ஸ்டெப்னி

 

அனுராதா ஒவ்வொரு செடியிடமும் நின்று குனிந்து பார்த்தாள்.

ரோஜா பூச்சி விழுந்து காணப்பட்டது.

மல்லிச் செடிகள் நுனி கருகி இருந்தன.

புல் காய்ந்து போயிருந்தது.

க்ரோடன்ஸும், அரளியும் தலை தொங்கி வாடியிருந்தன.

அம்மா இருந்தால் தோட்டம் இப்படியா இருக்கும்?

பணக்கார வீட்டுக் குழந்தைகள் மாதிரி ரோஜாவும், மல்லியும் தளதளவென்று மின்னும், புல் பச்சையாய் கண்ணைப் பறிக்கும், தூசி, தும்பு இல்லாமல் செடியும் கொடியும் என்னைப் பாரேன், பாரேன் என்று கவர்ச்சியாய் கூப்பிடும்.

மசமசத்த கண்களை இரண்டு தரம் சிமிட்டி, செம்பருத்திச் செடியிடம் சென்று நல்லதாக ஒரு பூவை பறித்துக்கொண்டு அவள் வீட்டுக்குள் போனாள். தன் மேஜை மேல் வைத்திருக்கும் அம்மாவின் படத்தின் வளையத்தில் பூவைச் சொருகினாள். முழுசாய் ஒரு நிமிஷம் அம்மாவை வெறித்தாள். லேசாகக் குனிந்து படத்தை முத்தமிட்டாள். “ஐ மிஸ் யும்மா” என்று முணுமுணுத் தாள். மீண்டும் மசமசக்கத் துவங்கிய கண்களை ஒரு பெருமூச்சு இழுத்து அடக்கிவிட்டு நிமிர்ந்தாள்.

மணி என்ன?

எட்டே காலா?

நாழியாகிவிட்டது. கிளம்பவேண்டும்.

அன்றைக்குத் தேவையான புத்தகங்களை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டு கூடத்துக்கு வந்தாள்.

“நான் ஸ்கூலுக்குக் கிளம்பறேன் அத்தே….”

இவள் குரல் கேட்டு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் சமையல்கட்டிலிருந்து எட்டிப் பார்த்தார்.

“டிபன் சாப்பிடலையா அனு?”

“வேணாம்- பசிக்கலை…”

“வழக்கம்போல ஆயாகிட்ட சாப்பாடு அனுப்பிடவா?”

“ம்”

அனுராதா வாச வராந்தாவுக்கு வந்தாள்.

மறுபடியும் அம்மாவின் நினைப்பு உள்ளுக்குள் எட்டிப் பார்த்தது.

அம்மா இருந்தால் இப்படி வெறும் வயிறுடன் கிளம்ப சம்மதிப்பாளா?

என்னது? டிபன் வேணாமா? வளர்ற பெண் பட்டினி யாவா ஸ்கூலுக்குப் போறது? நோ, நோ…- என்பாள்.

முட்டை வேணாட்டி ரொட்டி சாப்பிட்டு போ- என்பாள்.

ஒரு டம்ளர் பாலையாவது குடி அனு. இப்படி பட்டினி கிடந்தா உடம்பு கெட்டுடும்-என்பாள்.

கரிசனத்தோடு, வாசல்வரை வந்து பிடிவாதமாய் எதையாவது கையில் திணித்து சாப்பிடச் செய்த பிறகே போக அனுமதிப்பாள்.

அம்மா … என் அம்மா ….

காலில் செருப்பை மாட்டிக்கொண்டு படி இறங்கிய நிமிஷத்தில் பக்கத்து வீட்டிலிருந்து திடுமென ஒரு கீச்சுக்குரல் கேட்க, அனுராதா லேசாக திடுக்கிட்டுப்போய் பார்வையை காம்பௌண்டைத் தாண்டி வீசினாள்.

லாரி, சாமான்கள், கார், மனிதர்கள்.

ஓ! பக்கத்து வீட்டுக்குக் குடிவந்து விட்டார்களா?

“ஹேய்…ஹேய்…பத்திரம்…அப்படித் தூக்காதே, அது கண்ணாடி….கேர்ஃபுல்…” திரும்ப அந்தக் கீச்சுக்குரல் ஒலிக்க, திரும்ப அனுராதா திடுக்கிட்டுப் போனாள்.

மை காட்! அம்மா குரல்! அப்படியே அம்மாவின் குரல்! அம்மாவும் இப்படித்தான் உணர்ச்சிவயப்பட்டு கீச்சுக்குரலில் அடிக்கடி கத்துவாள்.

பரபரவென்று சுவரிடம் சென்று செடிகளூடே அடுத்த வீட்டைப் பார்த்தபோது முதுகைக் காட்டிக்கொண்டு படிக்கட்டு களில் நின்றிருந்த அந்தப் பெண்மணியைக் காண முடிந்தது.

நெடுநெடுவென்று உயரம்-அம்மா இத்தனை உயரமில்லை. வாளிப்பான பருமன்-அம்மா கொஞ்சம் சோனி. ரவிக்கைக்கும், புடவைக்கும் நடுவில் தெரிந்த வெள்ளை சருமம்-ம்ஹூம், அம்மா நிச்சயம் இந்த நிறமில்லை . மாநிறம்தான்.

இரண்டு நிமிஷங்கள் போல நின்றபின் யாராவது பார்த்தால் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்று தோன்ற அனுராதா நகர்ந்து கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

கேட்டைத் தாண்டி சாலையில் கால் வைக்கும்போது மீண்டுமொரு முறை அந்தக் கீச்சுக்குரல் காதில் வந்து விழ அழுந்தி யிருந்த உதடுகளை உட்பக்கமாய் ஒரு முறுவல் கீறியது.

குரல் மட்டும் அம்மாவினுடையதேதான். அசல் அப்படியேதான். முகம் எப்படி இருக்கும்? அம்மாவின் ஜாடை இருக்குமோ.

மாலையில் அனுராதா வீட்டுக்குத் திரும்பியபோது மணி ஐந்தரை என்றது.

கேட்டைப் பூட்டிவிட்டு உள்ளே வந்தவளை ‘ஹலோ’ என்ற கீச்சுக்குரல் வரவேற்றது.

நின்றாள், நிமிர்ந்தாள்.

காம்பவுண்ட் சுவரருகில் அந்தப் பெண்மணி.

ஓ! ஷி ஈஸ் ப்யூடிஃபுல்! -

“ஹலோ”-திரும்ப அந்தப் பெண்மணி இவளை விளித்து சிரிக்க, சின்னக் குரலில் அனுராதாவும் ‘ஹலோ’ என்றாள்.

“என் பேர் மிஸஸ் சுந்தரம்-துர்கா. நாங்க அலஹாபாட் லேந்து ட்ரான்ஸ்பர் ஆகி வந்திருக்கோம். காலைல உன்னைப் பார்த்தேன். தோட்டத்திலே பூ பறிச்சிட்டு இருந்தே…கூப்பிட்டு பேசலாம்னு நினைக்கிறத்துக்குள்ள உள்ளே போயிட்டே…ஸ்கூல் லேந்து வர்றியா?”

அனுராதா தலை ஆட்டினாள்.

“உன் பேர் என்ன? எந்த ஸ்கூல்? எத்தனாவது படிக்கிறே?”

அனுராதா உடனே பதில் சொல்லாமல் பேசியவரை வெறித்தாள்.

இப்படிக்கூட ஒரு ஒற்றுமை அம்மாவுக்கும் இவருக்கும் இருக்க முடியுமா?

அம்மாவும் இப்படித்தான்-யார், என்ன, ஏது, என்று தயக்கம் எல்லாம் இல்லாமல் ஆளைப் பார்த்துவிட்டால் போதும்; கலகலக்க ஆரம்பித்துவிடுவாள்.

“என்னம்மா பேசமாட்டியா?”

அனுராதா வெட்கத்துடன் புன்னகைத்தாள்.

“ஸாரி” என்று சொல்லிவிட்டு மெதுவாக தன் பேர் மற்ற விவரங்களைக் கூறினாள்.

“ப்ளஸ் ஒன் படிக்கிறியா? அப்ப என் பெண்ணைவிட நீ ரெண்டு வயசுதான் சின்னவளா இருப்பே! மதுரா பி.ஏ. பர்ஸ்ட் இயர் படிக்கிறா… அவ நல்ல வளர்த்தி…அவளை விட்டுட்டு வந்தது தான் எனக்குப் பிடிக்கலை. இருக்கிறது ஒரு பெண், அவளையும் தனியா விட்டுட்டு வான்னா எப்படி? என்ன செய்யறது, திடும்னு ட்ரான்ஸ்ஃபர் வந்திடுச்சு. மாட்டேன்னு சொல்ல முடியாது. ப்ரமோஷன் வேற… ‘நீ வேணா மகளோட இருந்திட்டு அடுத்த வருஷம் வா’னு அங்கிள் சொன்னார். ஆனா அது எப்படி முடியும்? ஹாஸ்டல்லே விட்டுட்டு வந்திருக்கோம். அவளை நினைச்சா மனசாகலை… ஹூம்… என்ன பண்ணறது? இன்னும் குறைஞ்ச பட்சம் ஆறு மாசம்; அப்புறந்தான் அவளைப் பார்க்க முடியும்…”

துர்கா கொஞ்சம் நிறுத்தினாள். மகளைப் பிரிந்த ஏக்கம், நிஜமாகவே கண்களில் வியாபிக்க, அரைகணம் மௌனித்தாள். அப்புறம் “உன்னைப் பார்த்தப்புறம் அவ ஞாபகம் ரொம்ப வருது” என்று சொல்லி சிரித்துவிட்டு “சரி நீ போம்மா-ஸ்கூல்லேந்து வந்தவள். டிபன் சாப்பிட விடாம நான் பிடிச்சிகிட்டேன்னு உங்கம்மா திட்டப் போறாங்க.”

அனுராதா திரும்பினாள்.

நீங்க சொல்ற மாதிரி கரிசனையோட பேசவோ திட்டவோ எனக்கு அம்மா இல்லே ஆண்ட்டி-நினைப்பதை வெளியில் சொல்ல விடாமல் கூச்ச ஸ்வபாவம் தடுக்க, மெதுவாக உள்ளே போனாள்.

மறுநாள் காலை; ஆறரை இருக்கும். காபி சாப்பிட்டுவிட்டு புத்தகத்துடன் முன்ஹாலில் உட்கார்ந்தவள் காதில் “அனு… அ.ன்-னு” என்று உரத்த குரலில் துர்கா கூப்பிடுவது விழ, எழுந்து வெளியில் வந்தாள்.

ஹவுஸ் கோட்டில்கூட இந்த ஆண்ட்டி எத்தனை அழகாக இருக்கிறார்!

“குட் மார்னிங் அனு… தூக்கத்துலேந்து எழுப்பிட்டேனோ?…. இங்க வா…. இதை எடுத்துக்க…”

அனுராதா கிட்டத்தில் சென்றாள். சின்ன அட்டைப்பெட்டி-அது நிறைய பேடா“என்ன ஆண்ட்டி ?”

“பேடா அனு. அலஹாபாட்லேந்து வாங்கிட்டு வந்தது. எடுத்துக்க…”

“இவ்வளவா?”

“நாலு பேரா ஆளுக்கு ரெண்டு சாப்பிட்டா தீர்ந்திடும். எடுத்துக்கம்மா…”

நீங்கள் சொல்லும் நாலு பேர் இந்த வீட்டில் கிடையாது ஆண்ட்டி

எதுவும் பேசாமல் கை நீட்டி அந்த டப்பாவை அனுராதா வாங்கிக்கொண்டாள்.

“ஊர்பட்ட வேலை இருக்கு அனு; ஐ வில் ஸீ யூ லேட்டர்”

நாலடி எடுத்து வைத்தவளைத் தயக்கத்துடன் ‘ஆண்ட்டி ‘ என்று அழைத்தாள் அனுராதா.

“ம்?”

“இன்னிக்கு சனிக்கிழமை. எனக்கு ஸ்கூல் இல்லே… வேணா, அங்கிள் ஆபீஸ் போனப்புறம் நான் வந்து உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?”

“பென்டாஸ்டிக்… வா… வா… கண்டிப்பா வா…”

நினைப்பதை வெளியில் உடனே சொல்லி விடுவதோடு, வேண்டாத உபசாரத்துக்காகக் காத்திருக்காமல் துர்கா பேசுவது சந்தோஷத்தைத் தர, அனுராதா வீட்டுக்குள் போய் அத்தையிடம் சொல்லிவிட்டு ஒன்பது மணி வாக்கில் பக்கத்து வீட்டுக்குப் போனாள்.

தன் கணவரின் வேலை பற்றியும், அவர் திறமை பற்றியும், மதுரா பற்றியும், அவள் படிப்பில் முதலாக வருவதோடு, பாட்டு, நடனத்தில்கூடத் தேர்ந்து விளங்குவது பற்றியும், அவளைப் பிரிந்து இருப்பது எத்தனை கஷ்டமாக இருக்கிறது என்பது பற்றியும் நீளநீளமாக துர்கா பேசுவதைக் கேட்டுக்கொண்டே பீங்கான் களைத் துடைத்து ஸைட் போர்டில் அடுக்கினாள். குஷன் உறை களைத் தட்டிப் போட்டாள். கர்ட்டன்களை மாட்டினாள்

“களைப்பா இருக்கு-டீ சாப்பிடலாமா?”

சமையல்கட்டில் நுழைந்து கெட்டிலில் வென்னீர் கொதிக்க வைத்த நிமிஷத்தில்தான் அனுராதாவைப்பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாதது நினைவுக்கு வந்த தினுசில் “ஹேய்-அனு-உன்னைப் பத்தி நீ எதுவுமே சொல்லலியே…. சொல்லு… உங்கப்பா அம்மா பேர் என்ன? அப்பா என்ன செய்யறார்? அம்மாவை ஏன் வெளிலியே காணோம்? ம்? சொல்லு…” என்றதும், அனுராதா சட்டென்று பார்வையைத் தழைத்துக்கொண்டாள்.

உதட்டைக் கடித்து தன்னை சமாளித்துக்கொண்டு சன்னக் குரலில் பேசினாள்.

“அப்பா பேர் ஈஸ்வரன் எல் அண்ட் டி.லே ஸேல்ஸ் மேனேஜரா இருக்கார். மாசத்துலே பாதி நாள் டூர்தான். இப்ப கூட ஊர்லே இல்லே. ஒரே அண்ணா ஸ்ரீதர். பிலானிலே என்ஜினீரிங் கோர்ஸ் படிக்கிறான்…”

“வயசானவங்களா ஒரு அம்மாவை கொல்லைப் பக்கம் பார்த்தேனே!” -

“அது…. அது… எனக்கு ஒண்ணுவிட்ட அத்தை… இங்கதான் வீட்டோட துணையா இருக்காங்க….”

துர்கா புருவங்களைத் தூக்கினாள்….

“அம்மா ?”

அனுராதா அவளைப் பார்க்காமலேயே பேசினாள்.

“அ… அம்மா இறந்து போய் ஒரு வருஷம் ஆறது ஆண்ட்டி ..”

துர்கா சட்டென்று குனிந்து அவள் கையைப் பற்றினாள்.

“ஐ’ம் ஸாரிம்மா … எ… எப்படி?”

“ட்ரக் அலர்ஜி… ஜலதோஷம், ஜுரம்னு டாக்டர் கிட்ட போனாங்க… ஸல்ஃபா எழுதிக் கொடுத்தார். வீட்டுக்கு வந்து * போட்டுகிட்ட அரைமணிக்கெல்லாம் முகம், காது, விரல்கள் வீங்கிப் போச்சு… என்ன ஏதுனு புரிஞ்சி, டாக்டர்கிட்ட போறத்துக் குள்ள… ஷி கொலாப்ஸ்ட்.. ஒரு வியாதி இல்லாதவங்க நிமிஷத்துலே… நிமிஷத்……”

அனுராதா உதட்டைப் பல் பதியக் கடித்துக்கொண்டு தலையைக் கவிழ்த்துக்கொண்டாள்.

நெஞ்சில் துக்கப் பந்து உருண்டது.

கண்கள் மசமசத்தன.

“கமான் அனு… டோண்ட் பீ ஸோ அப்ஸெட்… ப்ளீஸ்…”

துர்கா எழுந்து வந்து பக்கத்தில் உட்கார்ந்து தோளைத் தட்டி, தலைமுடியைக் கோதிக் கொடுக்க, அந்தப் பரிவு தந்த சுகத்தில் அனுராதா கண்களை மூடிக்கொண்டாள்.

இதற்குப் பிறகு என்னமோ சொல்வார்களே அது மாதிரி நாளொரு மேனி எட்ஸட்ரா எட்ஸட்ராவாக துர்காவும், அனுராதாவும் ரொம்பத்தான் நெருங்கிப் போனார்கள்.

கூச்சத்தின் காரணமாய் விலகி நிற்கப் பார்த்தாலும் விடாமல் காலையும், மாலையும் காம்பவுண்ட் சுவரிடம் நின்று ‘அ..னு…’ என்று கீச்சுக்குரலில் கத்தி, சிரிக்கச்சிரிக்கப் பேசி, இழுத்து வைத்து நீ என் பெண் மாதிரி என்று சொல்லி துர்கா ஈஷிக்கொள்ள ஈஷிக்கொள்ள, அனுராதாவும் தன் பங்குக்கு ரொம்பத்தான் அவளோடு ஒட்டிக்கொண்டாள்.

ஸ்கூலுக்குப் போகும் முன்னரும், திரும்ப வந்த பிறகும் கூடுமானவரையில் பக்கத்து வீட்டில் பொழுதைக் கழிப்பதில் தனி இன்பம் காண முற்பட்டாள்.

துர்காவோடு காய்கறி மார்க்கெட்டுக்கும், லாண்டரிக்கும், மளிகைக் கடைக்கும் போய் வந்தாள்.

அவள் சமயல் பண்ணும்போது கூட நின்று ஒத்தாசை செய்தாள்.

தன் பெண்ணைப்பற்றி முகம் மலர அவள் பேசுவதை உன்னிப்பாய் கேட்டாள்.

இவள் அப்பா டூரிலும், அவள் கணவர் வேலையிலும் லயித்திருப்பதை லட்சியம் பண்ணாமல் இரண்டு பேரும் மாட்னி ஸினிமா போனார்கள்; எஸ்.வி. சேகரின் ‘காதுல பூ’, சோவின் ‘நேர்மை உறங்கும் நேரம்’ நாடகங்கள் பார்த்துவிட்டு வந்து மறுநாள் காரசாரமாக விவாதித்தார்கள். ட்ரைவ் இன்னில் ஒரு கப் காபி சாப்பிட்டுவிட்டு மணிக்கணக்கில் பேசினார்கள். பௌண்டன் ப்ளாஸாவிலும் லஸ்ஸிலும் கடை கடையாய் ஏறி இறங்கினார்கள்.

பாரதிராஜாவின் படம் என்றால் துர்காவுக்கு ஏக விருப்பம் என்பதைப் புரிந்துகொண்ட பிறகு, ‘காதல் ஓவியத்’துக்கு அட்வான்ஸ் புக்கிங் க்யூவில் வெயிலைப் பார்க்காமல் நின்று அனுராதா டிக்கெட் வாங்கிவர, சாக்லெட் கேக், நூடுல்ஸ், பீட்ஸா என்று நாளுக்கு ஒன்றாக தினுசுதினுசாய் சமைத்து அவளை உட்கார வைத்து கிட்ட நின்று “மது கூட இப்படித்தான், சாதம் சாப்பிடமாட்டா; இதெல்லாம் மட்டும் மூணுவேளையும் சாப்பிடுவா!” என்று சொல்லிக்கொண்டே துர்கா பரிமாற… இன்னும்… இன்னும்….

அன்றைக்கு ஸ்கூலிலிருந்து லேட்டாக வந்து பால் குடித்து விட்டு, யூனிபார்மைக் கழட்டி, வேறு உடுத்திக்கொண்டு ஓடி வந்தவளிடம் ‘ஏன் லேட்?’ என்றாள் துர்கா முதல் கேள்வியாய்.

சூள் கொட்டினாள் அனுராதா.

“என்ன விஷயம்?”

“பெரிசா ஒண்ணுமில்லே ஆண்ட்டி….”

“சின்னதாதான் இருக்கட்டுமே-என்ன விஷயம்?”

“அடுத்த மாசம் பேரண்ட்ஸ் டே வருது… அதுலே ட்ராமாவிலே நடிக்க என்னை பிரின்ஸி கூப்பிட்டு அனுப்பினாங்க… அதெல்லாம் எனக்கு வேணாம்னு சொல்லிட்டு வர நாழியாயிட்டது…”

“ஏன் வேணாம்?”

“குறிப்பா காரணம் எதுவும் இல்லே ஆண்ட்டி …”

துர்கா கண்களை இடுக்கிக்கொண்டாள்.

“ஏன் வேணாம்….சொல்லு?”

“வந்து…”

“வந்து?”

“அ… அம்மா போனப்புறம் எனக்கு இதுலெல்லாம் இண்ட்ரஸ்ட் இல்லே ஆண்ட்டி. அவங்க இருந்தப்போ எல்லா பங்க்ஷனுக் கும் வருவாங்க… உற்சாகம் கொடுப்பாங்க… இப்ப. அப்பாக்கு எதுக்கும் டைம் இல்லே ஆண்ட்டி … அதான்…”

“ம்ம்ம்…. பேரண்ட்ஸ் டே எப்ப?”

“அடுத்த மாசம்…”

“நீ டிராமால நடிச்சி நா பார்க்கணுமே… ஆசையா இருக்கே?”

“ஆண்ட்டி … ப்ளீஸ்”

“நோ எக்ஸ்க்யூஸஸ்… நீ நடிக்கறே, நான் பார்க்க வரேன்… ஓ.கே? நாளைக்கு பிரின்ஸிகிட்ட சொல்லிடு-அவ்வளவுதான்த மேட்டர் எண்ட்ஸ்!… இப்ப என்ன பண்ணப் போறே? படிக்கணுமா? இல்லே என்கூட பாண்டி பஜார் வரைக்கும் வரியா?”

துர்காவின் பேச்சு தந்த ஊக்கத்தில் மறுநாள் அனுராதா ட்ராமாவில் நடிக்க சம்மதம் தெரிவித்தாள்.

போர்ஷனை வாங்கி வந்து சிரத்தையுடன் மனப்பாடம் செய்தாள்.

ஆர்வத்துடன் ரிகர்ஸல்களில் கலந்துகொண்டாள்.

ராத்திரி தூங்கும்போது துர்கா வந்து முன்வரிசையில் உட்கார்ந்திருக்கிற மாதிரியும், தான் பிரமாதமாக நடித்து முதல் பரிசைப் பெறுகிற மாதிரியும் கலர்கலராய் கனவு கண்டாள்.

முன்போல மனசில் சதா ஒரு ஏக்கம் நெருடாததை உணர்ந்து கொண்டாள்.

ஹ்ருதயம் காரணமில்லாமல் கனக்காததைப் புரிந்து கொண்டாள்.

என்ன மனுஷி இந்த ஆண்ட்டி-சொந்தப் பெண் மாதிரி மற்றப் பெண்களையும் அழுத்தமான அன்போடு நேசிப்பது இவளுக்கு எப்படிச் சாத்தியமாகிறது என்று அடிக்கடி நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

பக்கத்து வீட்டுக்கு துர்கா குடிவந்து நாலு மாசங்கள் முடிந்த ஒரு நாளில், வாசலில் தந்திச் சேவகன் வந்து நின்றான்.

“யூனிவர்ஸிடியில் கலாட்டா. பரீட்சைகள் ரத்தாகிவிட்டன. பதினைந்து நாட்கள் விடுமுறை விட்டுவிட்டார்கள். 18ஆம் தேதி காலை வருகிறேன்-மதுரா.”

துர்கா தேன் குடித்த நரியாகிப் போனாள்.

“18ஆம் தேதி-மை காட்-நாளைக்கு மது வந்துடுவா…”

சொன்னதையே சொல்லிக்கொண்டு குதிகுதியென்று குதித்தாள்.

அந்த சந்தோஷமும், படபடப்பும் ரொம்பப் புதுசாக இருக்க, அத்தனையும் ஒரு சின்ன சிரிப்போடு அனுராதா அனுபவித்தாள்.

பின்- “மதுராவுக்கு குலாப்ஜாமுனும், ஓமப்பொடியும் பிடிக்கும்னு சொல்வீங்களே ஆண்ட்டி.. செய்யலாமா?” என்றாள்.

“இப்பவா?”

“இப்பத்தான்-அப்புறம் நாளைக்கு ஹாயா பேசிட்டு இருக்கலாம்…”

வீட்டில் இருந்த பாலோடு, தன் வீட்டிலிருந்து கொணர்ந்த ஒரு லிட்டரையும் சேர்த்து அடுப்பில் வைத்து அனுராதா கோவா காய்ச்ச, துர்கா வளவளவென்று என்னென்னமோ பேசிக் கொண்டே ஓமப்பொடியைப் பிழிந்தாள்.

இவள் கோவாவை உருட்டி வைக்க, அவள் பொரித்து எடுத்து பாகில் போட்டாள்.

வேலைகள் முடிந்து அனுராதா வீட்டிற்கு வந்தபோது மணி பத்தரை.

கூடப் பிறந்த அக்காவை வரவேற்பதற்காக, அம்மாவுடன் சேர்ந்து ஆயத்தம் பண்ணிவிட்ட குதூகலத்தோடு தூங்கினவள் காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துத் தயாரானாள்.

ஜன்னல் அருகில் நின்று மதுராவோடு, துர்காவும் அங்கிளும் வந்து இறங்குவதைப் பார்த்த பின்பு, ஆண்ட்டி கூப்பிடுவாள் என்று காத்துவிட்டு, ஒரு மணி நேரம் ஆன பிறகு பொறுக்க மாட்டாமல் தானே பக்கத்து வீட்டுக்குச் சென்றாள்.

“குட்மார்னிங் ஆண்ட்டி …”

வெட்கத்துன் பேசியவளை துர்கா நிமிர்ந்து பார்த்தாள்.

“ஹலோ அனு… மதுவைப் பார்த்தியா… அதுதான் மது… எப்படி இருக்கா? போட்டோல பார்த்ததைவிட இன்னும் அழகா இல்லே? நாலு மாசத்துலே ஒரு இஞ்ச் வளர்ந்திட்டாலும் ஹாஸ்டல் சாப்பாடு சரியில்லாம இளைச்சிட்டா… ஏன் மது, கட்டாயம் ரெண்டு டம்ளர் பால் சாப்பிடுனு சொல்லி இருந்தேனே-சாப்பிடலியா?”

மதுரா அம்மா மாதிரி கலகலக்கவில்லை. அனுராதாவிடம் ‘ஹலோ’ என்றாள். படிப்பு பற்றி விசாரித்தாள். நிதானமாக, யோசித்து தன்னைப்பற்றிச் சொன்னாள்.

மணி எட்டேகாலைத் தொடுகையில் ‘ஸ்கூலுக்கு நாழியாச்சு’ என்று அனுராதா கிளம்பினாள்.

சமயல்கட்டில் மதுராவுக்கு டிபன் தயாரிப்பதில் ஈடுபட் டிருந்த துர்கா அங்கிருந்தே ‘பை’ என்று விடை கொடுத்துவிட்டு “வா மது… உனக்காக ராத்திரி உட்கார்ந்து குலாப்ஜாமுன் செய்திருக்கேன்-வந்து சாப்பிடு” என்று மகளிடம் சொன்னதைக் காதில் வாங்கியபடி, ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் இப்படியொரு அம்மாவை மதுரா அடைவதற்கு என்று நினைத்துக்கொண்டே அனுராதா வெளியில் வந்தாள்.

அன்று மாலை ஸ்கூலிலிருந்து திரும்பி, பக்கத்து வீட்டுக்கு அவள் சென்றபோது வீட்டில் யாரும் இல்லை.

“வெளியே போயிருக்காங்க” என்றாள் வேலைக்காரி.

வீட்டுக்குத் திரும்பி வந்து ஜன்னலிடம் சென்று பக்கத்து வீட்டில் விளக்கு எரிகிறதா, என்று எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அனுராதா தூங்கச் செல்லும்போது மணி பத்து.

மறுநாள் காலை முதல் காரியமாய் காம்பௌண்ட் சுவரிடம் நின்று ‘ஆண்ட்டி’ என்று குரல் கொடுத்தாள்.

துர்கா வேகமாக வெளியில் வந்தாள்.

“ராத்திரி எங்க போயிட்டீங்க ஆண்ட்டி–ரொம்ப நேரமாச்சா, திரும்ப?”

“கடைக்குப் போயிட்டு, தெரிஞ்சவங்க வீட்டுக்குப் போனோம்… பேசிட்டு இருந்ததுலே நேரம் போயிடுச்சு…”

“மதுராவுக்கு குலாப்ஜாமுன் பிடிச்சிதா ஆண்ட்டி?”

“பாத்திரம் காலி…” சிரித்த துர்கா சட்டென்று சிரிப்பதை நிறுத்தினாள்.

“ராத்திரி ரொம்ப நாழி பேசிட்டு படுத்ததுலே, மது இன்னும் எழுந்திருக்கலை-இந்தப் பக்க பெட் ரூம்லதான் படுத்திருக்கா; நாம பேசினா எழுந்திடப் போறா… அப்புறமா பேசலாம் என்ன?”

அன்றும் அனுராதா வீடு திரும்பியபோது பக்கத்து வீட்டில் யாரும் இல்லை.

ஈவினிங் ஷோ-அடையார் கேட் ஹோட்டலில் டின்னர்.

மறுநாள் ஷாப்பிங்.

-அனு, உன் சிகப்புச் சுரிதார் கம்மீஸை எங்க வாங்கினே? அதே மாதிரி மதுவுக்கு ஒண்ணு வாங்கணும்.

-அனு, ஐஸ்கிரீம் ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்லுவியே-எங்கே?

-அனு, நாங்க நாளைக்கு மஹாபலிபுரம் போறோம். ஸ்கூல் இருக்கு. இல்லாட்டி நீயும் வரலாம்…

மதுரா வந்து ஒரு வாரம் போவதற்குள் துர்காவை முழுசாய் பார்த்து, அவளுடன் முழுசாய் இரண்டு நிமிஷங்கள் பேச அவகாசம் கிடைப்பதற்குள் அனுராதா திண்டாடிப் போனாள்.

ட்ராமா ஒத்திகை முடிந்து வீட்டுக்குக் களைப்புடன் வந்தால் பக்கத்து வீட்டின் வெறுமை அவளை வரவேற்கும். படிக்க வேண்டியதைப் படித்து, சாப்பிட்டு பொழுதோடு படுத்தால் தூக்கம் வரமாட்டேன் என்று சண்டி பண்ணும்.

அரைகுறைத் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கையில், துர்காவின் கீச்சுக்குரல் சிரிப்பு பலமாகக் கேட்கும்; சட்டென்று எழுந்து ஜன்ன லிடம் ஓடினால் எங்கோ போய்விட்டு, காரிலிருந்து மகள், கணவ ருடன் ஆண்ட்டி சிரித்தபடி இறங்குவது ஒரு கணம் மின்னி மறையும்.

அந்த ஞாயிற்றுக்கிழமை தயக்கத்துடன் அனுராதா பக்கத்து வீட்டுக்குச் சென்றபோது, இரண்டு பெட்டிகளில் துணிகளை துர்கா அடுக்கிக்கொண்டிருந்தாள்.

இவளைக் கண்டதும் வழக்கமான சிரிப்பை சிரித்து “என்னம்மா… ஆளைக் கண்ணிலேயே காணோம்! ஆண்ட்டியைப் பார்க்க வரமுடியாத அளவுக்கு பிஸியா?” என்று கேட்டுப் பதில் பேசாமல் அனுராதா நிற்க, அவளே தொடர்ந்தாள்.

“அங்கிளுக்கு சேலத்துலே நாலு நாள் வேலை இருக்கு. அப்படியே ஏற்காடு போயிட்டு வரலாம்னு ஒரு ஸடன் ப்ளான், எப்படி?”

அனுராதா அதிர்ந்துபோய் கண்களை விரித்தாள்.

“நீ… நீங்க கூடவா போறீங்க, ஆண்ட்டி ?”

“நான் போகாம?”

“எ…எத்தனை நாளாகும் வர?”

“மாக்ஸிமம் ஒரு வாரம்…”

ஒரு வாரமா?-என்ன சொல்வது என்று புரியாத தினுசில் அனுராதா கொஞ்சம் திகைத்தாள்.

அப்புறம் ரொம்ப தழைந்த குரலில் “வர்ற சனிக்கிழமை எங்க ஸ்கூல்லே பேரண்ட்ஸ் டே ஆண்ட்டி” என்றாள்.

புடவையை மடித்து பெட்டிக்குள் போட்ட துர்கா நிமிர்ந்தாள். எதிரில் நின்றவளை ஊன்றிப் பார்த்தாள்.

“ஆமா-நீ சொல்லி இருந்தே நான்தான் மறந்திட்டேன்… ம்ம்… பரவாயில்லே-நான் இல்லாட்டி என்ன? நீ ட்ராமாலே பிரமாதமா நடிப்பே …எனக்குத் தெரியும்…”

“இல்லே வந்து ஆண்ட்டி …”

தவிப்போடு அனுராதா பேசியதை அவள் காதில் வாங்கும் முன் “மம்மி… இங்கே கொஞ்சம் வாங்களேன்” என்று மதுராவின் குரல் பக்கத்து அறையிலிருந்து கேட்டது.

பெண் அழைக்க, போட்டது போட்டபடி துர்கா போனதும் மசமசக்கும் கண்களுடன் அனுராதா வாசலுக்கு வந்து தன் வீட்டைப் பார்க்க நடந்தாள்.

அன்று பூராவும் முகம் சிவக்க அழுதவள் மாலையில் தந்தை அலுவலகத்திலிருந்து வந்ததும் “எங்க பிரின்ஸியை சந்திச்சு, எனக்கு உடம்பு சரியில்லே, ட்ராமாக்கு வர முடியாதுனு சொல்லிடுங்க” என்றாள்.

“என்ன விஷயம்மா?” என்றவரிடம் பிடிவாதமாக எதுவும் சொல்ல மறுத்தாள். தொடர்ந்து வந்த நாலைந்து நாட்களும் தன் அறையிலேயே பழிகிடந்தாள். ஒழுங்காய் சாப்பிட பேச மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

சரியாக அடுத்த செவ்வாய் இரவு துர்காவும், மற்றவர்களும் சேலம் ட்ரிப்பிலிருந்து ஊர் திரும்பினார்கள். மறுநாளே மதுரா அலஹாபாத்துக்குப் போக டிக்கெட் எடுத்திருந்ததால் காலையில் அனுராதாவிடம் சொல்லிக்கொள்ள வேண்டி தாயும், மகளுமாக காம்பௌண்ட் சுவரிடம் நின்று குரல் கொடுத்தபோது, வேண்டு மென்றே அனுராதா வெளியில் வராமல் இருந்தாள்.

மகளை ரயிலில் ஏற்றிவிட்டு அழுத கண்களும், சிவந்த முகமுமாகத் திரும்பிய துர்கா வீட்டுக்குள் நுழையாமல் சுவரிடம் நின்று ‘அ..னு…’ என்று பெரிசாய் கத்தினபோது மட்டும் இவள் மெதுவாக வாசலுக்குப் போனாள்.

“என்ன அனு… வெளியிலே எங்கயாவது போயிருந்தியா? நானும், மதுவும் மாறிமாறி கூப்பிட்டமே… அவ உன் கிட்ட ஊருக்குப் புறப்படறப்ப சொல்லிக்க ஆசைப்பட்டா… நீ எங்க போயிட்டே?”

“……..”

“சேலம் ட்ரிப் ரொம்ப நல்லா இருந்துது அனு…. அங்கிருந்து மைசூர், பங்களூர் போயிட்டு ராத்திரி வந்து உடனே மதுராவை அனுப்பறதுக்குள்ள விழி பிதுங்கிப் போச்சு…”

தானே பேசுவதும், அனுராதா எதுவும் பதில் சொல்லாமல் இருப்பதும் புரிந்த தினுசில் துர்கா சட்டென்று நிறுத்தினாள்.

“என்ன அனு-ஏன் எப்படியோ இருக்கே?”

“இல்லியே?”

“பேரண்ட்ஸ் டே நல்லா நடந்துதா? ட்ராமா? உனக்கென்ன; பிரமாதமா நடிச்சிருப்பே…”

எதுவும் கூறாமல் வாடின முகத்துடன் அனுராதா நிற்பது சங்கடப்படுத்த, எட்டி அவள் கையைப் பிடித்தாள்.

“என்னம்மா, உடம்பு சரியில்லையா?”

“ம்ஹூம்.”

“அப்பா ஏதாவது சொன்னாரா?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லே”

“பின்னே ஏன் எப்படியோ இருக்கே? ம்? எதுவானாலும் என்கிட்டச் சொல்லும்மா… நான் உனக்கு அம்மா மாதிரி…. நீ எனக்கு மது மாதிரி… ரெண்டு வாரமா அவ இருந்தா, நான் சந்தோஷமா இருந்தேன்… இப்ப? இனிமே எனக்கு யாரு? நீதானே? வெளியிலே போய் பேசலாமா அனு? ஹவ் அபௌட் ட்ரைவ் இன்? மது இல்லாத வீட்டுக்குள்ள போகவே எனக்குப் பிடிக்கலை. வரியா, ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்? பத்து நிமிஷத்துலே…”

வேகமாகப் பேசியவளின் பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக்கொண்ட அனுராதா நிதானமாக ‘ஆண்ட்டி’ என்று குறுக்கிட்டு அழைத்தாள்.

“ஸாரி ஆண்ட்டி … இப்ப நான் உங்களோட வரப் போற தில்லை … எனக்கு வேற வேலை இருக்கு…அப்புறம், இனிமே அடிக்கடி நீ என் பெண் மாதிரி, நான் உன் அம்மா மாதிரினு சொல்லாதீங்க….நோ…யூ ஆர் நாட் மை மதர்-அண்ட் ஐம் நாட் யுவர் பாட்டர். உங்க மகளை தாற்காலிகமா பிரிஞ்சி இருக்குற வேதனைலே, அவ கண் முன் இல்லாத ஏக்கத்திலே அவளை எனக்குள்ள பார்க்க முயற்சிக்கிற நீங்க, அவ நேர்ல வந்ததும் என்னை வேணாம்னு ஒதுக்கிடறீங்க…ஆனா, திரும்ப அவ போன பிறகு அந்தப் பிரிவு தாங்காம என்னைத் தேடி வந்திருக்கீங்க… வேணாம் ஆண்ட்டி… உங்களுக்கு வேணுங்கறப்ப உங்களை அம்மாவா நினைச்சி, உங்களுக்கு வேண்டாதப்ப தள்ளி நிற்க என் மனசுக்கு வலு இல்லே…என்னை விட்டுடுங்க… பத்து நாளா நான் பட்ட வேதனை எனக்குத்தான் தெரியும். இப்பத்தான் ரெண்டு நாளா, நிறைய யோசனை பண்ணப்புறம் நான் தெளிஞ்சிருக்கேன். திரும்ப என்னைக் குழப்பாதீங்க. லெட் அஸ் ஜஸ்ட் – பீ ஃப்ரெண்ட்ஸ். அம்மா இல்லாத சூன்யத்தை நானும், மகளைப் பிரிஞ்ச தாற்காலிக வலியை நீங்களும் புரிஞ்சிகிட்டு ஸ்னேகிதங்களா வாழறதுதான் நமக்கு-முக்கியமா எனக்கு நல்லது. நீங்க வேணும்னு எதுவும் செய்யலை, ஆனாலும் உணர்ச்சி இல்லாத எந்திரங்களுக்குத்தான் ஸ்டெப்னி சரி-மனுஷங்களுக்கு இல்லே… நோ… உங்க தாய்ப் பாசத்துக்கு ஒரு ஸ்டெப்னியா இருந்து அதை எடுத்துக்கத் தெரியாம என்னையே வருத்திக்க நான் விரும்பலைப்ளீஸ், ப்ளீஸ், புரிஞ்சிக்குங்க ஆண்ட்டி…”

நினைத்ததைச் சொல்லிவிட்ட திருப்தியோடு, ஸ்தம்பித்து நிற்கும் துர்காவை லட்சியம் பண்ணாமல் திரும்பி, உள்ளே வந்து, அம்மா படத்திடம் குனிந்து ‘ஐ லவ் யூ அண்ட் மிஸ் யூ மம்மி’என்று முணுமுணுக்கையில், அனுராதாவின் கண்களிலிருந்து பிரவாகமாகக் கண்ணீர் பெருகி, அவள் அம்மாவின் புகைப்படத்தின் மேல் விழுந்து தெறிக்கத் துவங்கியது.

- குமுதம், 1982 

தொடர்புடைய சிறுகதைகள்
ஸரஸு எச்சில் இட்டுக் கொண்டிருந்தபோது அப்பா உள்ளே நுழைந்து சமையல்கட்டு வாசப்படியில் தலையை வைத்துப் படுத்திருந்த அம்மாவிடம் வந்து நின்றார். பாதி எச்சில் இடுகையில் கையை எடுத்தாலோ தலையை நிமிர்த்தினாலோ அம்மாவுக்குக் கோபம் வந்துவிடும். “எச்சில் இடறப்போ பராக்கு என்னடீ?” என்பாள். “அந்தக் காலத்துலே நாங்கள்ளாம் ...
மேலும் கதையை படிக்க...
"அம்மா..." "என்ன இந்துக் குட்டீ?" "என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க?" "ஒரு க்ளயண்டோட முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு-அதுக்காக பாயிண்ட்ஸ் தயாரிச்சிகிட்டு இருக்கேன்..என்ன வேணும்மா?" "இல்லேம்மா.. வந்து..." "சொல்லு டார்லிங், அம்மாக்கு நாழியாவுது பாரு..." "நாளன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே மம்மி... நீங்களும், டாடியும் வரணும் மம்மீ.." "நாளன்னிக்கா? ஏழாம் தேதியா? ...
மேலும் கதையை படிக்க...
நல்ல இருட்டு. காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் ரொம்ப தூரத்துக்கு நெடுஞ்சாலை தெரிந்தது. எதிரே அவ்வப்போது தொடர்ந்து வந்த லாரிகளின் எதிர் வெளிச்சத்தைக் கட்டுப்படுத்த வேண்டி, விளக்குகளை அணைத்து அணைத்து ஓட்டுவது குமரனுக்குப் பெரும் துன்பமாய் இருந்தது. சில லாரிக்காரர்கள் தங்கள் ஹெட்லைட்டுகளை ...
மேலும் கதையை படிக்க...
ப்ரீதி ரொம்ப சுத்தம். இன்றைக்கு என்றில்லை, சின்ன வயசு முதற்கொண்டே இந்த சுத்த உணர்வு ரொம்ப ஜாஸ்திதான். இவளையொத்த பெண்கள் பள்ளி விடுமுறை நாட்களில் ஸ்கூல் எக்ஸ்கர்ஷன், மகாபலிபுரம் போகிறோம். திருநீர்மலை ஏறப் போகிறோம் என்று அலைந்த நாட்களில் கூட, அவள் ...
மேலும் கதையை படிக்க...
அவளுக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்வதென்றால் ரொம்பப் பிரியம். கல்யாணமாகுமுன் பிறந்த வீட்டில் காலேஜ் போகும் கன்னியாக இருந்த நாட்களில் அவளுக்கு எண்ணெய் தேய்த்துவிட என்று ஒரு பெண்மணியை அம்மா நியமித்திருந்தாள். கஸ்தூரி - அதான் அந்தப் பெண்மணி - அடாது மழைபெய்தாலும் ...
மேலும் கதையை படிக்க...
ஜனனம் இல்லாத ஆசைகள்
தாய்
உறுத்தல்
சுத்தம்
ட்ரங்கால்

ஸ்டெப்னி மீது ஒரு கருத்து

  1. SIVAKUMAR N COVAI25 says:

    என்ன ஒரு அற்புதமான நதி பாயும் மன வார்த்தைகள் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)