வீணாகலாமா வீணை…..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 5,626 
 

லதாஸ்ரீக்குப் பொன்னாடைப் போர்த்தி விருது கொடுத்ததும் அரங்கமே உற்சாகமாய்க் கை தட்டியது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த சந்தோஷ் மட்டும் முகத்தில் எந்தவித சந்தோச சலனமில்லாமல் ஒப்புக்குக் கை தட்டினான்.

”லதாஸ்ரீ இந்த வருடம் இந்த நாட்டின் சிறந்த நடிக்கைகான விருதைப் பெற்றதைப் போல் வரும் வருடங்களிலும் பெற்று அவர் கலை சேவை நீடூழி வாழ்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.!” இப்படி இரண்டே நிமிடங்கள் நறுக்கென்று பேசி அமைச்சர் ஒதுங்கினார்.

அடுத்து இயக்குநர் சந்திரசேகரன் பேச எழுந்தார்.

சந்தோஷ் இருக்கையை விட்டு மெல்ல எழுந்து வெளியே நடந்தான். மேடையிலிருந்து கவனித்த லதாஸ்ரீக்குள் கனம் வந்து முகத்தை; தாக்கியது.

”லதாஸ்ரீயை முதன்முதலாக அறிமுகப்படுத்திய நானே விருது பெற்ற இவரின் இந்த நூறாவது படத்தையும் தயாரித்து இயக்கி இருக்கிறேன் என்று நினைக்கிறபோது உள்ளுக்குள் உவகை பொங்குகிறது….” சந்திரசேகரன் பேச்சு மெல்ல மெலிந்து காதை விட்டு அகல…..

சந்தோஷ் நிறைய கார்கள் நிற்கும் அந்த மைதானத்தில் தனது விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ காரில் ஏறி கண்ணாடி திறந்து சிகரெட் பற்ற வைத்து வெளியே புகை விட்டான். மனம் பழசைப் புரட்டியது.

திருமணம் முடித்து பத்தே நாட்கள் ஆன இரவு. தனிக்குடித்தனம். இந்திரா வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு கணவன் பக்கத்தில் வந்து நெருக்கமாக அமர்ந்தாள். தோளில் சாய்ந்து, ”எ….ன்னங்க…” கெஞ்சலாக அழைத்தாள்.

”என்ன ?” – கையால் இவன் அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்.

”எனக்கொரு ஆசை நிறைவேத்துவீங்களா……?”

”……………………………”

”பொறந்த வீட்டுல முடியலை. நீங்களாவது என்னைப் புரிஞ்சு… நிறைவேத்துங்களேன்.”

”ஆசையைச் சொல்லு?”

”திட்டக்கூடாது. அதே சமயம் குப்பைன்னும் ஒதுக்கக்கூடாது.”

”நீ விசயத்தைச் சொல்லு ?”

”வந்து… வந்து…. எனக்கு சினிமாவுல நடிக்க ஆசை.”

எதிர்பாராதது. சந்தோஷ் துணுக்குற்றான்.

”ஏன்….. தப்புங்களா ?” இந்திரா வெள்ளாந்தியாகக் கேட்டு விலகினாள்.

”இல்லியே….! ” சொல்லி இவன் மனைவியை கூர்ந்து பார்த்தான்.

”நான் பள்ளிக்கூடம், கல்லூரி நாடகங்கள்ல நிறைய நடிச்சிருக்கேன். இதோ பாருங்க புகைப்படம்.” – தலையணைக்கடியில் தயாராய் மறைத்து வைத்திருந்து புகைப்படங்களை எடுத்து நீட்டினாள்.

சந்தோஷ் வாங்கி ஒவ்வொன்றாகப் பார்த்தான். பத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள். இந்திரா நிறைய நாடகங்களில் நிறைய வேடங்களில் நடித்திருந்தாள். எல்லாவற்றிலும் அற்புதமாக முகபாவங்கள். எந்த வேடத்திலும் அழகாய் ஜொலிக்கும் முகவெட்டு, உடல்மொழி.

சிலர் எழுத்து, ஓவியம், நாட்டியம் , பரதம் என்று மனதைச் செலுத்தி பிரகாசிப்பது போல இவளுக்கு நடிப்பில் ஆர்வம். சந்தோசிற்குப் புரிந்தது. புரிந்து என்ன செய்ய ? சுலபமாக சேர்ந்து படிப்பது போல….சினிமா என்பது அரசு பள்ளிக்கூடமில்லை. அது வந்தார்களை வரவேற்று வாழவைக்கும் தொழிற்கூடமுமில்லை.

இந்திரா இவன் நினைவை வெட்டினாள்.

”சினிமாத் துறையில என் சித்திப் பையன் ஒருத்தன் ஸ்டில் போட்டோகிராபராக இருக்கான். அவன் வீட்டுக்கு வந்த போது இதையெல்லாம் காட்டி ஆசையைச் சொன்னேன். வா. நான் சேர்த்து விடுறேன்னு சொன்னான். நான் அப்பாக்கிட்ட ராஜ் இப்படி சொல்லிட்டுப் போனான்னு சென்னதும்… அடி செருப்பால. சினிமாவுல போய் சீரழியனும். வேணாம் வீண் ஆசை. மனசைக் கெடுத்தஅந்தப் பயல் இனிமே இந்த வீட்டுப் பக்கம் வந்தால் செருப்பால அடிப்பேன்னு வேற சத்தம் போட்டாங்க. நான் அதோட அந்தப் பேச்சை விட்டுட்டேன்.” நிறுத்தினாள். ”இப்போ அந்த ஆசையை என்கிட்ட வெளியிறே… அப்படித்தானே !?” சந்தோஷ் மனைவியைத் திருப்பிக் கேட்டான்.

”ஆமாங்க. அவன் ரொம்ப நாளா அந்தத் துறையில இருக்கான். அவனுக்கு எல்லா இயக்குநர், தயாரிப்பாளர்கள், கம்பெனிகளெல்லாம் தெரியும், பழக்கமாம். கண்டிப்பா சேர்த்துவிடுவான். இதை மனசுல வைச்சுதான்… எனக்குச் சென்னையைத் தவிர வேற வெளியூர் வரன்களையெல்லாம் வேணாம் வேணாம்ன்னு ஒதுக்கினேன். எனக்கென்னமோ அந்தத் துறைக்குள் போனா நல்லா வருவேன்னு மனசுக்குள் நல்லா தெரியுது. அதேசமயம், முயற்சி எடுத்து முடியாமல் போனாலும் மனசுக்குத் திருப்தி. முயற்சியே எடுக்காது முடியாமல் போனால் வாழ்நாள் முழுக்கக் குறை.” அவள் மனதிலுள்ளதை இப்படி ஒன்றுவிடாமல் கொட்டினாள்.

கேட்ட சந்தேசிற்கு திகைப்பாய் இருந்தது. அதேசமயம் முயற்சியைக் குடும்பம் முறியடித்தாலும் அதை விடாமல் கவனமாகக் காயை நகர்த்தி இருக்கிறாள் நினைக்க ஆச்சரியம் வந்தது.

திரைத் துறை என்பது பெரிய ஆசை, கனவு. சினிமாவைப் பொறுத்தவரை…. திரையில் வெளிச்சம். பின்னால் அசுத்தம். இவனே இப்படி ஆசைப்பட்டு நடிக்க ஓடி……நிறைய கசப்பான அனுபவங்கள். நாளை விடியும் நாளை விடியுமென்று நம்பி எப்படி எப்படியோ வாழ்ந்து இளமையைத் தொலைத்துக் கொண்டு திரியும் இளைஞர்கள் கூட்டம். இதற்கு மேல் இளம்பெண்கள் சீரழிவு. இதையெல்லாம் பார்த்து வெந்து, நொந்து வெறுத்துப் போய் திரும்பியவன்தான் பிறகு நினைக்கவும் இல்லை, திரும்பவும் இல்லை.

இப்போது மனைவி வடிவில் ஒரு மறுபரிசீலனை.!

சந்தோஷ் தான் பார்த்தவை, கேட்டவை, அனுபவித்தவைகளையெல்லாம் சொன்னான்.

பொறுமையாகக் கேட்ட இந்திரா, ”நீங்க சொன்ன எல்லாம் இருக்கு. இல்லே… சொல்லலை. வழிகாட்டி அழைச்சுப் போக ஆளிலிருக்கிறதுனால எங்கும் இடறாமல், தவறாமல் போகலாம் தோணுது.” என்றாள்.

‘இது முற்றிய ஆசை. தன்னைப் போல் அனுபவப்பட்டால்தான் தெளியும். அதுவரை எவர் எது சொன்னாலும் புரியாது.!’ – இவனுக்குத் தெளிவாய்த் தெரிந்தது.

”சரி. உன் அண்ணனை வரச் சொல்லு பேசலாம்.” சொன்னான்.

கேட்ட இந்திரா முகத்தில் அத்தனைப் பிரகாசம்.

காலையில் அவனுடன் கைபேசியில் தொடர்பு கொண்டு வரச் சொன்னாள். ரவி இரண்டு நாள் கழித்து வந்தான்.

”என்னப்பா! எப்படி ?…” என்று சந்தோஷ் விசாரிக்க….”நாம முடிஞ்சவரை முயற்சி பண்ணலாம் சார். ஆபத்துன்னா விலகிடலாம். பயம் வேணாம்.” பதில் சொன்னான்.

”சரி.” சந்தோஷ் தலையசைத்தான்.

மறுநாளிலிருந்து வேட்டை. சந்தோஷ் தன் தொழிலைப் பார்க்க…..ரவி இந்திராவை அழைத்துக் கொண்டு சுற்றினான்.

அலைச்சல், காத்திருப்பு, மனஉலைச்சல், முகச்சுளிப்பு, ஒதுக்கல்…….பத்து நாட்களிலேயே இந்திரா ஆள் கறுத்து…. முகம் வாட்டம்.

”என்னாச்சு ?” அன்றைக்கு சந்தோசே வலிய போய் மனைவியைக் கேட்டான்.

”இன்னைக்கு ஒரு பெரிய தயாரிப்பாளர் கம் இயக்குநரைச் சந்திச்சோம.; தொட்டது துலங்கும் ராசி. சொன்ன சொல்லைக் கண்டிப்பா நிறைவேத்தும் ஆள். அறிமுகப்படுத்தறேன் சொல்றார். ஆனா அவருக்குள்ளும் மட்டரகமான ஆசை இருக்கு.” குரல் கனத்து வந்தது.

”தெரிஞ்ச விசயம்தானே! இதுக்கு ஏன் வாட்டம்..?”

”மனசுக்குக் கஷ்டமா இருக்கு.”

”சரி விட்டுத் தள்ளு. விலகு.”

”அப்படித்தான் நெனைக்கிறேன். ஆனா முடியலை….” கமறினாள்.

”புரியலை…..?!”

”யாரைச் சந்திச்சாலும் கடைசியில் சுத்தி இங்கேதான் வர்றாங்க. எப்படி முட்டி மோதிப் பார்த்தாலும் பெண்களைப் பொறுத்தவரை இந்த கோட்டையைப் பிடிக்க இதுதான் சாவி. வேற வழியே இல்லே.” என்று அழுத்திச் சொன்னவள், ”சரியோ தப்போ என் மனசுல ஒன்னு படுது சொல்லவா ?” ஏறிட்டாள்.

இவன் மௌனமாக அவளைப் பார்த்தான்.

”நான் நியாயப்படுத்தலை. மனசொப்பி சொல்லலை. இருந்தாலும் சொல்றேன். மீன் பிடிக்கனும்ன்னா தூண்டில் முள்ளில் இரை வைக்கனும். தொழிலுக்கு முதல் வைக்கனும். எப்படிப் பார்த்தாலும் ஒன்னைப் பெறுவதற்கு ஒன்னை இழந்தாகிற விதி. அப்படிப் பார்க்கும்போது அவுங்க எதிர்பார்ப்பு தப்பில்லை தோணுது. நீங்க என்ன நினைக்கிறீங்க ?” கேட்டாள்.

சந்தோசிற்கு அவள் பேச்சின் உள்ளர்த்தம் புரிய…உறைந்தான். வெளிக்காட்டிக் கொள்ளாமல் மேலும் அவள் கண்களை ஆராய்ந்தான்.

இந்திரா தொடர்ந்தாள்.

”எதையும் பெரிசா நெனைச்சா பெரிசு. சிறிசா நெனைச்சா சிறிசு. அந்தத் துறையில் நான் பெரிசா சாதிப்பேன்னு என் உள் மனசுக்குள் சதா ஊறல். துணியலாம் தோணுது. மனம் துணிஞ்சு இறங்கச் சொல்லுது. ஆனா…அதுக்கு நீங்க மனசு வைக்கனும்ங்குறதுதான் விசயம். அதே சமயம் உங்க சொல்லை மீறி நான் எதுவும் செய்மாட்டேன், செய்து வாழ்க்கையைத் தொலைக்கவும் மாட்டேன் என்கிறதும் சத்தியம். முடிவு உங்க கையில்.!” முடிவை இவனிடம் விட்டுப் படுத்தாள்.

சந்தோசிற்கு இரவு முழுதும் அலை அலையாய் யோசனை. இந்திராவின் ஒவ்வொரு செயல், வார்த்தைகளை எடுத்து புரட்டி புரட்டி ஆராய்ச்சி.

‘ஒருத்தி தன்னையே காணிக்கையாக்கி தான் நினைத்ததை அடைய விரும்பகிறாளென்றால்……அதன் மீது அவளுக்கு அத்தனை ஈடுபாடு, பிரியம், சாதிப்போம் என்கிற வெறி. மனம் நினைத்தால் மலையும் மடு. எதையும் சாதிக்கலாம். அதை சிதைத்து விட்டால்…..மனுசன் கடைசிவரை உறுத்தலாய்ப் வாழ்ந்து போகும் கூடு. இப்படி சிதைத்து அப்படி வாழ யாருக்கு என்ன லாபம். எதையும் பெரிதாக நினைத்தால் பெரிது. சிறிதாய் நினைத்தால் சிறிது. சத்திய பூர்வமான வார்த்தை. தாலி கட்டி ஒருவர் திறமையைத் தடுத்து நிறுத்துவது என்ன நீதி, நேர்மை, தாத்பரியம், தர்மம். !’ – சந்தோஷ் நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவிற்கு வந்தான்.

காலையிலேயே, ”இந்திரா !” அழைத்தான்.

”சொல்லுங்க ?” அருகில் வந்தாள்.

”உன் முடிவு எனக்கு சம்மதம்.” சொன்னான்.

”ரொம்ப சந்தோசம்ங்க.” அவள் முகம் பட்டென்று மலர்ந்தது.

”ஆனா ஒரு கண்டிசன் !”

”சொல்லுங்க.?” அதே நொடியில் வாட்டம்.

”அன்னையிலேர்ந்து நாம தனித் தனி படுக்கை. தாம்பத்தியம் தவிர்த்த தம்பதிகள் !”

”அத்தான் !” அலறினாள்.

”பதறாம நான் சொல்றதைக் கேளு. தாலி கட்டினதுக்காக ஒருத்தர் திறமையை கொல்றது ஒரு கொலை பாதகத்துக்குச் சமம். அதனால் உன் ஆசை, விருப்பத்துக்கு விரோதமாய் குறுக்கே நிற்க வரலை. அடுத்து….நான் சாதாரண மனுசன். எனக்கே எனக்கானதை இன்னொருத்தர் தொடும் போது ஏற்படுற இயல்பான அசூசை, அருவருப்பு எனக்குள்ளும் இருக்கிறதால இந்த முடிவு. ஆளானப் பட்ட ராமனுக்கே இந்த மனசு என்பதினால்தான் சீதையைத் தீக்குளிக்க வைத்தான். இது ஒரு காரணம், வாழ்க்கைப் பிரச்சனையாய் நெனைச்சு ஒதுக்குனீன்னா உன் ஆசை உறுதி இல்லாதது. ஒரு அரைகுறை, கவர்ச்சி, மோகம் என்பது நிச்சயம். நான் எப்படி உன்னைப் புரிஞ்சுகிட்டேனோ அதேப்போல நீயும் என்னைப் புரிஞ்சு இறங்கு. வாழ்த்துக்கள்.” சொன்னான்.

எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்ட இந்திரா முகத்தில் ஒருநாள் முழுக்க இறுக்கம்.

அடுத்த நாள்தான் கொஞ்சமாய் தெளிந்து, ”ரொம்ப நன்றிங்க.” என்றாள். நடவடிக்கைகளில் இறங்கினாள்.

இந்திரா பெயர் லதாஸ்ரீ ஆகி முதல் படம் சூப்பர் டூப்பர். அடுத்து அப்படி. அதற்கடுத்தும் அப்படி. அப்புறமென்ன….நம்பர் ஒன் நடிகையாகி…….நான்கு மாநிலத்தில் முதல் நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு….. கோலிவுட், பாலிவுட் எல்லாம் போய் முத்திரைப் பதித்து விட்டு ஹாலிவுட்டிற்கும் அடியெடுத்து வைத்து… இதோ நாட்டில் சிறந்த நடிகைக்கான தேசியவிருது.
எவரோ கதவைத் திறந்து விட…”இவ்விழா இத்துடன் இனிது முடிவடைகிறது!” கேட்டு நாட்டுப் பண் ஒலித்தது. சிறிது நேரத்தில் அவிழ்த்து விடப்பட்ட நெல்லிக்காய் மூட்டைகளாக மக்கள் சிதறினார்கள்.

நிறைய காமிரா வெளிச்சங்கள், கையெழுத்துக்கள் என்று முடித்து இந்திரா தன் காருக்கு வந்து, ”போகலாமா ?” கேட்டு கதவு திறந்து கணவன் அருகில் அமர்ந்தாள்

சந்தோஷ் மௌனமாகக் காரை விட்டான். வீடு வரும்வரை இருவரும் பேசவில்லை. காரை நிறுத்திவிட்டுப் படுக்கைக்குப் செல்லும்வரை நிலை மாறவில்லை.

இந்திரா தன் அறைக்குச் செல்லாமல் கணவனைத் தொடர்ந்து வந்து இவன் அறைக்குள் நுழைந்தபோதுதான் மாறினான்.

”என்ன… ஏதாவது பேசனுமா?” கேட்டான்.

”ஆமாம்.!” இவள் சொல்லி அமைதியாய்க்கட்டில் மெத்தையில் அமர்ந்தாள்.

”சொல்லு ?”

”இன்னையிலேர்ந்து இந்த கட்டில் எனக்கும் சொந்தம்.!”

”ஏன் ?”

”நாளையிலேர்ந்து நான் நடிக்கிறதை விட்டாச்சு !”

”இந்திரா !!” அதிர்ந்தான்.

”போதும்ங்க இந்த வாழ்க்கை வெளியே சொகுசு. உள்ளே நரகம். ஒரு தடவை எவனோ ஒருத்தன் தொட்டதுக்காக ஒன்பது வருசம் வனவாசம். இனியும்; இந்த கொடுமை எனக்குத் தாங்காது. உங்க தனிமையும் சகிக்காது. அன்னைக்கு என் மனசை நீங்க மதிச்சீங்க. உங்க மனசை நான் மதிச்சேன். அந்த கொடுக்கல் வாங்கல் சரிக்குச் சரியாய் சமமாய்ப் போச்சு. அதுக்கான தண்டனையாய் நம்ம தாம்பத்தியத்துக்குத் தண்டனை. அதையும் நான் சாதிச்சு சமன் ஆக்கியாச்சு. ;நினைச்சதுக்கு மேலும் சாதிச்சுட்டேன். இதுக்கு மேல எதுக்கு அந்த வாழ்க்கை. தேவை இல்லே. இனி நாம் கணவன் மனைவி. என்ன சொல்றீங்க ?” பார்த்தாள்.

உள்ளே எண்ணங்கள் சுழல வைத்த கண் எடுக்காமல் சந்தோஷ் அவளை ஆழமாகப் பார்த்தான்.

அவன் பார்க்கப் பார்க்க இந்திராவிற்குள் அழுகை முட்டி முகம் பம்மியது.

நெகிழ்ந்தான்.

”நீ இன்னும் சாதிக்கனும். சாகும் வரை சாதிச்சுக்கிட்டே இருக்கனும். அதுக்கான எந்த இடையூறும், வருத்தமும் இருக்கக் கூடாது. எல்லாத்தையும் மறக்கிறேன், மன்னிக்கிறேன்.” என்று தன் மனைவியை இழுத்து இறுக அணைத்தான் சந்தோஷ்.

இந்திரா, ”அத்தான் !” என்று தழுதழுத்தாள். அவன் மார்பில் முகம் பதித்தாள்.

-30-6-14

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *