அன்பும் அறனும் இல்வாழ்வின் பண்பும் பயனுமாம் போற்றி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 17, 2013
பார்வையிட்டோர்: 10,225 
 

அந்தக்கிராமம் முழுக்க அன்பால் பின்னப்பட்டிருந்தது. பண்பால் பிணைக்கப்பட்டிருந்தது. அந்த ஊர் முன்னேற்றத்துக்கு நூறு விழுக்காடு காரணம் அமுதா அறிவழகன் தம்பதியினர்தான் காரணம். இருவரும் படித்த பண்பு மிக்கவர்கள். தாம் வாழும் கிராமம் ஒரு முன் மாதிரிக் கிராமமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டு செயலாற்றும் செயல் மறவர்கள். அறிவழகன் மனிதப்பணியில் புனிதப்பணியாம் ஆசிரியப்பணியைச் செய்பவர். அலுவல் நேரம் போக மீந்த நேரங்களில் தன் பொன் பொழுதுகளை தான் சார்ந்துள்ள கிராம மக்களின் முன்னேற்றத்துக்காக உழைக்கும் ஓர் தன்னார்வலர்!

தன் கணவனின் குறிப்பறிந்து அதற்கேற்றவாறு செயற்படும் அமுதா! அறிவழகன் “எள்” என்றால் எண்ணையாக நிற்கும் படு சுறுசுறுப்பு! அறிந்தவர், அறியாதவர் எவர் வந்தாலும் இன்முகத்தோடு உபசரித்து விருந்தோம்பும் இயல்பு!

பகற் பொழுதில் அரசுப்பள்ளியில் ஆசிரியப்பணி! வாழ்க்கையை நகர்த்த அறிவழகன் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக நிறைவளிக்கும் பணி. இரவு நேரத்தில் சமுதாய உயர்வுக்காக படிப்பறிவற்ற மக்களுக்காக எழுத்தறிவிக்கும் ஈடில்லாப் பணி! இது அறிவு – அமுதா தம்பதியினர்க்கான மனநிறைவுப்பணி!

ஓரிரு ஆண்டுகளே ஓய்வு பெறும் நிலையில் உள்ள அறிவழகன் தம்பதியினருக்கு நவீன் என்ற மகனும், அகிலா என்ற மகளுமாக இரு பாசமலர்கள். நவீன் இறுதியாண்டு மருத்துவம் பயில்கிறார். அகிலா பொறியியலில் முதலாமாண்டு பயில்கிறார்.

விடுமுறை என்றால் இருவரும் கிராமத்துக்கு வந்து அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உறுதுணையாக இருந்து உதவுவர். மருத்துவம் முடித்து அந்தக் கிராமத்துக்கும் சுத்துப்பட்டி கிராமங்களுக்கும் மருத்துவ சேவை வழங்குவதில் நவீன் உறுதியாக இருந்தது அறிவழகனுக்கு பெரு மகிழ்வைத் தந்தது. அதேபோல அகிலா பொறியியல் முடித்ததும் அந்தக் கிராமத்திற்குள் உலகைக் கொண்டுவரும் இணைய வழிக் கல்வி, வேளாண் பெருமக்களுக்குரிய நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் என்று தம் பங்குக்குச் செய்யவிருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்ததில் அந்தக் கிராமமே அவர்களை தங்கள் பிள்ளைகளாக கருதி பாசத்தைப் பொழிந்தனர். நூலைப்போல சேலை; தாயைப்போல பிள்ளை என்ற பழமொழி இவர்கள் போலிருந்ததால் ஏற்பட்டதுதானோ!

ஊர் சாவடியின் ஒரு பகுதியில் முதியோர் வகுப்பை அறிவழகன் நடத்துவார். மழைக்குக் கூட பள்ளியில் ஒதுங்காதவர்கள் அறிவழகனின் இரவுப்பள்ளியில் ஒதுங்கினர். அவர்கள் அக்கறையோடும், ஆர்வத்தோடும் பயின்றார்கள். அதற்கான ஊக்கத்தை அறிவழகன் அளித்திருந்ததே காரணம். இந்த வயசுக்குமேல படிச்சு என்ன பண்ணப்போறோம்? என்று கேட்டவர்கள் எல்லாம் இப்போது எழுத்துக்கூட்டி படிக்கக் கற்றுக்கொண்டார்கள்.

கைநாட்டுக் கிராமம் என்றிருந்த நிலை மாறி இப்போது கையெழுத்துப் போடும் கிராமம் என்ற பெயருக்கு மாறிவிட்டது. ஊராட்சி, ஒன்றியம், வட்டம், மாவட்டம் என்ற நிலைகளில் எந்தக் காரியத்துக்கு எந்த அதிகாரியைப் பார்க்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தனர். ஆம், அறிவழகனிடம் வாழ்க்கைத் தேவைக்கான பொது அறிவுக் கல்வியையும் கற்றதால் ஏற்பட்ட பயன் அது!

முன்பெல்லாம் அஞ்சல்காரர் வந்ந்தால் முதியோர் பென்சன் வாங்க கைநாட்டுப்போட்டுவிட்டு கொடுத்த பணத்தை வாங்கிய நிலை மாறிவிட்டது. பேருந்தில் பயணம் செய்தால் நடத்துனரிடம் உரிய சில்லறையை தருமாறு கோரிப் பெறுகின்றனர்.

அந்த ஆண்டு இறுதிக்குள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களே இல்லை என்ற இலக்கை அடைவது என்ற குறிக்கோளை அறிவழகன் கொண்டிருந்தார். அதற்காக விடுமுறை நாட்களில் கூடுதல் வகுப்புகளை நடத்தினார். அறிவழகனிடம் ஆண்கள் அணிவகுத்து நின்று எழுத்தறிவு பெற நாட்டம் கொண்டவர்களாயிருந்தனர்.

அதே நேரத்தில் அமுதா, பெண்களுக்கு பொம்மை செய்தல், கூடை பின்னுதல் போன்ற கைத்தொழில் கற்றுக்கொடுப்பதில் முனைந்திருப்பார். அந்தக்கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணும் சுய சம்பாத்தியத்தில் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பது அமுதாவின் குறிக்கோள்!

இதற்காக வாசுகி மன்றம் என்ற பெண்கள் சங்கத்தை உருவாக்கி அமுதா வழிநடத்தினார். கூட்டுறவு முறையில் இயங்கும் இந்த அமைப்பில் பெண்கள் கையினால் தயாரித்த கலைப்பொருட்களுக்கு நல்ல வரவேற்பிருந்தது. நகரத்திலிருந்து நல்ல விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.

“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை” என்ற தாரக மந்திரம் “வாசுகி” மன்றத்தின் முழக்கமாகும்! இந்த அமைப்பில் வேலை செய்யும் பெண்களுக்கு சுய வருமானத்துக்கு வழி கிடைத்தது. வருமானத்தில் ஒரு சிறுபகுதியை சேமிக்கவும் கற்றுக்கொடுத்ததால், கிராமப்பெண்கள் சேமிப்பில் ஆர்வம் காட்டினார்கள். இலாபத்தொகை வருடம்தோறும் தமிழர் திருநாளில் பிரித்துக்கொடுக்கப்பட்டது.

இதுவல்லாமல் குடும்பத்தில் ஏற்படும் திடீர் செலவுகளுக்கு வட்டி இல்லாத கடனாக பெற்றுக்கொள்ள அமுதா ஏற்பாடு செய்தது அந்தக் கிராம மக்களுக்கு எதிர்பாராத சங்கடங்களை எதிர்கொள்ள சக்தியைக் கொடுத்தது. கவலையை விரட்டியடித்தது. மகிழ்ச்சியை பொழிந்தது.

வாசுகி மன்றப் பெண்கள் பெறும் நன்மைகளைக் கண்டு பெண்கள் வாசுகி மன்றத்தை நாடிவரத் துவங்கினர். இதனால் அந்தக் கிராமத்தில் வீண் அரட்டை அடிப்போர், வம்பு பேசுவோர் என்று எவருமில்லாத உழைக்கும் கிராமமாக மாறியது. பக்கத்து கிராம பெண்கள் எங்களையும் இந்த மன்றத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். அல்லது எங்களூரிலும் இதுபோன்ற ஒரு மன்றத்தை துவக்குங்கள் என்று கேட்கத் துவங்கினர்.

அறிவழகன் ஓய்வு பெறும் நாளும் வந்தது. இல்லத்தரசியும் தன் உள்ளத்தரசியுமான அமுதாவிடம் முக்கியமான முடிவு எடுப்பது குறித்துக் கலந்தாலோசித்தார். உடனிருந்த நவீனிடமும், அகிலாவிடமும் தம் முடிவைச் சொன்னார். தங்களையும் பண்படுத்தி இந்த ஊரையும் பண்படுத்திவரும் தந்தையின் முடிவிற்கு பெரிதும் மகிழ்ந்து உடன்பட்டனர். அரசு வேலை நாளையோடு முடியப்போகிறது என்கிற நேரத்தில் அதைப்பற்றிக் கவலைகொள்ளாது குடும்பத் தலைவன் எடுத்த பொது நோக்கான முடிவில் அந்தக் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.

அடுத்தநாள் பொழுது புலர்ந்தது. அகமும் புறமும் மகிழ்ச்சிப் பெருக்கில் அறிவழகன் இல்லத்தினர் வலம்வந்தனர். ஊரே ஊர்ச் சாவடியின் முன் கூடியிருந்தது. எதிரே முப்பது வருடங்களுக்கு மேல் பணியாற்றிய பள்ளி. அறிவழகன் நடுநாயகமாக அமர்ந்திருக்க கிராமப்பெரியவர்கள் சிலர் ஒருபுறமும் உடன் பணியாற்றிய ஆசிரியப் பெருமக்கள் ஒருபுறமும் சோகம் கவிந்துகிடக்க வீற்றிருந்தனர். மேடையிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக அறிவழகனது சேவைகளைப் புகழ்ந்து பேசி அமர்ந்தனர். அவர் இல்லாப் பள்ளியை எங்களால் கற்பனை செய்து பார்க்கவியலவில்லை என்று கண்ணீர் ததும்ப ஆசிரியர்கள் பேசினர்.

அறிவழகன் பேச எழுந்தார். மக்களோடு மக்களாக அமர்ந்திருந்த தன் இனிய குடும்பத்தை ஒரு கணம் பார்த்தார். அப்போது கிராமப் பெரியவர் மேடையேறி “துண்டு, மாலை மரியாதை என்று இதுவரை ஏற்றுக்கொள்ளாத ஆசிரியர் அறிவழகன் இன்று ஒருநாள் நாங்கள் அளிக்கும் மரியாதையை அவர் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு கைத்தறி ஆடையை அணிவித்தார். தொடர்ந்து ஒரு வரிசை, கையில் மாலை, துண்டு சகிதமாக எழுவதைக் கண்டதும் அறிவழகன் பேசலானார்.

உங்கள் எல்லோரின் சார்பிலும் இந்தப் பெரியவர் அளித்த ஆடையை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறேன். தயவுசெய்து நான் சொல்லப்போவதைக் கேட்டுவிட்டு அத‌ன் பிறகு நீங்கள் துண்டு, மாலை போடுவதை வைத்துக்கொள்ளலாம். அமருங்கள் என்றார்.

ஊசிவிழுந்தால்கூட சத்தம் கேட்கும். அந்த அளவுக்கு அமைதி அடுத்த நொடியில்!

“வெள்ளப் பெருக்கைப்போல கூடியிருக்கிற உங்களைப் பார்க்கும்போது….(கண்களில் அருவியாய் நீர் வடிகிறது) நீங்கள் என் மீதும், நான் உங்கள் மீதும் வைத்திருக்கும் பாசம் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரப் பாசம் போன்றது. இந்தப்பள்ளியை விட்டுப் பிரியும் கவலை ஒருபுறமிருந்தாலும் உங்களோடு இன்னும் அதிக நேரம் செலவிடக் கிடைத்த வாய்ப்பாக அதை எண்ணி மகிழ்கிறேன்.

எழுதப்படிக்கத் தெரியாதவர்களே இல்லை என்ற இலக்கை இன்று முதல் நாம் அடைந்துவிட்டோம் என்ற‌ மிக மகிழ்வான செய்தியையும் ஒத்துழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.

என் மகன், நவீன் இந்த ஆண்டு இறுதியில் மருத்துவர் பயிற்சி முடிந்து மருத்துவராக பணிபுரியப் போகிறான். அரசு மருத்துவமனையில் வேலை தயாராக இருந்தாலும், இந்தக் கிராம மக்களுக்காக சேவையாற்ற முடிவு செய்திருப்பதால் இங்கு ஒரு சிறிய மருத்துவமனை கட்ட வேண்டும். நாமே ஒரு முறை வைத்துக்கொண்டு வீட்டுவீட்டுக்கு சித்தாளாக, கொத்தனாராக இருந்து நாமே கட்டுவோம்.

நான் ஓய்வு பெறுவதால் கிடைக்கும் பணிக்கொடை அனைத்தையும் அந்த மருத்துவமனை கட்டுமானப்பணிகளுக்கு அளிக்கப் போகிறேன். எனக்கு மாலை, துண்டு போட விரும்புபவர்கள், மாலை துண்டுக்குப் பதிலாக‌ இந்த நல்ல காரியத்துக்கு உங்களால் இயன்ற தொகையை ஊர் நாட்டாமை நல்லதம்பியிடம் அளிக்குமாறு வேண்டுகிறேன்.”என்றார். அங்கிருந்தோர் எழுப்பிய கரவொலி விண்ணை எட்டியது!

அன்பும் அறனும் உடைத்து ஆயின், இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

Love and virtue are the flower and fruit
Of domestic life.

பொருள்: இல்வாழ்வு இருவர் கொள்ளும் அன்பு மற்றவருடன் கலந்து வாழும் அறமும் உடையதாயின், அவையே இல்லறதின் பண்பும் பயனும் ஆம்!

– ஜனவரி 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *