அட்டெண்டர் ஆறுமுகம்

 

நூற்றுக்கணக்கான பேர்கள் பணியாற்றும் அந்த அலுவலக வேலை நேரம் முடிந்து அநேகமாக எல்லோரும் வெளியேறிய பின், மிகவும் தயங்கியவாறே, மேனேஜர் அறைக்குள் மிகவும் பவ்யமாக நுழைந்தான் அட்டெண்டர் ஆறுமுகம். வயது ஐம்பத்தாறு. சற்றுக் கருத்த நிறம். ஒல்லியான தேகம், நெட்டையான உருவம், ஒடுங்கிய கன்னங்கள், முரட்டு மீசை, காக்கியில் யூனிஃபார்ம் பேண்ட் சட்டை, கழுத்துக் காலரில் எப்போதும் ஒரு கர்சீஃப், அடுத்தவருக்கு இரக்கம் ஏற்படுவதுபோல ஒருவிதப் புன்னகையுடன் கூடிய ஏக்கப் பார்வையும், கூழைக் கும்பிடும்தான் ஆறுமுகத்தின் அங்க அடையாளங்கள்.

“கும்புடறேன் எஜமான்” குழைந்தான், ஆறுமுகம். “என்ன ஆறுமுகம், என்ன தயங்கித் தயங்கி நிற்கிறீங்க! என்ன வேணும்? சொல்லுங்க” மேனேஜர் அவர்கள் கனிவுடன் வினவினார்.

“ஐயா, என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு இருக்கேன். புரோக்கர் நல்ல இடமா ஒன்று பார்த்துச் சொல்லிருக்கார். மேற்கொண்டு பேசி முடிக்கணும். சரிப்பட்டு வந்தால் வரும் தை மாசத்திலே முடிச்சுடலாம்னு நினைக்கிறேன்” என்றான்.

“ரொம்ப சந்தோஷம், ஆறுமுகம். ஏதாவது பி.எஃப். லோன் அவசரமாக சாங்ஷன் செய்யணுமா? வேறு ஏதாவது உதவி தேவையா? நீங்க தான் இந்த ஆபீஸிலேயே ரொம்ப வருஷம் சர்வீஸ் போட்ட பழைய ஆளு. சங்கோஜப்படாம எது வேணுமானாலும் தைரியமாக் கேளுங்க” என்றார் மேனேஜர்.

“உங்க புண்ணியத்திலேயும், கடவுள் புண்ணியத்திலேயும், வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி, பொண்ணு பிறந்த நாளிலிருந்து அவள் கல்யாணத்திற்காக ஓரளவு பணம், நகைகள், பாத்திரம் பண்டங்கள் எல்லாம் சேர்த்து வைச்சிருக்கேன், ஐயா” என்றான்.

“வெரிகுட், அப்புறம் என்ன ஆறுமுகம்? சீக்கரம் போய்ப் பேசி முடிக்க வேண்டியது தானே?”

“பேசி முடிச்சுட்டா, பத்திரிக்கை அடிக்கணுமே, ஐயா” என்றான்.

ஆறுமுகம் சற்று தயங்கிவிட்டு, “ஐயா, நானும் இந்த ஆபீஸிலே சேர்ந்து இன்னியோட முப்பத்தாறு வருஷம் ஆச்சு. இருபது வயசிலே இங்க வேலையிலே சேர்ந்தேன். இன்னும் ரெண்டு வருஷங்களில் ரிடய்ர் ஆகப்போகிறேன். நானும் உங்களை மாதிரி இதுவரை என் சர்வீஸில் ஒரு இருபது மேனேஜர்களைப் பார்த்துட்டேன். டிரான்ஸ்ஃபரில் இங்கே வருவீங்க, ஒரு வருஷமோ, இரண்டு வருஷமோ அதிகபட்சம் மூன்று வருஷங்களில் பதவி உயர்வு பெற்று வேறு ஆபீஸ¤க்கு மாற்றலாகிப் போய்விடுவீங்க. ஆனால் என் நிலைமையைச் சற்று யோசித்துப் பாருங்க. இந்த ஆபீஸில் வேலைக்குச் சேரும் போது அட்டெண்டர், பொஞ்சாதி அமைஞ்ச போதும் நான் அட்டெண்டர், இப்போ என் பொண்ணைக் கட்டிக் கொடுக்க நினைக்கும் போதும் அதே அட்டெண்டர், நாளைக்கே ஒரு வேளை ரிடய்ர்ட் ஆனாலும் முன்னாள் அட்டெண்டர். எனக்கே என்னை நினைக்க வெட்கமாக இருக்கு ஐயா. வருஷா வருஷம் இன்க்ரிமெண்ட் கிடைக்குது, சம்பளம் உயருது, பஞ்சப்படி உயருது, ஓவர் டைம் பணம் கிடைக்குது, போனஸ் கிடைக்குது. எல்லாமே கிடைச்சும், பொண்ணுக்கு சம்பந்தம் பேசுற இடத்தில் என்ன வேலை பார்க்கிறீங்கன்னு கேக்கும்போது சொல்ல சங்கடமா இருக்கு. ; நாளைக்கு மாப்பிள்ளையாக வரப் போறவரும் தன் மாமனார் ஒரு அட்டெண்டர்னா, மதிப்பாரான்னு தெரியலை. இதையெல்லாம் ஐயா கொஞ்சம் தயவு செய்து நினைச்சுப் பாத்து மேலிடத்திலே சொல்லி ஏதாவது ஒரு மாற்று வழி பண்ணணும்” என்றான் ஆறுமுகம்.

அதிகம் படிக்காதவனாக இருப்பினும், அனுபவ அறிவினாலும், ஆர்வத்தினாலும் பல விஷயங்களில் மிகவும் கெட்டிக்காரனான ஆறுமுகத்தின் கோரிக்கையில் உள்ள நியாயமானதொரு சமூகப் பிரச்சனையை முற்றிலும் உணர்ந்தார், மனிதாபிமானம் மிக்க அந்த மேலாளர்.

அடுத்து வந்த இயக்குனர்கள் கூட்டத்தில் இந்த விஷயத்திற்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்துப் பேசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து ஒரு சுமுகமான தீர்வுக்கு வழி செய்தார்.

படிக்காதவராக இருப்பினும், 10 ஆண்டுகள் சர்வீஸ் செய்து முடித்த அட்டெண்டர்களை “ஃபோடொ காப்பி ஆப்பரேட்டர்களாகவும்”, 20 ஆண்டுகள் சர்வீஸ் முடித்தவர்களை (ஆவணக் காப்பாளர்) “ரிக்கார்டு கீப்பர்களாகவும், 30 ஆண்டுகள் சர்வீஸ் முடித்தவர்களை “அலுவலக குமாஸ்தாக்களாகவும்” உடனடியாகப் பதவி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆர்டரைக் கையில் பெற்ற ஆறுமுகத்துக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பெண்ணுக்குக் கல்யாண ஏற்பாடு செய்து மாப்பிள்ளை வரப்போகும் நல்ல வேளைதான் ஆறுமுகத்திற்கு பிரமோஷன் ஆகியுள்ளதாக அலுவலகத்தில் அனைவரும் பேசிக் கொண்டனர்.

- ஜூலை 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
பிஸினஸ் விஷயமாகச் சென்னைக்கு வந்திருந்த மஹாலிங்கத்தின் செல்போன் சிணுங்கியது. "குட் மார்னிங்...ஜெயா....சொல்லு" என்றார், டெல்லியிலிருந்து பேசும் தன் ஒரே அன்பு மகளிடம். ஜெயாவுக்கு குரல் நடுங்கியது. அவள் அழுது கொண்டே பதட்டமாகப் பேசுவது இவருக்குப் புரிந்தது. "அப்பா.....தாத்தா சென்னையிலே ஒரு சாலை விபத்திலே இறந்து ...
மேலும் கதையை படிக்க...
தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறுவதில், செருப்பு தைக்கும் சங்கிலியாண்டிக்கு ஒரே வருத்தம். ஒரு அரைப்பவுன் தங்கமும், ஒரு நல்ல சேலையும் வாங்கப்பணம் சேர்ந்துவிட்டால் போதும். யாராவது ஒரு பொண்ணைப் பார்த்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கணக்குப் ...
மேலும் கதையை படிக்க...
நீண்ட நாட்கள் வடக்கேயே வேலை பார்த்து வந்த நமச்சிவாயத்திற்கு ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளராகப் பதவி உயர்வுடன், சொந்த ஊருக்கே மாற்றலும் ஆகி விட்டது. சுமார் முப்பது வருடங்கள் கழித்து தன் சொந்த ஊருக்கே வந்துள்ள அவருக்கு பலவிதமான மாற்றங்கள் ...
மேலும் கதையை படிக்க...
மணி நான் வேலை பார்க்கும் அரசாங்கத் தொழிலகத்தில் உள்ள உணவகத்தில் தற்காலிக உதவியாளராகச் சேர்ந்தது ஓராண்டுக்குள் தான் இருக்கும். மேஜைகளைச் சுத்தம் செய்வது, சாப்பிட்டத் தட்டுகளை கழுவுவது முதல், உணவுப்பதார்த்தங்கள், சிற்றுண்டி முதலியன தயாரித்து, பரிமாறுவது வரை அனைத்து வேலைகளையும், சுத்தமாகவும், ...
மேலும் கதையை படிக்க...
அன்று வெள்ளிக்கிழமை. ஆபீஸுக்கு வந்து இரண்டு மணி நேரம் கூட ஆகாத நிலையில் அந்த அழைப்பு வந்தது. "ராமசுப்பு ஸார்! ஒங்களுக்கு வீட்டிலிருந்து போன் வந்திருக்கு" மேனேஜரின் ஸ்டெனோ புன்சிரிப்புடன், குரலில் தேன் ஒழுகக் கூப்பிட்டாள். தன் டேபிளிலிருந்து தாண்டிக்குதித்து வந்து "தேங்க்யூ ...
மேலும் கதையை படிக்க...
சூழ்நிலை
தங்கமே தங்கம்
அழகு நிலையம்
சோறு கண்ட இடமே சொர்க்கம்
எலிஸபத் டவர்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)