் பிறகு வட்டச்சாலை, அதைத் தாண்டினால் மீன் சந்தை பிறகு கடற்கரை வந்துவிடும். நீர்கொழும்பு கடற்கரை வீதியின் கம்பீரமான தலைவன்போல கிளைவிரித்து நின்றிருந்த அந்த மரத்தில் எழுதப்படாத ஏராளமான வரலாறுகள் பதியப்பட்டிருந்தன.

இன்னமும் நினைவிருக்கிறது. 1981 இல் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அந்த ஊரில் தீவிரமடைந்தபோது அரச மரத்தடியைத் தாண்டி கலவரம் வரவில்லை. அப்போது அமைதிக்கொடி ஏந்திய அரச மரம், அடுத்து வந்த ஆண்டுகளில் வெட்டு, கொலை, எரிப்பு எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் நின்றது. அந்த மரத்தடியில் போராட்டத்துக்கு எதிராக கறுப்புக்கொடி தூக்கினார்கள். போராட ஆள்சேர்ப்பும் நடந்தது.

எத்தனை இருந்தென்ன, கடற்கரைச் சாலை விரிவாக்கப்பட்டபோது, நாகரை பிள்ளையார் கோயிலுக்குள் கொண்டு வைத்துவிட்டு, பலநூறு ஆண்டுகளாக வேர் விட்டு கிளை விரித்திருந்த மரத்தைச் சரித்துவிட்டார்கள். மரத்தை வெட்டுவதும் லேசாக இருக்கவில்லை. இன்னும் ஞாபகமிருக்கிறது. 1986 மே மாதம். முதலில் நடேசன்தான் மரத்தை வெட்டப் போனார். வெட்டத் தொடங்கியதுமே மரத்திலிருந்து பாம்புகளாக வரத்தொடங்கவும் பயந்து என்னால் முடியாது என்று வந்தவர், படுக்கையில் விழுந்துவிட்டார். மரம் வெட்டுவது அவருக்கு வாழைப்பழம் உரிப்பதைப்போல. அவரே முடியாது என்றதும் பிறகு பெரிய மிஷன்களைக்கொண்டு வந்து வெட்டினார்கள். மரத்தடியில் ஒரு புத்தர் இருந்திருந்தால், ஒருவேளை மரத்தை அப்படியே விட்டு விட்டு, அதைச்சுற்றி ஒரு வட்டப் பாதையையோ, சாலைச் சந்திப்பையோ அவர்கள் ஏற்படுத்தியிருக்கக்கூடும். என்ன செய்வது…? புத்தரைப் பற்றி யாரும் யோசிப்பதற்கு முன்னர் காரியம் நடந்து விட்டது.

மரம் வெட்டப்பட்டதில் ஊர்க்காரர்கள் எல்லாருக்கும் ரொம்ப வருத்தம். தெருவில் வெட்டிப் போடப்பட்டிருந்த மரத்திலிருந்து ஒற்றைத் தளிரைக்கூட எவருக்கும் பறிக்கத் தோன்றவில்லை. அவ்வளவு சோகம். சில நாட்களுக்கு ஊரே துக்கம் காத்தது. மரத்தை வெட்டியதால் நாட்டுக்கே கெட்ட காலம் வரப்போவதாக வயதானவர்கள் சிலர் அப்போது சொன்னார்கள்.

மரம் சரிந்த பிறகு அந்த ஊரே மாறிவிட்டது. 90 களில் உக்கிரமான தாக்குதல்களால் காலம்காலமாய் அந்த ஊரில் வாழ்ந்த பல சனங்கள் ஊரைக் காலி செய்துகொண்டு கிளம்பி விட்டன. விமான நிலையத்துக்குப் பக்கத்தில் இருக்கும் கடற்கரையோர நகரம் என்கிறதாலும் தலைநகர் கொழும்புக்கு அடுத்திருப்பதாலும் பிரச்சினைகளோடு நகரின் வளர்ச்சியும் தொடரவே செய்தது. ஹோட்டல்கள், உல்லாசத்தளங்கள் பெருகின. வெளியூர்க்காரர்களாலும் சுற்றுப் பயணிகளாலும் நிறைந்திருக்கும் நீர்கொழும்பு அடையாளம் தெரியாமல் மாறிவிட்டது என்கிறார்கள்.

மலர் டீச்சர் போன ஆண்டுதான் முதல் முதலாக இலங்கைச் சுற்றுலா போய் வந்தார்.

பயமில்லாமல் பலர் இப்போது இலங்கை போய் வருகிறார்கள். மலர் போன்றவர்கள் யாழ்ப்பாணத்தைப் பார்ப்பதற்காகவே இலங்கைக்குப் போகிறார்கள்.

சிங்கப்பூரிலேயே நான்கு தலைமுறைகளாக வாழும் இந்தியத் தமிழரான மலருக்கு இலங்கைப் பிரச்சினை பற்றி அவ்வளவாகத் தெரியாது என்றாலும், உரிமைக்குப் போராடும் தமிழன் என்ற அபிமானமும் அவர்களின் துயரத்தில் அனுதாபமும் கொண்டிருப்பவர்.
வட மாகாணத்துக்குப் போகும்; வழியில் அசோக மன்னரின் மகள் சங்கமித்ரை நட்டதாகச் சொல்லப்படும் அநுராதபுரத்திலுள்ள பல ஆயிரமாண்டு பழமையான அரச மரத்தைப் பார்த்து வணக்கம் செய்து விட்டுத்தான் போனார் மலர்.

விசாக தினத்தில் புத்தர் கோயிலுக்குப் போகும் அவருக்கு புத்தர் மீது மிகுந்த நம்பிக்கை. கல்யாணமாகி பல வருஷம் கழித்து தாய்லாந்தில் நான்கு தலை புத்தரிடம் வழிபாடு செய்த பிறகு அவருக்குப் பிள்ளை பிறந்தது. அதனால் இலங்கைக்குப் போவதாக முடிவுசெய்ததுமே, யாழ்ப்பாணத்துடன் அநுராதபுர அரச மரமும் கண்டி புத்த விகாரையும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று ஆர்வத்துடன் ஏற்பாடுகள் செய்தார்.

ஆனால், அநுராதபுரத்திலிருந்து வடக்கு நோக்கி போனபோது பாதையெங்கும் புதிது புதிதாக முளைத்திருந்த அரச மரங்கள் அதுவும் போரில் மடிந்த தமிழர்களுக்கு எழுப்பப்பட்ட நடுகற்களை இடித்துக்கொண்டு கிளை விட்டிருக்கும் அரச மரங்கள் மலருக்குள் இருந்த ஓர் அமைதியைக் குலைத்துவிட்டது.

எப்படி இலங்கைத் தேநீரைக் குடிப்பவர்கள் அவருக்கு ஆகாதவர்களாகத் தெரிகிறார்களோ… அப்படியே அரச மரமும் அவருக்கு ஆகாததாகி விட்டது.

சவுத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோயிலுக்குப் போகும் போதெல்லாம் நானும் மலரும் பிள்ளையாருடன் அரச மரத்தையும் சேர்த்துதான் இதுநாள் வரையில் சுற்றியிருக்கிறோம். அங்கேயும் மலர் தொட்டில் கட்டியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் மலருடன் மாரியம்மன் கோயிலுக்குப் போனபோது பிள்ளையாரை வணங்கியதும் மரத்தடியில் இருக்கும் நாகருக்கு கும்பிடு போட்டுவிட்டு “பிள்ளையாரைச் சுற்றத் தேவையில்லை, அம்மனைச் சுற்றினாலே போதும்… வா….” என்று கிளம்பிவிட்டார்.
“பிள்ளையார் மீது கோவமா…? அரச மரம் மீது கோவமா…?” எனக்கேட்டதற்கு முதலில் கண்ணீர்தான் மலரிடம் இருந்து பதிலாக வந்தது. பிறகு சாமி கும்பிட்டு முடித்து, மண்டபத்தில் உட்கார்ந்திருக்கும்போது சொன்னார், “முன்னெல்லாம் அரச மரத்த பார்க்கிறப்பல்லாம், அதை சுத்தியதால் பிறந்த என் மகனைத்தான் நினைப்பேன் இப்ப அதுக்கடியில குல குலையா புதைக்கப்பட்ட உசிர்கள் நினைவுக்கு வருது.”

அதன் பிறகு அரச மரம் பற்றி மறந்தும் நான் மலருடன் பேசியதில்லை. இப்போது அரச மரம் எங்கள் முன் வந்து நிற்கிறது.
“இந்த மரத்தடியில் ஒரு புத்தர் இருக்கிறார் பார்த்தீர்களா சார்…? பார்க்கச் சீன புத்தர் மாதிரிதான் இருக்கிறார். இந்தப் பக்கத்தில் நடக்கிற கட்டுமானப் பணிகள்ல்ல தாய்லாந்து , சிறீலங்கா, மியன்மார்ன்னு பல நாட்டு ஊழியர்களும் வேலை செய்யிறாங்க. அவங்களோ அல்லது சுற்று வட்டாரத்தில் குடியிருப்பவங்களோ இந்த புத்தரை வைச்சிருக்கலாம். யாராவது ஒருத்தர் தொடங்கி வைச்சா போதும். பிறகு ஊதுபத்தி, பூ, பழம், படையல்ன்னு தன்னால தொடரும் ” – என்று சன்னலூடே அரச மரத்தைப் பார்த்தவாறே பேராசிரியரிடம் மலர் சொல்லிக்கொண்டிருக்கும்போது வாசலில் நின்ற பணியாள், அறை சுத்தம் செய்ய மீண்டும் அனுமதி கேட்டார். நாங்கள் வந்ததிலிருந்து நாலைந்து தடவைகள் கேட்டு விட்டார்.

“சரி… செய்யுங்கள்…” என்று அவரை உள்ளே விட்டோம்.

இருபதுகள் மதிக்கத்தக்க அந்தப் பெண் பார்ப்பதற்கு இந்திய நாட்டவர் போலிருந்தாலும், அவரது பாவனைகள் இந்தியர் என்று உறுதியாகச் சொல்ல முடியாததாக இருந்தன. அவருக்குத் தமிழ் தெரியக்கூடும் என்ற அனுமானத்தில் நானும் மலரும் அமைதியானோம்.
“இங்க அரசாங்கத்தின்ர அனுமதியில்லாம இப்படிப் பொது இடத்தில வழிபாட்டு இடங்களை அமைக்கிறது குற்றமில்லையா…?” என்று கேட்டபடி பேராசிரியர் மீண்டும் பேச்சை ஆரம்பித்தார்.

“குற்றம்தான். என்றாலும்… அடர்ந்து வளர்ந்த பெரிய மரமா இருந்தா, சீன, இந்தியக் கடவுள்கள் குடியேறுவது காலம் காலமாகவே நடக்கிறதுதான். ஆனா, என்ன மரம்ங்கிறது முக்கியமில்ல…” எனச் சொன்ன மலர் மேலும் விளக்கினார்.

“பெரிய மரங்கள் ஏராளமா இருந்தாலும் மரத்துக்குக் கீழே சாமி வைச்சுக் கும்பிடுறது இப்ப அவ்வளவா இல்ல. அதோட அப்பப்ப அடிச்சு ஊத்திற மழையில மரங்க வேரோடு சாய்ஞ்சு விழுறபோது அங்கயிருக்கும் சாமிகளும் சேதமாயிடும். ”

“அப்படித்தான் போன வருஷம் ஒரு மழையில தேக்காவில அப்பர் வெல்ட் ரோடு முனையிலிருந்த ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ஞ்சுது. அந்த மரத்துக்கு கீழே ரொம்ப காலமா இருந்த சீன சாமி அதில் சேதமாயிட்டார்.

“மரத்தடி சாமி நாலு நம்பர் கொடுக்கிறது போன்ற அற்புதங்கள் செய்தால், ஏதாவதொரு காரணத்துக்காக அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டி வந்தாலும் எப்பாடுபட்டாவது அவரைப் பாதுகாப்பார்கள். வேறு மரத்தடியில் கோயிலில் அல்லது எங்காவது குடியேற்றி விடுவார்கள்.”

மலர் சற்று நிறுத்தியதும் மெத்தை உறையை மாற்றிக்கொண்டிருந்த அந்தப் பெண், “இந்த ஊருக்கு வந்து நாலு வருஷத்துக்குப் பிறகு இப்பதான் என் கண்ணில அரச மரம் பட்டிருக்கு” என்றார். எங்கள் உரையாடலை அப்பெண் கேட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டும். கைகள் வேலையில் ஈடுபட்டிருந்தாலும், அவரது கண்கள் லேசாக மூடியிருந்தன. கனவுலகத்தில் இருப்பவர் போல எங்களைப் பார்க்காமலேயே தன்பாட்டில் பேசினார்.

“அரச இலை பாக்க அமைதியா இருக்கும். நாங்கெல்லாம் அரச இலையைப் பறிச்சு புத்தகத்துக்குள்ள வச்சுக்குவோம். நான் புக் மார்க்கா வச்சுக்குவேன். பச்ச இலை வாசனையும் எனக்குப் பிடிக்கும். வாடின இலை வாசனையும் பிடிக்கும். எங்க நாட்டில நிறைய அரச மரம் இருக்கு. அந்த மரத்துக்குக் கீழ உக்கார்ந்தா தாய் ஏக்கம் வரும் என்று சொல்லுவாங்க. அந்த மரம் அப்படி ஆறுதலா இருக்கும்….”

“நீங்க எந்த நாட்டில இருந்து வந்திருக்கீங்க அம்மா. நல்லா தமிழ் கதைக்கறீங்க…..?” என்று பேராசிரியர் கேட்டதுமே, அதற்காகவே காத்திருந்தவர்போல் சட்டென்று எங்கள் பக்கம் திரும்பிய அந்தப் பெண், படபடவென்று கொட்டத் தொடங்கிவிட்டார்.

“பர்மா – மியன்மார். நாங்க தமுளு நல்லா பேசுவோம், படிப்போம். தமிள்காரங்கதான் நல்லா படிக்கிறவங்க. கஷ்டப்பட்டு உழைக்கிறவங்க. ஆனா எங்கள மதிக்கமாட்டான். யுனிவர்சிட்டில இடம், நல்ல வேல, எதுவும் கொடுக்க மாட்டான். அந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் தோலு பார்ப்பான்….”

“ உங்களுக்கு அரச மரம் பிடிக்குமா….?” மலர் இடைமறித்தார்.

“சூலியா அதான் ‘மு’னாங்களுக்குதான் ஆகாது. இந்து வீட்டுக் கோயில், புத்த வீட்டு சாமிப்பாங்க. அங்க அரச மரத்துக்குக்குக் கீழ பிள்ளையார் இருக்கும். சிவன், முருகன் சாமிகளும் இருக்கும். அமைதியா சிரிச்சபடி புத்தர் நிறைய இருக்கும். இடவசதியில்லாம இருந்தா சின்னதா ஒரு மேடை கட்டியிருப்பாங்க. அரச மரத்தோட பெரிய புத்த கோயில்ங்க எல்லாங் கட்டியிருக்காங்க. ம்… முன்னயில்லாம் இப்படியில்ல. அங்க அங்க கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். இப்பதான் ரொம்ப மோசமாயிட்டுது. ‘மு’னாங்கதான் ரொம்ப பாவம். அவங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம்… இலெக்க்ஷன் வருது. இனி என்ன நடக்கப்போகுதோ ….யேசுவே…” என்று சிலுவை போட்டபடி அழுக்குத் துணிகளை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் வெளியில் நடந்தார்.

சன்னல் அருகே சென்று அரச மரத்தைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் பேராசிரியர். பிறகு சொன்னார்

“இந்தப் புத்தர் சிரிக்கேயில்லை.” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)