வீடு

 

எப்படி இது நேர்ந்தது? எல்லோருடனும் அன்புடன் பழகிய பின் ஏன் இந்த விரிசல்? நினைக்க நினைக்க எனக்குள் வேதனை பொங்கியது. நேற்றுவரை பேசிவந்த மணியக்கா கூட இன்று மெளனமாய் முகத்தைத் திருப்பியபடி போகிறாள். எனக்குள் குழப்பமாக இருந்தது. நான் எதுவும் தவ்று செய்யவில்லையே எல்லோரைப் போலவும்தான் நான் இருக்கிறேன். நினைத்து நினைத்து முடிவே கிடைக்கவில்லை.

ராணி வந்தாள். அவசரமாக வந்து ‘இன்னிக்கு உங்க வீட்ல கொஞ்ச நேரம் என் பிரண்டோட பேசணும். அனுமதி தர முடியுமா?’ என்று கேட்டாள். நானும் சரி என்றேன். அவரும் ஊரில் இல்லை. அதனால் எதுவும் குழப்பங்கள் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் அக்கறையாய் இருந்தேன் நான்.

ராணியும், கலாவும் அவர்களது தோழர்களுடன் பேச எனது வீடு வசதியாய் இருந்தது. “என்ன நீங்க பாட்டுக்கு யார் யாரையோ வீட்டுக்குள்ள விடறீங்க. இதெல்லாம் நல்லா இல்ல. நீங்க வீட்டைக் காலி பண்ணுங்க” என்று சேச்சி சொல்லி விட்டாள். எனக்குள் வருத்தமாக இருந்தது. பேசுவதற்கு கூடவா உதவக்கூடாது என்று யோசனையாய் இருந்தது. ‘சரி சேச்சி, இனிமேல் யாரும் வரமாட்டாங்க. நீங்க இப்போ காலி பண்ணச் சொன்னா, நான் எங்கே போவேன்’ என்றேன்.

பொங்கலன்று ஊருக்கு போய் சேர்ந்தேன். பாட்டியின் வீடு சுத்தமாய் அழகாய் இருந்தது. இந்த அழகுணர்ச்சி எனக்குள் இல்லாமல் போய்விட்டதே என்று எனக்குள் வருத்தம்.

எப்போதும் கூடையில் சேலைகள் விற்கும் மணிக்கு எப்படித்தான் எங்கிருந்துதான் சேலைகள் கிடைக்கிறதோ. அவனும் நேற்று வந்து பத்திரிக்கை வைத்துவிட்டுப் போனான். அவன் கட்டிய வீடு எனக்குள் பிரமிப்பாய் இருக்கிறது. ஊருக்கு போகும்போதெல்லாம் வீடு பற்றிய கனவுகளோடு நான் செல்கிறேன். என்றாவது ஒருநாள் நாமும் வீடு கட்டத்தான் போகிறோன் என்று என்னை நானே திருப்திப்படுத்திக் கொள்வேன். அனாதையாய் என்னை நான் உணரும் நேரங்களில் வீடு பற்றிய கனவு எனக்கு மிக சந்தோஷமாயிருக்கும். போதாக்குறைக்கு அத்தை வேறு வீடு எப்பக் கட்டப் போறே? எனக் கேட்டுக் சென்றாள். என் வாழ்க்கை கழிந்து போக எனக்கான சமயலறை ஒன்றும் அவருக்கான புத்தக அறையும் குழந்தைகளுக்கான சிறுவிளையாட்டு மைதானமும் என வீடு எனக்குள் உருவாகி வளர்கின்றது. ஆனால் செயல்படுத்த இன்னும் காலமாகலாம். ஒவ்வொருமுறையும் வாடகை வீட்டில் அவமானப்பட நேர்ந்தபோதும் எனக்குள் நான் கதறியிருக்கிறேன்.

புத்தகங்கள் எனக்கு ஆறுதலான தோழமையுள்ள நண்பர்கள். என்னிடம் அவை எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவை எனக்குள் நான் உருவாக காரணமாய் இன்னும் எனது சுகதுக்கங்களில் பங்கேற்கின்றன. இன்றளவும் நான் விரும்பியபடி எல்லாம் என் மனசை ஒன்றுபடுத்திய புத்தகங்களுக்கு என் வீட்டில் கண்டிப்பாய் இடம் தர வேண்டும். ஒவ்வொரு மணிநேரமும் நான் அவமானப்படுத்தப்படுகிறேன். பண்பாடு எனக்குள் மறைந்து போனது. மிச்சம் இருப்பவற்றைக் காலம் தள்ள உபயோகிக்கையில் எனக்கான இடம் எங்குமில்லாது போயிற்று. புத்தகங்கள் என்னோடு ஆதரவாய் இருக்கின்றதை உணர்கையில் நிம்மதியாய் உணர்கிறேன் நான்.

இன்னும் புதிதாய் சொல்ல இருக்கிறது. பாட்டிக்குப் பிறகு நான்கு தலைமுறைகள் ஒரே வீட்டில் வளர்ந்தோம். நான்கு தலைமுறைக்கும் ஒரே சமயலறையில் சமைத்து ஓய்ந்து போன பாட்டியின் உடல் சுருக்கங்கள் என்னை அதிர வைக்கும். இருந்தாலும் பாட்டியைச் சமைக்க சொல்லி சாப்பிடுவேன் நான். இந்த முரண்பாடு எனக்கு எல்லா விஷயங்களிலும் குழப்பமாய் . தனிமையில் இருக்கையில் எனது தென்ன்ங்கன்றுகள் எத்தனை உயிரோடு இருக்கின்றது என யோசித்திருக்கும் போதெல்லாம் எனக்கானவை என்னை விட்டு நீங்கிப் போனதை உணர முடியாமல் நானிருக்கிறேன்.

“வருஷத்துல ஒரு தடவை பொங்கல் வருது. அன்னக்கி பூசி வழிச்சு வீட்டை சுத்தம் பண்ணாமே மயிரே போச்சுன்னு பூட்டிட்டு கெளம்பி ஊருக்குப் போயிட்டீங்க. இப்படி போட்டு வெக்கறதுக்குதா நானு வீடு கட்டி வெச்சிருக்கேன்,” என்று ஏகவசனத்தில் திட்டினார் வீட்டின் சொந்தக்காரர் சேச்சி. எனக்கு மனசு சுத்தம். அதனால் கவலைப்படாதீங்க என்று கத்த வேண்டும் போல் தோன்றியது எனக்கு.

எப்போதும் எழுதும் கடிதங்களுக்கு எனது என ஏதாவது முகவரி தேவைப்படுகிறது. இனி முகவரியில் மாற்றம் இருக்காது என அனைவருக்கும் கடிதம் எழுத ஆசை.

எனது வீடு குறித்த கனவுகளோடு நீண்ட நேரத்துக்குப்பின் உறங்கிப் போனேன்.

கனவில் முகவரி இல்லாத வீடொன்று வந்தது.

- 01–02-1995 

தொடர்புடைய சிறுகதைகள்
பரபரப்பாய் இருந்தது, ராமுத்தாயிக்கு. போட்டோவை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். கண்ணாடி உடம்போடு சேர குளிர்ச்சியாக இருந்தது. எத்தனை நாளாய் இப்படி ஒரு போட்டோ பிடிக்க வேண்டுமென்று அவளுக்குக் கனவுகள். இன்று எல்லாம் நிறைவேறிவிட்டது போலிருந்தது. போட்டோவைப் பார்த்தாள். ராமுத்தாயின் முகம் சுருக்கமாய் ...
மேலும் கதையை படிக்க...
மாமியார் மருமகளை மாவடுக்கிற சட்டுவத்தை எங்கவச்சே மாமயிலே எனக் கேட்க மருமகள் அல்லையிலே வைச்சிட்டனா, அலுங்கி நடந்துட்டனா, கொண்டையிலே வெச்சிட்டனா, குலுங்கி நடந்துட்டனா, தூரத்து பெண்களுக்கு தூக்கி குடுத்தனா, இல்லாப் பொறப்புக்கு எடுத்து குடுத்துட்டனா, கட்டடா பல்லாக்க, காலமே போய் சேர்வோம் ...
மேலும் கதையை படிக்க...
போட்டோ
மனசு ஒரு கதையாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)