ஸம்ஸ்க்ருதத் தனிப்பாடல்

 

(இதற்கு முந்தைய ‘தவிப்பு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

“ஏட்டி, வாசல்ல நின்னுட்டு என்னலா செய்யுத.?” வீட்டுக்குள் இருந்து காந்திமதியின் அம்மையின் குரல் கேட்டது.

“சட்டியும் பானையும் செய்யுறேன்.. வந்து பாரு!” அடுப்புத் தீயில் எறிந்த மிளகாய் வத்தல் மாதிரி காந்திமதி சுள்ளென்று வெடித்தாள்.

“என்னதான் இருக்கோ அந்த வாசல்ல பொழுதுக்கும்…” திருப்பி பட்டாணி வெடி உள்ளே இருந்து!

“பொழுதுக்கும் வீட்டுக்குள்ளேயே கெடந்து உசிரைவிட முடியாது என்னால” வெகுதூரம் போய்விட்ட சபரிநாதனின் காதுவரைக்கும் காந்திமதியின் இந்த லக்ஷ்மி வெடி வெடித்தது. இதுவரை அவளிடமிருந்து இவ்வளவு தடித்த குரலை சபரிநாதனின் காதுகள் கேட்டது கிடையாது. திரும்பி அவளை ஒருதடவை பார்க்கலாமா என்றுகூட யோசித்தார். ஆனால் மனசின் எங்கேயோ ஒரு மூலையில் தயக்கம் இருந்தது. அதனால் திரும்பிப் பார்க்காமலேயே நடந்தார்.

என்றும் இல்லாமல் இன்றைக்குத்தான் காந்திமதிக்கும் சபரிநாதன் திரும்பி அவளை ஒருதடவை பார்க்க மாட்டாரா என்றிருந்தது. அவள் நினைத்தது நடக்கவில்லை.

சபரிநாதன் திரும்பிப் பார்க்காமல் அவருடைய வீட்டிற்குள் படியேறி நிமிஷத்தில் மறைந்துவிட்டார். காந்திமதியின் மனசு கொஞ்சம் அடி வாங்கிவிட்டது! இதுதான் தலைவிதி என்பது… சபரிநாதன் திரும்பிப் பார்க்காமல் ஓடினது வெட்கப் பட்டுக்கொண்டு. மடியில் கனம், அதனால்தான் திரும்பிப் பார்க்காமல் ஓடுவதாக காந்திமதிக்கு நினைப்பு… உடனே கோபத்தில் அவளுக்கு மார்பு விம்மி கனத்துப் போய்விட்டது! எப்படி அவள் அவளுடைய வீட்டிற்குள் குட்டி போடப்போகிற பூனை மாதிரி சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாளோ, அதேமாதிரி சபரிநாதனுக்கும் குட்டியே போட்டுவிட்ட பூனை மாதிரி அவருடைய வீட்டிற்குள் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தார்.

சமையல்காரர் சிவக்குமாருக்கும் சபரிநாதனின் மனநிலை புரிந்தது. அதான் முதலாளி சாப்பிட்ட ‘கூறே’ சரியில்லையே. சாப்பிட்ட பிறகு ஆள்காட்டி விரலால் மிச்ச துவையலை ஒரு ‘இழுவு இழுவி’ வாயில் வைத்து சப்புக்கொட்டி நக்கிவிட்டுப் போகும் சபரிநாதன் துவையலையே வேண்டாத விருந்தாளியைப் பார்ப்பது போலத்தான் பார்த்துவிட்டு எழுந்தார்!

சாப்பிட்ட ஏப்பம்கூட விடாமல் கூடத்து ஊஞ்சலில் போய் அவர் உட்கார்ந்து கொள்ளவும், முத்தையா சோடா பாட்டில் போன்ற ‘கேட்ராக்ட்’ கண்ணாடியின் வழியே தரையை உற்றுப் பார்த்துக்கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது. முத்தையா, கோமதிச் சித்தியின் எண்பது வயதுக் கணவர்.

“சுத்தம்… நெனைச்சேன் கெழம் வரும்னு” சபரிநாதன் தனக்குள் முணங்கிக் கொண்டார்.

“ஒன் சித்தி சொன்னா.”

“சொல்லாட்டித்தான் ஆச்சரியம்” சபரிநாதன் கடுப்படித்தார்.

“ஆங்… ஆங், சாப்பாடெல்லாம் ஆச்சு சபரி!”

அவருக்கு காதுகள் கேக்காது. நேரம்தான் சபரிநாதனுக்கு! இந்தக் காதுகளை வைத்துக்கொண்டு வந்திருக்கிறார் முத்தையா.

“நீ சாப்பிட்டாச்சா?” மெதுவாக நாற்காலியில் உட்கார்ந்தார்.

“ம்… ம் சாப்பிட்டாச்சி.”

“சபரி, நீ என்னதான் சொல்லு; பெஞ்சாதி சமையல் வேறதான். சம்பளம் வாங்குகிற சமையல்காரன் சமையல் வேறதான். ஒன் சித்தி இன்னிக்கி என்ன சமையல் செஞ்சா தெரியுமா? வெறும் பருப்பு ரசமும், எள்ளுத் தொவையலும்தான்! ஒறைப்பும் புளிப்பும் சுள்ளுன்னு எப்படி இருந்திச்சுன்னு நெனைக்கே… அதுவும் ஒன் சித்தி கருணைக்கிழங்குல கொழம்பு வச்சான்னா, எட்டு ஊருக்கு அந்த வாசனை அடிக்கும் பாரு – சமையல்காரன் சமையலை எல்லாம் அந்தக் கொழம்புக்கு வால்ல கட்டித்தான் அடிக்கணும்!”

சமையல் அறைக்குள் நின்றபடி சிவக்குமார் இதை கேட்டுக் கொண்டுதான் இருந்தார். எதற்காக இத்தனை நேரங்கெட்ட நேரத்தில் கிழவர் வந்திருக்கிறார் என்று புரியவில்லை அவருக்கு. ஆனால் கிழவர் சும்மா வரவே மாட்டார். அதனால் சிவக்குமார் கதவின் பின்னால் நின்றுகொண்டு முத்தையாவின் பேச்சை காதைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்டார். அடுத்த ஐந்து நிமிடங்களில் முத்தையாவின் வாயில் இருந்து விஷயம் வெளியே வந்துவிட்டது.

நிஜமாகவே சபரிநாதன் ஆசைப்பட்டால் முத்தையாவும் கோமதியும் சேர்ந்து நல்ல பெண்ணாகப் பார்த்து அவருக்கு கல்யாணம் செய்து வைக்க இந்த நிமிஷமே தயாராக இருக்கிறார்களாம்! நடக்க முடியாத விஷயம் இல்லையாம் இது! சபரிநாதன் தயக்கப் படவோ கூச்சப் படவோ வேண்டாமாம்! ஐம்பத்தி ஐந்து வயது ஒரு வயசே கிடையாதாம்! சபரிநாதன் ஜாம் ஜாம் என்று கல்யாணம் செய்து கொள்ளலாமாம்! என்னதான் வீட்டோடு இருந்து சமையல்காரன் சமைத்துப் போட்டாலும், சமையல்காரன் சமையல் சமையல்காரன் சமையல்தானாம்…!

முத்தையா இதைச் சொன்னபோது மட்டும் சபரிநாதன் சமையல் அறைப்பக்கம் ஒரு தடவை திரும்பிப் பார்த்துக்கொண்டார்.

சபரிநாதன் சரியென்றால் கல்யாணத்தை இரண்டே மாதத்தில் நடத்திடலாமாம். சபரிநாதனின் இரண்டு மகள்களிடமும் பேசி அவர்களை சம்மதிக்க வைப்பதையெல்லாம் முத்தையா பார்த்துக் கொள்வாராம்…!

“யோசிச்சி வை சபரி, நாளைக்கி வந்து பாக்குறேன்…” முத்தையா எழுந்து கொண்டார். சபரிநாதன் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.

“சிவக்குமார்.”

சிவகுமார் வேகமாக வந்தார்.

“இவரை வீடுவரை கொண்டுபோய் விட்டுட்டு வந்திரு.”

“நானே ஒத்தையில போயிருவேன் சபரி.”

“பரவால்ல அவன் வரட்டும்.”

முத்தையா சிவக்குமாரின் கையைப் பிடித்துக்கொண்டே இறங்கியவர், “ஒன் சமையலை சாப்பிட்டே பார்த்ததில்லை சிவா! சாப்பிட்டுப் பாக்கணும் ஒரு நாளைக்கி..” என்றார்.

முத்தையா சென்றபின் சபரிநாதன் மெதுவாக வாசல் திண்ணைக்குப் போனார். திம்மராஜபுரம் கிராமத்தில் இருள் கவிந்து விட்டிருந்தது. எல்லா வீடுகளிலும் விளக்கு எரிந்தது. அவருடைய வீட்டைத் தவிர மற்ற எல்லா வீடுகளிலும் பெண்களின் நடமாட்டம் இருந்ததை அவர் புத்தம் புதிய கண்களோடு ஏக்கமாகப் பார்த்தார்!

மரகதம் இருந்தபோது அவருடைய வீடு இப்படியா வெறிச்சோடிப்போய் கிடக்கும்… “மதினி இருக்காங்களா, அக்கா இருக்காங்களா” என்று கேட்டு மாற்றி மாற்றி யாராவது பெண்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருப்பார்கள். சபரிநாதனும் அங்கே இங்கே என்று போய்விட்டு இந்நேரம் வீடு திரும்பினால் வாசல்படி ஏறும்போதே முல்லைப் பூவின் வாசனை நெஞ்சை நிறைக்கும். பட்டுச் சேலையோடும், தலை நிறைய முல்லைப் பூவோடும் பார்க்க வேண்டுமே மரகதத்தை… லட்சுமிக் களை அப்படிச் சொட்டும்! பக்கத்தில் பட்டுச் சேலையுடன் மரகதம் நிற்கிறாற் போல சபரிநாதன் கற்பனை செய்து பார்த்தார். பெருமூச்சு நெஞ்சைச் சுட்டது.

அவள் ஒரு நல்ல பெண்மணிக்கு சிறந்த இலக்கணம். அடிக்கடி ஸம்ஸ்க்ருதத் தனிப்பாடல் திரட்டு சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 157/194 மேற்கோள் காட்டுவாள். அதில் பெண்களை கெளரவிக்கும் ஐந்து விஷயங்களையும், அதே பெண்களை அகெளரவிக்கும் ஐந்து விஷயங்களையும் சொல்லிக் காட்டுவாள். அதை இப்போது நினைத்துக் கொண்டார்.

1. புத்ரஸுஹு – நல்ல பிள்ளைகளைப் பெறுதல்;

2. பாக குசலா – சுவையாகச் சமையல் செய்தல்;

3.பவித்ரா – உடலையும், மனதையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல்;

4.பதிவ்ரதா – கற்பினைக் காத்து கற்புக்கரசியாக வாழ்தல்;

5.பத்மாக்ஷி – தாமரைக் கண்களாக உடையவளாக வாழ்தல்.

பாடல்: புத்ரஸுஹூ பாககுசலா பவித்ரா ச பதிவ்ரதா

பத்மாக்ஷி பஞ்சபைர்நாரீ புவி ஸம்யதி கெளரவம் ஸு

பரான்னம் – பிறர் கொடுக்கும் உணவை உண்ணுதல்;
பரவஸ்த்ரம் – மற்றவர்களின் உடைகளை உடுத்தல்;
பரசய்யா – மற்றவர்களின் படுக்கைகளில் உறங்கல்;
பரஸ்த்ரியஹ – மற்றவர்களின் மனைவியை நாடுதல்;
பரக்ருஹவாஸ – பிறர் வீட்டில் வசித்தல்.

பாடல்: பரான்னம் பரவஸ்த்ரம் ச பரசய்யா பரஸ்த்ரியஹ பரக்ருஹவாஸ

பரவேஸ்மனி வாசஞ்ச சக்ரஸ்யாபி ச்ரியம் ஹரேத்

கூடத்து ஊஞ்சலுக்குத் திரும்பினார். மனம் அவருக்குக் கொஞ்சம் கலைந்து போயிருந்தது. கோமதி சித்தியிடம் அவர் சொன்னது வாய் தவறிதானா? இல்லை, அவருக்குள் அவருக்கே தெரியாமல் இன்னொரு கல்யாண ஆசை ஒளிந்து கிடக்கிறதா? ஆனால் இதை ஏன் தான் இத்தனை நாட்களாக நினைத்தே பார்க்கவில்லை என்று யோசித்துப் பார்த்தார். நிஜமாகவே அப்படி யோசித்துப் பார்க்கலாமாவென்று யோசனை செய்தார். யோசிப்பதில் தப்பே இல்லை! ஆனால் இந்த யோசனையில் முத்தையா தம்பதியை மட்டும் சேர்த்துக் கொள்ளவே கூடாது! இரண்டும் ரெட்டை நாயனங்கள்! உள்ளூரில் இல்லாவிட்டாலும், ஊர் ஊராகப் போய் சபரிநாதன் இரண்டாம் கல்யாணத்திற்காகக் கிடந்து அலைந்து கொண்டிருக்கிறார் என்று வாய் கூசாமல் இரட்டை நாயனம் மேள தாளத்தோடு கச்சேரி வைத்துவிட்டு வருவார்கள்! 

தொடர்புடைய சிறுகதைகள்
அய்யோ, இது என்ன கொடுமை? நான் இறந்து விட்டேன். படுக்கையின் மீது அசைவற்று கிடக்கிறேன். என் மனைவி காயத்ரி கையில் மொபைலை வைத்துக்கொண்டு யார் யாருக்கோ போன் செய்து அழுது கொண்டிருக்கிறாள். என் ஆறு வயது ...
மேலும் கதையை படிக்க...
எனக்கும் மேகலாவுக்கும் திருமணமாகி பத்து வருடங்கள் நேற்றுடன் முடிந்தது. மேகலா என் அக்காவின் மகள். நான் அவளுக்கு மாமா முறை. என்னை மாமா என்றுதான் கூப்பிடுவாள். என்னைவிட பத்து வயது சிறியவள். கணவன் என்கிற அந்தஸ்தைவிட மாமா என்கிற அக்கறைதான் என்மேல் அவளுக்கு ...
மேலும் கதையை படிக்க...
இருபது நாட்களுக்கு முன்னால் என்னுடைய ஈஸ்வரிப் பாட்டி தன்னுடைய எண்பதாவது வயதில் இறந்துவிட்டாள். இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ரகசியமாக என்னிடம் மட்டும் பாட்டி சொன்ன செய்தியைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சியாகப் போய்விட்டது எனக்கு. அதுவரைக்கும் என்னுடைய தாத்தா கைலாசம்தான் சில விஷயங்களில் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
அவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தது. இருவரும் நல்ல வசதியான குடும்பம். முதல் ஒருமாதம் உறவினர்கள் ஒருவர்மாற்றி ஒருவர் அவர்களுடன் இருந்தனர். கடந்த இரண்டு மாதங்களாகத்தான் இருவரும் தனித்து விடப்பட்டனர். பெங்களூர் இந்திராநகரில் ஒரு அபார்ட்மென்ட்டில் தனிக்குடித்தனம். அவன் பெயர் பாலாஜி. அவள் அபி. ...
மேலும் கதையை படிக்க...
"வேணு சாலை விபத்தில் இறந்து விட்டார். இன்று மாலை தகனம். உடனே கிளம்பவும் - சந்துரு." காலை பத்தரை மணிக்கு அலுவலகத்தில் இந்த டெலிகிராம் என் கையில் கிடைத்தது. உடனே பதட்டமடைந்தாலும் சிறிது நிதானித்துக் கொண்டேன். வேணு, என் மனைவி சரஸ்வதியின் மூத்த அண்ணன். ...
மேலும் கதையை படிக்க...
இறப்பு
வாஸக்டமி
வினோத மனிதர்கள்
விரிசல்
புத்திர சோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)