வைத்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 13,808 
 

தேவன் மருமகனுக்கு எழுதிய கடிதம்

எனது அன்புள்ள சிரஞ்சீவி விச்சு,

நான் சென்ற வாரம் எழுதிய கடிதத்தைப் பார்த்த பின்னர், உன் மனத்திலே என்ன தோன்றுகிறது என்பதை என்னால் ஊகிக்க முடியும். ”எழுத்தாளனாகும் வழிகளைப் பற்றி இந்த மாமா பெரிய வார்த்தைப் பந்தலைப் போட்டுவிட்டு, ‘என்னத்தை எழுதுவது’ என்பதைப் பற்றியே சொல்லவில்லையே!” என்று நீ நினைப்பாய். வாஸ்தவம். எழுத்தாளன் வெற்றி அதிலும்கூட இருக்கிறது! சரியான ஒரு ‘ஸப்ஜெக்ட’ அகப்பட்டு, அவன் எழுத்தும் சரளமாக அமைந்து விட்டால், அப்புறம் அவன் ஜமாய்த்து விட மாட்டானா?

உனக்கு அது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், கூடிய வரை ஸ்வதந்திரமான ஒரு பிரவிருத்தையை நாடலாம் என்கிற ஆசை பிறந்திருக்கக்கூடும். ஆகையினால்தான் வைத்தியத்தைப் பற்றி–என் கண்ணால் பார்த்து நான் அறிந்து கொண்டவரையில்–உனக்கு இங்கே எழுதத் தீர்மானித்திருக்கிறேன்.

வைத்தியக் கல்லூரியில் உன்னை முதலில் எப்படி உன் அப்பாவும் நானுமாகச் சேர்க்கப் போகிறோம், ஐந்து வருஷ காலத்தில் ஐயாயிரம் ரூபாய் செலவில் நீ எப்படி பெரிய பெரிய புஸ்தகங்களைப் படித்துப் பாஸ் செய்யப் போகிறாய் என்கிற பெரிய கவலை எங்களுக்கு எப்போதுமே உண்டு. பிறப்பையும் இறப்பையும் கண்ணெதிரிலே காணப் போதுமான திடம் உனக்கு உண்டா என்று யோசித்திருக்கிறோம். உன்னை மெடிக்கல் காலேஜில் சேர்க்கவேணும் என்று நான் பிரஸ்தாபித்த உடனேயே, பக்கத்தில் ஒரு நண்பர், ”அதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது! என் மைத்துனனைச் சேர்க்க நாங்கள் என்னென்ன சாணக்யங்கள் செய்திருக்கிறோம், தெரியுமா?” என்று அடுக்கிக் கொண்டு போனார். அப்படியெல்லாம் வாக்கு பலமும் செயல் பலமும் இல்லாத நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை நினைக்கவே முடியவில்லை. ஆனாலும் நீ கழுத்தில் ‘ஸ்டெதாஸ்கோப்’பை மாலைபோல் அழகாக மாட்டிக்கொண்டு வரும் காட்சி என் மனதுக்கு ஆனந்தத்தையே கொடுக்கிறது.

‘வைத்தியம்’ என்ற உடனே, ‘அலொபதிக்’ வைத்தியமா, இந்தியன் வைத்தியமா என்ற கேள்வியை நீ கேட்கலாம். இரண்டின் தராதரத்தைப் பற்றி யார் என்ன சொன்னாலும், இரண்டும் வேண்டியதுதான் என்பது என் அபிப்பிராயம். இந்திய வைத்தியம் பல அம்சங்களில் விசேஷம் என்றால் ஆங்கில வைத்தியம் வேறு பல அம்சங்களில் பிரமாதமான அபிவிருத்தி அடைந்து வந்திருக்கிறது. ஒன்றை அழித்து ஒன்றை வளர்க்க வேண்டுமென்பதில்லை. அடுத்த வீட்டுக்காரனுடன் அதிகம் சிநேகம் கொண்டாட வேண்டி, நடுவில் இருக்கும் சுவரை இடித்துத் தள்ள வேண்டாம் அல்லவா?

வைத்தியப் பரீட்சையில் பாஸ்செய்து நீ உலகத்தை நோக்குவதை என் கண் முன்னால் உருவகப்படுத்திக் கொண்டு நான் பார்க்கிறேன். ஒவ்வொரு வைத்தியருடைய வாழ்நாளிலும் இரு வகை சந்தர்ப்பங்கள் உண்டு. முதலாவது, நோயாளியை வைத்தியர் எதிர்பார்க்கும் காலம்; இரண்டாவது, வைத்தியரை நோயாளி எதிர்பார்க்கும் காலம். வாசலில் போர்டை மாட்டிக்கொண்டு, முன் ஹாலில் இரண்டு பீரோக்கள், ஒரு மேஜை நாற்காலி பெஞ்சு, ஒரு ஸ்க்ரீன், கையலம்பும் ‘பேஸின்’ இவைகளை அழகாக அடுக்கிக் கொண்டு ஆரம்ப காலத்தில் இளம் வைத்தியர் நோயாளிக்காகக் காத்துக் கொண்டிருப்பார். ”டாக்டர் விச்சுதானே! நேற்றுப் பையன்! அவனுக்கென்ன தெரியும்! ‘ஸிம்பிள்’ ஜுரத்துக்குக்கூட மிக்ஸ்சர் கொடுக்கத் தெரியாதே!” என்கிற மனோபாவம்தான் உன்பக்கத்து மனிதர்களுக்கு இருக்கும்.

அந்தக் காலத்தில், உனக்கு வரும் ‘பேஷண்டு’களை விட மருந்துக் கம்பெனி விற்பனை ஏஜெண்டுகளின் தொகை தான் அதிகமாக இருக்கும்! உனக்கிருக்கும் ஆவலில் இவர்களைப் பிடித்துப் பரிசோதனைக்கு ஆரம்பித்து விடாதே!

ஆகையினாலே, ஆரம்ப காலத்தில் நீ அதிகக் கவனம் செலுத்த வேண்டும்; அதிக சிரத்தை காட்ட வேண்டும்; தளராத சிந்தை கொள்ள வேண்டும். பீஸ் விஷயத்தில் தாராளம், சிறிய நோய்களிலும் அதிக கவலை, மதுரமான பேச்சு, இதமான புத்திமதி, பணிவான நடத்தை–இவைகளை நீ மேற்கொள்ள வேண்டும். நீ பிராபல்யமடைந்த பிறகு, உன் கை நன்றாகத் தேர்ந்த பிறகு, நீ நோயாளிகளை வெடுக்கென்று விழுந்தாலும், அவர்கள் முதுகில் ஒரு அறை வைத்தாலும்கூட அவர்கள் கோபப்பட போகிறதில்லை! அதை அவர்கள் பெருமையாகக் கொண்டாலும் ஆச்சரியம் இல்லை. ஆரம்ப காலத்தில் இதைச் செய்தாயோ, ”வரட்டு ராங்கி! ஒண்ணும் தெரியாது, தத்திக் குதிக்கிறது!” என்ற பெயர்தான் உனக்கு மிஞ்சும்.

வருகிற நோயாளியிடம் நீ நடந்து கொள்ளும் விதத்தில் அவர் உன்னிடம் திரும்பி வரவேண்டும்படி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, வியாதி சொஸ்தமாகாமல் நிறுத்தி வை என்று நான் சொல்லவில்லை. ஒரு முறை அவர்களுக்கு நீ திருப்தி ஏற்படுத்தி விட்டால், மறுபடி உன்னிடம்தானே நம்பிக்கையுடன் வருவார்கள்? ஆரம்பத்திலிருந்தே நல்ல பெயர் எடுக்க வேண்டியது வேறு எந்தத் தொழிலையும்விட இதில் மிக அவசியம், அப்பா!

”கைராசி” என்பதைப் பற்றி ஜனங்கள் சொல்லுவார்கள் அடிக்கடி. ”கையை வைத்தான்; மூன்றாம் நாள் சொஸ்தமாகிவிட்டது” என்று ஒருவரைப் பற்றி நாலு பேர் சொல்ல, அந்த டாக்டர் வீட்டிலே கூட்டம் திமிலோகப்படும். இந்தப் பேச்சு ஏற்படவே பூர்வ புண்யம் வேண்டும் என்பார்கள் பெரியவர்கள். வைத்திய சாஸ்திரம் சிரஞ்சீவித் தன்மையை உண்டாக்குவதாக ஒரு காலும் சொல்லப்படவில்லை; அதைக் கொண்டு வியாதியைக் கண்டிக்க முடியும் என்றுமட்டும் எல்லாருமே ஒப்புக் கொள்கிறார்கள். ஆகையினால், உன் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல், உன்னால் முடிந்ததை நீ செய்து வந்தால், உன் கைராசி தானாக வளரும் என்பதே என் அபிப்பிராயம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு பதினோரு மணிக்கு, ”புழக்கடையில் தேள் வந்திருப்ப”தாக உன் பாட்டி உன்னை எழுப்பினாள். நீ புரண்டு படுத்துக் கொண்டாயே ஒழிய, கடைசியில் நானே போய், தைரியமாக அந்தத் தேளை ஒரு கிடுக்கியினால் பிடித்து வாசலில் எறிந்தேன். நாளைக்கு நீ ‘விச்சு டாக்ட’ராக நிஜாரை மாட்டிக் கொண்டபின், இரவு இரண்டு மணிக்கு, ”கொருக்குப்பேட்டையில் கோவிந்தசாமி நாயக்கருக்கு மயக்கம் போடுகிறது. உடனே வாருங்கள்” என்று ஒரு ஆசாமி வந்து அழைத்தால், நீ என்ன செய்வாய்? புரண்டு படுத்துக் கொள்வாயா, விச்சு? எவ்வளவு பரோபகாரமான சுயநலமில்லாத ஆனால் கடினமான–ஒரு தொழிலை நீ மேற்கொண்டிருக்கிறாய் என்பதை அப்போதுதான் நீ தெரிந்து கொள்ள முடியும். உன் மோட்டாரைக் கிளப்பித்தான் ஆக வேண்டும்!

சொல்ல மறந்து விட்டேனே! டாக்டரான நீ முன்னேற்றமடைய ஒரு மோட்டார் அவசியம் வைத்துக் கொண்டாக வேண்டும். மோட்டார் இல்லாத வைத்தியர் என்றாலே உன்னை மதிப்பவர் யார்? ”பணம் வேண்டுமே!” என்கிறாய். அதற்குத்தான் வைத்தியத் தொழிலின் தத்துவங்களையும் நீ அறிய வேண்டும். ”அடாடா! அவர் இவ்வளவு பெரிய பணக்காரர்கள் என்று முன்னமேயே நான் அறிந்திருந்தால், கேவலம் வயிற்று வலிக்கு மருந்து கொடுத்திருக்க மாட்டேனே! ஒரு ‘அப்பெண்டிக்ஸ்’ ஆபரேஷனாவது செய்திருப்பேனே!” என்று வருத்தப்பட்ட டாக்டர் அசடரே அல்ல! ”ஆளைச் சோதனை போடும் போது மணிபாக்ஸையும் சோதனை போடு” என்று அனுபவ மிகுந்த வைத்தியர் சின்னவருக்குப் புத்தி சொல்லிக் கொடுப்பதிலும் ஆச்சரியம் இல்லை. உனக்குப் பணம் வந்தால்தானே நீ ஜீவிக்கலாம்? வைத்தியர்களிடம் வருபவர்களில் அநேகம் பேருக்கு ‘ஞாபக மறதி வியாதி’ அதிகமாக இருக்கிறது என்று உன் சகபாடிகள் கூறுவார்கள்! அது சரியோ தப்போ, உடல் நலம் நன்றாக இருக்கும்போது உன்னை யாருக்கு ஞாபகம் வரப்போகிறது? ஞாபகம் இருக்கும் காலத்திலேயே உன் காரியத்தை நீ பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே? இதற்காக நீ கடுமையாக இருக்க வேண்டுமென்றல்ல; உனக்கு நியாயமாகச் சேர வேண்டியதை நீ கண்டித்துக் கேட்பதில் தவறு எதுவும் இல்லையே!

தொழிலில் உனக்கு முதல் ‘எதிரி’ ஏற்கெனவே நீ தொழில் ஆரம்பிக்கும் பேட்டையிலுள்ள டாக்டராகத்தான் இருப்பார். அவர்களில் நூற்றுக்கு எண்பது பேர் உன்னைப் பற்றித் தூஷணையாகப் பேசுவார் என்பது நிச்சயம். நீயும் பதிலுக்குப் போட்டி போட்டுக் கொண்டு அவர் சிகிச்சையினால் இறந்து போனவர்கள் ஜாபிதாவைச் சேகரிக்கத் தொடங்க நினைப்பது சகஜம். ஆனால், இந்தச் சமயத்தில் நீ புத்திசாலித்தனமாகவும் பெருந்தன்மையாகவும் நடந்து கொண்டால், அவரையும் பணிய வைக்கலாம். வைத்திய சாஸ்திரம் அகண்டமானது. அதைப் பூராவும் கற்றறிந்தவர் யாரும் இல்லை. இன்னம் அது வளர்ந்து கொண்டிருக்கிறது. ”கடவுள் சொஸ்தம் செய்கிறார்; வைத்தியர் பீஸை வாங்கிக் கொள்கிறார்” என்கிற பழமொழியில் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. நீ அதை நம்பினாலும் நம்பாவிட்டாலும், உன்னால் இயன்றதைச் செய்யத் தவறாமல் இருந்து விடு, போதும்! ”டாக்டர் தங்கமானவர்தான். ஏதோ அவரால் முடிஞ்ச வரைக்கும் சிரமப்பட்டார். அவரைப் போய்க் குறை சொல்லக் கூடாது…நமக்குப் ப்ராப்தம் அவ்வளவுதான்” என்று எவ்வளவு பேர் சொல்லிக் கேட்டிருக்கிறோம்? ஏன் அப்படி சொல்கிறார்கள்? ”மனுஷன் காலடி வைச்சான் பின்னாலே அழுகுரல்!” என்று அவர்கள் ஏன் சொல்லவில்லை? அது தான் உன் தொழிலுக்குள்ள மதிப்பு. அதில் உனது வெற்றியின் அத்தாட்சி! வைத்தியன் என்று வந்தவுடனேயே ஒவ்வொரு குடும்பத்தின் யோக §க்ஷமத்துக்கும் அதிபதியாகிறாய். குடும்பத் தலைவனின் பொறுப்பையும் நீ ஏற்றுக் கொள்கிறாய். அதை உன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் வைக்காமல் காப்பாற்றிக் கொண்டாயோ, மேற் சொன்ன நல்ல பெயர் உன்னைத் தேடிக் கொண்டுவரும்.

உயிரை மீட்கும் தொண்டில் திளைத்து வரும் வைத்தியருக்கு, எப்படியோ ஹாஸ்யக் கலைஞர்கள் எமனுடன் நட்புக் தேடி வைத்து விட்டார்கள்! ”ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்!” என்று பழமொழியைச் சிருஷ்டி செய்தார்கள். ”வைத்தியர்கள் பிழைப்புக்கு என்றுமே குறைவில்லை; அவர்கள் சொஸ்தம் செய்த கேஸ¤களை உலகம் வானளாவப் புகழுகிறது. தோல்வியுற்ற கேஸ¤கள் மண்ணில் மறைந்து போகின்றன” என்றார்கள். வேடிக்கையாக, ”ஒருபோதும் ஒரு வைத்தியனை உனக்கு வாரிசாக வைத்துக் கொள்ளாதே!” என்று எச்சரிக்கை செய்தார்கள். ”பல வைத்தியர்கள் உதவியினால் நான் சாகிறேனே!” என்று மகா அலெக்ஸாந்தர் கதறியதாக ஒரு கதையையும் கட்டினார்கள். மரண ஸர்டிபிகேட் கொடுத்த ஒரு டாக்டர், ”சாவுக்குக் காரணம்” என்கிற இடத்தில் தமது கையெழுத்தை நாட்டியதாகவும், இன்னொரு டாக்டர் தமது பில்லில், ”அன்னார் சாகும் அளவும் மருந்து கொடுத்து வந்ததற்காக ரூ. 50” என்று எழுதியதாகவும் ஹாஸ்யங்களைப் பரப்பியிருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டு நீயும் சிரித்துவிட வேண்டியது தான். ஏனென்றால் இதை எழுதுகிற பேர்கள்கூட, உன்னிடம்தானே நாளைக்கு வந்து தைரியமாக மருந்து சாப்பிடுகிறார்கள்? உண்மையிலே இவர்கள் வேடிக்கைகளில் இவர்களுக்கே நம்பிக்கை இருந்தால், அப்பபடிச் செய்வார்களா?

சிறப்பாகப் பணியாற்றும் தொழில் வைத்தியருடையது என்று சொன்னேன்; நீ ஆனந்தமாக அதை ஏற்கலாம். மனித சுபாவத்தின் பலவித இயல்புகளையும் டாக்டரின் அறையைவிட வேறெங்கே காணலாம்? மனித சமூகத்துடன் இவ்வளவு அந்தரங்கமான தொடர்பு கொள்ள வேறுயாருக்குத்தான் உரிமை உண்டு? ”மூணாம் வருஷம் நீலஸீஸாவிலே சேப்பா ஒரு தைலம் கொடுத்தேளே, அதையே கொடுங்கோ!” என்று கேட்கும் பாட்டியம்மாள்; ”என்ன வேணும் சொல்லுங்கோ, கேட்கிறேன். ஆபீஸ¤க்குப் போறதையும் என் ஓய்வுக்கு ஒரே ஒரு குடம் தண்ணி இழுத்துக் கொடுக்கிறதையும் மட்டும் தடுக்காதீங்கோ!” என்று வற்புறுத்தும் குடித்தனக்காரர்; ”இந்த வருஷம் கோடைக்கானல் போக வேண்டும் என்று இன்னிக்கே எங்காத்துக்காரர்கிட்டே சொல்லிவிடுங்கோ, டாக்டர்! எனக்குச் சித்தே நாழி பட்டணத்திலே இருக்கமுடியல்லே!” என்று அதிகாரம் செய்யும் பெரிய மனுஷர் சம்சாரம்; நீ நெருங்கும் போதே முன் எச்சரிக்கையுடன் அலறும் சின்னக் குழந்தை; நல்ல ”டானிக்”காக ஒன்று சொல்லுங்கள். ‘ஸ்வீட்’டாக மட்டும் இருக்கட்டும்…… விலையைப் பற்றி லட்சியமில்லை” என்று கேட்கும் ஷோக் இளைஞர்; ”தூக்கமே வரமாட்டேங்கறது” என்று குறைப்படும் ஆசிரியர்; ”எப்போ பார்த்தாலும் கண்ணைத் தூக்கம் இறுத்துகிறதே!” என்று வேதனைப்படும் ஆபீஸர்; இளைக்க மருந்து கேட்கும் கொழுத்தவர்; சதை வைக்க ஒளஷதம் உண்டா என்று வினவும் ‘ப்ருங்கி’ ரிஷி; ”பார்த்து ‘பில்’ போடுங்க, ஸார்!” என்று கெஞ்சும் குசேலர்; ”என் ‘ஒய்பு’ இருக்காளோன்னோ, அவள் சுபாவம் எப்பவுமே…” என்று வீட்டுக் கதையைச் சுப்புக் கொட்டிக் கொண்டு சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் குடித்தனக்காரர்–இவ்வளவு பேர்களையும் ஏக காலத்திலே நீ சமாளித்தாக வேண்டும். பெரிய மனுஷரை அலட்சியம் செய்தால், உன் வரும்படி போய்விடும்; உண்மையில் சிரமப்படுபவர்களை நீ காத்திருக்க வைத்தாலோ, உன் மேன்மை மங்கிவிடும். அஷ்டாவதானம் செய்வதற்கொப்பான ஒரு காரியத்தைச் சாதித்துக் கொண்டு, கிலு கிலு வென்று குலுங்கும் நோயாளிகளிடையே நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்பதைத் தாழ்வாரத்தில் ஈஸி சேரில் சுகமாகச் சாய்ந்தபடி மாமா என்ற ஹோதாவிலே பார்க்க எனக்கு எத்தனை ஆசையாக இருக்கிறது என்கிறாய்!

வைத்தியத்தில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. மனித வைத்தியம் — மிருக வைத்தியம் இருக்கிறது. வாயில்லாப் பிராணிகளான குதிரையையும் மாட்டையும் பார்த்த மாத்திரத்திலேயே மருந்து கொடுக்க வேண்டும். கையைப் பிடித்தவுடன் நாட்டு வைத்தியர் மள மளவென்று, ”சாப்பிடறத்துக்கு முந்தி ஒரு ஓய்ச்சல், சாப்பிட்ட அப்புறம் ஒரு களைப்பு, ராத்திரியில் தூக்கமில்லாமல் ஒரு படபடப்பு, எதிலேயும் ஒரு அசிரத்தை, முதுகிலே ஒரு வலி” –இப்படியாகச் சொன்னால்தான் கெட்டிக்காரர் என்ற பெயர் வாங்கலாம்.

”ஏட்டைத் திருப்பித் திருப்பியிருந்தும்
பாட்டைப் பாடிப் பாடி யிருந்தும்
நாட்டு வைத்தியர் நாளைக் கடத்திய…”தாக ஒரு அபவாதம் ஏற்படுத்திக் கொள்ளாதே. இங்கிலீஷ் டாக்டரானாலும் அதற்குத் தகுந்தபடி ‘டிப்டாப்பாக’பாக –படாடோபத்துடன் — இருக்க வேண்டும். அவ்வளவு மருந்தும் புட்டி புட்டியாக இருக்கும்போது,
”காட்டை வெட்டிக் கஷாய மிடவோ
கடலைக் குறுக்கிக் குடிநீர் காய்ச்சவோ மலையை இடித்துச் சூரணம் வைக்கவோ…”
சொல்லி யாரையும் நீ தொந்தரை செய்ய வேண்டாம், பார்!

இந்தக் காலத்தில் ஒருவரே முழு வைத்தியத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டியதென்பதுமில்லை. பல்லை மாத்திரம் கவனிக்கலாம்; அதைப் பிடுங்குவதிலும், ட்ரில் செய்வதிலுமாக நீ தொண்டு செய்யலாம். ‘காது மூக்கு தொண்டை’களை மாத்திரம் படித்துப் பிடித்துக் கொள்ளலாம். கண் சிகிச்சையை மட்டுமே மேற்கொண்டு பல வகைக் கண்ணாடிகளை மாட்டிக் கொண்டிருக்கலாம். ஸ்கின்-ஸ்பெஷலிஸ்ட், டி.பி. ஸ்பெஷலிஸ்ட், டயாபெடிஸ்-ஸ்பெஷலிஸ்ட் என்று தனித்தனி வியாதிகளாகத் தீர்க்கவும் நீ நியுணனாகலாம். அந்தந்தத் தொழிலில் முன்னுக்கு வர வேண்டியது உன் சமர்த்து, உன் சாமர்த்தியம், உன் கைராசி, உன் முகராசி. ஒன்று மட்டும் சொல்வேன்; உனக்குத் தெரியாத விஷயங்களை எந்த நிலையிலும் ”தெரியாது” என்று ஒப்புக்கொள்வதிலும், உனக்கு மேம்பட்டவர்களிடம், உன்னைவிட அனுபவமுள்ளவர்களிடம்–கலந்து கொள்வதிலும் அவமானம் எதுவுமில்லை. உன் காரியம் பூர்த்தியானதாக, பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். ”மூன்று ஆபரேஷன்களில், ஒன்றில் மட்டும் ஆள் ‘க்ளோ’ஸாகி விடுவான். மிகுதி இரண்டையும் நிச்சயம் நான் குணம் செய்து விடுகிறேன்” என்றால் என்ன உபயோகம்?

சர்க்காரிலே உனக்குப் பெரிய உத்தியோகம் கிடைக்கலாம். வீட்டில் பிராக்டிஸ், ஆபீஸில் சம்பளம் என்று இரு வழிகளாகவும் பணம் குவியலாம். என்ன யோகம் வந்தாலும், ஆரம்பம் எப்படி என்பதை மறக்காதே. நீ ‘பேஷண்ட்’ களைத் தேடி நின்ற காலம் ஞாபகம் இருக்கட்டும்; இன்று உன்னைத் தேடி அவர்கள் வரும் போதும் முன்போலவே அவர்கள் நலனைக் கைவிடாதே!

ஒரே வார்த்தை: உன் கையெழுத்து நன்றாயில்லை என்று நான் அடிக்கடி குறைப்பட்டிருக்கிறேன் அல்லவா? என்றாலும் ‘பிரிஸ்கிரிப்ஷன்’ எழுத அது ஏற்றதுதான்… ஆனால், பில் போடும்போது மட்டும் நிதானமாகவும், புரியும்படியாகவுமே எழுது! உன்பிரியமுள்ள–அம்பி மாமா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *