அன்புடன்…

 

பதற்றத்தோடு அங்குமிங்கும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு. தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை அடைவதற்காக. ஆனால் அதுவோ அங்கிருந்த எல்லோரின் கைக்கும் மாறி மாறிச் சென்றது. வகுப்பறையிலிருந்த சிறுவர்கள் வாசுவை வெறுப்பேற்றுவதற்காக அவனுடைய நோட்டை மாற்றி மாற்றிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

எல்லாம் இந்த முத்துவால் வந்தது, என்று மனசுக்குள் திட்டிக்கொண்டு கண்களில் லேசாக ஈரம் கசிய,

“குடுங்கடா…”

என்று கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டும், இயலாமையால் முகம் கோண, அழும் தோரணையில் எல்லோரின் கைகளை நோக்கியும் கைநீட்டி ஏமாந்து கொண்டிருந்தான்.

இப்படியே போய்க் கொண்டிருந்த நோட்டு கடைசியில் முத்துவே மனம் மாறியதால், பரிதாபம் காரணமாக வாசுவிடம் கொடுக்கப்பட்டது.

அதை வாங்கிக்கொண்டுத் தன் இருப்பிடமான கடைசி பெஞ்சுக்குப் போய் இருப்பதே தெரியாமல் உட்கார்ந்து கொண்டான்.

அதற்குள் உள்ளே நுழைந்த ஆசிரியர் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

யாருக்கும் தெரியாமல் தன் நோட்டை எடுத்து அதில் ஒரு குறிப்பிட்ட பக்கத்தை பிரித்தான். அதில் ஒரு பேப்பர் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதைப் பிரித்தான்.

அதில் “அன்புடன் விக்ரம்” என்று எழுதி ஒரு புகழ் பெற்ற நடிகனின் கையெழுத்து இருந்தது. அதைப் பார்த்து அதுவரைக் கண்களிலேயே தேக்கி வைத்திருந்த கண்ணீரை வெளியிட்டான்.

அந்தக் காகிதத்திற்காகத்தான் அவ்வளவு வேகமாக ஓடியலைந்து தவித்ததை எண்ணும்போது அவனுக்கு சற்று சிரிப்பாகவும் இருந்தது.

அந்தக் கையெழுத்து வாங்கிய நாளையும், சூழ்நிலையையும் சற்று நினைத்துப் பார்த்தான்.

அந்த மதிய நேரத்தில்…

கோயில் தெப்பக்குளத்தில் பொரியைப் போடும்போது வந்து மொய்க்கும் மீன் கூட்டத்தைப் போல, அந்த மைதானத்தில் சில சிறுவர்கள்,

“ஹேய்… படம் எடுக்குறாங்க…”

என்று கூட்டமாகக் கத்தியதும் மதிய உணவைக் கூட மறந்து மாணவர் பட்டாளம் மைதானத்திற்குப் படையெடுத்தது.

அதில் வாசுவும் ஒருவன்.

ஆனால் அவனால் மற்றவர்கள்போல் ஓட முடியாமல் தடுத்தது அவன் தொடை வரை போட்டிருந்த அந்த உலோகத்தாலான கவசம். போலியோவால் பாதிக்கப்பட அந்த நீளம் குறைந்த காலுடன் முடிந்தவரை முயற்சி செய்தான் வாசு.

அந்த நடிகனைச் சுற்றியிருந்த கூட்டத்தில் பாதிபேர் அவனைப் பார்ப்பதிலும் பாதிபேர் கையெழுத்து வாங்குவதிலும் குறியாய் இருந்தார்கள். கையெழுத்து வாங்காதவர்கள் கொஞ்சம் வழிவிடலாமே என்று தனக்குள் முனகிக் கொண்டு சுற்றிச் சுற்றி ஓட முயற்சித்தான். அவனால் முடியவில்லை.

முண்டியடித்துக் கொண்டு கூட்டத்துக்குள் நுழைந்து முன்னேறிக் கூட்டத்திற்கு முன் வந்து நிற்பதற்குள், அந்த நடிகன் காருக்குள் ஏறிவிட, கார் கிளம்பியது.

அந்தக் கூட்டத்தின் இறுக்கம் மெல்ல தளர்ந்தது.

அந்தக் காரையே முறைத்துப் பார்த்த வாசு, இன்னொரு சகாவை நோக்கி ஓடினான். வேகமாக அவனிடமிருந்த காகிதத்தை வாங்கிப் பார்த்தான்.

“நீ வாங்கலையாடா?…”

என்று அவன் கேட்க, அந்தக் கையெழுத்தையும் காரையும் மாறிமாறி பார்த்த வாசு,
“ம்… வாங்கிட்டேன்… இந்த நோட்டுல இருக்கு…”
என்றபடி திருப்பிக் கொடுத்தான்.

எல்லோரும் போனபின், தன் நோட்டை எடுத்து அதில் அந்த நடிகனின் கையெழுத்தைப் போலவே, “அன்புடன் விக்ரம்” என்று எழுதி உள்ளே வைத்துக் கொண்டு கண்களில் வெறித்தனமான வெற்றிக் களிப்புடன் சென்றான் தன் காலை ஊன்றியபடி வாசு 

தொடர்புடைய சிறுகதைகள்
டாக்டர் செல்வராஜ் - 9841108211 அந்த மொபைல் நம்பரையே ரொம்ப நேரமாக உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிந்தது. ஆனால் எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. ஒரு ஆறு, ஏழு நிமிடம் இருக்கலாம். என் நண்பர்கள் சிலர் எனக்கும் அவர்களுக்கும் மனஸ்தாபம் ...
மேலும் கதையை படிக்க...
“ஏசப்பா...” என்று அம்மா முனகிக் கொண்டிருந்தது அவனுக்குக் கேட்டாலும் கேட்காதபடி இருந்தான். மங்களகரமான ஒரு நாதஸ்வர ஓசை. ஆனால் அது அலறியடித்துக் கொண்டு ஒலித்ததால், ஸ்ரீகாந்தும் அவன் அம்மாவும் லேசாக அதிர்ந்தபடி பார்க்க, எதிரில் உட்கார்ந்திருந்த பெண் பழகிப்போன ரிங் டோன் என்பதால் எந்த பதற்றமும் ...
மேலும் கதையை படிக்க...
சென்னையில் நான் பரோட்டா சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இந்த பரோட்டா வித்தியாசமாக இருந்தது. இதைச் சப்பாத்திக் கட்டையால் தேய்த்து, தோசைக்கல்லில் சுடுவதில்லை. மாறாக, தேய்க்காமலேயே உருண்டை வடிவத்தில் எண்ணெய்ச் சட்டிக்குள் போட்டு வடை சுடுவதுபோல் சுட்டு எடுக்கிறார்கள். நல்ல சுவை. நான் இந்த ஊருக்கு ...
மேலும் கதையை படிக்க...
“கால் கிரௌண்டா இருந்தாலும் நமக்குன்னு சொந்தமா மண்ணு வேணும்டா... அத விட்டுட்டு என்னமோ தீப்பெட்டி அடுக்குனமாதி, பிளாட்டு வாங்குறானுங்களாம் பிளாட்டு... எவனாச்சு பிளாட்டு வாங்கிருக்கேன், அது வாங்கிருக்கேன்னுட்டு என்ன வந்து தங்கச் சொன்னிங்க, நல்லா கேப்பேன்... தாத்தா அடிக்கடி சொல்லும் வார்த்தை இதுதான் ...
மேலும் கதையை படிக்க...
"அவன் அவன் வாயக்கட்டி வயித்தக்கட்டி, ஒரு இன்ஷியல் அமௌண்ட்டக் கட்டி, அதுக்கு டியூவையும் கட்டி, கண்ணுக்கு கண்ணா ஒரு பைக்கு வாங்கி வச்சிருந்தா, இவனுங்க மாசாமாசம் கவர்மென்ட்டுக்கு கணக்குக் காட்றதுக்கும், மாசக்கடைசில கட்டிங் வாங்குறதுக்கும், நோ பார்க்கிங்னே போடாத முட்டுச்சந்துக்குள்ள விட்டுருக்க ...
மேலும் கதையை படிக்க...
கைப்பேசி எண்
சுலோச்சனா
தங்கச்சி மடம்
மண்ணு வேணும்டா…
நேர்மைன்னா என்ன?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)