Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வெளிச்சத்திற்கு ஏங்கும் விளக்குகள்

 

தொழுகைக்காக முகம், கை, கால் கழுவி ஒளு செய்து வந்தாள் யாஸ்மின். தலைமுடியை முழுவதுமாக மறைத்து முக்காடிட்டிருந்தாள்.  முகம் பூரணச் சந்திரன் போல இலங்கிக்கொண்டிருந்தது. தொழுகைப்பாயை விரித்து நிதானமாக மதிய தொழுகையை நிறைவேற்றினாள். அதன் பின் தன் இருகரம் விரித்து அவள் இறைஞ்சிய சில வரிகள் இந்தக்கதைக்கு தேவையானவை:

என் இறைவனே..! என் படிப்பைத் தொடரும் வழியை ஏற்படுத்தி அருள்வாயாக. கல்வியில் என் நாட்டத்தை அதிகப்படுத்துவாயாக! கல்வியை கண்ணுக்கு ஒப்பிட்டவனே, எனக்கும் அக்கண்ணில் ஒளியை நிரப்புவாயாக”

யாஸ்மின் மேற்கண்டவண்ணம் பிரார்த்திக்க காரணம் இல்லாமலில்லை:

இரண்டாண்டுகளுக்கு முன் அவள் ‘பெரிய மனுஷி’ ஆனதிலிருந்து அவளுடைய படிப்பு தடைப்பட்டது. சவூதியில் வேலை செய்யும் அத்தாவிடமிருந்து வந்த கடிதத்தில் அந்தத் தடங்கல் எழுத்து வடிவத்தில் இருந்தன… “யாஸ்மின் படித்தவரைக்கும் போதும், நிறுத்தி விடவும்”. குடும்பத்தின் செயல் தலைவியான அம்மாவுக்கு அந்த வார்த்தைகளே போதுமானதாக இருந்தன. “நாளையிருந்து நீ பள்ளிக்கூடம் போ வேணாம்” என்று ஒரே வார்த்தையில் யாஸ்மினின் படிப்புக்கு தாழ் போட்டாள்.

யாஸ்மின் உள்ளுக்குள் நொறுங்கி உடைந்துப்போனாள். சின்னவயதில் ‘நீ பெரிவளானா என்னவாகப்போற? என்று அன்பொழுகக் கேட்ட அதே அத்தாதான் இப்போது “படித்தவரைக்கும் வரைக்கும் போதும்” என்கிறார். அம்மாவிடம் கெஞ்சினாள். பலனில்லை. அண்ணன்களிடம் உதவி கோரினாள். “அம்மா அத்தா சொல்படி கேட்டு நடந்துக்கோ”, என்றான் பெரிய அண்ணன் அப்துல் பாஸித். அவனுக்கென்ன? பெரியமனுஷன் தோரணையில் சொல்லிவிட்டான். “அவன் மட்டும் காலேஜ் போய் படிக்கலாமாம்”.

சின்ன அண்ணன் அப்பாஸ் மட்டும் ஓரளவுக்கு அம்மாவிடம் பேசிப்பார்த்தான் “யாஸ்மின் இன்னுங்கொஞ்சம் படிக்கட்டுமேம்மா” .ஆனால் அவனும் அம்மாவின் ஒரே பதிலில் சுருண்டு போனான். “ஒனக்கு ஒண்ணும் தெரியாது அப்பாஸூ, நீ ஒழுங்கா படிக்கற உருப்படற வழியப் பாரு”.

செந்தில்நாதன் வாத்தியார் கூட வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பேசிப் பார்த்தார்: “யாஸ்மின் நல்லாப் படிக்கிற பொண்ணாச்சேம்மா, அவ எங்க பள்ளிக்கூடத்துக்கு கெடச்ச சொத்து, அவங்க அப்பாரு கிட்ட நான் சொன்னதா சொல்லி மேக்கொண்டு படிக்க வைங்கம்மா”

“இல்லீங்க ஸார், அவிங்க அத்தா தெளிவா எழுதிப்புட்டாங்க, நான் ஒண்ணும் செய்றதுக்கில்ல”

அத்தா அடுத்த மாதம் ஊர் வரவிருப்பதாக கடிதம் எழுதியிருந்தார். இந்த முறை ‘ முடித்து’ க்கொண்டு வருவதாக அம்மா பக்கத்து வீட்டு பத்மா அக்காவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

ஊர் வந்துவிட்ட அத்தாவிடம் யாஸ்மின் கேட்கவும் செய்தாள்: “ஏந்த்தா, இனிமே பயணம் போவ மாட்டீங்களா?” “ஆமம்மா, பதினெட்டு வருஷம் ‘ஸஃபர்’ (பயணம்) செஞ்சாச்சு. ஒங்கல்யாணத்த நல்லபடியா முடிச்சுட்டேன்னா, என் கடமை முடிஞ்சுடும். அண்ணன்களும் தலயெடுத்திடுவாங்க”

கனிவான அத்தருணம் பார்த்து யாஸ்மின் கேட்டாள்: “அத்தா, ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே?”

“சொல்லும்மா”

“அண்ணன்கள படிக்கவைக்கிறீங்களே அத்தா, என்ன ஏன் படிக்க வெக்கல? – கல்விங்கறது நமக்கு காணாமல் போன வாகனம் போல – எங்கு கண்டாலும் தேடி எடுத்துக்கொள்ளுங்கன்னு” நாயகம்(ஸல்) ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும் சேத்து பொதுவாத்தான சொல்லியிருக்காங்க”, மகளின் புத்திக்கூர்மையை மெச்சும் வகையில் வாஞ்சையுடன் தலையைத் தடவிக்கொடுத்தவராக, “நீ சொல்ற தெல்லாம் உண்மதாம்மா, ஆனா, படிச்ச ஒரு பொண்ணுக்கு அத விட படிச்ச மாப்ளயாப் பாத்து தேடணும்மேம்மா, இதெல்லாம் ஒனக்கு இப்ப புரியாதும்மா” என்று சொல்லிவிட்டு மேலும் பேச்சை தொடரவிரும்பாதவராக அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

போன வாரம் கூட ஒரு சம்பவம் நடந்தது: எப்போதும் யாஸ்மினை காணவரும் சின்னவயதுத் தோழி சங்கீதா உள்ளே வரும் போதே கத்திக்கொண்டே வந்தாள். “டீ யாஸ்மின், சேதி தெரியுமா, நம்ம செவப்பி பானுவும் மேட்டுத்தெரு ரஹ்மத்துல்லாவும் ஓடிப் போயிட்டாங்களாமில்ல?” சொல்லிக்கொண்டே வீட்டின் உள்ளே வந்தவள், சாய்வு நாற்காலியில் அத்தாவைக்கண்டு நாக்கை கடித்துக்கொண்டாள். திரும்பி யாஸ்மினைப் பார்த்த அத்தாவின் பார்வையோ ‘பாத்தியா, நான் சொல்லலை?’ என்பது போல இருந்தது.

அடுத்த நாள் அதிகாலைத் தொழுகை முடித்து நண்பர்களுடன் ஒரு ‘நடை’ முடித்துவிட்டு வந்த அத்தா மிகுந்த மகிழ்வாக காணப்பட்டார். அம்மாவை அழைத்தபடியே வந்தவர் வழக்கமான சாய்வு நாற்காலிக்கு போனார். “அந்த பேப்பர எடுத்துட்டு வா புள்ளே”.

செய்திப்பத்திரிக்கையையும் தேனீரையும் கொண்டுவந்த அம்மா கேட்டாள்:

“என்னங்க, ரொம்ப சந்தோஷமாயிருக்காப்ல தெரீதே?”

“ஆமாடி, நம்ம ஷேக் தாவூது ஹாஜியார் பையன் நூருல் அமீன் துபாய்லருந்து லீவுல வந்திருக்கானாம். இந்த முறை கல்யாணம் பண்ணி வச்சிரணும்னு அவங்க வீட்ல நல்ல பொண்ணா பாத்திட்டிருக்காங்களாம். அவன் என்னடான்னா, நம்ம யாஸ்மின கேட்டுப்பாருங்கன்னு அவங்க அத்தாகிட்டேயே மனசத்தொறந்து சொல்லிட்டானாம் . அவரே ஜமாத் முடிஞ்சப்புறம் என்ன கூப்பிட்டு சொன்னார்னா பாத்துகோயேன்”

“அல்ஹம்துலில்லாஹ்” என்றாள் அம்மா. “அமீன் நல்ல பையங்க! ஒரு கெட்ட சகவாசமுமில்ல, நல்ல குடும்பம், மரியாதையான ஜனங்க”

“நபிவழிப்படி நடக்கிற பையன், துபாய்ல நல்ல சம்பாத்தியத்துல இருக்கானாம் – வரதட்சணைலாம் ஒண்ணும் வேண்டாங்கறானாம். ஆனா, நாயகம்(ஸல்) சொன்னபடி, கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ண ஒருதரம் பார்த்து சம்மதம் கேட்கணும்கறானாம்” .

“நீங்க என்ன சொன்னீங்க?”

தேனீரை ருசித்துவிட்டு அத்தா சொன்னார்: “நல்லதுன்னு சொல்லிட்டேன், சாயங்காலமே வந்து பாக்கறதா சொல்லியிருக்காங்க”

சொன்னபடி மாலையே தன் பெற்றோருடன் வந்திருந்தான் நூருல் அமீன். முன்னைக்கு இப்போது சற்று பூசினாற் போலிருந்தான். மெலிதாக தாடி வைத்திருந்தான்.

பரஸ்பர குசல விசாரிப்புகளில் சில நிமிடங்கள் கரைய, கல்யாணத்துக்குப்பின் குடும்பத்தை துபாய்க்கு அழைத்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறதா என்றெல்லாம் ஞாபகமாக கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார் அத்தா.

ஷேக்தாவூது ஹாஜியார் சிறிதே கனைத்துவிட்டு, “எதுக்கும் பொண்ணுகிட்டே ஒரு வார்த்தய கேட்டு சொல்லிடுங்களேன்” என்றார்.

“கன்னிப்பொண்ணோட சம்மதம் அவளோட மவுனம்தான்னு நாயகமே சொல்லியிருக்காங்களே – என்னம்மா நான் சொல்றது?” என்றார் அத்தா, யாஸ்மின் இருந்த உள்ளறைப்பக்கம் குரல் கொடுத்தபடி.

யாரும் எதிர்பார்க்காதபடி சற்றே தலை குனிந்தவளாக வெளிப்பட்ட யாஸ்மின், முகம் தவிர முழுதும் மூடியவண்ணம் அணிந்திருந்தாள். சன்னமான குரலில் “ஆனா…..” தலை நிமிர்ந்து சொன்னாள் “ஒரு கண்டிஷன்!”

“……………………….”

“……………………….”

“……………………….”

முகமெங்கும் வினாக்குறிகள் முளைக்க, எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்திருக்க, யாஸ்மின் தீர்க்கமாகவும் தெளிவாகவும் அமைதியாகவும் சொன்னாள்:

“கல்யாணத்துக்கு அப்புறம் நான் படிப்பை தொடர்றதுக்கு அனுமதிக்கணும்”.

நபிவழியைக் கடைபிடிக்க வேண்டும் என்ற மன உறுதி கொண்ட நூருல் அமீன் சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தான். அவன் முகத்தில் தான் தேடிய ஒரு முழுமையான இஸ்லாமிய பெண்ணை தனது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட மகிழ்ச்சியுடன் கூடிய பொலிவு தென்பட்டது.

வெளியே அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்… என இஷா பாங்கு சத்தமாகக் கேட்க தொடங்கியது.

ஆக்கம்: பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன்
வெளியிடப்பட்டது: 07 ஆகஸ்ட் 2006 

தொடர்புடைய சிறுகதைகள்
தாய் மாமா!
முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. துரையின் மகள் லாவண்யா, சர்வ மங்கள அலங்காரங்களுடன், மண மேடையில் அமர்ந்திருந்தாள். மணமகன் வந்து கொண்டிருந்தான். ""துரை... உன் மாமா வர்றாருப்பா...'' யாரோ கூறினார். காதில் விழாதது போல் இருந்தான் துரை. ""என்னங்க... பெரியவர் வந்திருக்கார்...'' என்றாள் மனைவி கமலா. ""ம்ம்...'' ...
மேலும் கதையை படிக்க...
கோரைக் கிழங்கை சுண்டு விரல் நகத்தால் ஏழு தலைமுறையாய் விடாது தேடும் கொழுவன் கதை பத்தாம் பருவத்தில் எனக்குச் சொல்லப்பட்டு என் ரத்தத்தின் நிறமாகி கலந்துவிட்டது. கதைகள் எப்பொழுதும் கதைகளாகவே இருப்பதில்லை. கதைக்குள் நிழலாக நடப்பவர்கள் திடுமென்று ஒருநாள் உயிர்பெற்று எழுந்து ...
மேலும் கதையை படிக்க...
பேரூர் வந்து, பேருந்தை விட்டு மெல்ல இறங்கிய மீனாட்சி கோயில் வாசலில் கண்ட கூட்டத்தை கண்டு மிரண்டாள். எப்படி வாகன நெரிசலை கடந்து கோயில் வாசலை அடைவது என்று திகைத்தவள் பக்கத்தில் ஒரு குடும்பம் இவளைப்போல் பாதையை கடக்க முயற்சித்துக்கொண்டிருந்தது. அதில் ...
மேலும் கதையை படிக்க...
என்னைப் பின் தொடர்வது தான் லட்சியமெனில் முயன்று பார்க்கலாம். நான் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதை விமர்சிக்கப் போவதில்லை என்றால் மட்டும். அறையின் மூலையிலிருந்த எழுத்து மேசையில் கவிழ்த்து வைக்கப்பட்ட புத்தகங்களின் இடையிலிருந்த செல்பேசி அலறியது. படுக்கையிலிருந்து எழுந்து நகரும் பொழுது அவிழ்ந்திருந்த தனது கைலியை சரி செய்து கொண்டு மேசையை ...
மேலும் கதையை படிக்க...
நம் எல்லோருக்குமே சில விஷயங்களில் நம்மையறியாமலேயே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அதே ஈர்ப்பு ஒரு காலகட்டத்தில் பைத்தியக்காரப் பசியாக மாறிவிடும். எந்தப் பசியும் தவறல்ல, அது அடுத்தவர்களைப் பாதிக்காத வரையில்... சிலருக்கு பக்திப் பசி; பலருக்கு பணப் பசி; பாலியல் பசி; குடிப் ...
மேலும் கதையை படிக்க...
தாய் மாமா!
கோரைக் கிழங்கு தேடும் பெருவனக் கொழுவன்
பிராப்தம்
தொட்டிமீன்கள்
வீட்டுப் பசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)