கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,623 
 

நாளைக்கு மதியம் பயணம். அதற்கு முன், வழக்கம் போல் பெரிய தெரு பிள்ளையாரைப் பார்த்து ஒரு ‘ஹலோ’ சொல்லிவிட்டு, ‘பயணத்தை நல்லபடியாக நடத்திக் கொடப்பா!’ என்று வேண்டிக்கொண்டு வர வேண்டும்.

காரை ஓட்டியபடி அந்தத் தெருவுக்குள் நுழைந்தபோதே, சிலீரென்று மனசுக்குள் ஒரு தென்றல். பின்னே? பிறந்ததிலிருந்து இருபத்திரண்டு வருடங்கள் வளர்ந்து திரிந்த வீதி ஆயிற்றே! திருவல்லிக்கேணியில் ஒண்டுக்குடித்தனத்தின் நடுவில் பிறந்து வளர்ந்தவள் நான். இன்று பல அமெரிக்கக் கம்பெனிகளுக்கு உதவும் ‘கால் சென்டர்’ ஒன்றின் முதலாளிகளில் ஒருத்தி. நான்தான் மாறிவிட்டேன். ஆனால், இந்தத் தெருவின் நெரிசலும், போக்குவரத்தும், பிரச்னைகளும் அப்படியேதான் இருக்கின்றன.

சாலையின் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப காரின் வேகத்தை மெதுவாக்கின போது, ஜானகி மாமி கண்ணில்பட்டார். இன்னும் அபார்ட்மென்ட்டாக மாறாத தன் வீட்டின் வாசல் திண்ணையில் உட்கார்ந்து யாரோடோ பேசிக்கொண்டு இருந்தவர், சட்டென்று என்னை அடையாளம் கண்டு, எழுந்து வந்தார்.

‘‘வா வா, மைதிலி! எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து? உள்ளே வந்து ஒரு லோட்டா காபியாவது குடிச்சுட்டுத்தான் போகணும்’’ என்று கைகளைப் பிடித்துக் கொண்டார். காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி, அவருடன் வீட்டின் உள்ளே நுழைந்தேன்.

‘‘உட்காரு மைதிலி! எப்படி இருக்கே?’’ என்றவர் தானே தன்னைத் திட்டிக் கொள்பவர்போல, ‘‘இது என்ன கேள்வி? பார்த்தாலே தெரியுதே, நல்ல சிவப்பா, பளபளனு… என் கண்ணே பட்டுடும் போல இருக்கேம்மா! ரொம்ப நல்ல வேலைல இருக்கேனும் கேள்விப்பட் டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்றவர், ‘‘இரு… காபி போட்டு கொண்டு வரேன்’’ என்றபடி கிச்சனுக்கு நடந்தார்.

‘‘மாமி, பிந்துமாலினி எப்படி இருக்கா? அமெரிக்காவிலேதானே? அவ கல்யாணம் நடந்து மூணு வருஷம் இருக்குமா… என்னமோ நேத்திக்குதான் நடந்தது மாதிரி இருக்கு!’’ என்றேன் அவர் பின்னாடியே போய்.

‘‘நான் என்னத்தைச் சொல்லுவேன் மைதிலி? அவ அமெரிக்கா போய் மூணு வருஷம் ஆச்சு! எப்பவாவது அத்திப் பூத்தா மாதிரி கடிதாசு போடுவா. மாமியாரும், புருஷனும் தன்னை சந்தோஷமா வெச்சிருக்கிறதா ரெண்டே ரெண்டு வரி எழுதுவா!’’

‘‘நல்ல விஷயம்தானே மாமி? வேறென்ன வேணும்?’’

‘‘இல்லேம்மா! அவ ஏதோ சொல்லிக்கொடுத்து எழுதற மாதிரிதான் எனக்குப் படறது. ஒரே ஒரு தடவை மாமியார், மாப்பிள்ளையோடு பிந்து இங்கே வந்தா. சாப்பிடறதுக்கு முன்னாடி, ‘நாங்க மூணு பேரும் போய் பெருமாளைச் சேவிச்சுட்டு வந்துடறோம்’னு மாப்பிள்ளை கிளம்பினார். பிந்து அவரைப் பார்த்து, ‘எனக்குத் தலைவலியா இருக்கு. நான் வேணா இங்கே இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்களேன்’னு கெஞ்சற மாதிரி கேட்டா. உடனே அவள் மாமியார், ‘ஆமாண்டா! எனக்கும் முடியலை. நானும் இங்கேயே இருக்கேன். நீ மட்டும் போய்ட்டு வா!’னுட்டார். என்னவோ பிந்துவைத் தனியா என்கூட விடக் கூடாதுங்கிற மாதிரி அதுல ஒரு அவசரம் தெரிஞ்சுது. அப்புறம், பக்கத்து வீட்டு வைதேகி மாமி, பிந்துவைப் பார்க்க ஆசையா ஓடி வந்தா. ‘ஒரு பாட்டுப் பாடேண்டி’னு கெஞ்சினா. ‘இல்ல மாமி! இப்பல்லாம் நான் பாடறதே இல்லை’னு பிந்து ஒரேயடியா மறுத் துட்டா! மாமிக்கு வருத்தமான வருத்தம். ‘அமெரிக்கா போய் பிந்து ரொம்பவே மாறிட்டாள்’னு சொல்லிச் சொல்லி மாஞ்சுபோனார். ஆனா, எனக்கென்னவோ மனசுக்குள்ள திக்குனு இருக்கு. பிந்து முகத்துல சந்தோஷமோ, கண்ணுல ஒளியோ எதுவுமே காணோம்னு தோணிப் போச்சு!’’ என்றார்.

‘‘மாமி… பிந்துவோட அட்ரஸ், டெலிபோன் நம்பர் கொடுங்கோ. நான் நாளைக்கு அமெரிக்கா போறேன். நானே பிந்துவை நேர்ல போய்ப் பார்த்துப் பேசிட்டு, உங்களுக்குத் தகவல் சொல்றேன். ஒண்ணும் கவலைப்படாதீங்கோ! எல்லாம் நல்லபடியா இருப்பா. அங்கே அமெரிக்கச் சூழ்நிலைக்கு கொஞ்சம் மாறியிருப்பாளாயிருக்கும்’’ என்றேன்.

திருவல்லிக்கேணியில், பிரபலமான பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்றில், நானும் பிந்துமாலினியும் ஒன்றாக ஒன்பதாம் வகுப்பு படித்தோம். பிந்து அத்தனை அழகாக இருப்பாள். பஞ்சாப் கோதுமை நிறம். கருங்கூந்தல் நீண்டு முழங்காலைத் தொடும். அதை இரட்டைப் பின்னலாக்கி, ஒரு பக்கம் மட்டும் ரோஜா வைத்திருப்பாள்.

அவளின் பெயர்க் காரணம் கேட்டேன். ‘‘இது ஒரு அழகான ராகத்தின் பெயர். என் அப்பா ரொம்ப ஆசையாக வைத்த பெயர் இது. நாங்க இதுக்கு முன்னாடி தஞ்சாவூர்ல இருந்தோம். அவர் பாட்டு சொல்லிக் கொடுப்பார். நான் பெரிய பாடகியா வரணும்னு ஆசைப்பட்டார். அப்பா இப்ப இல்லை. ஆனா, அவரோட கனவை நனவாக்கணும். அதுதான் என்னோட ஒரே ஆசை!’’ என்றாள்.

எதைப்பற்றி பேசினாலும், அவளுடைய பேச்சு அப்பாவில்தான் வந்து முடியும். அவருடைய கனவை நனவாக்க, விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்திருப்பாள். சுருதி சுத்தமாகக் கூட்டப்பட்ட தம்புரா, அவள் வீட்டில் இருந்து ஒலிக்கும். அவள் பாடுவது, அந்த நிசப்தமான வேளையில் காற்றோடு மிதந்து வந்து தாலாட்டும்.

அவளுடைய இசை, பள்ளிக்கூடத்தில் மட்டுமின்றி, கோயில் மேடைகள், சபாக்கள் என விரிந்தது. அடுத்த வருடமே சென்னையில் பல மேடைகளில் அவள் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. அவளது அழகு, வயது, இசை மூன்றுக்குமாகக் கூட்டம் சேர ஆரம் பித்தது.

அந்தச் சமயத்தில்தான் மாதவன் அவளைப் பார்த்தான். டிசம்பர் இசை விழா சமயத்தில் தன் அம்மாவுடன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தவன், கபாலீஸ்வரரின் தரிசனத்துக்காக மயிலாப்பூர் வந்தான். யதேச்சையாக அருகில் இருக்கும் பிரபலமான சபாவில் அன்று பிந்து மாலினியின் கச்சேரி.

‘‘கர்நாடக சங்கீதம் கேட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சும்மா. கொஞ்ச நேரம் கேட்டுட்டுப் போகலாமே!’’ என்று உள்ளே நுழைந்து உட்கார்ந்தவன், பிந்து வைப் பார்த்த அந்த நிமிடமே ‘இவள் தான் எனக்குரியவள்’ என்று தீர்மானித்து விட்டான்.

அதன் பின், அந்த சபா செக்ரெட்டரி யைப் பிடித்து விவரங்கள் வாங்கி, முறையாகப் பெண் கேட்டு இரண்டே வாரங்களில் பிந்துமாலினியை சொந்த மாக்கிக்கொண்டு அமெரிக்கா போய் விட்டான். அதன்பின் அவளுடன் எனக்குத் தொடர்பு விட்டுப்போயிற்று.

மறுநாள் வாஷிங்டன் பயணப்பட் டேன். ஓய்வு கிடைத்த முதல் வார இறுதியில், பிந்துமாலினியைச் சந்திக்க ஏற்பாடு செய்துகொண்டேன். அவள் வீடு, நான் தங்கியிருந்த இடத்திலிருந்து எழுபது மைல் தூரத்தில், வெர்ஜீனியாவில் இருந்தது. ‘பட்ஜெட்’ கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனேன்.

அவள் வீட்டின் முன் காரை பார்க் பண்ணிவிட்டுக் கதவைச் சாத்தியபோது, குதிரைக் குட்டி சைஸில் இருந்த நாய் ஒன்று குரைத்துக்கொண்டே என்னை நோக்கிப் பாய்ந்து வந்தது. திகிலாகி விட்டது எனக்கு. ‘தொலைந்தோம்’ என்று நினைத்தேன்.

ஆனால், வீட்டைச் சுற்றி இருந்த புல்வெளியை விட்டு, ‘சைட் வாக்’ என்று அழைக்கப்படும் பிளாட்பாரம் அருகில் வந்தவுடன், அந்த நாய் ஏனோ சடன் பிரேக் பிடித்த மாதிரி நின்றுவிட்டது. பயத்துடன் பின் வாங்கியது. காரணம் புரியாமல் திகைத்தேன்.

அதற்குள், நாயின் குரைப்புச் சத்தத்தைக் கேட்டு பிந்துமாலினி வெளியே வந்துவிட்டாள். ‘‘ஏய்… மணி! இங்கே வா!’’ என்று அதட்டியவள், அதன் கழுத்தில் கட்டி இருந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டவளாய், ‘‘வா வா… மைதிலி! வெல்கம்’’ என்று என்னை உள்ளே அழைத்துச் சென்றாள்.

வரவேற்பறையில் நுழைந்ததுமே, செல்வத்துக்கும் வசதிக்கும் குறைவில்லை என்பது புரிந்தது. பெர்ஷியன் கம்பளங்கள், சுவரில் தொங்கிக்கொண்டு இருந்த விலை உயர்ந்த ஓவியங்கள், சாண்ட்லியர் விளக்குகள்… அடேங்கப்பா!

‘‘இன்னிக்கு மாதவனும் மாமியும் சிவா-விஷ்ணு கோயிலுக்குப் போயிருக்காங்க. பீரியட்ஸ் டைம்கிற தால நான் போகலை. நல்லதாப் போச்சு, இல்லாட்டா உன்னை இப்படித் தனியா சந்திக்க முடிஞ்சிருக்காதே!’’ என்றபடி என் பக்கத்தில் அமர்ந்தவளின் முகத்தை உற்றுப் பார்த்தேன். ஜானகி மாமி சொன்னது உண்மைதான். நான் முன்னாட்களில் பார்த்திருந்த ஒளி, அவள் கண்களில் இல்லை. சந்தோஷக் களை முகத்தில் இல்லை.

‘‘நீ சந்தோஷமா இருக்கியா, பிந்துமாலினி?’’ என்றேன். அவள் என் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டாள். ‘‘சந்தோஷம்னா என்ன மைதிலி? வயித்துக்கு நிறைய சாப்பிட்டு, சொகுசான படுக்கையில் படுத்துத் தூங்கறதுதான்னா நான் சந்தோஷமா தான் இருக்கேன்!’’ என்றாள்.

‘‘இப்பெல்லாம் நீ பாடறதில்லை யாமே, ஏன்? உன் மாமியாரும் புருஷனும் உன்னைப் பாட அனுமதிக்கலையா? உன் பாட்டையும் அழகையும் பார்த்துதானே அவர் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார்?’’ என்று கேட்டேன்.

‘‘ப்ச்! அதை ஏன் கேக்கறே! ஒரு பார்ட்டியிலே என்னை மீட் பண்ணின உள்ளூர் சபா பிரசிடென்ட் ஒருத்தர், என் கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணினார். மாதவனும் ஒப்புக்கிட்டார். கச்சேரிக்குக் கிளம்பற சமயம் மாமிக்குத் தலைவலி, வாந்தி! பிளட் பிரஷர் ஏகத்துக்கு எகிறி, மயக்கம் ஆயிட்டார். எமர்ஜென்ஸி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனோம். கச்சேரி கேன்ஸல். நாலு நாள்ல அவர் உடம்பு சரியாகி, வீடு திரும்பினார். அடுத்த மாசம் மறுபடி அதே மாதிரி வேற ஒரு கச்சேரிக்குக் கிளம்பும்போது ஜுரம், தலைவலி, மயக்கம். கச்சேரி கேன்ஸல்!’’

‘‘அதாவது, உனக்குக் கச்சேரின்னா மாமிக்கு மயக்கம்..!’’

‘‘ஆமாம்! எல்லாத்தையும்விட ஹைலைட் என்னன்னா, என்னைக் கோயில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கில் ஜனங்க கூடற இடத்திலே பாடச் சொல்லி ஏற்பாடு பண்ணியாச்சு. கச்சேரிக்குக் கிளம்ப ரெடியாகி, மாதவன் வெளியே கார்ல காத்துட்டிருக்கார். நான் தம்புராவைத் தோளிலே மாட்டிக்கிட்டு, மாமியைத் தேடறேன். அவர் பாத்ரூமிலே பப்பரப்பானு கீழே விழுந்து கிடக்கார். உடம்பெல்லாம் ஒரே ரத்தம். பதறிப் போய் என்னன்னு பார்த்தா, மாதவனோட ரேஸர் பிளேடாலே இடது கை மணிக்கட்டைக் கீறிக்கிட்டு மயங்கிக் கிடக்கார். உடனே 911 எண்ணைக் கூப்பிட்டு, ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு போய், எமெர்ஜென்ஸி வார்டில் அட்மிட் பண்ணி, உயிர் பிழைக்க வெச்சோம்…’’ & அவள் சிறிது நேரம் மௌனமாகி, நடந்ததை ஜீரணித்துக்கொள்வதுபோல் இருந்தாள்.

‘‘அதுக்கப்புறம் புரிஞ்சுபோச்சு மைதிலி! நாகரிகம் கருதி என்னைக் கச்சேரி பண்ண அனுப்பிச்சாலும், மாமியோட உள் மனசுல இஷ்டம் இல்லை. மாதவனும், ‘அம்மா உடம்புதான் முக்கியம். அதனால நீ இனிமே கச்சேரி எதுவும் ஒப்புக்கொள்ள வேண்டாம்’னு சொல்லிட்டார்…’’ என்றபோது, தோழியின் கண்களில் நீர்.

நான் புறப்படும் நேரம் வந்தது. பிந்துமாலினியும் என் கார் வரை வந்தாள்.

‘‘ஏன் பிந்துமாலினி, உன்னோட மணி என்னைப் பார்த்துட்டு நாலு கால் பாய்ச்சல்ல ஓடி வந்தது. ஆனா, புல்வெளியைத் தாண்டினதுமே பசு மாதிரி அடங்கி நின்னுடுச்சே, ஏன்?’’ என்று கேட்டேன்.

‘‘நாய் வீட்டை விட்டு ஓடிடக் கூடாதுனு கொஞ்ச நாள் மின் வேலி போட்டிருந்தோம் மைதிலி. இங்கே அமெரிக்காவில் அது வழக்கம்தான். நாய் அதன் அருகே போகும்போதெல் லாம், சின்னதா ஷாக் அடிக்கும். அதனால பயந்து போய், நாய் அதைத் தாண்டி வெளியே போகாது. கொஞ்ச நாள் கழிச்சு இந்த மின் வேலியை எடுத்துட்டாலும், பழக்கதோஷத்துல நாய் அங்கேயே நின்னுடும்! வெளியே போகாது!’’ என்றாள்.

நான் காரில் ஏறிக்கொண்டு கிளப்பினேன். எனக்கு விடை கொடுக்க, கையை ஆட்டியபடி நின்றிருந்தாள் பிந்துமாலினி. அருகில், வாலை ஆட்டியபடி அவளது நாயும்!

– ஜனவரி 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *