Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அதர்வம்

 

கதை ஆசிரியர்: ஜெயமோகன்.

கங்கை கரையில் இருந்த சிறு நகரான கல்மாஷபுரிக்கு பின்மதியத்தில் தன் அமாத்யர் ஊர்ணநாபர் துணையுடன் வணிகர்களாக மாறுவேடமிட்டு பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் வந்து சேர்ந்தான் . கங்கை கரையில் சிறு கோயில்களும் அவற்றை ஒட்டி அன்ன சத்திரங்களும் நிறைந்திருந்தன. அவற்றில் ஒன்றில் தங்கி இளைப்பாறிவிட்டு கூலவணிகர்கள்போல நகர்வீதியில் அலைந்து அதர்வ வேத கார்மிகர்களான யாஜர் சகோதரர்களைப்பற்றி விசாரித்து தெரிந்துகொண்டு அவர்கள் வாழ்ந்த மிருண்மயம் என்ற கிராமத்துக்கு மறுநாள் அதிகாலையில் சென்று சேர்ந்தார்கள் .

மிருண்மய கிராமத்தில் மகாவைதிகர்கள் வாழும் வேதியமங்கலத் தெருவில் அவர்கள் நுழைந்து , முதல் வேதியரிடம் யாஜர்களைப்பற்றி விசாரித்தபோதே அவர் முகம் பீதியில் நெளிவதைக் கண்டார்கள் . தெருவோரத்து வீட்டு வரிசைகளில் திண்ணைகள் மீது அமர்ந்திருந்த மற்ற வைதிகர்கள் எழுந்து உள்ளே செல்ல , விசாரிக்கப்பட்ட வைதிகர் , “வழி சொன்னால் அந்தப்பாவமும் என் சிரசில் ஏறும் வணிகர்களே . அபிசாரம் செய்யும் அதர்வ வைதிகனைப்பற்றி நினைப்பதும் கூட நெறி தவறுவதே என்பார்கள் …” என்றார்

கோயிலை சுற்றிவந்த பிறகும் எவரும் அவர்களுக்கு உதவவில்லை . ஊர்ணநாபர் “எப்படியும் அவர்கள் இந்த ஊரில்தான் இருக்கிறார்கள் .வேதியர் இடங்களுக்கு அப்பால் அவர்கள் வாழவும் வாய்ப்பில்லை.சுற்றி வந்து பார்ப்போம்” என்றார் .

கங்கையை நோக்கி செல்லும் சிறு சந்து ஒன்றில் மக்கள் நடந்து செல்வதனால் உருவாகும் தடம் இருந்தது .மழைக்காலத்தில் தெருவின் நீர் கங்கையை அடையும் அந்த ஓடை மற்ற நாட்களில் பாதையாக இருக்கிறது போலும். அவர்கள் அதில் இறங்கி நடந்து சென்றபோது வலப்பக்கம் கரிய கற்களால் கட்டபட்ட வீடு ஒன்றை கண்டார்கள் . மற்ற வேதியர் வீடுகளெல்லாம் புல்வேய்ந்ததாக இருக்க அதன் கூரையும் கல்லால் ஆனதாக இருந்தது . முற்றமெங்கும் புல் அடர்ந்து சருகுகள் குவிந்து அது வாழ்விடம்போலவே தெரியவில்லை .ஆனால் முற்றத்தின் ஓரமாக வேதியர் அணியும் மரக்குறடுகள் கிடந்தன.

ஊர்ணநாபர் ‘’இதுதான் அவர்களின் இடம் என்று எனக்கு தோன்றுகிறது’’ என்றார். ‘இதுவா?’ என்று துருபதன் தயங்க ‘அவர்கள் இங்கே வாழ்கிறார்கள் என்றால் இந்த இடமாகவே இருக்க முடியும் ‘ என்றார் ஊர்ணநாபர்.

தயங்கியபடி துருபதனும் ஊர்ணநாபரும் அந்த வீட்டை நெருங்கியபோது ” யார் ?” என்ற மிகக் கடூரமான குரல் கேட்டது . ஏழடிக்குமேல் உயரம்கொண்ட பிரம்மாண்டமான ஒரு மனிதன் அவர்களைநோக்கிவந்தான்.அவன் முகம் பலவகைகளில் சிதைந்து கோரமாக இருந்தது. நாசியே இல்லை. மயிர்மண்டிய இரு துளைகள். தொங்கும் உதடுத்துண்டுகள்.

“கஸ்யபகுலத்தின் மகாவைதிகரான யாஜ மகாபாதரை தரிசிக்க வந்தவர்கள் நாங்கள் ” என்றார் ஊர்ணநாபர் .

”என்ன விஷயமாக?”

“ஒரு வேள்வி குறித்து அவரிடம் பேசவேண்டும் …” அவன் முகம் சதையாலான பிண்டம்போல உணர்வற்று இருப்பதைக் கண்டு ஊற்ணநாபர் தன் மடியிலிருந்து ஒரு பொன் நாணயத்தை எடுத்துக் காட்டினார் “நாங்கள் பாஞ்சால நாட்டு பெருவணிகர்கள்”

அவன் கண்களின் ஐயம் விலகியது “உள்ளே வாருங்கள்..”என்று அழைத்து சென்றான். அந்த வீட்டிற்கு கல்லாலேயே கதவுகள் இருந்தன. அவன் அந்தக் கனத்த கதவை எளிதாகத் தூக்கி விலக்கி உள்ளே அழைத்துசென்றான் . வீட்டுக்குள் சென்றதும் துருபதன் மலைத்துபோய் அமாத்யரை பார்த்தான் .அது ஒரு அரண்மனையின் உள்ளறைபோல இருந்தது . அங்கிருந்த பொருட்களில் பெரும்பாலானவை பொன்னால் ஆனவை என்பதையும் அவற்றில் மின்னிய கற்கள் ரத்தினங்கள் என்பதையும் துருபதனின் அனுபவம் மிக்க கண்கள் உடனே அறிந்து கொண்டன.

அந்த அரக்கமனிதன் உள்ளே சென்று அவர்களின் வருகையைச் சொல்ல சற்று நேரம் கழித்து சிவந்த பட்டாடையும், காதுகளில் ரத்தினக் குண்டலங்களும், கழுத்தில் மகரகண்டியும் அணிந்த தடித்த குள்ளமான சிவந்த மனிதர் வெளியே வந்தார் .துருபதன் எழுந்து வணங்க, இடக்கையைத்தூக்கி ஆசியளித்தபடி ” நான் உபயாஜன் . பாஞ்சால மன்னன் எங்களைத் தேடிவர என்ன காரணம் ?” என்றார்.

துருபதன் வியப்பை வெளிக்காட்டவில்லை ,ஆனால் ஊர்ணநாபர் ஏதோகூற வாயெடுத்ததும் அவர் கையை அலட்சியமாக அசைத்தபடி ,”எங்களைத்தேடி மன்னர்கள் மட்டுமே வரமுடியும்..” என்றார் .

துருபதன் தன் பையை அவிழ்த்து அதனுள்ளிருந்து சில ரத்தினங்களை எடுத்து அவர்முன் பரப்பி வைத்து .”இது எங்கள் முதல் காணிக்கை ” என்றான்.

“உன் கோரிக்கை என்ன ?” என்றார் அவர் அவற்றை ஏறிட்டும் பார்க்காமல் .

“நான் அவமானப்படுத்தப்பட்டவன் .”

“ஆம் ,அத்தகையோரே எங்களைத்தேடி வருகின்றார்கள் …” அவரது உதடுகள் விஷத்துடன் புன்னகையாயின.

துருபதன் கோபத்துடன் முன்னால் சாய்ந்து, ” ஷத்ரியர் போரில் வீழ்வதும் இறப்பதும் புதிதல்ல . ஆனால் நான் தோற்றது ஒரு எளிய பிராமணனிடம் ” என்றார்.

“உம்மை தோற்கடித்த அந்த நெடுநாள் நண்பன் யார் ” துருபதன் வியப்பை அவர் மீண்டும் அலட்சியச் சிரிப்புடன் உதறினார் “எப்போதுமே தீராத குரோதங்கள் அப்படித்தான் ஏற்படுகின்றன. ”

“அவன் பெயர் துரோணன். பரத்வாஜ முனிவருக்கும் நாணலில் பாய்முடையும் பெண்ணுக்கும் பிறந்தவர் . சிறுவயதில் நான் பரத்வாஜ ஆசிரமத்துக்கு செல்லும்போது அவரிடம் நெருங்கிப் பழகியதுண்டு …”

“–பிறகு வளர்ந்து பாஞ்சால மன்னனான பிறகு நீர் அவரை அவமானப்படுத்தினீர், இல்லையா?கதை எப்போதுமே ஒன்றுதான்” உபயாஜர் குலுங்கி சிரித்தார் .” அந்த அவமானத்தால் வெறிகொண்டு மாவீரராக ஆகி அவர் உம்மை போரில் தோற்கடித்து அவமதித்துவிட்டார் ,நீர் பழிவாங்க விரும்புகிறீர்..”

“ஆம் . அவரைக் கொல்லும் ஒரு புத்திரன் எனக்கு தேவை …..அக்குலத்தையே அழிக்கும் ஒரு மகளும் தேவை ”

“குரோதம் உப்புபோல மன்னரே, அது தானிருக்கும் பாண்டத்தையே முதலில் அழிக்கும் ”

”எனக்கு அறிவுரைகள் ஏராளமாக கிடைத்துவிட்டன வேதியரே .அவை என் குரோதத்தீயில் அவிசாகின்றன. இந்தக் குரோதம் இனி என்னில் இருந்து அணையப்போவதில்லை .மறுமையிலும் இதன் வெம்மை என்னை விடாது …….”

“இந்த சங்கிலியை இப்படி தலைமுறைகள் தோறும் வளர்த்து மானுடகுல முடிவு வரை கொண்டு செல்லலாம் துருபதமன்னனே. குரோதம் என்பது அக்கினி போன்றது. அக்கினி மகா அக்கினியையே பிறப்பிக்கிறது ”

‘பிறக்கட்டும். அந்த அக்கினியில் நானும் என் தலைமுறைகளும் எரிந்தழியட்டும்… வைதிகரே என் நெஞ்சுக்குள் அக்கினி எரிகையில் நான் எங்கும் நிம்மதியாக வாழமுடியாது…’

‘ஆம், குரோதம் உமக்குள் இருந்தால் உமது நீர் நிலம் காற்று வானம் எல்லாமே அதுவாக ஆகிவிடும்…’ என்றார் உபயாஜர். ’சொல்லும்’

“அதர்வ வேதத்தில் பாதாள அக்கினியை வரவழைக்கும் மந்திரங்களும் யாக முறைகளும் உள்ளதாக சொல்கிறார்கள். நீங்களே ய்ஜ்வாவாக இருந்து யாகம் செய்து அவ்வக்கினியை வரவழைத்து அதிலிருந்து எங்கள் சபதத்தை முடிக்கும் குழந்தைகளை உருவாக்கி தரவேண்டும்…” என்றான் துருபதன்

“ஆம் . அது உண்மை . ஆனால் …” உபயாஜர் பெருமூச்சு விட்டார் “கடந்த பல வருடங்களாக அச்சம்தரும் தீய சகுனங்கள் தெரிகின்றன மன்னரே . நம்மைமீறிய பெரும் அழிவுச் சக்திகளுக்கு நாம் கருவிகளாகி விடும் வாய்ப்ப்பு இருக்கிறது . பெரும் அழிவொன்று விதியின் கருவறையில் திரள்கிறது . உங்களை திரும்பிச் செல்லும்படி உபதேசிக்கவே நான் விரும்புகிறேன் …”

“தாங்கள் விரும்பிய செல்வத்தை நான் அளிக்க முடியும்..”

“செல்வத்துக்கு என்ன பொருள் மன்னரே ? அது அளிக்கும் அனுபவம் மட்டுமல்லவா அதன் பொருள் . எங்களுக்கு செல்வம் தேவைப்பட்ட காலம் ஒன்றிருந்தது . பெரும் யாகங்களை நாங்கள் செய்யவேண்டியிருந்தது . எங்கள் அறிவின் முழுமைக்காக அவை தேவைப்பட்டன. ஆம் , எங்களுக்கு அறிவே செல்வத்தின் பொருளாக இருந்தது . சில வருடங்கள் முன்புவரை…” அவர் முகம் ஆழ்ந்த சிந்தனையில் குனிந்தது .

“பாரத வர்ஷத்திலேயே அதர்வவேதத்தில் உங்களுக்கு இணையான பண்டிதர்கள் இல்லை என்பது எங்கும் தெரிந்த உண்மை ..” என்றார் ஊர்ணநாபர் .

“ஆம் , அது ஒரு வகையில் உண்மை ” என்றார் அவர் ” தட்சிணதேசத்தில் விந்தியசிருங்கத்தில் நாங்கள் வேத மாணவர்களாக இருந்தபோது மூன்று சாத்வீக வேதங்கள்மட்டுமே அனைவருக்கும் கற்பிக்கப்பட்டன. இறுதியில் ஞான முழுமைக்காக அதர்வ வேதத்தின் மிகச்சிறிய பகுதியும் கற்பிக்கப்படும் . ஆனால் மறைக்கப்பட்ட பகுதி மீதே எங்கள் ஆர்வம் சென்றது . முதல்மூன்று வேதங்களை கற்றுகரைகடந்ததும் எங்கள் ஆர்வம் முழுக்க அதர்வத்திலேயே நின்றது.அதர்வ வேதம் பாதாளங்களின் ஞானத்தால் நிரம்பியது என்றார் ஆசிரியர் . உரியமுறையில் விவேகத்தின் ஒளியால் வழிநடத்தப்படாவிட்டால் அது இருளை நோக்கி கொண்டு சென்று விடும் என்று முன்னோர் எச்சரித்திருக்கின்றனர் . ரிஷிகள் மட்டுமே வேதம் கற்ற காலத்தில் அதர்வ வேதமும் முழுமையாக இருந்திருக்கிறது .பின்பு ஒவ்வொருகாலத்திலும் அதன் ஒருபகுதி அழிக்கப்பட்டது .எங்கள் குருநாதரின் இல்லத்து நிலவறையில் மிக ரகசியமாக செம்புப்பட்டயத்தில் பொறிக்கப்பட்ட அதர்வ வேத பிரதி ஒன்று இருப்பதை அறிந்தோம். அதர்வ வேதம் மட்டுமே அவ்வாறு எழுதி பாதுகாக்கப்படுகிறது . அப்பிரதியில் மிகச்சிறு பகுதியைத்தவிர மீதிப்பெரும்பகுதி பற்பல தலைமுறைகளால எவராலும் வாசிக்கப்பட்டதில்லை . என் தமையனார் அந்தப் பிரதியை திருடி எடுத்தார் . நாங்கள் அதை இங்கு கொண்டுவந்தோம். அதில் சொல்லப்பட்ட வேள்விகளைச் செய்யத்தேவையான செல்வத்துக்காக அது குறிப்பிடும் சிறு அபிசார கர்மங்களை பிறருக்கு செய்துதர ஆரம்பித்தோம். …”

உபயாஜர் பெருமூச்சு விட்டார் ” அன்று எங்கள் எண்ணத்தில் ஞானம் என்பது தன்னளவிலேயே உயர்வானதாக இருந்தது .மனிதனுக்கு அன்னியமான ,விலக்கப்பட்ட ஞானம் எதுவுமே இல்லை என்பார் என் தமையனார் . அறிவை அடையும் வழிகளையெல்லாம் அந்த அறிவே நியாயப்படுத்தும் என்பார். மனிதனுக்கு அறிதல் என்பது இறைச்சக்திகளால் அளிக்கப்பட்ட ஆணை.சின்னஞ்சிறு கைக்குழந்தை அதற்குள் பிரக்ஞை கொளுத்தப்பட்ட கணம் முதல் அறிவு அறிவு என்று தேட ஆரம்பிக்கிறது. அறிவு தூயது, மகத்தானது, நன்மை பயப்பது என்று நாங்கள் எண்ணினோம்…’

” உங்கள் தமையனார் இப்போது எங்கே இருக்கிறார் ?” என்று ஊர்ணநாபர் கேட்டார் .

அது அவர்காதில் விழாததுபோல தனக்குத்தானே ,”ஆனால், அது வெறும் அகங்காரம் . தூய அறிவென்று ஏதுமில்லை . அறிவதெல்லாம் நம்முள் சென்று அகங்காரமாகவே மாறுகிறது .அறத்தால் வழிநடத்தப்படும் அறிவு மட்டுமே மனிதனுக்குப் பயன் தரக்கூடியது…” என்றார் .குரல் சட்டென்று மேலெழுந்தது ” துருபதனே உன் காலடிகளை தொடர்ந்துவரும் நிழல்களை நான் காண்கிறேன். இங்கிருந்து போய்விடு ….”

“இல்லை. நீங்கள் என்னை கைவிட்டால் நான் வேறு ஒரு அதர்வ வேத பண்டிதரைக் காணவே செல்வேன் . இந்தக் குரோதத்துடன் நான் உயிர்வாழமுடியாது . என்னை மன்னித்துவிடுங்கள் …” என்றான் துருபதன்.

உபயாஜர் அவர்களைகூர்ந்து பார்த்தார் , ” ஆம் , நீங்கள் செலுத்தப்பட்டுவிட்டீர்கள் . உங்களை தடுக்க முடியாது . உங்கள் கோரிக்கையை என் தமையனாரிடமே முன்வைக்கிறேன் . இங்கு முடிவெடுப்பவர் அவரே. ” என்றார்

**

வேள்விக்குடில் கட்டப்பட்டு உபகார்மிகர்கள் அனைவரும் வந்து சேர்ந்த பிறகே முதல் யஜ்வியாகிய மகாயாஜர் பாஞ்சாலநாட்டு தலைநகரான காம்பில்யத்துக்கு வந்து சேர்ந்தார் .யாகம் நடக்கும் தகவல் மிக ரகசியமாக வைக்கப்பட்டு ,யாகபூமி பலத்த காவலில் இருந்தபோதும் எல்லா விபரங்களும் உடனடியாக காம்பில்ய தெருக்களிலும், வணிகர்கள் வழியாக பாஞ்சால தேசமெங்கும், பரவிச் சென்றன .

யாஜரைப்பற்றி கிராமங்கள் தோறும் பலவிதமான கதைகள் பிறந்தன . விந்திய மலையில் அவர் பல ஆண்டுகள் பாதாள நாகங்களை நோக்கித் தவம் செய்து கார்க்கோடகனை வரவழைத்து அவனிடமிருந்தே குறைவுபடாத அதர்வ வேதத்தை பெற்றுக் கொண்டதாகவும் , மேலும் பல்லாண்டுகள் அதர்வ வேத முறைப்படி அவர் செய்த தவத்தால் அவர் இல்லத்திலேயே பாதாளம் வரை செல்லும் பெரும் பாம்புப் புற்று ஒன்று உருவானதாகவும் , அதன் வழியாக அவர் விரும்பியபோது பாதாளம் சென்று மீள்வது உண்டு என்றும் கதைகள் பரவின . அவரை எவருமே கண்டிருக்கவில்லை என்றாலும் அவர் பாம்பின் இமையாதகண்கள் கொண்டவர் என்று அனைவருமே எண்ணினர் .

யாஜர் அதிகாலையில் இரு கரிய மல்லர்களால் சுமக்கப்பட்டு வந்த பட்டுத்துணியாலான மஞ்சலில் வந்து அரண்மனை முற்றத்தில் இறங்கிய போது அவரை வரவேற்க உபயாஜரும் ,துருபதனும் அவர் மனைவி பிருஷதியும், அமாத்யர்கள் ஊர்ணநாபர் , அஸ்ராவ்யர் ,கீர்த்திசேனர் ஆகியோரும் படைத்தளபதி உபேந்த்ரபலனும் மங்கலப்பொருட்களுடன் காத்திருந்தனர் . யாஜர் மண்ணில் காலடிவைத்ததும் மங்கலவாத்தியங்கள் முழங்கின. துருபதனும் அவன் பட்டத்தரசியும் அவரது கால்களில் மஞ்சள் அரிசியையும் மலர்களையும் தூவினர்.

யாஜரின் தோற்றம் முதலில் அனைவருக்குமே ஏமாற்றத்தை அளித்தது . ரோமமே இல்லாத மெல்லிய குள்ளமான உடலின்மேல் நடுங்கியபடியே இருந்த தலை. சுருக்கங்கள் அடர்ந்த சிறு முகத்தில் புடைத்துதெரிந்த நாசிக்கு இருபக்கமும் சிறிய ஒளிரும் கண்கள் கொண்ட அந்த மனிதர் ஓர் உலர்ந்த வவ்வால் போலிருந்தார். அவரில் இருந்த குறைபாடு என்ன என்று சற்று கழித்தேதான் தெரிந்தது, அவர் உடம்பில் எங்கும் ஒரு மயிர்கூட இல்லை.அம்மாதிரி ஏதோ ஒரு வித்தியாசம் அவரிடம் இருக்குமென அனைவருமே எதிர்பார்த்தும் இருந்தார்கள் .

யாஜர் அனைவருக்கும் ஆசி அளித்த பின் தம்பியிடம் மிக மெல்லிய குரலில் ” ஏற்பாடுகள் முடிந்தனவா?” என்றார் .அவர். “ஆம் , இனி தங்கள் சொற்களே மீதி” என்றார் .

அரண்மனையில் இளைப்பாறியபின் மாலை யாஜர் யாகக் குடிலில் கரடித்தோல் விரிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து , “துருபதனே , நீ இந்த யாகத்தின் யக்ஞ எஜமானனாக பொறுப்பேற்கவிருக்கிறாய் .இதன் விளைவுகள் அனைத்துமே உன்னைச் சேர்ந்தவை . ஆகவே நீ இதைப்பற்றி முழுமையாக அறிந்தாக வேண்டும் . தம்பி சொல்லியிருப்பான் ,ஆயினும் நான் அவற்றை மீண்டும் சொல்லியாக வேண்டும்…” என்றார்

துருபதன் ” தங்கள்சொற்களுக்காகக் காத்திருக்கிறேன் ” என்றார் .

“மன்னனே வேதங்களில் நாலாவது இடம் வகிப்பது அதர்வ வேதம் .இது சாத்வீக பாவமுள்ள மற்ற வேதங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது . பலவிதமான போர்ச் சடங்குகளும் , அழித்தொழிக்கும் அபிசாரச் சடங்குகளும் உடையதாகையால் இதை தகுதியற்றோரன்றி பிறர் கற்கலாகாது என சான்றோர் தடை செய்தனர் . இது வேதவியாசரால் தொகுக்கப்பட்டதல்ல ,அவர் மகனாகிய அதர்வணனால் வெகுகாலம் கழித்து தொகுக்கப்பட்டு வியாசரின் சீடராகிய ஜைமினியால் ஒழுங்குபடுத்தப்பட்டது . அவரது மகன் சமந்து இதை தன் மாணவராகிய கபந்தனுக்கு கற்பித்தார் . கபந்தர் இதை இரண்டாக பிரித்து இருண்ட பகுதியை முதல் சீடனாகிய தேவதர்சனுக்கும் நீலநிற பகுதியை இரண்டாம் சீடராகிய பத்யருக்கும் கற்பித்தார் .இவ்விருவரின் சீடகுலங்கள் இவ்வேதத்துக்கு அனேக சம்ஹிதைகளை உருவாக்கியுள்ளன . இவற்றில் பெரும்பகுதி தேவையில்லை என திட்டமிட்டே அழிக்கப்பட்டது . பயில்வாரின்றி ஒருபகுதி அழிந்தது … இன்று கிடைப்பவை ஐந்து கல்பங்கள் மட்டுமே . நட்சத்திர கல்பமே அனைவரும் அறிந்தது , இது பிரம்மாவின் சிருஷ்டிலீலைகள் குறித்து பேசுவது . சம்ஹிதா கல்பத்தில் மந்திரங்களும் , சாந்தி கல்பத்தில் பலவிதமான பலிசாந்திகளும் உள்ளன…”

யாஜர் தொடர்ந்தார் .” நாம் இங்கே செய்யப்போவது ஆங்கிரீச கல்பத்தில் உள்ள ஒரு பூத யாக முறை . இது உக்கிரமானது , மனிதனுக்கு அப்பாற்பட்ட, மனிதனால் அறிந்துகொள்ள முடியாத, பிரம்மாண்டமான பேரழிவுச் சக்தியை வசப்படுத்தி பயன்படுத்திக் கொள்ள முயல்வது .இதன் உண்மையான பலன் என்னவென்று நாம் அறிய முடியாது ,அந்த சக்திகளே அறியும். பிரஸ்னம் வைத்து பார்த்தபோது இந்த யாகம் நடந்தே தீரும் என கண்டதனால் தான் நான் ஒத்துக் கொண்டு இங்கே வந்தேன்…”

“என்பாக்கியம் அது “என்றார் துருபதன்

‘மன்னனே நான் மீண்டும் சொல்கிறேன். இது சாதரணமான வேள்வியே அல்ல. அதர்வம் பாதாளத்தில் உறையும் பிரம்மாண்டமான நாகங்களை துயிலெழுப்பும் குரல் போன்றது. அதில்பிறக்கும் பேரழிவுச்சக்திகளின் கையில் நீயும் உன் எதிரிகளும் ஏன் மானுடகுலமே வெறும் பொம்மைகளாக வேண்டியிருக்கும். பின்பு மனம் வருந்தி பயனில்லை…கடைசியாக முடிவெடு. ’

துருபதனின் நெஞ்சு அச்சத்தால் சிலிர்த்துக்கொண்டது. எண்ணங்களே இல்லாமல் மனம் சித்திரத்தில் வரையப்பட்ட பறவைக்கூட்டம் போல வானில் நின்றது. ஒரு இறகைக்கூட அசைக்கமுடியவில்லை. பின்பு சட்டென்று ஒரு பெரும்போர்க்களம்போல ஓசைகள் கொந்தளிக்க தன் அகத்தை உணர்ந்தான். துரோணரின் கர்வம் நிறைந்த புன்னகையை கண்டான். அமிலநதியில் நீந்தினான். அமில அருவிக்கீழே நின்றான். தன் நெஞ்சில் தானே ஒரு விஷக்கத்தியை ஆழ இறக்குவதுபோல சொன்னான் ‘இறுதி முடிவுதான் மகாவைதிகரே…’

யாஜர்பெருமூச்சு விட்டார். உபயாஜருக்கு சைகை காட்ட கார்மிகர் வேலைகளை ஆரம்பித்தனர். அதன்பின் யாஜர் துருபதனிடம் ஒருசொல்லும் பேசவில்லை. இமைதூக்கி அவனை அரைநொடியும் அவனைப்பார்க்கவில்லை. யாகத்தை தொடங்குவதற்காக வலம்புரிச்சங்கு மும்முறை ஒலித்தது.

யாகம் தொடங்கியது . எஜமானனுக்கான ஆசனத்தில் துருபதன் தன் மனைவியுடன் யாஜரால் வழிநடத்தப்பட்டு அமர வைக்கப்பட்டார். நவ தான்யங்களும் , எட்டு உலோகங்களும் , ஆறுவகை ஆடைகளும் யாக கார்மிகர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டன. தென்திசையில் நடப்பட்டிருந்த வேள்வி மரமான முள்வில்வத்துக்கு யாஜர் முதலில் பூஜை செய்து அதன் முன் பலிமிருகமான வெள்ளாட்டை கட்டினார் .யாகபாலகர்களாக நிறுவப்பட்டிருந்த காவல் தெய்வங்களுக்கு பின்பு பூசைகள் செய்யப்பட்டன.

கரிய கரடித்தோலை போர்த்த இருபத்தேழு கார்மிகர்கள் மூன்று பக்கமும் ஒன்பதுபேர் வீதம் யாககுண்டத்தைச் சுற்றி அமர , துருபதனுக்கு நேர்முகமாக யாஜரும் உபயாஜரும் அம்ர்ந்தார்கள். யாக குண்டத்தில் தேவர்களை வசியம் செய்யும் கர்மங்களுக்குரிய சமித்துக்களான சாகோடம் ,அடலோடகம், கடலாடி ஆகிய மரங்களின் விறகுக்குச்சிகள் அடுக்கப்பட்டு , அரணிக் கட்டைகள் கடைந்து எடுக்கப்பட்ட அக்கினியால் எரியூட்டப்பட்டது. மந்திர கோஷத்துடன் நெய்யூற்றி சுடர் வளர்க்கப்பட்ட போது யாகப்பந்தல் முழுக்க புகை மண்ட ஆரம்பித்தது .

அதர்வத்தின் முதல் ஒலிக்காக துருபதன் காத்திருந்தான். அந்த ஒலி தன் மனதை பழுக்கக்காய்ச்சிய வேல் போல ஊடுருவிச்செல்லும் என அவன் நினைத்தான். கொம்புகளும் சிறகுகளும் கோரைப்பற்களும் கொண்ட விசித்திரமான கொலைமிருகங்கள் போலவும் அசுபமான பறவைகள் போலவும் அதன் சொற்கள் இருக்கும் என அவன் கற்பனைசெய்தான்.

ஆனால் வேதங்களுக்குரிய இனிய மயிலகவல் ஓசையில்தான் இருந்தன. பளிங்கில் உதிரும் பொன்மணிகள் போல சொற்கள் தெறித்தன. விடியல் நதிமேல் வெயில் போல வேதகோஷம் அந்த தருணத்தை நிறைத்து பரவி பொன்வெளியாக ஆக்கியது. சிறுபுற்றுக்குள் இருந்து சிறகு முளைத்து வானிலெழுந்து வெயில் பட்டு ஒளிதுளிகளாக சுழலும் எறும்புகள் போல யாஜரின் வாயிலிருந்து வேதம் வந்துகொண்டே இருந்தது.

சற்றுநேரத்தில் அந்த ஒலியின் அழகில் துருபதன் தன்னை இழந்தான். அதனூடாக கைவிடப்பட்ட ஓடம்போல ஒழுகிசென்றான். ஒவ்வொரு கணத்திலும் முன்பின் இல்லாமல் இனிக்கஇனிக்க இருந்துகொண்டு சென்றான்.

சமித்துக்களில் கைக்குழந்தை தாய்மடியில் தவழ்ந்தேறுவது போல ஏறி குட்டி பொற்கரங்களை விடித்து செல்ல ஆட்டமாடி எழுந்த தழல் கைகள் மேல் கைகள் மேல் கைகள் என விரிந்து இருள் வெளியெனும் கருநாகத்தின் நாக்கு போல துடித்தாடியது. அதில் வெண்கடுகு ,அட்சதை , எள், தயிர், பால், தர்ப்பைப் புல், அருகம்புல், செண்பக இலை, தாமரைப்பூ முதலியவை வரிசையாக ஹோமிக்கப்பட்டன.

சட்டென்று தன்னை உணர்ந்தபோது அவன் பிரக்ஞை கூரிய வாள் ஒன்றின் நுனியை தன் மிகமெல்லிய பகுதியால் வருடிச்சென்றது. இதுவா பேரழிவின் ஒலி? பாதாள இருள்களை தொட்டெழுப்பும் அழைப்பு. இத்தனை பேரழகுடனா? இதோ இந்த வசிய மந்திரங்களால் கவரப்பட்ட ஏதோ தேவன் இங்கு வரப்போகிறான்… மனம் முழுக்க புகை படர்ந்தது போலிருந்தது அவருக்கு .

யாஜர் எள்ளிலிருந்தும் கையால் பிழியப்பட்ட எண்ணையையும், திப்பிலியையும் சேர்த்து அவிஸாக பெய்தபடி ஆபிசார மந்திரங்களை ஆரம்பித்தார். பின்பு பரதம், கரம்பம்,எட்டி,பெருமரம் எனும் நான்கு வகை விஷஇலைகளும், கர்ப்பூர வழுதலை , செருத்தி, வைராடகம், சறாபாகம், நாயுருவி, சாலகம்,மலைவன்னி எனும் ஏழுவகை விஷ கனிகளும், எட்டுவகையான ஸ்கந்த விஷ வேர்களும் அவிஸாக்கப்பட்டன . பன்னிரு வகை முள்செடிகள் இறுதியாக ஹோமிக்கப்பட்ட போது துருபதன் கண்கள் கனத்து மனம் அர்த்தமற்ற சொற்களாக பாய்ந்துசெல்ல கனவு காண்பவன் போல அமர்ந்திருந்தான் .

உச்சகுரலில் யாஜர் ” ஓம் , ஹ ! ஹ! அயந்தேயோனிஹ …” என்று புத்திரலாபத்துக்குரிய அதர்வ வேத மந்திரத்தை முழங்க மற்ற ஹோதாக்கள் அவருடன் இணைந்துகொண்டனர் . அவிசிடுவது நின்றமையால் புகை குறைந்து மெல்ல மெல்ல யாக குண்டத்தின் செஞ்சுடர் உக்கிரம் பெற்று மேலெழுந்து பந்தலின் தர்ப்பைக் கூரையை பொசுக்கிவிடுவதுபோல கூத்தாடியது . வானையே உண்ணும் பெரும்பசி கொண்ட மாபெரும் நாக்கு போல , சர்ப்ப நாக்குகளாலான கூட்டு நடனம் போல , வான் நோக்கி பெய்யும் செம்பளிங்கு நீர் அருவி போல , சன்னத வெறிகொண்ட வெறியாட்டி பலிரத்தத்தில் முக்கி உக்கிரமாக சுழற்றும் செக்கச் சிவந்த தலைமயிர் போல … பின்பு மெல்ல அமைதியாகி கிளைவிரித்து காற்றிலாடும் செம்மலர்கள் அடர்ந்த மரம் போல ….

யாஜர் துருபதனை நோக்கி திரும்பினார். ‘பாஞ்சாலனே, எங்கள் உபாசனாதேவர்கள் அருள்செய்திருக்கிறார்கள். சிருஷ்டிதேவியின் தமக்கையான சம்ஹார தேவியே உன் மனைவியில் உதரத்தில் கருவாகி பிறப்பாள். அவள் காலடி பட்ட இடமெங்கும் நகரங்கள் அழியும். சாம்ராஜ்யங்கள் சரியும். அவள் கண்முன் மனிதகோடிகள் மடிந்து மண்ணாவார்கள். அவள் உன் வஞ்சினத்தைத் தீர்ப்பாள்…’

உபயாஜர் ஒரு பெரிய தாம்பாளத்தைக் கொண்டுவந்து துருபதன் முன்னால் வைத்தார். ‘துருபதனே, இந்த தாம்பாளத்து நீரில் உன் மகளை நீ பார்க்கலாம்…’ துருபதன் தீபட்ட குதிரை போல பதறிவிலகும் பிரக்ஞையை பிடித்து முழுப்பலத்தாலும் நிறுத்தி ‘இல்லை, வேண்டாம் மகாவைதிகரே…அவள் பிறக்கட்டும்’ என்றான். ‘நீர் அவளை பார்ப்பது நல்லது’ என்றார் யாஜர். ‘வேண்டாம்…பார்த்தால் ஒருவேளை நான் மனம் மாறக்கூடும்’ என்றான் துருபதன். ‘அவள் எப்படி இருந்தாலும் என் மகள்தான்’

‘நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா அரசியாரே?’ என்றார் உபயாஜர். ‘ஆம், வைதிகரே. அவள் எப்படி இருந்தாலும் என் மகள்தான்…பிறக்கவேண்டும் என அவள் முடிவுசெய்தபின் நான் அவள் அன்னைதான். என் மகளை எனக்குக் காட்டுங்கள்’

‘பாருங்கள்’ என்றார் யாஜர். துருபதன் ராணி தாம்பாளத்து நீரை குனிந்து பார்த்தாள். அவள் மூச்சை இழுத்து பிரமிக்கும் ஒலியை துருபதன் கேட்டான். ‘தெய்வமே’ என்ற அவளுடைய மெல்லிய கேவலை பின்பு கேட்டான். அந்த சித்திரத்தை பார்க்க விழைந்தான். ஆனால் கண்களை திருப்ப அஞ்சினான். தேவி அவன் கைகளைப்பிடித்துக்கொண்டாள். ‘…தெய்வமே இவளா?’

அக்கணம் தன்னையறியாமலேயே கண்ணைத்திருப்பிய துருபதன் அவளைக் கண்டான். தாம்பாளத்தில் அத்தனை பெருங்காவியங்களின் வர்ணனைகளையும் வெறும் சொற்களாக ஆக்கும் பேரழகி ஒருத்தி அவனைநோக்கிப்புன்னகை செய்தாள். அவளுடைய முதிரா இளமை, அவளுடைய தூய கன்னிமை, அவளுடைய கனிந்த தாய்மை என அவளே பலவாக தெரிந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு மாற்றத்திலும் முன்னதை வெறுந்தோற்றமென காட்டுமளவுக்கு மேலும் அழகு கொண்டாள்

‘வைதிகரே, இவளா?’ என்றான் துருபதன். ‘ஆம், இவளேதான்’ ‘இந்த பேரழகியா?’ யாஜர் சிரித்து ‘மாயையின் அழகு கண்டு விஷ்ணுவே மயங்கினார் என்கின்றன நூல்கள்’ என்றார். துருபதன் ‘யாஜ மகாபாதரே இவள் குணமென்ன?’ என்றான் ‘ஒவ்வொரு அணுவிலும் சக்கரவர்த்தினி. சிறுமை தீண்டாதவள். ஞானமும் விவேகமும் கருணையும் ஒன்றான குலமகள். மானுடக்குலத்தின் நினைவில் என்றும் நிலைக்கும் அன்னை. உன் குலத்தின் தெய்வமே இனி இவள்தான்’

‘மகாவைதிகரே, இவளுக்கு தந்தையாவதைவிட எனக்கு என்ன பேறு இருக்க முடியும்? இவள் என் கைகளில் தவழ்ந்தால் என் பிறவிக்கு வேறென்ன முக்தி தேவை? இவள் என் மகள்.. இனி இவளுக்குரியது என்குலம். இவள் பெயர் திரௌபதி, இனி இவள்தான் பாஞ்சாலி…’ கைகள் நடுங்க அந்த நீரை தொடப்போனான். கனவு கலைவது போல அது கலைந்தது

‘ஆனால்…’ என்று ஏதோ சொல்ல நாவெடுத்தார் யாஜர். பின்பு புன்னகையுடன். ‘…அவ்வாறே ஆகுக’ என்றார்.

ஆனந்தக்கண்ணீர் நடுங்கும் முகத்துடன் மனைவியை அணைத்துக்கொண்டு துருபதன் யாகசாலை நீங்கினான். யாககுண்டத்தில் தன் கையின் கடைசி சமித்தையும் அர்ப்பித்துவிட்டு யாஜர் வெளியே வந்தார். நெருப்பு எழுந்து யாகவிருட்சத்தை தொட்டது, யாகசாலைமேல் எழுந்து வானின் இருளை நோக்கி தாய்மடி முட்ட தாவும் சிவந்த பசுக்கன்றுபோல துள்ளியது. 

தொடர்புடைய சிறுகதைகள்
கடைசி முகம்
கதை ஆசிரியர்: ஜெயமோகன். …….சரி, நான் இக்கடிதத்தை எழுத வந்த விஷயத்தை சொல்கிறேன். சென்றவாரம் அனந்தன் தம்பி ஒரு கத்தை சுவடிகளை அனுப்பியிருந்தான் . எல்லாம் கொல்லம் — கோட்டயம் சாலையில் உள்ள துளசிமங்கலம் என்ற புராதன நம்பூதிரி மடத்தில் கிடைத்தவை . ...
மேலும் கதையை படிக்க...
பாபு மிகவும் களைத்திருந்தார் என்று பட்டது. தீதி வந்து இரவு உணவிற்குப் பின் அவர் சீக்கிரமே தூங்கிவிடுவார் என்றும், இரவு உணவும் சற்று முன்னதாகவே வேண்டும் என்றும் சொன்னாள். சோகன் ராமுக்கு அது சற்று ஆசுவாசமாக இருந்தது. வேகவைத்த இரு வாழைப்பழங்களும் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன். *1* கி.மு. 493இல் சிரேணிக வம்சத்தைச் சார்ந்தவனாகிய அஜாத சத்ரு தன் தந்தையும் மகத மன்னனுமாகிய பிம்பிசாரனை கைது செய்து சிறையிலிட்டான். பிம்பிசாரன் அந்தப்புரத்தில், நாயகியரில் ஒருத்தியைக் கூடியபடி இருந்த நேரம், திட்டமிட்டிருந்தபடி அஜாதசத்ரு தன் வீரர்களுடன் நுழைந்தான்.  மஞ்சத்தில் நிர்வாணமாக இருந்த பிம்பிசாரணை அப்படியே ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன். எரியும் வெளியில் புகைந்தபடி வெளிறிக் கிடந்தது கங்கை. கரையோரத்துச் சதுப்புகளில் மண்டியிருந்த கோரைகள் காற்றுப்படாமல் அசைவற்று நிற்க நீரின் சிற்றலைகள் கரை மண்ணை வருடும் ஒலிகளில் நதி தனக்குத்தானே மெல்லப்பேசிக்கொண்டிருந்தது. கரையோர மர நிழல்களில் பெரிய அண்டாக்களில் சூதர்கள் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன். வாசலில் நின்றிருந்தவர் ‘உள்ள வாங்கோ…இருக்கார்’ என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘வணக்கம்’ என்றபடி செருப்பை கழட்டினேன். அவர் செருப்பை தன் கையில் எடுத்துக்கொண்டார். ’வெளியே போட்டா நாய் தூக்கிட்டு போய்டுது சார்… உள்ளே போங்கோ’ அகலமான கல் வேய்ந்த திண்ணைக்கு ...
மேலும் கதையை படிக்க...
கடைசி முகம்
மெல்லிய நூல்
பாடலிபுத்திரம்
நதிக்கரையில்
அறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)