அசையும் சொத்தும் அசையா சொத்தும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 21, 2013
பார்வையிட்டோர்: 12,958 
 

தேர்தல் வரப்போகிறது. பத்திரிகைகளில், செய்திச் சேனல்களில் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.

தினசரி காலை மாலை செய்தித்தாளைப் படித்துவிடும் பழக்கம் உள்ள, சென்னை புறம்போக்குப் பகுதி ஒன்றில் குடுசை போட்டுத் தங்கியிருக்கும் தினக் கூலி வேலை செய்யும் முனுசாமிக்கும் தன சொத்து விபரங்களைத் தெரிந்துக் கொள்ள ஆசையாக இருந்தது. டாஸ்மாக் தண்ணி மயக்கம் இல்லாத ஒரு காலைப் பொழுதில் தன மனைவி மாரியம்மாவுடன் இது குறித்து கலந்து உரையாடினான். குடி தண்ணீர் ஒன்று விட்டு ஒரு நாள் வரும் அந்தப் பகுதியில் குழாய்ச் சண்டையெல்லாம் முதல் நாளே முடிந்து விட்டதால் ஆசுவாசமாக இருந்த மாரியம்மாளும் அவனுடன் விலாவாரியாகத் தங்கள் சொத்து விபரங்களை அலசினாள் .

“இந்தப் பொறம்போக்கு குடிசையை என்னிக்காச்சும் எதாச்சும் கட்சிகாரங்க கலச்சுப் போட்டுருவாங்க. அதனால இத்த நம்ம சொத்தில சேர்க்கமுடியாது. நல்ல யோசிச்சிப் பார்த்தா அப்பப்ப அடுப்புல ஏத்தி எறக்குறனே இந்த அலுமினிய குண்டானுங்க, தண்ணி பிடிக்கிற நாலு பிளாஸ்டிக் கொடங்க, நசுங்கிப் போன ரெண்டு அலுமினியத் தட்டுங்க, உடுத்திக்கினுக்கற கிழிசலைத் தவிர இன்னொரு கிழிசப்பொடவை அதான் சொத்து இந்த வூட்டுல” என்றாள் மாரியம்மா.

“எனிக்கு மட்டும் இன்ன வாழுதாம்?” என்றான் முனுசாமி. “இன்னா? கட்டிக்கினுக்கிற கிழிச லுங்கியைத் தவிர எக்ஸ்டிராவா அரணாக்கயத்தில ஒரு தாயத்து தொங்கினுக்கினு கீது. அதில்லேமே! அவ்ளோ பெரிய பணக்காரங்களாகீறாங்க இந்த அரசியல்வாதீங்க? கோடி கோடியா சொத்து கீது, ஆனா ஒரு கார் கூட இல்லேன்னு லிஸ்ட் குடுக்கிறாங்க? அத்தாம்மே அதிசியமா கீது!”

“அப்படியா சொல்றாங்க? அதோ பாத்தியா ஓம் புள்ள கைலே? ரெண்டு காரு!” என்றாள் மாரியம்மா கிண்டலாக.

குப்பையில் பொருக்கி வைத்து ரெண்டு வயதுக் குழந்தை மகிழ்ச்சியோடு வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் ரெண்டு உடைந்து போன பொம்மைக் கார்களை பார்த்தான் முனுசாமி.

“அது இன்னாம்மே அசையும் சொத்து, அசையா சொத்துன்னிட்டு பிரிச்சி வச்சி வெவரம் காட்டறாங்க? நமக்கு அந்த மாதிரி ஏதாச்சும் இருக்குதா?” என்று சற்று விவரமான தன மனைவியிடம் அக்கறையாக சந்தேகம் கேட்டான் முனுசாமி.

“இல்லாம இன்னா? இதோ, ஒடஞ்ச காரை வச்சிக்கினு வூட்டுக்குள்ளாரயே ஓடியாடி வெளையாடிக்கினுக்கீதே நம்ம புள்ள?. அதுதான் நம்ம அசையும் சொத்து, அதோ! சீக்கு வந்து இன்னும் போவாம, பூமிக்கு பாரமா, மூலேல சுருண்டுக்கினு கீதே ஒங்காத்தா, அதுதான் நாம அசையா சொத்து.” மாரியம்மா விலாவாரியாக விளக்க, பிரமிப்போடு கேட்டுக்கொண்டிருந்தான் முனுசாமி.

Print Friendly, PDF & Email

1 thought on “அசையும் சொத்தும் அசையா சொத்தும்

  1. பாக்கெட் சைசில் , சிறுகதைகளின் விதிகளுக்குட்ப்பட்ட ஒரு நல்ல கதை. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *