பாரந்தாங்கி

 

எனக்கு தாங்க முடியாத வலி எடுத்து விட்டது. பிரசவ வேதனை. கூடவே என்ன ஆகுமோ எனும் பயம். ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் கணவர் பக்கத்தில். ” ஒண்ணும் கவலைப் படாதே கலா. தைரியமா இரு. எல்லாம் நல்ல படியாக முடியும்”.

ஆனால், அவர் முகத்தில் கலவரம். எனது பிரசவம் கொஞ்சம் கவலைக்கிடம். இது டாக்டர்கள் முன்பே சொன்னது தான். கர்பப்பை கோளாறு ,எனக்கு ஐந்து மாதத்திற்கு முன்பே தெரிந்தது தான். இருந்தும், தெரிந்து தான் , நான் தாயாக, எதற்கும் தயாராக இருக்கிறேன்.

எனக்கு மூச்சு வாங்கியது. யாரோ எனக்கு ஊசி போடுகிறார்கள். டாக்டர்கள் என்னை சுற்றி நிற்கிறார்கள், கத்தியை கைகளில் வைத்துக் கொண்டு. எனக்கு மயக்கமாக வந்தது. . ஏதேதோ நினைவுகள் மாறி மாறி.

யாரோ என்னைச்சுற்றி சுற்றி ஓடுகிறார்கள். ஏன்? ஒன்றும் புரியவில்லை. மெதுவாக எனக்கு நினைவு தப்ப ஆரம்பித்தது.

ஒரே கும்மிருட்டு.

*********************

குழந்தை பிறந்து விட்டது. என் கஷ்டம் , கவலை தீர்ந்தது. அப்பா! இதுவரை என்னுள்ளே இருந்த குட்டி கண்ணன், இப்போது வெளியே. அப்பப்பா. அவன் ஒரே அழுகை. தாங்கவில்லை அவன் ஆர்பாட்டம். என் மடியிலேதான் எப்போதும். எல்லாவற்றிற்கும் நான் வேணும் அவனுக்கு. எனக்கு ஓய்வும் இல்லை, தூக்கமும் இல்லை. அவன் நினைவே.

இப்போது கண்ணனுக்கு ஒரு வயது. இதுவரை என்னையே ஒட்டி இருந்த குழந்தை, இப்போது நடக்கிறது. தத்தி தத்தி. என்னை விட்டு, வாசலை நோக்கி. வெளியே உலகத்தை பார்க்க. வெளி உலகத்தை பார்க்க என்ன ஒரு ஆசை இவனுக்கு.

இப்போது கண்ணனுக்கு வயது ஐந்து. கடந்த ஒரு வருடமாக அவனுக்கு வெளியிலேதான் விளையாட்டு. வீட்டிலே இருக்கும்போது, எல்லாத்துக்கும் ஒரு அழுகை. என்னோட விளையாட அவனுக்கு விருப்பமுமில்லை. நேரமுமில்லை.

கண்ணன் இப்போ வளர்ந்துட்டான். குரல் உடைய ஆரம்பித்து விட்டது. இப்போது கண்ணனுக்கு பதினைந்து வயது. என் பக்கத்திலே தான் உட்கார்ந்து இருக்கிறான். ஆனால், என் கிட்டே பாடம் கேக்க விருப்பமில்லே. “போம்மா உனக்கு ஒண்ணும் தெரியாது. நானே படிச்சிகிறேம்மா”. என்னை விட்டு விலகரானோ? ரொம்ப நாளாவே அவனுக்கு தனி அறைதான்.

ஆயிடுத்து 20 வயது கண்ணனுக்கும். இப்போ அவனுக்கு நானே வேண்டாம். அவன் அறைக்குப் போனாலே, “என்னம்மா வேணும்? கதவை தட்டிட்டு வரக்கூடாது?” அதட்டுகிறான். அவன் உலகமே வேறே. அவனுக்கு இப்போ நான் வெறும் பணம்காயிச்சி மரம் மட்டுமே. நான் வெறும் பாரந்தாங்கி.

இப்போது முப்பது வயது கண்ணனுக்கு. நானும் என் கணவரும் பாடு பட்டு, கடன் வாங்கி அவனை படிக்க வெச்சோம். நல்ல வேலை வாங்கி கொடுத்து, நல்ல இடத்திலே கல்யாணமும் பண்ணி வெச்சோம். இப்போது, அவனுக்கு நாங்க இடைஞ்சல். இப்போ நான் அவனுக்கு சுவையற்ற சுமை. ரத்தின சுருக்கமாக இதை சொல்லிட்டு, தனிக் குடித்தனம் போயிட்டான். எங்க மன வலி பற்றி அவனுக்கென்ன?

இப்போது, எனக்கு வயது அறுபத்தி ஐந்து. இப்போ காசு பணம் எங்ககிட்டே இல்லை. எல்லாம் கண்ணன் படிப்புக்கு, அவன் வீடு வாங்க செலவாயிடுத்து. எனக்கு கான்சர். எங்களுக்கு முதியோர் இல்லம் வாசம். பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

இப்போதெல்லாம், கண்ணன் என்னைக் கண்டு கொள்வதே இல்லை. கிட்டே வந்தா ஒட்டிப்பேனோன்னு பயம். இதுக்காகவா இவனை இவ்வளவு பாடு பட்டு பெத்தேன்? வளர்த்தேன்?

சே! என்ன வாழ்க்கை இது? இப்போ நான் அவனுக்கு வெறும் பாரம். துக்கம் தொண்டையை அடைத்தது. கண்ணை மூடினேன். உலகமே இருண்டது போல இருந்தது.

****

“கலா ! கலா! கண்ணை விழிச்சுப்பாரு. மெதுவா! மெதுவா! எழுந்திரு!” – செந்தில்.

“இப்போ நான் எங்கே இருக்கேன்? டாக்டர் என்ன சொல்லறாங்க?”

“மனசை திடப் படுத்திக்கோ கலா!. இப்போதான் நீ தைரியமா இருக்கணும்”

“என்ன சொல்றீங்க?”

“எல்லாம் முடிஞ்சு போச்சும்மா! நான் பயந்தா மாதிரியே உனக்கு குறைப் பிரசவமாயிடுச்சு. நீ பொழச்சதே பெரிய விஷயமாம்.”

“பரவாயில்லேங்க! எதிர்பார்த்தது தான். என் குறை எனக்கு தெரிந்தது தானே. நீங்க இருக்கீங்களே, அதுவே போதும். குழந்தை யில்லேன்னா என்ன?”

“என்னம்மா சொல்றே?” செந்தில் குழப்பமாக பார்த்தான்.

“எப்படியிருந்தாலும், நம்மை விட்டு நம்ம குழந்தை, அவனோ அல்லது அவளோ, மிஞ்சிப் போனால் இருவது வருஷம்தான் கூட இருப்பாங்க. இதிலேயும் கொஞ்சம் கொஞ்சமா நம்மை விட்டு தூர விலகுவாங்க. அப்புறம் ஒரேயடியா விட்டுட்டு போயிடுவாங்க. கடைசியிலே வருத்தம் தான் மிஞ்சும். இதெல்லாம் நமக்கு தேவையேயில்லை. அப்போ போறதை இப்போவே போயிட்டான்னு நினைச்சிக்கிறேன்.”

“ஐயோ! டாக்டர். இங்கே பாருங்க. என் மனைவி என்னன்னமோ பேசறாங்க? பயமா இருக்கு!” செந்தில் பதற்றமாக.

கூட இருந்து கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் சொன்னார். “இல்லே! இல்லே! செந்தில். உங்க மனைவி நார்மல்தான். . இப்போ நீங்க அவங்களுக்கு ஆறுதலா இருந்தா அதுவே போதும். நீங்கதான் நொடிந்து போகக் கூடாது.”

“என்ன சொல்றீங்க டாக்டர் ?”

“அவங்க ரொம்ப திடமான மனமுடயவங்க. ஏற்கெனவே அவங்களுக்கு தன் உடல் பிரச்னை தெரியும். ப்ளசண்டா கோளாறு இருக்கறதாலே, குழந்தை இறந்தே பிறக்கும் அபாயம் இருக்குன்னு நல்லாவே தெரியும். என் கூட பேசியிருக்காங்க. மன ரீதியா தனக்கு ஏற்படக்கூடிய சோகத்தை தாங்க, தன்னை தானே அவங்க தயார் படுத்திக் கிட்டாங்க. துயரத்தை தன் வழியிலே ஒப்புக்கிட்டாங்க.”

கேட்டுக் கொண்டிருந்த எனக்கு தோன்றியது. ‘ஒரு வேளை டாக்டர் சொல்லறது நிஜமா இருக்குமோ! இல்லாத பிள்ளை மேல் வெறுப்பை வளர்த்துக் கிட்டு, நான் வலியை மறக்க என் மனம் முயற்சிக்கிறதோ?

சீ !சீ ! இந்த பழம் புளிக்கும் மாதிரி என்னை நானே சமாதானப் படுத்திக்கிறேனோ? தெரியலை.

ஒண்ணு மட்டும் நிச்சயம். இடிந்து போறதாலே எந்த லாபமும் இல்லை. இருக்கிற வரைக்கும் செந்திலோட ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருக்கப் போறேன். அவருக்கு ஆதரவாக இருக்கணும். இந்த சோகத்தை சேர்ந்து தான் எதிர்கொள்ளணும்.

“செந்தில், எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க? சீக்கிரமே வீட்டுக்கு போலாம், வாங்க செந்தில். இந்த ஆஸ்பத்திரி வாடையே பிடிக்கலே.”- புடவையை எடுத்து இழுத்துக் கட்டிக்கொண்டேன்.

குழந்தை பாக்கியம் எனக்கு இல்லையென்றால் என்ன? இனி என் கணவன், குழந்தை, செந்தில் தானே. எனக்கு அவர், அவருக்கு நான்தானே எல்லாம்.

வேண்டுமென்றால், ஒரு நல்ல அனாதை ஆஸ்ரமத்திற்கு உதவி செய்தால் போச்சு. அந்த குழந்தைகள் வளர்ப்புக்கு, கல்விக்கு பணத்தால், உழைப்பால் முடிந்ததை செய்வோம். அதில் திருப்தி அடைவோம். ஏன் செந்தில் விருப்பப் பட்டால், ஒரு குழந்தையை தத்து கூட எடுத்துக் கொள்வோம். வாழ நினைத்தால் வழியா இல்லை இந்த பூமியில்?

—————————————–
குறள் 623: இடுக்கண் அழியாமை

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.

 

தொடர்புடைய சிறுகதைகள்
கோபி ஒரு முன்கோபி. ”ஏன்கோபி, இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபப் படறியே? ஒரு வேளை, ரத்த கொதிப்பு இருக்குமோ? டாக்டரை பாரேன்?” –அப்பா “நானா? நானா? கோபப்படறேன்?” “ஆமா கோபி! உன் பிரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்களே! ” “அவங்க கிடக்கறாங்க. தண்டங்க. அது சரி! உன்னை யாரு இதெல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
விஜயனுக்கு கதை எழுத ஆசை! ஆனால் கற்பனை எழும்ப வில்லை. கவிதை வடிக்க ஆசை! ஆனால், கருத்து வழிய வில்லை. அவன் எழுதி அனுப்பியிருந்த ஏழு எட்டு கதைகளை ஒரு பத்திரிகை கூட பிரசுரிக்க வில்லை. எப்படி போடுவார்கள், புரியாத விஷயங்களை ...
மேலும் கதையை படிக்க...
சென்னை, அம்பத்தூர் தொழிற் பேட்டை. நான் எனது சின்ன தொழிற்சாலைக்குள் நுழைந்தேன். நான்கு லேத்துகள், இரண்டு பிரஸ்ஸிங் மிஷின், மூன்று ட்ரில்லிங் மிஷின் இவ்வளவு தான் என் பட்டறை.. முன்னுக்கு வர முயன்று கொண்டிருக்கும் சிறிய தொழில் அதிபர் நான். என் பாக்டரியில் ...
மேலும் கதையை படிக்க...
வருடம் 1960 : செங்கல்பட்டிற்கு அருகே ஒரு கிராமம். என் சொந்த ஊர். அங்கு இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீடு எல்லைக் காளியம்மன் கோவில் தெருவில். அதற்கு அப்புறம் நெடுஞ்சாலை தான். எனது பக்கத்து வீட்டில் கஸ்தூரி குடி இருந்தாள். ...
மேலும் கதையை படிக்க...
வடசென்னை மாதவரம் பகுதி. நூறு அடி சாலையை ஒட்டி, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு நடுத்தர வர்க்க குடியிருப்பு. அதில் ஒன்றில், ராமுவின் ஜாகை. ஒரு சிறிய 500 சதுர அடி புறாக்கூண்டில், நான்கு நண்பர்களுடன் பகிர்வு முறையில் தங்கியிருந்தான். ...
மேலும் கதையை படிக்க...
சிடுமூஞ்சி
வள்ளுவனுடன் விஜயன்
கவலைப்படேல்!
கஸ்தூரி
யார் குற்றம்?

பாரந்தாங்கி மீது ஒரு கருத்து

  1. vaidehi says:

    சரியான தெளிவான முடிவுள்ள கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)