வேண்டாதவர்கள்

 

பாழாய்ப்போன பசி. காலை ஏழரை மணிக்கெல்லாம் வயிற்றில் நெருப்பாய் தகிக்கிறது. கொஞ்சம் கூட பொறுக்க முடிவதில்லை இந்த வயதான காலத்தில். இத்தனைக்கும் இந்தப் பசிக்கு வயிறு முட்டச் சாப்பிட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. இரண்டோ மூன்று இட்லி போதும். இரண்டு விள்ளல் பிட்டு வாயில் போட்டுக்கிட்டால் போதும் கொஞ்சம் ஆசுவாசமாகிவிடும். இரண்டு இட்லிக்கே வயிறும் மனசும் முழுசா நிறைஞ்டும். ஆனால் அதுக்குத்தான் இந்தக் காலை நேரத்தில் பாடாய் பட வேண்டி இருக்குது.

தினமும் அதிகாலையில் அஞ்சு மணிக்கு முன்னமேயே விழிப்பு வந்துவிடுகிறது. ஒரு வாய் காபித்தண்ணி கிடைக்காது. யாரையும் எழுப்பிக் கேட்கவும் முடியாது. அவர்களாகவே எழுந்து குடிக்க ஏதாவது கொடுத்தால்தான் உண்டு. காலைச் சிற்றுண்டி வருவதற்குத் தினமும் எட்டரை ஒன்பது மணி ஏன் அதற்கு மேல் கூட ஆகிவிடும். அதற்குள் உடல்நடுக்கம் ஏற்பட்டுப் பசியே பாதி வயிற்றைத் தின்றிருக்கும். எஞ்சிப் போனதோ ஆறிப்போனதோ அதையும் கடனேயென்று ஒரு தட்டில் வைத்துத் தள்ளி விட்டுப் போய்விடுவார்கள் யாராவது. மகனோ மருமகளோ ஏன் மனைவி கமலமும் கூட அப்படித்தான்.

வீட்டின் மாடியில் இருந்த அந்த எட்டுக்கு பத்து அறை கூட ஒரு சிறை தான் . அந்த வீட்டுக்குக் குடி வந்த புதிசில் விருந்தினர் வந்தால் தங்கும் அறையாக இருந்ததுதான். இன்று, பராமரிக்கப்படாத அந்தத் தனியறையில் ஒரு கைதியாக முடங்கிக் கிடப்பதுதான் வாழ்க்கை ரிட்டையர் ஆகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது சேகருக்கு. இந்தப் பென்ஷன் பணத்துக்காகத்தான் தன்னைப் பார்த்துக் கொள்கிறார்களோ அதுமட்டும் இல்லையென்றால் நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது .. வயோதிகத்தின் இந்தக் கஷ்டங்களை வலிகளை அவரவர்கள் அனுபவிக்க நேரும் வரை எவரும் உணர்ந்து கொள்ள போவதில்லை. நினைக்க நினைக்க தன் மீதே பரிதாபமும் பச்சாதாபமும் ஏற்பட்டது அவருக்கு.

வாத நோய் வந்து வலதுகை செயலிழந்து விட அவருடைய நடவடிக்கைகள் குறைய ஆரம்பித்து பெரும்பாலும் படுக்கையில் படுத்தபடியே இருந்தார். சில வருடங்கள் வரை கணவரின் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டாள் கமலம். நாளாக நாளாக சேகரின் உடல் இளைத்து வெறும் கூடாக எஞ்சிவிட்டிருந்தது. கண்பார்வை வேறு மங்க ஆரம்பித்திருந்தது. எழுந்து நிற்பதற்கும் நடப்பதற்கும் தான் எத்தனைச் சிரமப்பட வேண்டியிருக்கிறது. எந்த மலைக்கோயிலாக இருந்தாலும் சரி. வாகனங்களில் பயணிப்பதில்லை அவர். .கடகடவென்று படியேறிவிடுவார். ஆனால் இப்போது அதெல்லாம் பழையகதை. இன்று நடக்கவே மிகவும் பிரயத்தனப் படவேண்டியிருக்கிறது. சில சமயங்களில் இயற்கை உபாதைகளைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை . அவசரத்தில் எல்லாம் படுத்தபடியே முடிந்துவிடும். ஆரம்பத்தில் முகம் சுளிக்காமல் உதவிவந்தாள் கமலம். சேகரின் உடல்நிலை மேலும் மேலும் மோசமாக ஒரு நிலைக்கு மேல் கமலத்திற்கும் சலிப்பு வந்து விட்டது. கணவரைவிட்டு மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது முழுமையாக விலகி விட்டாள். இந்த நிலைமையில் மிகுந்த அவஸ்தையுடன் சுயமாக வாழ போராடிக் கொண்டிருந்தார் அவர்.

உறங்கியே கிடக்கும் அவரைத் தினமும் ஒரு முறை மகனோ மருமகளோ வந்து அறைக்கு வெளியிலேயே இருந்து பார்த்து விட்டுப் போவார்கள். எப்போதாவது யாராவது அறைக்கு வந்து அதிசயமாகச் சுத்தம் செய்து விட்டுப்போவார்கள். அதுவரை அறை முழுவதும் ஒரு வித நாற்றம்.குமட்டிக்கொண்டு வரும். ஆரம்பத்தில் அருவருப்பாகவும் அவஸ்தையாகவும் இருந்தது நாளாக நாளாக அதுவும் பழகிப்போய்விட்டது. அவ்வப்போது கீரிச் கீரிச் எனச் சுழலும் பேன் சத்தம் தான் அவருக்குப் பேச்சுத்துணை. அதுவும் கடைசிக்காலத்தில் தன்னைப்போலவே முனக ஆரம்பித்துவிட்டதென்று நினைத்தார்.

திடீரென்று ஒரு நாள் யாரும் இல்லாமல் அனாதையானது போல் உணர்ந்தார். உடம்போடு மனசுக்குள்ளும் ஒருவித நடுக்கம் வந்துவிட்டது. துணை இல்லா வாழ்க்கை நரகம். அதுவும் வயசானன காலத்தில் துணை இருந்தும் இல்லாமல் போறது எவ்வளவு பெரிய கொடுமை. தனக்குள்ளேயே பேசிப் பேசி ஒரு மன நோயாளி போல் ஆகிவிட்டார்.

இப்படியெல்லாம் நடப்பதற்குக் காரணம் என்னவென்று அவருக்குத் தெரியாமல் இல்லை.

நாற்பது வருடத் தாம்பத்திய வாழ்க்கை. திருமணமான நாளிலிருந்து நடந்ததையெல்லாம் நினைத்துப் பார்த்தார் அவர். கல்யாணமான புதுசில் முதல் வருடம் கொஞ்சம் அன்னியோனியமாகவே இருந்ததோடு சரி. அதற்குப் பிறகு மனைவியோடு சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை. ஒரு சாதாரண ஊழியரான அவர் வேலை பார்க்கும் இடத்தில்

வெளி உலகில் காட்ட முடியாத அவமானங்களைக் கோபங்களை தோல்விகளை

வீட்டுக்குள் இருக்கும் மனைவியிடம் காட்டினார். கமலத்திற்குப் பதில் பேச உள்ளுக்குள் பயம் தான் என்றாலும் சில சமயங்களில் பதிலுக்கு பேசப்போய் சண்டை மிகவும் வலுத்து விடுவதும் உண்டு.

கொஞ்சம் கொஞ்சமாக கமலத்தை ஒரு வேலைக்காரியைப் போலவும் அடிமையாகவும் நடத்தத் தொடங்கினார். எடுத்ததற்கெல்லாம் ஏச்சும் பேச்சும். சண்டை போடாத நாளே இல்லை கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான். கண்மண் தெரியாது வார்த்தைகள் வரம்பு மீறிப் போய் விடும். சில சமயங்களில் கைகளை ஓங்கி விடுவார். இவர்களின்

தாம்பத்திய வாழ்க்கை பலவருடங்களாக சேகரின் ஆதிக்கத்திலேயே தொடர்ந்து வந்திருந்தது. ஆனால் இன்று அவரின் நிலைமை ஒரு அடிமையைவிட மோசமாக ஆகிவிட்டிருந்தது. ஆரம்பத்தில் அடக்கி அடிமைப்படுத்தப்படும் பெண்கள் பிற்காலத்தில் கணவனை அதிகாரம் செய்யும் காலம் வரும்போது இப்படித்தான் நடந்து கொள்வார்களோ என்று பட்டது அவருக்கு. நீ செய்ததற்கெல்லாம் நல்லா ஆனுபவின்னு தவிக்க விடுறாங்களோ… என நினைத்தார்.

மனைவிதான் இப்படியென்றால் பிள்ளைகள் இருவரும் அதற்கு மேலே. மூத்தவன் ரமேஷ் அமெரிக்காவில். அந்த நாட்டுப்பெண் ஒருத்தியைக் காதல் திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டதோடு சரி. ஊர்பக்கம் வருவதே இல்லை. சுத்தமாகச் சொந்த ஊரையும் குடும்பத்தையும் எல்லாவற்றையும் மறந்துவிட்டான். எங்கே தங்கி இருக்கிறான் எப்படி இருக்கிறானென்று எந்தத் தகவலுமில்லை. இளையவன் ஆனந்த் கடமையே என்றும் கிடைக்கும் பென்ஷன் பணத்திற்காகவும் பெற்றோரை வீட்டில் வைத்திருந்தான். இப்படியே ஒவ்வொரு நாளும் நரக வேதனையோடு நகர்ந்கொண்டிருந்தது சேகருக்கு. உறவுகளைப் போலவே இந்த மரணமும் தன்னை ஏமாற்றுவதாக நினைத்தார்.

அன்று இரவு முழுதும் அவருக்குத் தூக்கம் வரவேயில்லை. காலை நேரத்தில் சற்று கண்ணயர்ந்து தூங்கிவிட்டவருக்குத் தனது கட்டிலில் யாரோ அருகில் அமர்ந்துகொண்டு அழுவது போல் தோன்றத் திடுக்கிட்டு கண்விழித்துப் பார்த்தார். மனைவி கமலம் அவரது காலடியில் அமர்ந்திருந்தாள். கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்நிருந்தது. . கமலமா இது. மங்கிப் போயிருந்த கண்களை விரித்துப் பார்த்தார்.

கமலம் நீயா…நீயுமா…இப்படி மெலிஞ்சிட்டே. நூல் மாதிரி ஆயிட்டியே. என்ன ஆச்சு. நீயாவது கொஞ்சம் நல்லா இருப்பேனு நினைச்சேன். இந்தப்பாவிய கட்டிகிட்டு இவ்வளவு காலம் படாத பாடுபட்டுட்டே. உனக்கு நான் பெரிசா எதுவும் செஞ்சிடலே. இந்தக் கடைசி காலத்திலேயும் உனக்கு சுமையாவே இருக்குறதுதான் வேதனையா இருக்கு … முடிஞ்சா இந்தப் பாவிய மன்னிச்சுடு. கைகூப்ப முடியாமல் உடல் நடுங்கியது சேகருக்கு.

என்னங்க இப்படியெல்லாம் பேசறிங்க.

நான் அப்படியெல்லாம் நினைக்கலை. நீங்கதான் என்னை மன்னிக்கனும். கொஞ்ச நாளா மூட்டுவலியில கால்ரெண்டும் வீங்கிப் போய் நடக்கமுடியாம போயிடிச்சுங்க. அடிக்கடி மயக்கம் வேறவருது. என் நிலமையும் படுக்கையே கதின்னு ஆயிடுச்சு.படியேறி மேல வரலாமுன்னு நினைச்சாலும் முடியறதில்லை. என்னால உங்களை முன்னமாதிரி கவனிச்சிக்க முடியலங்க. ஆனந்தும் சரி சித்ராவும் சரி நம்மை சுமையாதான் நினைக்கிறாங்க. இத்தனை வருஷம் பாத்து பாத்து வளர்த்த பிள்ளைகளுக்கு தீடிர்னு நாம ரெண்டு பேரும் வேண்டாதவர்களாக ஆகிவிட்டோம். இனிமே நாம எதுக்கும் உதவ மாட்டோமுன்னு முடிவு பண்ணிட்டாங்க. எது நம்ம வீடு எது நம்ம உலகமுன்னு நினைச்சி வாழ்ந்தோமோ அதுவெல்லாம் நமக்கு இல்லைனு ஆயிடுச்சு. இன்னும் எத்தனை வருஷம் வாழ்ந்துடப்போறோம்… அதுவரைக்கும் கூட நம்பளை சகிச்கிக்க முடியலை பிள்ளைகளாலே. பென்ஷன் பணத்தையும் கண்ணுல காட்டுறதில்லை. காசு வேணாங்க கால் வயித்துக்கு கஞ்சி ஊத்தறதை கூட பெரிய இம்சைன்னு நினைக்கிறாங்க. என்னால சாப்டாமா நாள் முழுக்க இருந்துடமுடியும் பாவம் நீங்கதான் ஒரு வேளைக்குக்கூடப் பசி பொறுக்கமுடியாம பரிதவிச்சிப் போயிடுவீங்க. எல்லாம் நம்ம தலையெழுத்து…

குலுங்கிக் குலுங்கி அழுதவளை அணைத்துக்கொள்ளச் சூம்பியிருந்த அவரது கைகள் துடித்தன. ஒருவருக்கொருவர் ஆறுதலாக அருகருகே தோல் சாய்ந்தபடி அமர்ந்தனர்.

திடீரென்று அந்த அறையிலிருந்த மின் விசிறி சத்தமில்லாமல் சுற்றுவது மாதிரி இருந்தது.

மகனும் மருமகளும் ஊட்டிக்கு டூர் போய் இருக்குறாங்க. நான் தட்டுத்தடுமாறி வலியோட எப்படியோ படியேறி வந்துட்டேங்க உங்களை பாத்துடனுமுன்னு ஆசை. பாத்துட்டேன். . இது போதுமுங்க எனக்கு…மனதில் நிறைந்திருந்த முதுமைக்காதலுடன் கணவனை அணைத்துக் கொண்டாள்.

சே…அவசரப்பட்டு கமலத்தை எவ்ளோ தப்பா நெனச்சிடடோம். அவளும் தன்னைப் போலவே துணை இருந்தும் இல்லாமல் தவிக்கிறாளே.

சேகருக்கு மனதில் குற்ற உணர்வு ஏற்பட்டது. ஆனாலும் மனைவியோடு மனம்திறந்து பேசிவிட்டதில் மனம் பரவசப்பட்டது. எங்கே அவளோடு பேசமுடியாமல் அவளிடம் மன்னிப்பு கேட்கமுடியாமலேயே போய்விடும் என்றிருந்தவருக்கு இன்று அவளோடு வாழ்ந்துவிட்ட நிறைவும் இனியும் அந்த வாழ்க்கை திரும்பாது என்ற ஏக்கமும் மாறிமாறி ஏற்படக் கண்களிலிருந்து ஆனந்தக்கண்ணீர் வெளிப்பட்டது. மனம் முழுக்க பரவசமானது.

கடைசியாக ஒரு முறை மனைவியின் பெயரை கமலம் என்று அழைத்தார். கண்கள் சொருகிவர இமைகள் மூடிக்கொண்டன. கண்களை அகல விரித்தபடி கணவரை கடைசியாக ஒரு முறை பார்த்த கமலமும் அவருக்குத் துணையாக அருகிலேயே கண்மூடியபடி சரிந்தாள். பலவருடங்களாக இயங்கிக்கொண்டிருந்த அந்த மின்விசிறியும் மெல்ல மெல்ல இயக்கம் குறைந்து இறுதியாக நின்றுபோனது. 

தொடர்புடைய சிறுகதைகள்
மாலை நேரப் பரபரப்பில் இருந்தது சென்னை மாநகரம். நாளுக்கு நாள் பெருகி வருகிற வாகன நெரிசலால் உருவாகும் புகையாலும் இரைச்சல்களாலும் கோடைக் காலம் வருவதற்கு முன்பேயே மாநகரம் சூடாகி வெக்கை அதிகமாகி இருந்தது. நெருங்கிய தோழிகளான வர்ஷாவும் நிஷாவும் சீருடையில் பள்ளி முடிந்து மாலையில் ...
மேலும் கதையை படிக்க...
வெண்ணிலாவையும் விண்மீன்களையும் தொலைத்த தனிமையில் கருமை பூசிக் கிடந்தது வானம். காணும் யாவிலும் காரிருள் கவ்விக் கொண்டிருந்த ஓர் இரவு. காற்றின் தீண்டல் இல்லாது கற்சிலைகளாய் உறைந்திருந்தன மரங்களும் செடிகளும் . பகல் முழுவதும் சுட்டெரித்த அனலின் தாக்கம் நீறுபூத்த நெருப்பாக்கி ...
மேலும் கதையை படிக்க...
"எம் புள்ளையை ஸ்கூல்ல யாரோஅடிச்சிட்டாங்கலாம்... அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பி அழைப்புமணி அடித்துக் காத்திருந்த குமாரை வரவேற்றது மனைவி விமலாவின் குரல். மணி ஏழைக் கடந்து விட்டிருந்ததைக் காட்டிய கடிகாரத்தின் விநாடி முள் வழக்கத்தை விட அதிகமாகத் துடிப்பது போலிருந்தது அவனுக்கு. நாள் முழுக்க ...
மேலும் கதையை படிக்க...
தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் டெல்லி யிலிருந்து சென்னை நோக்கி புறப்படத் தயாராக இருந்தது . தில்லி ரயில் நிலையத்தில் பயணிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர் . ஆனந்த் S-7 கோச்சில் தன் ஜன்னலோர இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டான் . காலியாக ...
மேலும் கதையை படிக்க...
எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது சொந்த ஊருக்குப் போய் ? எப்படியும் இந்த முறை தமிழ் நாட்டுக்குப் போகும் போது ஊருக்குச் சென்று விட்டு வந்து விடுவது என்று முடிவு செய்து கொண்டார் ராஜகோபாலன். அவரின் மனதில் கடந்த கால நினைவுகள் நிழலாடத் ...
மேலும் கதையை படிக்க...
மனித உயிர் விலைமதிப்பற்றது... என்பது கூட வெறும் வார்த்தைகள் தான் தனது மரணத்தை எதிர் கொள்ளும் வரை... இந்த வரிகளைப் படித்த ராஜுவின் நினைவுகள் இரண்டு வருடங்கள் பின்னோக்கிச் சென்றன. அன்று... அப்படி ஒரு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது அவனுக்கு. இது கனவா இல்லை நனவா? அவன் கண்ட அந்த காட்சியை அவனால் ...
மேலும் கதையை படிக்க...
”காலையிலேயே காரை கழுவ ஆரம்பிச்சாச்சா. ரிட்டயர்மென்ட் லைப்ல உங்களுக்கு நல்லா தான் பொழுது போகுது..”. மனைவியின் குரலைக் கேட்டு ஈரத்துணியைப் பிழிந்தபடியே நிமிர்ந்தார் ராமநாதன். அருகிலிருந்த பெரிய பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீர் முழுவதும் காலியாகி இருந்தது. “என்னடி கிண்டலா பண்ற...? “இல்லைங்க இப்ப இருக்குற தண்ணி ...
மேலும் கதையை படிக்க...
ஒரு குடுவையில் இரண்டு அமிலங்களைக் கலந்தால் என்ன ஆகும் என்பதற்கும் குமாஸ்தா வேலைக்கும் என்ன சம்மந்தமிருக்க முடியும் என்பது தெரியவில்லை ரகுவுக்கு. வணிகவியல் பட்டதாரியான அவனுக்கு அந்த வேதியியல் வினா கூட வினையாகத்தான் விடிந்தது. பதில் தெரிந்தும் தேர்வு செய்ய முடியாத ...
மேலும் கதையை படிக்க...
குமார் என் பால்ய சினேகிதன். மறக்க முடியாத எனது பள்ளிக்கூட நண்பர்களில் ஒருவன். நான் சிவகுமார். தனியார் நிறுவனத்தில் தனியாய் கணக்கெழுதுகிற வேலை, எல்லாம்... எந்தச் சங்கிலியும் இல்லாமலேயே நாள் முழுதும் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிற அந்தப் பாழாய்ப் போன கணினியில் தான். இருபது ...
மேலும் கதையை படிக்க...
"வாழ்த்துக்கள் சார் ..." என அனைவரும் வரிசையாக நின்று கொண்டு ஒவ்வொருவராக சேகரின் அறைக்குள் சென்று வாழ்த்திய வண்ணம் இருந்தனர் . எல்லோரும் வாழ்த்தி முடித்த பின்னர் அவருடைய நண்பர் சுந்தரம் அந்த அறைக்குள் நுழைந்தார். ஜில்லென்று ஏசி காற்று அறையை நிரப்பி ...
மேலும் கதையை படிக்க...
அன்புள்ள அம்மா அப்பாவுக்கு
இல்லாதவன்
கால் மணி நேரம்
விவாகரத்து
சொந்த ஊர்
உயிரே உயிரே
கார் வாங்கிய கதை
தேர்வு
நண்பன்
மனைவியின் காதல்

வேண்டாதவர்கள் மீது 2 கருத்துக்கள்

  1. Nilaravi says:

    தங்கள் கருத்துக்கு நன்றி.

  2. ஈசுவரன் says:

    வயோதிகத்தில் மனிதனின் மனநிலையையும் சிக்கல்களையும் மிகவும் உருக்கமாகவும் வெளிப்படுத்தியுள்ளீர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)