வேண்டாம் வெளிநாட்டு வேலை

0
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 7,176 
 

“ஏஜென்சிகாரர்கள் வந்திருக்கிறார்கள், நஸீராவை வெளிநாட்டுக்கு அனுப்ப. என்ன அநியாயம் இது இவங்க யாரையும் விட மாட்டாங்க போலிருக்கே”

என அந்த ஊரிலுள்ள எல்லோரும் பேசிக் கொண்டார்கள். பின்தங்கிய பகுதியான அந்தக் கிராமம் ஏழை மக்களை அதிகமாகக் கொண்டது. அதனால் வருகின்ற ஏஜென்சி காரர்கள் எல்லோரும் அங்கேதான் செல்வார்கள்.

கல்வி அறிவு குறைந்த அந்த மக்களை ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி அங்குள்ள பெண்களை வெளிநாடுகளுக்கு பணிப் பெண்களாக அனுப்புவதற்காக அழைத்துப் போவார்கள். அதில் எத்தனையோ பேர் பல்வேறு கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாகி நாடு திரும்பி இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி இந்த ஏஜென்சிகாரர்களின் பாலியல் சேட்டைகளுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள்.

இங்குள்ள குடும்பத் தலைவர்கள் அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு கண்டும் காணாததுபோல் நடந்து கொள்வதினால் இந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது.

நஸீரா அழகிய இளம் யுவதி. பத்தொன்பது வயதைத் தொட்டு நிற்கும் அவள் ஆரம் விழுந்த அழகுக் கிளி போல், பார்க்கப் பசுந்தாக இருப்பாள். அவளை எப்படியாவது தமது வலைக்குள் வீழ்த்தி வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக பலர் முயற்சி செய்தனர். அவை பலனளிக்காத நிலையில் அதில் இன்று ஒரு குழு வெற்றி கண்டிருக்கிறது.

அவளுக்கு விருப்பம் இல்லைதான். அவளது தகப்பன் முஜீப் நானாவுடைய முரட்டு சுபாவத்திற்குப் பணிந்து எதுவும் பேசாமல் இருந்தாலும் உள்ளத்தளவில் அழுது கொண்டிருக்கிறாள். ஏ/எல் சித்தியடைந்தவளுக்கு ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் கொலஜ் அட்மிசன் கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

அடுத்த முறை முயற்சி செய்தால் எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அதற்காக வேண்டி டியூசன் வகுப்புக்களுச் சென்று வந்து கொண்டிருந்தாள். இந்த நிலையில்தான் இப்படியொரு திடீர் மாற்றம்.

அவளது தகப்பன் முஜீப் நானா ஒரு முன்கோபி. பணத்தாசை பிடித்தவர். சும்மா இருந்து கொண்டு சொகுசாக வாழ ஆசைப்படுபவர்.

அதற்காகவே, நஸீராவின் தாய் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டாள், இன்றைக்கு நாலு வருடங்களுக்கு முன்பு. ஒரு வருடம் வரை ஒழுங்காக பணம் அனுப்பிக் கொண்டும் குடும்பத்தாருடன் தொடர்பு எடுத்துக் கொண்டும் இருந்தாள். தற்போது அது நின்றுபோய் விட்டது. அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பதும் இதுவரை தெரியாது.

தாய் இல்லாத கஷ்டத்தில் மனம் உடைந்துபோன நஸீரா, தான் எப்படியும் வெளிநாட்டுக்குப் போவதில்லை எனத் தனக்குள் முடிவெடுத்து, அதில் உறுதியாக இருந்தாள். இருந்தும் முஜீப் நானாவின் கெடுபிடிகள் அவளது முடிவைத் தளர்த்திவிட்டன.

“தம்பி பசீர்! மேசையில டீயும் பிஸ்கட்டும் வெச்சிரிக்கன், சாப்பிட்டு இரி, வெளியே போயிற்று வாரன். ஆ…. தம்பி ஒனக்கு ஒரு செய்தி தெரியுமா ஒங்க மாமா முஜீப் நானா மகள வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி நடக்குது கூட்டிப்போக ஆள் வந்திருக்கு”

என்று தன் மகனிடம் கூறிய ஜல்ஹா உம்மா அங்கிருந்து விரைவாக வெளியேறினாள் நஸீராவை வெளிநாடு போகாது எப்படியும் தடுக்க வேண்டும் என்பதே அவளது நோக்கமாக இருந்தது.

தாயின் வார்த்தைகளைக் கேட்ட பசீர், தேனீரையும் அருந்தாமல் தனக்குள் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். அரசாங்க அலுவலகம் ஒன்றில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமை புரியும் அவன், எப்போதும் முற்போக்கான சிந்தனையும் செயற்பாடும் கொண்டவன் தனக்கென எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு சந்தோசமாக வாழ்கிறான்.

நஸீராவில் அவனுக்கு ஒரு கண்னிருந்தும் தனது மாமாவின் முரட்டுத்தனத்துக்குப் பயந்து அதில் அக்கறை கொள்ளாமல் இருந்தான்.

ஊர் ஒரே பரபரப்பாக இருந்தது. அங்குள்ள வாலிபர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஏஜென்சிகாரர்களைத் தாக்கியதால் பொலிஸார் வந்து விசாரணை நடத்தி, ஒரு சில வாலிபவர்களை மேலதிக விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஊர் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.

“மச்சான், இந்த ஊரில் இருந்து ஒரு பொம்பிள கூட இனி வெளிநாட்டுக்குப் போகக் கூடாதுடா. என்ன நடந்தாலும் சரி, இந்த ஊரிலே உழச்சி இங்கேயே அவர்களை வாழ வைப்போம்.

உணர்ச்சிவப்பட்ட வாலிபர்கள் பலர் தெருவெங்கும் பேசிக் கொண்டார்கள். அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தவர்கள் போல் காணப்பட்டார்கள். துணிவும் தைரியமும் அவர்களை ஆட்கொண்டிருந்தது.

“இப்படித்தான் ரிஸானாவையும் அனுப்பினாங்க, இப்ப நஸீரா இப்படியே போனா நிலைமை என்னாவாகும்.” ஊர் மக்கள சிலர் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.

ஊர் குழம்பிவிட்டதால் நஸீராவை அழைத்துப் போக முடியாத ஏஜென்சிகாரர்கள் அவளது தகப்பன் முஜீப் நானாவிடம் பல ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து

“முஜீப் இன்று இரவு வேனிலே மகளை கூட்டிக் கொண்டு கொழும்புக்கு வாங்க” என்று கூறிவிட்டு தான் வந்த வழியியே திரும்பிச் சென்றனர்.

அவர்களைப் பார்த்து கைகொட்டி எள்ளி நகையாடினர் ஊர் மக்கள்.

இரவு ஒன்பது மணி இருக்கும் முஜீப் நானாவின் வீட்டு வாசலில் வேன் ஒன்று வந்து நின்றது. அது கொழும்புக்கு நஸீராவை அழைப்போவதற்காக வந்திருந்ததது. அதில் நஸீராவைப் போல் இன்னும் பல அழகிய இளம் பெண்களும் இருந்தார்கள். இவர்கள் எல்லாம் வெளிநாடு போவதெற்கென்றே அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.

வேனைக் கண்டதும் முஜீப் நானா அவசர அவசரமாக செயல்படத் தொடங்கினார். தனது மகளை எப்படியும் இந்த வேனில் அனுப்ப வேண்டும் என்பதே அவரது குறிக்கோள்.

“பிள்ளை நஸீரா சீக்கிரம் வெள்ளிக்கிடு”

என்று குரல் கொடுத்த முஜீப் நானா ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பிரயாணப் பொதியை வேனுக்குள் வைக்க தூக்கிக் கொண்டு சென்றார். பல நிமிடங்களாகியும் நசீரா வேனுக்கு அருகே வராதது கண்டு ஆத்திரப்பட்ட முஜீப் நானா, வேகமாக வீட்டுக்குள் நுழைந்து மகளைத் தேடினார். ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சந்து பொந்துகளிலும் தேடினார். அங்கே அவளைக் காணவில்லை அதிர்ந்துபோன முஜீப் கோபம் மேலிட சத்தம் போட்டுக் கொண்டு வந்து.

“இன்டைக்கு அவள எங்கிருந்தாலும் விட மாட்டேன்”

என்று கூறியவராய் தனது தங்கை ஜல்ஹாவின் வீட்டை நோக்கி ஓடினார்.

தனது காக்கா மிகுந்த கோபத்தோடு தூசணை வார்த்தைகள் பேசியவராக தன் வீட்டை அண்மித்து வருவதைக் கண்ட ஜல்ஹா உம்மா பயந்து போனாள். இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தைரியமாக வாசலுக்கு வந்து நின்றாள்.

அவளைக் கண்டு முஜீப் நானா

“அடியே நீ தாண்டி என்ட பிள்ளைய ஒழுச்சி வைச்சிரிக்கா! ஒழுங்கா, மரியாதையா இப்போது என்னோட அனுப்பி வை! இல்லாட்டி நடக்கிறதே வேற!”

என்று அச்சுறுத்தினார்.

“இஞ்ச பாருங்க நானா நான் ஒளிக்கவுமில்லை, பதுக்கவுமில்ல. வேணும்னா ஊட்டுக்கில வந்து தேடிப் பாருங்க”

என்று நிதானமாக ஜல்ஹா கூறினாள்.

அதைத் தொடர்ந்து உள் நுழைய எத்தனித்த முஜீபை

“நுழையாதே நுழைந்தால் திரும்பிப் போக மாட்டாய்”

என்ற கம்பீரமான குரல் தடுத்து நிறுத்தியது.

அங்கே பசீர் கடும் கோபத்துடன் நின்று கொண்டிருந்தான். அவனது வாலிப உணர்வுகள் முறுக்கேறிக்கொண்டிருந்தன. முஜீப்பைத் தாக்குவதற்கு அவன் ஆயத்தமானான். அதே நேரம் அங்கு வந்து சேர்ந்த ஊர் வாலிபவர்கள் பலரும் முஜீபை சுற்றி வளைத்துக் கொண்டனர்.

இதனால் முஜீபுக்குப் பயம் எடுக்க ஆரம்பித்தது. இதுவரை எவருக்கும் அஞ்சாத அவர் திடம் கொண்ட வாலிபர்களைக் கண்டு அஞ்சினார். இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “என்ட பிள்ளைய மரியாதையா என்கிட்ட அனுப்புங்க” என்றார்.

“அனுப்ப முடியாது உனக்கு என்ன செய்யலுமோ செஞ்சிக்கோ”

என்று பசீர் உறுதியாகக் கூறினான்.

நிலை குலைந்து போன முஜீப் நானா மேலும் ஆத்திரப்பட!

“உனக்கு காசிதானே வேணும்! இந்தா இதில இரண்டு இலட்சம் ரூபா இருக்கு, வைச்சிக்க ஆனால் நஸீராவை வெளிநாட்டுக்கு அனுப்ப விட மாட்டேன். அவ எனக்கு வேணும்”

என்று கூறிய பசீர் முஜீப்பின் கைகளில் பணத்தைத் தினித்தான்.

பணத்தைக் கண்டதும் செய்வதறியாத திகைத்துப் போன முஜீப் நானா, சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்து யோசித்தார்.

சொளையாக இரண்டு இலட்சம் கிடைக்குதே! மகள் வெளிநாட்டுக்குப் போனா கூட இவ்வளவு பணம் கிடைப்பது சந்தேகம்! அதனால இந்த விசஷயத்தை இப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது.

தனக்குள் முடிவெடுத்த முஜீப் நானா.

நீங்கள் எல்லோரும் விடாப்பிடியா இருக்கிறதால, இஞ்சே இருந்து போறன் பிறகு உங்கள கவனிக்கிறன்”

என்று கூறியவராக அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றார்.

“உம்மா நீங்கள் பொண்ண ரெடி பண்ணுங்க நாங்கள் பள்ளிவாயலுக்குப் போறோம் நிக்காஹ் எழுத.

“என்று ஜல்ஹா உம்மாவிடம் கூறிய வாலிபர்கள்”

“இனிமே நாம இருக்கும் வரை இங்கிருந்து ஒரு பெண்ணையும் வெளிநாட்டுக்கு அனுப்ப விடக்கூடாது” எனத் தங்களுக்குள் பேசிக் கொண்டு நசீராவுக்கும் பசீருக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக வேண்டி, பள்ளிவாயலை நோக்கி ஊர்வலமாக நடக்கத் தொடங்கினர் வாலிபவர்கள். அவர்களோடு ஊர் மக்களும் சேர்ந்து கொண்டனர்.

– பீ.ரீ. அஸீஸ், கிண்ணியா (பெப்ரவரி 2016)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *