Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வீணா

 

“வெள்ளைக் கமலத்திலே – அவள்
வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
கொள்ளைக் கனியிசைதான் – நன்கு
கொட்டுநல் யாழினை…”

ரேவதி வீணை வாசித்தபடி பாடிக் கொண்டிருந்தாள். வீணையிசையும், அவளுடைய குரலிசையும் இணைந்து தென்றலில் தவழ்ந்து கொண்டிருந்தன. ஒன்றை ஒன்று வெல்ல முடியாமல் பின்னிப் பிணைகிறதோ என்று தோன்றியது. உதடு அசைவதைப் பார்க்கும் பொழுதுதான் அவள் பாடிக் கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்தது. அவள் விரல்கள் ஏதோ குழந்தையை செல்லமாகத் தடவிக் கொடுப்பது போல் வீணையை மேலும் கீழும் தழுவிக் கொண்டிருந்தன. அதன் நரம்புகளின் அதிர்வில் மெல்லிய உணர்வலைகள் எழும்பி விரல்வழியே நுழைந்து, தோளைத் தாண்டி மூளை, முதுகெலும்பு நரம்புகளில் அமுதமாய்ப் பாய்ந்தது.

சமையலறை முகப்பிலிருந்து ரேவதியைக் கவனித்துக் கொண்டிருந்த தாய் விசாலத்தின் கண்களிலிருந்து கண்ணீர் மாலை மாலையாக வழிந்து கொண்டிருந்தது. மகளின் இயலாமையை மறக்கத்தான் அவள் முயற்சி செய்தாள். ஆனால் அது மறக்கக் கூடியதாக இல்லை. பதினைந்து வயதைத் தொட்டுக் கொண்டிருந்த ரேவதி, கைகள் தளர்ந்து, முகம் சற்றே கோணி, இளமைக் கான துடிப்பின்றி…

வீணா உள்ளே நுழைந்து அவள் அருகே வந்ததை விசாலம் கவனிக்கவில்லை. வீணா ஆதரவாகத் தோளைத் தொட்டதும் கண்களைத் துடைத்துக் கொண்டு “வாம்மா” என்றாள். வீணா ரேவதியின் வீணை ஆசிரியை.

“ஏன் இப்படிக் கவலையாகவே இருக்கிறீர்கள்? ரேவதி சீக்கிரமே எழுந்து நடந்துடுவா.”

“உன் முகத்தைப் பார்த்ததும் எனக்கு நம்பிக்கை வருது. படுத்த படுக்கையா இருந்த ரேவதியை எழுந்து உட்கார வச்சிட்ட. இனிமே, நடக்கறது ஒண்ணும் அதிசயம் இல்லை.”

“இந்த வீணை உருவத்தில் இருக்கிறாளே ஆதிசக்தி. அவள் என்ன செய்ய நினைக்கிறாள் என்று யாருக்குத் தெரியும்? ஜடத்தில் ஊதி நடக்க வைப்பாள். நடப்பதையும் படுக்க வைப்பாள்”. பேச்சுக் குரல் கேட்டு பாட்டு நின்றது. ரேவதி கண்களைத் திறந்து பார்த்தாள்.

“வீணா அக்கா” என்றாள் உற்சாகமாக.

“வாசிம்மா ரேவதி. ரொம்ப நல்லா வாசிக்கிற.”

“இல்ல. நீங்கதான் முதல்ல” என்று வீணையைக் கீழே வைத்தவாறே சிரித்தாள் ரேவதி. அந்தச் சிரிப்பு இயல்பாக இருந்தாலும் உதடுகள் கோணுவது தெரிந்தது. வீணையைக் கீழே வைக்கும் பொழுது, கைகள் தளர்ந்ததால் வீணை ஒரு அதிர்வு அதிர்ந்து நின்றது. பாவமாகப் பார்த்தாள் ரேவதி.

முதுகெலும்பின் தண்டு போன்ற வீணையின் மேளம் முகத்தின் அருகில் வந்ததும் வழவழத்தது. தாயின் முகம் பளபளத்தது. உடல் என்ற வீணையை தேவி படைத்து உயிர் என்ற நாதத்தை உள்ளே இட்டாள். உயிர் என்ற உள்மூச்சை அடக்கி வீணை என்னும் தவத்தைச் செய்யும் போது நாத வடிவமாகிய தெய்வத்தின் அருள் நம்மைச் சேரும்.

வீணா ஆறுதல் சொன்னாள். “நீயாகவே வீணையை எடுத்துக் கீழே வைக்குமளவுக்கு வந்துவிட்டாயே. இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் நடுக்கம் குறைந்து விடும்.”

நடுக்கம் குறைய எவ்வளவு நாள் ஆகும் என்பதில் சந்தேகம் இருந்தாலும், அவளுக்கு நிச்சயம் குணமாகிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. கடந்த ஐந்தாறு மாதமாகவே இப்படித்தான்.

அடுத்த கட்டம் வருமா, வராதா, எப்போது வரும், என்று எதுவும் தெரியாத நிலை.

கலி·போர்னியாவின் ஒரு சிறந்த பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த ரேவதி அன்று அந்த பள்ளிக்கூடப் பேருந்து விபத்தில் மாட்டி, இரத்தச் சேறாக மருத்துவமனையில் கிடந்தது, உயிர் பிழைக்கப் போராடியது எல்லாமே ஒரு குழப்பமான, போராட்டமான நம்பிக்கையுடன் தான்! ஸ்டான்·போர்ட் மருத்துவ மனையின் தலைசிறந்த மருத்துவர்கள் அவளுக்கு வைத்தியம் செய்தார்கள்.

திடீரென்று ஒரு நாள் இரவு விசாலம் ·போன் செய்தாள். ரேவதி வீட்டுக்கு வந்து விட்டாள் என்று சொன்னாள். இத்தனை நாட்களும் ஆஸ்பத்திரியில் கட்டுக்களுடன் பார்த்த ரேவதி வீட்டுக்கு வந்ததே அதிசயம் தான்.

பட்டுவண்ணச் சிட்டாகப் பறந்து கொண்டிருந்த ரேவதியா இவள்? பாட்டு, வீணை, நடனம், படிப்பு எல்லாவற்றிலும் சுட்டியாக இருந்த பதினைந்து வயதுப் பாவையா இவள்? ஒரு நர்ஸ் – பெயர் ஸ்டெல்லா – அவள் மட்டும் தினமும் வந்து 3 மணி நேரம் இருந்து ஏதோ மருந்துகளை ஊசிவழி ஏற்றி விட்டுப் போனாள். மற்றப்படி விசாலம் தனக்குத் தெரிந்தவரை ரேவதியைப் பார்த்துக் கொண்டாள்.

வீணா முதல் முதலாக வீட்டுக்கு வந்து, படுக்கையில் இருந்த ரேவதியைப் பார்த்த போது ரேவதியின் கண்கள் திறந்திருந்தன. ஆனால் அதில் அசைவோ புரிதலோ இல்லை. மூச்சு மட்டும் வந்து போய்க் கொண்டிருந்தது. கழுத்திற்குக் கீழ் பாரிச நோய் என்றார்கள். கழுத்திற்கு மேல் அதிர்ச்சியாம். ஆக மொத்தம் ரேவதி ஒரு உயிருள்ள ஜடம்தான்.

வீணா பழக்க தோஷத்தால் “ரேவதி, வீணா வந்திருக்கேன் பாரும்மா. எப்படி இருக்க?” என்று விசாரித்தாள். ரேவதியிடம் எந்த அசைவும் இல்லை. மிகவும் வருத்தத்துடன் வெளியே வந்தாள் வீணா. “அவளுக்கு என்ன மிகவும் பிடிக்குமோ அதெல்லாம் செய்து வாருங்கள். அவளுக்கு மிகவும் பிடித்த இசையை அவள் அறையில் போடுங்கள். ஏதாவது ஒன்று அவளை எட்டலாம்.

அழுவதால் ஒரு பயனும் இல்லை. அது அவளை மேலும் கலவரப்படுத்தும்” என்று அறிவுரை கூறினாள் ஸ்டெல்லா.

“எப்படி இருந்த குழந்தை.. ” விசாலம் பேச முடியாமல் கேவினாள்.
“முதுகெலும்பின் நடு நரம்பு (spinal cord) மூளையிடமிருந்து பிரிவதில்லை. அதற்கு நடுவில் ஓடுவது தமிழில் – சுழுமுனை நாடி – என்று சொல்வார்கள். உயிரென்னும் மகா சக்தியை எப்போதும் தாங்கி நிற்கும் அதன் சூட்சும வடிவை எந்தக் கருவியும் படம் பிடித்துக் காண்பித்ததில்லை. அது உடலை எப்படி இயக்குகிறது? ஓம் என்ற பிரணவத்தை அது எப்படி வாசிக்கிறது?

சுவாசக் காற்றாகிய புல்லாங்குழலை எப்படி ஊதுகிறது?”

“விசாலம், நான் ஒன்று சொல்கிறேன் கேட்கிறாயா?’

என்ன என்பது போல் வீணாவைப் பார்த்தாள்.

“நான் தினமும் ரேவதியின் பக்கத்தில் வீணை வாசிக்க அனுமதி தருவாயா?”

ஆச்சர்யமாகப் பார்த்தாள் விசாலம். “ரேவதிக்குக் காது கேட்கிறதா இல்லையா என்று கூடத் தெரியவில்லையே வீணா..”

“பரவாயில்லை.. வீணையிசை வாடிய பயிரையெல்லாம் தழைக்க வைக்கும் என்கிறார்கள். ரேவதிக்கு ஒரு சின்ன சந்தோஷம் கிடைச்சாக் கூட போதும்”

“சரி வீணா..ரேவதி நான் பெற்றமகள். நீ பெறாத மகள். நான் தடுக்கல்ல.”

மறுநாள் வீணா வந்தாள். வீணையை எடுத்து மீட்ட ஆரம்பித்தாள்.

முதுகெலும்புத் தண்டு போல வீணையிலும் 24 கட்டங்களே! காயத்ரி மந்திரமும் 24 எழுத்துக்களே! சட்ஜ, பஞ்சம நரம்புகளும் என்றும் பிரியாமல் தலையினை விட்டு விலகாமல், சட்டம் பிறழாமல் ‘ஓம்’ என்ற நாதத்தையே ஓயாமல் ஒலிக்கும்! உயிராகிய சக்தியினை இசை என்ற தென்றல் வருடும்.

வீணா வாசித்துக் கொண்டிருந்தாள். வீணையின் நாதம் அந்த அறையின் சோகத்தைச் சவாலுக்கு இழுத்தது போலப் பொங்கிப் பெருகியது.

“வீணா… அங்க பாரு… ரேவதியப் பாரு… ” விசாலம் படபடப்பாகப் பேசிக் கொண்டே வந்தாள்.

வீணா நிமிர்ந்து ரேவதியைப் பார்த்தாள். ரேவதியின் கண்கள் மட்டும் அசைந்து வீணாவைப் பார்த்துக் கொண்டிருந்தன. அந்த விபத்திற்குப் பிறகு ரேவதியின் கண்கள் அசைந்தது அதுவே முதல் முறை!

“வீணா… ரேவதிக்குக் காது கேட்கிறது. அவளால் பார்க்க முடிகிறது.” விசாலம் மகிழ்ச்சியில் குழந்தையானாள்.

ரேவதி இப்போது எழுந்து உட்கார்ந்து வீணை வாசிக்கிறாள். நாதம் என்ற உயிரை வீணை என்ற உடலில் தாளம் என்ற உணர்வில் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறாள். அங்கே ஒரு சக்திக் கூத்து வித்திட்டு வளர்கிறது. அவள் ஒரு நாள் எழுந்து நடப்பாள் என்று நம்புவதில் என்ன வியப்பு?

- டிசம்பர் 2003 

தொடர்புடைய சிறுகதைகள்
"வெள்ளைக் கமலத்திலே - அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள் கொள்ளைக் கனியிசைதான் - நன்கு கொட்டுநல் யாழினை..." ரேவதி வீணை வாசித்தபடி பாடிக் கொண்டிருந்தாள். வீணையிசையும், அவளுடைய குரலிசையும் இணைந்து தென்றலில் தவழ்ந்து கொண்டிருந்தன. ஒன்றை ஒன்று வெல்ல முடியாமல் பின்னிப் பிணைகிறதோ ...
மேலும் கதையை படிக்க...
மாலா மூன்றாவது முறையாக தொலை காட்சியில் அலைவரிசையை மாற்றி னாள். "ஒன்றுமே சரியாகயில்லை" சலிப்பாக வந்தது. காலையிலிருந்து துணி துவைத்தாகி விட்டது. செய்தித்தாள் படித்தாகி விட்டது. வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் வருகிற தமிழ் வானொலி கேட்டாகி விட்டது. எங்கேயோ ...
மேலும் கதையை படிக்க...
மாலா மூன்றாவது முறையாக தொலை காட்சியில் அலைவரிசையை மாற்றி னாள். "ஒன்றுமே சரியாகயில்லை" சலிப்பாக வந்தது. காலையிலிருந்து துணி துவைத்தாகி விட்டது. செய்தித்தாள் படித்தாகி விட்டது. வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் வருகிற தமிழ் வானொலி கேட்டாகி விட்டது. எங்கேயோ ...
மேலும் கதையை படிக்க...
அந்திமாலை நேரம் அந்தப் பூங்காவை அழகுமயமாக்கி இருந்தது. மாலைச் சூரியனின் தகதகப்புப் புல்வெளியை பொன்வெளியாக்க, மரக் கிளைகள் தங்கத் தோரணங்களாய் பளபளத்துக் கொண்டிருந்தன. வசந்த மலர்கள் நாணத்துடன் சிரித்துக் குலுங்கிக் கொண்டி ருந்தன. பக்கத்தில் இருந்த விளையாட்டு மைதானத்தில் இருந்த குழந்தைகளின் ...
மேலும் கதையை படிக்க...
மரகதம் காரின் வேகத்தை அதிகப்படுத்த முயன்றாள். இருபது நிமிடத்தில் போக வேண்டிய தொலைவு. நாற்பது நிமிடங்கள் ஆகி விட்டது. இன்னும் பாதித் தூரம் கூடத் தாண்ட முடியவில்லை. முன்னால் சென்ற வண்டி மேலும் மெதுவாகி விட்டதுப் போல் தோன்றியது. அடுத்த பத்திக்கு ...
மேலும் கதையை படிக்க...
வீணா
பழக்கம்
பழக்கம்
வழி
முன்செல்பவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)