வெந்து தணிந்த காடுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 6,866 
 

பெட்ரூமின் மெல்லிய நைட் லாம்ப் வெளிச்சத்தில் சாருமதி மிகவும் அழகாகத் தெரிந்தாள். அவள் அணிந்திருந்த முக்கால் நைட்டி மாதிரியான சமாசாரம் கண்ணனைக் கிளர்ந்தெழச் செய்தது. அவன் உடல் சிலிர்த்தது. மெல்ல அவள் இடையைச் சுற்றி கையைப் போட்டான். அவளிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராதது கண்டு கை துணிவுடன் முன்னேறியது.

சட்டென்று உறக்கம் கலைந்து விழித்த சாரு “கண்ணன்! ப்ளீஸ் ஸ்டாப் திஸ்!” என்று வெடுக்கென்று சொன்னாள்.

கண்ணன் முகம் சுருங்கியது. “நான் உன் கணவன்!” என்றான்.

“இருந்தாலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லையா? வேண்டாம்”

“ஏன்? I need an explanation! இது நாலாம் தடவையா நீ ஒதுக்கற. நான் எதுவும் தப்பு செஞ்சிருந்தா சொல்லணும்.”

“நீ எந்தத் தப்பும் செய்யல. I am tired. That’s all.”

“இன்னிக்கு சண்டே! உனக்கு ரெஸ்டு தான். எங்கேயும் வெளிலேயும் போகல. என்ன டயர்ட்?”

“இதெல்லாம் என்னால explain பண்ண முடியாது”

இந்த வாக்குவாதம் முடிவில்லாதது என்று உணர்ந்த கண்ணன், கோபத்துடன் பெட்டை விட்டு இறங்கினான். கதவைத் திறந்து கொண்டு ஹாலுக்கு வந்து உட்கார்ந்து டிவியை ஆன் செய்தான்.

எதிர்புறமிருந்த அம்மாவின் பெட்ரூம் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. இவன் டிவி போட்ட சப்தத்தில் எழுந்து விட்டாள் போல. பாவம்.

“என்னடா கண்ணா, இந்த நேரத்துக்கு தூங்காம டிவி பாத்துகிட்டு இருக்க? என்ன விஷயம்?” என்று பரிவுடன் கேட்டாள் ஜானகி.

“ஒண்ணுமில்லைம்மா, அயாம் சாரி. டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல. நீங்க போய் தூங்குங்க. நான் பால்கனிக்கு போறேன். எனக்கு அர்ஜண்டா ஒரு போன் பேசணும்” என்று சொல்லியவாறே நிலைமையை சமாளித்து வெளியே சென்றான்.

அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த ஜானகி பெருமூச்செறிந்தவாறே தன் ரூமுக்குச் சென்றாள்.

பால்கனிக்கு சென்ற கண்ணன் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான். அவன் நினைவு சற்று பின்னோக்கிச் சென்றது.

அவனுக்கும் சாருவுக்கும் கல்யாணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது. கல்யாணம் ஆன உடனேயே இவன் ஆபீசில் இவனுக்கு தில்லி மாற்றல் வந்தது. இருவரும் தில்லியில் தனிக்குடித்தனம் இருந்தார்கள்.

கண்ணன் திருமணம் ஆகும் வரை அம்மா இவனோடுதான் தங்கள் சொந்த வீட்டில் இருந்தாள் அம்மா ஜானகிக்கு தில்லி குளிர் ஒத்து வராது என்பதால், அவள் சென்னையிலேயே இவன் அண்ணனுடன் சென்று தங்கி விட்டாள். இவன் அண்ணா சுந்தர் ஒரு வங்கியில் வேலையாயிருந்தான். ஒரு நாலு வயது பெண் குழந்தையும் உண்டு. அண்ணா நகரில் வீடு. இவர்களுக்கு அப்பா இல்லை.

தில்லியில் தனியாக இருந்த கால கட்டத்தில் கண்ணன் சாரு தாம்பத்யம் மிகவும் இனிமையாக கழிந்தது. ஒருவர் மற்றவர் துணை கொண்டு காமனை வென்றார்கள். இருவருக்குள்ளும் அன்னியோன்யம் மிகுந்தது.

அப்போது தான் போன மாதம் இவனுக்கு மீண்டும் சென்னை மாற்றல் வந்தது. அதில் இவனை விட சந்தோஷம் அடைந்தாள் சாரு. அம்மாவோடு இருக்கலாம் என்று சொல்லிச் சொல்லி மாய்ந்தாள்.

இறுதியாக சென்னை வந்து சேர்ந்தார்கள். வந்தவுடன் தங்கள் சொந்த வீட்டை சுத்தம் செய்து அங்கு குடியேறினார்கள். அந்த வீட்டுக்கும் அம்மாவுக்கும் சாரு பார்த்துப் பார்த்து செய்தாள். பர்னிச்சர், கர்டன்ஸ் என்று வீட்டுக்கு செலக்ட் செய்த சாரு, அம்மா ரூமுக்கு என்று ஒரு பெரிய டிவி, ஏஸி என்று வாங்கினாள்.

ஜானகியும் சாருவும் அம்மா மகள் போல பழகினார்கள். ஒன்றாக வெளியே செல்வது, கோவில் போவது, சேர்ந்து சமையல் செய்வது என்று அவர்கள் நட்பும் உறவும் பலப்பட்டது.

இப்படிச் சந்தோஷமாக போன வாழ்வில் சென்ற வாரம் புயல் வீசியது. சாரு திடீரென்று தாம்பத்யத்தில் விருப்பம் குறைந்தாள். என்ன காரணம் என்று கண்ணனுக்கும் புரியவில்லை. கேட்டதுக்குத் தான் இப்போ வாக்குவாதம், பால்கனி, சிகரெட்!

திரும்பி ஹாலுக்கு வந்தவன் சோபாவிலேயே படுத்துக் தூங்கிப் போனான்.

மறுநாள் வழக்கத்துக்கு மாறாக சீக்கிரமே ஆபீஸ் கிளம்பிச் சென்றான்.

சுமார் ஒன்பது மணிக்கு ஜானகி “ சாரு, கோவிலுக்குப் போகலாமடா?” என்று அன்பொழுகக் கேட்டாள்.

சரியென்று சொன்ன சாருவும் ஜானகியும் கோவிலுக்குச் சென்றார்கள். சுவாமி தரிசனம் முடிந்து பிராகாரத்தில் உட்கார்ந்தார்கள்.

சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அந்த மௌனத்தையும் ஜானகியே கலைத்தாள்.

“ சாரு! நான் இன்னைக்கு சாயந்தரமே சுந்தர் வீட்டுக்கு போறேன். எனக்கு அவன் குழந்தையைப் பாக்கணும் போல இருக்கு. நான் காலையிலேயே அவனுக்குப் போன் போட்டுச் சொல்லிட்டேன். அவன் பேங்க் முடிஞ்சு வந்து கூட்டிக்கிட்டு போவான்.”

ஜானகியின் வார்த்தைகளைக் கேட்ட சாருவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. “என்னால தான அம்மா?” என்று உடைந்த குரலில் கேட்டாள்.

“ ம்ம்ம் ஒரு வகைல உன்னாலதான். ஆனா எதிர்மறையாச் சொல்லல. நல்ல விதமாத் தான் சொல்றேன். எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்குடா. உங்க அப்பா அம்மா நல்ல விதமா வளர்த்தி இருக்காங்க. மத்தவங்க உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கறது எல்லாராலேயும் முடியாது.

ஆனா உனக்கு ஒண்ணு சொல்றேன் சாரு. கண்ணன் அப்பா போய் வருஷம் பத்து ஆச்சு. இந்தப் பத்து வருஷங்கள்ல எத்தனையோ போராட்டங்கள் த்யாகங்கள். இல்லைன்னு சொல்லல. ஆனா அத விட முக்கியமா ஒண்ணு நீ புரிஞ்சுக்கணும். நானும் அவரும் சுமார் பதினஞ்சு வருஷம் சந்தோஷமா தான் வாழ்ந்தோம். எந்தவித குறையும் அவர் எனக்கு வைக்கல. நானும் அவருக்கு வைக்கல.

இப்போ நான் வெந்து தணிஞ்ச காடும்மா. நா சொல்றது உனக்கு புரியறதுனு நெனைக்கறேன். இருந்தாலும், நான் எவ்ளோதான் எடுத்துச் சொன்னாலும் உன் மனசு ஒத்துக்காது. எனக்குத் தெரியும். அதுனால நான் சுந்தரோட போய் இருக்கேன்.

உங்க ரெண்டு பேர் கிட்ட கோவிச்சுக்கிட்டு போறதா நெனைக்காதே! அண்ணா நகர் இதோ கூப்பிடு தூரம். போதாததுக்கு செல் போன் வேற இருக்கு. எப்போ வேணுமோ எத்தன தடவ வேணுமோ பேசிக்கலாம். சண்டே ஆனா ஒண்ணு நீங்கள் கெளம்பி வாங்க. இல்ல நான் வர்றேன். சரியா?”

ஜானகி பேசி முடித்ததும் விக்கித்து வாயடைத்து இருந்த சாரு அழுகையில் உடைந்தாள். அம்மா அம்மா என்று அரற்றியவாறே ஜானகியைக் கட்டிக்கொண்டாள்.

“அசடு, அம்மான்னு சொல்லிட்டு அப்புறம் என்ன அழுகை?” என்று அன்புடன் கேட்ட ஜானகியின் கைகள் சாருவின் தலையை கோதின.

– மே 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *