வீட்டுக்கு வீடு

 

கோபம் தணியவில்லை. சண்டையும் முடியவில்லை. அலமேலு முகம் சிவந்து புசுபுசுவென்று மூச்சிரைக்க வந்து சோபாவில் அமரவும் அழைப்பு மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

எழுந்து போய் கதவு திறந்தவளுக்கு சின்ன அதிர்ச்சி. கூடவே மலர்ச்சி.

”வா வா…..” உள்ளே நுழைந்தவளை ஒருமாதிரியாக வாயார வரவேற்றாள். அடுத்து…

”பேரப்பயத் தூங்கிட்டானா ? ” என்று சொல்லி மகள் தோள் மீது தூங்கிய குழந்தையை வாங்கி தன் தோள் மீது போட்டு சோபாவை நோக்கி நடந்தாள்.

‘யார் ? ‘ அடுப்படியிலிருந்து எட்டிப் பார்த்த சுகாசினிக்கு அவள் கண்ணில் பட்டாள்.

”வா கௌரி.” இவளும் முகத்தில் மலர்ச்சி இல்லாமல் ஒப்புக்க அழைத்து அடுத்து ஏதும் பேசாமல் அறைக்குள் நுழைந்தாள்.

”வர்றேன் அண்ணி.” என்ற கௌரிக்கு வீட்டின் நிலைமை புரிந்து விட்டது.

”என்னம்மா! அண்ணிக்கும் உனக்கும் சண்டையா ? ” தாய் அருகில் அமர்ந்தாள்.

”என்னைக்குத்தான் இந்த வீட்ல சண்டை இல்லே.” முகம், குரலில் கடுப்பு வெறுப்பு கலந்து தூங்கிய பேரனை அப்படியே சோபாவில் கிடத்தி சொன்னாள் அலமேலு.

”ஏன்.. என்ன ? ”

”நான் தேடித் தேடிப் போய் பொண்ணு பார்த்து கட்டிவைச்சதை இப்போ அனுபவிக்கிறேன்.”

”என்ன குறை ? ”

”எல்லாம் குறைதான்.”

”விபரமா சொல்லு ? ”

”நான் காலையில எழுந்து பல் விலக்கி வந்ததும் காபி கொண்டு வந்து வைச்சாள். கூடவே ஆத்த ஒரு டம்ளரையும் கொண்டு வந்து வைக்கனும்…. அதுதானே முறை. இல்லாமல் அதை அப்படியே சூடாய்க் கொட்டிக்கோன்னு சொல்றாப்போல வேண்டாய் வெறுப்பாய் வைத்தால் மனுசிக்குக் கோபம் வருமா வராதா ? அதான் கேட்டேன். பிலுபிலுன்னு சண்டை.” நிறுத்தினாள்.

அறையிலிருந்து சுகாசினி ஆவேசமாக வந்தாள்.

”இதோ பாருங்க அத்தை. நடந்ததை ஒழுங்கா சொல்லுங்க. நீங்க இப்படி கேட்டதுக்கா நான் பிலுபிலுன்னு சண்டை பிடிச்சேன்.?! நீயே சொல்லு கௌரி. ஏதோ நெனப்புல துணைக்கு டம்ளர் எடுக்காம சூடா காபி கொண்டு வந்து வைச்சது என் தப்புதான். அதை மன்னிச்சு… ஏம்மா ஒரு டம்ளர் எடுத்து வான்னு அன்பா அணுசரனையாய்ச் சொன்னா குறைஞ்சா போயிடும், இல்லே…. ஆத்திக் கொடுன்னு சொன்னா கொடுக்க மாட்டேனா. அது இல்லாம, ‘ஏன்டி உன் மனசுல என்ன நெனைச்சிட்டிருக்கே ? ‘ ன்னு அதிகாரமாக் கேட்டால்…. நான்.. எதுக்கு, என்ன, ஏன் இப்படி பேசுறாங்கன்னு திகைச்சுப்போய் ஏன் அத்தைன்னு கேட்க…..சண்டை.”

”எனக்கு உன் அண்ணன் அலுவலகத்துக்குப் போக…சமைக்கனும். குழந்தைக பள்ளிக்கூடம் அனுப்பனும்ன்னு காலையில ஏகப்பட்ட நெருக்கடி. தவறுறது சகஜம். சும்மா உட்கார்ந்திருக்கிற அத்தை ஒரு உதவி ஒத்தாசை இல்லாம இப்படி அதிகாரம் செய்தால் யாருக்குக் கோபம் வராது.” என்றாள்.

”பாத்தியா…பாத்தியா ? நான் இவளுக்கு ஒத்தாசை செய்யாம வெட்டியாய் உட்கார்ந்து அதிகாரம் செய்யிறேன்னு சொல்றா. நான் இல்லேன்னா எல்லாம் அவள்தானே செய்யனும். இந்த ஆத்திரம்தான் என்னை இப்படி பாடாய்ப் படுத்தறாள். நானென்ன இவளைப் போல சின்னப் பெண்ணா ஓடி ஆடி வேலை செய்ய…. நான் உட்கார்ந்து சீரியல் பார்க்கிறது இவளுக்குப் பிடிக்கலை. அந்தப் பொறாமை என்னை விரட்டுறாள்.” குமுறினாள்.

”நான் விரட்டலை. நீங்கதான் என்னை அடிமையாய் நெனைச்சி விரட்டுறீங்க.”

”நான் ஒன்னும் அடிமையாய் நெனைக்கலை. நீதான் என்னை மட்டமாய் நெனைக்கிறே.”

வார்த்தைக்கு வார்த்தை சண்டை மறுபடியும் தொடர… வீட்டிற்கு வந்த கௌரி எந்தப் பக்கம் பேசுவது என்று புரியாமல் தவித்தாள்.

”நான் ஒன்னும் மட்டமாய் நெனைக்கலை.”

”என்னை முதியோர் இல்லத்துல சேர்த்துட்டு புருசன் பொண்டாட்டி சந்தோசமாய் இருக்கத் திட்டம்.!”

”அபாண்டம்.! எனக்கொன்னும் அப்படி நெனப்பில்லே. நீங்க அப்படி நெனைச்சா அது என் தப்பும் கெடையாது.”

”உன்னைச் சொல்லி குத்தமில்லே. என் புள்ளையைக் கைக்குள்ளே போட்டுக்கிட்டு நான் எது சொன்னாலும் அவன் கேட்காம செய்ஞ்ச அநியாயத்துக்கு அந்த ஆண்டவன் கூலி கொடுப்பான்.”

”நான் ஒன்னும் கைக்குள் போட்டுக்கலை. வீண் பிரச்சனை வேணாம்ன்னு கேட்காம ரெண்டு பக்கமும் மௌனமாய்ப் போறது அவர் தப்பும் கெடையாது.”

”அம்மா நிறுத்துங்க. அண்ணி நிறுத்துங்க.” அதற்கு மேல் கௌரி பொறுக்க முடியாமல் இடையில் புகுந்து சமாதானம் செய்தாள்.

”என் தலையெழுத்து!” அலமேலு மூக்கை உறிஞ்சினாள்.

சுகாசினி அடுத்து வாய் பேசாமல் அறைக்குள் நுழைந்தாள்.

அழுது கண்ணீரைத் துடைத்து மனசு சாந்தி அடைந்த அலமேலு…..

”உன் புகுந்த வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா ? ” மகளை விசாரித்தாள்.

”இருக்காங்க.”

”என்ன சொல்லாம கொள்ளாம திடீர் பிரவேசம்.”

”அங்கேயும் இதே கூத்து. அநியாயம்!”

”என்ன ? ”

”மாமியாருக்கும் எனக்கும் சண்டை !”

”உனக்குத் துப்பில்லே. உன் அண்ணி போல புருசனைக் கைகுள்ளே போட்டு உன் மாமியாரைத் தாக்க.”

”என்னம்மா இது ?! ” – கௌரி துணுக்குற்றாள்.

”ஆமாண்டி அந்த திராணி இல்லாமத்தான் அங்கே முணுக்குன்னா இங்கே ஓடி வர்றே. எதுக்கும் தில் வேணும். அந்த விசயத்துல என் மருமகள் கில்லாடி. அவளைப் போல ஆகாது. எதுவாய் இருந்தாலும் நேருக்கு நேர் தாக்குவாள். வீட்டை விட்டு ஒரு அடி அந்தண்டை நகர மாட்டாள்.!”

”அம்மா! நீ அண்iணியைக் குறை சொல்றீயா ? நிறை சொல்றீயா ?”

”நிறை சொல்றேன்டி. இது என் குடும்பம், என் வீடு. ஒரு அடி அந்தண்டைப் போக மாட்டேன். எதுவாய் இருந்தாலும் இங்கேயே சமாளிச்சு குடும்பம் நடத்துவேன்னு சொல்றாப்போல நடக்குறாள். நானும் அவளுக்குக் குறை சொல்றாப்போல வாழ்க்கையைப் பழக்குறேன். அவளும் பழகுறாள். எல்லா பெண்களுக்கும் இந்த பலம், மனம் வேணும். வீட்டுக்கு வீடு வாசல்படி. நீயும் அப்படி பழகு. சரியாய் நடந்துக்கோ.” முடித்தாள்.

கௌரிக்கு அம்மா சொன்னது புரிந்து முகம் மலர்ந்தது.

அதே சமயம் அறைக்குள் இருந்து கேட்ட சுகாசினிக்கும் மாமியார் மனதில் மலையாக உயர்ந்தாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
''லட்சுமி !'' என்ற குரல் கொடுத்துக் கொண்டே திறந்த வீட்டிற்குள் கையில் பையுடன் நுழைந்த விசாலம் கூடத்து கட்டிலில் அமர்ந்திருக்கும் பத்து வயது பெண் அருணாவைக் கண்டதும் சடக்கென்று வாய் மூடி முகம் இறுகினாள். அருணாவிற்கு வந்தவள் யாரென்று புரிந்து விட்டது. ''பெரிம்மா..ஆ'' மெல்ல ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகம் வந்து இறங்கிய அரை நேரத்தில் மேசை மேல் இருந்த கைபேசி ஒலிக்க..... 'வைஷ்ணவி' என்கிறப் பெயரைப் பார்த்து, 'இம்சை!' என்று மனசுக்குள் அழுது, வலியுடன் அணைத்து நகர்த்தி வேலையைத் தொடர கணணியில் முகம் பதித்தான்; சிவாஷ். வைஷ்ணவி! பத்து நாட்களுக்கு முன்வரை ...
மேலும் கதையை படிக்க...
அந்த பூங்காவில் யாருமில்லா இடத்தில் அவனும் அவளும் தனித்து எதிரெதிரே கண்ணியமாக அமர்ந்திருந்தார்கள். தலைகுனிந்திருந்த அவளையே வெகு நேரமாக உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த அவன், ''அஸ்வனி ! முடிவா நீ என்னதான் சொல்றே ? '' மௌனத்தை உடைத்தான். ''மன்னிக்கனும்ப்பா. சத்தியமா இதுக்கு எனக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஊரைக் கூட்டச் சொல்லி நச்சரிப்பு தாள முடியவில்லை.....சிவ சிதம்பரத்திற்கு. '' சரிய்யா ! நாளைக் காலையில எட்டு மணிக்கெல்லாம் கூட்டம் போட்டு செய்ய வேண்டியத்தைச் செய்துடுவோம் ! '' என்று நேரம் காலம் குறித்து விட்டு திண்ணையில் சாய்ந்தார். மறுநாள் காலை சரியாய் எட்டு ...
மேலும் கதையை படிக்க...
எழிலன் வயது 22. ஒல்லியான உருவம். உருண்டை முகம், எடுப்பான மூக்கு. கூர்மையான கண்கள். கன்னங்களில் கொஞ்சம் தாடி. கொஞ்சம் மீசை. பட்ட படிப்பு முடித்து விட்டு வேலை தேடும் இளைஞன். இவனுக்கு எத்தனை நாட்கள், எப்படி யோசித்தும் மனம் சமாதானமாகவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
மாற்றம்……!
ஒரு உண்மைக் காதலும் உதவாக்கரை தோசமும்…
பெண்!
பஞ்சாயத்து…!
வேர்களைத் தேடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)