வெவ்வேறு அறைகள்

 

அறை எண்:30: ஹோட்டல் ஸ்வாகத்: மூன்று நட்சத்திர ஹோட்டல் அறையின் குளிர் உச்சத்திற்கு வந்துவிட்டது. எழுந்து ஏர் கண்டிசனைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பதை அரைமணி நேரத்திற்கு மேலாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். கம்பளியின் கனத்துக்கும் குளிர் ஊடுருவி விட்டது.

ஒரு சோம்பல் தன்மையுடன் படுத்துக்கிடக்கிறேன். எதிலெதிலோ பாய்ந்து ஊடுருவிச் செல்வது போல மின்சாரத்திற்கும் ஒரு குரல் வந்துவிட்டது. உம்..உம்..ர் என்றபடி ஒருவித மின்சார சப்தம் அறையை ஊடுருவி விட்டது. அறையின் ஏகத்திற்கும் தென்படும் ஒழுங்கும் சுத்தமும் கம்பளிக்குள் கிடக்கும் என்னைக் கேலி செய்கின்றன.

தாறுமாறாய் கலைந்து போன உடை. அறைக்குள் வந்ததும் தழுவிக் கொண்ட தூக்கம். கண்களின் ஜூரத்தில் பிசுபிசுப்பு தென்படுகிறது. பீளையாக இருக்கலாம்.

குளிரின் உச்சத்தில் கண்கள் துளிர்த்திருக்கலாம். தலைமயிர்கள் ஒருவித இறுக்கத்தில் வந்திருக்கலாம். எழுந்து தலையைச் சீவுகிறபோது ஒருவித வலி தென்படலாம். அதிக பட்சம் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேனா. கம்பளிக்கு வெளியே வந்து வலது கையை உருவியெடுத்து நேரம் பார்க்கத் தோன்றவில்லை.

ஆனால் இந்த ஒரு மணி நேர ஆழ்ந்த தூக்கம் கூட பதினைந்து நாட்களாய் வாய்க்கவில்லை. தூக்கம் தொடர்ச்சியாய் தடைபட்டு வருகிறது. கனவில் மிதக்கும் செக்குகளும், டிராபேக் ஆவணங்களும், ஏற்றுமதி நிறுவனக் கடிதங்களும் சட்டென காற்றில் படபடப்பது போன்ற சப்தம் தூக்கத்தைக் கெடுத்து விடுகிறது. தூக்கத்தை வரவழைப்பதற்காக அருந்தும் மதுபானத்தின் அளவும் அசாதாரணமாகிவிட்டது.

ஆழ்ந்த தூக்கத்தை அதுவும் கொண்டு வரவில்லை. படபடத்துத் திரிகிறது மனது.

எதை எதையோ தேடுகிறது. எல்லா வகை சந்தோஷங்களையும் தற்காலிகமாகவே நினைத்துக் கொள்கிறது. நிரந்தர சந்தோஷம் எதோ இருப்பதுபோல தற்காலிகச் சந்தோஷங்களை ஒத்திப்போட வைக்கிறது. இது போதும் என்ற பரபரப்பு அடங்காமையின் விரிவு நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. வியாபாரத்தின் எல்லா தந்திரங்களும் நமட்டுச் சிரிப்பும் யார் யாரையோ துன்புறுத்துவது சாதாரணமாகவே நன்றாகத் தெரிகிறது. ஆனால் வியாபாரத்தின் புது தார்மீகம் என்பது போல, அதையெல்லாம் சாதாரணமாக ஆரம்பித்துவிட்டன. டாலர்களும், பவுண்டுகளும் சாதாரண இந்தியப் பணத்தைத் துச்சமாக நினைக்க வைத்து விட்டது. இந்த ஹோட்டல் அறையில் வந்து தங்குவதற்கான தகுதியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது நிரந்தர பயமாகிவிட்டது. வியாபாரம் ஒரு சூதாட்டம் என்பதை நிரூபிக்கிற பல உதாரணங்கள் சமீபமாய் நரசய்யா, சிவகுமார், சங்கரநாராயணன், கோரி போன்றோரின் சறுக்கல்களில் நிரூபணமாகி விட்டது. அதிலிருந்து அவர்கள் மீள முடியாது. அப்படி நானும் மீள முடியாதவனாகிப் போவேனா என்ற பயமும் அவ்வபோது எழும். புதிய ஏற்றுமதிக் கொள்கை, கப்பலில் சரக்கை அனுப்புவதற்குப் பதிலாக விமானம் மூலம் அவற்றை அனுப்ப வேண்டிய நிர்பந்தங்கள், உயர்ந்து கொண்டே இருக்கும் பஞ்சின் விலையெல்லாம் பயமுறுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. ஈஸ்வரின் சாவு என்னை மிகவும் பாதித்தது. இளம் வயதில் வியாபாரத் தோல்வி என்பது தற்கொலைக்குத் தூண்டிவிட்டது துரதிர்ஷ்டமானது.

ஹோட்டல் பற்றின விவரங்களும், உணவுப் பொருட்களின் விலைப்பட்டியலும் வர்ணங்களில் அச்சிடப்பட்ட புத்தகம் ஓரத்தில் கிடக்கிறது. அழகான பல வர்ணங்களில் அச்சிடப்பட்ட புத்தகம். ஒரு புத்தகத்தின் விலையே நூறைத் தாண்டும்.

உள்ளே தென்படும் விலைப்பட்டியலில் நூறு ரூபாய்க்குக் குறைவானதாக எதுவும் இருக்காது என்று தோன்றுகிறது. தேநீர், காபி தவிர இங்கு ஒரு வேளை உணவு ஐநூறு ரூபாய்க்கும் மேலாக இருக்கலாம். மதுபானப் பட்டியலில் விலை குறிப்பிட்டிருக்கும். இன்றைய டாலரின் மதிப்பென்ன நாற்பத்து நான்கு ரூபாயா.

டாலர் மதிப்பை நினைத்தால் ஒரு சொட்டுத் தண்ணீரும் தொண்டையில் இறங்காது.

கிரெடிட் கார்டு வசதி என்பது இன்னும் உறுத்தாத விசயமாகிவிட்டது. ஹோட்டல் செலவு பில்லை காலி செய்யும்போது ஓரக்கண்ணால் பார்ப்பதோடு சரி. கிரெடிட் கார்டை நீட்ட வேண்டியதுதான். தாத்தாவிற்கு முந்தின தலைமுறையிலிருந்து இவ்வகைச் செலவுகள் சாதாரணமாகி விட்டன.என் தலைமுறையில் சறுக்கல் வந்துவிடக்கூடாது என்ற பயம் இருக்கிறது. காற்றில் அடித்துச் செல்லப்படும் வாழை மரம்போல் பயம் இருந்து கொண்டே இருக்கிறது. என் கனத்தால் நான் காற்றில் இழுபடாமல் தரையில் ஆழமாக ஊன்றிக் கொண்டிருக்கிறேன்.

மேசையின் மேல் கிடக்கும் பகவத்கீதை பிளந்து கிடக்கிறது. காற்றின் அசைவுகளில் பக்கங்கள் நடுங்குகின்றன. இந்த ஏ.சி அறையில் எங்கிருந்து காற்று வந்தது. எப்படி சலசலக்கிறது. வினோதமாக இருக்கிறது. பிரிந்து கிடக்கிற பக்கம் என்ன உபதேசம் சொல்லும். கடமையைச் செய். பலனை எதிர்பாரதே என்றா.

பகவத்கீதையில் வேறு எனக்கு என்ன தெரியும். அதை எடுத்து அரைமணி நேரம் வாசிக்கக் கூட வாய்த்ததில்லை. பக்கத்தில் பைபிள் பிரதியொன்று கிடக்கிறது.

பைபிள் என்ன சொல்லும். பாவப்பட்டவர்களே என்னிடத்தில் வாருங்கள் என்றா.

பத்துக் கட்டளைகள் என்னென்ன. கிறிஸ்தவப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்திருந்தாலும் காலை நேரப் பிரார்த்தனையின் ஒரு நீள வரி கூட மனதில் பதிந்துவிடவில்லை. புனித நூல்களைப் பிடித்திராதபோது வேறுவகை நூல்களுக்கு நேரம் எங்கிருந்து பகிர்ந்தளிப்பது. அப்பாவிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அதுவும் ஐம்பது வயதிற்குப் பிறகுதான் வாசிப்புப் பழக்கம் தீவிரமாகியிருக்கிறது. சித்தப்பாவைப் போல வாசிப்பை மூச்சாகவும், மன இறுக்கங்களிலிருந்து விடுவித்துக் கொள்கிற உபாயமாகவும் அப்பா ஐம்பதிற்குப் பின்னால் பழகிக் கொண்டதை அபூர்வமான அதிர்ஷ்டம் என்று சொல்லிக் கொள்வார்.

சித்தப்பா இறந்தபோது அவரின் உடம்பைத் தீக்கிரையாக்கினர். அப்போது சிதையில் புத்தகங்களும் சேர்த்து வைக்கப்பட்டன என்பது அதிர்ச்சியாக இருந்தது. வியாபார விஷயமாய் ஐரோப்பிய நாடுகளில் கலந்து கொண்டிருந்த போது அவரின் மரணச் செய்தி தொலைபேசியில் வந்தபோது சாதாரணமாகத் எடுத்துக் கொண்டேன். சித்தப்பா மரணத்தை இயல்பாகத்தான் எடுத்துக் கொண்டேன். சித்தப்பா மரணத்தை இயல்பாகத்தான் எடுத்துக் கொள்ளச் சொல்வார். அதுபோலத்தான். ஆனால் தூங்கியெழுந்த ஒரு பகல் நேரத்தில் வாய்விட்டு அழ வைத்தது எது என்பது புதிராகத்தான் இருக்கிறது. இந்த ஹோட்டலில் தங்கியிருக்கையில் அப்படி எந்த வேறு செய்திகளும் வந்துவிடக்கூடாது என்று மனம் விரும்புகிறது. ஏனோ மூன்றிலக்க எண் உள்ள அறையைத் தேர்ந்தெடுப்பது விருப்பமானதாக இல்லை.

மூன்றிலக்க எண்ணைக் கூட்டிப் பார்த்து நியூமராலஜி அலைக்கழிக்கும். இரட்டை இலக்க எண் என்றாலும் அப்படித்தான். இவ்வறையின் எண் கூட்டிக் கழிக்க உபத்திரவமின்றி இருப்பது ஆறுதல்.

பகுதி 2

அறை எண் மற்றும் அறை எண் இல்லாத குடில் மலையடிவாரப் பிரதேசம். நகரவாடையற்ற இடம் இன்றைக்கு சித்தப்பாவின் நினைவு நாள். சித்தி ரொம்பவும் வற்புறுத்தினாள்.

அவர் இறந்த இந்த இடத்திற்குச் சென்று வர வற்புறுத்திக் கொண்டே இருந்தாள்.

சென்ற வருடம் இவ்விடத்திற்கு வந்தபோது காரில் பயணம் செய்வது அவளுக்கு இம்சையாகிவிட்டது. கரடுமுரடான பாதை. ஒழுங்கில்லாத நெடும் சாலைகள்.

சித்தப்பா குடில் போன்ற ஒன்றைக் கட்டி இங்கு கடைசிக்காலத்தில் வாழ்ந்திருந்தார்.

பெரும்பாலும் இயற்கை உணவை உண்டும், யோகாசனங்களும் புத்தக வாசிப்பும், அடர்ந்த காட்டுக்குள்ளும் மலையேறிப் பொழுதைக் கழிப்பதும் அவருக்கு உவப்பானதாக இருந்தது. சித்தியுடன் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்குத் திரும்புதல் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவர் பத்து வருடங்களை இங்கே கழித்து விட்டார்.

டைரிக்குறிப்புகளோ, வேறு எந்த வகையான பதிவுகளோ விட்டுப் போயிருப்பாரா என்று தேடிப்பார்த்து விட்டேன். எதுவும் அகப்படவில்லை. ஏதாகிலும் என்னுடன் பேசிப் பகிர்ந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் இருந்தது என்பதை வேலைக்காரன் பொன்னுச்சாமி சொன்னான் “அவங்க சொல்றதையெல்லாம் நானும் யார்கிட்ட சொல்றது. இயற்கையைப் பத்தித்தான் நிறையப் பேசுவார்”. ஆனால் சித்தியின் கட்டாயங்களுக்காக இதைச் செய்தேன். நாற்பது, ஐம்பது பேருக்கு வேட்டியும் சேலையும் கொடுத்தனுப்பி இருந்தாள். சித்தப்பா கடைசிகால வாழ்க்கையை இப்படி அமைத்துக் கொண்டது போலத்தான் அப்பாவும் அமைத்துக் கொண்டார். அவருக்கு வேறொரு மலைப்பிரதேசம் பிடித்திருந்தது. அந்தக் குளிரில் வயதான காலத்தில் உடம்பை எதற்காக வருத்திக் கொள்ள வேண்டும் என்றிருக்கும். ஆனால் மலைப்பிரதேசத்தில் தன் கடைசிகால வாழ்க்கையைக் கழிப்பது என்பதில் தீவிரமாக இருந்தார். நிறைய இளநீரும் பழங்களும் அவருக்குத் துணையாகின. அதேபோல் நல்ல தேநீர் அவருக்குப் பிடித்தமானது. தாத்தாவைப் பற்றிக்கூட அப்பா சொல்லியிக்கிறார். தாத்தாவும் கடைசிக்காலத்தில் நகரின் இரைச்சலைத் தவிர்த்து விட்டு ஒதுங்கி வாழ்ந்திருந்தார். இவர்களுக்கெல்லாம் என்னவாயிற்று என்றிருக்கும் யோசிக்கையில்.

பணம் சம்பாதிப்பதும் பின் கடைசிக் காலத்தில் எல்லாவற்றையும் உதறிவிட்டு இது போன்று மலைப் பிரதேசங்களுக்கு வந்து பிணமாகிப் போவதும். இந்த அறையில் குறைந்தபட்ச வசதி கூட இல்லை. பேன் இல்லை. கட்டில் இல்லை.

தொலைக்காட்சிப் பெட்டியோ தொலைபேசியோ இல்லை. சூடாக ஏதாவது கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. ஆனாலும் சித்தப்பா தன் கடைசிக்காலத்தை இங்கு தான் கழிக்க விரும்பினார். அப்பாவும் தாத்தாவைப் போலத்தான் தனிமையிலிருந்தோ தனித்திருந்தோ எல்லா இரைச்சலையும் விட்டு ஒதுங்கியிருந்து தங்கியிருந்தனர். அவர்களை எரிக்க, புதைக்க எங்கள் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் பலர் விமானத்தில், ஹெலிகாப்டரில், காரில் பயணம் செய்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். மீண்டும் காருக்குள், ஹெலிகாப்டருக்குள், விமானத்திற்குள் அடைக்கலமாகி விட்டார்கள்.

இந்த விசித்திரம் எனக்குப் புரிகிறது. இதுதான் வாழ்க்கை என்பதும் புரிகிறது.

நாளைக்கு நடக்கவிருக்கும் போர்டு மீட்டிங்கிற்கு நான் சொல்வதென்றால் காரில் இம்மலைப் பிரதேசத்தைக் கடந்து விமானத்தைப் பிடிக்க வேண்டும்.

அதற்காய் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.

நான் புறப்படுவதைப் பார்த்து விட்டு பொன்னுச்சாமி அருகில் வருகிறான்.

“வந்து ஒரு நாள்ன்னு நீங்க இருந்ததே பெரிசுன்னுபடுது. எக்கச்சக்கமா வேலை கெடக்கும்.”

அவன் கைகளில் மலைவாழைப்பழம் ஒரு சீப்பும் மாதுளை நாலைந்தும்.

என் பயணத்தில் இவற்றை நான் சாப்பிடுவேனா.. உறிஞ்சிக் கொள்ள ஏதேனும் பானமும், அவசரமாய் மென்று தின்று விழுங்க சூடாய் ஏதேனும் விமானத்தில் கிடைத்துவிடும்.

“அடுத்து எப்ப வருவீங்க” நிச்சயம் பதில் என்று எதுவும் என்னிடம் இல்லை.

என் அப்பாவைப் போல, என் தாத்தாவைப் போல நானும் இங்கு வந்து செத்து வாழ்க்கையின் விசித்திரம் பற்றி யோசிக்காமல் என்னிருக்கப் போகிறது மிச்சமாய். 

தொடர்புடைய சிறுகதைகள்
இவ்வளவு உயரத்திலிருந்து பட்டம் விட முடியுமா என்பது சந்தேகமாக இருந்தது சாந்திக்கு. பிரவீனா வெயில் பட்ட கருத்து முகத்துடன் கேட்டாள். முகத்துச் சோர்வு அவளின் வயதைக்க்கூட்டியிருந்த்து. "உனக்கு புடிச்ச பட்டம் வுடறது இங்க வைச்சுக்க முடியுமா. இங்கிருந்து.பட்டமெல்லா வுட முடியுமா இல்ல நிலத்திலிருந்து உடறது ...
மேலும் கதையை படிக்க...
பாவடிக்கு இடம் தேடுகிற அவஸ்தை மனசிற்கு சிரமம் தந்தது. பாவடிக்கு இடம் பத்தாது போலிருந்தது. பள்ளிக்கூடத்திற்கு சின்ன விளையாட்டு மைதானம் பின்பக்கத்தில் கொஞ்சம் காலி இடம் இருந்தது. இரண்டாம் முளைக் கடப்பாரையை அந்த மைதானத்தில்தான் அடிக்க வேண்டும் போலிருந்தது. அப்போதுதான் இடம் பத்தும், ...
மேலும் கதையை படிக்க...
“இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க” “என்ன கதையா” “சின்னக் கதையா“ “குட்டிக் கதையா“ “குட்டிகளைப் பத்தின கதையல்ல........சொல்லட்டுமா” “சொல்லுங்க..குட்டிகளனு யாரும் வந்திடக்கூடாது” “இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க. எல்லாருக்கும் ரொம்பவும் போர் அடிச்சுப் போச்சு. மனுசங்க மூஞ்சிய மனுசங்களே எத்தனை நாளைக்குப் பார்க்கிறது? வேற ...
மேலும் கதையை படிக்க...
கப்பல் சலசலத்து மிதந்து கொண்டிருந்தது. உப்புக்கரித்தக் காற்று அவன் முகத்தில் அடித்துப்போனது.முகம் கோணலாகியிருந்த்து. “அந்தத் தீவோட பேர் என்ன…” “பேரே இல்லை…” “பேரே இல்லையா…” “பேரே இல்லாமல் இது மாதிரி நிறைய இருக்கு” “மனுஷங்களாவது இருப்பாங்களா” “ஆதிவாசிகளைப் பத்திக் கேக்கறையா… வாய்ப்பிருக்கலாம்” “துறவிகள்…” “சாமியார்க வந்து சேர்ர எடம்கற எண்ணத்திலெ கேக்கறையா.” “எங்காச்சும் போய் ...
மேலும் கதையை படிக்க...
அவனுக்கு நேர்ந்த நிர்வாணம் எதேச்சையானது என்பது குற்றவுணர்வாய் அவனுள் எழுந்தது. சந்திரா என்ன அம்மணக்குண்டியோட நிக்கறே என்று சொன்னதில் எரிச்சல் தெரிந்தது. அவள் இது போன்ற சம்யங்களில் நமட்டுச் சிரிப்பை உதிர்ப்பாள். இப்போதைய வார்த்தைகளில் இருந்த கோபமான நிராகரிப்பு அவன் உடம்பைக் ...
மேலும் கதையை படிக்க...
கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. 'கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே இல்லாமல் ஞாபகம் வந்தது. 'அடப்பாவி... கிளம்பிட்டியா?!'' என்றுதான் கத்தினான். உடனே அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கைபேசியை முடுக்கினான். மஞ்சள் சுடிதாரில் அவள் ...
மேலும் கதையை படிக்க...
கவுசிகா: கவுசிகா நதி என்ற போர்டைப்பார்த்தான். அம்புக்குறிப்பிட்ட இடம் வெறும் தரையாய் கிடந்தது.. அம்புக்குறி நீண்டு கொண்டே போவது போலிருந்தது. சமீப ஆண்டுகளில் கவுசிகா நதி இருந்த தடத்தைக் காட்டுவதற்காக பல போர்டுகள் முளைத்து விட்டன. நதி இருந்த அடையாளம் தெரியவில்லை.பெரும்பாலும் எல்லா ...
மேலும் கதையை படிக்க...
“இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு” சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது. இந்த நிலையில் முகத்திற்குப் பிரகாசம் வந்திருக்கும். கண்ணாடியில் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாள் பஞ்சவர்ணம் “என்னவோ திடீர்னு விருந்து கெடச்ச மாதிரி.” முதலில் பெயரை ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கோடி மெழுகுவர்த்திகள்
வலது கை பட்டு மெழுகுவர்த்தி பாக்கெட் கீழே விழுந்த மொசைக் தரைச் சப்தத்தினூடே மின்சாரம் போய் அப்பகுதி இருளடைந்தது .. அவள் நின்றிருந்த சூப்பர்மார்க்கெட் “மாலி”ன் இரண்டாம் தளம் முழுவதும் இருட்டாகி விட்டது. “ உலகம் இருண்டு விட்டது “ பூனையாய் கண்களை ...
மேலும் கதையை படிக்க...
ஏதோ நினைவில் வலது காதை நீவிக்கொண்டு இருந்தேன். காதை நீவுவது சுறுசுறுப்பு தரும் என்று யாரோ சொன்ன ஞாபகம். காதைக் கிள்ளி சுறுசுறுப்பாக்குகிற வாத்தியார் இல்லாமல் போய்விட்டார். வலது காதிலிருந்து கையை எடுத்தபோது, அருண் வந்து நின்றான். ''காதையே தடவிக்கிட்டு இருக்கீங்களேப்பா. நீங்க ...
மேலும் கதையை படிக்க...
காவியத் தலைவனும் காலி வீடும்
பாவடி
தாண்டுதல்
தீவு
நிர்வாணி
ஷரோனின் மோதிரம்
மூன்று நதிகள்
வேட்டை
ஒரு கோடி மெழுகுவர்த்திகள்
காதுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)