கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 11,693 
 

சமீபகாலமாக சுகுமாரனுக்கு ஒரு வினோதமான ஆசை. கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் ஆன பிறகு, இந்த ஆசை தோன்றுவது சரியா என்று அவர் மனசாட்சியால் கணிக்க முடியவில்லை. புதிரைத் தீர்ப்பதற்கு வினோத்தால் முடியும்.

வினோத்குமார். வயது இருபத்தெட்டு இருக்கும். அலுவலகத்தில் இளையவன். இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னைக்காரன். அவனிடம் இரண்டு செல்போன்கள் இருக்கும். ஒருவருக்கு எதற்கு இரண்டு செல்போன்கள்? ஒன்று உண்மை பேசவும், இன்னொன்று பொய் பேசவும் இருக்குமோ?

‘‘சிம்பிள் சார். ஒண்ணு பசங்களுக்கு… இன்னொண்ணு பெண்களுக்கு’’ என்று சிரித்தான். வினோத்துக்கு நிறைய தோழிகள். வயதில் சிறியவன் என்றாலும் இந்த விஷயத்தில் அவன்தான் மூத்தவன்.

ஒருநாள் தேநீர் இடைவேளையில், ‘‘வினோ… உங்கிட்ட ஒண்ணு கேட்கணும்’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டேவிட்டார். ‘‘அது வந்து வினோத், இப்போ ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்கணும்னா என்ன செய்யணும்?’’

‘‘யாருக்கு சார்?’’

‘‘எனக்குத்தான்னு வெச்சுக்கயேன்’’- என்றவரை, சிகரெட் புகையைக் கீழ்நோக்கி ஊதிவிட்டு வினோத் பார்த்தான். ‘‘சார்.. வேற ஏதோ சொல்லப்போறீங்கன்னு நெனச்சேன். இது ஒரு மேட்டரா?’’

சுகுமாரனுக்கு ஏன்டா இதைச் சொன்னோம் என்றிருந்தது. சமீப காலமாக தனக்கு வயதாகி வருகிறதோ என்ற உணர்வுகூட இந்த ஆசையின் காரணமாக இருக்கலாம். நாற்பது வயதுதான் ஆகிறது. என்றாலும், அதற்குள் எல்லாம் சலித்துவிட்டது. அதே அலுவலகம் அதே வேலை, அதே வீடு, அதே குடும்பம். படிக்கிற காலத்திலும் நல்லபிள்ளையாக இருந்துவிட்டார். நினைத்துப் பார்க்கிற மாதிரி காதல் அனுபவம் ஏதும் இல்லை. கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆகிவிட்டது. இதற்கு என்னதான் தீர்வு? ஒரு பெண்ணின் சிநேகிதம் இருந்தால் எப்படியிருக்கும்?

சுகுமாரனுக்கு இருக்கும் ஒரே பொழுது-போக்கு, வினோத்துக்கு வரும் தோழிகளின் smsகளைப் படிப்பதுதான். உலகத்தில் இது மாதிரி எல்லாம் sms தயாரிக்க முடியுமா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு அன்பை, காதலை, நட்பைச் சொல்லும் செய்திகள். விதவிதமான A ஜோக்குகள். தன் மனைவிக்கு உள்ளாடை வாங்கப்போகிற கணவன், படுக்கை அறையில் இருந்த ஹெல்மெட், மற்றும் ராமசாமி செத்துட்டானா முதலிய ஜோக்குகள் அவர் வாய்விட்டுச் சிரித்தவை. இதுபோல ஒரு பெண் தனக்கும் sms அனுப்புவதாக இருந்தால் தன் சம்பளத்தில் பாதியைக்கூட இழக்க அவர் தயாராக இருந்தார்.

நேற்று செல்போனில் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தான் வினோத். யார் என்று இவர் சைகையில் கேட்டார். அவன் கண்ணடித்தபடி, ஸ்பீக்கர் வசதியைப் பயன்படுத்த, எதிர்முனையில் அழகான பெண் குரல். ‘போடா… வாடா’ சிணுங்கல்கள். திருமணத்துக்கு இரண்டு மாதங்கள்தான் இருக்கிறதாம். அதுகுறித்த உபாயங்களைக் கேட்கிறாள். கல்யாணம் ஆகி ஏழு வருடம் ஆன அவருக்கே அதைக் கேட்கப் படபடப்பாக இருந்தது.

நாற்பது வருஷம் வெட்கப்பட்டது போதும். தைரியமாகக் கேள் என்றது அவரது மனசாட்சி. ‘‘வினோத் எனக்கொரு உதவி செய்ய முடியுமா?’’

‘‘சொல்லுங்க சார்.’’

‘‘இத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்கள்ல. எனக்கு ஒண்ணு அறிமுகம் செய்யறது?’’

‘‘அங்கிள். உங்களுக்கு கல்யா ணம் ஆயிடுச்சு.’’

‘‘ஸோ வாட்… கல்யாணமானா ஃப்ரெண்ட்ஸ் இருக்கக் கூடாதா? எனக்கு அவளைப் பார்க்கக்கூட வேணாம். sms அனுப்பினாப் போதும். எப்பவாவது பேசினாப் போதும்.’’

‘‘இப்பிடித்தான் சார் எல்லாம் ஆரம்பிக்கும்…’’

‘‘பொண்டாட்டி மாதிரி கேள் வியா கேட்காத. முடிஞ்சா செய். இல்லேன்னா விட்ரு.’’

‘‘சார்! அவங்க எல்லாருமே என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ். கொஞ்ச பேர் ஒர்க்கிங் வுமன்.’’

‘‘கல்யாணம் ஆனவங்களா…’’

‘‘ம்… பாதிக்கு மேல’’ என்று சொல்லிக்கொண்டே தனது இரண்டாவது செல்போனை இயக்கினான்.

‘‘ரிங் போகுது சார்… இவ பேரு ராஜம்’’ வேண்டாம் என்பது போல சுகுமாரன் சைகை செய்ய, வினோத் அவரை ஆச்சர்ய மாகப் பார்த்தான். ‘‘பேரைக் கேட்டாலே எம்.என்.ராஜம்தான் ஞாபகம் வருது. கொஞ்சம் டீசன்ட்டா…’’ என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் வினோத் சிரிக்கத் துவங்கினான்.

‘‘சார்! நீங்கதான் பார்க்கப்போற தில்லைல… அப்புறம் என்ன?’’

‘‘அதுக்காக மனசுல நெனைக் கும்போது… ஒரு…’’

‘‘கவிதையா எழுதப்போறீங்க’’- சிரித்த வினோத், ‘‘ஆறுமுகம்’’ என்றான். சுகுமாரன் முகம் சுருங்க, ‘‘அப்போ ஷியா? டென்னிஸ் பிளேயர்!’’ என்றான். சுகுமாரன் முகம் வெட்கத்தில் மலர்ந்தது.

‘‘ஷியாதான் அந்த ஆறுமுகம்.’’

சுகுமாரன் குழம்பினார்.

‘‘சும்மா சேஃப்டிக்கு நிக் நேம் சார்.’’

வினோத் அடக்க முடியாமல் சிரித்தான்.

‘‘சார்! அவங்க எல்லாருமே நல்ல ஃப்ரெண்ட்ஸ். தப்பா நினைச்சிடாதீங்க. அந்த ஷியா இருக்காளே… ஆறுமுகம். பெரிய பணக்காரி. குண்டம்மா. அந்த தேங்காய் ஜோக் அவ அனுப்பினது தான்.’’

‘‘குண்டம்மால்லாம் இல்லாம… கொஞ்சம் ஸ்லிம்மா… குடும்பத்துப் பெண்ணா…’’

‘‘இதெல்லாம் ஓவர் சார்… வீட்டுக்குப் போன் பண்ணி போட்டுக்கொடுக்கவா…’’

‘‘அய்யோ! வேணாம்ப்பா.’’

‘‘அந்தப் பயம் இருக்கட்டும்.’’

அந்திமயங்கும் வேளையில் கீதா உபதேசம் செய்வது மாதிரி பெண்களைப் பற்றிய நுட்பங்களைப் பேசத் துவங்கினான். ஆர்வம் அளவுக்கதிகமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சுகுமாரன் கேட்டுக்கொண்டு இருந்தார்.

‘‘இது சாதாரண விஷயம். முதல்ல நீங்க ஒண்ணு செய்யணும்.’’

‘‘இன்னொரு செல்போன்தானே… வாங்கிடுவோம்.’’

வினோத் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

‘‘சார்! இந்த ஜெனரேஷன்ல இது சாதாரணம். அதுவும் சிட்டியில இது நத்திங். நெட்ல e-pal site ஜாஸ்தி. யாருகிட்டயாவது மனம்விட்டுப் பேசணும் பழகணும்னு தோணுது. அன்பா ரெண்டு வார்த்தை பேசணும். அவ்வளவு தான். அதில் தப்பானவங்க சிலர் இருக்கலாம். அதுக்காக எல்லோரையும் தப்புச் சொல்ல முடியாது. Chating-ல கலந்துக்கற மாதிரி யாருக்காவது hai சொல்லிப் பார்ப்போம். க்ளிக் ஆச்சுன்னா தொடரலாம். இல்லேன்னா bye சொல்லிடலாம். நான் ஷியாகிட்ட பேசுறேன்.’’

ஒருவழியாய் தனக்கு ஒரு பெண்தோழி கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கை சுகுமாரனுக்கு வந்தது. வினோத் கிளம்பும்போது, ‘‘நாளைக்குப் பார்க்கலாம் சார். ஒரு நம்பரோட’’ என்றான்.

‘‘ஒரு நம்பர்தானா…’’

வினோத் முறைப்பது மாதிரி சிரித்தான்.

வீடு திரும்பும்போது மணி பத்தாகிவிட்டது. மணியடித்ததும் கவிதா வந்து கதவைத் திறந்தாள். மார்ச் மாதம் என்ப-தால் அவள் பணிபுரியும் நிறுவனத்தின் கணக்குகளை ஹாலில் உட்கார்ந்து எழுதிக்கொண்டு இருந்தாள். குழந்தைகள் இருவரும் தூங்கி விட்டிருந்தார்கள். அவருக்கான சப்பாத்தி கள் மூடிவைக்கப்பட்டு இருந்தன.

காலையில் பத்து மணிக்கு முன்பாகவே சுகுமாரன் அலுவலகம் வந்துவிட்டார். அவருக்குப் பரபரப்பாக இருந்தது. வினோத் தாமதமாகவே வந்தான்.

‘‘சார்.. எப்ப பார்ட்டி கொடுக்கப் போறீங்க’’ என்று வினோத் கேட்டான். ‘‘நம்பர் தர்றேன். ஆனா, சில கண்டிஷன்ஸ். ஒரு வாரத்துக்கு நீங்க பேச வேணாம். sms மட்டும் அனுப்புங்க.’’

‘‘சரி! நம்பரைச் சொல்லு?’’

‘‘வினோ, ஒரு நிமிஷம்… அவங்ககிட்ட என்னைப் பத்தி…’’

‘‘ஒண்ணும் சொல்லல. நல்லவர். வல்லவர்னு சொல்லியிருக்கேன். முக்கியமா உங்க வயசைச் சொல்லல’’ என்று சிரித்தான்.

சுகுமாரனுக்கு ஏன்டா கேட்டோம் என்றிருந்தது. இதெல்லாம் சகஜம் என்று அவர் மனசாட்சி சொன்னது. அந்த எண்ணுடன் தன் அறைக்கு வந்தார். பதற்றமாக இருந்தது. இதில் ஏதும் தான் அசிங்கப்பட்டுவிடக் கூடாது என்று இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு sms அனுப்புவதற்காக எழுத்துக்களை அழுத்தினார்.

‘‘ஹாய் என் பெயர்…’’ தன் பெயரில் ஒரு இளம்பெண்ணிடம் சொல்வதற்கான வசீகரம் இல்லையோ என்று ஒரு தயக்கம் வந்தது. மேலும் சுகுமாரன் என்னும் பெயரிலேயே வயசும் தெரிந்தது. பெயரை மாத்துடா சுகுமாரா. ‘‘ஹாய்! ஐயாம் கார்த்திக்’’ என்று சொல்லிப் பார்த்துக்கொண்டார். அவருக்கே கூச்சமாக இருந்தது. ‘‘ஹாய்! என் பெயர் மகேஷ்’’-இது கொஞ்சம் பரவாயில்லை. அனுப்புவதற்கான பொத்தானை அழுத்தினார். பதிலுக்குக் காத்திருந்தார். கொஞ்ச நேரத்தில் செல்போன் அதிர மெல்லிய இசையுடன் 1 message received என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்தன. பரவசத்துடன் எடுத்துப் பார்த்தார். ‘‘நான் ஸ்வேதா.’’

ஒருவிதமான வெற்றிப் பெருமிதமும் மகிழ்ச்சியும் கூடிவந்ததுபோல் இருந்தது. சுகுமாரனுக்கு இது புது அனுபவமாக இருந்தது. ஸ்வேதா எனும் பெயரே அவருக்குப் போதுமானதாக இருந்தது. அடுத்த sms அனுப்பும் முன் தன்னை யாரும் மறைந்திருந்து கவனிக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டார்.

‘‘நலமா?’’

பதில் பதினேழாவது நொடியே வந்தது.

‘‘நலம்!’’

‘‘நீங்க எப்பிடி இருப்பீங்க?’’

‘‘ஓ.கே-ன்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்வாங்க.’’

‘‘கண்ணாடி பார்க்க மாட்டீங் களோ?’’

‘‘கண்ணாடி நான் அழகுன்னு சொல்லுது.’’

‘‘கண்ணாடி சொல்றதை நம்பாதீங்க.’’

‘‘ஏன், நீங்களும் கண்ணாடி பாப்பீங்களா?’’

சுகுமாரனுக்குச் சிரிப்பு வந்தது. ‘‘நல்லா ஜோக் அடிக்கிறீங்க.’’

‘‘ஹா… ஹா… ஹா…’’ உடன் சிரிக்கும் பொம்மையின் தலை.

‘‘சரி, நேர்ல பாக்கும்போது சொல்றேன் அழகா… பேரழகான்னு?’’

‘‘நேர்ல பாக்க முடியாது மிஸ்டர்!’’

‘‘ஏன்?’’

‘‘நான் நார்நியா சிங்கம்!’’

சுகுமாரனுக்குத் திடீரென ஒரு சந்தேகம் வந்தது. ஒருவேளை யாராவது தெரிந்த நண்பனின் எண்ணைக் கொடுத்து, வினோத் கேலி செய்கி-றானோ? அப்படி ஏதாவது மாட்டிக்-கொண்டால் அசிங்கமாகப் போய்-விடுமே என்று யோசித்தார். செல்-போனை மேசையில் வைத்துவிட்டார். அவருக்குக் குழப்பமாக இருந்தது. செல்போன் சிணுங்கியது.

1 message received

‘‘சார் ரொம்ப பிஸியோ?’’

‘‘இல்ல… நீங்க பையனா இருந்தா, என்ன பேர் வெச்சிருப்பாங்கன்னு யோசிச்சேன்!’’

‘‘ரொம்ப யோசிப்பீங்களோ?’’

சுகுமாரனுக்குக் குழப்பமாக இருந்தது. பெண் என்று நம்புவோம். அசிங்கம் வந்தால், படவேண்டியதுதான். வருவது வரட்டும்.

‘‘முன்னாடி கவிதையெல்லாம்கூட எழுதியிருக்கேன்!’’

‘‘அப்படியா… எனக்குக் கவிதைன்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா…’’

‘‘ஆனா…’’

‘‘கவிதை எழுதுறவங்களைப் பிடிக்காது!’’

‘‘அப்ப என்னைப் பிடிக்காதா?’’

‘‘ம்…’’

‘‘சரி, நாம பிரிஞ்சுடலாம்!’’

‘‘சரி!’’ உடன், அழும் பொம்மையின் தலை.

கொஞ்ச நேரம் எந்தப் பதி லும் இல்லை. சுகுமாரன் இந்தக் கவிதை மேட்டரைச் சொல்லியிருக்க வேண்டாமோ என்று யோசித்துக்கொண்டு இருந்தார். செல்போன் திரை ஒளிர்ந்தது.

‘???????????????’

‘‘நீதானே பிரியலாம்னு சொன்னே?’’-சுகுமாரன் தன் கோபத்தைக் காட்டினார்.

‘‘அதான் அஞ்சு நிமிஷம் பிரிஞ்சாச்சே! ஹா… ஹா..!’’

‘‘நீ சிரிக்கும்போது அழகா இருக்கே!’’

‘‘எப்படித் தெரியும்?’’

‘‘அழகான பொண்ணு சிரிச்சா அழகாத்தானே இருக்கும்! ’’

‘‘ஜொள்ளு! ஆனா, நீங்க நிஜமாவே அழகு!’’

‘‘ம்… எப்படித் தெரியும்..?’’

‘‘நான் பாத்திருக்கேன்!’’

சுகுமாரனுக்குத் திரும்பவும் சந்தேகம் வந்தது.

‘‘எங்கே, எப்போ பாத்தீங்க?’’

‘‘அனிமல் பிளானெட்ல!’’

சுகுமாரனுக்கு ஆறுதலாக இருந்தது. பெருமுச்சுவிட்டார்.

‘‘உன்ன நேர்ல பாத்தா கடிச்சுடுவேன்!’’

‘‘திஸ் இஸ் டூ மச்!’’

‘‘அனிமல் பின்ன கடிக்காதா?’’

‘‘உனக்குக் கல்யாணம் ஆயிடுச் சாப்பா?’’

‘‘இல்லப்பா, நல்ல பொண்ணு இருந்தா சொல்றியா?’’

‘‘ம்… எப்படி வேணும்?’’

‘‘நான் ரொம்ப வித்தியாசமான சிந்தனை உள்ளவன். நோ சாதி. நோ மதம். விடோவா இருந்தாக்கூட பரவாயில்லை.’’

‘‘வெரி குட்! எனக்குத் தெரிஞ்ச ஒரு விடோ இருக்காங்க, கட்டிக்கிறியா?’’

‘‘யாரு?’’

‘‘எங்க பாட்டி!’’

சுகுமாரன் வாய்விட்டுச் சிரித்து விட்டார்.

ஒரு புதிய உலகம் திறந்தது போல் இருந்தது அவருக்கு. தினமும் ஸ்வேதா காலை வணக்கம் சொல்லும் sms வந்த பிறகே, அவரது நாள் துவங்கியது. கவிதையைப் போன்ற அவளது செய்திகளால், அவருக்குப் புது உற்சாகம் வந்தது. கல்லூரி நாட்கள் போல மனதுக்குள் புது உற்சாகம். கோபம் என்றால், செய்தி இல்லாத வெற்றுப் பக்கத்தை அனுப்பினாள் ஸ்வேதா. மகிழ்ச்சி என்றால், குதிக்கும் சிறிய நாய்க் குட்டிகள்! வெளியே போகும்போது sms வந்தால், நடு ரோட்டில் பைத்தியம் போல நின்று எழுத்துக்களை அழுத்திக்கொண்டு இருந்தார் சுகுமாரன்.

‘‘மருத்துவருக்கும், கால்நடை மருத்துவருக்கும் என்ன வித்தியாசம்? எனக்கு வைத்தியம் செய்பவர் மருத்துவர். உனக்கு வைத்தியம் செய்பவர் கால்நடை மருத்துவர்!’’

‘‘கால்நடைகளில் நான் என்ன வகை சார்?’’

‘‘செல்லப் பூனைக் குட்டி.’’

‘‘நமக்கு இடையே உள்ள உறவு எந்த வகையைச் சார்ந்தது? கீழே உள்ள பழங்களில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அனுப்பு.

1. மாம்பழம் 2. ஸ்ட்ராபெர்ரி

3. ஆப்பிள் 4. திராட்சை.’’

சுகுமாரன் 2 என்ற எண்ணை மட்டும் பதிலாக அனுப்பினார்.

உடனே பதில் வந்தது… ‘‘1. நட்பு 2. காதல் 3. எதிரி 4. பொழுதுபோக்கு.’’

பதிலைப் பார்த்ததும், அவர் உறைந்துபோனார். ஒரு மணி நேரத்துக்கு அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்குப் பிறகு, ஸ்வேதாவிடமிருந்தும் பதில் இல்லை. அவளைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. ஆபீஸ் நேரம் முடிந்ததும் ஆறு மணிக்கு மேல் sms வருவதில்லை. இனி, நாளை காலை பத்து மணி வரைக்கும் காத்திருக்க வேண்டும். ஆறு மணிக்கெல்லாம் குட்நைட் சொல்லிப் பிரிகிற நட்பு எங்காவது இருக்குமா? துரதிஷ்டம்!

மனம் முழுக்க ஸ்வேதா… ஸ்வேதா… ஸ்வேதா… வீட்டில் ஏதாவது தூக்கத்தில் உளறி மாட்டிக்கொள்வோமோ என்று பயமாக இருந்தது. பத்தரை மணிக்குத்தான் வீட்டுக்குப் போனார். தூக்கத்துடன் கவிதா வந்து கதவைத் திறந்தாள். குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

‘‘நீ சாப்ட்டியா?’’

‘‘ம்!’’

இன்றைய உரையாடல் அவ்வளவுதான். ஒரு பருவத்துக்கு மேல், மனைவியிடம் பேசுவதற்கான வார்த்தைகளே இல்லாமல் போய்விடுகின்றன. கவிதா போய்ப் படுத்துக்கொண்டாள். மூடிவைக்கப்பட்டு இருந்த இளஞ்சூடான தோசைகளைச் சாப்பிடப் பிடிக்காமல் உட்கார்ந்திருந்தார். ஸ்வேதா என்னும் ஸ்ட்ராபெர்ரி மனதுக்குள் இனித்துக்கொண்டு இருந்தது.

காலையில் குளித்துத் தயாராகும்போது, அவருக்கான லஞ்ச் பாக்ஸ், கம்ப்யூட்டர் மேசையின் அருகே இருந்தது. காலை உணவுக்கு நேரமில்லை. ஒன்பது மணிக்கு மீட்டிங். குழந்தைகள் ஆட்டோவுக்காக வாசலில் நின்றிருந்தார்கள். அவசர அவசரமாக குழந்தைகளிடமும் கவிதாவிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.

எப்போது பத்து மணியாகும் என்றிருந்தது. மீட்டிங் முடிந்ததும், வேகமாகத் தன் அறைக்கு வந்து மேசைக்குள் இருந்த செல்போனை எடுத்துப் பார்த்தார். ‘உனக்கு நிறைய வேலைகள் இருக்கலாம். என்னைவிடவும் மேலான உறவுகள் இருக்கலாம். ஆனாலும், இதைப் படிக்கும் சில நொடிகளில், என்னை நீ நினைக்கிறாய். அது போதும் நண்பனே!’

மனசு மலர்ந்தது போல் இருந்தது. காலை வணக்கச் செய்திகள் அனுப்பினார். இரண்டுமுறை காலை வணக்கம் சொல்வதற்கும், ஐந்து முறை குட்நைட் சொல்வதற்கும் காரணம் என்ன? இந்த அன்பு எத்தனை அற்புதமாக இருக்கிறது!

ஒரு வாரம் போனதே தெரியவில்லை. ஒவ்வொரு sms-ம் கவிதை. சுகுமாரன் இந்த ஒரு வாரத்தில் தன்னிடம் நிறைய மாற்றங்களை உணர்ந்தார்.

இந்த வாரத்துடன் sms அனுப்புவதை நிறுத்த வேண்டும், தினம் பேச வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தார். அதற்கு வசதியாக, ஸ்வேதாவிடமிருந்து ஒரு செய்தி வந்தது.

‘அன்பைச் சொல்வதால் பிரிகிறார்கள் சிலர். சொன்னால் பிரிந்துவிடுவோம் என்று தயங்கி, சொல்லாமலேயே பிரிந்துவிடுகிறார்கள் பலர். காலை வணக்கம்!’’

சுகுமாரன் தான் சொல்ல நினைத்ததைச் சொல்வதற்கு இதுதான் தருணம் என்று நினைத்தார். தீவிரமாக யோசித்தார். பதற்றத்துடன், ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று டைப் செய்தார். அனுப்பலாமா என்று வெகு நேரம் யோசித்தார். வருவது வரட்டும். கண்களை மூடிக்கொண்டு ஷீளீ பொத்தானை அழுத்தினார். ஒளிரும் செல்போன் திரையில் ஒரு கடிதம் உள்நோக்கிப் பறந்து புள்ளியாகி மறைந்தது. Message sent.

இரண்டு நிமிடங்கள், செல்போனின் திரையையே பார்த்திருந்தார். பதில் வரவில்லை. அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது. பதற்றமாக இருந்தது. அவ்வளவுதான்… ஃப்ரெண்ட்ஷிப் கட்! என்ன செய்யலாம் என்று நகம் கடித்த நிமிடத்தில், மெல்லிய இசையுடன் திரை ஒளிர்ந்தது. text message from swetha. அவசரமாக அதைப் பார்த்தார். I hate you என்றிருந்தது. அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்தார். பெருமூச்சுவிட்டார். ‘அவசரப்பட்டுட்டியேடா சுகுமாரா’ என மனசாட்சி உறுத்தியது.

கூர்ந்து பார்த்தபோது, அடுத்த பக்கங்களில் அதன் தொடர்ச்சியான செய்தி இருப்பது தெரிந்தது. ஆர்வமாகப் பார்த்தார். h-a-t-e என்பதன் ஒவ்வொரு எழுத்துக்கும், ‘நீ தேனைப் போல எப்போதும் நினைக்க இனிமையானவன்’ என்ற விளக்கம் இருந்தது. சுகுமாரன், தான் பறப்பதாக உணர்ந்தார்.

‘உன்னைப் போல இனிமையான இதயத்துக்கு எழுத்தால் ஆன செய்தி எதற்கு? (ஒரு பூனைக் குட்டி உதடு குவித்து முத்தம் தரும் வரைபடத்துடன்) இனிய முத்தங்கள்!’

இதுதான் மனம் கனியும் தருணம் என்று உணர்ந்த சுகுமாரன், தொடர்ந்து அடுத்த செய்தியை அனுப்பினார்… ‘‘டியர் ஸ்வேதா, உன்னைப் பார்க்க வேண்டும்!’’

‘‘எப்போது?’’

‘‘இன்று… இப்போது…’’

‘‘…………….’’ மௌனம் சொல்லும் வெற்றுப் பக்கம்.

‘‘ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணி!’’

ஞாயிற்றுக்கிழமை, ஸ்டெர்லிங் சாலையில் இருக்கும் பிரபலமான வணிக வளாகத்தில் உள்ள பூங்கொத்துகள் விற்கும் கடையருகே சந்திப்பதென்று முடிவானது.

‘‘ஞாயிற்றுக்கிழமை என்னை நேர்ல பாத்ததும், திங்கள்கிழமை மறந்துடுவே!’’

‘‘சே! நான் என்ன அவ்வளவு மோசமானவனா… செவ்வாய்க்கிழமைதான் மறப்பேன்! சரி, நான் உன்னை எப்படிக் கண்டுபிடிக்கிறது?’’

‘‘நீல நிறத்தில் சுரிதார், அரக்கு நிறத்தில் ஹேண்ட் பேக். சரி, நான் உன்னை எப்படிக் கண்டுபிடிக்கிறது?’’

‘‘நீதான் பாத்திருக்கியே!’’

‘‘எப்பம்மா?’’

‘‘அனிமல் ப்ளானெட்ல!’’

‘‘ஆமா… மறந்துட்டேன்!’’

‘‘சரி… உன் கவிதை ஒண்ணு அனுப்பேன்!’’

‘‘நாம் பார்க்காத ஒவ்வொரு நாளும் ஒரு நட்சத்திரம் உதிர்கிறது. எல்லா நட்சத்திரங்களும் உதிர்வதற்குள் என்னைச் சந்திக்க வருவாயா..?’’

‘‘I love u dear.’’

‘‘I hate u.’’

ஞாயிற்றுக்கிழமை மாலை நேரே வடபழனியில் இறங்கி, ஆட்டோ பிடித்து அந்த வணிக வளாகம் நோக்கிப் போனார் சுகுமாரன். இருபது வயது குறைந்தது போல் இருந்தது. ‘பனி விழும் மலர்வனம், உன் பார்வை ஒரு வரம்’ என்று பாடிக்கொண்டே, மூன்று மாடிகள் கொண்ட அந்த வணிக வளாகத்தின் கீழ்த் தளத்தில் நுழைந்தார். அவர்கள் பேசிவைத்திருந்த இடத்தில் பார்த்தார். யாரும் இல்லை. வார இறுதி நாளில் ஷாப்பிங் வருபவர் கூட்டம் மெல்லச் சேர்ந்துகொண்டு இருந்தது. வழியில் யாராவது நீலம் அணிந்த பெண் வந்தால், அவருக்குப் பதற்றமாக இருந்தது.

ஆறு மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. நன்றாக இருட்டிவிட்டது. ‘நீ சொன்னது போல நட்சத்திரங்கள் இல்லாத ஒரு நாளில் உன்னைச் சந்திக்கிறேன் ஸ்வேதா.’ மேல் தளத்தில் உள்ள செல்போன் கடை ஒன்றில் நுழைந்து சும்மா வேடிக்கை பார்த்தார். பார்ப்பது எல்லாமே நீல நிறத்தில் தெரிந்தன. நீலத்தில்தான் எத்தனை சாயைகள்!

மணி 6.09. கடையிலிருந்து வேகமாக வெளியில் வந்து, தான் நிற்கும் மேல் தளத்திலிருந்து கீழே பார்த்தார். பூங்கொத்துக் கடையின் அருகில் ஒரு குண்டான பெண் நின்றிருந்தாள். ஸ்வேதாவோ?

ஒரு நிமிடம்… சுகுமாருக்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. சட்டென மறைந்துகொண்டு, திரும்பவும் பார்த்தார். அது அவர் மனைவி கவிதா!

உடலில் ஒரு நடுக்கம் பரவியது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. இதயம் வெடிப்பது போல் துடித்தது. வியர்த்து வழிந்தது. எதையும் நிதானிக்க முடியவில்லை. பின் வழியே அவசரமாக அங்கிருந்து வெளியேறினார்.

பேன்ட் பாக்கெட்டிலிருந்த அவரது இரண்டாவது செல்போன் தொடர்ந்து அதிர்ந்துகொண்டே இருந்தது. வருகிற ஆட்டோவை மறித்து ஏறி, அதன் திசையிலேயே போகச் சொன்னார். பதற்றம் அடங்கவே இல்லை. தி.நகரின் நெரிசலான கூட்டத்தில் இறங்கி நடந்தார். நகரத்தின் விதவிதமான சத்தங்கள், உடம்பு அவர் அறியாமல் அடிக்கடி நடுங்கியது. புழுக்கத்தில் உடல் எரிந்தது. எவ்வளவு நேரம் நடந்தார் என்பது தெரியவில்லை. மணி பத்து இருக்கலாம். மனசு இன்னும் ஆறவில்லை. சோடியம் விளக்கின் வெளிச்சத்தில் தனது செல்போனை எடுத்துப் பார்த்தார். 19 மிஸ்டு கால்கள். எங்கிருக்கிறாய் எனக் கேட்கும் ஏழு செய்திகள். எங்கு போக முடியும்? ஒரு ஆட்டோ பிடித்தார். தன் வீடு இருக்கும் தெருவின் பெயர் சொன்னார்.

அழைப்பு மணியை அடித்ததும் மூத்தவன் வந்து திறந்தான். ஹாலில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன. கம்ப்யூட்டரின் வெளிச்சம் அறை முழுக்கப் பரவ, கடலாழத்தில் ஓடும் நிமோவைத் துரத்தும் மீன்களுடன் வீடியோ கேம் ஆடிக்கொண்டு இருந்தான். அம்மாவுக்குத் தலை வலித்ததால் அவள் எட்டு மணிக்கே தூங்கிவிட்டதாகச் சொன்னான். சுகுமாரன் ஹாலிலேயே தளர்ந்து அமர்ந்தார். ‘ஏன்? ஏன்?’ என்ற கேள்விகள் துளைத்து எடுத்தன.

மெள்ள எழுந்து உள்ளறைக்கு வந்தார். அறை முழுக்கத் தலைவலி மருந்தின் வாசனை. சுழலும் மின் விசிறியின் சத்தம். இரவின் அமைதி தாங்க முடியாததாக இருந்தது. இரவு விளக்கின் சன்னமான நீல ஒளியில் கவிதா குழந்தைகளுடன் முகம் மூடிப் படுத்திருந்தாள்.

‘நட்சத்திரங்கள் எல்லாம் உதிர்வதற்குள், என்னைச் சந்திக்க வருவாயா?’ – சுகுமாரனுக்குக் கண்கள் கலங்கின. ‘நான் உன் கண்ணீராக இருந்தால், உன் கன்னங்களில் வழிந்து இதழில் உதிர்ந்து மடிவேன்’. அன்பில் நெகிழ்ந்த கணங்கள் மனதில் வந்துகொண்டே இருந்தன. சுவரில் சாய்ந்து, சுற்றும் மின்விசிறியையே பார்த்திருந்தார். தணிந்து பரவும் காற்றில், அறையில் எந்த அசைவும் இல்லை.

கொடிக் கயிற்றில் அந்த நீல நிறச் சுரிதார் மட்டும் மெள்ள அசைந்துகொண்டு இருந்தது!

வெளியான தேதி: 10 செப்டம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *