அப்பாவி கணேசனும் அமானுஷ்யமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,545 
 

கணேசன் என்னதான் வாட்டசாட்டமாய் சக்திமான் முகேஷ் கண்ணா மாதிரி இருந்தாலும் இந்த சுவீடன் குளிரை மட்டும் அவரால் தாங்க முடியவில்லை. விடியற்காலை மூன்று மணிக்கு என் போர்வையை யாரோ உருவுவது போல இருக்க, எழுந்து பார்த்தால் நம்ம கணேசன், சத்தமே இல்லாமல் போர்வையை இழுத்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே தூக்கத்தில் வந்த பேய்க்கனவினால் நடுங்கிப்போய் இருந்த நான்,

“யோவ், என்னய்ய பண்றீங்க!!! “

“கார்த்தி, ரொம்ப குளுருது , அதுதான் உங்க போர்வை எடுத்துக்கலாம்னு”

“அப்போ என்னை விறைச்சுபோய் சாக சொல்றீங்களா?” எரிந்து விழாத குறையாகக் கடிந்து கொண்டேன்.

“சாரி நண்பா” எனச் சொல்லிவிட்டு, தனது பெட்டியில் இருந்து இன்னொரு மேற்சட்டையும் , கால் சட்டையும் எடுத்துப் போட்டுக்கொண்டு தூங்கிவிட்டார்.

கணேசனை நான் எரிந்து விழாத நாளே கிடையாது. இத்தனைக்கும் இந்த மாத அறையின் வாடகையான 3000 க்ரோனரை அவர்தான் கட்டி இருக்கிறார். அவரின் ஆங்கிலத்தில் இருந்து, அவர் சுவிடீஷ் பெண்களை உற்றுப்பார்க்கும் விதங்கள் வரை அவரின் எல்லா செயல்களுமே கிண்டலடிக்கப்படும். நான் எடுத்துக் கொடுக்கும் கிண்டல்களை மற்ற நண்பர்கள் செவ்வனே செய்து முடிப்பார்கள். எனக்கும் பெரிய நிம்மதி, எனது பேய் பயங்களைப் பற்றிக் கிண்டலடிக்கும் நண்பர்கள் , என்னை விட அப்பாவி பலிகடா சிக்கிக் கொண்டதால் என்னை விட்டுவிட்டார்கள்.

”பத்து டிகிரிக்கே குளுருதுன்னு சொன்னா, நீங்க எப்படி மைன்ஸ் லே எல்லாம் தாக்குப்பிடிக்கப்போறீங்க கணேசன்” நக்கலாக சொன்னபோது,போனவருடம் இதே நேரம் எப்படி எல்லாம் குளிரை சமாளிக்கப்போராடினேன் என்று எனக்கே உறுத்தியது. பழைய அறை நண்பர்கள் எல்லாம் வெவ்வேறு ஊர் சென்றவுடன் நான் செய்த முதல் காரியம் எனது கட்டிலை ஹீட்டரை ஒட்டி போட்டுக்கொண்டதுதான்.

”கார்த்தி, நாம இடத்தை மாத்திக்குவோமா, ஹீட்டர் பக்கத்துல படுத்தால் குளிரை சமாளிச்சுடுவேன், பிளீஸ்”

கணேசன் கேட்ட விதமும், அவர் தினமும் குளிரில் படும் அவஸ்தையும் பாவமாகத்தான் இருந்தது. என்னை வருத்திக் கொண்டு மற்றவர்களுக்கு உதவ வேண்டியதில்லை என்பதால் அவரிடம் வழக்கம் போல மறுப்பைத் தெரிவித்தேன்.

நாங்க இருக்கும் குடியிருப்புப் பகுதி நகரத்தை விட்டு 3 நான்கு கிலோமீட்டர்கள் தள்ளி , அகதிகளுக்காக கட்டிவைத்தது. குடியிருப்பைச் சுற்றி மரங்களும், பார்த்தாலே கிலியூட்டும் ஏரியும் , ஏரிக்கரை ஒன்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சில படகுகளும் ராம்கோபால் வர்மா படம்பிடிக்க ஏற்ற சூழலாக இருக்கும். அமானுஷ்ய சுற்றுப்புறமாக இருந்தாலும் பேய் போன்ற விசயங்களை கனவைத் தவிர நிஜத்தில் நான் உணர்ந்ததில்லை.

வழக்கம் போல கணேசனை இரவு 12 மணி வரை கிண்டலடித்துவிட்டு படுத்த பின்னர் ஹீட்டரை உடைத்துக் கொண்டு கை வருவது போல ஒரு கனவு. பொதுவாக என் பேய்க்கனவுகள் நான் காட்டிலோ இல்லை பொது இடங்களிலோ பேயை சந்திப்பது போல அமையும். நான் இருக்கும் இடங்கள் என் கனவுகளில் வந்தது இல்லை. எழுந்துப் பார்த்தேன் , மணி ஒன்றரை தான் ஆகி இருந்தது. கனவு கலைந்த பின்னரும் திகில் மனதில் இருந்து கரையவில்லை. ஹீட்டரைத் தடவிப்பார்த்தேன். ஏதும் உடைந்து இருக்கவில்லை. பழைய வலிகள் பேய் பயத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என எனது பழையக் காதலி அம்முவை நினைத்துக் கொண்டு தூங்க முயற்சித்தேன்.

அடுத்தடுத்த சிலநாட்களில் அதே கனவு திரும்ப வர, மனது கொஞ்சம் கலவரமானது.ஒவ்வொரு நாளும் கையின் நீளம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. உறுத்தும் நினைவுகளை உள்ளத்தில் வைக்கக்கூடாது என இடத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்தேன். கட்டிலை மாற்றிப் போடும்போது ஒரு சந்தேகம் வந்தது. கணேசன் ஏதாவது சூனியம் வைத்திருப்பாரோ என, பட்டுக்கோட்டை காரனுங்க சூனியத்தில் கெட்டிகாரங்கன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க.

கல்லூரியில் திரும்பி வந்த கணேசனுக்கு ஒரே வியப்பு.

“கணேசன், நீங்க ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தீங்கல்ல, இனிமேல் அந்த இடத்துல தூங்குங்க, ஹீட்டரை கட்டிப்பிடிச்சுட்டு”

“ரொம்ப தாங்க்ஸ் நண்பா!! ”

இரவு இனிதே கனவுகள் இல்லாமல் கழிந்தது. ஞாயிறு ஆனாலும், வழமைப்போல கணேசன் டீ போட்டு என் மேசை நாற்காலியின் அருகில் வைத்து இருந்தார். அவரின் முகத்தைப் பார்த்தேன், வழக்கமான அப்பாவி சிரிப்பு இல்லை.

“கார்த்தி, என்னங்க இந்த இடத்துல படுத்த பின்ன வெறும் பேய்க்கனவா வருது, ஹீட்டர்லேந்து கை வர்ற மாதிரி கனவுங்க, கை நீண்டு கழுத்து வரை வர்ற மாதிரி இருந்துச்சு”

”அட விடுங்க, நமீதா கில்மா கனவு மாதிரி சில சமயங்களில் இப்படி பேய்க்கனவும் வரும்”

”ஆமாங்க, இருக்கும், நேத்து ஒரு இங்லீஷ் பேய் படத்தை தமிழ் டப்பிங் ல பார்த்துட்டு இருந்தேன்”

“ஆமாம் , அந்த நினைப்பு உங்களை இன்ப்ளூயன்ஸ் பண்ணி இருக்கும், சரி நான் கார்ல்ஸ்க்ரோனா ஷிப்ட் ஆகப்போறேன்” அவருக்கு ஏன் எதற்கு என்றெல்லாம் விளக்கம் கொடுக்கவில்லை. அன்றைக்குப்பிறகு ஒரு இரவு கூட அந்த அறையில் தூங்கவில்லை. புதுவீட்டில் ஹீட்டர் பக்கத்து இடத்தை கணேசனுக்கே கொடுத்தேன்.

ஒரு மாதம் கழித்து வந்த பத்திரிக்கைச் செய்தி அதிர்ச்சியைக் கொடுத்தது, எங்களது பழைய வீட்டிற்கு குடிவந்த குடும்பத்தின் கணவன் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டார், மனைவியை காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

– டிசம்பர் 31, 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *