வெற்றியை பெற்றுத்தருவது வேறொன்றுமில்லை

 

நிரோசன் மிகத்துடிதுடிப்பான சின்னக் குட்டிப்பயல். இருந்த போதும் அவன் அம்மா அவன் சிறுவனாக இருக்கும் போதே இறந்து போய்விட்டபடியால் அவனது சுறுசுறுப்பு பாதி அடங்கிப் போய்விட்டது. அவன் அம்மா இல்லாத பிள்ளையாக இருந்ததால் அவனது அப்பா அவனை இரட்டிப்புக் கவனமெடுத்து கண்ணும் கருத்தமாக பார்த்துக் கொண்டார்.

எல்லாச் சிறுவர்களும் இயல்பாகவே கிரிக்கட் விளையாட வேண்டுமென்று ஆர்வம் காட்டிய போதும் நிரோசன் இதற்கு எதிர்மாறாக உதைபந்தாட்டம் மீது அக்கறை கொண்டிருந்தான். ஊரில் எங்காவது உதைப்பந்தாட்ட நிகழ்ச்சி நடக்குமாயின் அங்கே போய் முன்வரிசையில் அமர்ந்திருப்பான் அவனது அப்பாவும் அவனைஉற்சாகப்படுத்துவதற்காக அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அழைத்துக்கொண்டு போவார்.

நிரோசன் பாலர் பள்ளியை நிறைவு செய்து உயர் நிலை பாடசாலைக்குச் செல்லத் தொடங்கிய போது அவன் அவர்கள் வகுப்பு மாணவர்களியே மிகச்சிறிய உருவம் உள்ளவனாக இருந்தான். அவனது இந்தத் தோற்றக்குறைபாடு அவனை ஏனைய மாணவர்களுடன் போட்டிப் போட்டு உதைப்பந்தாட்ட அணியில் சேர்வதற்குத் தடையாக இருந்தது. எனினும் அவன் உதைபந்தாட்ட பயிற்சிக்கு அழைக்கப்பட்டபோதெல்லாம் தவறாமல் சமூகமளித்து மிக ஆர்வத்துடன் கலந்து கொள்வான் எனினும் பந்தயங்கள் இடம் பெற்ற போதெல்லாம் அவனது பயிற்சியாளர் அவனை அணியில் விளையாட அனுமதித்ததேயில்லை.
ஆனாலும் இதனாலெல்லாம் அவன் ஒரு போதும் மனத்தளர்ச்சியடைந்ததே கிடையாது. எப்போதும் போல அவர்களின் அணி பந்தயத்தில் கலந்து கொண்டு விளையாடும் போது அவன் முதல் வரிசையில் அமர்ந்திருந்து கைதட்டியும் கோஷமிட்டும் அவர்களின் அணியினரை உட்சாகப்படுத்துவான். அதே போல் அவனது அப்பாவும் அவனுக்கருகில் இருந்து கொண்டு அவனை உற்சாகப்படுத்துவார்.

நிரோசன் அவர்கள் பாடசாலை உதைப்பந்தாட்ட அணியின் ஒரு அங்கத்தவனாக இருந்தபோதும் அவன் இதுவரை எந்த ஒரு பந்தயத்திலும் விளையாட அனுமதிக்கப்படவில்லையே என்பது அவனைவிட அவன் தந்தையையே பெரிதும் பாதித்தது. ஒவ்வொரு முறையும் பயிற்சிகள் முடிவடைந்து அணித் தெரிவு செய்யப்பட்ட போது அவனது பெயர் பட்டியலின் இறுதிப் பெயராகவே இடம் பெற்றது. அவன் அவ்விதம் அந்த பட்டியலில் இறுதிப் பெயராக இடம்பெற்றதற்குக் காரணம் அவனே. அந்த அணியினர் சேர்ந்து போன போதெல்லாம் அதனை உற்சாகத்துடனும் உயிர் துடிப்புடனும் செயற்படுவதற்கு காரணமாக அவனே அமைந்தான். எனவே அவனது பெயரின்றி அந்த அணி முழுமை பெறாது என அவனது பயிற்றுவிப்பாளர் கருதினார்.

அவனது உயர் நிலைப்பள்ளி வாழ்க்கை முற்றுப்பெற்று அவன் பட்டப்படிப்பு படிப்பதற்காக பல்கலைக்கழகத்துக்கு தெரிவானான். அங்கும் கூட அவன் பல்கலைக்கழக உதைபந்தாட்ட குழுவில் இடம்பெறத்தவறவில்லை. இருந்தும் அங்கும் கூட அவனுக்கு பந்தயத்தில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அங்கும் அவன் உற்சாகத்தைத் தளரவிடாமல் மூன்று ஆண்டுகள் கழித்து விட்டான். அவனது பல்கலைக்கழக வாழ்க்கை முற்றுப்பெற இன்னும் ஒரு வருடமே மீத மிருந்தது. அந்த ஆண்டிலாவது தனது கனவு நனவா குமா? என்று அவன் தீவிரமாக தனது முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

அப்படி இருக்கும் போது தான் அவனது குழு பயிற்சியாளர் அந்த செய்தியை அவர்களிடம் தெரிவித்தார். இன்னும் மூன்று மாதத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டப்போட்டி நிகழவிருக்கின்றதென்றும் அதற்காக கடுமையாகப் பயிற்சி செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அவர்களது அணியினரும் இந்த செய்தியை கேட்டு மிகுந்த உற்சாகத்துடன் பயிற்சிகளில் ஈடுபட்டனர். நிரோசனும் தனது அணியினர் வெற்றிபெற வேண்டும் என்ற அவாவில் தன்னாலான சகல ஒத்துழைப்பையும் நல்கினான். இருந்தாலும் பந்தயத்தில் அவனை விளையாட அனுமதிப்பது தொடர்பில் பயிற்றுவிப்பாளர் தயக்கம் காட்டிக் கொண்டுதான் இருந்தார். அவர்கள் எதிர்பார்த்தபடி அனைத்துப்பல்கலைக்கழக உதைப்பந்தாட்டத் தொடர் ஆரம்பமானது. அவர்கள் அணி கால் இறுதி அரையிறுதி என முன்னேறியது.
நிரோசன் முன்வரிசை நாட்காலியில் அமர்ந்து கத்திக் கூச்சலிட்டு உற்சாகப்படுத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். இறுதியில் வெற்றிபெற்ற இரண்டு அணிகளுக்கான சாம்பியன் கிண்ணத்துக்கான போட்டி அடுத்த சனிக்கிழமை நிகழ்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இச்சந்தர்ப்பத்தில் தான் அந்த எதிர்பாராத சோக நிகழ்வு அவன் வாழ்க்கையில் ஏற்பட்டது அன்று அவன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களது பயிற்றுவிப்பாளர் ஒரு தந்தியைக் கொண்டு வந்து கொடுத்தார். அவன் ஆச்சரிய மேலீட்டால் அது என்னவெனப் பிரித்துப்பார்த்தான்.

அதில் காணப்பட்ட செய்தியைப்பார்த்து அதில் காணப்பட்ட செய்தியைப்பார்த்து அவனுக்கு இந்த உலகமே இரண்டாகப் பிளந்து விட்டதைப் போலிருந்தது. அந்தத்தந்தி அவனது அன்பு அப்பா அவனைவிட்டு பிரிந்து போன துன்பச் செய்தியை கொண்டுவந்திருந்தது. இறுதிவரை அவனது அப்பா அவன் உதைப் பந்தாட்ட பந்தயம் ஒன்றில் விளையாடுவதைப் பார்க்காமலேயே போய்ச் சேர்ந்து விட்டார். என்பதே அவனது பெரிய சோகமாக இருந்தது. அவனது சோகத்தைக் கண்டு அவனைத் தேற்றிய பயிற்றுவிப்பாளர் லீவெடுத்துக்கொண்டு சென்று வரும்படியும் சனிக்கிழமை நடக்கப் போகும் இறுதிச்சுற்றுப்போட்டிக்கு அவன் வராவிட்டால் பரவாயில்லை என்றும் கூறினார்.
அவனை இப்போது இரண்டு சோகங்கள் ஆக்கிர மித்துக் கொண்டன. ஒன்று அவன் அப்பா இறந்தது. மற்றது அவனால் இறுதிச் சுற்றுப்போட்டிக்கு நிற்க முடியாமல் போனமை இந்த இரண்டு சோகங்களையும் தாங்கிக் கொண்டு அவன் வீட்டுக்குப் புரப்பட்டுச் சென்றான். அவன் போன பின்னர்தான் அவனது அணியினர் அவன் தமது அணியின் உற்சாகத்துக்கு எவ்வளவு முக்கியமானவன் என்பதை உணர்ந்தனர். சனிக்கிழமையன்று இறுதிச்சுற்றுப் போட்டி ஆரம்பித்த போது நிரோசனின் அணியினர் உற்சாகமின்றியே போட்டி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களின் பயிற்றுவிப்பாளர் சனிக்கிழமையன்று நிரோசனை வரவேண்டாமென்று சொன்னது தவறோ என்று நினைத்தார்.

சனிக்கிழமையன்று நிரோசனின் அணியைப் பொறுத்தவரையில் எல்லாமே மந்த கதியிலேயே ஆரம்பமாயின அவர்கள் எதிரணியினரைவிட பத்துபுள்ளிகள் பின் தங்கியே விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட்டு இடைவேளை இடைவேளையைத்தாண்டி முன்னேறிக்கொண்டிருந்தது.

அப்போது ஒரு உருவம் உதைப்பந்தாட்டப்போட்டிகள் நடந்து கொண்டிருந்த மைதானத்தின் விளையாட்டு வீரர்கள் தங்கி ஓய்வெடுத்து தயாராகும். அறை நோக்கி விரைந்தது. அது அவசர அவசரமான தன் அணியின் மேற்சட்டை, காற்சட்டை, காலுறை, காலணி என்பவற்றை அணிந்து கொண்டு மைதானத்தை நோக்கி விரைந்தது. அது வேறுயாருமல்ல. நிரோசன் தான் அவனது பிரசன்னமே அவனது அணியினர் மத்தியில் கடல் அலையென ஒரு கோசத்தை எழுப்பியது. கரகோசம் வானைப் பிளந்தது. அவன் நேரே தமது பயிற்றுவிப்பாளரிடம் சென்று தன்னை பந்தயத்தில் விளையாட அனுமதிக்குமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொண்டான்.

வயிற்றுவிப்பாளர் ஒருமுறை அவனை ஏற இறங்கப்பார்த்தார். அவர்கள் அணியினது நிலையையும் யோசித்தார். பின்னர் மற்றொருவனுக்கு பதிலாக அவனை அனுப்பினார். அவன் மைதானத்தில் மின்னலென பாய்ந்து தன் நிலையை அடைந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் யாராலும் அவனைத் தடுக்க முடியவில்லை. அவன் எதிரணியினரால் தனக்குப் போடப்ப ட்ட தடைகளையெல்லாம் தன்புத்தி சாதுரியத்தாலும் விளையாட்டுத்திறத்தாலும் முறியடித்து முன்னேறி தம் அணியினருக்குப் பற்றாக்குறையாக இருந்த பத்துப்புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்து சரிசமமாக்கினான். நிமிடத்துக்கு நிமிடம் அவனது விளையாட்டுத் திறமையைப் பாராட்டி வானமெங்கும் ஒலியலைகள் எழுந்தன.

நிரோசன் ஓடினான், பாய்ந்தான். குறுக்கும் நெருக்குமாக பந்தை கொண்டு சென்றான். பந்தயம் இறுதிக் கட்டத்தை நெருங்கும் தறுவாயில் அந்த மேலதிக கோலைப்போட்டு தன் அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தான். அவன் முதல் முதலாக பந்தயத்தில் ஆடுகிறான் என யாராலும் சொல்ல முடியாது. அவன் வானத்து நட்சத்திரம் போல் ஜொலித்தான். ஆட்டம் முற்றுப் பெற்றது. அவனது அணியினர் அவனை தோள் மேல்தூக்கி வைத்து கொண்டாடினர். பாராட்டி மகிழ்ந்தனர்.

எல்லாம் முடிந்துபோய் மைதானம் வெறிச்சோடியது. நிரோசன் மட்டும் இன்னமும் தனிமையில் அமர்ந்து எதனையோ யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது பயிற்றுவிப்பாளர் அவனிடம் சென்றார். அவன் தோளைத்தொட்டு திருப்பி “நிரோசன் என்னால் நம்ப முடியவில்லை. உன்னுள் இத்தனை திறமையா? எப்படி முடிந்தது” என்று கேட்டார்.

நிரோசனின் கண்களில் நீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. “என் தந்தை என் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தார். அவர் நான் பந்தயத்தில் விளையாடுவதை பார்த்து சந்தோசப்பட நினைத்தார். ஆனால் அவர் பார்வையில்லாதவர் என்பது பலருக்கும் தெரியாது. அவர் இறந்துபோய் விட்டார். இன்று நான் விளையாடியதை அவர் வானத்தில் இருந்து பார்த்திருப்பார். அவருக்கு நான் பந்தயத்தில் விளையாடுவதை காட்ட வேண்டுமென்று நினைத்தேன் அதுதான்” அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.

அவன் தன் பயிற்றுவிப்பாளரி ன் தோள்மீது சாய்ந்து கொண்டான். அவன் விசும்மல் அடங்க நீண்ட நேரம் பிடித்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
இயந்திரமயமான, அவசரமான இவ்வுலகத்தில் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் நம்மையறியாமல்தான் நிகழ்கின்றன. அநேகமான நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் திராணி நம் கைகளில் இல்லை. இந்திராணியும் சிவராஜாவும் கிராமத்தில் பிறந்து, கிராமத்தில் வளர்ந்து படித்து ஆளானவர்களாக இருந்த போதும் கிராமத்தில் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இரண்டுபேருமே கொழும்பில் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தால் அது அந்த வீட்டை சில காலத்துக்கு முடக்கிப் போட்டுவிடும். அந்த சோகத்தில் இருந்து மீள சில காலம் பிடிக்கும். அதுவே நமது அன்புக்குரியவர்களாக இருந்து விட்டால் அதில் இருந்து மீள்வது பகீரதப் பிரயத்தனமாகக் கூட இருக்கும். ...
மேலும் கதையை படிக்க...
இன்றைய நகர வாழ்க்கை பெரியோர்களுக்கு மாத்திரமல்லாமல் பிள்ளைகளுக்கும்தான் எவ்வளவு சலித்துப் போய்விட்டது. படிப்பு, படிப்பு எப்போதும் பரீட்சை மீதான நெருக்குதல்கள் என்பன சிறு வயதிலேயே அவர்களுக்கு மன அழுத்தங்களை கொண்டு வருகின்றன. இதற்கு கிருஷாந்தனும் விதிவிலக்கானவன் அல்ல. எனவே, அவர்கள் அடுத்த ...
மேலும் கதையை படிக்க...
ரவியும் பூர்ணிமாவும் அண்மையில் தான் திருமணம் செய்து கொண்டு சம்சார பந்தத்தில் இணைந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி விரைவிலேயே ஒரு குழந்தைச் செல்வமும் கிடைத்தது. குழந்தைக்கு தனுஷ் என்று பெயர் வைத்து சீராட்டிப் பாராட்டி கொஞ்சுவது அவர்களுக்கு பொழுது போக்காக இருந்தது. அதன் மேல் ...
மேலும் கதையை படிக்க...
அவ்வை அப்படி ஒரு தீர்மானத்தை எடுப்பதற்காக தன் மனதுக்குள் பகீரதப் பிரயத்தனம் எடுத்து போராடிக் கொண்டிருந்தாள் . நாளைக்குள் அப்படி தான் எடுத்த அந்த தீர்மானத்தை ஜெகனுக்கு தெரிவித்துவிட வேண்டும் என்று அவள் மனதுக்குள் மிக உறுதியாக இருந்தாள் . அந்த ...
மேலும் கதையை படிக்க...
பாசம் என்பது எதுவரை?
அம்மாவின் அளவற்ற அன்பு
உயிரைக் குடிக்கும் உல்லாசப் பிரயாணம்
குழந்தையின் உயிர் – தங்கம்
மனதில் விழுந்த கீறல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)