அணையா விளக்கு

 

“நாணா, உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம லலிதா மேடம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்”

ரங்கசாமி சொன்னதும் அதிர்ச்சியால் கையில் உள்ள பேப்பர் கீழே விழ “வாட் நான்சென்ஸ், உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு இப்படியொரு புரளியைக் கிளப்பி விட?” கோபமுற்றான் நாணா என்ற நாராயணசாமி.

“ஆமாண்டா, நாணா, நானும் அப்படித்தான் விஷயத்தைக் கேட்டதும் பதறிப் போனேன். பின்னர் மேடம் வீட்டு வேலைக்காரனிடம் கேட்டபொழுது அது உண்மை தானென்றும் அதற்குத் தானே சாட்சிக் கையெழுத்துப் போட்டதாகவும் சொன்னான்.”

“அப்படி, யாரைடா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க?” இன்னமும் நம்பாமல்தான் கேட்டான் நாணா.

“அவங்க வீட்ல தங்கியிருந்தானே, வேலை கிடைக்காம அனாதை பாஸ்கரன் அவனைத்தான்!”

“என்னது!? நீ……. சொல்றது ……. உண்மைதானா? அதிர்ச்சியாலும், வியப்பாலும் திணறிப்போனான்.

அதற்குள், அவர்கள் சம்பாஷணையில் குறுக்கிட்டாள் நாணாவின் மனைவி கமலி.

“எனக்கு அப்பவே தெரியும் இப்படியொரு அசிங்கம் நடக்கும்னு! கல்யாணம் வேண்டான்னுட்டு இந்தப் பெண்கள் சொல்றதெல்லாம் சுத்த ஹம்பக். இந்தப் பையனை வீட்டிலே கொண்டாந்து வைச்சுக்கிட்டப்பவே தெரியும். ஊரெல்லாம் கண்டபடி பேசினப்பக்கூட நீங்கதான் எங்க மேடம் அப்படிப்பட்டவங்க இல்லேன்னு உசத்தியா துhக்கி வைச்சுக்கிட்டீங்க, இப்ப என்ன சொல்றீங்க?”

“கமலி. உள்ளே போ. எங்க மேடத்தைப் பற்றி இனிமேலே ஒரு வார்த்தை நீ சொன்னாலும் இங்கே ஒரு கொலையே விழும்” சப்தமிட்டான் நாணா.

“ஹுக்கும்” நொடித்துக் கொண்டே உள்ளே போனாள் கமலி.
நாணாவிற்குத் தலை சுற்றியது. மேடத்திற்கு ஐம்பத்தாறு, அல்லது ஐம்பத்தேழு வயதுதான் இருக்கும். இன்னும் இரண்டொரு வருடத்தில் ரிடையர் ஆகிவிடுவார். இந்த சமயத்தில் போய் திருமணமா? வேறு யாராவது இப்படிச் செய்து கொண்டார்கள் என்றால் கூட நம்பலாம். ஆனால்… லலிதா மேடம் அப்படியெல்லாம் லேசில் உணர்ச்சிவசப்படக் கூடியவரும் அல்லவே. மேடம் இந்த ஊருக்கு வந்த பொழுது முப்பதுக்குள்தான் இருக்கும் வயது. ஆளை மயக்குகிற அழகு. சிவந்தமேனி. அமைதியானமுகம். எப்பொழுதும் புன்முறுவல் தவழும் லக்ஷ்சுமி கடாட்சம் பொருந்திய முகம், ஆர்ப்பாட்டமில்லாத அமைதிப் பேச்சு, அந்த இளவயதிலேயே ஏற்பட்டுவிட்ட அறிவு முதிர்ச்சி இவையெல்லாம் நாணாவுடன் சேர்ந்து எல்லா மாணவர்களையும் கட்டிப் போட்டிருந்தது.

தலைமையாசிரியர் கூட மேடத்திடம் மரியாதை வைத்திருந்தார். மேடத்திற்கு பாரலிஸஸ் வந்த அம்மாவைத் தவிர வேறு யாரும் கிடையாது. காலையில் எழுந்து அந்த அம்மாவுக்கு அமைதியாக சிட்சை செய்ததைப் பார்த்து நாணாவும் நண்பர்களும் வியந்திருக்கிறார்கள். இந்த சின்ன வயசிலேயே எப்படி இத்தனை பொறுமை, பொறுப்பு என்று.

அந்த வயசிலெல்லாம் வராத ஆசை எப்படி? நாணாவுக்குத் தெரிந்து லலிதாமேடம் தனக்கென்று எதையுமே செய்து கொண்டது கிடையாது. அவங்க அம்மா இறந்த பிறகும் கூடத் தன் வருமானத்தில் தனக்குப் போக மீதியை அனாதைப் பையன்களுக்கு சீருடை, புத்தகம் வாங்கத்தான் வழங்கியிருக்கிறார்கள்.

இப்ப அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களே, அந்த அனாதைப்பய பாஸ்கர், அவன்கூட அவங்க மாணவன்தான். வேலை கிடைக்கல்லே, லஞ்சம் கொடுக்கவும் வழியில்லேன்னு வந்து நின்னப்ப, அவங்க குடும்பத்துக்கு மட்டுமல்ல அவனுக்கும் அவங்களே சோறு போட்டதா கேள்விப்பட்டான் நாணா.

அப்படி, அந்த சின்ன வயசிலே எல்லோருக்கும் நிழல்தரும் மரமா இருந்த மேடமா இன்னைக்கு இப்படியொரு இழிவான காரியத்தைச் செஞ்சிருக்காங்க!

ஊரெல்லாம், ஆளுக்கு ஆள் அவர்கள் உதவி பெற்றவர்கள் கூட வார்த்தைக்கு வார்த்தை துhற்றினார்கள்.

ஷேக்ஸ்ஃபியர், நெப்போலியன் வகையறாவிலே சேர்ந்துட்டாங்கடா நம்ம மேடம் என்று நண்பர்கள் கேலி பேசினார்கள்.

ஏன் இப்படிச் செய்யணும், அவங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சிருந்தா, பள்ளிக்குப் புதிதா வந்த ஜகன்னாதன் சாரை பண்ணியிருந்திருக்கலாமே! அவருக்கு மேடத்துக்கிட்ட மதிப்பு மட்டுமல்ல ஆழ்ந்த அன்பும் உண்டே! மேடத்துக்குப் பயந்து தன் அன்பை நாணாகிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கார். அதைப்பார்த்து நாணா ஒரு தடவை மேடத்திடம் துணிவாக சென்று “நீங்க ஏன் மேடம்! ஜகன்னாதன் சாரை கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு” கேட்டதற்கு கூட மேடம் கோபிக்காமல் “இல்லே நாணா! என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்கமுடியாது எல்லோருமே என் கண்களுக்கு சகோதரர்களாகத்தான் தெரியறாங்க” – அப்படின்னு அன்னைக்கு தத்துவம் பேசின மேடமா இன்று இத்தனை வயதிற்கு மேலே, கேவலம் தன்னை விட, சிறியவனை, தம் மாணவனையே மணந்திருக்காங்க. சே! என்ன இருந்தாலும் தான் ஒரு சராசரிப்பெண் என்று நிரூபிச்சுட்டாங்களே! அவனுக்கு மேடத்தைப்போய் பார்க்கவே பிடிக்கவில்லை.

ஒரு மாதம் சென்றிருக்கும்.

ஒருநாள் அவசரம், அவசரமாக வந்த ரெங்கசாமி “நாணா, ஸாரி நியூஸ், நேற்றுமாலை நம்ம லலிதா மேடம் ஹார்ட் அட்டாக்கிலே இறந்துட்டாங்க.”

“என்ன! அதிர்ச்சியால் வாயடைத்துப் போய் நின்றான் நாணா.

“ஆமாம், நாணா, அவங்க வேலையிலிருந்த பொழுதே இறந்துவிட்டதால் அந்த வேலை ஆட்டோமாட்டிக்காக பாஸ்கருக்கு கிடைக்குமாம் சக ஆசிரியர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
இத்தனை நாள் தெளிவில்லாமல் மேடத்தைப்பற்றி குழம்பிக் கொண்டிருந்த நாணாவின் மூளையில் பல கேள்விகளுக்கான பதில்கள் பளிச்சிட்டன.

ஒருவிளக்கை ஏற்றுவதற்காகத் தன்னையே அழிச்சுக்கிட்ட அந்த அணையா விளக்கின் தத்துவம் அவனுக்கு இப்பொழுது நன்றாகப் புரிந்தது.

“மேடம் என்னை மன்னிச்சிடுங்க” அந்த நல்ல ஆத்மாவின் அடிப்படை ராகத்தைப் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களைப்போல் நானும் நினைத்து விட்டேனே என்று கண்ணீர் வற்றும்வரை அழுதான் நாணா.
பெரும் மலர்வளையம் கொண்டு போய் வைத்து ‘மேடத்தை’ வழியனுப்பி வைத்து விட்டு வந்தான் நாணா. அவன் மாற்றத்திற்கு காரணம் புரியாமல் ரங்கசாமியும், கமலியும் வாயடைத்து நின்றார்கள்.

- மின்மினி 

தொடர்புடைய சிறுகதைகள்
அம்மாவின் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்தான் ஈஸ்வரன் . "ஜாதகம் பொருந்திருப்பதாக பெண் வீட்டவர்கள் சொல்கிறார்கள் .பெண்ணை பெற்றவர் அமெரிக்காவில் பெரிய வேலையில்இருக்கிறார் பெண் சென்னை கல்லூரியில் பி ஏ ,படித்தவள் .பாடத்தெரியும் .பரத நாட்டியம் அரங்கேற்றம் கூட ஆகிவிட்டது .வீட்டு வேலைகள் ...
மேலும் கதையை படிக்க...
“எனக்கு அப்பவே தெரியும். நான் எத்தனை படிச்சு, படிச்சு சொன்னேன். கேட்டியா? ரொம்ப மேதாவியா உன்னை நினைச்சு செஞ்சே, இப்ப என்ன ஆச்சு? அத்தனையும் போச்சு” – அப்பா. “பணம், பணமுன்னு பறந்தியே, இருக்கிற வேலை போதாதா? ஏன் அகலக்கால் வைக்கணும்” – ...
மேலும் கதையை படிக்க...
“டிங்டாங். டிங்டாங்” காலிங்பெல் சப்தம் கேட்டு பரமேஸ்வரன் எழுந்து கதவைத் திறந்தவர். “ஓ... பிருந்தாவா? வா, வா குட் ஈவினிங்” உற்சாகமாக வரவேற்றார். “குட் ஈவினிங், எங்கே சார் ஒய்ப் இல்லே?” ‘இருக்கா, இருக்கா அவ உலகத்திலே ஐ மீன் அடுப்படியிலே.’ அதைத் தொடர்ந்து க்ளுக்’ என்று சிரித்தாள் ...
மேலும் கதையை படிக்க...
உஷா அந்த ஹாலின் அழகான டைனிங் டேபிளை பார்த்து ஒரு முறை பெருமூச்சு விட்டாள். வெள்ளித்தட்டுகள், பீங்கான் கோப்பைகள், கண்ணாடி கிண்ணங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நறுமணம் கமழும் சுவையான, தென்னிந்திய சமையல், பாஸ்ட் பூட், எல்லாம் உள்ளே தயாராகி கொண்டிருந்தன. ...
மேலும் கதையை படிக்க...
சாப்பாடு ஆனதும் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர். “இந்தாப் பாரு சுந்தரம் நான் சொல்றேன்னு வருத்தப்படாதே.  இந்த உலகத்திலே பணம் தான் முக்கியம். மற்றது எல்லாம் அப்புறம் தான்.  பெண்களைக் கட்டிக் கொடுத்து விட்டு நாம் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.  அது அது வாழ்க்கையை அது ...
மேலும் கதையை படிக்க...
பொன்மனம்
உன் பங்கு…என் பங்கு…
கதையாம் கதை
கொடுத்து வைத்தவள்
வியாபாரம்னா வியாபாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)