கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 10,778 
 

லியாகத் சோம்பிப் படுத்துக் கிடந்தான். அவனின் உடல் குறுகியிருந்தது எவ்வளவு குறுக்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவு சுருக்கிக் கொண்டான். தொடை இடுக்கில் படர்ந்திருந்த ஈரம் அவனை நிலை குலையச் செய்தது போல படுத்திருந்தான். அந்த ஈரத்தைச் சகித்துக் கொள்ள முடியாதவன் போல உடம்பு வேறு திமிறிக் கொண்டிருந்தது.

என்ன கனவு வந்தது என்பது ஞாபகம் வரவில்லை. அவன் தொடையிடுக்கு ஈரமானபோது விழிப்பு வந்தது. ஹாரம் என்று சொல்லிக் கொண்டான். இஷா தொழுகை நேரத்தில் கூட சரியாக ஈடுபட முடியாதபடி மனம் என்னமோ அலை பாய்ந்து கொண்டிருந்தது. இரவில் தூங்கும் போது மட்டுப் பட்டமாதிரி தோன்றியது.

வேலைக்கு வேறு இடத்திற்கு போக வேண்டும் என்பதைத் திடமாக்கிக் கொண்டான். பரமசிவம் தெரிந்தவர் என்றாலும் தொழுகை நேரத்தில் கடையில் ஆள் இருக்க வேண்டும். இப்ப வந்தர்றன் என்று கிளம்பிப் போய் அரை மணி நேரத்தில் லியாகத் வந்துவிடுவான். அதுவும் ளுஹர் மதியம் ஒரு மணியை நெருங்குகையில் இருக்கும். அந்த சமயத்தில் ஆள் இல்லாமல் இருப்பது அவனை சிரமத்திற்குகுள்ளாக்கியது. தொழுகைக்கு போய் உட்கார்ந்தாலும் மனம் பரபரத்துக் கொண்டுதான் இருக்கும். சீக்கிரம் வந்து விட வேண்டும் போலாகிவிடும். அஸரோ, மாஃரிப்போ கூட இந்த கதிதான். ஒன்பது மணிக்கு சாத்தப்படும் கடையில் ஐந்து மணியும், ஆறே முக்காலும் சிரமம்தான். “வேற நேரத்தில போயி தொழுகையை நடத்தக் கூடாதாÓ என்று பரமசிவம் கேட்டுக் கொண்டே இருப்பான். மூன்று பேர் இருக்கும் இடத்தில் ஒருவர் காணாமல் போய்விடுவது சட்டெனக் காட்டுக் கொடுத்து விடும். சில சமயம் தொழுகைக்கு போறேன் என்று பரமசிவம் முன்னால் போய் நிற்பான். அவர் தலைதூக்கி சரி என்று சொல்கிறவரைக்கும் நின்று கொண்டிருப்பான். பல சமயங்களில் நேரம் நெருங்கிவிட்டதை அறிந்து வேக நடையாக மசூதியை அடைந்து விடுவான். மறுபடியும் வந்து சேர்கிற போது கவனித்துவிடுவார்.

“என்ன கண்ணாமூச்சி ஆடிட்டு திரியறே லியாகத். என்னோட கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிட்டே இருக்கே” என்பார்.

“தொழுகை நேரம் மாத்திக்கறது”

“அந்தந்த நேரத்திலதாங்க போகணும். உங்க சாமி கோயில்களுக்கு போற மாதிரி எப்பவும் போக முடியாது.”

“எங்குள்லயும் உச்சபூஜை, காலை, ராத்திரின்னு குறிப்பிட்ட நேரம் இருக்கு. அதைத் தவிர மத்த நேரத்திலயும் போகலாம். எங்க கோயிலுக்கு வந்துரு…”

கண்களை மூடிக் கொண்டு இதைக் கேட்பது பாவகரமானது என்பது போல் நினைத்தான். தினம் தினம் இதே ரீதியில் ஏதாவது சொல்லிக் கொண்டேயிருந்தான். அசௌகரியமாக இருக்கிறது என்று மறைமுகாம உணர்வது தெரிந்தது. முஸலமான் நடத்தும் ஒரு கடையிலோ, ஆபீசிலோ வேலைக்கு இருந்தால் இந்த சிரமம் இருக்காதோ என்ற எண்ணம் வந்ததுண்டு. அந்த மாதிரி ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தான்.

“வாப்பா… வேற எடத்தில வேலை பாத்துக்குடு.”

“ஏண்டா பரமசிவம் தங்கமான மனுஷனாச்சே.”

“வல்லவர் கூட வாப்பா. தொழுகை நேரத்தில கடையை விட்டுப் போறது அவருக்கு சிரமமா இருக்கு. எனக்கும் தொழுகைக்கு போக முடியாமெ இருக்க முடியாதில்லே…”

“ஆமா. சிரமந்தா… வேற பாக்கலாம்.”

சிக்கந்தர் மனதில் வைத்திருந்தார். லியாகத்திற்கு தகுந்தமாதிரி ஓர் இடம் அமையவேண்டும். எந்த முஸலாமானின் முன்னும் போய் நிற்பது அவருக்குச் சங்கடத்தையே தரும். பாங்கு சொல்ல ஆள் இல்லை என்றால் உடனே போய் விடுவார். சிக்கந்தர் சுன்னத்மார்க்கத்தின் போது கூட இருந்து பார்த்துக் கொள்வார். நோம்பு சமயங்களில் மசூதியில் என்ன வேலை சொன்னாலும் செய்வார். அதற்கு என்ன வேண்டும் என்று கேட்டு யாரிடமும் போய் நிற்பார். தனிப்பட்ட காரியங்கள் என்றால் மிகவும் தயங்குவார். லியாகத்திற்கு வேறு வழியில்லை. யாரையாவது போய் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தார். பழைய ஆட்கள் என்றால் கரிசனமாய் பார்ப்பார்கள். மலக்கராவுத்தர், சாகும் அமீது, குப்பாராவுத்தார் உடனே ஞாபகம் வந்தார்கள். அலிக்குட்டியைக் கூட நேற்று பாண்டியன் நகர் மசூதி தெருவில் பார்த்து பேசிக் கொண்டிருந்தார். ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். வீதியில் கேட்பது நன்றாக இருக்காது. வீட்டிற்கு போக வேண்டும் என்று நினைத்தார்.

லியாகத் உடம்பை நிமிர்த்தி படுக்கையில் சாய்ந்த போது தொடையிடுக்கு ஈரம் இன்னும் பரவி நசரசத்தது. எழுந்து கழுவிவிட்டு வந்து படுக்க நினைத்தான். பஜர்க்கு மசூதிக்கு போய் வந்திருப்பார். அவனும் ஐந்து வேளை தொழ வேண்டும் என்று நினைப்பான். ஆனால் நோம்பு சமயங்களில் மட்டும் அது சாத்தியப்பட்டிருக்கிறது அவனுக்கு. “ரோஜா இருக்கிறோம்” என்று நோம்பு பெயர் சொல்வதைக் கேட்பது அவனுக்கும் சந்தோஷமாக இருக்கும். அதிகாலை பஜர் பாங்கு பள்ளிவாசல்களில் வைத்திருக்கும் மைக்கில் சொல்வார்கள். அதிகாலை பஜ்ர்க்கு முன் நோம்பு இருந்தது பின்னர் மாஃரிப் பாங்கு முன்பாக நோம்பை விட்டு விடுவதையும் லியாகத் சரியாகச் செய்வான்… ஐந்து வேளை தொழுகையை முறைப் படுத்திக் கொண்டால் உடம்புப் லகுவாகும். மனமும் சுத்தமாக இருக்கும் என்று சொல்லிக் கொள்வான்.

ஆசிக்கிடம் தொடை ஈரம் படுவதைப்பற்றி சொல்லியிருக்கிறான். “பட்டா என்னா… கழுவிட்டு துணி மாத்திட்டு தூங்க வேண்டியதுதா…”

“சங்கடமா இருக்குடா…”

“அது கூட ஒரு சொகம்டா. உனக்குதா சாஜிதாபேனுவை ரொம்பப் புடிக்குமே. அவளை நெனச்சிட்டே படு. ஈரம் பட்டாலும் அவளுக்குப் போய் சேர்ரதா நெனச்சுக்கோ… இல்லீன்னா ஈரம் படறப்போ சாஜிதா பேனுவை நெனச்சுக்கடா…”

“போடா… இந்த பொன்னே வேண்டா இதெல்லா இல்லாம பிரமச்சாரி மாதிரி இருக்க ஆசைடா…”

“அப்புறம் குண்டி வெடிச்சு தலை வெடிச்சு சாக வேண்டியதுதா…”

லியாகத் மெல்ல எழுந்து கதவைத் தாண்டி வெளியே வந்தான். வாப்பா வெளியே போயிருக்கிறார் பஜ்ர்ன்னு போனவர் அங்கேயே அரட்டை அடித்துக் கொண்டிருப்பார். ஒரு டம்ளர் தேனீர் கிடைத்தால் போதும் ஒரு மணி நேரத்திற்கு அரட்டை ஓயாது.

“சீரழிஞ்சு போச்சு. எல்லாமே சீரழிஞ்சு போச்சு. மண்ணெண்னையைத் தலையில கொட்டிக்கலாம் போலிருக்கு” என்பார் வாப்பா. லியாகத்திற்கு ஏதாவது விபரீதமாய் நடந்து விடக்கூடாதே என்றிருக்கும்.

தெருச்சண்டையொன்றில் குரல் வளையில் கத்தியை வைத்து” ஹலால் “ முறையில் ஒருவன் கொல்லப்பட்டதை பற்றி வாப்பா சொன்னபோதுதான் முந்தின வாசகத்தை முதல் முறையாகச் சொன்னது ஞாபகம் வந்தது அவனுக்கு.

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஹலால்

  1. நடை நன்றாக இருந்தது. ஆனால் புரிய வில்லை. ஏதாவது விடு பட்டு விட்டதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *