அடியாளும் கடத்தப்பட்டவனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 8,566 
 

ஏற்கனவே திட்டமிட்டபடி அந்த அடியாள் அந்த கார்-ஐ வழிமறித்து, ஓட்டுனரை அடித்துவிட்டு, அதிலிருந்த வாலிபனை வெளியே இழுத்து தன்னுடைய வண்டியில் ஏற்றிக் கொண்டு விருட்டென்று கிளம்பினான்.

எப்போதும்போல் பிரத்யேக இடமான ஒரு சேமிப்பு கிடங்கில் அந்த வாலிபனை கட்டி வைத்திருந்தான். நேரம் எந்த சலனமுமின்றி சற்றே அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. அவனுக்குக் கைப்பேசியில் அழைப்பு வந்தது. பேசிவிட்டு வந்து அமர்ந்தான்.

கடத்தப்பட்டவன் தொண்டையைக் கனைத்து அமைதியைக் கலைத்தான். “ஏன் என்னைப் பிடிச்சிட்டு வந்தீங்க” என்று மரியாதையாகவே கேட்டான். அதற்கு பதில் ஏதும் வரவில்லை. மறுபடியும் “ஏதாவது பேசுங்களேன்” என்றான். “கொஞ்சம் சும்மா இரு” என்றான் அடியாள்.

அவன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். அவன் செய்து முடித்த இந்த வேலைக்கு தலைவனிடமிருந்து இன்னும் ஒப்புதல் வரவில்லை. அதை எதிர்பார்த்து காத்திருந்தான். அந்த வெறுப்பில் தான் அவனிடமிருந்து வந்த பதில் அது. இருந்தும் கடத்தப்பட்டவன் அவனை விடாமல் தூண்டிக் கொண்டிருந்தான்.

“யாரையோ நெனச்சு என்ன தப்பா பிடிச்சுட்டு வந்துட்டீங்கனு நெனக்கிறேன்” என்றான்.

“சும்மா தொண தொணன்னு. என்ன வேணும் உனக்கு” என்றான் அடியாள். “இல்ல நீங்க யாரு? எதுக்கு என்ன கடத்தனும்? என்றான் அவன். “அதெல்லாம் எனக்கே தெரியாது. எங்க போய் உன்ன தூக்கனும்-னு சொன்னாங்க அவ்வளவுதான்”. அடுத்து என்ன நடக்கப் போகும் என்று தெரியாததால், கடத்தப்பட்டவனுக்கு அந்த நேரத்தில் அடியாளின் எண்ணங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள முயற்சித்தான்..
கடத்தப்பட்டவன் அடியாளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு “உங்க சூழ்நிலைக் காரணமாகதான் நீங்க இந்த தொழில செய்றீங்க-னு நெனக்கிறேன். ஏன்னா எனக்கு உங்களப் பார்த்தா நல்லபடியா தோணுது. வேற மாதிரியான வேலைக்குப் போயிருக்கலாம் நீங்க” என்றான்.

கடத்திக் கொண்டு வரப்பட்டவன் பக்குவபட்ட இளைஞன் போல் இருந்தான் அவன் பார்வையில். முதல் முறையாக தன்னைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் இந்த சந்தர்பத்தில் வரும் என்றும் அதுவும் தான் கடத்திக் கொண்டுவந்தவனிடத்தில் இருந்து வரும் என்று அடியாள் நினைக்கவில்லை.

அந்த சிறு விஷயம் கடத்தப்பட்டவன் மேற்கொண்டு அடியாளிடம் பேசுவதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது. “இப்ப செய்யற இந்த வேல கண்டிப்பாக உங்க லட்சியமா இருக்காதுன்னு தெரியும். இருந்தாலும் இதுக்கப்புறம் வாழ்க்கையிலே எந்த ஒரு இலக்கும் இல்லாம எப்படி இருக்க முடியும்” என்றான் இளைஞன்.

மௌனத்தை கலைத்துப் பேச ஆரம்பித்தான் அடியாள் “அதெல்லாம் தெரியாது. வேலைய முடிச்சா பணம் தருவாங்க” என்றான். உடனே கடத்தப்பட்டவன் “அப்புறம்” என்றான். அதற்கு அவன் “குடிக்கலாம், ஜாலி-யா இருக்கலாம்”. இப்படியாக இளைஞன் “அப்புறம் அப்புறம்” என்றதும் ஒரு கட்டத்தில் அடியாளிடம் பதில் இல்லை. விழித்தான். “அதுக்கப்புறம் என்ன வேணும்” என்று சமாளித்தான். அதில் ஒரு ஏளனம் வேறு இருந்தது. இளைஞன் “இப்படியே இதுக்கப்புறம்-னு உங்களையே அடிக்கடி கேட்டுப் பாருங்க. நான் கேக்கறதோட அர்த்தம் புரியும்”. எப்போதுமே நாம் நம்மைக் கேள்வி கேட்டு பழக்கிக் கொள்வதில்லை. அது அடியாளை யோசிக்க வைத்தது.

சற்று நேரம் அமைதியாக இருந்த அடியாள் மெதுவாக தனக்கு நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தான். “எல்லோரும் நெனச்சது போலவா எல்லாம் நடக்குது. இது போல செய்வேன்னு நானும் நெனக்கல. அது தானா நடந்தது, நடக்குது”. நிறைய தருணங்களில் சூழ்நிலைகள் நம்மை சுவீகாரம் எடுத்துக்கொள்ளும். அது அவனுக்கும் நேர்ந்தது போல் இருந்தது அவன் கூறிய கதை.

“அப்பா ஃபினான்ஸ் பிசினஸ் பண்ணிடிருந்தார். அம்மாவும் அவருக்கு உதவின்னு எப்பவுமே ரெண்டு பேரும் பிஸி. அதனால எனக்கு எது வேணா கிடைக்கும் அவங்களோட இருக்கறத தவிர. எனக்கு நிறைய நண்பர்கள் நிறைய பழக்கங்கள்-னு வாழ்கை ஜாலி-யா போச்சு. குடுக்கல் வாங்கல் பிரச்சினையிலே பெரிய நஷ்டம் வர, அதுல அப்பா இறந்துட்டார். அடுத்த ஒரு மாசத்துல அம்மாவும் இறந்து போக ஒரே நாள் எல்லாம் தலைகீழா மாறிடிச்சு. அந்த நேரத்துல தட்டிக் குடுக்க வேண்டியவங்க எல்லாம் தட்டி விட, மனுஷங்களா இருந்தவங்க மறஞ்சு போனாங்க. அந்த நேரத்துல என்ன தூக்கி விட்டு இந்த வேலை கொடுத்தவங்க எனக்கு தெய்வமா தெரிஞ்சாங்க. அவ்வளவுதான் அன்னைலேர்ந்து ஓடிட்டிருக்கேன். இதுவரைக்கும் இது சரியா தப்பா-னு யோசிச்சதே கிடையாது. இதுதான் எனக்கான வழின்னு நெனச்சேன்” என்று பேசுவதை நிறுத்தினான். அவன் பார்வை நிலத்தை நோக்கி நிலைக் குத்தி இருந்தன. வார்த்தைகள் வரவில்லை.

கடத்தப்பட்ட இளைஞன் அங்கு நிலவிய மௌனத்தை விலக்கித் தான் பேச ஆரம்பித்தான். “நம்ம வாழ்கையை நாம் தீர்மானிக்கும்போது, எந்த மாதிரியான எண்ணங்கள் நம் மீது அதிக அதிகாரம் செலுத்துதோ அந்த வழிய தான் நாம தேர்ந்தெடுக்கிறோம். அது எந்த மாதிரியான வழியாக இருந்தாலும் சரி. வழி தான் தவறே தவிர நீங்களும் எல்லோரையும் போல நல்லவர்தான்”. இது போல் தெளிவான பேச்சை அடியாள் இதற்கு முன் எங்கும் கேட்டதில்லை என்பது போல் இருந்தது அவனுடைய முகபாவம்.

இருந்தும் அவன் விட்டு கொடுக்காமல் இளைஞனைப் பார்த்து, “இந்த மாதிரி பேசறது நல்லாத்தான் இருக்கு. நீங்கெல்லாம் இந்த மாதிரியான நிலமையில என்ன முடிவு எடுப்பீங்க”. அதற்கு அந்த இளைஞன் “அப்பா யார் தெரியாத குழந்தையா தான் நான் வளர்ந்தேன் என் அம்மாவின் உழைப்பிலே. அப்பா அம்மா இல்லன்னா கூட கொஞ்சம் மரியாதை கிடைக்குது. ஆனா எனக்கு அது கூட இல்ல. அவ்வளவு கஷ்டத்திலேயும் என்ன வேலைக்கு அனுப்பாம அம்மா பார்த்துகிட்டாங்க. என்னை சுத்தி இருந்த சூழ்நிலைகளும் சரியில்லமதான் இருந்தது. எந்த நேரமும் ஒரு தவறான பாதையில் போகக் கூடிய நிலைமைதான் இருந்தது. இருந்தும் என் அம்மாவும், என் நண்பர்களும், என் எண்ணங்களும் என்னை ஒரு நல்ல நிலைமைக்கு உயர்த்தியிருக்கு. என்னால் முடிந்த வரை இந்த சமூகத்திற்கு என்ன சேவைகள் செய்ய முடியுமோ அதை செஞ்சிட்டிருக்கேன்”.

“எப்பவுமே நாம பாக்குற, கேக்குற விஷயங்கள் நல்லதா இருந்தா நம் எண்ணங்கள் நல்லா இருக்கும். அதைத் தேடி பார்க்க வேண்டியது நம்மோட கடமை. இந்த இடத்துலதான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம். நீங்க பார்த்தது, கேட்டது, பழகுனது எல்லாம் தவறான எண்ணங்களையே உங்களுக்குள்ள ஏற்படுத்தியிருக்கு. அதற்கேற்றார் போல் சூழ்நிலைகளும் அமைஞ்சது. ஒரு சின்ன விஷயம், நல்ல இசை கூட நம்ம கிட்ட நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது என் நம்பிக்கை”.

இளைஞன் மேற்கொண்டு பேசிக்கொண்டே போக அடியாளும் கதாகாலட்சேபம் கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்தான். “வாழ்க்கையிலே நமக்கு இரண்டு பாதைகள் இருக்கு. ஒன்னு நீங்க போயிட்டிருக்கிறது. அது எப்பவுமே சுலபமா இருக்கும். அது நேராக போய்க் கொண்டே இருக்கும். பெரிய தடைகள் இருக்காது. சந்தோஷமா இருக்கும் பிரயாணம். ஆனால் எங்காவது ஒரு உச்சி போல இடத்துல கொண்டு சேர்க்கும். அதக்குப் பிறகு வழியே இருக்காது. ஆனா எனக்கு அப்படி இல்ல. வளஞ்சு நெளிஞ்சு போகும் பாதை. நிறைய தடங்கல் வரும். ஒவ்வொரு தடவையும் அதை தாண்டி போகறதுல ஒரு சுகம் இருக்கும். எங்கேயும் போயும் நிக்காது அந்த வழி. எங்கே போய் நின்னாலும் அதற்கு ஒரு மாற்று வழி நிச்சயமா இருக்கும்”.

எந்த மனிதனுக்கும் தன் தன்மையின் உடையும் புள்ளி (Breaking Point) என்ற ஒன்று இருப்பது, அன்று அந்த அடியாள் உணர்ந்தது போல் இருந்தது அவன் பார்வையில் இருந்த தெளிவு. ஆனாலும் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. உடன் அவன் செய்தது, கடத்தப்பட்ட இளைஞனின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான். நீ போலாம்” என்றான்.

“உங்க பாஸ்-க்கு என்ன சொல்வீங்க” என்று கேட்டான் இளைஞன். “அத நான் பாத்துக்கிறேன். நீ பேசின பேச்சுக்கள் என்ன வேறு பாதைக்கு மாத்துமா-னு தெரியல. ஆனா மாற்றத்துக்கான விதய விதச்ச மாதிரி இருக்கு. உன் கட்ட அவிழ்த்து விட்டதுக்குக் காரணம் என்னை மாதிரி இந்த பாதையில போக நினக்கிறவங்கள உன்னோட பாதைக்கு கூட்டிட்டுப் போவன்ற நம்பிக்கையிலே தான். வெற்றி இனி உன் பக்கம் இருக்கட்டும்” என்று அடியாள் இளைஞனை வாழ்த்தி அனுப்பினான்.

– ஜனவரி 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *