வேணாம் பதினாறு..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 4,100 
 

வீட்டில் தன்னந்தனியாய் படுத்தப் படுக்கையில் இருக்கும் அன்னபூரணியைப் பார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது சுமதிக்கு.

‘ எப்படி நாறுந்தோலுமாய்ப் போய்விட்டாள் அம்மா..? !! ‘ – நினைக்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

இதே ஊரில் இரண்டு அண்ணன்கள் … மனைவி , மக்களுடன் நல்ல வசதியுடன் சந்தோசமாக இருக்கின்றார்கள். ஒன்று, இரண்டு என்று.. அடுத்தடுத்து அவர்களுக்குத் திருமணம் முடிந்ததுமே…… வந்தவள்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு தனிக்குடித்தனம் போய் விட்டார்கள்.

அருகிலிருக்கும் அவர்கள் வந்து பெற்றத் தாயைப் பார்க்காமல்… திருமணம் முடித்து எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் தான் கேள்விப்பட்டு வந்து பார்ப்பதென்றால் எவ்வளவு கொடுமை..? – நினைக்க அவளுக்கு ஆத்திரம் வந்தது.

‘ மாமியார் – மருமகள்கள் சண்டையில்….. அம்மாதான் அவர்களை வந்து பார்க்க வேண்டாம், தன்னைக் கவனிக்க வேண்டாமென்று சொல்லிவிட்டாள் என்றால்….மாமியார் சொன்னதை மனதில் வைத்துக் கொள்ளாமல் புகுந்த வீட்டுப் பெண்கள் வந்து எட்டிக்கூட பார்க்காமல் இருப்பது சரியா..? ‘ – என்று நினைத்தவள்…

” அம்மா ! ” தாயின் தலை மாட்டில் அமர்ந்து மெல்ல அழைத்தாள்.

”எ…. என்ன சுமதி..? ” அன்னபூரணி மெல்ல கண் விழித்து அவளை பார்த்தாள்.

” உள்ளூர்ல இருக்கிற அண்ணன்கள் வந்து உன்னைக் கவனிக்கிறதில்லையா…? ” கேட்டால்.

” இ…இல்லே..! ” என்ற அன்னபூரணி….” நினைச்சா என்னைக்காவது வருவானுங்க, போவானுங்க…” முணுமுணுத்தாள்.

மகன்களை வீட்டுக் கொடுக்காமல் பொய் சொல்கிறாளோ…?! ‘ சுமதி தாயை சந்தேகமாகப் பார்த்தாள்.

‘ வயசானதை வச்சி எதுக்குப் பாரம் சுமக்கனும்னுதான் பொண்டாட்டிங்க சொல்லி போயிட்டானுங்களே… ஏது கவனிப்பு..? போன வாரம் சின்னவனும் பெரியவனும் ஒன்னா சேர்ந்து வந்தானுங்க. நான் இதே மாதிரி படுத்தப் படுக்கையாய் இருந்தேன். சுரமா..? உடம்பு சரி இல்லையா…? ன்னு ஒப்புக்குத் தொட்டுப் பார்த்து ஏதோ மருந்து, மாத்திரைகள் வாங்கி குடுத்துட்டுப் போனான்ங்க. அப்புறம் திரும்பியே பார்க்கல. அந்த மாத்திரை மருந்துகள் தின்னும் ஒன்னும் கேட்கல. ” ஆயாசமாகச் சொல்லி கண்களை மூடினாள்.

‘ ச்சே..! பெற்றத் தாயை இப்படியா அலட்சியப்படுத்துவார்கள்..? – சுமதிக்கு கொதித்தது.

” அவனுங்களுக்கென்ன… கிழவி எப்போ மண்டையைப் போடும்….அக்குத் தொக்கு இல்லாம வீட்டைக் கட்டிக்கலாம்ன்னு நெனப்பு. இவனுங்களுக்குத் தெரியலைன்னாலும் வந்தவளுங்க சொல்லிக் கொடுத்திருப்பாளுங்க.” அன்னபூரணி … அவள் பாணியிலேயே சிந்தித்து முணுமுணுத்தாள்.

‘ மக்களைப் பெற்றாலும் பெற்றவர்கள் எப்படி அனாதையாக்கப்படுகிறார்கள்..?!’ – நினைக்க துக்கமாக இருந்தது சுமதிக்கு.

‘பெற்றவர்களை….ஆண் பிள்ளைகள்தான் கவனிக்க வேண்டும், காப்பாற்ற வேண்டுமா..? நான் கூடாதா..? ‘ – திடீரென்று அவளுக்கு ஞானோதயம் வந்தாற்போல் புத்தியில் பட்டது.

” சரிம்மா. நீ தனியா கிடந்து இங்கே கஷ்டப்படவேணாம். என் வீட்டுக்கு கிளம்பு. நான் கவனிக்கிறேன். ” சொன்னாள்.

” வேணாம் சுமதி. வீண் சிரமம். அது மட்டுமில்லாம பெத்தப் புள்ளைங்க ரெண்டு குத்துக்கல்லாட்டம் உசுரோட இருக்கும்போது நான் பொண்ணு வீட்ல வந்து தங்குறது தப்பு. மாப்பிள்ளைக்குத் தர்மசங்கடம். புள்ளைங்களுக்கு அவமானம். ” அன்னபூரணி நாட்டு நடப்பைச் சொல்லி கண்களைத் திறக்காமலே மறுத்தாள்.

அந்த நிலையிலும் அவளுக்கு மகன்களை விட்டுக்கொடுக்க மனமில்லை.

” அதுவும் சரி ! ‘ மனசுக்குப் பட்டது.

சுமதி அப்போதைக்கு அம்மாவிற்குத் தேவையான உதவி, ஒத்தாசைகள் செய்துவிட்டு உடன் உருக்குப் புறப்பட்டாள்.

ஆனால்….

அடுத்த நாளே… தன் தாய்க்கு உதவியாய் இருக்க ஒருத்தியை வேலைக்கு அனுப்பி நிம்மதி மூச்சு விட்டாள் .

ஒரு வாரம்….

வீட்டில் சுமதியின் கைபேசி ஒலித்தது.

எடுத்தாள்.

” சுமதி ! நான் உன் பெரிய அண்ணி பேசறேன். ” இவள் வாயைத் திறக்காமலேயே எதிர் முனையில் குரல் அறிமுகம்.

” சொல்லுங்க அண்ணி..? !!”

” உன் சின்ன அண்ணியும் என் பக்கத்துலதான் இருக்கா….”

” அப்படியா…?! ரொம்ப சந்தோசம்.! என்ன அண்ணி விசேசம்.? ”

” ஒண்ணுமில்லே. உன் அம்மாவை…. எங்க மாமியாரை..நாங்களே எங்க வீட்டுக்கு கொண்டு வந்து கடைசி வரை கவனிச்சு < காபந்து பண்றதா முடிவு பண்ணிட்டோம்.”

” ரொம்ப சந்தோசம் அண்ணி. ஏன் அண்ணி இந்த திடீர் முடிவு…? ”

” எல்லாம் நீ செய்த வேலை..”

” அண்ணி..!! ”

” நீ அனுப்பிய பதினாறு மாமியார் வீட்ல வந்து தங்கியதிலிருந்து…உன் அண்ணன்கள் ரெண்டு பேரும்…. பெத்தத் தாயைக் கவனிக்கனும் என்கிற அக்கறை…. பொட்டப்புள்ளைக்கு வந்து… கூலிக்கு ஒரு ஆளை அமர்த்தி கவனிக்கிறாள்ன்னா…. இங்கே குத்துக் கல் மாதிரி நாங்க கவனிக்காம இருக்கிறது மானக்கேடுன்னு சும்மா எங்களிடம் ஒப்புக்குச் சொல்லி…. அந்த வீட்டிலேயே ஆள் மாத்தி ஆள் மாத்தி பழியாக் கிடந்து வீட்டை மறந்துட்டாங்க. நீ அனுப்பியவளை உடனே அழைச்சி எங்க மாங்கல்யத்தைக் காப்பாத்து. ” சொன்னாள்.குரல் கரகரத்தது.

” உன் அம்மாவை உன் அண்ணன்கள் கவனிக்கனும் அவ்வளவுதானே..! நான் ஏற்பாடு பண்றேன். ஒரு சின்னப் பொண்ணை நாளைக்கே வேலைக்கனுப்பினா போட்டிப் போட்டு கவனிப்பாங்க. பாம்பின் கால் பாம்பறியும் ! ” என்று சொல்லி ஆளை அனுப்பிய கணவனின் புத்திசாலித்ததானத்தை மனசுக்கு மெச்சிய சுமதி ….

” சரிங்கண்ணி..!” என்று பவ்வியமாக சொல்லி தொலைபேசியை வைத்தாள் .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *