வெளிச்சத்தின் நிழல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 6,524 
 

வாசலில் வந்து நின்றவளை ‘வா’ வெனச் சொல்லக் கூடத் தோன்றவில்லை ராமசர்மாவுக்கு. அவளைப் பார்த்ததுமே பத்துவருட நினைவுகள் தொடர் நிகழ்ச்சியாகத் தோன்றின மனக்கண்முன்.
சிவகாமி அவர் வீட்டிற்கு வந்தபொழுது இருபது வயதுதான் இருக்கும். வெட வெடவென உடல்வாகு, சிவந்த நிறம் கரப்பான் பூச்சியைக் கண்டால் கூடப் பயந்து அலறும் சுபாவம்.

அவளின் பயந்த சுபாவத்தைப் புரிந்தோ என்னவோ அம்மா, மாமியார் கெடுபிடிகளையெல்லாம் காண்பித்தாள். சர்மா அப்பாவை இளவயதிலேயே இழந்ததினால் அவருக்கு எல்லாமும் அம்மாதான். அம்மா கிழிச்சகோட்டைத் தாண்டமாட்டார். தவறோ, சரியோ அம்மாவை எதிர்த்து ஒருவார்த்தை பேசமாட்டார்.

அவரின் பலவீனத்தைப் புரிந்து வைத்திருந்த அம்மா மருமகளைச் சதா ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாள். சர்மாவின் எல்லையற்ற அன்பாலும், வேண்டுதலாலும் சிவகாமி பல்லைக் கடித்துக்கொண்டு மாமியார் கொடுமைகளைப் பொறுமையுடன் சகித்து வந்தாள்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும் மாமியார் கொடுமைகளை அனுபவித்தாள். பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா? பொறுக்கமுடியாத நிலையில் சர்மாவிடம் தனிமையில் அழுது புலம்புவாள் சிவகாமி.

அம்மாவையும் கண்டிக்க முடியாமல், மனைவியையும் சமாதானப்படுத்த முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் துடித்துப்போவார் சர்மா.

சின்னச் வின்ன விஷயங்களைக் கூடப் பெரிது படுத்தி மகன் முன் சொல்லி ஆர்ப்பாட்டமே செய்தாள் அம்மா.

காலம் மாறும் என்று எண்ணியெண்ணிச் சலிப்படைந்த சிவகாமி ஒருநாள் காலை யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டே ஓடிவிட்டாள்.
அவள் சென்றபின்பும் அம்மா அவளை வசைபாடுவதை விடவில்லை. ஓடுகாலி குழந்தைகளை நினைச்சுப்பார்த்தாளா? அவ ஒரு பெண்ணேயல்ல என்றெல்லாம் திட்டிக்கொண்டிருந்தாள்.

தன் கையாலாகாத் தனத்தால்தானே சிவகாமி ஓடிப்போனாள் என நினைத்து நினைத்துக் கலங்கினார் சர்மா.

ஒரு பொருளின் மதிப்பை அதை இழந்த பின் தான் அனைவருமே உணருவர். அதற்கு சர்மா மட்டும் விலக்கல்ல.

அம்மா எங்கேப்பா என்று கேட்கும் மகன்களுக்குப் பதில் சொல்லமுடியாமல் திணறும் நேரத்தில் அம்மா வந்து அம்மா செத்துப்போயிட்டா! என்று கூசாமல் சொல்வாள். எல்லாவற்றையும் பார்த்தும் அப்பொழுது கூடப் பதில் சொல்லாமல் மனதிற்குள்ளே அழுவார் சர்மா. அப்படி ஒரு பயபக்தி தாயிடம்.

இன்று வந்துவிடுவாள், நாளை வந்து விடுவாள் என்றெல்லாம் கனவு கண்டதுதான் மிச்சம். சிவகாமி வரவேயில்லை.

அம்மா சொல்வது போல் ரயிலில் விழுந்து உயிரைப் போக்கிக்கொண்டிருப்பாளோ, பயந்த சுபாவமாயிற்றே, சாப்பாட்டிற்கெல்லாம் என்ன செய்கிறாளோ என்றெல்லாம் கற்பனை செய்து தவித்துப்போவார் சர்மா.

நாள் ஆக ஆக மனைவியைப்பற்றிய கவலையில் மாலை அலுவலகம் விட்டதும் சர்மா தெரிந்த இடமெல்லாம் சென்று விசாரிப்பார்.
தெரிந்த நண்பர்கள் வெளியூர் சென்றாலும் மனைவியைப்பற்றித் தகவல் கொடுக்கும்படியும் கெஞ்சுவார். பலன் தான் கிடைக்கவில்லை.
காலம் உருண்டோடியது.

மனைவியின் நினைவு நீறுபூத்த நெருப்பாக இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ராட்சஷத்தனமாக உழைத்தார், உழைப்பென்றால் அப்படி ஓர் உழைப்பு!

அதற்குத் தகுந்த மாதிரி பையன்கள் இருவரும் குடும்பப் பொறுப்புணர்ந்து நன்றாகப் படித்து நல்ல வேலையையும் தேடிக்கொண்டார்கள். அம்மா பேரன்கள் மனதில சிவகாமியைப் பற்றி விஷத்தை ஊன்றிவிட்டுத் தான் மறைந்தாள்.

அம்மா மறைவுக்குப் பிறகு சர்மாவுக்கு சிவகாமியைப் பற்றிய நினைவு அடிக்கடி வந்து அலைக்கழித்தது.

உயிருடன் இருந்திருந்தால் பிள்ளைகளின் நினைவு கூடவா இல்லாமல் இருந்திருக்கும்? இறந்துதான் போய்விட்டாள் போலிருக்கிறது, பாவம் சிவகாமி! அம்மாவிடம் ரொம்பத்தான் புண்பட்டுப் போய்விட்டாள். நியாயத்தைத் தட்டிக்கேட்கக் கூட எனக்குத் துணிவில்லாமல் போனது ஏன்? அவளும் மனுஷி தானே! என்னிடம் முறையிட்டும் பலனில்லாமல் போனதால்தானே ஓடிப்போனாள். அவள் அப்படி ஓடிப்போனதற்கு முழுக்காரணம் அம்மாவும் நானும் தானே!

அவரின் மனசாட்சி வயதாக, வயதாக அவரை உறுத்திற்று.
மனiவியைப்பற்றிய கவலைகள் ஒருபுறமிருந்தாலும் கடமையை அவர் என்றுமே மறந்ததில்லை. பிள்ளைகளுக்கு அவர்கள் இஷ்டம்போல் கல்யாணம், கார்த்தி எல்லாம் செய்து வைத்தார்.

பிள்ளைகள், மாட்டுப்பெண்கள் எல்லோரும் சம்பாதித்தார்கள். சம்பளப் பணத்தை அப்படியே சர்மாவிடம் கொண்டு வந்து தந்தார்கள்.

சர்மா செட்டும் கட்டுமாய்ச் செலவுபண்ணி இன்றைக்கு ஊரிலேயே பெரியமனிதராக முன்னுக்கு வந்துவிட்டார்.

அன்றைக்கு அவரைப் பார்த்துக் கேலி செய்தவர்கள் கூட இன்றைக்கு “இருந்தால் சர்மாவைப்போல இருக்கணும்” என்று புகழ்ந்தார்கள்.
வேறென்ன வேண்டும் அவருக்கு?

குடும்பம் பூவும் பிஞ்சுமாய், காயும் கனியுமாய்ப் பூத்துக் குலுங்குவதைப் பார்த்துக்கொண்டே நிம்மதியால் கண்ணை மூடிவிட்டால் போதுமென்றிருந்தது. பேரன்களின் அன்புப் பிடியில் சிவகாமியைக் கூட மறந்துதான் போயிருந்தார் சர்மா.

இந்த நிலையில்தான் அவர் நிம்மதியைக் குலைப்பதற்கென்றே வந்து நிற்கிறாள் சிவகாமி.

தலை நரைத்து, உடல் இளைத்து, முகத்திலெல்லாம் சுருக்கம் நிறைந்து, செத்துப்போய் விட்டிருப்பாள் என்று நினைத்திருக்கையில் ……….

“உங்களுக்கு மகத்தான துரோகம் பண்ணிவிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க. உங்ககால்லே விழுந்து அழுது என் பாவத்தைக் கழுவிக்கணும்னு ஆசைப்படறேன். இனிமே ரொம்ப நாள் இருக்கப்போறதில்லை நான். மீதி இருக்கிற அந்தக் கொஞ்ச நாளாவது உங்ககூட இருக்கனும்னு ஆசைப்படறேன். பேராசைதான், ஆனால் கடைசி ஆசை, இது’ நான் உங்களை விட்டுப் போனதிலேயிருந்து பாதுகாப்பான இடத்தில்தான் இதுவரை கௌரவமாக இருந்தேன், என் புனிதத் தன்மையை நீங்கள் நம்பினால் மட்டுமே என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” உருக்கமாகப் பேசிய சிவகாமியை இமைக்காமல் பார்த்தார் சர்மா.

தெருவாயிலில் பேச்சரவம் கேட்கவே உள்ளிருந்து வேகமாக வந்தனர் சேகரும், பாலனும்.

“யாரப்பா இது?!” வியப்புடன் கேட்டனர்.

“இவள் தான் உங்கள் தாயார்…”

“ஓ. ஓடிப்போன அம்மாவா? இப்பொழுது எதற்காக வந்திருக்கிறார்களாம்?”

“கடைசிகாலத்திலாவது என்னோடு இருக்கப் பிரியப்படுகிறாள்”

“இந்தக் கரிசனம் ஓடும் முன்பு எங்கேபோனது? இது நாள்வரை நாமெல்லாம் இருக்கிறோமா, இல்லையா என்று கூட நினைக்கவில்லை. இப்ப என்ன உறவு வேண்டியிருக்கு? உடம்பிலே ரத்தத் திமிர் இருக்கிறவரை ஆடற ஆட்டமெல்லாம் ஆடிவிட்டுக் கடைசியிலே ஒண்ணும் முடியாதபோது பழைய கணவன் வேணுமோ? எந்த முகத்தோடு இங்க வந்தீங்க? அப்பா அவங்க முகத்திலே விழிக்கிறதே நமக்குப் பாவம்பா, விரட்டிவிடாம மௌனமா உட்கார்ந்திருக்கீங்களே, சபலமா?”

இரண்டு மகன்களும் மாற்றி, மாற்றி திட்டினார்கள்.

சிவகாமிக்கும் அவர்கள் கோபத்தின் நியாயம் புரிந்தது. ஆனால்… தன்னை புனிதத்துவம் அற்றவள் என்று நினைப்பதைத்தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“போதும்டா, போதும். நான் இங்க வந்தது தப்புத்தான். என் வெளிச்சத்திலே விழுந்த நிழலே என் வெளிச்சத்தைச் சாப்பிட்டுட்டு, என்னை வெளியிலே நிறுத்திடுச்சே! அதைத்தான் என்னாலே தாங்கிக்க முடியலே, உங்க மனசிலே விஷத்தை ஊன்றியது யாருன்னு எனக்குப் புரியலே. நான் உங்களையும், அப்பாவையும் விட்டு ஓடிப்போனது மட்டும்தான்டா என் வாழ்க்கையிலே இருட்டுப்பகுதி, மற்றபடி நான் இருட்டானவள் அல்ல. அந்த உண்மை உங்களுக்கு புரிஞ்சா போதும். என்னை நீங்க ஏத்துக்காவிட்டாலும் பரவாயில்லை புனிதமானவள்னு நினைச்சாப் போதும். என்னங்க, பேசாமலேயே உட்கார்ந்திருக்கீங்க, என்னைப்பற்றிய உண்மைகளைச் சொல்லுங்க பிள்ளைகள்கிட்டே, இப்பவும் மௌனம் சாதிச்சு என்னைப்பற்றிய பொய்யை உண்மையாக்கிடாதீங்க, பேசுங்க கதறினாள் சிவகாமி.
சர்மா உணர்ச்சிவசப்படாமல் திடமான குரலில் சொன்னார் “சிவகாமி உள்ளே வா”

“என்னப்பா இது. இத்தனை வருஷமா எங்கேயிருந்தாங்களோ, அவங்களைப் போய் உள்ளே வரச்சொல்றீங்களே”

“இந்த ஊரும் உலகமும் என்ன சொல்லும்?” சேகரும், பாலனும் அசூயைப்பட்டனர். சர்மா பேசினார்.

“இதைப்பாருங்கடா, உங்களுக்கு அம்மாவைப்பற்றி தெரிஞ்சதைவிட எனக்கு என் மனைவியைப்பற்றி நல்லாவே தெரியும். இந்தக்குழப்பத்துக்கெல்லாம் மூலகாரணம் உங்க பாட்டி, அதாவது என் அம்மா தான்! அம்மா உங்க மனசிலே விஷத்தை ஊன்றின போதெல்லாம் பேசாமல் இருந்துட்டு இப்ப விளக்கினால் உங்கம்மாவை நீங்க சந்தேகப்பட்ட மாதிரி என்னைப்பற்றியும் சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவீர்கள்.

உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. நீங்கள் இந்தக் கால இளைஞர்கள். உங்களது பேச்சுக்கும், செயலுக்கும் தொடர்பு கிடையாது. புதுமை புரட்சின்னு பேசுவீங்களே தவிர உங்களுக்கே உங்க மேலே நம்பிக்கை கிடையாது. ஆனால் நான் என் மனைவி மீது பரிபூரண நம்பிக்கை வைத்திருககிறேன். இனிமேல் என் மனைவி என்னுடன் தான் இருப்பாள். உங்களுக்கு இஷ்டமில்லையென்றால், நீங்கள் வேறுவீடுபார்த்துக்கொண்டு போகலாம். “உறுதியொடு பேசி முடித்தார்” சர்மா.

பேச்சற்று நின்றுகொண்டிருந்தனர் சேகரும், பாலனும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *