“ழ” வைத் தெரியுமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 7,462 
 

“பலாப் பழம் சொல்லு …”

“பலாப் பலம்.”

“பலம் அல்ல. பழம்”

“பளம்.”

“நாக்கை நீட்டு…”

நீட்டினேன்.

“நாக்கு நன்றாகத்தானே இருக்கு. பின்னே என்ன?”

“ம்… பழனியப்பன் சொல்லு.”

“பளனியப்பன்.”

“ போச்சிடா தமிழை கொல்கிறானே…”

“எப்பா பழனியப்பா… உனக்கு அந்தப் பெயரை தெரியாமல் வைத்து விட்டேன். இனிமேல் மாற்ற முடியாது. அழகுத் தமிழில் நீ பேசாவிட்டாலும் பரவாயில்லை. உன் பெயரைப் பிழையின்றி சொல்லப் பழகிக் கொள். அது போதும். உன் பெயரை சொல்லிச் சொல்லி பாரப்பா.”

தாத்தா இப்படி முணுமுணுத்த போது எனக்கு வயது ஆறு. முதல் வகுப்பு மாணவன் நான்.

எனக்கு பெயர் வைத்தது என் தாத்தாதானாம். சிலோன்காரர் அவர். அவரை என் கிராமத்தில் கண்டிக்காரர் என்றுதான் சொல்வார்கள். அவரது பழக்க வழக்கங்கள் சற்று வேறுபட்டதாக இருக்கும். பால் இல்லாத வரக்காப்பிதான் காலையில் சாப்பிடுவார். அதையும் தட்டில் ஊற்றிக் குடிக்கும் அழகு சிலரை நகைக்க வைக்கும். அதில் வேறு ஒரு முடக்கு காப்பிக்கு சிறிதளவு வெல்லத்தை கொஞ்சம் கடித்துக் கொள்வார்.விருந்தாளிகள் வந்தாலும் தட்டில்தான் வரக்காப்பி. கையை நீட்டச் சொல்லி உள்ளங்கையில் சிறிது வெல்லக்கட்டியை கொடுப்பார். கோமணம் கட்டித்தான் குளிப்பார். குதிரையைப் பரி என்பார். குரங்கை மந்தி என்பார். பழக்க வழக்கங்களும் பேச்சு வழக்குகளும் முற்றிலும் வேறுபட்டிருந்தாலும் அவரிடம் எல்லோருக்கும் பிடித்தது தமிழ் உச்சரிப்புதான்.

ற இ ர ழ ள ல உச்சரிப்புகள் சுத்தமானவை.

அவர் எனக்கு வைத்த பெயர் பழனியப்பன். எல்லோரும் என் பெயரை சரியாய் உச்சரிக்க வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால் எல்லோரும் என்னை அழைப்பது பலனியப்பன் என்றுதான். நான் அழைத்துக் கொள்வது பளனியப்பன்.

என்னை ழ உச்சரிக்க வைக்க அவர் கொடுத்த முயற்சிகளும் பயிற்சிகளும் கொஞ்சநஞ்சமல்ல. தவறாகச் சொல்லும் போது முகத்தை சுழிப்பார். சில நேரம் தலையில் கொட்டுவார்.அதிகப்பட்சமாக தலையில் கொட்டுவார்.

“ஒரு முறையாவது உன் பெயரை சரியாய் உச்சரிடா அது போதும். என் ஆயுளுக்குள் அது நடக்குமா?”

ம் தாத்தா ! நடக்கும்!.

என்ன நடக்கும்.?

என் பெயரை நான் சரியாய் உச்சரிப்பேன்.!

அது போதும்டா !

அவரது கவனம் முழுவதும் எனது உச்சரிப்புகளிலும் எனது ஏற்றயிறக்க வாசிப்புகளிலும்தான் இருக்கும். அவரது ஆசையை நிறைவேற்ற எனக்கு மூன்றாம் வகுப்பு வரை தேவைப்பட்டது. அரையாண்டு விடுமுறை நாட்கள் அது. எனது பெயரை நான் சரியாக உச்சரித்தேன். என்னைக் கட்டி அணைத்து முத்தங்கள் கொடுத்தார். கூடுதலாக அவரது வெற்றிலை முடிச்சை அவிழ்த்து பத்து பைசாவை எடுத்துக் கொடுத்து மிட்டாய் வாங்கிவரச் சொல்லி அவரும் ஒன்று எடுத்துக் கொண்டார்.

இது நடந்தது முப்பது வருடத்திற்கு முன்பு.

நான் லண்டன் பி.பி.சி வானொலியில் தமிழ் செய்தி வாசிப்பளராக தற்போது இருக்கிறேன். எனது உச்சரிப்புகள் நேர்முகத்தேர்வு நடத்திய நடுவர்களுக்கு பிடித்துப் போயிருந்தது. குறிப்பாக ழ ல ள உச்சரிப்புகள். இதற்காக முதலில் நான் எனது தாத்தாவிற்கு நன்றிச் சொல்லிக் கொண்டேன்.

ஒரு வருடப்பணிக்குப் பிறகு ஒரு மாத விடுப்பில் நான் எனது தமிழ்நாட்டிற்கு வந்தேன். அப்போது தாத்தாவின் உடல் நிலை மிகவும் நலிவுற்றுப் போயிருந்தது. எலும்புகள் புடைத்துப் போயிருந்தது. படுத்த படுக்கையை விட்டு அவரால் எழுந்திருக்க முடியவில்லை. சோளக்கொல்லை பொம்மை போல கட்டிலில் சாய்ந்து கிடந்தார். உயிர் மட்டும் தூங்கப் போகும் குழந்தையின் கையிலிருந்து விழப்போகும் பொம்மை போல இப்பவோ அப்பவோ என்று துடித்துக் கொண்டிருந்தது.

மறுநாள் எனது வீட்டிற்கு உறவினர்கள் வருவதும் போவதுமாய் இருந்தனர். தாத்தாவை தூக்கிப் பார்த்தேன். அவர் மீது கிடந்த மாலைகளின் எடையை விட குறைவாகவே இருந்தார். துக்கச்செய்தி சொல்லி ஊர்க்காரர்களும் ஒலிப்பெருக்கியும் சென்று விடவே நான் அவரது உருவம் பொதித்த கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை ஒட்டினேன். அவரது உருவத்திற்கு கீழே ழ என்கிற சடையன் என குறிப்பிட்டிருந்ததைக் கேட்பவர்களுக்கு விளக்க எனக்குச் சுகமாய் இருந்தது. எனது தாத்தாவிற்கு நான் செய்த பாக்கியமாக இதைக் கருதிக் கொண்டேன். தாத்தாவை குளிப்பாட்டும் போது அவரது நாக்கை பார்க்கணும் பொல தோன்றிற்று. வாய்த்துணியை அவிழ்த்து கவனித்தேன். நாக்கு பல மடிப்புகளாக வளைந்து போயிருந்தது. எனக்காக பல முறை வளைந்த நா அல்லவா அது.

தாத்தாவை ஜோடித்த தேரில் வைத்து உறவினர்கள் தூக்கிக் கொண்டு செல்லுகையில் தாத்தாவிற்கும் எனக்குமான அந்த கடைசி உரையாடல் நினைவுகளாய் ஓடத்தொடங்கியது.

“பழனியப்பன் நீ பிரபலமான வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராய் இருக்கிறாயே உனது செய்தி வாசிப்பை எந்தெந்த நாடெல்லாம் கேட்கும்.?”

“இங்கிலாந்து அமெரிக்கா சிங்கப்பூர் மலேசியா…”

“ம்…சிலோன் மக்களும் கேட்பார்களா?”

“ம்…கேட்பார்களே.!”

இப்படியொரு பதிலை சொன்னதும் அவரது முகத்தில் இதுவரை நான் கண்டிராத மலர்ச்சி.

“உனக்கு சிலோன் போகக்கூடிய வாய்ப்பு கிட்டுமா?”

“ம்…கண்டிப்பாக போக வாய்ப்பு கிட்டும்.”

இந்தப் பதிலும் அவரை மகிழ்ச்சி உலகத்திற்கு கொண்டு சென்றதைக் காண முடிந்தது.

“ஏன் தாத்தா…? ”

“காரணம் இருக்குப்பா…!”

“ சொல்லுங்கள்…?”

“போனால்…அங்கே முழுக்கொம்புனு ஒரு சிறு கிராமம். இப்ப அந்தக் கிராமம் அதே பேரில் இருக்க வாய்ப்பில்லை.”

“சொல்லுங்க தாத்தா அந்த ஊரில்…?”

“அந்த ஊரில் ஒரு தொடக்கப்பள்ளி. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான பள்ளிக்கூடம் அது. இப்பவும் அது இருக்கக் கூடும். அந்த பள்ளிக்கூடத்தில்தான் நான் படித்தேன்.”

“எத்தனை வகுப்பு தாத்தா படித்தீங்க.?”

“மூன்றாம் வகுப்பு மூன்று வருடம்.”

“இப்படி அழகாய் தமிழ் உச்சரிக்கும் நீங்கள் ஒரே வகுப்பை மூன்று வருடம் படித்தீர்களா…?”

ம்.!

எனக்கு வியப்பாக இருந்தது.

“நம்ப முடியவில்லையே தாத்தா.”

“உண்மை . நல்லா படிப்பேன்தான்;. ஆனால்…” அவரது பேச்சை சொல்லிக் கொள்ளாமல் வந்த இருமல் குறுக்கிட்டது.

சில நொடிகளுக்கு பின் கேட்டேன். ”தாத்தா சொல்லுங்கள் ஆனால்…?”

“… … ம் … ம் …. நல்லாத்தான் படிப்பேன். இப்ப வளைந்த நாக்கு அப்ப வளைய மாட்டேனுட்டு. எல்லா எழுத்தையும் நல்லா உச்சரித்த என் நாக்கில் ழ மட்டும் வர மறுத்தது.”

“பின்னே…?”

“பின்னே என்ன…அந்த பள்ளிக்கூடத்தில் உச்சரிப்பு சரியாய் இருந்தால்தான் அடுத்த வகுப்பிற்கே அனுப்புவாங்க. உச்சரிப்பு சரியாய் வரவில்லைனு மூன்று வருடம் ஒரே வகுப்பில் உட்கார வைத்திட்டாங்க. இப்ப நம்ம நாட்டில் இருப்பது போன்று அனைவரும் தேர்ச்சி என்ற சலுகையெல்லாம் அப்ப அங்கே கிடையாது . என் வகுப்பில் நான் மட்டுமல்ல என்னைப் போல மூன்று பேர். ஆனால் மூன்று வருடம் ஒரே வகுப்பில் உட்கார்ந்திருந்தது நான் மட்டும் தான். என் கூட்டாளிகளும் எனக்கு பட்டப்பெயர் வைத்து கூப்பிடத் தொடங்கிட்டாங்க. என்னை விட இளமையானவங்க கூட என்னை எள்ளி நகையாடும் அளவிற்கு நான் ஆளாகிட்டேன்.”

என் தாத்தாவிற்கும் பட்டப்பெயரா…? கேட்டேன். “பிறகு தாத்தா…?”

“பிறகு என்ன…! தேயிலை எடுக்க என் அப்பா அழைத்துக்கிட்டு போகத் தொடங்கிட்டார். நான் மூன்றாம் வகுப்பு தேறவில்லையா… சம்பளமும் சரியாய்க் கொடுக்காமல் என் உழைப்பைச் சுரண்ட ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமாக என் பெற்றோரிடம் எடுத்துச் சொல்லி தமிழ்நாட்டுக்கு வந்து விட்டோம். சிலோன் பரவாயில்லை உழைப்பைத்தான் சுரண்டுனாங்க. நம்ம தமிழ்நாட்டுக்காரங்க மூளையையே சுரண்ட ஆரம்பிச்சிட்டாங்க. நான் வந்த புதுதில் கடிதம் படிக்கத் தெரிந்த ஒரே நபர் நான் மட்டும்தான். கடிதம் யாருக்கு வந்தாலும் அண்ணே மாமானு கொண்டுக்கிட்டு வருவாங்க. படித்துக் காட்டியதும் கண்டிக்காரன்னு கீழ்த்தரமாய் நடத்துவாங்க.”

அவரது பேச்சு தொடக்கத்தில் சுகத்தையும் முடிவில் சுமையையும் கொடுத்தது.

“இதுகூடப் பரவாயில்லை. எனக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. பெண் கொடுக்க முன் வந்தவர்களையும் அவன் கண்டிக்காரன் அவன் பழக்க வழக்கம் அப்படி இப்படி இருக்குமுனு சொல்லி யாரையும் பெண் கட்டவும் விடவில்லை. ”அவர் சொல்லி முடிப்பதற்குள் அவரது கண்களிலிலிருந்து வழிந்த கண்ணீர் தலையணைக்குள் மறைந்து கொண்டது.

“பின்னே பாட்டி..?”

“அவள் கணவனை இழந்த விதவைப் பெண். பழனியப்பா எல்லா கெடுதலிலும் ஒரு நன்மை இருக்கும். நான் கணடிக்காரனாக இருந்ததால்தானே ஒரு விதவைக்கு வாழ்க்கைக்கு கொடுக்க முடிந்தது.”

பெருமூச்சு விட்டுக் கொண்டார் அந்தப் பெரிய மனிதர்.. என்னைப்பொருத்த வரை அது தியாக மூச்சு.

“உங்களின் தியாகத்தை இன்று வரை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அப்படித்தானே தாத்தா…?”

“ எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நீ புரிந்துக்கொள்! அது போதும்.”

“என் வாழ்க்கையை பாதாளத்திற்குள் தள்ளியது எது?”

“எது தாத்தா…?”

“இவ்வளவு நேரம் கதையைக் கேட்டியே நீயே சொல்.”

ஒன்றிரண்டு பதிலுக்குப்பிறகு அவர் எதிர்பார்க்கும் பதிலை கூறினேன்.

“ம்…ழ!”

“ழ வே தான்!. என்னைப் போல நீயும் பாதிக்கக்படக் கூடாதுன்னுதான் உனக்கு நான் பழனியப்பன்னு பெயர் வைத்தேன். நல்லா உச்சரிக்க ழ ள ல பயிற்சி கொடுத்தேன்.”

என் தாத்தாவின் கால்களை இறுகப் பற்றினேன்.

“என்னப்பா இதெல்லாம்! கையை எடுப்பா.”

“இல்லை தாத்தா நீங்க சொல்லுங்க.”

“இன்றைக்கோ நாளைக்கோ என என் உயிர் ஊஞ்சலாடிக் கொண்டிருக்க எனக்கு ஒரு ஆசை இருக்குப்பா…?”

“என்ன தாத்தா… …?”

“சிலோனுக்குச் சென்று நான் படித்த பள்ளிக்கூடம், நான் ஓடித்திரிந்த கிராமத்தை நீ பார்க்கணும். நீ இன்னாரின் பெயரன். லண்டன் பி பி சி வானொலியில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறேன்னு சொல்லி அப்பகுதி பெரிய மனிதர்களை வியப்பிலாழ்த்தனும். அதுதான் என் ஆசை.”

“செய்வாயா பழனியப்பா…?”

“செய்வேன் தாத்தா!”

“சொல்லும் போது சடையன் பெயரன்னு சொல்லாதே. யாருக்கும் தெரியாது. ழ வோட பெயரனு சொல்லு.அப்பத்தான் தெரியும்.”

“அது என்னத்தாத்தா ழ ?”

“அதுதாம்ப்பா என் வயது பிள்ளைங்க அப்ப எனக்கு வைத்த பட்டப்பெயர் .”

“ழ சொல்லிப் பார்த்தேன். எனக்கு சிரிப்பு வந்தது. என்னுடன் சேர்ந்து தாத்தாவும் சிரித்தார்.”

இதுதான் அவரது வாழ்வின் கடைசி சிரிப்பு.

இப்போதும் சரி ழ வை உச்சரிக்கும் போது எனக்கு சிரிப்பு வரத்தான் செய்கிறது. என் தாத்தாவை கவனித்தேன். தேரில் மாலைகளுக்கிடையில் வானத்தைப் பார்த்தப்படி தாத்தாவும் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவரைச் சூழ்ந்திருக்கும் உறவுக்கார பெண்கள் மட்டும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள். அவர்கள் அழுதால் அழுதிட்டு போகட்டுமே. என் தாத்தா ழ என்றும் என் கூடத்தான் இருக்கிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *