வேதம் என்ன சொல்கிறது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 22,216 
 

மனோகரி கண் முன்னால் காட்சி கொண்டு நிகழ இருக்கிற தங்களின் கல்யாண எழுத்தை எதிபார்த்து, மூடிக் கிடந்த அறைக்குள்ளே மங்கலான ஒளிகீற்றுகள் நடுவே ஒரு நித்திய தரிசன தேவதை போலச் சந்தோஷம் குதூகலித்து வெகு நேரமாகத் தன்னை மறந்து அமர்ந்திருந்தாள். வெளியே ஒரே ஆரவார இரைச்சலாக இருந்தது. மணமகன் , அதாவது அவளுடைய கனவுகளை நிறைவேற்றுவதற்காக வரப்போகும் வருங்காலக் கணவன், வானிலிருந்து ஒளி பளீரிட்டபடி வந்து இறங்கும் ஒரு தேவ புருஷனைப் போலத் தன்னை ஆட் கொள்ள வந்து சேருவான் என்று அவளுடைய அபார நம்பிக்கை , இன்னும் எவ்வளவு நேரத்திற்கு உயிர் சாயாமல் , கொடி கட்டிப் பறக்குமென்று புரியவில்லை. விதி போல வந்து சேர்ந்த வாழ்க்கையில் அவனுடனான அந்தப் பிணைப்பு ஒரு யுகம் போலத் தொடரும்.

முன்பின் அறியாத அவனைப் பற்றி, அவள் அறிவு பூர்வமாக மட்டுமல்ல அனுபவ ரீதியாகவும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருந்தன. அதற்கான ஒரு தருணமே இது இன்றைய பொன்னாள் அதன் கண நேரக் காத்திருப்புத் தவம்.

அவன் அவளுக்குச் சொந்தம் கூடக் கிடையாது. தூரத்து உறவு கூட இல்லை. எங்கேயோ முகம் அறியாத மறு துருவத்திலிருந்து வரப்போகிற அவனைப் பற்றி அவள் மனதில் அதீத கற்பனகள் மட்டுமல்ல, கனவுகளும் இருந்தன. அவளுடைய அந்தப் பட்டிக்காட்டுக் கிராமத்திலிருந்து வெகு தொலைவில் டவுன் பக்கமாக, அவன் வீடு வண்ணார்பண்ணையில் இருப்பதாகச் சொன்னார்கள். புரோக்கர் வழி மூலமே வந்த சம்பந்தம் அது. அவனுடைய பெயர் பார்த்திபன் என்று ஞாபகம். பெரிய பின் தங்கிய குடும்பத்திலிருந்து வருகின்ற ஓர் அரசாங்க ஊழியன் அவன் கொழும்பில் அப்போது வேலை அவனுக்கு. உத்தியோகம் புருஷ லட்சணமென்பதே அவனுடைய உறுதி குலையாத நிலைப்பாடு என்று அப்பாவிடம் பலரும் சொன்னதை நம்பியே , அவளின் இந்த விழி மூடாத காத்திருப்புத் தவம்.

அவளுடய அப்பா நந்தகோபால் சீரிய சிந்தனைகளைக் கொண்ட ஓர் ஆசிரிய திலகம். அவரால் செதுக்கி வார்க்கப்பட்ட பண்பு நிலை தவறாத ஓர் ஆதர்ஸப் பெண் போல மனோகரி இருக்கிறாள். யாழ்ப்பாணத்துத் தமிழ் சமூகத்தினிடையே இந்த மாதிரியான கல்யாண எழுத்துப் பெருங்கோலாகலமாகக் களை கட்டித்தான் அரங்கேறும்.
பார்த்திபனுடைய தந்தை கந்தசாமி சுருட்டு வியாபாரம் செய்கிறவர். பத்துப் பிள்ளைகள். இதிலே தலை மகன் பார்த்திபன் இவை மட்டுமே அவனைப் பற்றி அவள் அறிந்து கொண்ட உண்மைகள்.

காலை மணி பத்தாகும் போது அவர்கள் பெருங்கூட்டமாக வந்து சேர்ந்தார்கள். .அவள் கதவு இடுக்கு வழியே இரகசியமாக எட்டிப் பார்க்க்கும் போது ஓர் ஒளி நிலவு பூத்த மாதிரி அவன் பாதையை நிறைத்தபடி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
,பட்டு வேட்டியும் பளபளக்கும் நஷனல் சேர்ட்டும் அவனுக்கு எடுப்பாக இருந்தது.சேர்ட் நடுவே சுற்றிக் கட்டியிருந்த பட்டுச் சால்வை, அவனின் கம்பீரத் தோற்றத்திற்கு மிக அலாதியான ஓர் அழகை கொடுத்தது. வாசலில் அவன் ஆண்மை அழகுக் களை சொட்டும் ஒரு கம்பீர புருஷனாய் நின்று கொண்டிருக்க, இரண்டு பெண்கள் வந்து, அவனுக்கு ஆராத்தி காட்டிப் பொட்டு வைத்து அழைத்துக் கொண்டு போனார்கள்.

கதவுத் திரை மறைவில் நின்ற அவளுக்கு உச்சி குளிர்ந்து போனது. ஆகா! நான் பாக்கியவதி என்றது மனம். சொல்லில் அடங்காத மகிழ்ச்சி அவளுக்கு மனிதர்களைப் பற்றித் தான் கொண்டிருக்கும் நம்பிக்கை மேலோட்டமான ஒரு வரட்டுச் சங்கதியே. என்பதை ஏனோ அப்போது அவள் அறிந்திருக்கவில்லை தன்னைப் போலவே உலகத்தையும் நம்பிய ஓர் அப்பாவிப் பேதைப் பெண் அவள்.. கள்ளம் கபடமற்ற பால் வெள்ளை உள்ளம் கொண்டிருப்பதாகவே உலகை நம்பிக் கொண்டிருப்பவள். இப்போது அதற்கிணங்கக் கண்கள் வழி ஒரு காட்சி நாயகனாக மட்டுமல்ல கறை ஏதுமற்ற ஒரு சத்திய புருஷனாகவும் தன் மனதில் அவன் ஒளி விட்டுப் பிரகாசிப்பதாய் உணர்ந்து அவள் மிகவும் புல்லரித்துப் போயிருந்தாள்.அவளுக்கு அந்த ஒரு கணத்தில் உலகமே மறந்து போனது.

தோழி வந்து கூப்பிட்ட போது தான் பிரக்ஞை வந்து விழித்துப் பார்த்தாள்.

மனோகரி என்று கூப்பிட்டபடியே வந்து சேர்ந்தாள் அந்தத் தோழி. அவள் மாப்பிள்ளையின் உறவினள். என்ன உறவோ தெரியாது.

“இவளுக்கு என் பெயர் எப்படித் தெரிந்தது? ஓ! பார்த்திபன் சொல்லியிருப்பானோ?”

நினைக்கும் போதே சந்தோஷக் களை தானாக ஏறியது. அவள் அழகில் அப்படியொன்றும் உலக அழகியல்ல சுமாரான அழகுதான் அவள். பூசினாற் போலச் சற்றுப் பருமனும் கூட இருந்தாலுமென்ன. அவன் அவளை ஏற்க வந்திருக்கிறான். தங்கத் தட்டில் ஏந்தி வைத்து அவளை வாழ்விக்கவும் போகின்றான். இது போதுமே அவளுக்கு.

அந்தக் கனவுப் பிரமை கலையாமலே தோழி அழைத்து வர அவள் வெளிப்பட்டு வந்து, அதோ1, அந்த ஹாலில் நீண்ட மேஜைக்கு முன்னால் ஒளி விட்டுப் பிரகாசிக்கும் ஒரு கம்பீர புருஷனாய் பார்த்திபன் அமர்ந்திருக்க,அவனருகே வந்து அமர்ந்து கொண்டபோது அவளுக்கு இந்த உலகம் பிடிபட மறுத்தது.

அவளைச் சுற்றி ஒரே நிழல் கூட்டமாகத் தெரிந்தது அவனே முழுவதுமாக அவள் மனதில் நிறைந்து போயிருந்தான்.

அவர்களைச் சட்டபூர்வமாக இணைத்து அங்கீகாரம் பெறும் ஒரு சடங்காகவே அது நடைபெற இருந்தது. அதற்கான வாய் மொழி வேதப் பிரகடனமாக எதிர்முனையிலிருந்து பதிவாளரின் குரல் கணீரென்று கேட்கத் தொடங்கியபோது நிசப்தம் நிலவியது பார்த்திபன் அதைக் கிரகித்து ஏற்றுக் கொள்ளும் பாவனையில் ஆழ்ந்த சிந்தனை நோக்குடன் கேட்டுக் கொண்டிருப்பது போல அவள் உணர்ந்தாள் அவளுக்கும் அது புரிந்த மாதிரிப் பட்டது

பதிவாளருடைய அந்த நீணட வாசிப்பு அவர்கள் தொடங்க இருக்கிற கல்யாண வாழ்க்கை குறித்த அன்பு விட்டுப் போகாத பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்கின்ற, சிறப்பான வாழ்வொழுக்கங்களையே பிரதிபலிப்பதாக இருந்த போதிலும் அவனைப் பொறுத்த வரை அது எவ்வளவு தூரத்துக்கு எடுபடும் என்று புரியவில்லை. அவனோடு வாழ்ந்து பார்க்கிற போது தான், அந்த உண்மை அவளின் அறிவுக்கு வெளிச்சமாகும் அது வரைக்கும் அவள் மனதில் தான் எவ்வளவு சுகமான கற்பனைகள்.

பதிவாளரின் வாசிப்பு முடிந்ததும் அவர்கள் கையெழுத்துப் போட வேண்டிய தருணம்
அவள் மெய் மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் பால் வெள்ளை நிறமான கம்பீரக் களை வடியும் புற அழகு மட்டுமல்ல, அதைப் போலவே முத்து முத்தாக அவனின் ஆங்கிலக் கையெழுத்தும் கோணல் மாணலின்றி செதுக்கி வார்த்த சிற்பம் போல் நேர்த்தியாக அழகு கொண்டு மின்னுவதைக் கண்டு அவள் மிகவும் பெருமிதம் கொண்டாள். அந்த உயித்துவம் மேலோங்கி நிற்கிற அழகைப் போலவே அவன் உள்ளமும் உயிர் செதுக்கி வார்க்கப்பட்ட மேலான குணங்களுடன், ஒளி விட்டுப் பிரகாசிக்கின்ற ஓர் உத்தம புருஷனாய்த் தான், அவனும் இருப்பானென்று அவள் நம்பினாளே அது எவ்வளவு பொய் என்று பிறகுதான் புரிந்தது. அவன் எப்பேர்ப்பட்ட மனிதன்.

அவளுக்குக் கல்யாணமான புதிது அவளுடைய கெட்ட காலமோ என்னவோ அவன் கொழும்பை விட்டு மாற்றலாகி வந்தது அவளை வாழ்விக்கவல்ல தன்னைத் தீக்குளிக்க வைக்கத்தான் என்பது அவளுக்குப் போகப் போகத்தான் உறைத்தது. அவனே உலகமென்று நம்பி., அவனுடைய அந்தச் சின்னஞ்சிறு வீட்டில் அவள் வந்து வாழத் தொடங்கிய போது அவனுக்கு மட்டுமல்ல அவன் சார்ந்த எல்லோருக்குமே அவள் வேண்டாத விருந்தாளிதான்.

அவளை உணர்ச்சிகள் பங்கமுற விழ வைத்துக் கருவறுத்துக் கொன்று போடவே அவன் குறிவைத்துக் காத்திருந்த அந்தத் தருணங்கள் மிகக் கொடியவை. அவன் மனம் கொண்ட உணர்ச்சிகளால் அவளோடு வாழ முடியாமல் போனது அவளது விதி செய்த பாவக் கணக்கின் ஒரு விடியாத தீர்ப்பே.

அவன் அவளோடு வாழ்ந்தது வெறும் உடலால் மட்டும் தான் அவன் அவளைத் தான் வஞ்சம் தீர்க்கவே வந்து சேர்ந்த ஒரு பகையாளியாகவே கருதினான். அவனது ஒவ்வொரு செயலும் அவளுக்கு அதைத் தான் உணர்த்தின இரவில் மட்டும் ஒன்றிணய முன் வருகின்ற அவனின் அந்த உயிர் சேரா வெறுப் போக்கு நடத்தைகளின் பலனாய் அவளுக்குக் கிடைத்த பரிசு முத்து முத்தான பிள்ளைச் செல்வங்கள் மட்டும் தான் மாறுபாடான துருவம் போல் வந்து சேர்ந்த வாழ்க்கையில் அதைத் தவிர அவளுக்கு வேறொன்றுமே மிஞ்சவில்லை
அவளை மட்டுமல்ல அவளின் பெற்றோர் உடன் பிறப்புகள் எவரையுமே அவன் கண்ணில் காட்ட இயலாது

இந்த வெறுப்புக்கும் தீராத பகைக்கும் அடிப்படையான காரணம் எதுவாக இருக்குமென்று அவள் குழம்பிய போதும் விடை கிடைக்கவில்லை அதையே நினைத்தவளாய், வெறும் உடல் உறவு கொள்கிற உயிர் மறந்த அல்லது தடம் விட்டுப் போன ஒரு இரவு நேரக் கும்மிருட்டினிடையே, அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்துத் தீர்க்க,மாக அவள் இவ்வாறு கேட்டாள்.

“என்னை ஏன் இப்படிச் சித்திரவதை செய்யிறியள்.? முகம் கொடுத்துப் பேசுறேலை மனம் விட்டுப் பழகிறேலை ராவிலை மட்டும், இது என்ன உறவு? எனக்கு அதிர்ச்சியாக இருக்கு.”

“எனக்கு உன்னைப் பிடிக்கேலை நீங்கள் பெரிய இடமென்று ஐயா தான் என்ரை தலையிலை உன்னைக் கட்டிவிட்டவர்”

“பிடிக்கேலையென்றால் நீங்கள் மறுத்திருக்கலாம் தானே சம்மதிச்சுப் போட்டு என்னை இப்படித் தண்டிக்கிறது எந்தவிதத்திலே நியாயம் என்று நான் கேட்கிறன்”

“என்ன செய்யிறது. என்ரை வீட்டு நிலைமை அப்படி என்ரை சம்பளம் வந்தும் காசு பத்தாது என்னை இப்படி விக்கிறதைத் தவிர வேறு வழியில்லையென்று தான்”

என்று அவன் கூறி முடிக்கவில்லை இடை மறித்து அழுகை குமுறி வெடிக்கக் குரலை உயர்த்தி அவள் கேட்டாள்.

“இந்த இக்கட்டான நிலைமையிலை வேறு வழியில்லையென்று தானே நீங்கள் சம்மதிச்சதாய்ச் சொல்லவாறியள். இதுக்குப் போய் என்னை ஏன் பலிக்கடாவாக்க வேணும் சொல்லுங்கோ!”

அதற்குப் பதில் சொல்ல முடியாமல், வார்தைகள் வராமல், ஆவேசம் கொண்டு அவளை இழுத்துத் தரையில் போட்டுத் தாறு மாறாக அவன் அடித்த அடிகளின் வலி தாங்காமல் ஓங்கி உரத்த குரலெடுத்துத் தீனமுற்றுக் கதறியழுத அவளின் அந்த அழுகையையே ஒரு புறம் போக்குத் தீட்டாய், உதறி எறிந்து விட்டு வெளியே போக அவனுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ மனமென்று ஒன்று இருந்தால் தானே இப்படியெல்லாம் யோசனை வர. இப்படி மனமில்லாமல் போனவனை என்னவென்று அழைப்பது?

அவள் அழுகை ஆறித் தன்னைத் தேற்றிக் கொண்டு எழுந்த போது அவன் போன தடங்களே முற்றாக அழிந்து போய் ஒன்றுமே இல்லாமல் போன, இருள் கவிந்த சூனியத்திலேயே, தான் நிலை கொண்டு நிற்க நேர்ந்த தன் பாழாய்ப் போன தலை விதியை எண்ணி அவள் பெருங் குரலெடுத்துக் கதறியழுத சப்தம் காற்றைக் கிழித்துக் கொண்டு கனதியாய்க் கேட்டது. அன்று அவனோடு நேர்ந்த அந்த எழுத்துச் சங்கமத்தில் தன்னை உணர்ச்சியுள்ள ஒரு பெண்ணாகக் கூட இனம் காணத் தவறிய, அவன் மீது நம்பிக்கை வைக்கத் தூண்டிய அவன் போட்ட அந்தக் கையெழுத்துக்கூடக் கறைபட்ட ஒரு காட்சிப் பிழை போல் அவள் நெஞ்சை எரித்தது.

வேத சாட்சியாக நடந்து முடிந்த கல்யாணமும் பொய் என்று பட்டது வேதம் கூறுவது போல அன்பு நிறைவாக வாழத் தவறிய ஒரு வெறும் மனிதனை உயரிய நன்னடத்தைகளைக் கொண்ட உத்தம புருஷனாகவே இனம் காட்டி ஏமாற்றி விட்ட அவனுடைய அந்த அழகான கையெழுத்தை எண்ணி ஏமாந்து விட்டதற்காக இப்போது அவள் பெரும் தார்மீகச் சினத்தோடு தன்னையே நொந்து கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *